Sunday, May 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 478


2. காத்வா முகுந்த3 மஹதீம் குலசீலரூப
வித்3யாவயோத்3ரவிணதா4மபி4ராத்மதுல்யம் |
தீ4ரா பதிம் குலவதீ ந வ்ருணீத கன்யா
காலே‌ ந்ருஸிம்ஹ நரலோக மனோபி4ராமம் ||

தங்கள் குணவைபவங்களைக் கேட்டு தங்களையே வரித்தேன். என்று என்னைத் தவறாக எண்ணவேண்டாம். ஏனெனில் அது என் குற்றமல்ல. மனித குல திலகமே! அனைத்து ஜீவராசிகளும் தங்களைக் கண்டதும் மகிழ்ச்சி கொள்கின்றன. மனநிம்மதி பெறுகின்றன. நல்லொழுக்கம், அழகு, வித்யை, செல்வம், பெருமை, கருணை, பௌருஷம், வீரம், நல்ல குலப்பிறப்பு ஆகிய அனைத்திலும் இணையற்று விளங்கும் உங்களை திருமணப் பருவத்திலிருக்கும்‌ எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?

3. தன்மே ப4வான் க2லு வ்ருத: பதிரங்க3 ஜாயாம்
ஆத்மார்பிதஶ்ச ப4வதோத்ர விபோ4 விதே4ஹி|
மா வீரபா4க3மபி4மர்ஶது சைத்3ய ஆராத்3
கோ3மாயுவன்ம்ருக3பதேர்ப3லிம் அம்பு3ஜாக்ஷ||

என் ஆன்மாவும் உடலும் இனி தங்களுக்கே சொந்தம் ஐயனே! தாங்கள் இங்கு வந்து என்னைத் தங்கள் மனைவியாக ஏற்கவேண்டும். சிங்கத்தின் இரையை சிறுநரி தீண்டுவதா? வீரரான தம்மைச் சரணடைந்த என்னை சிசுபாலன் நெருங்கலாகுமா? இதென்ன நீதி?

கண்ணன் உடனே கிளம்பி வரவேண்டும் என்பதால் கொஞ்சம் உசுப்பேற்றிவிடுகிறாள்.

4. பூர்தேஷ்டத3த்த நியம வ்ரத தே3வ விப்ர 
கு3ர்வர்ச்சனாதி3பி4ரலம் ப4கவான் பரேஶ: |
ஆராதி3தோ யதி3 கதா3க்3ரஜ ஏத்ய பாணிம்
க்3ருஹ்ணாது மே ந த3மகோ4ஷ ஸுதாத3யோன்யே ||

நான் எனது கர்மாக்கள், தானங்கள், ஸாது சேவை, புண்ய நதிகளில் நீராடுதல், நியமங்கள், தேவர்கள், அந்தணர்கள், ஆசார்யர்கள், எளியோர், முதியவர்கள்‌ ஆகியவர்களுக்கான பணிவிடைகள், கோவில் கட்டுதல், குளம் வெட்டுதல், முதலியவற்றை தவறாமல் செய்து வந்திருக்கிறேன்‌. நான் செய்த நற்செயல்கள் அனைத்தும் பலனளிக்கும் வகையில் தாங்கள் இங்கு வந்து என் கைப்பற்றவேண்டும். வேறெவரும் என்னைத் தீண்டலாகாது.

5. ஶ்வோபா4விநி த்வமஜிதோத்3வஹனே வித3ர்பா4ன்
கு3ப்த: ஸமேத்ய ப்ருதனாபதிபி4: பரீத: |
நிர்மத்2ய சைத்3யமக3தே4ந்த்ரப3ல3ம் ப்ரஸஹ்ய 
மாம் ராக்ஷஸேன விதி4நோத்3வஹ வீர்யசுல்காம் ||

எவராலும் ஜெயிக்கமுடியாதவரே! நம் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பே நீங்கள் ரகசியமாகப் படை திரட்டிக்கொண்டு வரவேண்டும்.  சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோரின் படைகளை கதி கலங்கச் செய்து வீரத்தைக் காட்டி, ராக்ஷஸ விவாஹ முறைப்படி பகிரங்கமாகக் கவர்ந்து செல்லவேண்டும். நானும் வீரகுலத்தில் பிறந்த நங்கை என்பதால் எவருமறியாமல் ரகசியமாக நமது திருமணம் நடக்கவேண்டாம்.

(எண் வகைத் திருமண முறைகளில் ராக்ஷஸ விவாஹ முறை க்ஷத்ரியர்களுக்கு உரியதாகும்.)

6. அந்த: புராந்தரசரீம் அநிஹத்ய ப3ந்தூ4ன்
ஸ்த்வாமுத்3வஹே கத2மிதி ப்ரவதாம்யுபாயம் |
பூர்வேத்3யுரஸ்தி மஹதீ குலதே3வியாத்ரா
யஸ்யாம் ப3ஹிர்நவவதூ4ர் கிரிஜாம் உபேயாத்||

நம் திருமண தினத்தன்று என் உறவினர்களைக் கொல்ல வேண்டாம். அவர்கள் நம் எதிரிகள் அல்ல.  அதைத் தவிர்க்க நான் குலதெய்வமான கௌரியைப் பூஜை செய்ய கோவிலுக்கு வருவேன். அப்போது நீங்கள் என்னை எடுத்துச் செல்லலாம்.
(கண்ணன் வந்தாகவேண்டும் என்பதை பல விதமாக உறுதிப்‌படுத்துகிறாள்)

7. யஸ்யாங்க்4ரி பங்கஜரஜ:ஸ்நபனம் மஹாந்தோ
வாஞ்ச2த்யுமாபதிரிவாத்ம தமோபஹத்யை |
யர்ஹ்யம்பு3ஜாக்ஷ ந லபே4ய ப4வத்ப்ரஸாத3ம் |
ஜஹ்யாமஸூன் வ்ரத க்ருஶாஞ்ச2த ஜன்மபி:4 ஸ்யாத்||

தாமரைக் கண்ணனே! பதினான்கு லோகங்களில் உள்ள தேவர்களும் தங்கள் திருவடித் துகளை சிரசில் தரிக்கின்றனர். அப்படிப்பட்ட உமது அருள் எனக்குக் கிடைக்காவிடில் வ்ரதங்களால் என்னை வருத்திக்கொண்டு உயிரை விடுவேனேயன்றி வேறெவரையும் மணக்கமாட்டேன். ஒருக்கால் உம்மை மணக்க எனக்குத் தகுதி இல்லையென்று தாங்கள் எண்ணினால், நூறு ஜென்மங்களானாலும் உமது அருளையே வேண்டுவேன்.

இறைவனிடம் எப்படி ப்ரார்த்தனை செய்யவேண்டும் என்று அன்னை சொல்லித் தருகிறாள். தம் தாய் தந்தையிடம்‌ அடம் பிடிக்கும் குழந்தையைப்போல பிரார்த்தனை செய்யவேண்டும்.‌ இதைச் செய்கிறேன் அதன் பலனாக என் விருப்பத்தை நிறைவேற்று என்று கேட்கலாம்.‌ ஆனால் அது பூரண சரணாகதி ஆகாது. செய்த செயலுக்குப் பயனாய் ப்ரார்த்தனையை வைப்பதைக் காட்டிலும் உன்னை விட்டால் வேறு கதியில்லை. எனக்கு நீ அருள் செய்தே ஆகவேண்டும் என்று கேட்பது நிபந்தனையற்ற சரணாகதி.

எல்லா விதமாகவும் தன்னை ஏற்கும்படி வேண்டினாள். பின்னர் தன்னை அழைத்துப்போகும் உபாயத்தையும்‌ கூறினாள். முன்பின் தெரியாத பெண் யாரையோ திருமணம் செய்துகொள்ளட்டும். என்று எண்ணிவிட்டால்? அதற்காக எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீதான் கதி. உன்னையே அடைவேன் என்று வலியுறுத்துகிறாள்.

இவ்வளவு சொன்ன பிறகும் பேசாமல் இருப்பானா கண்ணன்.

அன்பினால்‌ அந்த சாதுவின் கரங்களைப் பற்றிக்கொண்டான். நானும் அனைத்தையும் கேள்விப்பட்டேன்‌ . இப்போதே புறப்படுவோம்.
என்று கூறிவிட்டு சாரதியான  சாத்யகியை அழைத்து தேரைத்‌ தயாராக வைக்கச் சொன்னான். 

அந்த சாதுவையும் தன் ரதத்தில் ஏற்றிக்கொண்டு விதர்ப்பதேசம் நோக்கி விரைந்தான் கண்ணன்.
சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், பலாஹம் என்ற நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தை சாத்யகி கண்ணனின் மனோவேகத்திற்கேற்ப ஓட்டினார்.

அதிதியாய் வந்த சாதுவுடன் இரவு வேளையில் ரதத்தில் கிளம்பிய கண்ணனைப் பார்த்தான் பலராமன். பணியாள்கள் மூலம் விவரம் அறிந்து ஒரு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு தானும் கண்ணனைத் தொடர்ந்து விதர்ப்பம் நோக்கிச் சென்றான்.

அவர்கள் அனைவரும் ஒரே‌ இரவில் விதர்ப்பத்தை அடைந்தனர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, May 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 477

சாதுவிடமிருந்து கடிதத்தைக் கைகளில் வாங்கவில்லை கேசவன். 
ஐயன்மீர்! எனக்கென்று ரகசியங்கள் ஏதுமில்லை. இக்கடிதத்தை தாங்களே‌ படியுங்கள் என்றான்.

தன்னை விரும்பும் பெண் கொடுத்த கடிதத்தை இன்னொருவரை விட்டுப் படிக்கச் சொல்வதா? என்ன இது? என்று தோன்றுகிறதா?

கண்ணனே உலகின் தந்தை. ஜகன்மாதாவான மஹாலக்ஷ்மியே ருக்மிணியாக அவதாரம் செய்திருக்கிறாள்.

ஜகன்மாதாவிற்கும் ஜகத்பிதாவிற்குமான சம்பாஷணைகள் அனைத்தும் உலகின் நன்மைக்காகவே. ருக்மிணி தேவி தன் குழந்தைகளை முன்னிட்டுக்கொண்டு தான் சரணாகதி செய்கிறாள். ஒவ்வொரு ஜீவனின் சார்பாகவும் உன்னைச் சரணடைகிறேன் என்று நமக்கும் சரணாகதியை சொல்லித் தருகிறாள்.

சுற்றியிருக்கும் அனைவரும் எதிரிகள். அசந்தால் சிசுபாலனுடன் திருமணம் நடந்துவிடும். உதவுவார் எவருமின்றி நிற்கும்போது அபலையாகத் தவிக்கும்போது தேடி வந்தவரை குருவாக வணங்கி சரணாகதி செய்கிறாள்.

ஜீவன் செய்யும் சரணாகதியை அப்படியே கொண்டுபோய் இறைவனிடம் சேர்த்து, இறைவனையும்‌ ஜீவனையும் இணைத்துவைப்பதே குருவின் தலையாய பணி. சூழ்நிலை பற்றிக் கவலை கொள்ளாமல், பயப்படாமல் இறைவனின் சரணத்தை நம்பினால் குருவின் மூலமாக இறைவன் நல்வழி காட்டுவான் என்பதே சாரம்.

இப்போது மூன்றாவது நபராக இல்லாமல் ருக்மிணியின் 'பா'வத்திலேயே கடிதத்தைப் படிக்கிறார் சாது.

ஏழு ஸ்லோகங்களைக் கொண்டது இக்கடிதம். திருமணத்தில் ஸப்தபதி என்பது மிகவும் முக்கியமானது. அதைப்போல் இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இந்த ஏழு ஸ்லோகங்கள் முக்கியமானவை.

ஒருவருடன் ஏழு அடிகள் ஒன்றாக நடந்தால் அவருடன் நம் வாழ்வு எவ்விதத்திலேனும் பிணைக்கப்படுகிறது‌. அதனாலேயே சாதுக்கள் நடக்கும்போது கூடவே அவரது சீடர்கள் நடந்து செல்வதைப் பார்க்கிறோம்.
இந்த ஏழு அடிகள் கொண்ட ஸ்லோகத்தினால் ஜீவனின் வாழ்வு பகவானுடன் பிணைக்கப்படும்.

1. ச்ருத்வா கு3ணான் பு4வனஸுந்தரா ச்ருண்வதாம் தே
நிர்விச்ய கர்ண விவரைர் ஹரதோங்க3 தாபம்‌|
ரூபம்‌த்ருஶாம் த்ருஶிமதாம் அகிலார்த2 லாப4ம்
த்வய்யச்சுதாவிஶதி சித்தமபத்ரபம் மே||

புவனசுந்தரா! என்று அழைக்கிறாள் தாயார். புவனம் அனைத்திலும் அழகனே! பார்க்காமலே எப்படி அழகன் என்று சொல்லுவாள். 
கண்ணில் இதுவரை கண்டே அறியாத ஒரு ஆடவனுக்கு கடிதம் எழுதுகிறேன் என்று தவறாக எண்ணவேண்டாம்.

உன் கல்யாண  குணங்களையும் எண்ணற்ற லீலைகளையும் சாதுக்கள்‌ மூலம் தினம் தினம் கேட்டு கேட்டு உன் திருவுருவம் என் இதயத்தில் பதிந்துவிட்டது. சாது ரக்ஷகனாக விளங்குபவர்களின் ஹ்ருதயம் அழகாகத்தான் இருக்கும். உள்ளம் அழகியவர்களின் முகம்? அதுவே அழகிற்சிறந்த முகமாம். மேலும் ச்ரவண பக்தியையே தாயார் சிறப்பித்துக் கூறுகிறாள். பக்த சக்ரவர்த்தியான ப்ரஹலாதன் நவ வித பக்தி சாதனங்களைக் கூறுங்கால் 

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: 
ஸ்மரணம் பாத சேவனம்
 அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் 
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

 என்கிறான். முதல் படி ச்ரவண பக்தி. அதாவது இறைவனின் புகழை, லீலைகளை, குணங்களைக் கேட்பது. காது வழியாகத்தான் இறைவன் இதயம் நுழைகிறான்.
ஒவ்வொரு புலனுக்கும் மூடி இருக்கிறது. கண், வாக்கு, நாக்கு, இவைகளை மூடிக்கொள்ளலாம். ஆனால், காது? எப்படியாவது தற்செயலாகவாவது ஒருவனின் காது வழியாக இறை நாமம் புகுந்துவிட்டதென்றால் அது நெஞ்சில் படிந்த நெருப்பாக அவனது அத்தனை பாவங்களையும் பொசுக்கவல்லது. ஜீவனின் மேலுள்ள அளவற்ற கருணையினாலேயே காதுகளுக்கு மூடி வைக்கவில்லை இறைவன்.

புவன சுந்தரனே! உன் அழியாப் புகழும் குணங்களும் செவி வழியே இதயம் நுழைந்து பிறவித் துன்பத்தைக் களையவல்லவை. தங்களின் மேனியழகு காண்பவர்க்கு நான்கு புருஷார்த்தங்களையும் வழங்கவல்லது. இவற்றைக் கேட்டு என் மனம் காந்த முள் எப்போதும் வடதிசை காட்டுவதுபோல்  தங்களையே எப்போதும் நாடுகிறது. தாங்கள் நம்பியவரைக் கைவிடாத அச்சுதரல்லவா? எனைக் காத்தருள்வீர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, May 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 476

ருக்மிணி தேவி என்ன செய்வதென்று தெரியாமல் துயரத்தில் ஆழ்ந்திருந்த சமயம்..

நாதா ஹரே 
ஜகந்நாதா ஹரே
ப்ராணநாதா ஹரே

உஞ்சவ்ருத்தி எடுத்துக்கொண்டு 
ஸுஸ்வரத்தில் பாடிக்கொண்டு ஒரு சாது வீதி வழியாகச் சென்றார். தலையில் நாம சூத்திரம். தோளில் ஒரு பித்தளை சொம்பு, ஒரு கையில் சிப்ளா கட்டை. ஒரு கையால் தம்பூராவை மீட்டிக்கொண்டு பாடிக்கொண்டு வந்தார்.

மாடத்தில் இருந்த ருக்மிணிக்கு காதில் தேன் பாய்ந்தாற்போலிருந்தது. இறைவனது திருநாமம் கேட்ட மாத்திரத்திலேயே உள்ளத்திலுள்ள துக்கத்தைப் போக்க வல்லதன்றோ..

ஓடோடிச் சென்று அவரது திருப்பாதங்களில் விழுந்தாள். உள்ளே அழைத்து அவருக்கு மரியாதைகள் செய்து பாதபூஜை செய்து தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு தோழிகளுக்கும் தெளித்தாள்.

சாதுக்கள் ஒருவரைப் பார்த்ததுமே ஹ்ருதயத்தை அறிய வல்லவர்கள். இருப்பினும் கேட்டார்.

குழந்தாய்! தாமரை போன்ற உன் முகம் வாடியிருக்கிறதே. உனக்கு ஏதாவது மனக்கஷ்டம் உள்ளதா? நீ விரும்பினால் சொல்லலாம்‌ என்றார்.

ருக்மிணி தோழிகளைப் பார்க்க, ஒருத்தி அப்போதைய நிலைமையைச் சொன்னாள்.

உடனே அவர், நான் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறேன். நீ கலங்காதே அம்மா. நீ கண்ணனுக்கு மிகவும் பொருத்தமானவள். பகவான் கண்ணனின் திருமணத்தில் எனக்கும் ஒரு கைங்கர்யம் கிடைக்கட்டும். நான் இப்போதே சென்று கண்ணனிடம் தெரிவித்து அவரை அழைத்துவருகிறேன்.

அதைக் கேட்டு ருக்மிணி மிகவும் மகிழ்ந்தாலும், காலம் குறுகியிருப்பதால் கவலை கொண்டாள்.
 
என் துன்பத்தில் உதவ தெய்வமே உங்களை அனுப்பியதுபோல் உணர்கிறேன். ஆனால் நான்கே நாள்கள்தான் உள்ளன. நீங்கள் அதற்குள் எப்படி துவாரகை வரை சென்று திரும்ப இயலும்? என்றாள்.

அவர் சிரித்தார்.
கண்ணைத் துடைத்துக்கொள் தேவி. உன் துன்பம் அகன்றது. எனக்கு யோகசக்தி உண்டு. பகவன் நாமம் பாடி உஞ்சவ்ருத்தி எடுத்து ஜீவனம் செய்வதே என் விருப்பமாகையால், சித்திகளைப் பயன்படுத்துவதில்லை. இப்போது உனக்கும் பகவானுக்கும் திருமணம் நடக்க என் யோகசக்தி பயன்படுமானால் அதை விட வேறென்ன பேறு இருக்கிறது? நான் இன்று மாலைக்குள் துவாரகையை அடைந்துவிடுவேன். நீ அனுப்பி நான் கண்ணனைக் காணச் செல்வதன் அடையாளமாக ஒரு கடிதம்‌ எழுதிக் கொடு. அதைக் கொண்டுபோய் இன்றே கமலக்கண்ணனிடம் சேர்ப்பேன். என்றார்.

துள்ளிக் குதித்தாள் ருக்மிணி. நாணத்தில்‌ முகம் சிவக்க, ஓடிப்போய் ஒரு ஓலையில் கடிதம் எழுதிக் கொண்டுவந்தாள்.

அதைக் கையில் வாங்கிய அந்த அந்தணர், ருக்மிணி பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன் யோக சக்தியால் வானில் கிளம்பிச் சென்றார்.

சொன்னபடி அன்று மாலையே துவாரகையை அடைந்தார். கண்ணனின் திருமாளிகை அந்தணர்களுக்கு எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். எந்தக் காவலரும் தடுக்கமாட்டர்கள். நேராக கண்ணன் இருக்குமிடம் சென்றார்.

கண்ணன் அவரைக் கண்டதும் வணங்கி வரவேற்று பாதபூஜை செய்தான். அவர் உணவேற்றதும், அழகிய ஆசனத்தில் அமரச் செய்து, அவர் வந்த காரணத்தை விசாரித்தான்.

அவர் விதர்ப்ப தேசத்து இளவரசியான ருக்மிணியைப் பற்றி எடுத்துரைத்து அவள் உங்களை மணாளனாக வரித்திருக்கிறாள். இந்தக் கடிதத்தை உங்களுக்காகக் கொடுத்தனுப்பியிருக்கிறாள் என்று எடுத்துக் கொடுத்தார்.

ராமாயணத்தில் சிவாம்சமாக ஹனுமான் அவதரித்து ராமனும் சீதையும் சேர்வதற்குத் தூது சென்றார். இருவரையும் இணைத்து வைத்ததால் பெரும்புகழ் பெற்றார். கருடன் தனக்கும் அவ்வாறு ஒரு கைங்கர்யம் வேண்டுமென்று மிகவும்‌ ஆசைப்பட்டார். க்ருஷ்ணாவதாரத்தில் வாய்ப்பு கிடைத்ததும் பயன்படுத்திக் கொண்டார். கருடனே உஞ்சவ்ருத்தி எடுப்பவராக வந்தார் என்று பெரியோர் போற்றுகின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, May 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 475

பீஷ்மகன் ருக்மிணியின் மனத்தை அறிந்தார். கண்ணனுக்கே ருக்மிணியைத் திருமணம் செய்துகொடுக்கத் தீர்மானித்தார்.

அக்காலத்து அரசர்கள் தன்னுடைய குடும்ப விஷயம் என்றாலும், அது நாட்டின் வெளியுறவுகளைப் பாதிக்கும் என்பதால் சபையில் அனுமதி பெற்ற பின்பே செய்வது வழக்கம்.

தசரதர் தன் மூத்த மகனான ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார். அரசரின் மூத்த மகன் அடுத்த அரசன் என்பது நியதி. மேலும், ராமன் நாட்டு மக்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவன். இருப்பினும் தசரதர் தானே முடிவெடுக்காமல், சபையோரை‌ அழைத்து ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது பற்றி கருத்து கேட்கிறார்.

அதுபோலவே பீஷ்மகனும் ருக்மிணிக்கு க்ருஷ்ணனை விவாஹம்‌ செய்து கொடுப்பது பற்றி சபையோரிடம் கருத்து கேட்டார் பீஷ்மகன்.

அவையோர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆமோதித்தனர். ஆனால், பீஷ்மகரின் மகன்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

மூத்தவனான் ருக்மி 

ஒரு மாடு மேய்க்கும் இடையனுக்குப் போய் விதர்ப்ப இளவரசியைக் கொடுப்பார்களா? உங்கள் புத்தி பேதலித்துவிட்டதா? பாடசாலைக்கே செல்லாதவன். படிப்பறிவற்றவன். நானும் படிக்கிறேன் என்று சில நாள்கள் பாடசாலையில் பொழுதைப் போக்கிவிட்டு வந்தவன். நாங்கள் பல வருடங்கள்‌ முனைந்து படித்த பாடங்களில் சில நாள்களிலேயே ஒருவன் படிப்பான் என்றான் அவன் எந்த அழகில் படித்திருப்பான். என் நண்பன் ஜராசந்தனிடம் தோற்று ஓடியவன். திருடன். மாயாவி. என்றெல்லாம் ஏசினான். பின்னர்,  என் நண்பன் சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கு ருக்மிணியைக் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறேன்‌.

விதர்ப்ப தேசத்து இளவரசி என் தங்கை ருக்மிணிக்கும் சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கும் இன்றிலிருந்து நான்காம் நாளில் திருமணம் என்று நான் முடிவு செய்துவிட்டேன். மக்களுக்கு அறிவியுங்கள். எல்லா ‌நாட்டு அரசர்களுக்கும் திருமணத்திற்கான அழைப்போலையை இன்றே அனுப்புவேன். என்று கத்தினான்.

பரம சாதுவான பீஷ்மகர் துஷ்டனான ருக்மியை எதிர்த்துப் பேச இயலாமல் சுருங்கிப்போனார். மறுத்தால் தந்தையென்றும் பாராமல் சிறையில் தள்ளுவான் என்று அறிந்திருந்தார்.

அதற்குள் அந்தப்புரத்திற்குச் செய்தி பறந்தது.

துளசி பூஜை செய்துகொண்டிருந்த ருக்மிணி செய்தியைக் கேட்டதும் அப்படியே மயங்கி விழுந்தாள்.

சற்று நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்து எழுந்த ருக்மிணி, அழுதாள், துடித்தாள். கண்ணனை மனத்தில் வரித்த பின்பு வேறொருவனை எப்படி மணப்பேன்? சிங்கத்தின் இரையை சிறுநரி முகரலாகுமா? குணக்கடலான கண்ணன் எங்கே? துஷ்டனான சிசுபாலன் எங்கே? சிசுபாலனுக்கும் தனக்கும் திருமணம் என்று பேசுவதைக் கேட்டாலே அவள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதுபோலிருந்தது.

தந்தையான பீஷ்மகர் செய்வதறியாது தவித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, May 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 474

ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திடம் பத்தாவது ஸ்கந்தம் துவங்கும்போது ஒரு தேர்வு வைத்தார். மிகச் சுருக்கமாகக் கண்ணன் கதையைக் கூறிவிட்டு அவன் என்ன சொல்கிறான் என்று பார்த்தார்.

பரீக்ஷித்தோ, கண்ணன் கதையைக் கேட்கவே தான் பொறுமையாக அமர்ந்திருப்பதாகவும், பசி தாகம் முதலியவை தனக்கு இல்லை என்றும், மேலும் தான் அன்னை வயிற்றிலிருக்கும்போது  கண்ணனால் காப்பாற்றப்பட்டவன் என்பதால் கண்ணனின் கதையை விரிவாகக் கேட்பது தன் பிறப்புரிமை என்றும் கூறி விரிவாகச் சொல்லும்படி கேட்டான். அவனது ஆர்வத்தைச் சோதிக்கவே ஸ்ரீ சுகர் அவ்வாறு‌ செய்தார். 

இப்போதும், 

குருவம்சக் கொழுந்தே! விதர்ப்ப தேசத்து ராஜகுமாரி ருக்மிணியைக் கண்ணன் தன்னை ‌எதிர்த்த அத்தனை அரசர்களையும் வென்று மணந்துகொண்டான்

என்று ஒரே வரியில் முடித்து விட்டார். பின்னர் பரீக்ஷித் என்ன சொல்கிறான் என்று அவன் முகத்தைப் பார்த்தார்.

பரீக்ஷித் மிகவும் கவனமாகக் கதை கேட்பவன். ஆதலால், சட்டென்று கேட்டான்.

மஹரிஷீ! பீஷ்மகரின் மகள் ருக்மிணி தேவி அழகே‌ உருவானவர் என்றும் அவரை கண்ணன் ராக்ஷஸமுறைப்படி கவர்ந்து வந்து திருமணம் செய்துகொண்டார் எனவும் முன்பே கேள்வியுற்றிருக்கிறேன். ஜராசந்தன், சால்வன் போன்ற பல்வேறு துஷ்ட அரசர்கள் சூழ்ந்திருக்கும்போது எவ்வாறு ருக்மிணியை அபகரித்து வந்தார்? 

கண்ணனின் கதை இனிமையானது. கேட்க கேட்க தெவிட்டாதது. ஒவ்வொரு கணமும்  புதிதாகத் தோன்றுவது. அதைக் கேட்டு போதும் என்ற எண்ணம் வருமா?

என்றான்.

மிகவும் மகிழ்ச்சியடைந்தார் ஸ்ரீ சுகர். மேலே சொல்லத் துவங்கினார்.

விதர்ப்ப நாட்டு அரசர் பீஷ்மகர். அவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி என்பவர் மகன்கள். ருக்மிணி என்பவள் இவர்கள் ஐவரின் தங்கை. ருக்ம என்றால் தங்கம் என்று பொருள்.

உண்மையில் பெயருக்கேற்றபடி தங்கத்தாரகையாக விளங்கியவள் ருக்மிணி ஒருத்திதான். மீதி ஐவரும் தகரம் போன்றவர்கள். கண் தெரியாமல் தடுமாறுபவர்க்கு கண்ணாயிரம் என்றும், பரம ஏழையாக இருப்பவர்க்கு கோடீஸ்வரன் என்றும் பெயரிடுவது போல மகா மோசமான குணங்களுடைய ஐந்து மகன்களுக்கும் தங்கத்தின் பெயர் அமைந்துவிட்டது.

பீஷ்மகர் பரம சாது. அடிக்கடி அரண்மனையில் சத்சங்கங்களும், சாதுக்களுக்கு ஆராதனைகளும் ஏற்பாடு செய்வார். ருக்மிணி சிறு வயது முதலே மிகவும் ஆர்வமுடன் சாது சேவை செய்வதில்‌ ஈடுபட்டாள். 

கண்ணனின் லீலைகள், பெருமைகள் ஆகியவையும் அவர்களால் விவரிக்கப்படும். பீஷ்மகரின் அரண்மனைக்கு நாரதரும் அடிக்கடி விஜயம்‌ செய்வார். அவரும் கண்ணனைப் பற்றிய கதைகளை அவ்வப்போது வந்து சுடச்சுட சொல்லிவிட்டுப் போவார்.

கண்ணனின் ரூப லாவண்யம், லீலைகள், கருணை, பெருமைகள், ஆகியவற்றைக் கேட்டு கேட்டு ருக்மிணி கண்ணனையே மணக்கத் தீர்மானம் கொண்டாள்.

நாரதர் கண்ணனிடமும் அடிக்கடி ருக்மிணியைப் பற்றிக் கூறிய வண்ணம் இருந்தார். அதனால் கண்ணனுக்கும் ருக்மிணி தனக்கேற்றவள் என்ற எண்ணம் வளர்ந்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, May 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 473

கடலுக்குள் அமைந்திருக்கும் புதிய நகரான துவாரகையின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பலராமனும் மதுராவின் கோட்டைவாசலுக்கு வந்துவிட்டான். 

ஜராசந்தன் வேகமாகத் தாக்குதலைத் துவங்கினான். கண்ணனும் பலராமனும் பயந்தவர்கள் போல் கையிலிருந்த செல்வங்களைக்‌ கீழே போட்டுவிட்டு ஓடத்துவங்கினார்கள்.

அவர்கள் ஓடுவதைப் பார்த்த ஜராசந்தன் பதினேழு முறை தான் தோற்று நிராயுதபாணியாக நின்றதை மறந்தான். இப்போது அவர்கள் தன்னைக் கண்டு பயந்து ஓடுவதாக சிரித்தான். தேரில் அவர்களைத் துரத்தினான்.

வெகுதூரம் ஓடிய கண்ணனும்‌ பலராமனும் எப்போதும் மழை பெய்துகொண்டிருக்கும் பிரவர்ஷணம் என்ற மலையின் மீது ஏறினர்.

துரத்திக்கொண்டு வந்த ஜராசந்தன் எவ்வளவு தேடியும் அவர்களைக் காணவில்லை. 
வெகுநேரம் தேடி ஓய்ந்துபோனான். பின்னர் மலையைச் சுற்றித் தீமூட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

அவன் சென்றதும் ஒரு யோஜனை உயரமுள்ள அம்மலையிலிருஎது கண்ணனும் பலராமனும் கீழே குதித்தனர். (ஒரு யோஜனை என்பது எட்டு மைல்கள்)
பின்னர் யார் கண்களிலும் படாமல் துவாரகையை அடைந்துவிட்டனர்.

ஜராசந்தன் கண்ணன் தனக்கு பயந்து ஓடி ஒளிந்து இறந்து விட்டதாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தான்.

துவாரகையில் மிகவும் மகிழ்ச்சியாக காலம் ஓடிற்று. ஆனர்த்த தேசத்து மன்னர் ரைவதன் என்பவர் ப்ரும்மாவின் ஆலோசனைப்படி தன் மகள் ரேவதியை பலராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இது பற்றி விரிவாக ஒன்பதாவது ஸ்கந்தத்தில் பார்த்தோம்.  நினைவுகூர்வதற்காக அப்பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீ மத் பாகவத பழம் - 273
- ஹரிப்ரியா

சர்யாதிக்கு சுகன்யாவைத் தவிர, உத்தானபர்ஹிஸ், ஆனர்த்தன், பூரிஷேணன் என்று மூன்று மகன்கள் இருந்ததைப் பார்த்தோம். இவர்களில் ஆனர்த்தனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்தான்.

இந்த ரேவதன் என்பவன் கடலின் நடுவில் குசஸ்தலி என்ற நகரத்தை நிர்மாணம் செய்தான். அதிலிருந்து கொண்டே ஆனர்த்தம் முதலான நாடுகளை ஆண்டு வந்தான்.

அவனுக்கு மிகவும் சிறந்து விளங்கக்கூடிய நூறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன் ககுத்மீ. இவன் ரைவதன் என்றும் அழைக்கப் படுகிறாரன்.
அவனுடைய மகள் ரேவதி என்பவள்.
அவர்கள் அனைவருமே சான்றோர்களாக இருந்தமையால் எளிதில் ப்ரும்மலோகம் வரை செல்ல முடிந்தது.

ரேவதிக்கு திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக ஆலோசனை வேண்டி ககுத்மீ, ரேவதியையும் அழைத்துக்கொண்டு ப்ரும்மலோகம் சென்றான். 
உத்தம ஸாதுக்களுக்கு ப்ரும்மலோகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இவன் சென்ற சமயம் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஸரஸ்வதி வீணையை மீட்டிக்கொண்டு பாட, மற்ற அப்ஸரஸ்களும் தேவர்களு‌ம் நடனமாடிக்கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் நடுவே சென்று ப்ரும்மாவைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்த ககுத்மீ அங்கேயே ஓரமாகக் காத்திருந்தான். 
சிறிது நேரத்தில் நிகழ்ச்சி முடிந்ததும், ப்ரும்மதேவரை வணங்கித் தான் வந்த விஷயத்தைக்‌ கூறினான்.

தன் மகளுக்கு திருமணத்திற்குத் தகுந்த வரனைக் காட்டும்படி வேண்டி நிற்கும் ககுத்மீயைப் பார்த்து ப்ரும்மா திகைத்துப் போனார். பின்னர் சிரித்துக்கொண்டே கூறலானார்.

ககுத்மீ! நீ உன் மகளுக்கு வரனாக யார் யாரையெல்லாம் பற்றி யோசித்து வைத்திருந்தாயோ, அவர்கள் ஒருவரும் இப்போது பூமியில் இல்லை. அவர்களது பேரப்பிள்ளைகள் கூட இல்லை. பூமிக்கும், ப்ரும்மலோகத்திற்குமான காலக் கணக்குகள் வெவ்வேறானவை. 
நீ இங்கே சற்று நேரம் தாமதிப்பதற்குள், பூமியில் இருபத்தேழு சதுர்யுக காலம் முடிந்துவிட்டது. 

(பூமியில் ஒரு வருடம் என்பது ப்ரும்ம லோகத்தில் ஒரு நிமிடம் என்பதாக கணக்கு. கிருஷ்ணாவதாரத்திலும் ப்ரும்ம மோஹன லீலையின்போது ப்ரும்மா ஒரு  தாமதிப்பதற்குள் பூமியில் ஒரு வருடம் ஓடிவிட்டது என்பதாக அறிகிறோம். காலக் கணக்குகள் மாறுபடும் விஷயத்தை முசுகுந்தன், மற்றும் கட்வாங்கர் கதைகளிலும் அறியலாம். மூன்றாவது ஸ்கந்தத்தில் காலக் கணக்கு ஏற்கனவே விரிவாகக் கூறப்பட்டது)

உன்னுடைய சுற்றத்தார் கூட எவருமே தற்போது பூமியில்‌ இல்லை.

நீ ஒன்று செய்யலாம். இப்போது பகவானின் அம்சமாக பெரும் பலவானான பலராமன் பூமியில் அவதாரம் செய்திருக்கிறார்.

உன் மகளுக்கு அவர்தான் பொருத்தமானவர். பூலோகத்து மனிதர்கள் யுகாந்தர மனிதர்கள் போல் சக்தி படைத்தவர்கள் அல்லர். தற்போதுள்ளவர்கள் பலம், உயரம், அறிவு அனைத்திலும் மிகவும்‌ குறைந்தவர்கள். உன் மகளுக்கேற்ற புருஷனாக, பகவானின் அம்சமான பலராமனே தகுதியானவர்.
என்றார். (தர்ம புத்திரரும் நாட்டில் ஆங்காங்கே கலகங்கள் ஏற்படுவதையும், மக்கள் மனத்தில் அமைதியில்லை என்பதையும், அடுத்து வரும் சந்ததியினர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதையும் பார்த்து, கலியுகம் வந்துவிட்டதென்று அறிகிறார்.)

ககுத்மீ, அப்படியே செய்கிறேன் என்று கூறி ப்ரும்மாவிடமிருந்து விடைபெற்று தன் நகரம் வந்தான். அங்கே அவனது குடும்பம், மக்கள், நாடு எதுவுமே இல்லை. அடையாளம் தெரியாத மனிதர்கள் வசித்து வந்தனர். அவனது வம்சத்தவர்கள் வேறெங்கோ புலம் பெயர்ந்திருந்தார்கள். ககுத்மீக்கு அப்போதைய மனிதர்களைக் கண்டால் வேடிக்கையாக இருந்தது.

மக்களுக்கும் இவனைப் பார்த்தால் வேற்று கிரகவாசிபோல் இருந்தது. இனி அங்கிருப்பது சரியல்ல என்றுணர்ந்த ககுத்மீ, துவாரகைக்குச் சென்று, வசுதேவரிடமும், தேவகியிடமும் அனுமதி பெற்று ரேவதியை பலராமனுக்கு நிச்சயம் செய்தான்.

ரேவதி பல யுகங்களுக்கு முன் பிறந்த பெண்ணானதால், இரு மடங்கு உயரமுடையவளாய் இருந்தாள்.
அவ்வாறு இருந்தால், கேலிக்குரியதாகிவிடும். மேலும் அவளுக்கும் தன்னையொத்த எவரும் இல்லாமல் சிரமம் ஏற்படும் என்பதால், பலராமன் தன் கலப்பையால் அவளின் தலையில் அழுத்தி, அவளைத் தனக்கேற்ற உயரமுள்ள பெண்ணாக, சம காலத்து மனிதர்களைப் போல் ஆக்கிக்கொண்டார்.

அவர்களின் திருமணம் பெற்றோரும், மக்களும் வாழ்த்திக் கொண்டாட கோலாஹலமாக இனிதே நடந்தேறியது.

# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 472

முசுகுந்தர் கண்ணனை வணங்கினார்.

பரமனே! தங்கள் மாயையில் மயங்கி அனைத்துலகும் இன்பத்தில் நாட்டம் கொள்கின்றன. துன்பத்தின் வாயிலான சிற்றின்பங்களில் மூழ்குகின்றன.
அவற்றில் பற்றுக்கொள்பவர்கள் ஏமாறுகிறார்கள்.

இந்தக் கர்ம பூமியில் மனிதப்பிறவி கிடைப்பது துர்லபமாகும். இப்பிறவியையும் உமது திருவடியை வணங்காமல் வீணடிப்பவர்கள் புல் மேயச்சென்று பாழுங்கிணற்றில் விழுந்த பசுவைப் போன்றவர்கள்.

அரசனாயிருந்ததால் மிகவும் மதம்‌ கொண்டிருந்தேன். இவ்வுடலையே ஆத்மா என்றெண்ணி மனைவி, மக்கள், பூமி என்று உழன்று என் காலம் முழுதும் பயனற்றுப் போனது.

பெருஞ்சேனையுடன் அகந்தை கொண்டு புவியைச் சுற்றி வந்தேன். இம்மாதிரி இன்பத்தில்‌ உழல்பவர்களைக் காலதேவனான நீங்கள் பாம்பு எலியைப் பிடிப்பதுபோல் பற்றுகிறீர்கள்.

புல்லாய்ப் புழுவாய், மிருகமாய் ஆயிரமாயிரம் பிறவிகளுக்குப் பின் மனிதப் பிறவியடைந்தும் முக்திக்கு வழி தேடாதவன் தனக்குத் தானே பகைவனாகிறான். 

எதிர்ப்பவரே இன்றி நாற்றிசையிலும் வென்று, அனைவராலும் வணங்கப்பெற்று மமதை கொண்டு சுற்றினேன். ஆனால் பெண்களின் வீடுகளுக்குப் போனால் அவர்களுக்கு செல்லப் பிராணிபோல் இருந்தேன்.

இவையனைத்தும் வீண்செயலென்று உணர்ந்து பக்தி செய்தலே முக்திக்கு வழி. முக்தியடையும் காலம் வரும்போதுதான் ஒருவனுக்கு சான்றோர்களின் நல்லிணக்கம் வாய்க்கிறது. 

தங்களை முழுமனத்துடன் போற்றுபவர்க்கு அனைத்து ஆசைகளும் விடுபடும்‌. தங்கள் கருணையால் என் மனத்தில் ஆசைகள் அற்றுப்போயின.
எனக்குத் தமது திருவடி சேவை வேண்டும். அதைத் தவிர வேறு வரம் வேண்டாம். தங்களையே சரணடைந்தேன். என்னைக் காத்தருளுங்கள். என்றார்.

கண்ணன் அவரைப் பார்த்து,

பார் முழுதும் ஒரே குடையின் கீழ் ஆண்ட பேரரசர் தாங்கள். தூய எண்ணம்‌கொண்டவர். உமக்கு வரமருளுவதாக ஆசை காட்டியும் நீங்கள் மயங்கவில்லை. தங்களது மன உறுதி போற்றத் தக்கது. என்னிடம் பக்தி கொண்ட உங்கள் மனம் இனி உலகியல் இன்பங்களில் செல்லாது.

 பக்தியில்லாமல் எந்த சாதனை செய்தாலும் மனம் அடங்காது. அது வாஸனைகளைக் கிளப்பிவிடும். 

நீங்கள் என்னையே தியானம் செய்துகொண்டு இப்பூவுலகில் விருப்பம்போல் சுற்றிவாருங்கள். 

நீங்கள் அறநெறியில் நின்றாலும் வேட்டை என்ற பெயரில் ஏராளமான விலங்குகளை வதைத்தீர். அவ்வினை தீர என்னை நோக்கித் தவமிருங்கள். அடுத்த பிறவியில் அத்தனை உயிரினங்களிடமும் அன்பு கொண்டவராய்ப் பிறந்து என்னையே அடைவீர். என்றான்.

அசுரர்களுக்கெல்லாம் முக்தியளித்த கண்ணன், இவரை அடுத்த பிறவியில் அடையலாம் என்கிறான். ஸ்வந்தந்த்ரனான  அவனது திருவுளத்தை யாரே அறிவர்? முசுகுந்தரால் தவம் செய்ய இயலும். எனவே அவ்வாறு வரச் சொல்கிறான். எந்த சாதனையும் செய்ய இயலாதவர்க்கு தன் கருணையின் பலத்தால் அப்பிறவியிலேயே முக்தியளித்துவிடுகிறான். 

முசுகுந்தர் குகையிலிருந்து வெளியேறினார். மரங்கள்,மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் சிறியதாக இருப்பதால் கலியுகம் வரப்போகிறதென்று உணர்ந்து வடக்கே சென்று கந்தமாதன மலையை அடைந்தார்.

கண்ணனிடமே உள்ளத்தைப் பதித்தார். இன்ப துன்பங்கள் ஆகிய இரட்டைகளைப் பொறுத்துக்கொண்டு தவம் செய்யத் துவங்கினார்.

கண்ணன் குகையிலிருந்து கிளம்பி மதுராவின் கோட்டை வாயிலை அடைந்தான். காலயவனனின் மிலேச்சப் படையை அழித்து, அவர்களது செல்வத்தைத் துவாரகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்பும் சமயம் ஜராசந்தன் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி படையுடன் யுத்தத்திற்கு வந்து சேர்ந்தான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, May 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 471

முசுகுந்தரின் முன்னால் வந்து நின்றான் கண்ணன். நீருண்ட  மேகம் போல் கருநீலத் திருமேனி. வரிவரியாய் அசையும் மஞ்சள் பட்டாடை, மார்பில் ஸ்ரீ வத்ஸம், ஒளிமிக்க கௌஸ்துபமணி, நான்கு திருக்கரங்கள், வண்டுகள் சூழ் வைஜயந்தி மாலை, நிலவைப்போல் ஒளிவீசும் திருமுகம், காதுகளில் அசையும் மகரகுண்டலங்கள், கண்ணாடி போன்ற கன்னங்களில் அவற்றின் ப்ரதிபலிப்பு, அனைத்துலகத்தோரும் காணத் துடிக்கும்‌ பேரழகு. கொவ்வைப்பழ இதழில் குமிழ் சிரிப்பு, இளமை ததும்பும் வயது, கம்பீரமான நடை, நிமிர்ந்த தோற்றம். அள்ளிக்கொள்ளத் தூண்டும் 
அழகுருவைக் கண்ணெதிரே  கண்டதும் முசுகுந்தர் திகைத்தார்.

தாங்கள் யார்? பயங்கரமான இந்தக் காட்டின் நடுவில் இருக்கும் மலைக் குகைக்குள் எப்படி வந்தீர்கள்? தங்கள் மென்மையான திருவடி நோகவில்லையா?

நீங்கள் சூரியனா? சந்திரனா? அக்னியா? தேவேந்திரனா? உங்கள் திருமேனி ஒளியால் இருண்ட இக்குகை பிரகாசமாகத் திகழ்கிறது. தங்களைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன். விருப்பமிருந்தால் கூறுங்கள். என்றார்.

பின்னர், ப்ரபோ! நான் இக்ஷ்வாகு வம்சத்தவரான மாந்தாதா மஹாராஜனின் மகன். என் பெயர் முசுகுந்தன் என்பது‌. வெகுநாள்கள் தொடர்ந்து விழித்திருந்த  அயற்சியால் இங்கு வந்து உறங்கினேன். எவ்வளவு காலமாயிற்றென்று தெரியவில்லை. என்னை எழுப்பிய அவன் பஸ்மமாகிவிட்டான். உங்களை இப்போதுதான் பார்க்கிறேன். இவ்வளவு காலமாக இருட்டிலேயே இருந்ததால் தங்களது பேரொளி கண்ணைக் கூசுகிறது. தங்கள் திருமுகத்தைக் கூட சரியாகப் பார்க்க இயலவில்லை. என்றார்.

கலகலவென்று சிரித்த கண்ணன் இடிமுழக்கம் போன்ற குரலில் பேசினான்.

அன்பரே! எனது பிறப்பும், தொழிலும் எண்ணற்றவை. பல பிறவிகள் எடுத்தாவது பூமியிலுள்ள மணல்துகளை எண்ணலாம். எனது பெயர்களையும் பிறப்பையும் யாராலும் கணக்கிட இயலாது.

இருந்தபோதிலும் இப்பிறவியைப் பற்றி மட்டும் கூறுகிறேன். 

முன்பொரு சமயம் பூபாரம் தீர்க்கவேண்டி ப்ரும்மா என்னிடம் வேண்டினார். அதனால் நான் வசுதேவர் மற்றும் அவரது மனைவி தேவகிக்கு மகனாகப் பிறந்தேன். என்னை வாசுதேவன் என்றும் கண்ணன் என்றும் அழைப்பர்.

தீய எண்ணம் கொண்ட அசுரனான காலநேமியின் அவதாரம் கம்சன். அவனை நான் கொன்றேன். மற்றும் அவனால் அனுப்பப்பட்ட எண்ணற்ற அசுரர்களுக்கும் முக்தியளித்தேன். இப்போது காலயவனன் என்ற அசுரனும் தம்மால்‌ கொல்லப்பட்டான். 

உமக்கு அருள் செய்யவே இங்கு வந்தேன். நீங்கள் முன்பொரு காலத்தில் என்னைப் பலமுறை பூஜை செய்திருக்கிறீர். அவற்றின் பயனாக உங்கள் முன் தோன்றினேன். என்ன வரம் வேண்டும்? கேளுங்கள் என்றான்.

கண்ணன் பேசுவதைக் கேட்டு வந்திருப்பது ஸ்ரீமன் நாராயணனே என்றுணர்ந்தார்.

வாழ்வில் ஒரு‌முறையேனும் மனப்பூர்வமாக கண்ணனைப்‌ பூஜை செய்திருந்தாலும் போதும். அதற்கான பலனைக் கண்ணன் கொடுத்துவிடுகிறான். பக்தர்கள் விஷயத்தில் கடனாளியாக இருக்க அவன் விரும்புவதில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 470

கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பரீக்ஷித் திருதிருவென்று விழித்தான்.

மஹரிஷீ! ஒன்றும் புரியவில்லை. குகைக்குள் இருந்தது யார்? காலயவனனைச் சாம்பலாக்கும் சக்தி பெற்றவரா? தபஸ்வியா? அவரது பெயரென்ன? பெருமைகள் என்ன? அவர் ஏன் குகைக்குள் இருந்தார்? எதற்காக உறங்கினார்? எழுப்பியவரை ஏன் சாம்பலாக்கினார்?

ஸ்ரீ சுகப்ரும்மம் சிரித்தது. 

அவர் இக்ஷ்வாகு வம்சத்து மன்னர். அவர் பெயர் முசுகுந்தர். சத்யப்ரதிக்ஞர். தேவாசுர யுத்தம் நடந்தபோது,  அவரிடம் இந்திரன் முதலான தேவர்கள் வந்து தங்களைக் காப்பாற்றும்படி உதவி கேட்டனர். அதனால் அவர் வெகுகாலம் தேவர்களுக்காக படையைத் தலைமை தாங்கி வெற்றி பெற்றுத்தந்தார்.

அதன் பின்னர் முருகப்பெருமான் தேவசேனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அப்போது இந்திரன் முசுகுந்தரை வணங்கி,

 இவ்வளவு காலமாய் எங்களைக் காத்தீர்கள். இனி நீங்கள் ஓய்வு கொள்ளலாம். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்றான். 

முசுகுந்தர் பூலோகம் திரும்ப எண்ணியபோது, அங்கே தன் மக்கள் எவரையும் காணாமல் திகைத்தார்.

தேவேந்திரன் அவரிடம், மஹானுபாவரே! பூலோகத்திற்கும் தேவலோகத்திற்கும் காலக்  கணக்கு மாறுபடும். நீங்கள் இங்கு வந்து வெகுகாலமாகிவிட்டது.
பூலோகத்தில் யுகமே ‌மாறிவிட்டது. இப்போது தங்கள் உற்றார், உறவினர், மக்கள் ஒருவரும் பூமியில் இல்லை. 

பகவானே காலதேவன் ஆவார். உமக்கு‌ அனைத்து நலனும் விளையட்டும். நீங்கள் மனத்தைத் தேற்றிக்கொண்டு முக்தியைத் தவிர எதை வேண்டுமானாலும் வேண்டுங்கள் என்றான்.

உற்றார் உறவினர் மக்கள், நாடு எதுவுமின்றி எப்படி வாழமுடியும்? முக்தியும் இல்லையென்றால் என்ன செய்வதென்று கேட்டார்.

முக்தியை அளிக்க வல்லவர் பகவான் ஒருவரே. எனக்கு அந்த அதிகாரம் இல்லை. என்ன செய்வேன்? நீங்கள் தயவு செய்து என்னால் கொடுக்க இயன்றதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான் இந்திரன்.

முசுகுந்தர் மிகவும் யோசித்தார். பின்னர்,

நான் மனிதனானதால் இங்கு வாழமுடியாது. பூவுலகிலும் எனக்கு யாரும் இல்லை. வெகு காலமாக போர் செய்து மிகவும்‌ களைப்பாயிருக்கிறது. நான் நன்றாக உறங்க விரும்புகிறேன் என்றார்.

தேவேந்திரன், 

நீங்கள் சென்று விருப்பமான இடத்தில் படுத்து உறங்குங்கள். உங்களை எழுப்புபவர் எரிந்து சாம்பலாவார் என்று வரம் கொடுத்தான்.

முசுகுந்தர் பூலோகம் திரும்பினார். மக்கள் அனைவரும் மிகவும் குள்ளமாக இருந்தனர். மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியிருந்தது. யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க ஒரு மலைக் குகைக்குள் சென்று உறங்கத் துவங்கினார். எவ்வளவு காலமாக உறங்கினார் என்று அவருக்கும் தெரியாது.

தன்னலம் கருதாது தேவர்க்கு உதவியதால் பகவான் தானே அவருக்கு தரிசனம் கொடுக்க விரும்பினான். அவரை எழுப்புபவர் சாம்பலாவர் என்பதால் காலயவனனைத் தந்திரமாக அழைத்துக்கொண்டு வந்து அவரை எழுப்பும்படிச் செய்தான். பகவான் அனைத்தும் அறிந்தவன். அவனது கணக்கு ஒருவர்க்கும் புரியாது. என்றார் சுகர்.

காலயவனன் சாம்பலானதும், ஒளிந்துகொண்டிருந்த கண்ணன் முசுகுந்தரின் முன்னால் வெளிப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, May 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 469

நிலவைப்போல் கோபுர வாயிலிலிருந்து வெளிப்பட்ட கண்ணனைக் கண்டான் காலயவனன். அழகிய மஞ்சள் பட்டாடை, மேகவர்ணம் கொண்ட மேனி, கௌஸ்துபமணி, நான்கு கரங்களுடன், தாமரை மாலையணிந்து புன்சிரிப்பு தவழும் அழகிய திருமுகம். 

அழகே உருவான கண்ணனைக் கண்டு காலயவனன் அசந்துபோனான். பின்னர் இவன்தான் வாசுதேவன் என்று முடிவு செய்தான். நாரதர் கூறிய அடையாளங்களான, ஸ்ரீ வத்ஸம், நான்கு கைகள், தாமரைக் கண்கள், ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொண்டான். இவன் ஆயுதமின்றி வருவதால் நானும் ஆயுதமின்றி இவனுடன் போர் செய்வேன் என்று நிச்சயம் செய்துகொண்டான். 

வெளியில் வந்த கண்ணன், காலயவனன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக ஓடத் துவங்கினான். அதைச் சற்றும் எதிர்பாராத காலயவனன் கண்ணனின் பின்னால் ஓடினான். ஓடி அடையக்கூடிய பொருளா கண்ணன்?

அங்குமிங்கும்‌ ஓடி போக்குக் காட்டினான். வெகுதூரம் ஓடியபின் ஒரு மலைமீது ஏறினான் கண்ணன். காலயவனன் அவனை நிழல் போல் தொடர்ந்தான். 

எவ்வளவு தொடர்ந்தபோதும் காலயவனனின் வினைப்பயன் முடிவுறாததால் கண்ணனைப் பிடிக்க இயலவில்லை. ஒருவரின் பாவமோ, புண்ணியமோ,  வினைப்பயன் எப்போது முடிவுறுகிறதோ அப்போதுதான் இறைவனைப் பிடிக்க இயலும்.

தன்னைக் காலயவனன் பார்க்கிறானா என்று திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு அவனது கண்ணில் படும் தொலைவிலேயே ஓடினான் கண்ணன். அங்கிருந்த ஒரு மலைக் குகைக்குள் நுழைந்தான்.

குகைக்குள் நுழைந்ததும் ஒரே இருட்டு. கண்ணனைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த  காலயவனனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தோராயமாக ஓடினான். குகையின் மையப்பகுதியில் ஒருவர் படுத்திருந்தார்.

இருட்டில் ஒன்றும் தெரியாததால் கண்ணன்தான் ஓடி வந்து படுத்துக் கொண்டான் என்றெண்ணிய காலயவனன் படுத்திருந்தவரை ஓங்கி ஒரு உதை விட்டான். 

ஓடிவந்து படுத்துக் கொண்டால் எனக்குத் தெரியாதா? நீதான் வாசுதேவன் என்பதை அறிவேன்.  தப்பிக்க இயலாது. எழுந்திரு. வா என்னுடன் போரிடு. என்று கத்தினான்.

படுத்திருந்தவர் விருட்டென்று எழுந்தார். காலயவனனைக் கண்டார். அக்கணமே காலயவனனின் உடல் தீப்பற்றி சாம்பலானான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 468

ஜராசந்தன் பதினெட்டாவது முறையாக மதுராவின் மீது போர் தொடுத்து வந்தான். அதற்குள் காலயவனன் என்ற அசுரனைக் கண்ணன் தான் உனக்கேற்ற வீரன், அவனிடம் போய் சண்டையிடு என்று சொல்லி அனுப்பிவைத்தார் நாரதர்.

ஜராசந்தன் மதுராவை அடைவதற்கு முன் காலயவனன் வந்து தன் படையுடன் மதுராவை முற்றுகையிட்டான். தன்னை எதிர்க்க மனிதர்களே இல்லை என்றெண்ணியவன் கண்ணனைப் பற்றிக் கேள்வியுற்றதும் கிளம்பி வந்துவிட்டான். 

பதினேழு போர்களிலும் கண்ணன் வெற்றி பெற்றபோதிலும், ஒவ்வொரு முறையும் கோட்டை முற்றுகையிடப்படும் போது மதுரா நகர மக்கள் பெரும் கலக்கமுற்றனர். அடுத்தடுத்து போர் வந்துகொண்டே இருந்ததால் பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கண்ணன் தன் மக்களுக்க்கு நிம்மதியும் அமைதியான வாழ்க்கையும் தர விரும்பினான். 

பலராமனை அழைத்து கலந்தாலோசித்தான் கண்ணன்.

அண்ணா இன்று காலயவனன் முற்றுகையிட்டுள்ளான். ஜராசந்தன் ஏற்கனவே படையுடன் மகதத்திலிருந்து கிளம்பிவிட்டான். இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடுவான். 

காலயவனனுடன் நாம் போர் செய்யும் சமயம் ஜராசந்தன் வந்தால் நிலைமை மோசமாகும். எனவே நமது மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவனால் துன்பம் நேராதவாறு காக்க வேண்டும். 

மனிதர்கள் நெருங்க இயலாதவாறு ஒரு அணை அமைத்து மக்களை அங்கு கொண்டு சேர்த்தபின் காலயவனனிடம் யுத்தம் செய்யத் துவங்கலாம்.

பலராமனும் ஆமோதிக்க, உடனடியாக கடலின் நடுவே பன்னிரண்டு யோஜனை பரப்பளவில் ப்ரும்மாண்டமான நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 
தேவசிற்பியான விஸ்வகர்மாவை வரவழைத்து ஆணை பிறப்பித்தான் கண்ணன். 

பகவான் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டான் விஸ்வகர்மா. தன் சிற்பத் திறமைகள் அத்தனையும் வெளிப்படுத்தி வாஸ்து சாஸ்திரத்தின்படி மிக அழகான ஒரு நகரத்தை கடலின் நடுவில் சில மணித் துளிகளில் அமைத்தான்.

தேரோடும் வீதிகள், அகலமான தெருக்கள், கற்பக மரங்களும் கொடிகளும் நிறைந்த தோட்டங்கள், வானளாவிய கோபுரங்கள், தங்கக் கலசங்கள் வைக்கப்பட்ட மாளிகைகள், தேவாலயங்கள், மரகதக் கற்களாலான தரைகள், ரத்தினங்கள் பதித்த தூண்கள், அரண்மனை, மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் அமையப்பெற்ற அற்புதமான ஒளிவீசும் நகரம்.

சுதர்மா என்ற தேவசபை தேவேந்திரனால் கண்ணனுக்காக அனுப்பப்பட்டது. இதில் அமர்ந்தால் பசி, தாகம், மயக்கம், கவலை ஆகிய எதுவும் பாதிக்காது.

 வருணன் மனோவேகம் கொண்ட ஒரு காது மட்டும் கறுத்த வெள்ளைக் குதிரைகளை அனுப்பினான். குபேரன் எட்டு விதமான செல்வங்களையும் அனுப்பினான். அனைத்து லோகபாலர்களும் எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து புதிய நகரத்தில் கொட்டினார்.

நகரம் தயாரானதும், கண்ணன் தன் மக்களனைவரையும் தன் யோக சக்தியால் ஒரே கணத்தில் கொண்டு சேர்த்துவிட்டான்.

ஒன்றும் புரியாமல் இருந்த மக்கள், புதிய நகரத்தைக் கண்டதும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
மக்களைக் காக்கும் பொறுப்பை பலராமனிடம் ஒப்படைத்தான் கண்ணன்.

பின்னர் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு தாமரை மாலையணிந்துகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி மதுராவின் கோபுர வாயிலிலிருந்து வெளிக் கிளம்பினான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 468

ஜராசந்தன் பதினெட்டாவது முறையாக மதுராவின் மீது போர் தொடுத்து வந்தான். அதற்குள் காலயவனன் என்ற அசுரனைக் கண்ணன் தான் உனக்கேற்ற வீரன், அவனிடம் போய் சண்டையிடு என்று சொல்லி அனுப்பிவைத்தார் நாரதர்.

ஜராசந்தன் மதுராவை அடைவதற்கு முன் காலயவனன் வந்து தன் படையுடன் மதுராவை முற்றுகையிட்டான். தன்னை எதிர்க்க மனிதர்களே இல்லை என்றெண்ணியவன் கண்ணனைப் பற்றிக் கேள்வியுற்றதும் கிளம்பி வந்துவிட்டான். 

பதினேழு போர்களிலும் கண்ணன் வெற்றி பெற்றபோதிலும், ஒவ்வொரு முறையும் கோட்டை முற்றுகையிடப்படும் போது மதுரா நகர மக்கள் பெரும் கலக்கமுற்றனர். அடுத்தடுத்து போர் வந்துகொண்டே இருந்ததால் பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கண்ணன் தன் மக்களுக்க்கு நிம்மதியும் அமைதியான வாழ்க்கையும் தர விரும்பினான். 

பலராமனை அழைத்து கலந்தாலோசித்தான் கண்ணன்.

அண்ணா இன்று காலயவனன் முற்றுகையிட்டுள்ளான். ஜராசந்தன் ஏற்கனவே படையுடன் மகதத்திலிருந்து கிளம்பிவிட்டான். இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடுவான். 

காலயவனனுடன் நாம் போர் செய்யும் சமயம் ஜராசந்தன் வந்தால் நிலைமை மோசமாகும். எனவே நமது மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் அவனால் துன்பம் நேராதவாறு காக்க வேண்டும். 

மனிதர்கள் நெருங்க இயலாதவாறு ஒரு அணை அமைத்து மக்களை அங்கு கொண்டு சேர்த்தபின் காலயவனனிடம் யுத்தம் செய்யத் துவங்கலாம்.

பலராமனும் ஆமோதிக்க, உடனடியாக கடலின் நடுவே பன்னிரண்டு யோஜனை பரப்பளவில் ப்ரும்மாண்டமான நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 
தேவசிற்பியான விஸ்வகர்மாவை வரவழைத்து ஆணை பிறப்பித்தான் கண்ணன். 

பகவான் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டான் விஸ்வகர்மா. தன் சிற்பத் திறமைகள் அத்தனையும் வெளிப்படுத்தி வாஸ்து சாஸ்திரத்தின்படி மிக அழகான ஒரு நகரத்தை கடலின் நடுவில் சில மணித் துளிகளில் அமைத்தான்.

தேரோடும் வீதிகள், அகலமான தெருக்கள், கற்பக மரங்களும் கொடிகளும் நிறைந்த தோட்டங்கள், வானளாவிய கோபுரங்கள், தங்கக் கலசங்கள் வைக்கப்பட்ட மாளிகைகள், தேவாலயங்கள், மரகதக் கற்களாலான தரைகள், ரத்தினங்கள் பதித்த தூண்கள், அரண்மனை, மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் அமையப்பெற்ற  அற்புதமான ஒளிவீசும் நகரம்.

சுதர்மா என்ற தேவசபை தேவேந்திரனால் கண்ணனுக்காக அனுப்பப்பட்டது. இதில் அமர்ந்தால் பசி, தாகம், மயக்கம், கவலை ஆகிய எதுவும் பாதிக்காது.

வருணன் மனோவேகம் கொண்ட ஒரு காது மட்டும் கறுத்த வெள்ளைக் குதிரைகளை அனுப்பினான். குபேரன் எட்டு விதமான செல்வங்களையும் அனுப்பினான். அனைத்து லோகபாலர்களும் எல்லா செல்வங்களையும் கொண்டு வந்து புதிய நகரத்தில் கொட்டினர்.

நகரம் தயாரானதும், கண்ணன் தன் மக்களனைவரையும் தன் யோக சக்தியால் ஒரே கணத்தில் கொண்டு சேர்த்துவிட்டான்.

ஒன்றும் புரியாமல் இருந்த மக்கள், புதிய நகரத்தைக் கண்டதும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
மக்களைக் காக்கும் பொறுப்பை பலராமனிடம் ஒப்படைத்தான் கண்ணன்.

பின்னர் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு தாமரை மாலையணிந்துகொண்டு ஆயுதங்கள் எதுவுமின்றி மதுராவின் கோபுரவாயிலிலிருந்து வெளிக் கிளம்பினான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, May 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 467

போருக்கு அழைப்பு விடுக்கும் கண்ணனின் சங்கொலி கேட்டு ஜராசந்தன் கத்தினான்.

ஹே! பதரே! சிறு குழந்தைகளுடன் நான் போர் புரிவதில்லை. என் மாப்பிள்ளையைக் கொன்ற மடையன் நீ. உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன். விலகி ஓடிப்போய் ஒளிந்துகொள். ஹே! பலராமா! நீ வா போருக்கு. என் கரங்களால் அடிபட்டு வானுலகம் செல்ல வா. அல்லது திறமையிருந்தால் என்னைக் கொல்.

பலராமன் கண்ணனைப் பார்க்க,‌ அவன் பதிலிறுத்தான்.

வீரர்கள் தற்பெருமை பேசுவதில்லை. மருமகன் இறந்ததால் துக்கத்திலிருக்கும் உன் பேச்சை அலட்சியம் செய்கிறோம். போர் துவங்கட்டும். என்றான்.

ஜராஸந்தனின் படை கண்ணன் மற்றும் பலராமனைச் சுற்றி வளைத்தது. சூரியனை மேகம் மறைப்பது போலவும், அக்னியை சாம்பல் மறைப்பது போலவும் இருந்தது.

கண்ணனின் தேர்க்கொடி கருடனைக் கொண்டது. பலராமனின் தேர்க்கொடியில் பனைமரம் பொறிக்கப்பட்டிருக்கும். 

கோட்டை வாயிலை அடைத்துவிட்டதால் நகர மக்கள் கோட்டையின் மீதும், மாடங்கள், கோபுரங்களின் மீதும் ஏறி போரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கண்ணனையும் பலராமனையும் காணாமல் வருத்தமுற்றனர்.

எதிரியின் படைகளால் மூடப்பட்டிருப்பதால் மக்களின் மனம் வாடுவது கண்டு கண்ணன் சார்ங்கத்தை எடுத்தான். அதன் நாணை ஏற்றி டங்காரம் செய்தான். கணீரென்ற அதன் ஒலி கேட்டு படை வீரர்களுக்கு சித்தப்ரமை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

பின்னர் அதை மண்டலம் போல் வளைத்து தீவட்டியின் வட்டம்போல அம்புமழை பொழிந்தான் கண்ணன். சுழன்று சுழன்று அடித்ததில் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையும் ஒன்றுமில்லாமல் ஆயிற்று.

ஆயிரக்கணக்கான யானைகளும், குதிரைகளும் மத்தகம் பிளக்கப்பட்டும், கழுத்தறுபட்டும் விழுந்தன. தேர்கள் சின்னாபின்னமாயின. வீரர்களின் உடல்களின் பாகங்கள் மலைபோல் குவிந்திருந்தது.

குருதியாற்றில் கைகளும், கால்களும் தலைகளுமாக மிதந்தன. போர்க்களத்தைக் காணொலிபோல் விவரிக்கிறார் ஸ்ரீ சுகர்.

ஜராசந்தனின் சேனை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

உண்மையில் உலகையே காத்து அழிக்கும் பகவானுக்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லை. இருப்பினும் மனிதனாக வந்திருப்பதால் அவனது போர்த்திறத்தையும், வீரத்தையும் பறைசாற்ற போர்க்களக்காட்சியை விரிவாக  எடுத்துரைக்கிறார் வியாஸர்.

அனைத்து சேனைகளையும் இழந்து ஆயுதங்களும் இன்றி தனி ஒருவனாகத் தலை குனிந்து நிற்கும் ஜராசந்தனை சிங்கத்தைப்போல் பிடித்தான் பலராமன். வருணபாசத்தால் அவனைக் கட்டத் துவங்கினான்.

பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டுமெனில் இன்னும் நிறைய துஷ்டர்கள் போர் செய்ய  வரவேண்டும்‌. எனவே இவனை உயிருடன் விடலாம் என்றான் கண்ணன்.

ஜராசந்தனை விடுவித்து விரட்டிவிட்டனர். அவன் மிகுந்த அவமானத்தால் வெட்கமடைந்து தவம் செய்யக் கிளம்பினான். அவனை சிசுபாலன் தடுத்தான். 

யதுவம்சத்தினரின் வெற்றி அவர்களது வினைப்பயனே அன்றி வேறில்லை. அவர்களுக்கு வீரமெல்லாம் கிடையாது. மாடு மேய்ப்பவர்கள். எனவே, மனம் தளரவேண்டாம். சில காலம் கழித்து மீண்டும் போர் தொடுத்து வெல்லலாம் என்று அமைதிப்படுத்தி மகதத்தில் கொண்டு விட்டான்.

கண்ணனும் பலராமனும் போரை முடித்து கோட்டைக்குள் நுழைந்ததும், நகர மக்கள் பயம் நீங்கி மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர். சங்குகள், துந்துபிகள், பேரிகள் ஆகியவற்றை முழக்கிக்கொண்டும் பல்வேறு வாத்யங்களை இசைத்துக்கொண்டும் நடனமாடியும் பூக்கள் தூவியும் வரவேற்றனர்.

நகரவீதிகளை நீர் தெளித்துக் கோலமிட்டு, தீபமேற்றி தோரணங்கள் கட்டி அலங்கரித்தனர்.

எதிரி வீரர்கள் அணிந்திருந்த எண்ணற்ற ஆபரணங்களையும், மற்ற செல்வங்களையும் கொண்டு வந்து மன்னரான உக்ரசேனரின் காலடிகளில் சமர்ப்பித்தான் கண்ணன்.

இவ்வாறு இருபத்து மூன்று அக்ஷௌஹிணிப் படைகளைத் திரட்டிக்கொண்டு பதினேழு முறை போர் செய்ய வந்தான் ஜராசந்தான். ஒவ்வொரு முறையும் படைகள் அனைத்தையும் இழந்து தனி ஒருவனாக உயிர்ப்பிச்சை பெற்று தன் நகரம் திரும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, May 22, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 466

கம்ஸனின் மனைவிகள் அஸ்தி, பிராப்தி என்ற இருவர். அவர்கள் ஜராஸந்தனின் மகள்கள். கம்சன் இறந்ததும் கணவனைப் பிரிந்த துயரம் தாளாமல்  பிறந்தகம் சென்றனர்.

தந்தையிடம் கண்ணன் கம்சனைக் கொன்று விட்டதைச் சொல்லி அழுதனர். 

அதைக் கேட்ட ஜராசந்தன் மிகுந்த மனவருத்தமடைந்தான். கண்ணனின் மீது கடுங்கோபம் கொண்டான். இந்த பூமியில் யாதவர்களே இல்லாமல் செய்கிறேன் என்று சபதம் பூண்டான்.

இருபத்து மூன்று அக்ஷௌஹிணி படைகளைத் திரட்டிக்கொண்டு மதுரா நகரை நாற்புறமும் முற்றுகையிட்டான்.

கடலைப்போன்ற சேனை மதுராவின் கோட்டையை முற்றுகையிட்டதால் மதுரா மக்கள் பயந்துபோயினர். மக்களின் கலக்கத்தைக் கண்ட கண்ணன் தீர ஆலோசித்தான்.

பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டும். ஆனால் அப்பாவி மக்களுக்கு எதுவும் நேரக்கூடாது.

தனக்கு அடங்கிய துஷ்ட சுபாவமுள்ள சிற்றரசர்கள் அனைவரையும் திரட்டி வந்துள்ளான் ஜராசந்தன். படையை மட்டும் அழித்து, அவனை உயிரோடு விடுத்தால் அவன் மீண்டும் துஷ்டர்களைத் திரட்டிக் கொண்டு வருவான்.

இருந்த இடத்தில் இருந்தபடியே அத்தனை துஷ்டர்களையும் அழிக்க இதுவே சரியான வழி.
பூமியின் பாரத்தைக் குறைப்பதே அவதார நோக்கம். 

என்றெண்ணினான் கண்ணன். அப்போது வானிலிருந்து ஒளிமிக்க இரண்டு ரதங்கள் தேரோட்டிகளுடனும், அனைத்துப் போர்க்கருவிகளுடனும் வந்திறங்கின. 
அவற்றில் சுதர்சனமும், மற்ற திவ்ய ஆயுதங்களும் இருந்தன.

உடனே பலராமனை அழைத்து,

அண்ணா! இந்த யாதவகுலம் முழுதும் உங்களையே நம்பியுள்ளது. இதோ உங்களுக்கான ரதமும், ஆயுதங்களும் வந்துவிட்டன.
புறப்படுங்கள். புவியின் பாரத்தைக் குறைக்கலாம். என்றான்.

அதைக் கண்டு சிரித்த பலராமன் கண்ணனின் திருவுளத்தைப் புரிந்துகொண்டு தேரில் ஏறினான்.

கண்ணனும் பலராமனும் கவசங்களை அணிந்துகொண்டனர்.  ஆளுக்கொரு தேரில் ஏறிக்கொண்டு கோட்டை வாயிலை நோக்கிப் புறப்பட்டனர்.
நகரத்தின் வாயிலினின்று வெளிப்பட்டதும் கோட்டை வாயில் மீண்டும் அடைக்கப்பட்டது.

கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து முழங்கினான்.
இடிபோல் நெஞ்சில் இறங்கும் அவ்வொலி கேட்டு ஜராசந்தனின் படையிலிருந்த ஏராளமான  வீரர்கள் மயங்கி விழுந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, May 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 465

அக்ரூரரும் விதுரரும் குந்திக்கு ஆறுதலாகப் பேசினர். தர்மராஜன், வாயு, இந்திரன், அஸ்வினி குமாரர்கள் ஆகியோரின் அம்சங்களாகப் பிறந்திருக்கும் பாண்டவர்கள் உலகில் தர்மத்தை நிலை நாட்டுவர். அவர்களுக்குக் குறைவே இல்லை. இப்போது படும் துயரங்களைப் பொருட்படுத்தாதே. என்று சொன்னார்கள்.

மதுராவிற்குக் கிளம்ப எண்ணிய அக்ரூரர் திருதராஷ்ட்ரனிடம் விடை பெற்றுக்கொள்ளச் சென்றார்.

குரு வம்சத்தின் புகழை வளர்க்கும் அரசே! பாண்டு இறந்ததும் அவரது ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். (அவரது பிள்ளைகள் இருக்கும்போது அறநெறியை விடுத்து தாங்கள் அரியணையில் அமர்ந்திருக்கீர்கள் என்பதாம்)

அறவழிச் சென்று மக்களை அன்பால் ஈர்த்து பேதபாவமின்றி சமநிலையாய் நடந்துகொள்ளுங்கள். அவ்வாறு நடந்தால் இம்மையில் புகழும், மறுமையில் நற்கதியும் கிடைக்கும்.

மறவழிச்சென்றால் நரகம் செல்ல நேரிடும். பாண்டுவின் புதல்வர்களை உங்கள் சொந்த மகன்களைப் போல் நடத்துங்கள்.

இவ்வுலக வாழ்வு நிலையற்றது. இப்போது நம்மைச் சுற்றி இருப்பவரை ஒருநாள் பிரிய நேரிடலாம். மனைவி மக்கள், உறவு எதுவும் உடன் வருபவை அல்ல. நாம் காக்கும் அறமே எப்போதும் உடன் வரும்.

தனியொருவராய்ப் பிறந்து தனியொருவராய் இறக்கும் இவ்வாழ்வில் வினைப்பயனையும் தனியாகத்தான் அனுபவிக்க வேண்டும்.

கடைமைகளைக் கைவிடுபவன், யாருக்காக அவற்றை விட்டானோ, அவர்களைப் பிரிய நேரிடும். மகிழ்ச்சியும்‌ நிம்மதியும் இன்றி பாவமூட்டையை மட்டும் சுமந்து அந்ததமஸ் என்னும் நரகம் செல்ல வேண்டியிருக்கும். 

இவ்வுலகை மாயை என்றறிந்து விருப்பங்களுக்கு இடம் கொடாமல், அறவழி நில்லுங்கள். அதனால் மனநிம்மதி கிடைக்கும்.

என்று சொன்ன அக்ரூரரைப் பார்த்து த்ருதராஷ்ட்ரன் கோபம் கொள்ளவில்லை. மாறாக தன் மீதே பச்சாதாபம் கொண்டான்.

அக்ரூரரே! நீங்கள் உண்மையில் எனக்கு நலம் தருபவற்றையே கூறினீர்கள். ஆனால் என் மனம் புத்ர பாசத்தால் கலங்கியிருக்கிறது. உமது மதுரமான சொற்கள் ஸ்படிகத்தில் எதிரொளிக்கும் மின்னல்போல் கணநேரம் கூட நிற்கவில்லை.

பூமியின் பாரம் குறைக்க அவதாரம் செய்திருக்கிறார் பகவான் கண்ணன். அவரது கட்டளையை மீறி எதுவும் நிகழாது. 

அவரே இவ்வுலகைப் படைத்து அதனுள் நுழைந்து வினைப்பயனையும் பகிர்ந்தளிக்கிறார். அவரது திருவிளையாடலைப் புரிந்துகொள்ள இயலாது. அவருக்கு என் நமஸ்காரங்கள்.

என்றான்.

எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தும் புத்தி தெளிவுறாமல் வெறும் ஏட்டுக்கல்வியாய் நின்றால் அது இப்படித்தான் இருக்கும். அஞ்ஞானி தான் கற்ற வேதாந்தத்தை தனக்கு சாதகமாய்த் திரித்துப் பேசுவான்.

இப்போதும் திருதராஷ்ட்ரன், இவையனைத்தும் பாண்டவர்களின் வினைப்பயன். அதைப் பகிர்ந்தளித்தவன் கண்ணனே என்று பொருள்படும்படி பேசினான்.

த்ருதராஷ்ட்ரனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட அக்ரூரர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பி மதுரா வந்தடைந்தார்.

சென்ற நாள் முதல் திரும்பிய கணம் வரை நடந்த அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் கண்ணனிடமும் பலராமனிடமும் ஒப்பித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Wednesday, May 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 464

மறுநாள் அக்ரூரர் கிளம்பி அஸ்தினாபுரம்‌ சென்றார்.

திருதராஷ்ட்ரன், பீஷ்மர், விதுரர், குந்தி அனைவரையும் கண்டார். துரோணர், க்ருபர், கர்ணன், துரியோதனன், அஸ்வத்தாமா, பாண்டவர்கள் மற்றும் உறவினர் அனைவரையும் சந்தித்தார். 

அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

திருதராஷ்ட்ரனின் மனநிலையையும் அவர் பாண்டவர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் பற்றி விவரமாக அறிய விரும்பிய அக்ரூரர் அங்கேயே சில‌ மாதங்கள் தங்கினார்.

பாண்டவர்களின் வலிமையையும் ஆயுதங்களைச் செலுத்தும் திறத்தையும், வீரம், அடக்கம், நாட்டு மக்களிடம் அன்பு முதலியவற்றையும் தாள இயலவில்லை. அவர்களுக்கு விஷம் கொடுத்தார்கள். சமயம் ‌கிடைக்கும் போதெல்லாம் அவமானப் படுத்துகிறார்கள் என்பதை குந்தியும், விதுரரும் அக்ரூரரிடம் கூறினர். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விவரமாகக் கேட்டு அறிந்துகொண்டார் அக்ரூரர். அவர்கள் சொன்ன விவரங்களை மற்ற சிலரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்.

அக்ரூரரைக் கண்டதும் குந்திக்கு தன் பிறந்த வீடு நினைவுக்கு வந்தது.

அண்ணா! என் பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்? என் சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரைப் பார்த்தீர்களா? அவர்களுக்கு என் நினைவு வருமா?

என் அண்ணனுக்கு மகனாகப் பிறந்திருக்கும் பகவான் க்ருஷ்ணன் எப்படி இருக்கிறார்? அவரது லீலைகள் பற்றி ஏராளமான செவி வழிச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு தன் அத்தையான என் நினைவும் என் குழந்தைகளின் நினைவும் வருகிறதா?

ஓநாய்களுக்கிடையே சிக்கிய பெண்மானைப்போல் கயவர்களுக்கிடையே வந்து என் மக்களுடன் துன்புறுகிறேன். கணவரும் இல்லை. என் மகன்கள் தந்தையற்றவர்கள். அவர்களுக்கு ஆறுதலாக இன்சொல் கூற கண்ணன் வருவாரா?

பேசிக்கொண்டே போன குந்தி தன்னை மறந்து கண்ணனை‌ நோக்கி பிரார்த்தனை செய்யத் துவங்கினாள்.

கோவிந்தா! நீர் யோகீஸ்வரனாயிற்றே! உலகைக் காத்து வாழவைப்பவனாயிற்றே! நானும் என் குழந்தைகளும் உன்னை அடைக்கலம் புகுந்தோம். எங்களைக் காத்தருள்வாய் ஐயனே! நீர் ஒருவனே முக்தி தர வல்ல ஸர்வேஸ்வரன். பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவர்க்கு உமது பாதங்களே‌ புகலிடம்.

மாயையை நீக்கும் பரம்பொருளே! தூயவரே! உனக்கு கோடி கோடி நமஸ்காரம். உன்னையே சரணடைந்தேன்!

என்று கதறினாள்.

தடேலென்று தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். 

தாயானவள் தன் குழந்தைகளுக்கும்‌ சேர்த்து சரணாகதி செய்துவிடுகிறாள்.

இவ்வாறு நம் அன்னையும்‌ முன்னோரும் என்றோ‌ ஒரு நாள் சரணாகதி செய்திருப்பார்கள்.
என்றோ‌ ஒரு நாள் ஒரு மஹாத்மாவின் ஸந்நிதியிலோ, கோவிலிலோ கொண்டுபோய் கைக்குழந்தையைப் போட்டு என் குழந்தையைக் காப்பாற்று என்று வேண்டியிருப்பார்கள். 

 அவற்றின் விளைவாகவே, நமக்கு ஒரு ஸத்குருநாதர் கிடைத்திருக்கிறார். அவர் மூலமாக ஸ்ரீமத் பாகவதம் என்ற தேனினும்‌ இனிய இந்தக் கதாம்ருதம் நமக்குக்‌ கிடைத்திருக்கிறது.

ஸ்ரீ சுகர் பரிக்ஷித்தைப்‌ பார்த்துக் கூறலானர்.

அரசே! உன் தந்தையின் பாட்டியான குந்தி அன்றே உமது குலம்‌ முழுவதற்குமான சரணாகதியைச் செய்துவிட்டாள் என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Tuesday, May 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 463

மதுரா வந்தவுடனேயே நேராகத் தன் வீட்டிற்கு எழுந்தருளுமாறு அக்ரூரர் அழைத்திருந்தாரல்லவா? அதை நினைவு கூர்ந்தான் கண்ணன். அவரைக் கொண்டு மேலும் சில பணிகளை முடிக்கத் திட்டமிட்டான் கண்ணன்.

அண்ணன் பலராமன், உத்தவர் இருவரையும் அழைத்துக்கொண்டு அக்ரூரர் வீட்டை நோக்கி‌ நடந்தான். 

மூவரும் வீதி முனையில் வருவதை எதேச்சையாகக் கண்டார் அக்ரூரர். ஆனந்தத்தினால் துள்ளிக் குதித்தார். ஓடோடிச் சென்று வரவேற்றார். கட்டியணைத்துக் கொண்டார்.

பித்துப் பிடித்தவர்போல் குதித்துக்கொண்டே கண்ணனைக் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினார்.

கண்ணன் வருவதைக் கண்ட அக்ரூரரின் மனைவி கிடுகிடுவென்று அவனை வரவேற்கும் ஏற்பாடுகளைச் செய்தாள். சற்று தன்னிலைக்கு வந்த அக்ரூரர் மூவரையும் முறைப்படி ஆசனத்தில் அமர்த்தினார். கண்ணன் மற்றும் பலராமனின் தாமரைத் திருவடிகளுக்குப் பாத பூஜை  செய்தார். அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொண்ட பின் சொட்டு கூட மிச்சம் வைக்காமல் கடகடவென்று குடித்துவிட்டார். தன் மேல் அங்கவஸ்திரத்தால் பாதங்களை ஈரம் போகத் துடைத்தார். பாதங்களுக்கு சந்தன குங்குமம் இட்டு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தார். தூப தீபங்கள் காட்டினார்.

பின்னர் அவர்களின் காலடிகளின் அமர்ந்து இருவரின் பாதங்களையும் தன் மடிமீது வைத்து மெதுவாக வருடலானார்.

அனைத்தையும் புன்னகை ததும்பும் முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர் மூவரும். அக்ரூரர் மெதுவாகக் கண்ணனிடம் பேசலானார்.

நல்ல வேளையாக நீங்கள் கம்சனை அவனது பரிவாரங்களுடன் அழித்தீர்கள். அத்தனை கஷ்டங்களுக்கும் விடிவுகாலம் பிறந்தது.

நீங்கள் இருவருமே மூலப்பொருள். இயற்கையும் ஜீவன்களுக்குள் பரிணமிப்பவர்களும் தாங்களே. தங்களைத் தவிர இவ்வுலகில் வேறு காரண காரியங்கள் இல்லை.

பஞ்ச பூதங்களும் வெவ்வேறு பொருள்களில் நுழைந்து பலவாறாகத் தெரிவதுபோல் நீங்களும் காரணப்பொருளாக அனைத்து பொருள்களிலும் விளங்குகிறீர்கள்.

ரஜோ குணத்தால் படைக்கிறீர்கள். தமோ குணத்தால் மறைக்கிறீர்கள். ஸத்வ குணத்தால் காக்கிறீர்கள். அந்த குணங்கள் உங்களைக் கட்டுப்படுத்துவதில்லை.

உலகின் நன்மைக்காக வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் வகுத்தீர்கள். மறநெறிச் செல்வோரால் தர்மம் பாதிக்கப்படும்போது  தாங்கள்‌ ஸத்வகுணம் கொண்ட திருமேனி தாங்கி அவதாரம் செய்கிறீர்கள்.

தாங்கள் பூமியின் சுமையை நீக்க வந்தவர். புலன்களுக்கெட்டாதவரே! என் கண்களுக்குப்‌ புலப்படும்படி திருமேனி தாங்கி தங்கள் பொன்னடிகளை இவ்வீட்டில் வைத்து எழுந்தருளியதால் நானும் என் முன்னோரும் பாக்யம் பெற்றோம். இவ்வீடு புனிதத்தலமாயிற்று.
தூய உள்ளம் படைத்த தாங்கள் அண்டியவரின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவர். மாற்றமில்லாதவர். குறைகளற்ற கோவிந்தர். பக்தருக்காக தம்மையே தருபவர். ஸத்யமே உருவானவர். 
பகுத்தறிவு கொண்டவர். தம்மை விட்டு வேறு யாரைச் சரணடையமுடியும்?

இந்திராதி தேவர்களும் தங்கள் தரிசனத்திற்காகத் தவமிருக்க எளியேனான என் இல்லத்தைத் தேடி வந்தீர்களே. என்னைப் பிணைத்திருக்கும் மாயவலையை அறுத்தெறியுங்கள்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட கண்ணன் கலகலவென்று சிரித்தான். அவனது சிரிப்பில் மயங்கிய அக்ரூரரைப் பார்த்து 

சித்தப்பா! தாங்கள் மூத்தவர்.  நாங்கள் உங்கள் குழந்தைகள்.

உங்களைப் போன்ற பாக்யசாலி யாருமில்லை. மேன்மையை விரும்புகிறவர்கள் தங்களைப் போன்ற சாதுக்களைப் பூஜிக்கவேண்டும்.
தெய்வ தரிசனம் கூட கிடைத்துவிடும்‌. சாதுக்களின் தரிசனம் துர்லபம் சித்தப்பா. 

நீர்நிலைகளிலுள்ள எல்லா நீரும் புனித தீர்த்தமில்லை. விக்ரஹங்கள் அனைத்தும் தெய்வங்களல்ல. அவற்றில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்து தொடர்ந்து பூஜை செய்வதாலேயே ஸாந்நித்யம் நிலைக்கும். ஆனால் சாதுக்களின் தரிசனமோ வாழ்நாளில் ஒருறை பெற்றாலும் போதும். அவர்களின் பார்வையே நம்மைப் புனிதமாக்கும்.

சித்தப்பா! தாங்கள் எனக்காக ஒரு உதவி செய்யவேண்டும். என்றான்.

இப்போது அக்ரூரருக்கு மாயையினால்  கண்ணன் தன் குழந்தை என்ற எண்ணம் வந்துவிட்டது. 

சொல் கண்ணா! உடனே செய்வேன். என்றார்.

நம் உறவினரான பாண்டவர்களைப் பற்றிய செய்திகளை அறிந்துவர தாங்களே ‌‌ஏற்றவர். தாங்கள் அஸ்தினாபுரம் செல்லவேண்டும். வீரரான பாண்டு மறைந்ததும் என் அத்தையான குந்திதேவி தன் குழந்தைகளுடன் அஸ்தினாபுரம் சென்று வசிக்கிறாராம். அங்கு அவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லையாம். நீங்கள் சென்று அவர்களின் நலத்தையும், துன்புறுத்தப்படுகிறார்களா என்பதையும் அறிந்து வரவேண்டும். நாம்  பாண்டவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் ஆவன செய்யவேண்டும். நாளைக் காலை கிளம்பிச் செல்லுங்கள் சித்தப்பா.

என்றான்.

நிச்சயம் செல்கிறேன் கண்ணா என்றார் அக்ரூரர். 

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு அண்ணனும் உத்தவரும் உடன் வர அரண்மனைக்குச் சென்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Monday, May 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 462

உத்தவர் மதுரா திரும்பினார்.  அவரைக் கண்டதுமே கண்ணன் அவருள் நிகழ்ந்த மாற்றத்தைக் கண்டு சிரித்தான். அந்தச் சிரிப்பிலேயே மோஹித்துப்போய் அப்படியே நின்றார்.

நினைவு வந்ததும் அழத் துவங்கினார்‌. ப்ரேமையால் கண்களில் நீர் பெருகியது.

பின்னர் கண்ணன் அவரை அழைத்துச்சென்று அருகில் அமர்த்திக் கொண்டு ஆசுவாசப்படுத்தினான்.

உத்தவர் எப்போதும் கண்ணனிடம் ஒரு அடி தள்ளி நின்று கைகட்டி வாய்பொத்தித்தான் பேசுவார். அந்த மரியாதா பக்தி இப்போது ப்ரேமபக்தியாகியிருந்தது. கண்ணனின் சரணங்களைப் பிடித்துக்கொண்டு அழுதார். பின்னர் கோகுலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்.

அவர்களுக்கு ஞானத்தை போதிப்பதற்காகத்தான் நீங்கள் என்னை அனுப்புகிறீர்கள் என்றெண்ணினேன். மாறாக அவர்கள் தங்கள் மீதான அன்பை முழுவதுமாய் உணரச் செய்துவிட்டனர். என்று சொல்லி வ்ரஜம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினார்.

ஒவ்வொரு கோபியும் கண்ணனுக்காக நிறைய பரிசுகள் கொடுத்திருந்தார்கள். பக்ஷணங்கள், குண்டுமணி, மயில்பீலி, கைவேலைப்பாடுகள் செய்த உத்தரீயம் என்று ஒவ்வொன்றையும் கொடுத்தவர் பெயரை நினைவுபடுத்திக் கூறிக்கொண்டே கொடுத்தார் உத்தவர்.

இத்தகையோரை விட்டு நீங்கள் எப்படிப் பிரிந்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

கண்ணனோ, அவர்களை எப்போதும் நினைக்கிறேன் உத்தவா. மேலும் கர்மங்களை ஆற்றுவதற்காக என் உடல்தான் இங்கிருக்கிறதே தவிர உள்ளத்தால் நான் வ்ரஜத்தைவிட்டு நீங்கவேயில்லை.

என்றான்.

ப்ரேமபக்தர்களுக்காக இறைவனும் ஏங்குகிறான் என்பதை உத்தவர் புரிந்துகொண்டார்.
அப்போது முதல் கண்ணன் மதுராவிலும், துவாரகையிலும் இருந்த சமயங்களில் உத்தவர் கண்ணனை விட்டுக் கணநேரமும் பிரியவில்லை.

சில சமயங்களில் உத்தவரின் நண்பர்கள் கேட்பார்கள்.

நீ என்னதான் செய்கிறாய் கண்ணனின் தர்பாரில்? 
ப்ருஹஸ்பதி சிஷ்யன் என்று பெயர். கண்ணன் எது சொன்னாலும் ஆமாம் என்று தலையாட்டுகிறாய். அவன் இல்லை என்று மாற்றிச்சொன்னால் அதற்கும் தலையாட்டுகிறாய்? இப்படி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டுவதற்கு  உனக்கெதற்கு மந்திரி பதவியும் சம்பளமும்? என்பார்கள். 

உத்தவர் பொறுமையாகச் சொல்வார். கண்ணன் சொல்வதை மறுத்துப்பேசாமல் இருக்கத்தான் அறிவு வேண்டும். 
கண்ணன் சொல்வதை மறுத்தால் அவனுக்குத் தன் சொல்லை மெய்ப்பிக்க எவ்வளவு நேரமாகப் போகிறது? அவனுடையது ஸத்யவாக்கு. அதை மறுக்கலாகாது.

மேலும் கண்ணனின் கண்களிலிருந்து ஒரு அபரிமிதமான கருணை எந்நேரமும் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. நான் அவரோடு இல்லையெனில் அக்கருணை சுவர், நாற்காலி போன்றவற்றில் விழுந்து வீணாகும். நான் கண்ணனின் அருகிலேயே இருந்து அவனது கண்களில் வழியும் க்ருபாம்ருதத்தை வீணாக்காமல் அனுபவிக்கிறேன். என்பார்.

நாள்கள் ஓடின. ஒருநாள் மாடவீதியின் வழிச் செல்கையில் குப்ஜையின் வீட்டைக் கடந்தனர் கண்ணனும் உத்தவரும்  கண்ணனுக்கு குப்ஜைக்கு அளித்த வாக்கு நினைவிற்கு வந்தது.

அதை நிறைவேற்ற விரும்பி அவள் வீட்டினுள் சென்றான் கண்ணன். அவளோ ஆச்சரியப்படவே இல்லை. ஏனெனில் தினந்தோறும் கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள். எப்பொழுது வந்தாலும் கண்ணனை வரவேற்க அனைத்தும் தயாராக இருந்தன.

மிக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த வீடு.
ஆங்காங்கே முத்துச் சரங்கள், மேல்விதானங்கள், சுகமான  ஆசனங்கள், நறுமணமிக்க தூபங்கள், தீபங்கள், மாலைகள் என கண்ணைக் கவரும் விதமாக அலங்கரிக்கப்படிருந்தது அவ்வீடு.

கண்ணனைக் கண்டதும் பரபரப்புடன் தன் தோழிகளுடன் ஓடிவந்து வரவேற்றாள். கண்ணனுக்கு உயர்ந்த ஆசனமளித்தாள். உத்தவருக்கும் ஆசனம் கொடுக்க அவர் அதைக் கையால் தொட்டுவிட்டுத் தரையில் அமர்ந்தார்.

அதன் பின் கண்ணன் அங்கு சற்று நேரம் தங்கி அவளை மகிழ்வித்தான். பின்னர் கிளம்பும் சமயத்தில் கண்ணனைப் பிரிய மனமின்றித் தவித்தாள் குப்ஜை.

மேற்கொண்டு வேலைகள் இருப்பதால் கிளம்பவேண்டும் என்று கூறிய கண்ணன் அவளுக்கு நிறைய வரங்களை அளித்தான்.

அதன் பின் உத்தவரும் கண்ணனும் பேசிக்கொண்டே திருமாளிகையை அடைந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Sunday, May 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 461

வ்ருந்தாவனத்தை விட்டுக் கிளம்பும்  சமயம் உத்தவர் கோபிகளைப் போலவே முழுமையான ப்ரேம பக்தராக மாறிவிட்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வணங்கினார். 

முமுக்ஷுக்கள், பக்தர்கள், முனிவர்கள் அனைவரும் உலக வாழ்வின் கொடுமைகளுக்கு பயந்து கோவிந்தனிடம் பக்தி நிலைக்கவேண்டுமென்று வேண்டுகிறோம். ஆனால், இந்த கோபிகளுக்கோ கண்ணனிடம்  அசைவற்ற ப்ரேமபக்தி ஸித்தித்திருக்கிறது. உலக வாழ்வைப் பற்றிய சிந்தனையே இல்லை.

நல்லகுலத்தில் பிறந்தவர் என்றோ, எல்லா அனுஷ்டானங்களையும் தவறாமல் பின்பற்றுபவர் என்றோ, பெரிய பதவியில் இருப்பவர் என்றோ, தனவந்தர் என்றோ பெருமைப்பட ப்ரேமபக்தர்களுக்கு எதுவுமில்லை. அவர்கள் கண்ணனின் லீலாம்ருதத்தில் மூழ்கியிருப்பதால் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.

அத்தனை பெருமைகளும் இருந்து கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபடவில்லையெனில் அப்பிறவி வீணே.

ஆசாரம், அனுஷ்டானங்களற்ற இந்த இடைக்குலப் பெண்களின் அன்புக்கு ஈடு இணையே இல்லை. இறைவனின் கதையமுதத்தை உண்பவர்க்கு அது நன்மையே செய்கிறது. அவர்கள் அதை உணராவிடினும் அமுதத்தின் பலன் கிட்டுமல்லவா?

இவர்களைப் போல பக்தி கொண்டவர்கள் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் இல்லை. 

இல்லறம், உறவு, தர்மங்கள், அனைத்தையும் துறந்து கண்ணன்பால் ஈடுபடுகின்ற இவர்களை தரிசனம்‌ செய்ததே பாக்யம். இந்த விருந்தாவனத்திலேயே நான் புல், புதர், கல், செடிகொடி இவற்றுள் ஏதேனும் ஒன்றாக நான் ஆகலாகாதா?

வந்தே நந்தவ்ரஜஸ்த்ரீணாம் பாத3ரேணும் அபீ4க்ஷ்ணஶ: |
யாஸாம் ஹரிகதோ2த்3கீ3தம் புனாதி பு4வனத்ரயம்||

இந்த கோகுலப் பெண்கள் பாடும் கண்ணனைப் பற்றிய கீதங்களல்லவா மூவுலகங்களையும் புனிதமாக்குகிறது. அத்தகையோரின் பாததூளியை நான் வணங்குகிறேன்.

என்று கூறிய உத்தவன் அங்கு தனக்கு விடைகொடுப்பதற்காகக் குழுமியிருந்த கோபியர்களின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அவர்களின் திருவடி மண்ணை எடுத்து தன் சிரத்தில் போட்டுக்கொண்டார்.

பின்னர் மெதுவாக அங்கிருந்து மதுராவை நோக்கிக் கிளம்பினார்.

உத்தவர் ப்ருஹஸ்பதியின் பாடசாலையில் படித்தவராம். மஹா புத்திமானாக விளங்குபவர். அடிக்கடி நண்பர்களிடத்தில் நான் ப்ருஹஸ்பதி சிஷ்யன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாராம். கண்ணனைக் கண்ட நாள்முதலாய் அந்தப் பெருமை அவருக்கு மறந்தே போய்விட்டது. அனைவரிடமும் நான் கண்ணனின் பணியாளன், கண்ணனின் சீடன் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளலானார். 

கோபிகளைப் பார்த்ததும் அதுவும் போய்விட்டது. இன்று முதல் நான் கோபியரின் சீடன் என்று பறைசாற்றத் துவங்கினார் என்றால் கோபியரின் பெருமை சொல்லவும் எளிதோ?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Saturday, May 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 460

உத்தவர் சில மாதங்களுக்கு வ்ருந்தாவனத்திலேயே தங்கினார்.
அவருக்கு அந்த வ்ரஜ பூமியை விட்டு கண்ணனிடம் திரும்பிச் செல்லக்கூட மனம் வரவில்லை.

ஒவ்வொரு நாளும் கண்ணனின் தோழர்களும், நந்தரும் உத்தவரை அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாகக்‌ காட்டினார்கள். அங்கு நிகழ்ந்த லீலையை விவரமாகச் சொல்லி அபிநயித்தும் காண்பித்தனர்.

இந்த மாட்டு வண்டியைப் பாருங்கள். இதனுள் ஒரு அசுரன் ஒளிந்திருந்தான். கண்ணன் தன் பிஞ்சுக்கால்களால் விட்ட உதையால் வண்டி நொறுங்கியது. அசுரனும் மாண்டான்.

அதோ அந்த முறிந்த மரங்கள் தெரிகின்றதா? உரலை இழுத்துக்கொண்டு அவற்றின் நடுவில் போனான் கண்ணன். மரங்கள்‌முறிந்து அவற்றிலிருந்து இரண்டு தேவ குமாரர்கள் சென்றனர். இதோ அன்று யசோதாம்மா கண்ணனைக் கட்டிவைத்த அதே உரல்தான் இது. 

இந்தத் தூணைப் பாருங்கள். வெண்ணெய்யை முழுங்கிவிட்டு இந்தத் தூணில் கையைத் தடவிவிடுவான். அவன் வெண்ணெய்யைத் தடவித் தடவி வழவழவென்று ஆகிவிட்டது.

இதோ இந்த மாடு. இது கண்ணன் பிறந்த அன்றே பிறந்தது. இங்குள்ள அத்தனை பசுக்களுக்கும் பெயர் வைத்தவன் கண்ணனே.

இந்தக் கன்றைப் பாருங்கள். இது எப்போதும் கண்ணனுடனேயே இருக்கும்.

இந்த யமுனையில்தான் தினமும் நாங்கள் ஜலக்ரீடை செய்வோம். 
இது காளிய மடு. இந்த மடுவின் நீர் காளியனால் விஷமாகியிருந்தது. நாங்களெல்லாரும் இதைப் பருகி உயிரை விட்டுவிட்டோம். கண்ணன் தன் அமுதப் பார்வையால் எங்களை எழுப்பினான். காளியனை அடக்குவதற்காக, அந்தப் பாம்பின் வழுக்கும் தலைமீதேறி ஒரு நடனம் செய்தான் பாருங்கள். அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியே போனான் கடலுக்கு. 

இந்த கூட்டைப் பாருங்கள். இது அகாசுரனின் உடல். எலும்புக்கூடாகிவிட்டது. நாங்கள் இதிலேறி கண்ணனுடன் விளையாடுவோம். 

இந்த மலையைத் தான் கண்ணன் ஏழு நாள்கள் தாங்கினான். இதன் சுனை நீர் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாறைகளைப் பாருங்கள். இந்த வண்ணப்பொடிகளைக் கொண்டு கண்ணனுக்கு அலங்காரம் செய்தால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த இடத்தில்தான் கேசியை வதம் செய்தான். இந்த ஆலமரத்தின் அடியில்தான் தினமும் அமர்ந்து குழலூதுவான். 

இவ்விடத்தில்தான் மண்ணை அள்ளி உண்டான். 

ஒவ்வொரு இடமாகக் காட்ட காட்ட, உத்தவர் நெகிழ்ந்துபோனார். முக்கியமாக அங்கு தங்கியதில் அவர் கவனித்த விஷயம், இருபத்து நான்கு மணி நேரங்களும்‌ கண்ணனைத் தவிர வேறு பேச்சே இல்லை. அவனைத் தவிர வேறு சிந்தனையே இல்லை.

எல்லா நேரங்களிலும் கோகுலத்தின் வீடுகளிலிருந்து கண்ணனின் புகழும் லீலைகளைச் சொல்லும் பாடல்களும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

திரும்ப மதுரா செல்வதற்கு மனமே இல்லையென்றாலும் கண்ணன் மதுராவில் தனக்காகக் காத்துக்கொண்டிருப்பான் என்ற எண்ணம் வந்ததால் கிளம்ப முடிவெடுத்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Friday, May 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 459

கோபியர் கூறியதைக் கேட்ட உத்தவர் வியந்துபோய்ச் சற்று நேரம் நின்றார். பின்னர்

ஆஹா! உங்கள் மனம் எப்போதும் கண்ணனையே நாடுகிறதே.

தானம், விரதம், தவம், ஹோமம், ஜபம், வேதம் ஓதுதல், புலனடக்கம் ஆகிய நியமங்களின் பலன் க்ருஷ்ணபக்தியே ஆகும்.

அத்தகைய பக்தி உங்களிடம் அமையப்பெற்றது பெரும்‌பேறு. 

மனம் வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் கண்ணனிடம் தனித்த பக்தி கொண்டிருக்கிறீர்கள். அவரை விட்டுப் பிரிந்த விரஹ தாபத்தினால் எங்கும் எதிலும் கண்ணனையே காண்கிறீர்கள்.
எனக்கும் தங்களைக் காணும் பேறு கிடைத்துவிட்டது.

நான் கண்ணனின் அந்தரங்கப் பணியாளன்.
உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறேன். அதைக் கேளுங்கள்.

கண்ணன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளார். அவரே அனைத்திற்கும் மூல காரணமாவார். உங்களிடமிருந்து அவர் பிரிந்திருப்பதென்பது இயலவே இயலாது. ஏனெனில் ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி, அசைவன, அசையாதன, மனம், பிராணன், இந்திரியங்கள், அவற்றின் நுகர்வான சப்தம், தொடு‌வுணர்வு அனைத்தும் கண்ணனே.

தன் மாயை என்னும் சக்தியால் அனைத்தையும் படைத்து, காத்து பின் தனக்குள்ளேயே ஒடுக்கிக்கொள்கிறார்.

ஆத்மாவாக அனைத்திலிம் நிறைந்திருப்பவர் கண்ணனே. குணக்கலப்பில்லாதவர். மாயை அவருடைய சக்திதான். ஆனால் அவரை அது பாதிப்பதில்லை.

விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், ஸமாதி ஆகிய நான்கு நிலைகளுக்கும் கண்ணனே‌ சாட்சியாவார்.

தத்வ விசாரம், துறவறம், தவம் புலனடக்கம் எல்லாமே ஸத்யவஸ்துவான அவரை உணர்வதற்கான வழியைக் காட்டுபவையே. மனத்தை அடக்குவதே கண்ணனை அடையும் ஒரே வழி.

உங்களை விட்டு அவர் விலகியிருப்பதன் காரணம், உங்களுக்குத் தொடர்ச்சியாக அவரது நினைவை அளிப்பதே. அதனால் உடலால் விலகியிருந்தாலும் மனத்தால் கண்ணனை  நீங்காமல் இருப்பீர்கள்.

பொதுவாகவே பிடித்த பொருள் அருகிலிருந்தால் மனம் அதில் முழுவதும் ஈடுபடாது. 
மனத்தை முழுமையாக கண்ணனிடம் செலுத்தி முழுமையாக அவரை  நினைத்தால் வெகு விரைவில் அவரை அடைவீர்கள்.

என்று கூறினார்.

இதைக் கேட்ட கோபியர், கண்ணன் நலமா? மகிழ்ச்சியாய் இருக்கிறானா? எங்களை மகிழ்வித்ததுபோல் மதுரா நகரப் பெண்களைத் தன் அன்பாலும் சிரிப்பாலும் மகிழ்விக்கிறானா?
எப்போதாவது பட்டிக்காட்டுப் பெண்களான எங்களது நினைவு அவனுக்கு வருமா?

இங்கு மலர்கள் பூத்துக்குலுங்கும் வனத்தில் பௌர்ணமி இரவுகளில் காற்சலங்கைகள் ஒலிக்க ராஸநடனம் ஆடினான். அது நினைவிருக்கிறதா?

இந்த மலையைப் பாருங்கள். இதைத்தான் ஏழு நாள்கள் தன் சுண்டுவிரலில் தாங்கி எங்களைக் கொடு மழை யிலிருந்து காத்தான்.

அவனுக்குப் பகைவர்களே இல்லை. அரசாட்சியும் கிடைத்துவிட்டது. இனியும் காட்டுவாசிகளாலோ நகரப் பெண்களாலோ அல்லது வேறு எவராலுமோ அவனுக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை.

பற்றற்றிருப்பதே பேரின்பம் என்று எத்தனை விதமாக ஆன்றோர் எடுத்துரைத்தபோதும் எங்களால் கண்ணன் மீதுள்ள பற்றை மட்டும் விடமுடியவில்லை.

இந்த ப்ருந்தாவனம் ஒவ்வொரு கணமும் எங்களுக்குக் கண்ணனை நினைவூட்டுகிறது. எங்களால் எப்படி மறக்கமுடியும்? எங்களைக் கண்ணன்தான் எப்படியாவது கரையேற்றவேண்டும் என்று கூறினர்.

பின்னர் உத்தவரைப் பாராட்டிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Thursday, May 14, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 458

இதன் நடுவில் உத்தவர் அந்த கோபிகளை வணங்கினார். 

ஹே வண்டே! உன் வணக்கங்கள் எமக்கு வேண்டாம். எந்த சமாதான முயற்சியும் வேண்டாம். கண்ணனிடமிருந்து கிளம்பி வந்து அவனைப் போலவே இனிக்க இனிக்கப்‌பேசி அவன் பக்கம் சேரச்சொல்லும் உன்னை நன்கறிவேன். நாங்கள் ஏற்கனவே கண்ணனுக்காக உறவுகள் அனைத்தையும் விட்டு வந்தோம்.‌
எனில் எங்களது ஒரே பற்று கண்ணனே என்பது பொருள். 

இராமாவதாரத்தில் வாலியைக் கொன்றது, சூர்ப்பனகையை மூக்கறுத்தது, வாமனனாக வந்து பலியிடம் தானம் பெற்றது மூன்றையும் சொல்லி நிந்தை செய்கின்றனர். 

பின்னர் இந்தக் கறுப்பனை நம்பி ஏன் பழகுகிறீர்கள் என்று கேட்பாயானால், எங்களுக்கு வேறு வழியில்லை. உடல் வாக்கு மனம் ஆகிய மூன்றாலும் கண்ணனையே பற்றியிருக்கிறோம்‌. அவனைத்தவிர வேறொன்றும் பேச அறியோம்.

கண்ணனின் திருவிளையாடல்களில் மனத்தைப் பறிகொடுத்தவர்கள் அனைவரும் சுகம் துக்கம் போன்ற இரட்டைகளின் பாதிப்பிலிருந்து விடுபடுகின்றனர். அனைத்தையும் விட்டு பிக்ஷூக்களாகவும், பரமஹம்ஸர்களாகவும் திரிகின்றனர். 

ஞானிகளாயிருந்தபோதும் க்ருஷ்ணபக்தியை விடுவதில்லை. சதாசிவ ப்ரும்மேந்திராள் போன்ற பரமஹம்ஸர்கள்

மத சிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே
மஹனீய கபோல விஜித முகுரே - ப்ரும்மனி 
மானஸ ஸஞ்சரரே 

ஸ்ரீ ரமணிகுச துர்க விஹாரே
ஸேவகஜன மந்திர மந்தாரே
பரமஹம்ஸமுக சந்த்ர சகோரே
பரிபூரித முரளீரவதாரே

ஹே மனமே! ப்ரும்மத்தில் லயித்திடுவாய்.  ப்ரும்மம் என்பது யாதெனில் அது தலையில் பீலிவைத்துக்கொண்டிருக்கும். அதன் கன்னங்கள் கண்ணாடிபோலிருக்கும். மஹாலக்ஷ்மி்யுடன் விளங்கும். தன் பக்தர்களின் வீட்டில் சேவகம் செய்யும். என்னைப் போன்ற பரமஹம்ஸர்களின் முக தரிசனத்திற்காக சகோர பட்சியைப் போல் ஏங்கும். புல்லாங்குழலைக் கையில் வைத்துக்கொண்டு அலையும். என்று சொல்கிறார்கள்.

பற்றற்றவர்களின் ஒரே பற்று கண்ணனே. 

அவனது எண்ணம் அதிகமாக ஆக எங்களது விரஹமும் அவன் மீதுள்ள அன்பும் அதிகரிக்கிறது. எனவே வண்டே! நீ அவனைப் பற்றிப் பேசவேண்டாம்.

இவ்வாறு உத்தவரிடம் வண்டை முன்னிட்டுக்கொண்டு பேசிய கோபி, ஒருவாறாக சற்று தேற்றிக்கொண்டு,

நீங்கள் கண்ணனின் தோழர் என்பது உம்மைப் பார்த்தாலே தெரிகிறது. இங்கு எதற்காக வந்தீர்கள்? கண்ணன் ஏதாவது சொல்லியனுப்பினானா? எங்களை அவனிடம் அழைத்துப்போக வந்திருக்கிறீர்களா? கண்ணன் மதுரையில் இருக்கிறானா? எங்களையெல்லாம் நினைவு வைத்திருக்கிறானா? நந்தரையும் யசோதாம்மாவையுமாவது நினைவு கூர்கிறானா? எப்போதாவது இங்கு வருவானா? 

நறுமணம் பொருந்திய அவனது தாமரைக் கரங்களை எங்கள் தலைமேல் வைக்கட்டும். இல்லையேல், எங்கள் தலை விரஹத்தினால் வெடித்துவிடும்போலுள்ளது. என்றால் ஸஹஸ்ராரம் திறந்து முக்தியடைவோம். உயிரை விடுவோம் என்பதாகும்.

உத்தவர் அவர்களது பக்தியைக் கண்டு வாயடைத்துப்போய் நின்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Wednesday, May 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 457

ப்ரமர கீதம்

உத்தவனைக் கண்ட கோபியர் நேரடியாக அவருடன் பேசத் தயங்கினர். அதனால் அங்கு பூக்களைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வண்டை நோக்கிப் பேசத் தலைப்பட்டனர். வண்டை நோக்கிப் பாடப்படுவதால் இந்த கீதம் ப்ரமர கீதம் அல்லது மதுப கீதம் எனப்படுகிறது. 

ஒரு கணம் கூட கண்ணனை மறக்க இயலாத கோபியர் அவனது விரஹத்தால் துடித்து பாடப்படும் ஸ்துதியாகும். மேலோட்டமாகப் பார்த்தால்  நிந்தா ஸ்துதிபோல் அமையப்பெற்றது. ஆனால் உண்மையில் ஒவ்வொன்றும் கண்ணனின் பெருமைகளையும் ஸ்வரூபத்தையும் சொல்பவையாகும்.

பத்து ஸ்லோகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒரு கோபியால் சொல்லப்பட்டதென்றோ அல்லது அத்தனை கோபிகளின் சார்பாகவும் ஒருத்தி பேசினாள் என்றோ கொள்ளலாம்.

கண்ணனை வண்டுடன் ஒப்பு நோக்கி அழைக்கிறாள். ஏனெனில் வண்டு ஒவ்வொரு பூவாகச் சென்று அதன் சாரமான தேனை உறிஞ்சிக்கொள்கிறது. பின்னர் அடுத்த மலருக்குச் செல்கிறது. அதுபோல் கண்ணன் ஒவ்வொரு பக்தரிடமும் சென்று அவர்களது சாரமான பக்தியையும் அன்பையும் அனுபவித்து விட்டுப் பின்னர் புதிய பக்தரிடம் கவனம் செலுத்துகிறான் என்கிறார்கள்.

எனில், யாரிடம் தூய்மையான அன்பிருந்தாலும் கண்ணன் வந்துவிடுவான். அவர் புதிய பக்தர், நேற்றுதான் பக்தி செய்யத் துவங்கினார். இவர் பரம்பரையாக பக்தி செலுத்துபவர் என்ற பேதமில்லாதவன்.

உன் (உத்தவன்) கழுத்திலிருப்பது கண்ணன் சாற்றிக்கொண்ட மாலை என்பது எங்களுக்குத் தெரியும். அதில் குங்குமமும் சந்தனமும் அப்பியிருக்கிறது. பொதுவாக ப்ரும்மச்சாரிகள் இவற்றை ஏற்பதில்லை. எனில் கண்ணனிடம் மயங்கிய மதுரா நகரப் பெண்களின் சந்தனமே மாலையில் அப்பியிருக்கிறது. அதை நீ போட்டுக் கொண்டதால் உன் மீசையிலும் குங்குமம் அப்பியிருக்கிறது. அப்படிப்பட்ட கண்ணனின் தூதன் நீயென்று அறிவோம் என்பதாகும்.

திருமகளே மோஹிக்கும் அழகுடையவன் கண்ணன். எனில் மதுரா நகரப் பெண்கள் எம்மாத்திரம்? இது அவனது தோஷமல்ல. அவனது அழகு அனைவரையும் மயக்கக்கூடியது என்பது மறைபொருள்.

மற்ற பெண்களின் பிரசாதம் எங்களுக்கு வேண்டாம். அதை நீயே வைத்துக்கொள் என்கிறார்கள். என்றால் கண்ணன் வந்தால் வரட்டும். அதுவரை அவனது விரஹமே சுகம். அன்புக்காக ஏங்கினால் கண்டிப்பாக வருவான். பிரசாதம் கொடுத்து தாபத்தை சமனப்படுத்திவிட்டால் அவனது வருகை தாமதமாகலாம். எனவே வேண்டாம் என்பதாம்.

ஹே வண்டே! உன்னைப் போன்றவன்தான் கண்ணனும். நீயும் கறுப்பு. அவனும் கறுப்பு. அவனது அன்பை ஒருமுறை அனுபவிக்கச் செய்துவிட்டுச் சென்றுவிட்டான். இப்போது அவனது கதாம்ருதத்தால் உயிர் வாழ்கிறோம். எப்படித்தான் லக்ஷ்மி அவனைவிட்டு நீங்காமல் இருக்கிறாளோ. அவ்வப்போது அவன் புகழ்ந்து பேசும் சொற்களைக்‌கேட்டு மயங்கியிருப்பாள் போலும். என்றால், கண்ணன் இருக்குமிடத்தில் மஹாலக்ஷ்மி நித்யவாசம் செய்கிறாள் என்பதாம்.

நாங்கள் வீடு வாசலற்ற நாகரிகமற்ற காட்டுவாசிகள். உம் அரசனின் புகழை இங்கு பாடிப் பயனில்லை. மதுரா நகரத்து நாகரிக யுவதிகளிடம் சென்று அவன் புகழைப் பாடினால் நல்ல பரிசு கொடுப்பார்கள். அங்கு சென்று அவன் புகழைப் பாடுவாயாக. கண்ணன் புகழைப் பாடினால் பரிசாக நான்கு புருஷார்த்தங்களும்  நிச்சயம் என்பது பொருளாம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..