Thursday, February 18, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 631

கல்கி எனும் பெயர் பெறப்போகும் பகவான் எண்வகை சித்திகளும், நற்குணங்களும் நிறைந்தவர். மிகுந்த தேஜஸ்வியாக விளங்குவார். அனைத்துயிர்க்கும் காப்பாளர் அவரே. 

அவரது குதிரையின் பெயர் தேவதத்தம் என்பதாம். அது மிகவேகமாகச் செல்லக்கூடியது‌. அதன் மீதேறி மின்னல் வேகத்தில் தீயோர் பலரையும் வெட்டிச் சாய்த்து நில உலகைச் சமன் செய்யப்போகிறார். குதிரை மேலேறிக்கொண்டு புவியெங்கும் சுற்றுவார். கோடிக்கணக்கான திருடர்களை மாய்ப்பார். தீயவர் அனைவரும் அழிந்த பிறகு மக்கள் மனம் தூய்மையாகும். பகவானின் திருமேனியிலிருந்து எழும் சுகந்தத்தைச் சுமந்து வரும் காற்று மக்கள் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கும்.

ஸத்வ குணம் பெருகத் துவங்கும். கொஞ்சம் கொஞ்சமாக படைப்பு வலிமையும் செழுமையுமாக மாறும். 

பகவான் கல்கியின் திருவவதாரம் துவங்கும் காலமே கலியுகம் முடியும் காலம். அதன் பின் க்ருத யுகம் துவங்கும். இயல்பாகவே மக்கள் ஸத்வகுணமுள்ளவர்களாகப் பிறப்பார்கள்.

சந்திரன், சூரியன், வியாழன் ஆகிய மூன்று கிரஹங்களும் பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில், கடக ராசியில் கூடுவார்கள். அன்றைய தினம் க்ருத யுகம் துவங்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு‌முறை கூடுவராயினும் கடக ராசியில் நுழைவது பற்றியே இங்கு கூறப்படுகிறது. 

ஹே பரிக்ஷித்!
இதுவரை உனக்கு சூரிய சந்திர வம்சத்து மன்னர்கள் அனைவர் பற்றியும்‌ கூறினேன்.

நீ பிறந்தது முதல் நந்தனின் பட்டாபிஷேக காலம் வரை ஆயிரத்து நூற்றுப் பதினைந்து வருடங்களாகும்.

மரீசி, அருந்ததியுடன் வசிஷ்டர், ஆங்கீரஸ், அத்ரி, புலஸ்த்யர், புலஹர், க்ரது ஆகியோர் தோன்றுவர். வானில் ப்ரகாசிப்பர். ஆச்வினி நக்ஷத்திரம் தோன்றி அது மட்டும் ப்ரகாசமாகத் தெரியும். அதைச் சுற்றி ஸப்த ரிஷிக் கூட்டம் நூறு வருடங்கள் இருக்கும். நீ பிறந்தபோது ஸப்தரிஷிக் கூட்டம் மக நட்சத்திரத்தில் இருந்தது. 

கண்ணன் இப்புவியிலிருந்து கிளம்பியதுமே பூமியைப் பாவம் ஆக்கிரமித்துவிட்டது‌. கலியில் அனைவர் மனமும் பாவத்தை நோக்கியே பயணிக்கும். ஸப்தரிஷிக் கூட்டம் மகத்தைக் கடந்து பூராடத்தில்‌ நுழையும்போது நந்த வம்சம் ஆட்சி செய்யும். அப்போது கலியுகம் வலுப்பெறும். தேவ வருடங்கள் ஆயிரம் கழிந்ததும் கலியுக முடிவில் பகவான் கல்கியின் அருளால் ஸத்ய மார்கம் திரும்பும். 

நாம் கூறிய மன்னர்கள் எவருமே ‌இன்று இல்லை. ஆனால் அவர்களின் பெயரும் புகழும் நிலை பெற்றிருக்கின்றன.

இவர்கள் அனைவரும் நான் நான் என்ற அஹங்காரம் கொண்டவர்கள் தான். அனைவரையும் மண் கொண்டது. 

அரசன் என்றழைத்தாலும் இறந்தால் புதைத்தால் புழுவிற்கு இரை, நரி, நாய் முதலியவை தின்றால் அவற்றின் மலம், எரித்தால்‌ சாம்பல் என்றும் இவ்வுடல் மாறுகிறது. இவ்வுடலின் தொடர்பைக் கொண்டு பிறரைத் துன்புறுத்துபவன் வீறு நடை கொண்டு நரகத்திற்குப் பயணிக்கிறான் என்பதை அறிவாயாக. 

என்றார் ஸ்ரீசுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, February 17, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 630

கலியுக வர்ணனை

ஸ்ரீசுகர் கூறலானார்..

கலியுகம் பிறந்ததும் நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகரிக்கும். மாந்தர்க்கு  அறம், உண்மை, பொறுமை, தூய்மை, கருணை, ஆயுள், பலம், நினைவாற்றல் அனைத்தும் குறையும்.

பணம் மட்டுமே‌ கடவுளாகும். நற்குலப் பிறப்பு, நன்னடத்தை, நற்குணம் ஆகியவை பணத்தை வைத்து முடிவு செய்யப்படும். பணமே ஒழுக்கத்தின் காரணியாகக் கருதப்படும். நீதி நியாயம் அனைத்தும் பணமே‌. திருமணங்கள் ஆண் பெண் உடற்கவர்ச்சியை வைத்தும், பணத்தை வைத்தும் முடிவு செய்யப்படும். நன்கு  ஏமாற்றத் தெரிந்தவனே வல்லவனாவான்.

ஒருவரின் உயர்வுக்குக் காரணமாகப் பணமே விளங்கும். புலன் இன்பங்களும் புணர்ச்சித் திறங்களுமே ப்ரதானமாகப் பேசப்படும். அந்தணன் பெயரளவில் முப்புரிநூல் அணிந்திருப்பான். வேறு எந்த ஆசாரமும் அனுஷ்டானமும் இருக்காது. ஆடை, தண்டம், கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டே  ப்ரும்மச்சாரி,  க்ருஹஸ்தன், துறவி என்று பிரித்தறிய இயலும். லஞ்சத்தில் ஊக்கம், பணம் செலவழிப்பதில் ஊதாரித்தனம், இடம் காலம் மனிதர் ஆகியவரைப் பொறுத்து பொய்களை மாற்றி மாற்றிப் பேசும் திறன், ஆகியவையே அறிஞனின் அடையாளங்களாகும்.

ஏழையாக இருப்பவன் சான்றோனாயினும் குற்றவாளியாக மதிக்கப்படுவான். திருமணங்களில் சடங்குகளுக்கு மதிப்பிருக்காது. ஆடம்பரமும், பணமும் போதுமானதாக இருக்கும். 

நன்றாக அலங்கரித்துக் கொண்டால் போதும். ஸ்நானம் நன்னீராட்டம் ஆகியவை அவசியமில்லை. 

குளம் குட்டைகள் புண்ணிய தீர்த்தங்களாகிவிடும். நதிகளையோ பெற்றோரையோ துளியும் மதியார்.

அழகு செய்து கொள்வதும், கூந்தலைப் பராமரிப்பதும் முக்கிய கடைமைகளாகிவிடும். மனவுறுதியோடு ஒரு பொய்யைப் பலமுறை கூறி மெய்யாக்குவர். குடும்பத்தைக் காப்பதே திறமை. புகழுக்காக தர்மம் பின்பற்றப்படும்.

அரசனுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. பலமுள்ளவன் எவனோ அவன் தீயவனாயினும்  அரசனாவான்.

அவனுக்கு பயந்து மக்கள் காடுகளுக்குள் ஒளிவார்கள். இலை, தழை, காய் கிழங்குகளைத் தின்று வயிறு வளர்ப்பர்.

வறட்சி பெருகும். வறுமை அதிகமாகும். வரிச்சுமை கழுத்தை நெறிக்கும். கடுங்குளிர், கடும்பனி, புயல், கடுங்கோடை, பெருவெள்ளம் ஆகியவற்றாலும் பரஸ்பரச் சண்டைகளாலும் மக்கள் அழிவர்.

நோய்கள் தொடரும். மனிதனின் அதிக பட்ச ஆயுள் இருபதிலிருந்து முப்பது வருடங்களே ஆகும். மாந்தரின் உடல் வளர்ச்சியின்றி மிகவும் சிறிதாக தேய்ந்து நோய் மிகும்.

நாத்திகமே முக்கிய நெறியாகும். மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் கள்வரே.

துறவிகளும் வானப்ரஸ்தர்களும் கூட நெறி வழுவி மனைவி மக்கள் என்று சேர்த்துக் கொள்வர்.

உறவுகள் மனைவி வீட்டார் மட்டுமே என்றாகும். தானியங்கள் சிறுத்துப் போகும். கலியுகம் முற்றுங்கால் இவர்களின் நடத்தை மிகவும் பொறுக்க முடியாததாகிப் போகும்.

அவ்வமயம் பகவான் திருவவதாரம் செய்வார்.

காரணபூதரான அவர் சாதுக்களையும் அறநெறியையும் காப்பார். 

சம்பளம் என்ற கிராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு உத்தம சீலர்ருக்கு மகனாக அவதரிப்பார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 16, 2021

ஸ்ரீமத் பாகவத‌ பழம் - 629

சுங்க வம்சத்தினர் இப்புவியை ஆண்டபின் கண்வ வம்சம் தொடரும். மிகவும் அற்ப குணம் கொண்ட இவ்வம்சத்து அரசர்கள் காமப் பித்தேறியவர்கள். அவ்வம்சத்தின் கடைசி மன்னன் தேவபூதி. அவனை அவனது மந்திரி வசுதேவன் கொன்றுவிட்டு தானே மன்னனாவான். அவனது வம்சம் பூமித்திரன், நாராயணன், ஸுசர்மா, ஆகியோர். இவர்கள் நால்வரும் கண்வாயனர்கள் என்றழைக்கப்படுவர். ஸுசர்மா மிகவும் புகழ் வாய்ந்தவன். அவனை அவனது வேலைக்காரன் பலி என்பவன் கொன்றுவிட்டுத் தான் அரசன் ஆவான். அவனுக்குப் பின் அவனது சகோதரன் க்ருஷ்ணன் என்பவன் அரசனாவான். ஸ்ரீ சாந்தகர்ணன், பௌர்ணமாஸன், லம்போதரன், சிபிலகன், மேகஸ்வாதி, ஹாலேயன், அடமானன், தலகன், புரீஷபீரு, ஸுநந்தன், சகோரன், சிவஸ்வாதி என்று அவ்வம்சம் தொடரும். சிவஸ்வாதி மிகவும் பராக்ரமசாலி. அவனது மகன்கள் கோமதி, புரீமான் ஆகியோர். புரீமானின் மகன்  சிவஸ்கந்தன். அவன் மகள் யக்ஞஸ்ரீ. அவளது மகன் விஜயன். விஜயனின் இரு மகன்கள் சந்திர விக்ஞன், லோமதி ஆகியோர்.

இந்த முப்பது அரசர்களும் நானூற்றைமப்து வருடங்கள் இப்புவியை ஆள்வர். அவப்ருதி நகரத்து மன்னர்களான ஆபீரர்கள், கர்த்தபீ வம்சத்து அரசர்கள் பதின்மர், கங்கர்கள் பதினாறுபேர், ஆகியோர் புவியை ஆள்வர். அவர்கள் அனைவரும் தீய நடத்தை உள்ளவர்கள். இவர்களுக்குப் பிறகு யவனர்கள், பதினான்கு துருக்கியர்கள், பத்து குருண்டர்கள் ஆகியோர் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது வருடங்கள் ஆட்சி செய்வர். அதன் பின்  பதினோரு மௌனர்கள் முன்னூறாண்டுகள் அரசாள்வர். 

கிலிகிலா நகரத்தில் பூதநந்தன் என்பவன் ஆட்சி செய்வான். அவனுக்குப்பின் வங்கிரி, சிசுநந்தி யசோநந்தி, ப்ரவீரகன் ஆகியோர் நூற்றாறு வருடங்கள் ஆட்சி செய்வர். 

இந்த பூதநதனுக்கு பதிமூன்று பாஹ்லீகர்கள் பிறப்பர். அதன் பின் புஷ்பமித்திரன் மன்னனாகப் போகிறான். அவன் மகன் துர்மித்திரன்.

பாஹ்லீகர்கள் ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் ஆட்சி செய்வர். ஆந்திரம்,  கோசலம், விதுர தேசம், நிஷாத தேசம், ஆகியவை அவர்களின் ஆளுகைக்குட்பட்ட ப்ரதேசங்கள்.

விஸ்வஸ்பூஜி என்பவன் மகத மன்னன். இவன் அந்தணர்களை இழிவாக நடத்துவான். எல்லா வர்ணத்தவரிடையும் கலஹம் ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் பகையை மூட்டி நெறிகள் அனைத்தையும் அழிப்பான். இதனால் அனைத்து மக்களும் தர்ம நெறிகளின்று பிறழ்ந்து வேதநெறியைப் பழித்து மறநெறியை ஏற்பர். மன்னர்களும் அனைத்து சடங்குகளையும் விட்டுவிடுவர்.

அந்தணர்கள் தம் தர்மத்தைப் பின்பற்றாததால் தேஜஸை இழப்பர். மற்றவர்கள் பொய்யும் புனை சுருட்டுமாக பேதங்களோடு அலைவர். அதன் பின் மிலேச்ச ஆதிக்கம் துவங்கும்.

இதன் பின் வரப்போகும் அனைத்து மன்னர்களும் ஒழுக்கம் பிறழ்ந்து முற்றிலுமாக மிலேச்ச நெறியைப் பின்பற்றுபவர்களே. பலனை உத்தேசித்துச் செய்யும் கர்மாக்களில் கூட தானங்களைச் சரிவர அளிக்கமாட்டார்கள். 

பெண்கள், பசுக்கள், சான்றோர் என்றெல்லாம் பாராமல் கொலை நெறி நிகழும். பிறன் மனை, பிறர்பொருள் ஆகியற்றைக் கவர்வதில் ஊக்கமுடையவர்கள். இன்ப துன்பம் நிறைந்த வாழ்வின் சாரம் புரியாமல் மிகவும் துன்பப்படுவர். அற்பகுணம் கொண்டு உலகாயத பொருள்களுக்குப் பெருமகிழ்ச்சி அடைவர். இவர்களுக்குத் திறனும் குறைவு. ஆயுளும் குறைவு. 

பரம்பரைப் பழக்கங்கள் அனைத்தையும் விட்டொழித்து காண்பதே காட்சி கொள்வதே கோலம் என்று திரிந்து வாயளவில் தர்மம் பேசுபவர்கள். தமோ குணத்தினால் குருடர்களாவார்கள். இவர்கள் அரசுகட்டிலில் அமரும்போது ஆட்சியும் அவர்களுக்குத் தகுந்தவாறே அமையும்.

ஒருவரை ஒருவர் துன்புறுத்திக்கொண்டு, சுரண்டிப் பிழைத்து முடிவில் அகால மரணங்களால் அழிவார்கள்.

Tuesday, February 9, 2021

ஸ்ரீ மத் பாகவத பழம் - 628

பன்னிரண்டாவது ஸ்கந்தம்..

பரீக்ஷித் கேட்டான்.

கண்ணன் இந்தப் பூவுலகை விட்டுக் கிளம்பிய பின்பு இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் யாவர்? இனி வரப்போகும் அரசர்கள் யார் யார்? எந்த வம்சத்தினர்? என்றான்.

ஸ்ரீசுகர் பதிலிறுக்கத் துவங்கினார். இதற்கு முன்னால் (ஒன்பதாவது ஸ்கந்தத்தில்) ஜராஸந்தனின் தந்தையான ப்ருஹத்ரதன் வம்சத்தைச் சேர்ந்த ரிபுஞ்ஜெயன் கடைசி மன்னன் என்று கூறினேன். அவனுடைய மந்திரி சுனகன் என்பவன். அவன் மன்னனைக் கொன்றுவிட்டு தன் மகனான ப்ரத்யோதனை அரசனாக்குவான். அவனது வம்சம் பாலகன், விசாகயூபன், ராஜகன், நந்திவர்தனன் ஆகியோர் வரிசையாக அரசாள்வர். இவர்களின் மொத்த ஆட்சிக் காலம் 138 வருடங்கள்.

அதன் பின் சிசுநாகன் என்பவன் அரசாள்வான். அவன் வழி வருபவர்கள் காகவர்ணன், க்ஷேமதர்மன், க்ஷேத்ரக்ஞன், விதிரஸன், அஜாதசத்ரு, தர்பகன், அஜயன், நந்திவர்தன், மஹாநந்தி ஆகியோர். சிசுநாக வம்சத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் முன்னூற்றறுபது வருடங்கள் ஆட்சி செய்வர். மஹாநந்தியின் வேறொரு மனைவிக்கு நந்தன் என்பவன் பிறப்பான். அவன் பேராற்றல் படைத்தவன். இவன் க்ஷத்ரியர்களின் அழிவிற்குக் காரணமாவான். இவன் காலம் துவங்கி வரப்போகும் மன்னர்கள் எவரும் அறநெறியைப் பின்பற்றப்போவதில்லை. 

நந்தன் மஹாபத்மன் என்றழைக்கப்படுவான். அவன் க்ஷத்ரிய குலத்தை அழிப்பதால் இரண்டாம் பரசுராமர் என்று கொண்டாடப்படுவான். இந்நிலவுலகம் முழுவதையும் ஒரே குடைக்குக் கீழ் ஆட்சி புரியப்போகிறான். 

அவனுக்கு எட்டு புதல்வர்கள் பிறப்பார்கள். அவர்கள் நூறாண்டுகள் ஆளப்போகிறார்கள். கௌடில்யர், வாத்ஸாயனர், சாணக்யர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு அந்தணர் நந்தனையும் அவன் புதல்வர்களையும் அழிக்கப்போகிறார். நந்த வம்சம் அழிந்ததும் கலியுகத்தில் மௌரியவம்சம் கோலோச்சும். சாணக்யர் என்ற அந்தணரே சந்திரகுப்தன் என்பவனை மன்னனாக்கப் போகிறார்.

அவனது மகன் அசோகவர்தனன். அவனது மகன் ஸுயசன். அவனது வம்சம், சங்கதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் ஆகியோர். இவர்கள் அனைவரும் நூற்று‌முப்பத்தேழு வருடங்கள்‌ அரசாள்வர்.

ப்ருஹத்ரதனின் சேனாதிபதி சுங்கன். அவன் மன்னனைக் கொன்றுவிட்டுத் தானே மன்னனாவான். அவனுக்குப் பின்னால் அரசாளப்போகிறவர்கள் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், ஆகியோர். 

அவனது வம்சம் வஸுமித்ரன், பத்ரகன், புளிந்தன், கோஷன், வஜ்ரமித்ரன் என்று நீள்கிறது. வஜ்ரமித்ரனின் மகன் பாகவதன். அவனது மகன் தேவபூதி. இவர்கள் அனைவரும் நூறு வருடங்களுக்கு மேல் ஆள்வார்கள். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, February 2, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 627

கண்ணனை அழைத்துச் செல்ல ப்ரும்மா, இந்திராதி தேவர்கள், மாமுனிவர்கள், ப்ரஜாபதிகள், பித்ருக்கள், சித்த, கந்தர்வ, வித்யாதர, நாக, சாரண, யக்ஷ, ராக்ஷஸ, அப்ஸரஸ்கள் அனைவரும் வந்தனர். அனைவரும் கண்ணனின் லீலைகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்தனர். அவர்களுடைய விமானங்களால் ஆகாயம் நிரம்பியது.


பின்னர் கண்ணன் ஆத்மாவைத் தன்னுள் நிலை நிறுத்தி கண்களை மூடிக்கொண்டான்.

மற்றவர்கள் விஷயத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா மட்டும் கிளம்பும். கண்ணன் தன் திவ்யமங்கள திருமேனியுடனேயே வைகுண்டம் எழுந்தருளினான்.

துந்துபி முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, சத்யம், தர்மம், கீர்த்தி, ஸ்ரீதேவி ஆகிய தேவதைகளும் பூமியை விட்டு நீங்கி பகவானைப் பின் தொடர்ந்து சென்றன.

அனைவரும் பார்க்க பகவான் கிளம்பினான். ஆனால் அவன் பர்ந்தாமத்தை அடைந்ததை ப்ரும்மா உள்பட‌ ஒருவரும் காண இயலவில்லை.

அனைவரும் பகவானின் மகிமைகளைப் பேசிக்கொண்டே தத்தம் இருப்பிடம் சென்றனர்.

ஹே! பரீக்ஷித்! ஒரு நடிகன் பல்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டாலும் அடிப்படை சுபாவத்தினின்று மாறாமல் இருப்பான். அதுபோல் பகவான் தான் செய்யும் அவதார, லீலைகளில் ஒன்றாமல், தனித்து நிற்கிறான். அனைத்துமே மாயையின் லீலை என்று உணர்வாயாக. ப்ரபஞ்சத்தைப் படைத்து தானே அதில் ப்ரவேசித்து இறுதியில் அதைத் தன்னுள் லயப்படுத்திக்கொள்கிறான்.

தனியொருவனாகவே இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிக்க வல்ல பகவான் தன் திவ்ய மங்கள திருமேனியை காப்பாற்றிவைக்க விரும்பவில்லை. ஞானிகளுக்கு முன்னுதாரணமாக இவ்வுடலின் மீது பற்றுக்கொள்ளக்கூடாது என்று நிரூபித்தான். காலையில் எழுந்ததும் இவ்வைபவத்தை நினைப்பவர் வைகுண்ட பதவியை அடைகிறார்.

தாருகன் துவாரகைக்கு வந்து உக்ரஸேனரை வணங்கி அழுதான். பின்னர் யதுகுலத்தினரின் அழிவைப் பற்றி விவரமாகக் கூறினான். அதைக் கேட்டதும் சபையில் அனைவரும் மூர்ச்சையாகி விழுந்தனர்.

தம் உறவினரின் சடலங்களைத் தேடிக்கொண்டு ஓடினார்கள். தேவகி, ரோஹிணி வசுதேவர் ஆகியோர் கண்ணனையும் பலராமனையும் காணாமல் மயக்கமடைந்தனர்.

மற்ற பெண்கள் தத்தம் கணவர்களின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து உடன்கட்டையேறினர். பலராமன், ப்ரத்யும்னன், மற்றும் பகவானின் குமாரர்களின் மனைவிகள் தத்தம் கணவரின் உடலை அணைத்துக்கொண்டு தீயில் புகுந்தனர். கண்ணனின் மனைவிகள் அனைவரும் கண்ணனை தியானம் செய்தவாறே அக்னியை மூட்டி அதில் புகுந்தனர்.

அர்ஜுனன் கண்ணனின் பிரிவால் நடுநடுங்கிப்போனான். கீதோபதேசத்தை எண்ணி அமைதியாக இருந்தான். குழந்தைகள் இல்லாத உறவினர் அனைவர்க்கும் நீர்க்கடன் செய்தான்.

அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பியதும் கண்ணனின் திருமாளிகையை மட்டும் விட்டுவிட்டு‌ மீதி இருந்த துவாரகை முழுவதையும் கடல் ஆக்ரமித்தது.

பதினோறாவது ஸ்கந்தம்‌ முற்றிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..