Showing posts with label Skandam 07. Show all posts
Showing posts with label Skandam 07. Show all posts

Thursday, March 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 230 நாரதரின் கதை

நாரதர் தன் பூர்வாசிரம கதையைக் கூறலானார்.

யுதிஷ்டிரா! என் முற்பிறவியில் சென்ற மஹா கல்பத்தில், ஒரு கந்தர்வனாக இருந்தேன்.
அப்போது என் பெயர் உபபர்ஹணன் என்பதாம். கந்தர்வர்களுள் சிறந்தவனாக இருந்தேன். அனைத்து கந்தர்வர்களும் என்னைப் புகழ்ந்து கொண்டாடுவர்.

அழகு, இளமை, இனிய பேச்சு, உடற்கட்டு‌ ஆகியவற்றால் அனைவரின் மனத்திலும் சுலபமாக இடம் பிடித்துவிடுவேன். தேவ கன்னிகைகள் முதல் எந்தப் பெண் என்னைப் பார்த்தாலும் மனம் மயங்குவர். அதனால் அளவற்ற கர்வம் கொண்டு போகத்தில் திளைத்திருந்தேன்.


ஒரு சமயம் தேவர்கள் ஞான ஸத்ரம் என்னும் வேள்வி நடத்தினர். அங்கு அனைத்து ப்ரஜாபதிகளும் வந்திருந்தனர். வேள்வியின் விராம காலத்தில்  பகவானின் புகழ் பாடுவதற்காக அப்ஸரஸ் பெண்கள் வந்திருந்தனர்.

அது சான்றோர் கூடிய சபை என்பதால் பகவானைப் பற்றி மட்டும்தான் பாடுவார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும், அஹங்காரத்தால், பெண்கள் சூழ, ஒரு பைத்தியம்போல் பாமரத்தனமான ஒரு பாடலைப் பாடிக்கொண்டு அங்கு சென்றேன். இதனால் தேவர்கள் தங்களை அவமதித்ததாக எண்ணி, 'உன் அழகும், பெருமையும் அழியட்டும். பாமரனாகப் பிறந்து பூமியில்‌ உழல்வாய்' என்று சாபமிட்டனர்.

அவர்கள் சாபத்தால் பூமியில்  ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தேன். அங்கு வந்த சான்றோர்களின் அருளாலும், அவர்களுக்குப் பணிவிடை செய்ததாலும், மறுபிறவியில் ப்ரும்மதேவரின் மகனாகப் பிறக்கும் பேறு பெற்றேன்.

சான்றோர்களை அவமதித்தல், சான்றோர்க்குப் பணிவிடை செய்தல் ஆகிய இரண்டு செயல்களின் பலன்களையும் அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.

ஆகவே, தர்மநந்தனா! சான்றோர்க்குச் செய்யும் பணிவிடைகளால் இறைவன் வெகு சீக்கிரம் மனம் மகிழ்கிறார் என்பதை உணர்.

இல்லறத்தானின் அனைத்துப் பாவங்களையும் போக்கும் வழிமுறைகளை உனக்குக் கூறினேன். இந்த அறநெறிகளை ஒருவன் முறைப்படி பின்பற்றினாலேயே, துறவிகள் மிகவும் சிரமப்பட்டு அடையும் பலனை எளிதில் அடைந்துவிடலாம்.

உங்கள் வீட்டில் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த பரப்ரும்மத்தை மகான்கள் தேடியலைகின்றனர். இதுதான் இவரது ஸ்வரூபம் என்று ப்ரும்மா உள்பட ஒருவராலும் நிர்ணயித்துக் கூற இயலாதவர்.
இவரைப் பூஜை செய்வோம். என்றார்.

தர்மபுத்ரர் நாரதர் சொன்னதைக் கேட்டு கண்ணீர் மல்க, கண்ணனை முறைப்படி பூஜை செய்தார்.

பின்னர் நாரதர் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.

ஏழாவது ஸ்கந்தம்‌ முற்றிற்று.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, March 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 229 யுதிஷ்டிர நாரத ஸம்வாதம்

தர்மபுத்ரர் நாரதரிடம் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகளை விளக்கிக் கூறும்படி கேட்டார்.

நாரதர், நான்கு வர்ணத்தவரின் தர்மங்களையும், அவர்கள் வாழ்க்கை நடத்தவேண்டிய முறைகள், பெண்களின் தர்மங்கள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். இவர்களைத் தவிர ஜாதிக் கலப்பால் பிறந்தவர்களின் தர்மங்களையும், விரிவாகக் கூறினார்.

வேதங்களை ஆராய்ந்த ரிஷிகளும், முனிவர்களும் அந்தந்த யுகத்திற்கும், மனிதர்களின் இயல்பிற்கும் ஏற்றவாறு அறநெறிகளை வகுத்துள்ளனர். அவற்றுள் தனக்கென்று விதிக்கப்பட்ட வழிமுறையை ஏற்றுக் கடைமையாகச் செய்பவன் அந்த கர்மங்களாலேயே உயர்ந்து குணாதீதனாகவும், இறைவனுக்குப் பிடித்தவனாகவும் ஆகிறான்.

தொடர்ந்து உழுது சாகுபடி செய்யப்படும் வயல், நாளடைவில் செழிப்பை இழந்துவிடுகிறது. அதில் பயிர் விளைவதும் நின்று போகிறது. நல்ல விதைகளை விதைத்தாலும் கூட முளைப்பதில்லை.

அதுபோல், முற்பிறவி வாசனைகளைத் தாங்கி நிற்கும் மனம், அதிகப்படியான உலக ஆசைகளை அனுபவிப்பதால் திறனிழந்து சேர்ந்து விடுகிறது. அளவோடு இன்பங்களை நுகர்ந்தால் மனச்சோர்வு ஏற்படாது. சொட்டு சொட்டாக விடப்படும் நெய் அக்னியை வளர்க்கும். அதே அக்னியில் ஒரே சமயத்தில் அதிக அளவு நெய்யை ஊற்றினால், அக்னி அணைந்துபோகும்.

ஒவ்வொரு வர்ணத்தாருக்கும், ஏற்ற விதிமுறைகள் கூறப்பட்டாலும், அவர்களது மன இயல்பு பிற வர்ணங்களுக்கேற்றபடி அமையுமானால், அதன் படியே அவனது வர்ணமும் அமைகிறது.

மேலும், ப்ரும்மசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், ஸன்யாசி ஆகியவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் செய்யத் தகாதவை, பின்பற்றவேண்டிய அறங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒரு சமயம் ப்ரஹலாதன், பூவுலகைச் சுற்றி வரும்போது அவதூதர்களைச் சந்தித்ததையும், அவர்களிடம், தியான முறைகள், பகவானை அடையும் வழிகள், மோக்ஷதர்மம் ஆகியவற்றையும் கேட்டுத் தெரிந்தான். அவற்றையும் நாரதர் ஐயம் திரிபற யுதிஷ்டிரருக்கும், சபையோருக்கும் எடுத்துரைத்தார்.

இல்லறத்தான் செய்ய வேண்டிய கர்பாதானம் முதல் இறுதிச் சடங்குவரை உள்ள அத்தனை சடங்குகளின் செயல் முறையையும், அவற்றின் உண்மைப் பொருளையும், பலன்களையும் விரிவாகக் கூறினார். 

மோக்ஷத்தின் வழிகளான பித்ருயானம், தேவயானம் ஆகிவற்றைப் பற்றியும் விரொவாகக் கூறினார். 

பின்னர் ஆன்ம தத்துவம் பற்றி விளக்கலானார்.

உடல் என்பது பொய் என்பதை பஞ்ச பூதங்களின் தன்மையையும் குணங்களையும் கொண்டு மிக விரிவாக விளக்கினார்.

ஆன்மாவின் குணங்கள், இயல்புகள், உணரும் முறைகள் ஆகியவையும் விளக்கப்பட்டன.

மனம், சொல், உடல் வாயிலாகச் செய்யப்படும் அனைட்க்து காரியங்களும், பரமனால் செய்யப்படுபவை. அவனையே சென்றடைபவை என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல் அனைத்தையும் பகவானிடம் அர்ப்பணிப்பது க்ரியாத்வைதம் எனப்படும்.

இவ்வுலகிலுள்ள உறவுகள், பொருள்கள் ஆகியவை அனைத்தும் போகங்களே. இதில் தனது, பிறனது என்ற வேறுபாட்டைத்  துறப்பது த்ரவ்யாத்வைதம் எனப்படும்.

யாருக்கு, எந்த ஒரு பொருள், எச்சமயத்தில் எவ்விடத்தில் எந்த உபாயத்தால் யாரிடமிருந்து பெறலாம் என்று அறநெறிகளில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விதமே வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டும். ஆபத்துக் காலங்கள் தவிர இவற்றிலிருந்து மாறுபடுதல் கூடாது. 

இறையினிடத்தினில் அன்பு கொண்டவன், தன் நித்ய நைமித்ய கர்மாக்களை வீ ட் டி லிருந்து கொண்டே முறைப்படி செய்து,  இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதன் வாயிலாகவே வைகுண்டத்தை அடையலாம்.

தர்மநந்தனா! தேவர்களால் கூட உதவ இயலாத பெரும் ஆபத்துக்களிலிருந்து  பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் தயவால் காப்பாற்றப்பட்டீர்கள். அவரது கருணையாலேயே, அனைத்து அரசர்களையும் வென்று ராஜசூய யாகத்தைச் செய்து முடித்தீர்கள். அவனருளாலேயே இந்த ஸம்ஸார சாகரத்தையும் தாண்டுவீர்கள்.

என்று கூறி, தனது முற்பிறவிக் கதையைக் கூற த் துவங்கினார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, March 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 228 புரமெரித்த முக்கண் கரும்பு

தர்மபுத்ரர் கேட்ட கேள்விக்கு நாரதர் விடை  கூறத் துவங்கினார்.

மயன் என்பவன் அசுரர் தலைவன். முன்பொரு சமயம் போரில்,  தேவர்கள் அசுரர்களை வென்றனர். அசுரர்கள் சென்று தங்கள் தலைவனான மயனிடம் முறையிட்டனர்.

அவனும் தன் மாய சக்தியால், தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று பட்டணங்களைப் படைத்து அவர்களிடம் கொடுத்தான்.

அவை எங்கு செல்கின்றன? எப்போது எப்படி வரும்? என்பதை ஒருவரும் அறிய இயலாது. மேலும் அவை, சக்தி வாய்ந்த பல போர்த்தளவாடங்களை உள்ளடக்கியவை.

அசுரர்கள் அவற்றில் மறைந்திருந்து திடீர் திட்டிரென்று தேவர்களைத் தாக்கத் துவங்கினர்.
மூவுலகங்களையும் சற்றும் எதிர்பாராத சமயங்களில் தாக்கி அழிக்கலாயினர்.

மிகவும் துன்பமடைந்ததால், மூவுலகங்களின் தலைவர்களும் பரமேஸ்வரனிடம் சரணடைந்து, 

மஹாதேவா! தங்கள் பக்தர்கள் எங்களை மிகவும் வாட்டி வதிக்கிறார்கள். தயை கூர்ந்து காத்தருளுங்கள் என்று வேண்டினர்.

பரமேஸ்வரன் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய வில்லான பிநாகத்தை எடுத்து முப்புரங்கள்  மீதும் அம்பெய்தினார்.

ஈஸ்வரன் விட்ட அம்பிலிருந்து சூரியக் கிரணங்கள் போல் பலப்பல பாணங்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டு  வெளிக்கிளம்பி முப்புரங்களையும் மறைத்தன.

முப்புரங்களிலிருந்து பல அசுரர்கள்‌ மயக்கமுற்று பூமியில் விழுந்தனர்.
மஹா மாயாவியான மயன் அவர்களைத் தூக்கிக்கொண்டுபோய் தான் ஏற்படுத்திய அமுதக் கிணற்றில் போட்டான்.

அக்கிணற்றின் அமுதம் பட்டதும் அசுரர்கள் உயிர் பெற்றதோடு மட்டுமின்றி வஜ்ரம் போல் பளபளக்கும் உடலையும் பெற்று முன்னிலும் பலசாலிகளாக விளங்கினர்.

பரமேஸ்வரன் தன் எண்ணம் வெற்றியுறாததைக் கண்டு திகைத்தார். அப்போது ஸ்ரீஹரி, அவரிடம் உபாயத்தைக் கூறினார்.

ஸ்ரீமன் நாராயணன் பசுவாகவும், ப்ரும்மதேவர் கன்றுக்குட்டியாகவும் மாறி முப்புரங்களிலிருந்த அமுதக் கிணறுகளின் அமுதம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்.

அங்கு காவற்காத்த அசுரர்கள் இதைக் கண்டபோதும், பகவான் அவர்களை மாயையால் கட்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மயன் இதைக் கண்டு வருந்தாமல், தன் காவலாளிகளுக்கு தைரியம் கூறினான்.

தேவரோ, அசுரரோ, மனிதரோ, எந்த ஜீவனானாலும், முன் வினைப் பயனை மாற்ற இயலாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். மனம் வருந்தாதீர். ஆகவேண்டியதைப் பார்ப்போம் 
என்றான்.

பகவான் ஹரி ருத்ரனுக்கான போர்க்கருவிகள் பலவற்றை உருவாக்கினார். ரதம், தேரோட்டி, குதிரைகள், வில், கவசம், பாணங்கள் அனைத்தையும் ஆக்கித் தந்தார்.

அனைத்தையும் ஏற்றுத் தயாராகி பரமேஸ்வரன் தேரிலேறிக் கிளம்பினார். அபிஜித் முஹூர்த்தத்தில் நாணேற்றி, முப்புரங்களின் மேல் மழைபோல் அம்பு தொடுக்க, அவை எரிந்து சாம்பலாயின. மூவுலகத்தோரும்  வெற்றி முழக்கமிட்டனர். 
பரமேஸ்வரனுக்கு புரமெரித்தோன் என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று.

அனைவரும் இருப்பிடம் சென்றனர்.

பகவான் ஹரியின் திருவிளையாடல்கள் ஒப்பற்றவை. அனைவராலும் புகழப்படுபவை. 
என்றார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, March 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 227 யுதிஷ்டிர நாரத ஸம்வாதம்

நாரதர் தொடர்ந்து கூறலானார்.
தர்மநந்தனரே! 
ப்ரஹலாதனுக்கு பகவான் செய்த அருளைக் கண்டு அனைத்து தேவர்களும் மகிழ்ந்தனர். ப்ரும்மா மீண்டும் பகவானைத் துதி செய்தார். நரஹரி அவரிடம், இனி மீண்டும் இம்மாதிரி வரங்களைத் தராதீர்கள் என்று கூறிவிட்டு அனைவரும் பார்க்கும்போதே மறைந்தார்.

எல்லா தேவர்களையும் ப்ரஹலாதன் முறைப்படி பூஜை செய்ய, அவர்கள் மகிழ்ந்து அவனை வாழ்த்திவிட்டுத்  தத்தம் இருப்பிடம் சென்றனர். 

இவ்வாறு துவார பாலகர்களான ஜெயனும், விஜயனும் திதியின் புதல்வர்களாகப் பிறந்து, பகவானின் கையாலேயே இறந்துபட்டார்கள்.

முனிவர்களின் சாபமானதால், மீண்டும் ராவண கும்பகர்ணர்களாகப் பிறந்தனர். அவ்வமயம் ஸ்ரீ ராமனின் கரத்தால் மடிந்தனர். போர்க்களத்தில் ஸ்ரீ ராமனின் அம்பு பட்டு வீழ்ந்தபோதும், பகவானைப் பார்த்துக் கொண்டே அவரை மனத்திலிருத்திய வண்ணம் உயிர் நீத்தனர்.

அவர்களே இப்போது சிசுபாலன், தந்தவக்த்ரனாகப் பிறந்துள்ளனர். சிசுபாலன் இப்போது நம் கண்ணெதிரிலேயே ஸாயுஜ்யத்தை அடைந்தார்.

பகவான் க்ருஷ்ணனிடம் பகை கொண்ட அனைத்து அசுரர்களும் பகவானை நினைத்ததாலேயே பாவங்கள் நீங்கி ஸாயுஜ்யத்தை அடைகின்றனர். கூட்டில் அடைபட்ட புழு,  குளவியை  நினைத்து பயந்து பயந்து தானும் குளவியாக மாறுவதுபோல் தான் இதுவும்.

தீயோரை நினைத்து நினைத்து விமர்சனம் செய்துகொண்டே இருப்பவருக்கு அந்த தீய குணங்கள் வந்துவிடும். ஸாதுக்களை நினைக்க நினைக்க ஒருவன் தானும் ஸாதுவாகிறான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு ஸாயுஜ்யம் எப்படிப் பொருந்தும் என்று கேட்டாயல்லவா? எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். 

பகவானைப் பெறுவதற்கான பக்தி யோகமும், பாகவத தர்மமும் விளக்கிக்கூறப்பட்டது. பகவத் தத்வமும் விளக்கப்பட்டது.

இந்த சரித்திரத்தை சிரத்தையோடு கேட்கிறவர்களும், சொல்பவர்களும், நினைக்கிறவர்களும் இவ்வுலகத் தளைகளினின்று விடுபடுவர்.

யுதிஷ்டிரா! இம்மாநிலத்தில் தங்களைப் போல் பாக்யவான்கள் எவருமில்லை. ஸாக்ஷாத் பரப்ரும்மமாகிய பகவான், உங்கள் வீட்டில் ஒரு உறவினராய்த் தங்கி, விளையாடி, உங்களிடையே உலா வருகிறார். 
பல பக்தர்களுக்குக் கணநேரக் காட்சியளித்து மறைந்துவிடும் பெருமான், தங்களுடன் வருடக்கணக்காய் உறவாடுகிறார். 

அனைத்து தேவர்களும், முனிவர்களும் அவரது தரிசனம் பெறவேண்டி தங்கள் திருமாளிகைக்கு அடிக்கடி வந்து போகிறார்கள். அந்த பகவான் க்ருஷ்ணன் உங்கள் நண்பன், அம்மான் மகன், உங்கள் கட்டளைகளை முடித்து வைப்பவன், குருவாகவும் இருந்து நல்வழிப்படுத்துகிறான். நீங்கள் அழைக்கும் குரலுக்கு ஓடிவருகிறான்.

இப்போது இச்சபையில் நாங்கள் செய்யும் பூஜையை ஏற்று அவர் அருள் புரியவேண்டும். முன்பொரு சமயம் மயன் என்ற மாயாவி ருத்ரனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த முனைந்தபோது, பகவான் க்ருஷ்ணன்தான் அவரது புகழைக் காத்தார்.

அவ்வாறே அவர் தங்கள் புகழையும் காக்கிறார்.
என்றார்.

உடனே யுதிஷ்டிரர், அதென்ன விஷயம்? மயன் யார்? அவன் ஏன் ருத்ரனின் புகழை அழிக்க முற்பட்டான்? பகவான் எப்படி அவரது புகழைக் காத்தார்? 
என்று கேட்டார்.

நாரதர் மீண்டும் கூறத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, March 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 226 பக்த சக்ரவர்த்தி

தான் மட்டுமல்லாது ஜீவகோடிகள் அனைத்தும் உய்யவேண்டும் என்று ப்ரஹலாதன் வேண்டியதைக் கேட்டு நரஹரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு குழந்தையா என்று அவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக, அதுவே ப்ரஹலாதனுக்கு பட்டாபிஷேகமாயிற்று.

பகவான் கூறலானார். அனைத்து நலன்களையும் பெற்ற குழந்தாய்! உன்னைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நீ விரும்பிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருவதற்குச் சித்தமாய் இருக்கிறேன்.

என்னை மகிழ்விக்காதவனுக்கு என் காட்சி இல்லை. என் தரிசனம் பெற்றபின் ஹ்ருதயத்தில் தாபங்களே இருக்கக்கூடாது. நன்மையை விரும்பும் பக்தர்கள் தங்களுடைய அனைத்துச் செயல்களாலும் என்னை மகிழ்விக்கின்றனர். நீ விரும்புவதைக் கேள்.
என்றார்.

பெரும் சாதகர்களும் கூட வரம் என்றால் மயங்குவார்கள். ஆனால், ப்ரஹலாதனோ பகவானே மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டும் எவ்வரத்தையும் விரும்பவில்லை.

சிறு குழந்தையானாலும், வரம் பெறுவது அன்பு மார்கத்தின் தடைக்கல் என்று உணர்ந்திருந்தான்‌.

எனவே, தெளிவாகச் சொன்னான்.

பகவானே! பிறந்தது முதலே இவ்வுலக இன்பங்கள் எதிலும் எனக்கு நாட்டமில்லை. ஆசைக்கூட்டங்களைக் கண்டு பயந்து அவற்றிலிருந்து விடுபடவே தங்களைச் சரணடைந்துள்ளேன். என்னை மீண்டும் ஆசை காட்டவேண்டாம்.

என்னைச் சோதிக்கத்தானே வரம் வேண்டுமா என்று கேட்கிறீர்கள். வரம் பெறுவது ஆசைதானே. எவ்வித ஆசையானாலும் அது பிறவிச் சுழலில் தள்ளிவிடும்.

எவன் தன் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள வரம் கேட்கிறானோ, அவன் பக்தனல்ல. வியாபாரி.

நான் பயன் கருதாத பக்தன். நீங்களும் பயன் கருதாத தலைவர். நம் இருவருக்கும் அன்பைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை. நீங்கள் வரம் கொடுக்க விரும்பினால், என் மனத்தில் இனி வரம் கேட்கும் எண்ணமே எழாமல் இருக்க வரம் தாருங்கள்.

என் மனத்தில் எப்போதும் ஒரே சீராக வீற்றிருங்கள். அழகிய சிங்கரான  தங்கள் நாமம் எப்போதும் என் நாவில் இருக்கட்டும். பரமாத்மாவான தங்களை வணங்குகிறேன். 
என்றான்.

பகவான் அவனைப் பார்த்து அயர்ந்துபோனார். அவனைக் கட்டி உச்சிமோந்து கூறலானார். 
உன்னைப் போன்ற பக்தர்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை. நீ என்னை வென்றுவிட்டாய். நீ விரும்பாவிட்டாலும்,  நானாக, உனக்கொரு வரம் தருகிறேன். 

இந்த மன்வந்தரம் முடியும்வரை மட்டும் என் மகிழ்ச்சிக்காக இவ்வுலகில் அசுரர் தலைவனாக இருந்து அனைத்து இன்பங்களையும் அனுபவி. வேள்வியைத் திருமேனியாகக் கொண்ட நான் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறேன். 

என்னை உன் ஹ்ருதயத்தில் நினைத்துக்கொண்டு ‌என்னைப் பற்றிய கதைகளைக் கேட்டுக்கொண்டிரு. எல்லா செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணம்‌ செய். அப்படிச் செய்வதால் உன் கர்மங்களின் பலன் அழியும். 

இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் உன் புண்ணிய பலனைக் கரைத்துக்கொள். பற்றற்று கர்மாக்களைச் செய்வதால் பாவபலனை அழித்துக்கொள். காலத்தால் உன் ப்ராரப்த உடலை விட்டு அதன் பின் என்னை வந்து அடையலாம். 

உன்னால் போற்றப்பட்ட எனது இந்த துதியைச் சொல்பவன் அனைத்து கர்மத்தளைகணின்றும் விடுபடுவான் என்றார்.

ப்ரஹலாதன் மீண்டும் கூறினான்.

பெருமானே! என் தந்தை தங்களின் ஈசுவரத் தன்மையை அறியமாட்டார். அவர் தங்களைப் பலவாறு நிந்தித்திருக்கிறார். இந்த விஷ்ணுதான் என் தம்பியைக் கொன்றவன் என்ற பொய்யான நம்பிக்கையில் கோபம் கொண்டு எனக்கும் பல தீங்குகள் புரிந்தார். அவர் செய்த பாவங்களுக்கு எல்லையே இல்லைதான்.

ஆனாலும், தங்கள் திருக்கரம் பட்டதுமே அவை பொசுங்கியிருக்கும்  என்பதிலும் ஐயமில்லை. எனினும் என் தந்தை தூய்மை பெறவேண்டும் என்று பேதையான என் உள்ளம் விரும்புகிறது. அதற்காக அருள் செய்யுங்கள் என்றான்.

பகவான், குழந்தையைத் தன் மடியில் இருந்திக்கொண்டு அவன் தலையைத் தடவிக்கொண்டே பதிலுரைத்தார்.

பவித்ரமானவனே! நீ ஒருவன் இந்தத் திருமாளிகையில் பிறந்ததாலேயே உன் தந்தையும் மற்றும் அவனது முன்னோரின் இருபத்தோரு தலைமுறைகளும், உனக்குப் பினால் வரும் இருபத்தோரு தலைமுறைகளும் பரிசுத்தமாகிவிட்டனர்.

சாதுக்களும், அனுஷ்டானங்களை விடாமல் பின்பற்றுபவர்களும், சமதர்சிகளும், அடக்கமுடையவர்களுமான என் அடியார்கள் எங்கெல்லாம்‌ இருக்கிறார்களோ, அவ்விடங்களும், அங்கு வாழும் உயிர்களும் தூய்மை பெறுகின்றன.

உன்னை முன்னோடியாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் என் அடியார். நீயே பக்தர்கள் அனைவர்க்கும் ஆதர்ச புருஷனாவாய்! 

என்னைத் தீண்டியதாலேயே உன் தந்தை புனிதமாகி விட்டாலும், அவனுக்கான ஈமச் சடங்குகளை விடாமல் செய். உன்னைப் போன்ற நன்மக்களால் செய்யப்படும் கர்மாக்களாலேயே முன்னோர் நல்லுலகங்களை அடைகின்றனர்.

உன் தந்தையின் சிங்காதனத்தை ஏற்றுக்கொள். என்னை மனத்தில் நிறுத்தி எனக்கு அர்ப்பணமாக இந்த ராஜ்யபாரத்தை வகிப்பாய்! 
என்று கூறினார்.

நிஜமான சிங்கத்தின் மடியில் அமர்ந்து, அவரது தாமரைக் கரமே கிரீடமாய், பகவானின் ஆனந்தக் கண்ணீரே அபிஷேகமாய் ஏற்று, ப்ரஹலாதன் ஹரி பக்தர்கள் அனைவர்க்கும் சக்கரவர்த்தியாக பதவியேற்றான்.  குருவை விஞ்சிய சிஷ்யனாக இன்றளவும் விளங்குகிறான்.

ப்ரஹலாத நாரத பராசர புண்டலீக
வ்யாஸ அம்பாரீஷ சுக சௌனக பீஷ்மதால்ப்யான்|
ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி||

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, March 8, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 225 ப்ரஹலாத ஸ்துதி

இறைவா! ஸத்வ குணத்தின் உறைவிடம் தாங்கள். ப்ரும்மதேவர் முதலான அனைத்து தேவர்களும் யாரிடமும் அசுரர்களான எங்களைப்போல்  வீண்பகை கொள்வதில்லை. 

தங்களது விதம்விதமான அனைத்து அவதாரங்களும் இவ்வுலகின் நலனுக்காகவும், அடியார்களைக் காத்து மகிழ்விக்கவும்தான். 

கோபத்தை விட்டு அமைதி கொள்ளுங்கள். அசுரனைத்தான் கொன்றுவிட்டீர்களே. அதனால், அத்தனை ஜீவன்களும் மகிழ்கின்றன. இப்போது அனைவரும் சாந்தம் கமழும் தங்கள் திருமுகத்தை தரிசிக்க விரும்புகிறோம். எந்த விதமான பயமானாலும் அது நீங்குவதற்காக அனைவரும் தங்களின் இந்த உருவத்தைத் தான் தியானிக்கப் போகிறார்கள்.

தங்களது செந்தீ போல் சுழலும் கண்களையும், கூர்மையான கோரைப் பற்களையும், கழுத்திலுள்ள குடல் மாலைகளையும், குருதி படர்ந்த திருமேனியையும், யானைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் சிம்ம கர்ஜனையையும் கூர்மையான நகங்களையும் கண்டு எனக்கு அச்சமில்லை.

நான் பயப்படுவதெல்லாம், கோரமான இந்த ஸம்ஸாரத்தைக் கண்டுதான். என் முன்வினைப் பயன் எனும் பயங்கரமான ஜந்துக்கள் மத்தியில் விழுந்துகிடக்கிறேன். தங்கள் சரணம் ஒன்றே ஒரே பற்றுக்கோடு. என்னை இப்போதே அழைத்துக் கொள்ளுங்களேன்.

எப்போது முதல் இந்த மாயையில் சிக்கி உழல்கிறேன் என்று அறியேன். ஆனால், தங்களைக் கண்டபின்னும் உழல்வது தகுமா? எனக்கு தங்களிடத்து பக்தியைக் கொடுங்கள்.

எனக்கு மிகவும் பிரியமானவர் தாங்களே. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நன்மை செய்யும் இனிய நண்பர் தாங்களே. நான் பூஜிக்கும் பொருளும் தாங்களே. ப்ரும்மதேவர் தங்கள் திருக்கல்யாண குணங்களை பலவாறாக வர்ணித்துள்ளார். அவற்றை ஸாதுக்கள் வாயிலாக தினமும் கேட்பேன், சொல்லுவேன். அதனாலேயே விருப்பு வெறுப்பு நீங்கப்பெற்று, ஸம்ஸாரப் பெருங்கடலை எளிதில் தாண்டுவேன்.

இறைவா! உலகில் ஒவ்வொரு துன்பம் நீங்குவதற்கும் ஒரு ப்ராயச்சித்தம் உள்ளது. ஆனால், தங்களிடம் பக்தியில்லாது அவை செய்யப்படுமானால், அவை சிறிது நேரமே பலன் தரும். வினையின் வேரையும், தவறு செய்யும் எண்ணத்தையும் அது அறுப்பதில்லை.

ப்ரும்ம தேவர் முதல், உலகில் அனைத்து படைப்புகளின் உபாதான காரணமும் தாங்களே. மற்ற படைப்பாளிகளின் உந்து சக்தியும்‌ தாங்களே.

வெறும் எண்ணக்குவியலான மனம், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள்,‌ஐந்து தன்மாத்திரைகள் ஆகிய பதினாறு ஆரங்களைக் கொண்டது ஸம்ஸார சக்கரம். தங்களது அருளின்றி எவனாவது இந்த சக்கரத்திலிருந்து தப்பிக்க இயலுமா?

ஆலைக் கரும்புபோல் என்னைப் பிழிந்தெடுக்கும் இந்த ஸம்ஸார சக்கரத்தினின்று என்னைக் காத்தருளுங்கள்.

ஸ்வர்க போகங்கள், நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவற்றிறை என் அனுபவத்தினால் வெறுக்கிறேன். ஏனெனில் இவை அனைத்தையும் தன் புருவ நெறிப்பினால் கலங்கடிக்கும் என் தந்தையும் கூட வீழ்ந்தார்.

ஆகவே நான் இவை எதையும் விரும்பவில்லை. தாங்கள் இப்போது என்னருகில் இருப்பினும், மின்னல் போல் தோன்றி மறையக்கூடியவர். தாங்கள் விரும்பி நிரந்தரமாக வாசம் செய்யும் ஒரே இடம், தங்களது அடியார்களின் ஹ்ருதயம். எனவே தங்கள் அடியார்களின் கூட்டத்திலேயே எப்போதும் இருக்க விரும்புகிறேன்.

கானல் நீர் போன்ற பொய்யான உலக இன்பங்கள், நோய் பிடித்தழியும் இவ்வுடல். நிலையாமை முகத்தில் அறைந்தாலும், மனிதனின் மனம் போகங்களையே தேடுகிறது.

தமோகுணமும் ரஜோகுணமும் நிரம்பிய அசுரப் பிறவியான நான் எங்கே? பள்ளம் நோக்கி ஓடிவரும் வெள்ளம்போல், அணையற்றுப் பாயும் தங்கள் கருணை எங்கே?

 அனைத்து தாபங்களையும் போக்கும் தங்கள் திருக்கரத் தாமரைகளை என் தலையில் வைத்தருளினீர்களே! இந்த பாக்யம் தேவர்களுக்குக் கூட இதுவரை கிட்டவில்லையே!

பாமரனைப்போல், தேவர்கள் உயர்ந்தவர்கள், அசுரர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமே உங்களுக்கில்லையே. கற்பகத் தருவைப் போல் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்கள் அருள் அமைகிறதேயன்றி, தாங்கள் உயர்வு தாழ்வு நோக்குவதில்லையே.

விழுங்கக் காத்திருக்கும், காலனாகிய பெருநாகம் குடியிருக்கும் பாழுங்கிணற்றில் கூடாவொழுக்கத்தால் விழத்தெரிந்தேன்‌. நாரதர் வந்து காக்காவிடில், என் நிலைமை என்னவாகியிருக்கும்? எனவே ஸாது சேவையை நான் கைவிடவே இயலாதே.

தங்களிடம் பெருங்காதல் கொண்டுள்ள ஸனகாதியர், தேவர்கள் மற்றும் நாரதரின் சொல்லை மெய்ப்பிக்கவே தாங்கள் ஓடி வந்து என்னைக் காத்தீர்கள்!

ப்ரளய காலத்தில் அனைத்தையும் தங்களுக்குள் ஒடுக்கிக்கொண்டு, யோக நித்திரை செய்கிறீர். நீங்கள் எழும்போது, சிறிய விதையிலிருந்து பெரிய மரம் முளைப்பதுபோல், தங்கள் தொப்புளிலிருந்து இந்த ப்ரபஞ்சம் மீண்டும் முளைக்கிறது.

இதே ப்ரபஞ்சத்தில் தாங்கள் மீன், விலங்கு, பறவை, முனிவர், தேவர்கள் ஆகிய பல திருமேனிகள் தாங்கி அவதரித்து ஜீவன்களின் துன்பத்தைப் போக்குகிறீர்கள்.
ஒவ்வொரு யுகத்திலும் அந்தந்த யுகதர்மங்களைக் காக்கிறீர்கள். மூன்று யுகங்களிலும் வெளிப்படையாகத் தோன்றுவதால் த்ரியுகன் என்ற பெயர் பெறுகிறீர்கள். கலியுகத்தில் மறைந்து நின்று அருள் புரிகிறீர்கள்.

புலன்களால் ஜீவன்களின் மனம்  அலைக்கழிகிறது. 
பற்றினால், இவன் நம்மவன், இவன் பிறன் என்ற வேறுபாடு கொண்டு அலைகிறான். தாங்கள் என் மேல் செலுத்திய அன்பைச் சிறிதேனும் இந்த ஜீவன்களின் மீதும் செலுத்தி அனைவரையும் கரையேற்றுங்கள்.

ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் தங்களுக்கு இது ஒரு சிரமமா? ஒன்றுமறியாதவரிடம்தானே சான்றோர் கருணை மிகக் கொள்வர். 

வைதரணியைக் கடப்பது மற்றவர்க்குச் சிரமம். 
தங்கள் அடியார்களுக்கோ அது சுலபம். என் மனம் தங்கள் திருவடித் தாமரையில் மூழ்கியுள்ளது. எனவே, எனக்கு என்னைப் பற்றிய கவலையே இல்லை. என் கவலை அனைத்தும் உழலும் இந்த ஜீவன்களைப் பற்றித்தான். 

முனிவர்கள் வேண்டுமானால் காடுகளில் சென்று தவமியற்றி முக்தி பெறட்டும். நானோ எவ்வித உதவியுமின்றி பரிதாபமாக உழலும் இந்த ஜீவகோடிகளை விட்டுவிட்டுத் தனியொருவனாக முக்தியடைய விரும்பவில்லை. 

அனைத்திலும் சிறந்த இறைவா! நமஸ்கரித்தல், துதித்தல், இறையர்ப்பணமாகச் செயல்கள் செய்தல், ஸாது சேவை, திருவடி ஸ்மரணம், தங்கள் கல்யாண குணங்களைக் கேட்டல், ஆகிய ஆறும் பக்தியின் முக்கியமான அங்கங்கள். தங்களையே பற்றியிருக்கும் சாதுக்களின் செல்வம் தாங்களே. எனக்கு சாது சேவை எப்போதும் கிடைக்க அருளுங்கள்!

என்று கண்களில் நீர் வழியக் கூறி முடித்தான் ப்ரஹலாதன்.

தனக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவன்களுக்காகவும் சேர்த்து வேண்டும் இந்த ஸ்துதி, ஆகச் சிறந்த துதி என்று அனைத்து சாதுக்களாலும் கொண்டாடப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, March 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 224 சிங்கக்குட்டி

ஹிரண்யகசிபு இறந்து பட்ட போதும் பகவானின் கோபம் தணியவில்லை. அவரது திருவடிகளின் அழுத்தத்தால் பூமி நடுங்கியது. அவர் திருமுகத்தைக் கண்டு பயந்து,  எதிரில் செல்லவோ, அருகில் சென்று வணங்கவோ எவரும் துணியவில்லை.

அவர் அவையிலுள்ள ஹிரண்யகசிபுவின் ஆசனத்தில் ஏறி அமர்ந்தார்.

தேவமகளிர் ஹிரண்யகசிபு ஒழிந்தான் என்ற செய்திகேட்டு, ஆனந்தத்தால் பூமாரி பொழிந்தனர். 

அவரைக் காண வந்த தேவர்கூட்டத்தால் ஆகாயம் நிரம்பியது. துந்துபி, ஆனகம் முதலிய வாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாட, அப்ஸரஸ்கள் நடனமாடினர்.

அப்போது அங்கு வந்திருந்த ப்ரும்மா, இந்திரன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகணங்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், கிம்புருஷங்கள், விஷ்ணுபார்ஷதர்கள் எல்லோரும் ஸ்ரீ ந்ருஸிம்மரை அருகில் செல்லாமலும், வெகு தொலைவில்லாமலும் நின்று தனித்தனியே துதித்தனர்.

அவ்வளவு பேரும் துதி செய்தும், பகவானின் கோபத்தின் வேகம் குறையவில்லை. அவர்களால் அருகில் செல்லவும் இயலவில்லை.

தேவர்கள் பகவானை சமாதானப்படுத்தும்படி மஹாலக்ஷ்மியை அனுப்பிவைத்தனர். அவரோ, நரஸிம்மரின் பயங்கரமான திருமேனி கண்டு பயந்தார். இதற்கு முன் இவரை நான் இப்படிக் கண்டதே இல்லை என்றார். அருகில் செல்ல நடுங்கினார்.

ப்ரும்மதேவர், ப்ரஹலாதனைப் பார்த்து,

குழந்தாய்! உன் தந்தையிடம் சினம் கொண்ட பகவானை நீயே சமாதானம் செய்.
என்றார்.

குழந்தை குருவான நாரதரின் முகம் நோக்க, நாரதர் தலையசைத்தார்.

குருவும், பகவானும் ஒன்றாக நின்றால், முதலில் இறையைக் காட்டிக் கொடுத்த குருவை வணங்கவேண்டும்‌. அவர் அனுமதியுடன் இறையை வணங்க வேண்டும். 

உடனே, பரம பாகவதனான ப்ரஹலாதன், இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து, மெல்ல மெல்ல பகவானின் அருகில் சென்று, தரையில் விழுந்து வணங்கினான்.

பயங்கரமான, விசித்ரமான  திருமேனி கண்டு அவனுக்கு மட்டும் பயமில்லையா? குழந்தையாயிற்றே! என்றால், அப்பா சிங்கத்தைப் பார்த்து, சிங்கக்குட்டி பயப்படுமா? அனைவர் கண்களுக்கும் பயங்கரமாகத் தெரிந்த பகவான், குழந்தையின் கண்களுக்கு மட்டும் கருணை மிக்கவராகவும், அன்பு மிகுந்தவராகவும் காட்சியளித்தான்.

ஒன்றுமறியாத பாலகன், திருவடியில் விழுந்து வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட பகவானின் கோபம் சட்டென மாறியது. கருணை கொஞ்சும் உள்ளத்தோடு, அவனை வாரியெடுத்தார். அபயமளிக்கும், தாமரை போன்ற  தன் கரத்தை அவன் தலையில் வைத்தார்.

பகவானின் கரம் பட்டதும், அவனது எஞ்சியிருந்த பாவங்கள் அனைத்தும் சாம்பலாயின. ப்ரும்மானந்தம் சித்தித்தது.

காதலும், ஆனந்தமும் ஆட்கொள்ள ஆனந்தக் கண்ணீர் பெருகத்  தழுதழுத்தான். மயிர்க்கூச்செறிந்தான். 

இமைக்க மறந்தான். அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். ஒன்று பட்ட மனத்துடன் குழந்தை பகவானைப் பார்க்க, நரஹரியும் அவனை அன்பு பொங்கப் பார்த்து முழுவதுமாய் ஊடுருவிக் கொண்டிருந்தார்.
வெகுநேரம் கழித்து, மெதுவாக, வாய்குழறத் துதிக்கலானான் குழந்தை.

இறைவா! ப்ரும்மா முதலான ஸத்வகுணம் நிரம்பியவர்களின் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்த துதிகளும் தங்களை இன்று வரை மகிழ்விக்க இயலவில்லை. அசுர குலத்தில் பிறந்து, தமோகுணம் நிரம்பிய என் துதி தங்களுக்குப் பிடிக்குமா?

செல்வம், நற்குலம், அழகு, தவம், கல்வி, திறன், பொலிவு, வீரம், உடல் வலிமை, முயற்சி, யோகம், அறிவு ஆகிய பன்னிரண்டு குணங்களாலும் தாங்கள் மகிழ்வதில்லை. பக்தி ஒன்று தான் தங்களை மகிழ்விப்பது. மேற்கண்ட எதுவும் இல்லாத கஜேந்திரனின் பக்திக்கு மகிழ்ந்து ஓடிவந்தீரே.

மேற்கண்ட அனைத்து நற்குணங்களும் நிரம்பியவனானாலும், அவன் தங்களை சரணடையாவிடில் யாது பயன்? அவனால் தன்னைக் கரையேற்றிக்கொள்ள இயலாதே.

சர்வ சக்தி படைத்த தங்களுக்கு எங்கள் பூஜையால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எனினும் கருணை கூர்ந்து அவற்றை ஏற்கிறீர்.

முகத்துக்குச் செய்யும் அலங்காரம், கண்ணாடியில் எதிரொளிப்பதுபோல், தங்களுக்கு எவ்விதத்தில்  பூஜை செய்கிறோமோ, அதே விதத்தில் எங்களையே வந்தடைகின்றன.

தங்கள் புகழைப் பாடுபவன், அக்கணத்திலேயே தூய்மையடைகிறான். நானும் அதனாலேயே என் அறிவிற்கு எட்டியவரை தங்கள் பெருமைகளைப் பாடுகிறேன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, March 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 223 ஸிம்மம் தோன்றினான்

ப்ரஹலாதன் தூணை வணங்கியதும் ஹிரண்யகசிபுவுக்கு அடக்கவொண்ணாத கோபம் தலைக்கேறிற்று.
வேகமாகச் சென்று அந்தத்தூணை முஷ்டியால் குத்தினான்.

அப்போது, ப்ரும்மாண்டமே வெடித்ததோ என்னும்படி சத்தம் கேட்டது.

அதைக்கேட்டு ப்ரும்மா முதலிய அனைவரும் தத்தம் லோகங்களுக்கு அழிவு வந்ததோ என்று எண்ணிக் கலங்கினார்.

அந்த சத்தம் கேட்ட ஹிரண்யகசிபு சற்றே பயந்தவண்ணம் சத்தம் எங்கிருந்து வந்ததென்று தேடினான்.

அப்போது,
தன் பரம பக்தனான ப்ரஹலாதனின் இதோ தூணில் தெரிகிறாரே என்ற வார்த்தையை சத்யமாக்கவும்,

ஹிரண்ய கசிபு கேட்ட அனைத்து வரங்களையும் தந்தேன் என்று சொன்ன ப்ரும்மாவின் வாக்கை சத்யமாக்கவும்

நாராயண பக்தனால் அவனுக்கு அழிவு வரும் என்று இந்திரனுக்குக் கொடுத்த வாக்கை சத்யமாக்கவும்,

மூன்று அசுரப் பிறவிகள் பிறக்கக்கடவது. ஒவ்வொரு முறையும் பகவான் கையால் விமோசனம் என்று கூறிய ஸனகாதிகளின் வாக்கை மெய்ப்பிக்கவும்,

காணும் பொருள் அனைத்திலும் பகவான் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற ப்ரஹலாதனின் வாக்கை உண்மையாக்கவும்,

என்னடியாரை நான் எப்போதும் காப்பேன் என்ற பகவானின் வாக்கை மெய்ப்பிக்கவும்,

அந்தத் தூணைப் பிளந்துகொண்டு மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, அக்னி போல் ஜொலிக்கும் ப்ரகாசத்துடன்,  பயங்கரமாக கர்ஜனை செய்துகொண்டு நரஹரி உருவில் பகவான் தோன்றினார்.

சிம்ம கர்ஜனை கேட்டு நாற்புறமும் ஹிரண்யகசிபு தேட, தூணிலிருந்து வெளிப்பட்ட அந்த அற்புதமான மூர்த்தியைக் கண்டான். மனிதனுமில்லை. மிருகமும் இல்லை. மூவுலகிலும்  இந்த மாதிரி பார்த்ததே இல்லையே. இதென்ன விந்தை!

இவ்வாறு அவன் திகைத்துப்போய் நிற்கும் சமயம், அவனெதிரில் வந்து நின்றார் பகவான். மிகவும் பயங்கரமான உருவம். உருக்கி வார்த்த தங்கம் போல் மஞ்சளான கண்கள். கோரைப் பற்கள். பளபளக்கும் கூர்மையான நாக்கு, புருவ நெறிப்பால் இன்னும் பயங்கரமாகத் தோற்றமளிக்கும் முகம். காதுகள் மேல்நோக்கி அசைவின்றி நிற்கும். மலைக்குகை போன்ற விரிந்த மூக்கு, திறந்த வாய், பயமுறுத்தும் உருவமாகத் தோன்றினார்.

விண்ணளாவிய மேனி. குறுகிய கழுத்து, பரந்த மார்பு, சிறுத்த இடை, நிலவொளிபோல் வெளுத்த ரோமங்கள், கூரிய நகங்களைக் கொண்ட திருக்கரங்கள்.

அவரைக் கண்டு, தைத்யர்கள், தானவர்கள் அனைவரும் சிதறி ஓடினர்.

இதைக் கண்டு பயந்தாலும், மாயாவியான விஷ்ணுதான் என்னைக் கொல்ல இவ்வாறு வந்திருக்கிறார். இந்த மாயங்களெல்லாம் என்னை என்ன செய்துவிடும்? என்றெண்ணினான் ஹிரண்யகசிபு.

கதையைக் கையிலேந்தி அவர் மேல் பாய்ந்தான். ஆனால், விட்டில் பூச்சி தீயில் விழுவதுபோல் ஆயிற்று.


அவரது ஒளியின் முன்னால் அவன் மிகவும் குன்றிக் காணப்பட்டான். கருடன் பாம்பைப் பற்றுவதுபோல் அவனை ஒரு கையால் இறுகப் பிடித்தார் பகவான். அவனோடு சற்று விளையாட நினைத்தார். உடனே அவன் அவர் கையிலிருந்து நழுவினான்.

இதைக் கண்ட தேவர்கள் பயந்தனர். ஹிரண்யனோ, தன் புஜபலம் கண்டு பயந்துதான் நரஹரி தன்னை நழுவவிட்டார் என்று எண்ணினான். போரில் களைப்படையாத ஹிரண்யன், மீண்டும் அவரை நோக்கிப் பாய்ந்தான்.

கத்தியையும் கேடயத்தையும் நாற்புறமும் சுற்றினான். பகவான் ஒரு பெரிய கர்ஜனை செய்ய, அவ்வொலியில் ஹிரண்யனின் பார்வை மங்கியது. பாம்பு எலியைப் பிடிப்பதுபோல் பாய்ந்து வந்து அவனைப் பிடித்துக் கொண்டார் பகவான். இப்போது அவன் எவ்வளவு முயன்றும் பகவானது பிடியிலிருந்து விடுபட இயலவில்லை. பகவானோ அவனைத் தூக்கிக்கொண்டு  அச்சபையின் வாயிற்படியில் நின்று விளையாட்டாக அவனை நகங்களால் கிழித்துப் போட்டார்.

தன் கூரிய நகங்களால் அவன் மார்பைப் பிளந்தார். வயிற்றைக் கிழித்து குடல்களை உருவிப்போட்டார். குருதி தெளித்து அவரது பிடரி மயிர்கள் சிவந்தன. யானையைக் கொன்ற சிங்கம் போல் விளங்கினார்.

தன் பிடரி மயிர்களை அடிக்க, மேகக்கூட்டங்கள் சிதறின. தேவர்கள் இக்காட்சியை நன்கு கண்டு களிக்கட்டும் என்று அப்படிச் செய்தார் போலும்.

மீண்டும் உரக்க கர்ஜனை செய்ய, சமுத்திரம் கலங்கிற்று. எண்டிசை யானைகளும் பயந்து சிதறின.


முரளீதர ஸ்வாமிஜியின் மதுர கீதம்

ராகம்: ஶுத்த தன்யாஸி தாளம்: ஆதி

பல்லவி
ஸிஹ்மம் தோன்றினான் நரஸிஹ்மம் தோன்றினான்
விண்ணும் மண்ணும் அதிரும்படி ஸிஹ்மம் தோன்றினான் || ஸி ||

அனுபல்லவி
பிள்ளை சொல் கேட்டு துள்ளி எழுந்தவன்
தூணைப் பிளக்கவே அங்கு தோன்றினான் || ஸி ||

சரணம்

01. பக்த வத்ஸலன் அங்கு தோன்றினான்
ஸத்ய ஸந்தன் அங்கு தோன்றினான்
முக்தி தருபவன் அங்கு தோன்றினான்
அந்தி நேரத்தில் அங்கு தோன்றினான்

02. கால காலன் அங்கு தோன்றினான்
கோலாஹலன் அங்கு தோன்றினான்
மாலோலன் அங்கு தோன்றினான்
பாலபாலகன் அங்கு தோன்றினான்

03. மண்ணைக் கேட்டவன் அங்கு தோன்றினான்
விண்ணை அளந்தவன் அங்கு தோன்றினான்
நாண் ஏற்றியவன் அங்கு தோன்றினான்
வெண்ணெய் உண்ட முரளீதரன் அங்கு தோன்றினான்

Tuesday, March 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 222 தூணில் இருக்கிறானா?

அசுரக் குழந்தைகள் ப்ரஹலாதனோடு இணைந்து நாமகீர்த்தனம் செய்வதைப் பார்த்துக்கொண்டே  வந்த சண்டாமர்க்கர்களுக்கு பயம்‌ பிடித்துக்கொண்டது.

விரைந்து சென்று அனைத்தையும்  அரசனிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டதும் ஹிரண்யகசிபுவின் உடல் கோபத்தில் பதறியது.

என் மகனை நானே கொன்றுவிடுகிறேன். அவனை அழைத்து வா என்று கர்ஜித்து பற்களை நறநறவென்று கடித்தான்.

மனவடக்கமும் புலனடக்கமும் கொண்ட ப்ரஹ்லாதன் வணக்கமாய்த் தந்தை முன் இருகரம் கூப்பி நின்றான். பால் வடியும் முகம் கொண்ட பாலகனைக் கண்டு காலால் மிதிபட்ட நாகம் போல் சீறினான் ஹிரண்யகசிபு. அவனைக் கொடூரமான வார்த்தைகளால் அவமதித்துக் கூறலானான்.


வினயமற்றவனே! குலம் கெடுக்க வந்த கோடரிக் காம்பே! நீசனே! உன்னை இப்போதே எமனுலகம் அனுப்புகிறேன்.
நான் கொஞ்சம் சினந்தாலும் மூவுலகங்களும் அதன் தலைவர்களும் நடுங்குகின்றனர். நீ யாருடைய பலத்தால் என் கட்டளையை மீறுகிறாய்?

ப்ரஹலாதன் கூறலானன்.

அரசே! ப்ரும்மா முதல், சிறு புல் வரை, அசைவன அசையாதன அனைத்தும் பகவானின் கட்டளையில் உள்ளன. தங்களுக்கும் இந்த ப்ரபஞ்சத்திற்கும் கூட ஒரே பலம் அந்த பகவான் அன்றோ?

மனவலிமை, உடல் வலிமை, மற்றும் புலன்கள் அனைத்திற்கும் ஆதாரம் அவரே. அந்த ஸர்வேஸ்வரன்தான் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறார்.

அப்பா! இந்த அசுர குணத்தை விடுங்கள். தன்வயப்படாது தீயவழிச்செல்லும் மனமே பெரும் பகைவன். எல்லாவற்றிலும் சமபுத்தி கொள்ளுதலே இறைவனின் பூஜை. மனம் மற்றும் ஐம்புலன்களான  ஆறு பகைவர்களை வெற்றிகொள்ளாதவன் பத்து திசைகளை வென்றதாக எண்ணுவது எவ்வளவு முட்டாள்தனம்?

ஹிரண்யகசிபு, தொடையைத் தட்டிக்கொண்டு குதிக்கலானான்.
அசடே! நீ என்ன பேசிக்கொண்டே போகிறாயே. உன் முடிவு நெருங்கிவிட்டது.

உயிரைவிடத் துணிந்து விட்டாய். இறக்கப்போகிறவர்கள் தான் முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசுவார்கள். என்னைத் தவிர வேறொரு தலைவன் இருக்கிறான் என்று கூறினாயே? அவன் எங்கேயடா?

அவர் எங்கும் இருக்கிறார்.

அப்படியா? இந்தத் தூணில்?

இதோ தெரிகிறாரே என்று கூறி, ஹிரண்யகசிபு காட்டிய தூணை வலம்வந்து நமஸ்கரித்தான் ப்ரஹலாதன்.


#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, March 3, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 221 பக்தி வழி

நாரதர் தனக்குச் செய்த உபதேசம் பற்றியும், அதைத் தான் பெற்ற விதத்தையும் அசுரக் குழந்தைகளிடம் கூறினான் ப்ரஹலாதன்.

முன்பே ஹிரண்யகசிபுவும், சண்டாமர்க்கர்களும் இந்த அறிவு உனக்கு எவ்வாறு வந்தது என்று கேட்டனரே. அப்போது அந்தர்யாமியாக இருக்கும் பகவானால் வந்தது என்று கூறினானே.

இப்போது தன் நண்பர்களிடம், நாரதர் சொன்னார் என்கிறானே. பொய் சொல்கிறானோ? என்ற சந்தேகம் எழுமாயின் அது அவ்வாறல்ல.

தந்தையிடம், நாரதர் பெயரைச் சொன்னால், அவன் உடனே அவரை அழைத்துத் துன்புறுத்துவான். மேலும், தான் இல்லாத நேரத்தில், தேவேந்திரன் தன் மனைவியைச் சிறையெடுத்தான் என்று தெரிந்தால், அவ்வளவுதான். ஏற்கனவே தேவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கும் ஹிரண்யகசிபு, இச்செய்தி தெரிந்தால் அவர்களை என்ன செய்வான் என்று அனுமானிக்கக்கூட இயலாது.

மேலும், நாரதர் உபதேசம் செய்த உடனேயே ஞானம் வந்துவிட்டது அந்த தெய்வக் குழந்தைக்கு. அதனால் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைக் காணத் துவங்கிவிட்டான்.

குருவுருவும் ஹரி உருவும்
ஓருருவாகுமே

என்பதற்கிணங்க, நாரதரை குருவுருவில் வந்த ஹரியாகவே கண்டதனால், குரு வேறு, ஹரி வேறு என்ற எண்ணமே அவனுக்கு இல்லாததால் தந்தையிடம் பகவானால் வந்தது என்று சொன்னான்.

ஒரு உண்மையான சீடன், தனக்கு ஞானம் வழங்கிய குருவை பிரகாசப்படுத்த வேண்டும். அசுரச் சிறுவர்களுக்குத் தான் நல்வழியைப் போதிப்பதால் அவர்கள் தன்னை குருவாக நினைக்கக்கூடும். எனவே குருவான நாரதர் எடுத்துக்கூறினார் என்று சொன்னால், அவர்களும் அந்த மஹாத்மாவை குருவாக ஏற்பர்.

மேலும், நாமகீர்த்தனம் ஏதோ தனக்கு ஹ்ருதயத்தில் உதித்து, தானே கண்டுபிடித்த வழி அல்ல. நாரதர் போன்ற மஹான்கள் காட்டிய வழி, எனவே ஐயமின்றிப் பின்பற்றலாம்  என்பதை வலியுறுத்தவும் நண்பர்களிடம் ப்ரஹலாதன் நாரதரைப் பற்றிக் கூறுகிறான்.

ப்ரஹலாதன் கூறலானான்.
நீங்கள் என் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள். இதனால் உங்களுக்கு ஞானம் ஏற்படும். யான், எனது என்ற பற்று அறவே நீங்கும்.

கால ஸ்வரூபனான பகவானின் கட்டளையால்தான் உலகில் ஒவ்வொரு விஷயமும் காலத்தே நடக்கின்றன. மரங்கள் வளர்ந்து, காய்த்து, பழுக்கின்றன. அதுபோலவே பிறப்பு, வளர்தல், மாற்றம், மெலிதல், இறப்பு, அழிதல் ஆகியவை இவ்வுடலுக்குத் தானே தவிர, ஆன்மாவிற்கல்ல.

பழத்திற்கும், உடலுக்கும் பல மாறுபாடுகள் உண்டு. ஆன்மாவிற்கும், மரத்திற்கும் மாறுபாடு இல்லை.

ஆன்மா அழியாதது.

 மாறுபாடற்றது.

 தூய்மையானது.

 இரண்டற்றது.

 ஒன்றானது.

ஜடமான இவ்வுடல் தானல்ல என்று அறிவுடையது.

மண் விண் அனைத்திற்கும் ஆதாரமானது.

செயல் தொடர்பற்றது.

 தன்னொளி கொண்டது.

 திசை, தேச, காலங்களால் அளவிட முடியாதது.

 நீக்கமற நிறைந்துள்ளது.

 ஒளிவு மறைவற்றது.

பகுத்தறியக் காரணமானது.

ஆன்மா இவ்வுடலினும் வேறானது.

ஒரு முத்து மாலையில் மணிகளினூடே நூல் நுழைந்திருப்பதுபோல், உடல்களினுள் நுழைந்திருக்கும் ஆன்மா உண்மையில் அவற்றினின்று தனித்து விளங்குகிறது.

விழித்திருத்தல், உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக எது நிற்கிறதோ, அதுதான் பரமாத்மா.

முக்குணங்களின் கலப்பாலும், கர்மவினைகளாலும் பிறவி ஏற்படுகிறது. புத்தியின் பரிமாணங்களை விலக்கி உண்மையைக் கண்டால் ஆன்மாவின் நிலை விளங்கும்.

கனவு காணும் வரையில் மகிழ்ச்சி நீடிக்கும்.  இந்த ஆன்ம அறிவைப் பெற இந்த அஞ்ஞானம் நிரம்பிய உலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.
என்று கூறினான்.

ஒரு ஞானி எப்படி இருந்தாலும் ஆன்ம அழகு அவரிடம்‌ மிளிர்வதால், அவரது திருமேனி, நடை உடை பாவனைகள், பேச்சு, காரியம் செய்யும் விதம் அனைத்துமே மிக அழகாக மிளிரும்.

ஒரு ஞானியின் ஸந்நிதியில் எதுமே செய்யாமல் சும்மா விழுந்து கிடந்தாலும் போதும். அந்த ஜீவன் கரையேறிவிடும். அப்படித்தானே ரமணரின் பார்வையில் விழுந்துகிடந்தனர் அவரது பக்தர்கள்!

ப்ரஹாலதனின் தேஜஸ், அழகு, அவன் கை கால்களை அசைத்துப் பேசுவது, அவனது முக பாவம், பேசும்போது அவனது கொவ்வைப்பழ இதழ்கள் குவிந்து விரிவது ஆகிவற்றையே ஆவென்று பார்த்துக் கொண்டிருந்த அசுரச் சிறுவர்களுக்கு அவன் சொன்னது ஒன்றும் விளங்கவில்லை.

அவர்களது முகக் குறிப்பை உணர்ந்த ப்ரஹலாதன் மந்தஹாசம் செய்தான். பின்னர், நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம் எது தெரியுமா?
என்றான்.

உடனே, முதல்ல அதைச் சொல்லு ப்ரஹலாதா என்றனர் குழந்தைகள்.

கர்மவினைகளை வேரோடு களைய பல்லாயிரக்கணக்கான வழிகள் உள்ளன. ஆனால், அவற்றுள் நமக்கு எது சுலபமாக இயல்பாக வருமோ அந்த பக்தி வழியில் நாம் செல்லவேண்டும்.

அந்த பக்தி யோகத்தை பகவானே உபதேசம்‌ செய்திருக்கிறார்.

பக்தி யோகத்தின் அங்கங்கள்

குருவிற்குப் பணிவிடை செய்தல்,

அவரிடம் மாறாத அன்பு கொள்ளுதல்,

எது கிடைத்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணித்தல்,

 மானசீகமாகவோ, நடைமுறையிலோ பகவானுக்குப் பூஜை செய்தல்,

பகவானின் கதைகள், குணங்களை மன ஒருமைப்பாட்டுடன் கேட்டல்,

ஹரியின் திருவடித் தாமரைகளை ஹ்ருதயத்தில் நிறுத்துதல்,

அவரது அர்ச்சாவதாரத் திருமேனிகளை தரிசனம் செய்தல், 

பகவானின் திருநாமங்களை வெட்கத்தை விட்டுக் கீர்த்தனம் செய்தல் ஆகியவை.

நண்பர்களே.. இப்போது நம்மால் இயன்றது பகவானின் நாமங்களைக் கீர்த்தனம் செய்வதுதான். வாருங்கள். அதைச் செய்வோம்.
என்றழைத்தான்.

தேமதுரக் குரலில் நாராயண நாமத்தை ப்ரஹலாதன் கீர்த்தனம் செய்துகொண்டு, இரு கைகளையும் உயரத் தூக்கி ஆடத்துவங்க, அசுரக் குழந்தைகள் அனைவரும்

அவனைச் சுற்றி வலம் வந்து நாராயண நாராயண என்று பாடிக்கொண்டு ஆடத்துவங்கினர்.


அந்த ஆசிரமம் முழுவதும் நாராயண நாமம் இனிதே ஒலித்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, March 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 220 கர்பஸ்ரீமான்

நாரதர் உபதேசம் செய்தார் என்று கேட்டதும், அசுரக் குழந்தைகள் கேட்டனர்.

ப்ரஹலாதா! குரு புத்திரர்களான சண்டாமர்க்கர்களைத் தவிர நமக்கு வேறு குருமார்களைத் தெரியாது. நீ இங்கு சிறியவன். வேறு எவரையும் நாங்கள் இங்கு பார்த்ததே இல்லை. அப்படியிருக்க நாரத முனிவர் உனக்கு எப்போது உபதேசம் செய்தார்?

அதைக்கேட்டு ப்ரஹலாதன் சிரித்தவாறே கூறலானான்.

என் தந்தை தவமியற்ற மந்தரமலைக்குச் சென்றார். அப்போது, இந்திரன் முதலான தேவர்கள் அசுரர் மீது போர் தொடுத்தனர்.
அப்போது அசுரர்கள் தேவர்களைக் கண்டு அஞ்சி ஓடினர்.

வெற்றி கொள்ள வேண்டி, அசுர அரண்மனையை ஆக்கிரமித்தனர். இதற்குள் இந்திரன் என் தாய் கயாதுவைச் சிறைப்பிடித்தான்.

பயந்து நடுங்கிய அவளை இந்திரன் இழுத்துச் சென்றான். அப்போது தேவரிஷி நாரதர் எதிர்ப்பட்டார்.

அழுது புலம்பும் என் தாயைக் கண்டு, தேவர்கோனே! இதென்ன அநீதி! இவள் பிறன் மனைவி. பதிவிரதை. தவறு செய்யாதே. இவளை விட்டுவிடு என்றார்.

இந்திரன் கூறினான்.

மஹரிஷி! இவள் வயிற்றில் தேவர்களின் பகைவனான ஹிரண்யகசிபுவின் தேஜஸ் வளர்கிறது.

அதை இவள் பெற்றெடுக்கும் வரை என் மாளிகையில் இருக்கட்டும். பிறந்ததும், அதைக் கொன்றுவிட்டு, இவளை விட்டு விடுகிறேன் என்றான்.

அப்போது நாரதர், இவள் வயிற்றில் பரம பக்தனல்லவா இருக்கிறான்? உலகமனைத்தும் அவனைக் கொண்டாடப்போகிறது. பரம கல்யாண குணங்கள் கொண்டவன். மஹாத்மா. அவனையா கொல்லப்போகிறாய்? உன்னால் முடியுமா என்ன?
என்றார்.

இதைக் கேட்டதும் தேவேந்திரன் நாரதரை வணங்கி, என் தாயை விட்டு விட்டான்.  என் தாயை வலம் வந்து வணங்கிச் சென்றான்.

அதன் பின் நாரதர் என் தாயை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று,

உன் கணவர் திரும்பி வரும் வரை நீ இங்கே நிம்மதியாக இரு

என்று கூறி அடைக்கலம் தந்தார்.

என் தாயும் என் தந்தை தவம் முடித்துத் திரும்பும்வரை அங்கேயே தங்கினாள்.

கருவுற்றிருந்த அவள், நல்லபடியாக ப்ரசவம் ஆக விரும்பி, நாரதருக்குப் பல பணிவிடைகள் செய்தாள்.

நாரதர், பாகவத தர்மமான பக்தி தத்வத்தையும், உண்மைப்‌பொருள், மற்றும் பொய்ப்பொருள் பற்றிய அறிவையும் என் தாய்க்கு உபதேசம் செய்தார்.


வெகுகாலம் ஆனதாலும், மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதாலும் என் தாய்க்கு அவை நினைவில்லை. ஆனால், நாரத மஹரிஷியின் கருணையால் கருவில் இருந்துகொண்டு அனைத்தையும் கேட்ட எனக்கு எதுவுமே மறக்கவில்லை. என்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Thursday, February 28, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 219 ப்ரஹலாதனின் உபதேசம்

பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களைக் கற்றபோதிலும், அவற்றில் மனம் ஒப்பவில்லை ப்ரஹலாதனுக்கு.

ஒருநாள் குருமார்கள் இருவரும் பூஜை, ஹோமங்கள் முதலியவற்றை  இல்லறத்தார்க்குச் செய்து வைப்பதற்காக வெளியில் சென்றனர்.

ஆசிரியர் வெளியில் போயிருக்கிறார். சில மணி நேரங்களுக்கு வரமாட்டார் என்றறிந்தால் வகுப்பறை என்னாகும்?

எல்லாக்‌ குழந்தைகளும் விளையாடத் துவங்கின. ப்ரஹலாதனின் ஒத்த வயதுள்ள சிறுவர்கள் அவனை விளையாட அழைத்தனர்.

மிகவும் புத்திசாலியான ப்ரஹலாதன் அவர்கள் தன்மீது கொண்ட கள்ளமற்ற‌ அன்பை முழுதுமாய் உணர்ந்தவன். எனவே, அவர்களின் நன்மையைக் கருதி இனிய சொற்களால் உபதேசம்‌ செய்தான்.

சிறுவர்கள் மனம் கெடாமல் தூய்மையாய் இருப்பவர்கள். அவர்கள் ப்ரஹலாதன் மேலுள்ள ஈர்ப்பினால், அவனைச் சுற்றி அமர்ந்து அவன் சொல்வதைக் கேட்கத் துவங்கினர்.


நண்பர்களே! இவ்வுலகில் மானுடப் பிறவி மிகவும்‌அரிதானது. இதன் மூலம் அழியாத பரம்பொருளை அடைந்து விட முடியும்

இதெல்லாம் வயதான பிறகுதானே ப்ரஹலாதா?

அப்படி இல்லை. மிகவும் குறுகிய இப்பிறவியில் ஆயுள்காலம் நிச்சயமில்லை.

இளவயதில் மரணிப்போரும் உண்டு. மிக நீண்ட காலம் வாழ்ந்து, எமனின் வரவை எதிர்நோக்குவாரும் உண்டு.

காலத்தை வீணாக்காமல் இறைவனை அடையும் சாதனைகளை இளவயதிலேயே  பழகிவிடவேண்டும்.
பகவானின் திருவடிகளே ஒருவர்க்கு உற்ற துணை. அவரே அனைத்து ஜீவராசிகளின் உள்ளும் உறைபவர். தலைவர். உற்ற நண்பர்.

ப்ரஹலாதா! நீ அரசரின் மகன். உழைக்காமல் இருந்து சாதனை செய்தாலும் வாழ்க்கை வசதிகள் கிட்டும்.‌ எங்களுக்கு அப்படி இல்லையே.

புலன்களால் நுகரப்படும் இன்பம் முன்வினைக்கேற்ப நிச்சயம் கிடைக்கும். கர்மாவின் படி அதற்கான முயற்சிகளை ஒருவன் எப்படியும் செய்துவிடுவான். அதற்காகப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை.
துன்பம் வேண்டாம் என்றெண்ணுபவர்க்கும் துன்பம் வருவதுபோல், இன்பம் வேண்டாம் என்றாலும் கர்மாவின்படி நிகழும்.

ஒரு பயணத்தில்,  வண்டியில் ஏறி அமர்ந்தால் போதும். வேடிக்கை பார்த்து, வீண் விவகாரங்களில் ஈடுபடுவோராயினும்,  அயர்ந்து உறங்கிக்கொண்டே செல்வோராயினும் இலக்கை அடைந்து விடுவது போல், உடலின் யாத்திரை கர்மப்படி நடந்துவிடும். ஆனால், மனத்தை இறையின் பால் வைத்து விட வேண்டும்.

உடல் எடுத்தவரே சாதனை செய்து இறையை அடைய இயலும். கிழட்டுத்தனம், நோய் ஆகியவற்றில் அகப்படுவதற்கு முன்பே ஒருவன் ஆன்ம நலனுக்கான முயற்சியைச் செய்தாகவேண்டும். இல்லையெனில் பிறவிச் சுழலில் சிக்க நேரிடும்.

ஒரு மனிதனின் முழு வயது நூறு ஆண்டுகள் என்று கொண்டால், புலன்களை வயப்படுத்தாதவனுக்கு அதில் பாதியான 50 வருடங்கள் உறக்கத்தில் கழியும்.

குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும், நன்மை தீமையை உணராமல் 20 ஆண்டுகள் ஓடும்.

கிழட்டுத்தனம் வந்துவிட்டால் கடைசி 20 ஆண்டுகளில் ஒன்றும்‌செய்ய இயலாது.

மீதி பத்து ஆண்டுகள் நிறைவேறாத ஆசைகளைத் தொடர்ந்து ஓடுவதிலேயே கழித்து விடுகிறான் மனிதன்.

யான், எனது என்ற பற்றினால் கட்டப்பட்ட புத்தி தன்னை விடுவித்துக்கொள்வது மிகவும்‌ கடினம்.

அறிஞனாக இருப்பினும், இறைவனை நினைக்காமல், உலகியல் பற்றுக்களில் உழல்வானாகில், பிறவிச் சுழலினின்று விடுபட இயலாது.

நண்பர்களே! உலக சுகங்களில் பற்றுள்ள அசுரர்களின் நட்பை உதறுங்கள். ஸ்ரீமன் நாராயணனையே கதியெனப் பற்றுங்கள். அவர் சான்றோர்களின் அன்பர். முடிவான புகலிடம்‌ ஆவார்.

அவரை எப்படி அடைவது ப்ரஹலாதா?

பகவானை மகிழ்விக்கப் பெரிய முயற்சிகளோ, உழைப்போ எதுவும் தேவையில்லை.

ஏனெனில் அவர் நம் ஆன்மாவில் உறைபவர். வேறெங்கோ இருப்பவர் இல்லை.

கஷ்டமான சாதனைகளைச் செய்தால்தான் பலன் என்பதில்லை.

நாள் முழுதும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு, சொற்பமான கூலி கிடைக்கும். ஆனால், ஒரு அறையில்‌ இருந்த இடத்தில் இருந்துகொண்டு சிறிது நேரம் ஒருவருடன் பேசுவதாலேயே பெரும்‌பொருளைச் சம்பாதிப்பவர் உண்டு.

அதுபோல், அசுர குணத்தை விடுத்து, அனைவரிடமும் அன்போடும், கருணையோடும் பழகுவதாலும், ஸ்ரீமன் நாராயணனின் திருப்பெயரையும், புகழையும் வாயாரப் பாடுவதாலும் இறையின் கவனத்தை ஈர்க்க இயலும். அத்தகையவர்க்கு முக்தியின்பம் கூடப் பெரிதல்ல.

அதுசரி, இறையைப் பாடினால் வயிற்றுக்கு உணவு கிடைக்குமா?

அவர் மனம் மகிழ்ந்தால் கிடைக்காதது ஏதாவது உண்டா? அனைத்து சாஸ்திரங்களிலும் அறம், பொருள், இன்பம் பற்றியே கூறப்பட்டிருக்கின்றன. ஆன்ம வித்யை, கர்ம காண்டம், தண்ட நீதி, அனைத்தும் வேதங்களில் உள. ஆனால், அவை இறையை அடைய வழி காட்டாவிடில் ஏது பயன்?

இப்போது நான் உபதேசம்‌ செய்த ஞானம்‌ கிடைத்தற்கரியது. இவையனைத்தும் இறைவனின் திருவடி தூளியில் மகிழ்ந்து நீராடும்‌ சான்றோரால் கற்பிக்கப்படுபவை. எனக்கு ஸ்ரீ நாரத மஹரிஷி இவற்றை உபதேசம் செய்தார் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 218

ப்ரஹலாதனின் ஆன்மபலம்

ஹிரண்யகசிபு ப்ரஹலாதனை பலப்பல முறைகளில் கொல்ல முயற்சி செய்தான்.

ஐந்து வயதுக் குழந்தையைக் கொண்டுபோய் பனிக்கட்டிகள் நிரம்பிய அறைக்குள் நாள் கணக்காய்த் தள்ளினான். குழந்தை அன்றலர்ந்த தாமரையைப் போல் இருந்தான்.

சூறாளவளிக் காற்றை அவன் மீது ஏவ, ஹ்ருதயத்தில் நாராயணனைப் ப்ரதிஷ்டை செய்த ப்ரஹலாதன் அசையக்கூட இல்லை.

நெருப்பை மூட்டி, அதன் நடுவில்‌ நிற்கவைத்தனர் குழந்தையை. அவனோ, தென்றல் வீசுவதை அனுபவிப்பதுபோல் மகிழ்வோடு இருந்தான்.


கல்லில் கட்டி நடுக்கடலில் கொண்டுபோய் குழந்தையைப் போட்டார்கள் அந்தக் கல் நெஞ்சத்தினர்.

ஸமுத்திரராஜன், பாக்யமென்று கருதி,  அவனைத்  தன் மடியில் ஏந்தி லாலனை செய்தவாறு  கரையில் கொண்டு சேர்த்தான்.

மலைக் குகைகளில் கொண்டு விட்டார்கள். குழந்தை பயப்படுகிறானா என்று பார்த்தால், அவன் கண்களை மூடி தியானம் செய்தவாறு அமர்ந்திருக்க, குகையில் இருந்த விஷ ஜந்துக்கள் அவனைச் சுற்றிக் காவலாய் நின்றன.


இவ்வளவு செய்தும் ப்ரஹலாதனைக் கொல்லமுடியாததால், அவனைக் கண்டாலே காவலர்கள் பயந்து ஓடினர்.

வேறு உபாயங்கள் ஏதும் தோன்றாததால், தன் இயலாமையை நினைந்து தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஹிரண்யகசிபு.

எத்தனை கொடூரமான வார்த்தைகளால் இவனைத் திட்டினேன். கொல்வதற்கு எத்தனை உபாயங்கள் செய்தேன். இருப்பினும் இவன் எந்த உதவியும் இன்றித் தன் ஆன்மபலத்தாலேயே தப்பித்துக்கொண்டானே.

சிறுவனானாலும், எவ்வித ஐயமும் இன்றி திடநம்பிக்கையுடன் இருக்கிறான். இவனிடம் ஏதோ மகிமை இருக்கிறது. எதற்கும் அஞ்சுவதில்லை. இறக்கவும் இல்லை.

நான் செய்த கொடுமைகள் மறக்கக்கூடியவை அல்ல.

ஒருக்கால், தந்தை சொத்து பிள்ளைக்கு என்பதுபோல், நான் செய்த தவத்தின் பயன் இவனை அடைந்துவிட்டதா?

இவனாலேயேகூட எனக்கு மரணம் வருமோ?

இப்படிக் கவலை கொண்ட ஹிரண்யகசிபுவின் முகம் வாடி, ஒளியிழந்து தரையை நோக்கத் துவங்கியது.

அதைக் கண்ட சண்டாமர்க்கர்கள் தனிமையில் அவனைச் சந்தித்து பின்வருமாறு கூறினர்.

அரசே! கவலைப் படாதீர்கள். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர் தாங்கள். இந்தச் சிறிய விஷயத்திற்கு ஏன் இவ்வளவு கவலை? குழந்தையின் செயலில் குற்றம் காணவேண்டாம். தானே சரியாகும். காலம் அனைத்தையும் மாற்றும்.

எங்கள் தந்தை சுக்ராச்சாரியார் வந்தால் இவனை சரி செய்துவிடுவார். அவர் வரும் வரை இவனை வருணபாசத்தால் கட்டி வையுங்கள். வளர வளர இவனது புத்தி மாறும். என்றனர்.

இதைக் கேட்டு ஹிரண்யகசிபு, சரி, இவனைக் கொண்டுபோய் க்ஷத்ரியர்களுக்குரிய கடமைகளை நன்கு உபதேசம் செய்யுங்கள். என்றான்.

அவர்கள் ப்ரஹலாதனை அழைத்துக்கொண்டு மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினர்.

அவனுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றிய அனைத்து சாஸ்திரங்களையும் போதித்தனர்.

ப்ரஹலாதன் இயல்பிலேயே வணக்கமுடையவன். குருமார்கள் சொல்லிக் கொடுத்ததைக் கற்றாலும் அவை சரியென்று அவனுக்குத் தோன்றவில்லை.

அவர்கள் அறம், பொருள், இன்பம் பற்றி‌ மட்டும் கற்பிக்கிறார்களே. அது விருப்பு வெறுப்புகளுடன் உலக சுகங்களில் உழல்பவர்க்குத்தானே பொருந்தும்?

அவனோ நான்காவதான வீடு எனப்படும் மோக்ஷத்தைக்கூட உதறிவிட்டு பகவான் மேல் அன்பு பூண்டொழுகுபவன். அதனால், அந்தப் பாடங்களை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, February 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 217 கொல்லத் துணிந்த தந்தை

நவவித பக்தி சாதனங்களைப் பற்றி தந்தைக்கு மிக அழகாக எடுத்துக் கூறினான் ப்ரஹலாதன்.

அதைக் கேட்ட ஹிரண்ய கசிபுவுக்கோ, கோபம் தலைக்கேறியது.

சண்டாமர்க்கர்களைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான்.

ஹே! அயோக்யர்களே! உண்ட வீட்டிற்கே இரண்டகமா? என் மகனுக்கு எதெதையோ கற்பித்திருக்கிறீர்களே. நீங்கள் பகவானின் கட்சியா? வேண்டியவர் போல் நடித்து உள்ளே பகை பாராட்டும் தீயோர்களே! என்று கர்ஜனை செய்தான்.

சுக்ராசார்யாரின் புதல்வர்கள் அரசனைக் கண்டு மிகவும்  பயந்தார்கள்.

அரசே! இதையெல்லாம் நாங்கள் சொல்லித்தரவில்லை. வேறெவரும் கூடக் கற்பிக்கவில்லை. இவனுக்கு இந்த புத்தி இயல்பாகவே இருக்கிறது. வீணாக எங்கள் மேல் குற்றம் சொல்லாதீர்கள். என்றனர்.

உடனே, ஹிரண்யகசிபு, ப்ரஹலாதனைப் பார்த்து, குரு சொல்லித் தராவிட்டால், உனக்கெப்படியடா இவ்விஷயங்கள் தெரிந்தது? என்றான்.

ப்ரஹலாதனோ,

அப்பா! மக்கள் உலகியல் விஷயங்களையே அரைத்த மாவை அரைப்பது போல் சுற்றி சுற்றி வருகின்றனர். புலன்களை வசப்படுத்தாவிடில், ஆசை தீரவே தீராது. மனைவி, மக்கள், வீடு, வாசல் என்று பற்று கொண்டவர்களுக்கு, பகவத் பக்தி, எடுத்துக் கூறினாலும் வராது.

ஒரு குருடன் வழிகாட்ட, அவனைத் தொடர்ந்து செல்லும் குருடன்போல், சம்சாரப் படுகுழியில் வீழ்வர். உலகியல் ஆசைகளால் கெட்டுப்போன அந்தக்கரணத்தை உடையவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணனே இம்மையும், மறுமைக்கும் பற்றாவான் என்பது தெரியாது.

யாருடைய மனம் பகவானின் சரணங்களில் ஈடுபடுகிறதோ, அவருக்கு பிறப்பு இறப்புக் கேடுகள் முற்றிலும் அழிகின்றன. அடியார்களின் திருவடிகளில் புரண்டு அழாதவர்களின் மனம் விஷயச் சேற்றில் அமிழும்.
என்றான்.

அதனைக் கேட்ட ஹிரண்யகசிபு, கடுங்கோபம் கொண்டு குழந்தை ப்ரஹலாதனை மடியிலிருந்து தூக்கி எறிந்தான்.

அசுரர்களே! இவனைக் கொல்லுங்கள். இவன் தன் சிற்றப்பனைக் கொன்றவனைத் தொழுகிறான். ஒருக்கால், என் தம்பியைக் கொன்ற அந்த விஷ்ணுவே இவன் உருவில் வந்தானோ?
ஐந்து வயதிலேயே நன்றி மறந்து பகைவன் புகழ் பாடுகிறான்.

உறவினன் இல்லாவிடினும் நோய் போக்கும் மருந்துபோல் உதவி செய்தால் அவன் மகனைப் போன்றவனே. மகனே ஆனாலும், தீமை செய்தால் அவன் நோய் போன்றவன். பகைவன்.

நம் உடலிலேயே ஏதேனும் உறுப்புகளால் தீங்கு நேருமாயின் அதை அகற்றவேண்டும். அபோதுதான் மற்ற உறுப்புகள் நலமுடன் இயங்கும்.

இவனை ஏதாவது உபாயம்‌ செய்து கொல்லுங்கள்‌ என்றான் ஹிரண்யகசிபு.

உடனே மிக பயங்கரமான உருவம் கொண்ட அசுரர்கள் கையில் சூலங்களை எடுத்துக்கொண்டு ஓடிவந்து ப்ரஹலாதனைப் பலமுறை குத்தினர். ப்ரஹலாதனின் மனமோ ஸ்ரீமன் நாராயணனிடம் லயித்திருந்தது. எனவே, குத்தியதெல்லாம் பயனற்றுப்போயின.

உடனே ஹிரண்யகசிபு மிகவும் ஐயமுற்று, மற்ற உபாயங்களைக் கொண்டு அவனைக் கொல்லச் சொன்னான்.

மதங்கொண்ட யானைகளால் மிதிக்கச் செய்தான். யானையோ சிறுவனை வணங்கிற்று.

விஷநாகங்களால் கடிக்கச் செய்தான். விஷம் ஒன்றும் செய்யவில்லை.


ஆபிசாரம் செய்து ஒரு அரக்கியை குழந்தை மீது ஏவினான். அவளால் ப்ரஹலாதனை நெருங்கக்கூட முடியவில்லை. தூக்கி எறியப்பட்டாள்.

மலை உச்சியிலிருந்து உருட்டிவிட, பூமாதேவி அஞ்சினாள். தன்னால் பக்த சிரோமணியான  இக்குழந்தைக்கு அடிபடக்கூடாதென்று பூப்போல் ப்ரஹலாதனைத் தாங்கினாள்.

சம்பராசுரனை விட்டு ‌பல மாயைகளை ஏவினான். குழந்தையின் முகத்தில் சிரிப்புகூட மாறவில்லை. அஞ்சுவதெப்படி?

இருள் சூழ்ந்த பாதாளச் சிறையில் அடைத்தான். ப்ரஹலாதன் தனிமையில்  ஆனந்தமாக கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தான்.

அன்னை கையாலேயே விஷம்‌ கொடுத்தான். அமுதம் உண்டவனைப்போல் ஒளிமிக்கவனாய் விளங்கினான் ப்ரஹலாதன்.

உணவு கொடுக்காமல் பட்டினி போட்டான். சரீரம் தான் என்ற எண்ணமில்லாதவனுக்கு பட்டினியும், விருந்தும் ஒன்றே. ப்ரஹலாதனின் சக்தி குறையவில்லை. முக மலர்ச்சியுடன் விளங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, February 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 216

நவவித பக்தி

சண்டாமர்க்கர்கள் ப்ரஹலாதனை எப்படி உனக்கு பகவானைப் பற்றித் தெரியும் என்று விசாரித்தனர்?

ப்ரஹலாதன் மிக அழகாக பதில் உரைத்தான்.

உலகியல் விஷயங்களில் பற்றுக் கொள்பவருக்கே மாயையினால், நான், எனது என்ற எண்ணம் வரும். பரமாத்மாவின் கருணைக்கு ஆட்பட்டவர்களுக்கு  இரண்டாவதாக ஒரு பொருள் தெரிவதில்லை.

என்று சொல்ல, அவர்கள் ஒன்றும் புரியாமல்  திருதிருவென்று விழித்தனர்.

உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால், பகவான்தான் எனக்கு இந்த புத்தியைக் கொடுத்தான் என்று எளிமையாக முடித்தான்.

காந்தத்தை நோக்கி இரும்பு ஈர்க்கப்படுவதுபோல்  என் மனம் பகவானை நோக்கி ஈர்க்கப்படுகிறது.
என்றான்.

ஆசிரியர்களுக்கு ஒரு பக்கம் இவன் இப்படிப் பேசினால்  தங்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற பயம். ஒரு பக்கம் மாணவன் சொல்பேச்சு கேட்கவில்லை என்ற கோபம்.

ஒரு பிரம்பை எடுத்துவந்து அடிப்பதைப் போல் மிரட்டி, அதட்டி, உருட்டி, இன்னும் பல உபாயங்கள் செய்து, ப்ரஹலாதனுக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கூறும் சாஸ்திரங்களை போதித்தனர்.

குறுகிய காலத்திலேயே அனைத்து பாடங்களையும் கற்றுத் தேர்ந்தான் ப்ரஹலாதன்.

அவனை அழைத்துச்சென்று அவன் தாயான கயாதுவிடம் விட்டனர் குருமார்கள்.

கயாது குழந்தைக்கு மங்கள ஸ்நானம்‌ செய்வித்து, பட்டு உடுத்திவிட்டு, மிக அழகாக அலங்கரித்து, ஹிரண்யகசிபுவிடம்  அழைத்துச் சென்றாள்.

ப்ரஹலாதன்  தந்தையைக்  கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

ப்ரஹலாதன் மிகவும் தேஜஸ் மிகுந்தவனாக, அழகான திருமேனியுடன் விளங்குவான். அவனை ஆசையுடன் தூக்கி எடுத்து மடிமேல் அமர்த்திக் கட்டியணைத்து உச்சி மோந்தான் ஹிரண்யகசிபு.

மனதார நீடுழி வாழ்வாய் குழந்தாய்! என்று ஆசீர்வாதம் செய்தான்.

ஹிரண்யகசிபு பெரிய தபஸ்வியாதலால், அவன் மனமகிழ்ந்து செய்த ஆசீர்வாதம் அப்படியே பலித்துவிட்டது ப்ரஹலாதனுக்கு.

துரியோதனனின் ஏச்சு தாங்கமல், பாண்டவர்களை அழிப்பேன். அர்ஜுனை வீழ்த்துவேன் என்று பீஷ்மர் சபதம் செய்தபோது பாண்டவர்கள் நடுங்கினர். அப்போது கண்ணன் மிகவும் தந்திரமாக போர்ப் பாசறையில் திரௌபதியை அழைத்துக் கொண்டு போய் பீஷ்மரை வணங்கச் செய்தான். பீஷ்மர் தீர்க சுமங்கலி பவ என்று ஆசீர்வாதம் செய்ய, கண்ணன் ததாஸ்து என்று முடித்தான். அவரது ஆசீர்வாத பலத்தினால் மஹாபாரதத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டபோதும், பாண்டவர்கள் ஐந்துபேரும் தப்பினர்.

அதே போல், தந்தையும் மிகப்பெரிய தபஸ்வியுமான  ஹிரண்யகசிபுவின் ஆசீர்வாதம் பின்னாளில்  அவனுக்கெதிராகவே வேலை செய்தது.

குழந்தையின் கமல முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஹிரண்யகசிபு, அவனிடம் கேட்டான்.

குழந்தாய்! எல்லாப் பாடங்களையும் இவ்வளவு சீக்கிரமாகவே  கற்றுத் தேர்ந்துவிட்டாயாமே? எங்கே நீ கற்றுக்கொண்டவற்றுள் சிறந்ததும் உனக்குப் பிடித்தமானதையும் கூறு பார்க்கலாம். என்றான்.

முதல் முறை கேட்டபோதே ஹரி சரணத்தை ஆஸ்ரயிக்கவேண்டும் என்று சொன்னோமே. தந்தைக்குப் புரியவில்லை போலும். எப்படி ஆஸ்ரயிப்பது என்று சொன்னால்தானே தெரியும் என்று நினைத்தான் குழந்தை.

உடனே சற்றும் தயங்காமல், அப்பா! நாராயணனிடம் பக்தி செய்யும் முறைகள் ஒன்பது.


ச்ரவணம் - பகவான்‌‌ ஸ்ரீ ஹரியின்  கதைகளைக் கேட்பது,

கீர்த்தனம் - அவரது பெயரையும் புகழையும் பாடுவது,

விஷ்ணோ: ஸ்மரணம் - அவரை எப்போதும் நினைத்து க் கொண்டிருப்பது, தியானம் செய்வது,

பாதஸேவனம் - அவரது திருவடி சேவை,

அர்ச்சனம் - அவரது மூர்த்திக்குப்  பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்வது

வந்தனம் - அவரை வணங்குவது

தாஸ்யம் - செய்யும் ஒவ்வொரு வேலையையும் பகவானின் உகப்பிற்காக மட்டும் செய்வது

ஸக்யம் - அவரை நண்பராக நினைத்துப் பழகுவது

ஆத்ம நிவேதனம் - தன்னையே அவரிடம் ஒப்படைத்து, ஒரு ஜடப்பொருள் போல் தன் வாழ்வு பற்றிக் கவலை கொள்ளாமல் இருப்பது

என்று மிக அழகாக விளக்கினான் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, February 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 215

கற்றதில் உயர்ந்தது

நாரத மஹரிஷி கூறலானார்.

அசுரர்களின் குரு சுக்ராசார்யார். அவரது மகன்களான  சண்டன், அமர்க்கன் இருவரும் அரண்மனைக்கருகிலேயே பாடசாலை அமைத்துக் கொண்டனர்.

ப்ரஹலாதன், அவனது சகோதரர்கள் மற்றும் ராஜ வம்சத்து குழந்தைகள் அனைவரும் அந்த பாடசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களும் செவ்வனே அனைத்து சாஸ்திரங்களும் கற்றுக்கொடுத்தனர்.
ப்ரஹலாதன் ஏகசந்த க்ராஹி என்பதற்கேற்ப ஒரு முறை கேட்டதுமே அப்படியே பாடங்களை ஒப்பித்தான்.

ஆனால், அவனுக்குப் பாடங்கள் சரியாகப் படவில்லை.

அவை ப்ரும்மத்தைப் பற்றிய உண்மைப் பாடங்களாக இல்லாமல், தான், பிறர் என்ற வேற்றுமையை வளர்க்கும் பொய்ப்பாடங்களாக இருந்தன.

சிலநாள்கள் கழித்து, ஹிரண்யகசிபு பாடசாலையிலிருந்து திரும்பியிருந்த ப்ரஹலாதனை மிகவும் ஆசையுடன் மடியில் ஏற்றி வைத்துக்கொண்டு கேட்டான்.

குழந்தாய்! நீ இவ்வளவு நாள்கள் படித்தாயே. அதில் எதை  உயரந்த விஷயம் என்று நினைக்கிறாய்? சொல் பார்க்கலாம் என்றான்.

ப்ரஹலாதன் சற்றும் தயங்காமல் சொன்னான்.

அப்பா! உலகில் உள்ளவர் எல்லார்க்கும் நான் எனது என்ற பற்று வளரும்படியாக பாடங்கள் இருப்பது வருத்தமாய் இருக்கிறது. உண்மையில் நன்மை தருவது எது தெரியுமா? இந்த வீடு வாசல், உறவுகள் எல்லாம் என்னுடையது என்ற பற்றே ஜீவன்களின் தாழ்மைக்குக் காரணம். அவர்கள் பற்றை விடுத்து வைராக்யத்துடன் காட்டுக்குச் சென்று ஸ்ரீஹரியைச் சரணடையவேண்டும். அதுவே உயர்ந்தது என்றான்.

தந்தையின் நியமனப்படியே பாடத்திட்டம் இருப்பதால், அவரிடம் சொல்லி மாற்றலாம் என்று நினைத்தான் போலும்.

எழுபத்தோரு சதுர்யுகங்களுக்கும் மேலாக பகவன் நாம ஒலியே கேட்காத வண்ணம் உலகை ஆண்ட ஹிரண்யகசிபு, இப்போது தன் பாசத்திற்குரிய மகன் வாயிலாக இறைவன் புகழைக் கேட்டான்.

ஆனால், அந்தோ..ஆசிரியர்களால் குழந்தையின் மனம் கெடுக்கப்படுகிறதே என்றெண்ணினான்.

விஷ்ணுவின் பக்தர்கள் யாரோ பாடசாலையில் ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள்தான் குழந்தைகளுக்கு போதிக்கிறார்கள் என்று நினைத்தான்.

சண்டாமர்க்கர்களை அழைத்து, குழந்தைக்கு தீய பாடங்களை எவரோ சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறு நிகழா வண்ணம் இவனை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களோடு ப்ரஹலாதனை அனுப்பிவிட்டான்.

சண்டாமர்க்கர்களுக்குத் தலை சுற்றியது.
ப்ரஹலாதனை அழைத்து விசாரித்தனர்.

குழந்தாய்! பொய் சொல்வது தவறு. உண்மையைச் சொல். உனக்கு மட்டும் ஏன் இந்த கெட்ட புத்தி? மற்ற எந்தக்‌ குழந்தையும் இவ்வாறு சொல்லவில்லையே. நாங்கள் சொல்லிக் கொடுப்பதைத்தானே கற்றுக்கொள்கிறாய்? வேறெவராவது வந்து உனக்கு ரகசியமாகச் சொல்லிக்கொடுக்கிறார்களா? ஏன் இந்த புத்தி மயக்கம்? என்று பலவாறு விசாரிக்க,

மெய்ப்பொருளைப் பற்றிய உண்மையைப் பேசுவதில் தீதென்ன இருக்கிறது என்று யோசித்தான் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, February 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 214

தன் பக்தர்களான ஜெய விஜயர்கள் தானே ஹிரண்யாக்ஷனும், ஹிரண்யகசிபுவும்.  கால் கடுக்க எப்போதும் நின்றுகொண்டே இருப்பவர்கள். கைங்கர்ய சிரோமணிகள். வாய்ப்பு கிட்டும்போது,  தன்னிஷ்டம் போல்‌ சந்தோஷமாக இருக்கட்டும் என்று பகவான் ஒரு மன்வந்தரத்திற்கு ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

அசரீரி கேட்டதும் தேவர்களும் ரிஷிகளும் நிம்மதியடைந்தனர்.

ஹிரண்யகசிபுவுக்கு  நான்கு புதல்வர்கள். அவர்களுள் கடைசியாகப் பிறந்தவன் ப்ரஹ்லாதன்.

பொதுவாக முளைவிட்டு, செடி வளர்ந்து மலரும்போதுதான் நறுமணம் வரும்.  துளசி மட்டும் சிறியதாக முளை விடும்போதே இலையில் வாசனை வரும். அதுபோல் மஹான்கள் பிறக்கும்போதே பக்தியுடன் பிறக்கிறார்கள். பிற்காலத்தில் மஹானாகப் போகிறார் என்று  அவர்களின் இளவயதிலேயே தெரிந்துவிடும்.


ப்ரஹலாதன் மற்ற அசுரச் சிறுவர்கள் போல் இல்லை. அந்தணர்களிடம் பக்தி, ஒழுக்கம், வாய்மை, புலனடக்கம், அனைவரிடமும் அன்பு, இன்சொல், பிறர் நலம் பேணல் என்று அனைத்து நற்குணங்களும் பூண்டு ஒழுகினான்.

சான்றோரிடம் அடிமை போலவும், ஏழை எளியோரிடம் தந்தை போலவும், தன்னொத்த வயதினரிடம் உடன் பிறப்பைப் போலவும், ஆசார்யரிடம் பக்தனைப் போலவும் பழகினான். அரசனின் பிள்ளை என்ற செருக்கு துளியும் இல்லை.

ஏதேனும் துன்பம் நேர்ந்தாலும் வருந்துவதில்லை. இன்ப துன்பங்களில் சமபுத்தியுடன் விளங்கினான்.

யுதிஷ்டிரா! பகவானின் கல்யாண குணங்களுக்கு எல்லையில்லாதது போல் ப்ரஹலாதனின் கல்யாண குணங்களுக்கும் எல்லையே இல்லை.

சான்றோர்களே இவன் குணத்தைப் பாடுகின்றனர். அசுரர்களின் பகைவரான தேவர்களும்கூட ப்ரஹலாதனைப் பற்றியே எப்போதும் பேசினர்.

நாராயணன் மீது அவன் கொண்டிருந்த எல்லையற்ற அன்பு ஒன்றே போதும் அவன் குணங்களைப் பறை சாற்ற.

பாமர விளையாட்டுக்களை உதறிய ப்ரஹலாதன், அவ்வப்போது கண்களை மூடி இறைவனின் ஸ்வரூபத்தில் நிலைத்துவிடுவான். திடீரென்று பகவத் குணங்களைப் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பான்.

ஸ்ரீ க்ருஷ்ணபக்தி என்ற கிரஹத்தால் பீடிக்கப்பட்டு நாமரூபம் உள்ள ப்ரபஞ்சத்தையே மறந்துவிடுவான்.

பகவானின் மடியில் அமர்ந்திருப்பது போன்றே  நினைத்துக்கொண்டிருப்பான். அமர்ந்தாலும் எழுந்தாலும், நின்றாலும், நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் நாராயணன் பெயரையே சொல்லி, பகவானின் நினைவில் ஆழ்ந்து செயல்களை மறந்திருந்தான்.

சிலசமயம், பகவத் விரஹத்தினால் கலங்கி அழுவான். பின்னர் பகவான் எதிரில் வந்துவிட்டதாகக் குதிப்பான். ஹ்ருதயத்தினுள் பகவானைக் கண்டு உரக்கச் சிரிப்பான்.

உலகினர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையே இல்லை. சிலசமயம் பகவானுடன் தன்வயமாகி அவரது லீலைகளை அனுகரணம் செய்வான். சிலசமயம் மயிர் கூச்செறிந்து,‌ கண்கள் திறந்து நிலை குத்தியிருக்கும். சில‌சமயம் ஆனந்தக் கண்ணீர் வழியும்.

இத்தகைய பக்தனை எங்காவது பார்க்கமுடியுமா? அவனைப்போய் தன் பகைவன் என்றெண்ணினான் ஹிரண்யகசிபு.

யுதிஷ்டிரர் ஆச்சர்யம் மேலிட கேட்டார்.
மஹரிஷியே! இத்தகைய குழந்தையை யாராவது வெறுப்பார்களா? என்ன நடந்தது? விரிவாகச் சொல்லுங்கள் என்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 213 ஹிரண்யகசிபுவின் ஆட்சி

ஹிரண்யகசிபு கேட்ட வரங்கள் அனைத்தையும் ப்ரும்மதேவர் அளித்தார்.


அவன் கேட்ட வரங்கள் மிகவும் ஆபத்தானவைதான். ப்ரும்மாவை வணங்கிவிட்டு அவரையே அவமானப்படுத்துவதுபோல், உமது படைப்பினால் மரணம் நேரக்கூடாது என்று வேண்டினான் அவன்.

 ப்ரபஞ்சம் முழுவதுமே ப்ரும்மாவின் படைப்பு, அவருக்கு மேற்பட்ட தலைவர் இல்லையென்று நினைத்தானோ?

ப்ரும்மாவைப் படைத்தவர் பகவான் என்பதை அறியானோ?

அல்லது ஏற்கனவே த்வாரபாலகனாக இருந்தமையால், பகவானைப் பார்க்கவேண்டும், அவர் கையாலேயே மடிய வேண்டும் என்ற ஆசையால், வேறொருவரால் மரணம் வேண்டாம் என்று நினைத்தானோ?

காரணம் எதுவாயினும் கேட்டுவிட்டான். ப்ரும்மா ஹிரண்யகசிபுவின் தவத்தை மெச்சி, இப்போது அருள் செய்யக் கடமைப்பட்டுவிட்டார்.

எனவே, எவ்வளவு புத்திசாலித்தனமாக  வரம் கேட்டாலும், அதிலிருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அவனை அழிப்பது பகவானுக்கு வெகு சுலபம் என்று நினைத்து அசுரன் கேட்ட எல்லாவற்றிற்கும் தலையசைத்துவிட்டு, மீண்டும் அவனுக்கு ஏதேனும் நினைவுக்கு வருவதற்குள் தப்பித்துக்கொள்வோம்  என்று மறைந்துவிட்டார்.

இப்போது ஹிரண்யகசிபுவின் உடல் எல்லையற்ற வலிமை உடையதாயிற்று. தம்பி இறந்ததை நினைத்து நினைத்து பகவானிடம் மென்மேலும் பகையை வளர்த்துக்கொண்டான்.


நாட்டுக்குத் திரும்பியவன், மூவுலகங்களையும் வென்றான். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷ, கின்னரர்கள், பித்ரு கணங்கள், பிசாசர்கள், மற்றுமுள்ள அனைத்து ப்ராணிகளின் தலைவர்களையும் வென்றான். எண்டிசை பாலகர்களின் சக்தியையும் பதவிகளையும் பறித்துக்கொண்டான்.

ஆலயங்கள் அனைத்திலும் ஹிரண்யகசிபுவின் உருவம்‌ ப்ரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. வேத மந்திரங்கள் அவனுக்கேற்றவாறு மாற்றி உச்சரிக்கப்பட்டன.‌ அனைத்து உலகங்களிலும் யார் என்ன நல்ல காரியங்களைச் செய்தாலும், அவற்றின் பலன் ஹிரண்யகசிபுவை அடையும்படி செய்யப்பட்டது.

புதிதாகத் தோன்றிய தலைமுறையினருக்கு பகவான் என்றாலே ஹிரண்யகசிபுதான் என்பதாக உபதேசிக்கப்பட்டது. எந்த இடத்திலும் பகவான் நாராயணனின் பெயரோ, மற்ற தேவர்களின் பெயரோ உச்சரிக்கப்படாத வண்ணம் அனைத்துமே மாறிற்று.

பின்னர் ஸ்வர்கத்திலேயே சென்று வசிக்கலானான்.
வேள்விகளில் தேவர்களுக்குத் தரப்படும் அவியுணவையும் தானே ஏற்றான்.

அவன் விரும்பிய வண்ணம் உலகங்கள் மாறின.
எல்லா விதமான சுகங்களையும், அற்புதப் பொருள்களையும் கடல்களும், மலைகளும் வாரிக் கொடுத்தன. புலன்களுக்கு அடிமைப்பட்டவனாக அனைத்தையும் ஆசைதீர அனுபவித்தான்.

இவ்வாறு எழுபத்தோரு சதுர்யுகங்களுக்கும் மேல்  ஹிரண்யகசிபுவின் ஆட்சி நீடித்தது.

ஹிரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியால் மிகவும் வருந்திய திக்பாலர்களும், மக்களும் பகவானைச் சரண் புகுந்தனர். மனத்திற்குள்ளாகவே துதிக்கலாயினர்.

அவர்கள் பலநாள்கள் புலன்களை அடக்கி மனத்தை ஒருமுகப்படுத்தி, உணவும் உறக்கமும் துறந்து தம்மைக் காக்கும்படி  பகவானை வேண்டினர்.

அப்போது ஒரு நாள், அசரீரி கேட்டது.

தேவர்களே! ஸாதுக்களே! பயம் வேண்டாம். எனக்கு இந்த அசுரனைப் பற்றித் தெரியும். சிறிது காலம் பொறுத்திருங்கள். நானே அவனை அழிப்பேன்.

எப்பேர்ப்பட்டவனாக இருப்பினும் தேவர்கள், பசுக்கள், அந்தணர்கள், சாதுக்கள், வேத தர்மம் ஆகியவற்றில் பகை கொள்பவன் விரைவிலேயே அழிவான்.

ஹிரண்யகசிபு மஹாத்மாவான தன் மகன் ப்ரஹ்லாதனுக்கே துன்பம் இழைக்க முற்படுவான். அப்போது நானே அவனை அழிப்பேன்.
என்பதாக அசரீரி ஒலித்தது.

இதைக் கேட்ட தேவர்களுக்கு மனத்தில் ஓர் ஐயம் எழுந்தது. எழுபத்தோரு சதுர்யுகங்களாக அசுரனிடம் வதைபடுகிறோமே. நாங்களும் பகவானின் குழந்தைகள்தானே. நாங்கள் சாதுக்கள் இல்லையா? எம்மைக் காக்க இறைவன் வரலாகாதா? ப்ரஹலாதனை ஹிரண்யகசிபு துன்புறுத்தும்போது மட்டும்தான் இறைவன் வரவேண்டுமா? என்பது.

இந்த தேவர்களைத் துன்புறுத்துவதுபோல், ப்ரஹலாதனை இன்னும் பல மடங்கு துன்புறுத்தப்போகிறான். தேவர்கள் இவ்வளவு காலம் சகித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போது ஹிரண்யகசிபுவின் அழிவை விரும்புகின்றனர்.

ஆனால், தன்னைக் கொல்லத்துணியும்  தந்தையை அழிக்கும்படி ப்ரஹலாதன் ஒருபோதும் நினைக்கக்கூட மாட்டான் என்பதாலேயே அவனுக்காக பகவான் நேரில் வருகிறார். அத்தகைய சுத்த சாத்வீகம் நிறைந்த பக்தன் ப்ரஹலாதன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, February 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 212 ஹிரண்யகசிபுவின் தவம்

ஹிரண்யாக்ஷன் இறந்துபட்ட துக்கத்தில் ஆழ்ந்துபட்ட அவனது மனைவி, மக்கள், மற்றும் தாயான திதிதேவியை சமாதானப்படுத்தினான் ஹிரண்யகசிபு.

ஒரு இறந்துபட்டவர் வீட்டின் உறவினர் வெகுநேரம் சமாதானம் ஆகாமல், ஸம்ஸ்காரங்களையும் செய்யாமல் அழுது கொண்டிருந்த போது, யமதர்மராஜனே ஒரு சிறிய குழந்தை உருவில் வந்து ஞானத்தை போதித்த கதையை ஹிரண்யகசிபு தன் உறவினர்களுக்குக் கூறினான்.

பலவிதமான உவமைகளுடனும், கதைகளுடனும் நிலையாமையை விளக்கிய ஹிரண்யகசிபு, தான் மட்டும் மரணமில்லாமல் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டான்.

தனக்குப் பகைவனே இருக்கக்கூடாது. உலகங்கள் அனைத்திற்கும் தானே தனியொரு அரசனாக விளங்கவேண்டும். என்பதே அவனது எண்ணம்.

அதற்காக மந்தரமலையின் தாழ்வறைக்குச் சென்று இரண்டு கைகளையும் உயர்த்தி, கண்களை உச்சியில் நிறுத்தி, கால் கட்டைவிரலை மட்டும் தரையில் ஊன்றி, மிகக் கடுமையாகத் தவம் செய்தான்.

அவன் தவம் செய்யப்போனதும், தேவர்கள் தத்தம் பதவிகளில் அமர்ந்தனர்.

நெடுங்காலம் செய்த தவத்தால், அவனது உச்சந்தலையிலிருந்து  எழும்பிய அக்னி, மூவுலகங்களையும் எரித்தது.

பூமி முதலான அனைத்து லோகங்களும் ஆடத்துவங்கின. விண்ணுலகம் வரை அக்னி படர்ந்தது. அதனால், தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ப்ரும்மாவை நோக்கிச் சென்றார்கள்.

அவரிடம், ஹிரண்யகசிபுவின் தவத்தை அமைதிப்படுத்துங்கள்  என்று வேண்டினர்.

மேலும், அவன் மூவுலகிற்கும் தலைவனாகி, ப்ரும்மாவான தங்கள்  பதவியைப் பறிப்பதற்காகவே தவம் செய்கிறான். அவன் தலைவனானால், உலகில் தீமை பெருகும். எனவே, சிந்தித்து ஆவன செய்யுங்கள் என்று வேண்டினர்.

இவ்வாறு அவர்கள் வேண்டியதும், ப்ரும்மா தன் வாகனமான  அன்னப்பறவை மீதேறி,  ப்ரஜாபதிகளை அழைத்துக்கொண்டு ஹிரண்யகசிபுவைக் காணச் சென்றார்.

அவனது தவத்தைக் கண்டதும் ப்ரும்மாவிற்கே இப்படி ஒரு கடுந்தவமா என்று  ஆச்சர்யம் மேலிட்டது.

பின்னர், ஹிரண்யகசிபுவைப் பார்த்து,

கச்யபர் மைந்தனே! எழுந்திரு! உன் தவத்தின் பயனை அளிக்கவே வந்திருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்.

 நீ செய்யும் இந்தத் தவம் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இவ்வாறான கடுந்தவத்தை இதுவரை எவருமே செய்ததில்லை.

 உன் இதய வலிமை மிகவும் போற்றுதலுக்குரியது. உன் உடலை எறும்புகள் அரித்துவிட்டன. என்றாலும் உயிர் போகவில்லை. தண்ணீர்கூட அருந்தாமல் நூறு வருடங்கள் எவன் உயிருடன் இருப்பான்? உனக்கு என்ன வேண்டும் சொல்.

நீ மரண தர்மம் உள்ள மனிதன். எனவே, மரணமற்ற தன்மை தவிர்த்து, நீ எது வேண்டினாலும் தருவேன். என்றார்.

இவ்வாறு கூறிவிட்டு, எறும்புகள் மொய்த்துத் தின்றபின் எஞ்சியிருக்கும் ஹிரண்யகசிபுவின் உடலின் மீது தன் கமண்டல நீரைத் தெளித்தார்.


அந்தப் புனித நீர் பட்டதும், மூங்கிற்புதற்களும், புற்களும் முளைத்திருந்த அந்தப் புற்றிலிருந்து ஹிரண்யகசிபு, வெளிப்பட்டான். முழுமையான, வஜ்ரம்போல்  வலிமையான, ஒளி பொருந்திய உடலைப் பெற்று, அவனது புலன்கள் உணர்வு பெற்றன. இளம் பருவத்தினனாக வெளியில் வந்தான்.

அன்னப்பறவை மேல் விளங்கிய ப்ரும்மதேவரை விழுந்து வணங்கினான். பின்னர் இரு கரம் கூப்பி அவரைத் தொழுதான்.

தாங்களே இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து, அழிக்கிறீர்கள். முக்குணங்களின் இருப்பிடம் தாங்களே. முதலில் தோன்றியவர். தாவர ஜங்கமங்கள் நிறைந்த ப்ரபஞ்சத்தின் மூலகாரணம் தாமே ஆவீர்.

மனத்தின் உயிரோட்டம், பஞ்ச பூதங்கள், புலன்கள், அவற்றின் குணங்கள், வாசனைகள் அனைத்தையும் செயல்படுத்தும் மஹத் தத்வம் தாங்கள்தான்.

வேதங்களின் இருப்பிடம் தாங்கள்தான். தாங்கள் தான் புராண புருஷர். ஒளிவீசும் இந்த ப்ரும்மாண்டம் தங்கள் வயிற்றினுள் இருக்கிறது. அருள் செய்வதில்  தங்களுக்கு இணை எவருமில்லை.

நீங்கள் எனக்கு வரம் தருவதாய் இருந்தால், தாங்கள் படைத்த எந்த ஜீவராசியாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது.

உள்ளிலோ, வெளியிலோ, மற்ற ப்ரஜாபதிகளின் ச்ருஷ்டிகளாலோ, அஸ்திர, சஸ்திரங்களாலோ, மண்ணிலோ, விண்ணிலோ, மனிதர்களாலோ,‌ விலங்குகளாலோ, உயிரற்றவைகளாலோ, உயிருள்ளவைகளாலொ, தேவர்கள், அசுரர்கள், முதலியவர்களாலோ,  எனக்கு மரணம் நிகழக்கூடாது.

எல்லா உயிர்கட்கும் நானொருவனே சக்ரவர்த்தியாக விளங்கவேண்டும். இங்குள்ள தேவர்களும், லோகபாலர்களும் தங்களைக் கொண்டாடுவதுபோல், என்னைக் கொண்டாடவேண்டும். எனக்கு அஷ்டமா சித்திகளும்‌ வேண்டும்‌.

என்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, February 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 211

நாரதர் கூறலானார்.

தர்மராஜனே! பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை வதைத்தான்.


 ஹிரண்யகசிபு தம்பி இறந்த சோகத்தில் மூழ்கினான். பின்னர் மிகுந்த சினத்துடன், பற்களால் உதடுகளைக் கடித்து, கண்கள் சிவந்து பயங்கரத் தோற்றத்துடன் வானத்தை நோக்கியவாறு கூறலானான்.

தைத்யர்களே! தானவர்களே! தேவர்கள் என் தம்பியை விஷ்ணுவை வைத்துக் கொன்றுவிட்டனர்.

விஷ்ணுவுக்கு தேவர்களும், அசுரர்களும் ஒன்றுதான். அவர் பாரபட்சம் அற்றவர்தான். ஆனால், தேவர்கள் அவரிடம் நெருங்கிப் பழகி, சேவை புரிந்து தன்வயப்படுத்திக் கொண்டனர்.

இப்போது அவர் மாயையினால் பல உருவம் ஏற்று தன் இயல்பினின்று மாறிவிட்டார். சேவை புரிபவர் பின்னால், குழந்தையைப் போல் பின்தொடர்கிறார்.

நான் அவரை வெட்டி, என் தம்பிக்கு அவரது உதிரத்தினால் தர்ப்பணம் செய்யப்போகிறேன். விஷ்ணுவை அழித்தால், தேவர்கள் அழிவார்கள். அந்தணர்கள் மற்றும் க்ஷத்ரியர்களே அவரது பலம்.

எனவே, வேத அத்யயனம், விரதம், தானம், வேள்விகள் செய்வோரைத் துன்புறுத்தி அழியுங்கள். விஷ்ணுவின் வேர்  அந்தணர்களின் அறச்செயல்களே.

 தேவர்கள், ரிஷிகள், பித்ருதேவதைகள், ஜீவராசிகள் அனைத்திற்காகவும் செய்யும் பஞ்சமஹா யக்ஞங்களுக்கு விஷ்ணுவே  ஆதாரம்.

எனவே, அந்தணர்களும் பசுக்களும், வர்ணாஸ்ரமங்களுக்குத் தக்க அனுஷ்டானங்களும் நடைபெறும் இடங்களை அழியுங்கள். என்றான்.

இயல்பாகவே மற்றவரைத் துன்புறுத்துவதில் இன்பம் காணும் அசுரர்களுக்கு இப்போது அரச உத்தரவே வந்துவிட்டது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்  மக்களைப் பீடிக்கலானார்கள்.

நகரங்கள், கிராமங்கள், பசுமாட்டுக் கொட்டில்கள், வயல்கள், பூங்காக்கள், முனிவர்களின் ஆசிரமங்கள், இரத்தினம் விளையும் சுரங்கங்கள், வேளாளர்கள் குடியிருக்கும் பகுதிகள் மலையுச்சிலிருக்கும் சிற்சிறு கிராமங்கள், இடைச்சேரிகள், வணிகர்கள் வாழும் பகுதிகள் ஆகியவற்றைத் தீக்கிரையாக்கினர்.

பாலங்கள், அணைகள், கோட்டைச் சுவர்கள், கோவில்கள்  ஆகியவற்றை இடித்துத் தள்ளினர். பச்சை மரங்களை வெட்டினர். அசுர மன்னனின் பணியாளர்கள் உலகோரைத் துன்புறுத்தவே, தேவர்கள் அவியுணவு கிடைக்காமல், தேவருலகை விடுத்து மண்ணுலகில் வந்து மறைந்து வாழத் துவங்கினர்.

தம்பியின் பிரிவால் துன்புற்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷனின் புதல்வர்களான சகுனி, சம்பரன், த்ருஷ்டன், பூட்கஸந்தாபனன், விருகன், காலநாபன், மஹாநாபன், ஹரிச்மச்ரு, உத்கசன் ஆகியோர் மூலம் அவனுக்கு பித்ரு காரியங்களைச் செய்வித்தான்.

தம்பியின் மனைவியான ருஷபானுவையும், தன் தாயான திதிதேவியையும் சமாதானம் செய்துவிட்டுக் கூறினான்.

இனி நீங்கள் வருந்தலாகாது. போர்முனையில் பகைவனைத் தாக்கி வீரமரணம் எய்துவதையே வீரர்கள் விரும்புவர்.

நீர்நிலைகளில் மக்கள் கூடுவதைப்போல், ஜீவன்கள் முன்வினைக்கேற்ப சிலகாலம் ஒன்று சேர்ந்து, பின்னர் பிரிந்துவிடுகின்றனர்.

உண்மையில் ஆன்மா அழியாதது. தூய்மையானது. மாறுதலற்றது. புலன்களில் ஒட்டாதது. தனித்திருப்பது.

நீர்நிலையின் மேற்பரப்பில் அசைவு ஏற்படும்போது அதில் ப்ரதிபலிக்கும் மரங்கள் போன்றவையும் அசைவதுபோல் தெரியும்.

அதுபோலவே ஆன்மா மாறுபாடற்றிருப்பினும், உலகியல் பொருள்களால் மனம் ஊசலாடும்போது, ஆன்மாவும் ஆடுவதுபோல் தோன்றுகிறது.

இறந்தவனைக் குறித்து வருந்தும்போது சான்றோர் ஒரு கதையைச் சொல்கின்றனர்.
என்று கூறினான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..