Wednesday, July 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 305

தந்தையின் சொல்படி பரசுராமர் ஒரு வருட காலம் தீர்த்தயாத்திரை முடித்துத் திரும்பினார்.
ஒரு சமயம், பரசுராமரின் தாய் ரேணுகாதேவி தீர்த்தம் கொண்டுவருவதற்காக கங்கைக்குச் சென்றாள். அங்கு கந்தர்வராஜன் தன் மனைவிகளுடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துக்கொண்டே நேரம் போனது தெரியாமல் நின்றுவிட்டாள்.

வெகு நேரம் கழித்து, தன் நினைவு வந்து ஹோம வேளை தாண்டிவிட்டதை உணர்ந்தாள். வேக வேகமாக ஆசிரமம் திரும்பி நீர்க்குடத்தை வைத்துவிட்டுக் கணவன் முன் கைகூப்பி நின்றாள்.

தன் மனைவி நெறி தவறியதை அறிந்த முனிவர் மிகவும் கோபம் கொண்டு தன் மக்களை அழைத்து, இவளைக் கொல்லுங்கள் என்றார்.

மூன்று மகன்களும் தாயைக் கொல்வதற்குத் தயங்கி நின்றனர்.
தந்தை சொல்வதைக் கேட்டுவிட்டால், அவர் அருளாலேயே பிழைக்கவைத்துவிடலாம் என்றெண்ணிய பரசுராமர், ரேணுகாதேவியின் தலையை வெட்ட, மற்ற மகன்களையும் கொல்லும்படி ஏவினார் ஜமதக்னி.

தந்தையின் கோபத்திற்கு பயந்த பரசுராமர் அவர்களையும் வெட்டிவிட, மிகவும்‌ மகிழ்ந்த ஜமதக்னி, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

அவர் இந்த நால்வரையும் உயிருடன் எழுப்பித் தாருங்கள். மேலும் அவர்களுக்கு இச்சம்பவங்கள் அனைத்தும் மறந்துபோகவேண்டும் என்றார்.

ஜமதக்னி அவ்வாறே என வரமளிக்க, நால்வரும் உறக்கத்திலிருந்து எழுபவர்போல் எழுந்தனர்.
தந்தையின் தவ வலிமையையும், அவரது இளகிய மனத்தையும் நன்கறிந்திருந்ததாலேயே பரசுராமர் இச்செயலைத் துணிந்து செய்தார்.

இதற்கிடையில் கார்த்தவீர்யனின் புதல்வர்கள், பரசுராமரைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் வேள்விச் சாலையில் தனிமையில் தியானம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்று தலையை எடுத்துச் சென்றுவிட்டனர்.

துக்கத்தால் பீடிக்கப்பட்ட ரேணுகா, ராமா ராமா என்று புதல்வனைக் கதறி அழைக்க, தாயின் குரலை வெகு தொலைவில் தீனமாகக் கேட்டு ஆசிரமத்திற்கு ஓடி வந்தார்.

அங்கே தந்தையின் உடல் குருதிவெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு மயங்கி விழுந்தார்.
மயக்கம் தெளிந்து சினத்துடன் க்ஷத்ரியர்கள் அனைவரையும் அழிப்பேன் என்று சபதம் பூண்டு ஆயுதங்களுடன் மாஹிஷ்மதி நகரம் சென்றார்.

முனிவரைக் கொன்ற ப்ரும்மஹத்தி தோஷத்தால் களையிழந்து காணப்பட்ட மாஹிஷ்மதி நகரினுள் சென்று கார்த்தவீர்யனின் புதல்வர்களைக் கொன்று உடல்களை மலை போல் குவித்தார்.

அப்போதிருந்த க்ஷத்ரியர்கள் பலரும் மறநெறியில் வீழ்ந்திருந்தனர். எனவே, இதையே காரணமாக வைத்து இருபத்தோரு முறை அரசர்களைக் கொன்று பூமியில் க்ஷத்ரிய வம்சமே இல்லாமல் செய்தார்.

அவர்களின் உதிரத்தை குருக்ஷேத்ரத்தில் ஸ்யமந்தபஞ்சகம் என்ற இடத்தில் நீர் போல் நிரப்பி, ஐந்து மடுக்களைத் தோற்றுவித்தார்.

பின்னர் தன் தந்தையின் தலையை எடுத்துவந்து உடலோடு வைத்து, ஸ்ரீமன் நாராயணனை ஆராதித்து ஒரு வேள்வி செய்தார். அவ்வேள்வியின் முடிவில் பூமி முழுவதையும் பிரித்து ரித்விக்குகளுக்கு தானமாக அளித்தார்.

வேள்வியை முடித்து அவப்ருத ஸ்நானம் செய்ததும் பாவங்கள் அனைத்தும் விலகின. ஜமதக்னி சூக்ஷ்ம உடல் பெற்று, ஸப்தரிஷிகளுள் ஒருவரானார்.

அடுத்து வரும் மன்வந்தரத்தில் பரசுராமர் ஸப்தரிஷிகளுள் ஒருவராகி வேதத்தைப் பரப்பப் போகிறார்.
மன அமைதியுடன் இன்றும் மகேந்திரமலையில் அமைதியாகத் தவம் செய்துகொண்டிருக்கிறார்.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, July 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 304

ஒரு சமயம் கார்த்தவீர்யன் வேட்டையாடிக்கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக ஜமதக்னி முனிவர் இருக்கும் குடிலின் அருகில் வந்துவிட்டான்.

படையுடன் தன் குடிலுக்கருகில் வந்திருக்கும் அரசனை ஜமதக்னி கண்டார். காட்டில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கிறார்கள் என்றுணர்ந்து, அரசனை வரவேற்று, விருந்தளித்தார். அவனுடன் வந்திருந்த யானை, குதிரை, படைகள் அனைவற்றிற்கும் விருந்து படைத்தார்.

காட்டின் நடுவில் குடிலமர்த்தி வாழும் முனிவரால் எப்படி ஒரு படைக்கே விருந்து படைக்க முடிந்ததென்று ஆச்சர்யமுற்ற கார்த்தவீர்யன், அதன் காரணம் என்ன என்று ஆராய முற்பட்டான். ஜமதக்னி முனிவர் அக்னிஹோத்ரப் பசுவாகப் பூஜித்து வந்த காமதேனுவைக் கண்டான்.

காமதேனுவின் உதவியால் முனிவர் தன்னை விடச் செல்வச் செழிப்புடன் இருப்பதையும், ஆயிரக்கணக்கோருக்கு கணநேரத்தில் பெரிய விருந்தளிப்பதையும் கண்டு மனம் பொறாமல், அவரிடமிருந்து காமதேனுவைப் பறிக்க எண்ணம் கொண்டான்.

நகரம் திரும்பியபின், மீண்டும் வீரர்களை அழைத்துக்கொண்டு வந்து நைச்சியமாக காமதேனுவைப் பறித்துவரும்படி அனுப்பினான்.

அவர்கள் குடிலில் யாருமில்லாத சமயம் பார்த்து, கன்றுக்குட்டியுடன் சேர்த்து காமதேனுவைக் கதற கதறக் கவர்ந்து மாஹிஷ்மதி நகரம் கொண்டுசென்றுவிட்டனர்.

வெகுநேரம் கழித்து பரசுராமரும், ஜமத்க்னியும் குடிலுக்குத் திரும்பினர். நடந்ததனைத்தையும் ஞான த்ருஷ்டியால்‌ உணர்ந்து கடுஞ்சினம் கொண்டார் பரசுராமர்.

அடிபட்ட நாகம் போல் சீறிக்கொண்டு, கேடயம், அம்புறாத்தூணி, வில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிங்கத்தைப்போல் ஓடினார்.

அப்போதுதான் நகருக்குள் நுழைந்திருந்த கார்த்த வீர்யன், கையில் ஆயுதங்களுடன், சூரியன் போல் ஒளிவீசும் பரசுராமர் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டான். அவன் தன் நால்வகைப் படையையும் அவரை எதிர்த்துப் போர் செய்ய அனுப்பினான்.
தனியொருவராக நின்று பரசுராமர் படைகள் அனைத்தையும் அழித்தார்.

வளியினும் வேகமாகச் சுழன்று தாக்கும் பரசுராமர் சென்ற இடங்களில் எல்லாம் அறுபட்ட கைகளும், தலைகளும், கால்களும், உடைந்த தேர்களும், சக்கரங்களுமாகப் பறந்தன. அவ்விடம் முழுவதும் பிணக்காடாக மாறியது.

அக்காட்சி கண்டு மிகுந்த சினம்கொண்ட கார்த்தவீர்யன் தானே போருக்கு வந்தான். தன் ஐநூறு கைகளில் வில்லேந்தி, ஐநூறு கைகளில் பாணம் தொடுத்து ஒரே சமயத்தில் பரசுராமர் மீது எய்தினான்.

அஸ்திர சஸ்திரங்களின் எல்லயாக விளங்கிய பரசுராமர் அத்தனை அம்புகளையும் ஒரு சேர வீழ்த்தினார்.

கார்த்தவீர்யன் மலைகளையும், மரங்களையும் பிடுங்கி அவர்மீது எறிய, பரசுராமர் அவனது கரங்களை சரசரவென்று வெட்டலானார்.

பின்னர் கார்த்தவீர்யனின் தலையையும் வெட்டிவிட்டார். தந்தை இறந்துபட்டதைக்கண்ட கார்த்தவீர்யனின் புதல்வர்கள் பதினாறாயிரம் பேரும் பயந்து ஓடிவிட்டனர்.

காமதேனுவை மீட்டு வந்த பரசுராமர், அதைத் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, நடந்தவை அனைத்தையும் கூறினார்.

அது கேட்டு ஜமதக்னி பதறினார்.
பரசுராமா! பெரும் பாவம் செய்துவிட்டாயே! அரசன் ஸகல தேவர்களின் உருவமாவான். அரசனைக் கொன்றால் நாடே பாழாகிவிடும். அரசனில்லாத நாடு காலவலனற்ற நாடு. அந்தணர்களாகிய நம்மை இவ்வுலகம் நமது பொறுமைக்காகவே கொண்டாடுகிறது. பொறுமையினாலேயே அந்தணர்களின் தேஜஸ் வளர்கிறது. ஸ்ரீமன் நாராயணனும் பொறுமை காப்பவர்களை மிகவும் விரும்புகிறார். பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னனைக் கொல்வது மிகக் கொடியபாவம். இதைப் போக்கிக்கொள்ள நீ தீர்த்தயாத்திரை சென்று வா என்று பணித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 303

ரிஷீகரின் மனைவியான ஸத்யவதியும் அவளது தாயும் ஹவியை மாற்றி உண்டனர். அதன் விளைவாக ஸத்யவதிக்கு தண்டிக்கும் தன்மை உடைய மகனும், அவளது தாய்க்கு ப்ரும்மஞானியும் பிறக்கும் நிலை ஏற்பட்டது. அதை அறிந்த ஸத்யவதி கணவரிடம் எப்படியாவது அந்நிலையை மாற்றும்படி அழுதாள்.

ரிஷீகரோ, நடந்ததை மாற்ற இயலாது. வேண்டுமானால், உன் மகனுக்குப் பதில் அவனது மகன் க்ஷத்ரியத் தன்மையுடனும் மற்றவர்களை தண்டிக்கும் அதிகாரத்துடனும் பிறப்பான். என்றார்.

சரியான காலத்தில் ஸத்யவதிக்கு ஜமதக்னி மகவாகப் பிறந்தார்.
அதன் பின் அவள் கௌசிகீ நதியாக மாறி ஓடத் துவங்கினாள்.

ஜமதக்னி ரேணு மன்னனின் மகளான ரேணுகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

அவருக்கு வசுமான், த்ருணதூமாக்னி, சுவேதன், பரசுராமர் ஆகிய நான்கு மகன்கள் பிறந்தனர். ஹைஹய வம்சத்தை அழிப்பதற்கென்றே பகவான் நாராயணன் தன் ஒரு அம்சத்துடன் பரசுராமராக அவதாரம் செய்திருந்தார்.

க்ஷத்ரியர்கள், பரசுராமருக்குச் செய்த குற்றம் சிறிதுதான். ஆனாலும் அவர்கள் அந்தணர்களிடம் பகை கொண்டவர்களாகவும், ரஜோ குணம் மிக்கவர்களாகவும், தமோகுணத்தால் தீய வழிச் செல்பவர்களாகவும் இருந்தனர். பூமிக்குப் பெரும் சுமையாக இருந்த அவர்களை அழித்து பூபாரத்தைக் குறைத்தார் பரசுராமர்.

பரீக்ஷித் இடைமறித்துக் கேட்டார்.
ரிஷியே! க்ஷத்ரியர்கள் புலனடக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வம்சமே இல்லாத அளவு அவர்களைத் தேடி தேடிக் கொல்ல என்ன காரணம்? அவர்கள் பரசுராமருக்கு என்ன தீங்கு செய்தனர்?

சுகர், சிரித்துக் கொண்டார்.
அப்போது ஹைஹய வம்சத்தின் தலைவனாக இருந்தவன் கார்த்தவீர்யார்ஜுனன் என்பவன். அவன் தத்தாத்ரேயரைப் பலவாறு பூஜித்து, அவர் அருளால் ஆயிரம் கைகளையும், எவராலும் வெல்லமுடியாத வலிமையையையும் பெற்றான். அளவற்ற திறன், வீரம், புகழ், அஷ்டமாசித்திகள், எண்வகைச் செல்வங்கள் அனைத்தும் இறையருளால் கைவரப் பெற்ற அவன், காற்றைப்போல் எங்கும் சுற்றி வரலானான்.

ஒரு சமயம் வைஜயந்தி மாலையைக் கழுத்தில் அணிந்து அழகிய பெண்களுடன் நர்மதை நதியில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தான். அப்போது தன் ஆயிரம் கைகளாலும் நதியின் பிரவாஹத்தைத் தடுத்தான்.

அவ்வமயம் தான் பெரும் வீரன் என்ற செருக்குக் கொண்டிருந்த இராவணன், மாஹிஷ்மதி நகரத்தின் அருகில், நர்மதை நதிக்கரையில் கூடாரம் அமைத்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான். நதி தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பிரவாஹத்தில் இராவணனது கூடாரம் மூழ்கிப்போனது.

திடீரென்று எதனால் இவ்வளவு வெள்ளம் என்று குழம்பிய இராவணன், கார்த்தவீர்யார்ஜுனன் நதியைத் தடுப்பதைக் கண்டான். அவனிடம் சென்று அச்செயலுக்காகக் கடிந்துகொண்டான்.

பல பெண்களின் முன்னிலையில் தன்னைக் கடிந்துகொள்ளும் இராவணனை விளையாட்டாக ஒரு பூச்சியைப் பிடிப்பதுபோல் பிடித்தான் கார்த்தவீர்யார்ஜுனன். தன் தலைநகரான மாஹிஷ்மதியில் கொண்டு போய் இராவணனைச் சிறை வைத்தான். பின் புலஸ்திய முனிவர் தன் மகனை விடுவிக்கும்படி அறிவுரை கூற, அதை ஏற்று இராவணனை விடுவித்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 27, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 302

நிமி வம்சத்தின் அனைத்து அரசர்களைப்‌ பற்றியும் கூறினார் ஸ்ரீ சுகர். அவர்கள் அனைவரும் மைதிலர்கள் எனப்பட்டனர். இவர்கள் அனைவருமே இல்லறத்தவர்களாக இருப்பினும் ஆன்ம வித்யையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். யாக்ஞவல்க்யர் போன்ற மஹரிஷிகளின் அருளால் பற்றற்று விளங்கினர்.

அடுத்ததாக புனிதமான சந்த்ர வம்சத்தின் வர்ணனையைக் கூற ஆரம்பித்தார் வியாஸ புத்ரர்.

பகவான் நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியவர் ப்ரும்மா. அவரது திருமகன் அத்ரி மஹரிஷி. அத்ரியின் கண்களிலிருந்து சந்திரன் தோன்றினான். அவனது மகன் புதன். புதனின் மகன் புரூரவஸ். இவர்களின் கதையை முன்பே பார்த்தோம்.

புரூரவஸ் தேவமாதான ஊர்வசியை மணந்தான். அவனே ஆஹ்வனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி ஆகிய மூன்றுவித அக்னிகளைத் தோற்றுவித்தவன். புரூரவஸ் காலத்தில்தான் தேவர்கள், அக்னி வருணங்கள் ஆகியவை மூன்று மூன்றாகப் பிரிந்தன.

ஊர்வசியின் வயிற்றில் ஆறு புத்திரர்கள் பிறந்தனர். ஆயு, ச்ருதாயு, ஸத்யாயு, ரயன், விஜயன், மற்றும் ஜயன் என்பது அவர்களது பெயர்கள்.

ச்ருதாயுவின் மகன் வசுமான். ஸத்யாயுவின் மகன் ச்ருதஞ்ஜயன். ரயனின் மகன் ஏகன். ஜயனின் பிள்ளை அமிதன். விஜயனின் மகன் பீமன். அவனது பிள்ளை காஞ்சனன். மேலும், ஹோத்ரகன், ஜஹ்னு, புரு, பலாகன், அஜகன், குசன் ஆகியோர் வம்சத்தில் வரிசையாக வந்தவர்கள். இவர்களுள் ஜஹ்னுதான் கங்கையை ஆசமனம் செய்து குடித்தவர்.

குசனுக்கு குசாம்பு, மூர்த்தயன், வசு, குசநாபன் என்ற நான்கு பிள்ளைகள். இவர்களுள் குசாம்புவின் மகன் காதி. காதியின் மகள் ஸத்யவதி.

அவளை தனக்கு விவாஹம் செய்து தரும்படி ரிஷீகர் என்ற மஹரிஷி வேண்டினார். அவர் தன் மகளுக்குத் தகுதியானவர் அல்ல என்று நினைத்த காதி, வெண்மை நிற உடலும், ஒரு காது மட்டும் நீல நிறமாகவும் இருக்கும்படியான ஆயிரம் குதிரகளைச் சீதனமாகத் தந்தால் பெண்ணைத் தருவேன் என்றான்.

அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட ரிஷீகர் வருணனிடம் சென்று காதி கேட்ட மாதிரியான குதிரைகளைப் பெற்றுவந்து கொடுத்தார். வேறு வழியின்றி ஸத்யவதியை ரிஷீகருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் காதி.

ஒருநாள் ஸத்யவதியும், அவளது தாயாரும் மகப்பேறு வேண்டி யாகம் செய்து தருமாறு ரிஷீகரிடம் வேண்டினர். அவர் தன் மனைவிக்கு அந்தண தேஜஸுடனும், மாமியார் அரசி என்பதால் க்ஷத்ரிய தேஜஸுடனும் குழந்தை பிறப்பதற்காக தனித்தனியாக இரு மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தில் இடவேண்டிய சரு என்னும் அவியுணவைப் பக்குவம் செய்து வைத்துவிட்டு மாத்யான்னிக ஸ்நானம் செய்வதற்காக நதிக்குச் சென்றார்.

தன் மனைவிக்கு உயர்ந்த உணவு செய்திருப்பார் என்று நினைத்த ஸத்யவதியின் தாய், அதை எடுத்துத் தான் உண்டுவிட்டு, தன்னுடையதை மகளுக்குக் கொடுத்தாள்.

அதை அறிந்த முனிவர், தவறான காரியத்தால் உனக்குப் பிறக்கும் குழந்தை உலகைத் தண்டிப்பவனாகவும், உன் சகோதரன் ப்ரும்ம ஞானியாகவும் இருக்கப்போகிறான் என்று ஸத்யவதியிடம் சொன்னார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, July 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 301

அந்தணர்கள் நிமியின் உடலைப் பாதுகாத்து வைத்துவிட்டு, யாகத்தைத் தொடர்ந்து செய்து பூர்த்தி செய்தனர். அந்த ஸத்ர வேள்வியின் முடிவில் வந்திருந்த தேவர்களிடம், நிமியை உயிர்ப்பித்துத் தரும்படி வேண்டினர். அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று இசைந்தனர்.

ஆனால், நிமி, எனக்கு இவ்வுடலுடன் கட்டுப்பட்டிருக்கும் நிலை வேண்டாம். அறிஞர்கள் எண்ணம் முழுவதையும் ஸ்ரீமன் நாராயணனிடம் செலுத்துகிறார்கள். இவ்வுடல் நிலையானதில்லை. என்றாவது ஒருநாள் மீண்டும் மரணம் வரத்தான் வரும். எனவே மரணபயம் தரும் இவ்வுடல் வேண்டாம். என்றான்.

தேவர்கள், சரி, உன் விருப்பப்படி ஆகட்டும். நீ உடலின்றி இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளின் கண்ணிமைகளில் வாசம் கொள். அங்கிருந்து கொண்டே பகவானை தியானிக்கலாம். இமைகள் மேலும் கீழும் அசைவதாலேயே நிலையாமை புலப்படும்.
என்றனர்.

அரசன் இல்லாத ராஜ்ஜியம் நாசமாகும் என்பதால், மஹரிஷிகள் நிமியின் உடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு குமாரன் தோன்றினான்.

அவன் வம்சத்தைத் தொடர வந்தமையால் ஜனகன் என்றழைக்கப்பட்டான். உயிரற்ற உடலிலிருந்து தோன்றியதால் விதேஹன் என்றும், கடைந்ததனால் பிறந்ததால் மிதிலன் என்றும் அழைக்கப்பட்டான். அவன் தோற்றுவித்த நகரமே மிதிலாபுரி.

ஜனகனின் மகன் உதாவசு. அவன்து மகன் நந்திவர்தனன். அவன் மகன் ஸுகேது. அவனது மகன் தேவரதன். அவனது மகன் ப்ருஹத்ரதன். அவனது பிள்ளை மஹாவீர்யன். அவனது மகன் ஸுத்ருதி. இவனது பிள்ளை த்ருஷ்டகேது. அவனது மகன் ஹர்யச்வன்.

ஹர்யச்வனின் மகன் மரு. மருவின் மகன் ப்ரதீபகன். அவனது மகன் க்ருதிரதன். இவனது மகன் தேவமீடன். அவனது பிள்ளை விச்ருதன். விச்ருதனின் மகன் மஹாத்ருதி. மஹாத்ருதியின் மகன் க்ருதிராதன். அவனது பையன் மஹாரோமா. இவனது குழந்தை ஸ்வர்ணரோமா. அவனுடைய மகன் ஹிரஸ்வரோமா. ஹிரஸ்வரோமாவின் மகன் ஸீரத்வஜன்.

இவன் யாகம் செய்யத் துவங்கும்போது, பூமியில் கலப்பையால் உழுதான். அப்போது பூமியிலிருந்து சீதாப்பிராட்டி தோன்றினாள். ஸீரம் என்றால் கலப்பை. இவன் ஜனகன் எனவும் அழைக்கப்படுகிறான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 300

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
பரீக்ஷித்! இக்ஷ்வாகுவின் மகனான நிமி என்பவன் ஸத்ரம் என்ற வேள்வியைத் துவங்கினான். பின்னர் வஸிஷ்டரிடம் சென்று தனக்கு ரித்விக்காக இருக்கும்படி வேண்டினான்.

வஸிஷ்டரோ இந்திரன் செய்கிற வேள்விக்கு ரித்விக்காக இருக்க ஒப்புக்கொண்டே‌ன். அதை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை பொறுத்திரு என்று கூறினார்.

ஆத்மஞானியான நிமிச் சக்ரவர்த்தி, வாழ்வு நிலையற்றது. ஆகவே காலம் தாழ்த்துவது சரியில்லை என்று நினைத்தான். வஸிஷ்டர் இந்திரனின் யாகத்திற்குச் சென்றதும் நிமி மற்ற ரிஷிகளை வைத்துக்கொண்டு யாகத்தைத் துவங்கினான்.

உண்மையில் குரு பொறுத்திருக்கச் சொன்னால், பொறுத்திருப்பதே நலம். வஸிஷ்டர் போன்ற ஆன்மஞானி பொறு என்று சொன்னபின், வாழ்வின் நிலையாமை பற்றிக் கவலைப்படுவது அரைவேக்காட்டுத்தனம் போன்றது. ஏனெனில், குருவின் வாக்கை மீறிக் காலன் ஒருவனை நெருங்க இயலாது. குரு தன் கருணையாலேயே ஜீவனைக் கரையேற்ற சங்கல்பம் செய்துவிட்டால், காலனின் கணக்கு அங்கேயே முடிந்து விடுகிறது. அதன்பின் குருவின் விருப்பத்தின்படியே சீடனின் வாழ்வு அமைகிறது.

ஆனால், குருவின் அதிருப்தி மீளாத் துயரில் தள்ளிவிடும். அது நிமியின் ஞானத்தையும் அழித்துவிட்டது.

தனக்காகக் காத்திருக்காமல், தன் சொல்லை மீறி யாகம் துவங்கினான் என்று கேள்வியுற்றதும்,
வாழ்வு நிலையற்றது என்ற ஞானம் வந்துவிட்டதோ! எனில், இப்போதே நிமியின் உடல் வீழட்டும் என்று சபித்தார்.

நம்மைப்போலவே இரண்டு கண்கள், இரண்டு கைகள், கால்கள், நம்மைப்போலவே நடக்கிறார், உண்கிறார், மற்ற காரியங்களையும் செய்கிறார். இவரும் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதர் என்று ப்ரும்மஞானியான ஒரு குருவைப் பற்றி எண்ணம் எழுமானால், அதை விடப் பெரிய அஞ்ஞானம் வேறு இல்லை.

ஒரே கிளையில் காகமும், கருடனும் அமரலாம். இரண்டும் பறவைதானே என்றும் நினைக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றாகிவிடுமா? பறக்கத் துவங்கினால் மேகங்களை விடவும் உயரமாகப் பறக்கும் கருடன், அங்கிருந்தே தன் இரையை பூமியில் பார்க்கும். காகமோ ஒரு அளவுக்கு மேல் பறக்க இயலாது.

அதுபோலவே மனித உடல் எடுத்திருந்த போதிலும் ஞானிகளின் அறிவு கால தேசங்கள் என்ற எல்லைகள் அற்றது.

சாதாரண மனிதர்க்கு அடுத்த அறையில் என்ன நிகழ்கிறது என்று கூட அறியமுடியாது. அவனது அறிவை புலன்களின் திறனே வரையறுக்கிறது.

அஞ்ஞானத்தினால் மற்ற மனிதர்கள் போல் பேராசை கொண்டு வஸிஷ்டர் பேசுகிறார் என்று நினைத்த நிமி, வஸிஷ்டருக்கு, தங்களது உடலும் வீழட்டும் என்று பிரதி சாபம் கொடுத்தான்.

இந்த சாபத்தை செயலிழக்கச் செய்யும் தவ வலிமை வஸிஷ்டருக்கில்லையா என்ன? ஆனால், தொண்டு கிழமாகிவிட்ட அவ்வுடலை விட்டு மீண்டும் பலம் கொண்ட புதிய உடல் வேண்டும்.அதற்கு நிமியின் சாபத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று நினைத்த வஸிஷ்டர், அக்கணமே கிழட்டு உடலை விட்டார். பின்னர் மித்ரன், வருணன் ஆகிய தேவர்களின் மூலமாக ஊர்வசியின் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தார்.

நிமியும் தன்னுடலை விட்டான். வேள்விக்கு வந்திருந்த ரித்விக்குகள் நிமியின் உடலைத் தைலத்திலிட்டு வாசனைப் பொருள்களின் உதவியுடன் கெடாமல் பாதுகாத்து வைத்திருந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 299

குசனின் மகன் அதிதி. அவனது மகன் நிஷதன். அவனது புதல்வன் நபன். நபனின் மகன் புண்டரீகன். அவனது மகன் க்ஷேமதன்வா. அவனது மகன் தேவாநீகன். அவனது மகன் அநீஹன். அவனது புதல்வன் பாரியாத்ரன். அவனது மகன் பலஸ்தன்‌. இவனது மகன் சூரியனின் அம்சமாகப் பிறந்த வஜ்ரநாபன்.

வஜ்ரநாபனின் பிள்ளை ககணன். அவனதுவ்மகன் வித்ருதி. வித்ருதியின் மகன் ஹிரண்யநாபன்.
இவன் ஜைமினி மஹரிஷியின் சீடன் ஆவான். சிறந்த யோகாசார்யனாக விளங்கினான். கோசல தேசத்தில் பிறந்த யாக்ஞவல்க்யர் இவனிடம் சீடராக இருந்து அத்யாத்ம யோகத்தைக் கற்றார்.

ஹிரண்யநாபனின் மகன் புஷ்யன். அவனது மகன் த்ருவஸந்தி. இவனது மகன் சுதர்சனன். அவனது மகன் அக்னிவர்ணன். அவனது மகன் சீக்ரன். அவனது மகன் மரு.

மரு பல யோக சாதனைகளைச் செய்து, பல சித்திகளைக் கைவரப் பெற்று இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறார்.
இக்கலியுகத்தின் முடிவில் அழியப்போகும் சூரிய வம்சத்தை மறுபடியும் துவங்கி வைக்கப்போகிறார்.

மருவின் மகன் ப்ரஸ்ருதன். அவன் மகன் ஸந்தி. ஸந்தியின் மகன் அமர்ஷணன். அவனது மகன் மஹஸ்வான். அவனது மகன் விச்வஸாஹ்வன்.

இவனது மகன் ப்ரஸேனஜித். அவனது மகன் தக்ஷகன். அவனது மகன் ப்ருஹத்பலன்.
பரீக்ஷித்! இந்த ப்ருஹத்பலனைத்தான் மஹாபாரதப் போரில் உன் தந்தை அபிமன்யு கொன்றான்.

மேலும் இனி வரப்போகும் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களையும் சொல்கிறேன் கேள்.

ப்ருஹத்பலனின் மகன் ப்ருஹத்ரணன். அவனது மகன்களாக உருக்ரியன் பிறப்பான். அவனது மகனாகப் பிறக்கப்போகிறவன் வத்ஸவ்ருத்தன். அவனுக்கு பிரதிவ்யோமன் பிறப்பான். அவனது மகனாக பானுவும், பானுவின் மகனாக திவாகனும் பிறப்பர். இவன் சேனாதிபதியாக விளங்குவான். இவனது மகனாக வீரனான சகதேவன் பிறப்பான். மேலும் இந்தத் தலைமுறையில் வரிசையாக ப்ருஹத்ச்வன், பானுமான், ப்ரதீகாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், புஷ்கரன், அந்தரீக்ஷன், ஸுதபஸ், ஸுமித்ரஜித், ப்ருஹத்ராஜன், பர்ஹிஸ், க்ருதஞ்சயன், ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்கியன், சுத்தோதரன், லாங்கலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், ரணகன், ஸுரதன், ஸுமித்ரன் ஆகியோர்.

இவ்வம்சத்தின் கடைசி அரசன் ஸுமித்ரன் ஆவான். இவன் வந்ததும் கலியுகம் ஆரம்பமாகிவிடும். அவனோடு இக்ஷ்வாகுவின் பரம்பரை முடிவுறும்.
தொடர்ந்து நிமியின் வம்சத்தைக் கூறலானர் ஸ்ரீ சுகர்.

மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, July 23, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 298

ஒரு சமயம் இராமன் மக்களின் மனநிலையை அறிய எண்ணி, மாறுவேடத்தில் நகரசோதனைக்குச் சென்றார்.

அப்போது ஒரு வீட்டிலிருந்து உரத்த குரலில் ஒருவன் பேசும் சத்தம்‌கேட்டது.
அடியே! ஓடுகாலி! நீ மாற்றான் வீட்டிலிருந்து வருகிறாய். அப்படிப்பட்ட பெண்ணை, பெண்பித்து பிடித்த இராமன் வேண்டுமானால் ஏற்கலாம். நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்.

அறியாமையினால் சூழப்பட்ட உலகில் இறைவனே ஆனாலும், அனைவரையும் திருப்தி செய்வது இயலாது. இருப்பினும், இவனொருவன் மட்டுமின்றி, இன்னும் சில ஒற்றர் வாயிலாகவும், நாட்டு மக்கள் அரசல் புரசலாக தன்னைப் பற்றிப் புறம் பேசுவதைக் கேள்வியுற்றான் இராமன்.

நாட்டு மக்களுக்கு உதாரண புருஷனாக இருக்கவேண்டிய தன்னைப் பற்றிய அவதூறுகள் மக்களின் நல்லொழுக்கத்தைப் பாதிக்கும் என்பதால், சீதையைத் தியாகம் செய்துவிட்டான். பிராட்டி காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் தஞ்சமடைந்தாள்.

சீதை பூமியிலிருந்து வந்தவள். வால்மீகியும் புற்று மண்ணிலிருந்து வெளிப்பட்டவர். அவர் சீதைக்கு சகோதரன் முறையாகிறது. கர்பிணியாக இருந்த சீதை பேறுகாலத்திற்காக தாய்வீட்டை அடைந்ததுபோல் இந்நிகழ்வு அமைந்துவிட்டது.

சீதாதேவிக்கு இரு பிள்ளைகள் பிறந்தன. லவன், குசன் என்ற அவர்கள் இருவர்க்கும் வால்மீகி ஜாதகர்மா முதலியவற்றைச் செய்வித்தார்.

இலக்ஷ்மணனுக்கு அங்கதன்,‌சித்ரகேது ஆகிய இரு புதல்வர்கள் பிறந்தனர்.
பரதனுக்கு தக்ஷன், புஷ்கலன் ஆகிய இருவரும், சத்ருக்னனுக்கு சுபாகு, ச்ருதஸேனன் ஆகிய இருவரும் பிறந்தனர்.

பரதன் திக்விஜயம் செய்து கோடிக்கணக்கான கந்தர்வர்களை வென்றான். அவர்களது செல்வங்கள் அனைத்தையும் எடுத்துவந்து இராமனிடம் ஒப்படைத்தான்.

சத்ருக்னன் மது என்னும் அசுரனின் புதல்வனான லவணாசுரனை வென்றான். மதுவனத்தில் மதுரை என்னும் நகரை உருவாக்கினான்.

லவனையும் குசனையும் வால்மீகியிடம் ஒப்படைத்துவிட்டு சீதை பூமிக்குள் புகுந்தாள். சீதையின் பிரிவைத் தாங்காத இராமன், கடுமையான ப்ரும்மசர்ய விரதம் பூண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள்‌ ஒரே தொடராக அக்னிஹோத்ரம் செய்துவந்தான்.

பின்னர், தனக்குத்தானே ஒளிர்விடும் ஜோதியான வைகுண்டத்தை அடைந்தான்.

ஸ்ரீ ராமன் ஒத்தார் மிக்கார் இல்லாத பரம்பொருள். தேவர்களின் வேண்டுகோளின்படி மானுடத் திருமேனி தாங்கிவந்தார். அஸ்திர சஸ்திரங்கள் கொண்டு அணை கட்டுவதோ, அரக்கர்களைக் கொல்வதோ அவரது புகழல்ல. குரங்குகளின் உதவி அவருக்குத் தேவையா என்ன? இவை அனைத்தும் திருவிளையாடல்களே.

இராமனது புகழ், எல்லாப் பாவங்களையும்‌ தொலைப்பது. விண்ணவர்களும், முனிவர்களும், மண்ணுலகத்தோரும் அவரது புகழைப் பாடி மகிழ்கின்றனர். அந்த இராமனையே சரணமடைகிறேன்.

இந்த சரித்திரத்தை காதாரக்‌கேட்டு, மனதாரச் சிந்திப்பவர்க்கு அமைதியும் மனநிறைவும் கிடைக்கின்றன. காமத்தளைகள் முழுவதும் அழிகின்றன.
என்றார் ஸ்ரீ சுகர்‌.

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 297

ஸ்ரீ ராமனின் ஆட்சியில் த்ரேதாயுகம், மீண்டும் க்ருதயுகத்தைப் போலவே மாறியது. கற்புக்கனலான சீதை இராமனின் மனத்தை நன்கறிந்து அன்பு, பணிவிடை, நல்லொழுக்கம், வினயம், நல்லறிவு, வெட்கம் ஆகிய குணங்களால் அவரது மனத்தைக் கவர்ந்தாள்.

ஸ்ரீ ராமன் ஸகலதேவதைகளின் ஸ்வரூபமாக இருந்தபோதிலும், உலகிற்கு உதாரண புருஷனாக வஸிஷ்டரை குருவாகக் கொண்டு பல வேள்விகளை மிகவும் சிறப்பாகச் செய்தான்.

அவ்வேள்விகளில் ஹோதா என்னும் ரித்விக்குகளுக்கு கிழக்குத் திசையிலுள்ள அனைத்து பகுதிகளையும் தானமாகக் கொடுத்தான். ப்ரும்மா என்ற ரித்விக்குக்கு தென்திசையிலுள்ள பகுதிகளையும், அத்வர்யுவுக்கு மேற்கு திசைப் பகுதிகளையும், ஸாமகானம் செய்யும் உத்காதாவிற்கு வடதிசைப் பகுதிகளையும் தானமாகக் கொடுத்தான்.

மத்தியிலுள்ள பகுதியை குலகுருவான வஸிஷ்டருக்குக் கொடுத்தான். இப்பூமி முழுவதும் ப்ரும்மஞானிகளுக்குரியது என்று எண்ணினான் ஸ்ரீராமன்.

அனைத்தையும் அளித்தபின் ஸ்ரீ ராமனிடம், அவன் அணிந்திருந்த ஆடை ஆபரணங்கள் மட்டுமே மிஞ்சின.‌ பட்டத்தரசியான சீதையிடமும் அவள் அணிந்திருந்த தீக்ஷா வஸ்திரமும், திருமாங்கல்யமும் மீதியிருந்தன.

அந்தணர்களும் குருமார்களும் இராமனின் அன்பினால் மனங்கசிந்து இராமன் அளித்த நாற்றிசைப் பகுதிகளையும் இராமனுக்கே திருப்பிக் கொடுத்தனர்.

அகில லோக நாயகனே! தாங்கள் எங்கள் மனத்திலிருக்கும் அஞ்ஞான இருளை அழித்து ஞானச் செப்வத்தை அளிக்கிறீர்கள். அப்படியிருக்க இந்த செல்வங்களால் எமக்கு யாது பயன்?

தாங்கள் ஞானஸ்வரூபம். புருஷோத்தமர். எவருக்கும் தீங்கு நினைக்காத
முனிவர்கள் அனைவரும் தங்கள் திருவடிக் கமலத்தையே ஹ்ருதயத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். நீங்களோ அந்தணர்களையே தெய்வமாகப் போற்றுகிறீர்கள். தங்களுக்கு வணக்கங்கள்.

என்று கூறிவிட்டு மனமகிழ்ச்சியுடன் கிளம்பினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, July 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 296

இராவணன் இறந்ததும், அவனது மனைவிகள் அனைவரும் ஓடி வந்து அவனது உடல் மீது விழுந்து கதறி அழுதனர்.

இராவணனின் காமத்தால் இப்படி ஆயிற்றே என்று புலம்பினார்களே தவிர, அவர்கள் ஒருவருமே தம் கணவனைக் கொன்ற இராமனைக் குறை சொல்லாதது ஆச்சர்யம்.

இராமனின் கட்டளைப்படி விபீஷணன் இறந்துபோன அத்தனை சுற்றத்தார்க்கும் விதிப்படி ஈமக்கடன்களைச் செய்தான்.

பின்னர் இராமன் சீதையை அழைத்துக்கொண்டு புஷ்பகவிமானம் ஏறி அயோத்திக்குத் திரும்பினான். பதினான்கு வருட வனவாசம் பூர்த்தியடைந்தது.

இதற்கிடையில் பரதன், பதினான்கு ஆண்டுகளாக மரவுரி தரித்து, கோமியத்தில் சமைக்கப்பட்ட யவம் என்னும் தானியத்தை மட்டும் உண்டு, ஜடை தரித்து, கட்டாந்தரையில் படுத்துறங்கினான் என்பதைக் கேட்டு இராமன் மிகவும் வருந்தினான்.

இராமன் வருவது கண்டு பரதன், அந்தணர்களை அழைத்துக்கொண்டு, தலையில் குருவான தமையனின் பாதுகையைத் தாங்கியபடி, வாத்தியங்கள் முழங்க எதிர்கொண்டழைத்தான்.

ஓரங்களில் தங்க ஜரிகை வைக்கப்பட்ட கொடிகள் நகர் முழுவதும் பறந்தன.
தங்கம் இழைக்கப்பட்ட வெண்கொற்றக்குடைகள், தங்கபூண்கள் அணிந்த குதிரகள் பூட்டிய தங்கத்தேர்கள், தங்கக்கவசம் அணிந்த போர் வீரர்கள், வெண்சாமரம் ஆகியவற்றுடன் பரதன் ராமனை வரவேற்றான். மனம் கரையும்படி ஆனந்தக் கண்ணீர் பெருக ராமனின் திருவடிகளில் விழுந்தான்.

இராமன் இருகைகளாலும் அவனை வாரித் தூக்கி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

வெகு காலம் கழித்து வந்த மன்னனைக் கண்டு ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பரதன் பாதுகைகளை ஏந்த, விபீஷணன் வெண்சாமரம் வீச, சுக்ரீவன் விசிறியால் வீச, அனுமன் வெண்கொற்றக்குடையை ஏந்தினான்.சத்ருக்னன் கோதண்டத்தையும் அம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டான். சீதை கமண்டலுவை எடுத்துக்கொண்டாள். அங்கதன் உடைவாளையும், ஜாம்பவான் தங்கக்கேடயத்தையும் ஏந்தியபடி புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி நகரை அடைந்தான் ராமன்.

மிகவும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த அயோத்திக்குள் சென்றதும், தன் தாய்களையும், குருவையும், வணங்கினான் இராமன். சிறியவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டான்.

சடைமுடியெல்லாம் திருத்தச் செய்து, மன்மதன் போல் அலங்கரிக்கப்பட்ட ராமனுக்கு
எல்லா பெரியோர்களும் கூடிய சபையில், பட்டபிஷேகம் செய்துவைத்தார் வசிஷ்டர்.

பின்னர் அழகின் எல்லையாக விளங்கிய இராமன் புத்தாடையும் அழகிய ஆபரணங்களையும் அணிந்து, சிங்காசனம் ஏறினான்.

இராமன் மக்களைத் தன் குழந்தைகள் போல் எண்ணினான். மக்களும் ராமனைத் தந்தையாகவே போற்றினர்.

இராமனின் ஆட்சியில் எவருக்கும் மனவருத்தமோ, நோயோ, கிழத்தனமோ, மனச்சோர்வோ ஏற்படவில்லை. எவர்க்கும் இறப்பும் இல்லை.

ஏகபத்தினி விரதனாக இருந்து ரிஷியைப் போன்ற ஒழுக்கத்துடன் தானும் விளங்கி குடிகளையும் நன்னெறியில் ஒழுகவத்தான் ஸ்ரீராமன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 295

தன் தந்தை சிற்றன்னைக்கு வசப்பட்டு வரமளித்துவிட்டு, சத்தியத்திற்குக் கட்டுப்பட்டும், பிள்ளைப் பாசத்தினால் தவிப்பதையும் கண்டு, தந்தை அளித்த சத்தியத்தைக் காப்பாற்ற மனைவியுடனும் இலக்குவனும் வனமேகினான் ஸ்ரீராமன்.

வனத்தில் காமத்தினால் குழம்பிய மனமுடைய சூர்ப்பனகையின் காதுகளையும் மூக்கையும் வெட்டியெறிந்தார். அதற்காக அவளது சகோதரர்கள் கரனும், தூஷணனும் பதினான்காயிரம் ராக்ஷஸர்களோடு போரிட வந்தனர். எவராலும் ஜெயிக்கமுடியாத தன் கோதண்டத்தை மண்டலம் போல் வளைத்து அவர்கள் அனைவரையும் கொன்றார்.

சீதையின் அழகையும், குணங்களையும் பற்றி சூர்ப்பனகை வாயிலாகக் கேள்விப்பட்டான் இராவணன். அதனால் மாரீசனை மிக அழகான புள்ளிமானாக்கி அவர்களது குடிலின் அருகில் அனுப்பினான். அதைக் கண்டு மனம் மயங்கிய சீதை அதைப் பிடித்துத் தரும்படி வேண்ட, இராமன் மானைத் துரத்திச் சென்றான். மாரீசனின் சூழ்ச்சியால் இலக்குவன் ராமனைத் தேடிச் செல்ல, தனியாக இருந்த சீதையை இராவணன் அபகரித்துச் சென்றான்.

இராமன் மாரீசனின் சூழ்ச்சியறிந்து அவனைக் கொன்றுவிட்டான். ஆசிரம்த்திற்கு வந்து சீதையைக் காணாமல், துடித்துப்போனான்.

தன் பொருட்டு இராவணனுடன் போரிட்டு உயிர் நீத்த ஜடாயுவிற்கு அந்திம கடன்கள் செய்தான்.
பின்னர் கபந்தனை வதம் செய்தான். 

வானரர்களின் உதவியால் சீதை இலங்கையில் இருப்பதாக அறிந்தான். எல்லையற்ற பராக்கிரமம் உள்ள ஸ்ரீ ராமன், சாதாரண பாமரன் போல் குரங்குகளுடன் சேர்ந்து சமுத்திரக் கரைக்கு வந்தான்.

தன் மீது பாலம் கட்டிக்கொண்டு இலங்கை சென்று விஸ்ரவஸின் புதல்வனான இராவணனை வெற்றிகொள்ளுமாறு வேண்டினான்.
குரங்குகள்‌ மலைகளை அடியோடு பெயர்த்து வர, அவற்றைக்‌கொண்டு நளன் மற்றும் நீலனின் உதவியோடு கடலின்மீது பாலம் அமைத்தான் ஸ்ரீ ராமன்.

பின்னர் ஏராளமான வானரப் படைகளுடன் இலங்கைக்குள் புகுந்தான்.
இராவணன், நிகும்பன், கும்பன், தூம்ராக்ஷன், துன்முகன், சுராந்தகன், நராந்தகன், அதிகாயன், விகம்பனன், இந்திரஜித், கும்பகர்ணன் ஆகியோரின் தலைமையில் பெரும் படைகளை அனுப்பினான். அனைவரையும் கொன்று குவித்து இறுதியில் இராவணனையும் அழித்தான் ஸ்ரீ ராமன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, July 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 294

ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்!
கட்வாங்கனைப் பற்றி முன்னமே பார்த்தோம். அவர் தேவாசுர யுத்தத்தில் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பங்குபெற்றார். அசுரர்களைக் கொன்று குவித்து, தேவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். அவரிடம் வேண்டும் வரத்தைப் பெறுக என்று தேவேந்திரன் கூறியபோது, கட்வாங்கர் முக்தியின்பம் வேண்டும் என்றார். என்னால் அதைக் கொடுக்க இயலாது.

வேறு வரம் கேளுங்கள் என்று கூற, கட்வாங்கன் தனக்கு இன்னும் எவ்வளவு ஆயுள் உள்ளதென்று பார்த்துச் சொல்லுங்கள் என்றான். ஒரு முஹூர்த்த காலமே உள்ளதென்று இந்திரன் கூற, கட்வாங்கன், தன் மனத்தை முழுவதும் இறைவனிடம் செலுத்தி, உண்மையான ஆத்மானுபூதியை அடைந்தான். ஸ்ரீ மன் நாராயணன் மீது ஏற்கனவே அளவற்ற பக்தி கொண்டு அவரது கருணைக்கு ஆட்பட்டிருந்ததாலேயே கட்வாங்கனுக்கு தன் இறுதிக்காலத்தில் இத்தகைய விஷயம் சாத்தியமாயிற்று.

கட்வாங்கனின் மகன் தீர்கபாகு. அவனது மகன் மிகவும் புகழ் வாய்ந்த ரகு ஆவான். அவனது மகன் அஜன். அஜனின் மகன் தசரதன்.

தேவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க பகவான், ஸ்ரீ ராமன் என்ற பூர்ணாவதாரமாகவும், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அம்சாவதாரங்களாகவும் தோன்றினார்.

சீதை தன் மென்மையான கரங்களால் பிடித்துவிட்டால் கூடச் சிவந்து போகும் தாமரைப் பாதங்களை வைத்துக்கொண்டு, தந்தையின் சொல் காப்பதற்காக வனங்களில் அலைந்தார் ஸ்ரீ ராமன்.‌ சூர்ப்பனகையின் அடாத செயல் பொறாமல், அவளது காதுகளையும், மூக்கையும் லக்ஷ்மணன் அறுத்துவிட, அதன் பயனாக சீதையைப் பிரிந்து துயருற்றார். பின்னர் சமுத்திரத்தின் நடுவில் பாலம் கட்டி, அதன் மூலம்‌ இலங்கையை அடைந்து ராவணனையும், அவனைச் சார்ந்த அசுரர்களையும் கொன்றார்.

விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காத்த அழகுதான் என்ன? சீதைக்காக வில்லொடித்த அழகுதான் என்ன? குட்டியானை கரும்பை ஒடிப்பதுபோல் விளையாட்டாக வில்லை ஒடித்தாரே.

அகலகில்லேன் இமைப்பொழுதும் என்று பகவானை விட்டு கணப்பொழுதும் பிரியாத மஹாலக்ஷ்மியே சீதை என்னும் திருப்பெயருடன் ஜனகரின் மகளாகப் பிறந்தாள். ஸ்ரீ ராமனுக்கு சமமான மேனியழகும், இளமையும் கொண்டு பிறந்தாள் சீதை.

பின்னர் பரசுராமரின் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்து, அவரிடமிருந்த சிவதனுசை முறித்து, விஷ்ணு அம்சத்தைத் தனக்குள் வாங்கிக் கொண்டார்.

முதலில் நான்கே ஸ்லோகங்களில் மிகவும் சுருக்கமாக ராமனின் கதையைக் கூறிய ஸ்ரீ சுகர், பின்னர் பகவானின் கதையை விட்டு வெளியே வர மனமின்றி அதனுள்ளேயே மூழ்கிப்போனார்.

முக்கியமான நிகழ்வுகளை மட்டும் சற்று விளக்கமாக இரண்டு அத்யாயங்களில் கூறுகிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 293

குருவைச் சபிப்பது தவறு என்றுணர்ந்த ஸௌதாஸன் தன் காலிலேயே சாபத்திற்காகச் சங்கல்பித்த நீரை விட்டுக்கொண்டு கறுத்த கால்களை உடையவன் ஆனான்.
வஸிஷ்டரின் சாபத்தின்படி ராக்ஷஸனாகி 12 வருடங்கள் காட்டில் அலைந்தான். அப்போது வருவோர் போவோரைப் பிடித்து உண்ணத் துவங்கினான்.

ஒரு சமயம் காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது, காட்டிலேயே வசிக்கும் ஒரு அந்தண தம்பதியரைப் பார்த்தான். அவர்கள் இன்புறும் சமயத்தில், சற்றும் யோசிக்காமல், வாட்டசாட்டமாய் இருந்த அந்த அந்தணனைப் பிடித்துக்கொண்டான்.

தவித்துப்போனார்கள் அத்தம்பதிகள். அந்தணன் மனைவி, நீ ராக்ஷஸனல்லவே. நீ நாட்டின் மன்னன்தானே. உனக்கு இச்செயல் தகுமா? இன்பமாக வாழும்‌ இருவரில் ஒருவரைக் கொல்லுதல் முறையா
இவர் ஒரு வித்வான். அந்தணனைக் கொன்ற பாவம் ப்ரும்மஹத்தியாகும். இவர் பகவானை ஆராதிப்பவர். இவரை விட்டுவிடு.

பிள்ளைகள் போன்றவர்கள் பிரஜைகள். அரசனே அவர்களைக் கொல்லலாமா. நீ சான்றோரை பூஜித்ததெல்லாம் பொய்யா? இது உனக்கே தகுமா?
விழுங்கத்தான் போகிறாய் என்றால் இவரை விட்டு என்னால் வாழ இயலாது. என்னை முதலில் விழுங்கு
என்று அரற்றினாள்.

எதையும் காதிலேயே வாங்காமல், பசி வேகத்தில் ராக்ஷஸன் அந்தணனை விழுங்கிவிட்டான்.
கண்முன்னாலேயே கணவன் கொல்லப்பட்டதைக் கண்டு மனம் பொறாத அவ்வுத்தமி,
நீ பெண்ணுணர்வு கொண்டால் மரணமடைவாய்
என்று சாபமிட்டுவிட்டுக் கீழே விழுந்திருந்த தன் கணவனின் எலும்புகளைப் பொறுக்கி சிதையிலிட்டாள். பின்னர், தானும் அத்தீயிலேயே குதித்து தன் கணவன் அடைந்த உத்தமலோகத்தை அடைந்தாள்.

பன்னிரண்டு வருடங்கள் கழித்து அரக்கத் தன்மை நீங்கியதும், நாட்டிற்கு வந்தான் ஸௌதாஸன். ஆனால், மனைவியுடன் இன்புற நினைக்கும் சமயத்தில் அவனது சாபத்தைப் பற்றி அறிந்திருந்த மதயந்தீ தடுத்து நிறுத்தினாள்.

தன் நிலையை உணர்ந்த அரசன், பெண்ணின்பத்தை முற்றிலும் துறந்தான்.
தன் வினையாலேயே ஸௌதாஸனுக்கு மக்கட் பேறில்லாமல் போயிற்று.

பின்னர், குருவான வஸிஷ்டரிடம் சந்ததிக்காக வேண்டினான். அவர் மதயந்தீக்கு அருள்கொடையாக கர்பாதானம் செய்தார்.

அக்குழந்தை ஏழாண்டு காலம் வயிற்றிலேயே இருந்தது. பின்னர் வஸிஷ்டரே அவ்வுதரத்தைக் கல்லால் அடிக்க குழந்தை வெளிவந்தது. கல்லால் அடித்தபின் பிறந்ததால் கல் என்னும் பொருள்படும்படி அச்மகன் என்ற பெயர் பெற்றான்.

இந்த அச்மகனின் மகன் மூலகன். பரசுராமர் கோபம் கொண்டு உலகில் க்ஷத்ரியர்களே இல்லாமல் ஆக்குவதாகச் சபதம் ஏற்றபோது, இவன் பயந்துபோய் பெண்வேடம் பூண்டான். அதனால் நாரீகவசன் என்று பெயர் பெற்றான்.

க்ஷத்ரிய வம்சமே இல்லாமல் போனபோது இவன் ஒருவனே மிஞ்சியதால், அதன் பின் வந்த க்ஷத்ரிய வம்சத்திற்கு இவனே மூலகாரணமானான். எனவே மூலகன் என்று பெயர் பெற்றான்.

மூலகனின் மகன் தசரதன். அவனது மகன் ஜடபிடன். இவனது மகன் விச்வஸஹன்.
விவஹஸனின் மகன் கட்வாங்கன். இவன் பெரிய சக்ரவர்த்தியாகப் பெயரும் புகழும் பெற்று விளங்கினான்.

# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 292

இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டபோதும், சாம்பலின் மீது நீர் பட்ட மாத்திரத்திலேயே நற்கதியை அடையலாம் என்றால், சிரத்தையாக கங்கையைப் பூஜிப்பவர்கள், மற்றும் கங்கையில் நீராடுபவர்கள் உத்தம கதியை அடைவார்கள் என்பதில் ஐயமேது?

பகவானின் திருவடி சம்பந்தம் பெற்ற எந்த ஒரு பொருளும் ஜீவனும், தான் கரையேறுவதோடு மட்டுமின்றி தங்களை அண்டுபவர்களையும் கரையேற்றிவிடுகிறது.

பகீரதனின் மகன் ச்ருதன். அவனது மகன் நாபன். நாபனின் மகன் ஸிந்துத்வீபன். அவனது புதல்வன் அயுதாயுஸ். இவனது மகன் ருதுபர்ணன். இவன் நளமஹாராஜனின் நண்பனாவான்.

இவன் சூதாட்டத்தின்போது பகடைக்காயின் ரகசியமான அக்ஷஹ்ருதயம் என்ற வித்தையை நளனுக்குக் கற்றுக்கொடுத்தான். பதிலாக, நளனிடமிருந்து குதிரைகளைச் செலுத்தும் அஸ்வஹ்ருதயம் என்ற ரகசிய வித்தையைக் கற்றுக்கொண்டான்.

ருதுபர்ணனின் மகன் ஸர்வகாமன். அவனது மகன் சுதாஸன். சுதாஸனின் மனைவி மதயந்தீ. இவனுக்கு ஸௌதாஸன், மித்ரஹாஸன், மற்றும் கல்மஷபாதன் என்னும் பெயர்களும் உண்டு. குருவான வஸிஷ்டரின் சாபத்தால் அரக்கனானான். இவனுக்கு மக்கட்செல்வம் இல்லை.

ஸ்ரீ சுகர் இவ்வாறு கூறியதும், உடனே பரீக்ஷித்,
பகவானே! ஸௌதாஸன் சான்றோன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவனுக்கு எதனால் சாபம் ஏற்பட்டது? என்று கேட்டான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
நீ சொல்வது உண்மைதான் பரீக்ஷித். நல்மனத்தானாகவும் சான்றோனாகவும் விளங்கிய ஸௌதாஸனை விதி பிடித்து ஆட்டியது. அவன் ஒரு முறை காட்டில் வேட்டையாடச் சென்றான். அப்போது ஓர் அரக்கனைக் கொன்றான். ஆனால், அவனது தம்பியைக் கொல்லாமல் விட்டான். பகையை வேரோடு அழிக்காமல், மிச்சம் வைத்ததால், அரக்கனின் தம்பி ஸௌதாசன் மீது வஞ்சம்‌ கொண்டு பழி தீர்க்க எண்ணினான்.

மிகவும் வலிமையுள்ள அரசனைப் போர் செய்து கொல்லமுடியாது என்றுணர்ந்த அவன், வேறு வழியில்‌ அவனை மாட்டிவிட்டு பாவியாக்க எண்ணம்‌கொண்டான். மனித உருவெடுத்து ஸௌதாஸனின் அரண்மனையில் சமையல் காரனாகப் பணியில் அமர்ந்தான்.

அவன் தக்க சமயம்‌ எதிர்பார்த்திருந்தபோது ஒருநாள் வஸிஷ்ட பகவான் விருந்துக்கு வந்தார். இதுதான் சமயம் என்று அவ்வரக்கன், நர மாமிசத்தைச் சமைத்து உணவாகப் போட்டான்.

பரிமாறப்பட்ட உணவைக் கண்டதும் சந்தேகம் கொண்ட வஸிஷ்டர், ஞானத்தினால் நடந்ததை அறிந்தார். பணியாள் செய்யும் தவறு எஜமானனையே சாரும்‌ என்பதால், நரமாமிசம்‌ படைத்த நீ அரக்கனாகக் கடவாய் என்று ஸௌதாஸனைச் சபித்தார்.

இத்தவறுக்கு அரசன் பொறுப்பல்ல என்று தெரிந்திருந்ததனால், பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் அரக்கத்தன்மை நீங்கும் என்று விமோசனமும் கொடுத்தார்.

தவறே செய்யாத தன்னை குரு சபித்துவிட்டதாகக் கருதிய ஸௌதாஸன், சினம் கொண்டு தானும் வஸிஷ்டருக்கு ஒரு சாபம் கொடுப்பதற்காக நீரைக் கையில் எடுத்து சங்கல்பம் செய்தான்.
அதை அறிந்த அவனது மனைவி மயதந்தீ ஸௌதாஸனைத் தடுத்தாள்.

குருவைச் சபிக்கலாகாது. குரு செய்யும் எந்த ஒரு செயலும் சீடனுக்கு நன்மை பயக்கும். அவர் அறியாமல் செய்த பாவத்திற்காக வரும் நரக தண்டனையிலிருந்து காக்க இப்போது சாபமளித்திருக்கிறார். தன் சீடனின் வினையைக் குறைத்து முக்தியில் சேர்க்க குருவானவர் சாம, தான, பேத, தண்டம் என்னும் எம்முறையை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்.

வஸிஷ்டர் மஹா ஞானி. அவரைச் சபித்து மீளாநரகத்திற்கு வழிகோலவேண்டாம். என்றாள்.

அவளது பேச்சிலிருந்த தர்மத்தைப் புரிந்துகொண்டு சபிப்பதை விட்டான் சௌதாஸன். அதனால் மித்ர ஹாஸன் என்றழைக்கப் பட்டான்.

ஆனால், சங்கல்பம் செய்த நீரை எங்கு விடுவதென்று தெரியாமல் திகைத்தான். உலகம்‌ முழுதும் ஜீவன்களால் நிறைந்திருப்பதைக் கண்டு நீரை எங்கு விட்டாலும் தீங்கு நேருமே என்று அஞ்சினான். எனவே சாபத்திற்காக சங்கல்பம்‌செய்த நீரைத் தன் காலிலேயே விட்டுக் கொண்டான். உடனே அவனது பாதங்கள் கறுத்தன. அதனால் ஸௌதாஸன் கல்மஷபாதன் என்றும் அழைக்கப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..