Thursday, July 8, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 660

ஸ்ரீ ஸூத பௌராணிகர் மேலும்‌ கூறலானார்.

ஆத்மானந்தத்திலே யே மூழ்கித் திளைத்திருக்கும் ஸ்ரீசுகமுனிவரை வணங்குகிறேன். பற்றற்று நீக்கமற நிறையும் அத்வைதமான பரம்பொருளில் கருத்தூன்றி நிற்பதால் உலகம் வேறு தாம் வேறு என்ற எண்ணம் அற்றவர். எனினும் ஜீவராசிகளின் மேலுள்ள கருணைப் பெருக்கால் இறையன்பை உணர்த்தும் இப்புராணத்தை நமக்கு அருளியிருக்கிறார். அனைத்துப் பாவங்களையும் போக்கவல்ல அந்த வியாசரின் மகனுக்கு என் வணக்கங்கள்.
ப்ரும்மா, இந்திரன், வருணன், மருத்கணங்கள் மற்றும் அனைத்து தேவர்களாலும் துதிக்கப்படும் பகவானை வணங்குகிறேன். ரிஷிகளும் முனிவர்களும் வேதங்கள், அதன் உபாங்கங்கள், மற்றும் உபநுஷத்துக்களால் எந்த பகவானைப் பாடுகின்றனரோ அந்த பகவானை வணக்குகிறேன்.
மனத்தை ஒருமுகப்படுத்தி சிறிது அசையாமல் எந்த பகவானை யோகிகள் தம் இதயத்தில் நிறுத்தி வழிபடுகின்றனரோ அந்த பகவானை வணங்குகிறேன்.
எவ்வளவு முயன்றும் எவராலும் யாருடைய உண்மை ஸ்வரூபத்தை இதுதான் என்று குறிப்பிட்டு அறிய முடியவில்லையோ அந்த பகவானை வணங்குகிறேன்.
பாற்கடல் கடையப்பட்டபோது, மந்தரமலை கடலில் அமிழ்ந்துபோகத் துவங்கிற்று. அதை பகவான் கீழிருந்து கூர்ம ரூபம் எடுத்து தாங்கினார். சுழலும் மாமலையின் கற்களின் உராய்வு முதுகு சொறிந்துவிடுவதுபோல் இருந்ததால் அவருக்கு உறக்கம் வந்தது. உறக்கத்தில் அவரது மூச்சு சற்று வேகமாக வெளிவரவே, அதனால் கடல் கொந்தளிப்படைந்து கரைகள் உடைந்து கலங்கிற்று. அவ்வேகமான மூச்சுக் காற்று நம்மை எப்போதும் காக்கட்டும்.
மேலே, புராணங்களிலுள்ள ஸ்லோகங்களின் எண்ணிக்கை, ஸ்ரீ மத் பாகவதத்தில் கூறப்படும் முக்கியமான விஷயம், அதன் பயன், தானம் செய்யும் முறை, பெருமைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
ப்ரும்மபுராணத்தில் 10000 ஸ்லோகங்களும், பாத்மபுராணத்தில் 55000 ஸ்லோகங்களும், ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் 24000 ஸ்லோகங்களும், ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் 18000 ஸ்லோகங்களும், நாரத புராணத்தில் 25000 ஸ்லோகங்களும், அக்னி புராணத்தில் ஸ்லோகங்களும் உள.
பவிஷ்ய புராணத்தில் 14500, ப்ரும்ம வைவர்த்த புராணத்தில் 18000, லிங்க புராணத்தில் 24000, வராஹ புராணத்தில் 24000, ஸ்காந்த புராணத்தில் 81100, வாமன புராணத்தில் 10000, கூர்ம புராணத்தில் 17000, மத்ஸ்ய புராணத்தில் 14000, கருட புராணத்தில் 19000, ப்ரும்மாண்ட புராணத்தில் 12000 என்பவை ஸ்லோகங்களின் எண்ணிக்கை.
இந்த பாகவதம் முன்பு, பகவானால் ப்ரும்மதேவருக்குக் கூறப்பட்டது. இந்நூல் முழுவதுமே பக்திக் கதைகளும், வைராக்யம் ஊறும் கதைகளுமாக விளக்கப்பட்டுள்ளன.
பகவானின் உண்மை ஸ்வரூபமே இந்நூலின் கருப்பொருள். முக்தியே நூலின் பயன்.
புரட்டாசி மாதத்தில் தங்க சிம்மாசனத்தில் இந்நூலை வைத்து தானம் செய்பவர் உயர்ந்த நிலையைப் பெறுகிறார்.
இந்த பாகவத புராணம் உலகில் ப்ரகாசிக்கும் வரையே மற்ற புராணங்களும் ஒளிரும். ஸர்வ வேதாந்த ஸாரம் என்று போற்றப்படும் இப்புராணத்தில் ஒரு முறை ஈடுபடுபவர் வேறெந்த நூலையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.
ஸ்ரீ மத் பாகவதம் மிகவும் தூயமையானது. விஷ்ணு பக்தர்களுக்கு மிகவும் பிரியமானது. மாயையின் கலப்படமே இல்லாதது.
இதைப் படிப்பவர், கேட்பவர், அதிலுள்ள கதைகளைச் சிந்திப்பவர் அனைவரும் சிறந்த பக்தியைப்‌பெற்று முக்தியடைகிறார்கள்.
ஸர்வ சாட்சியான,
ஸத்ய ஸ்வரூபனான பகவானுக்கு நமஸ்காரம்!
பரீக்ஷித் மன்னனுக்கு ஸ்ரீ மத் பாகவதத்தை உபதேசம் செய்து அவரை முக்தி பெறச் செய்த ஸ்ரீசுகாசார்யாருக்கு நமஸ்காரம்!
தோன்றிய காலம் முதல் இன்று வரை பாராயணம் செய்தும், ஸ்ரீ மத் பாகவதக் கதைகளைக் கூறியும் மக்களை உய்வித்து, இன்று நம் கைகளில் தவழும்படி செய்திருக்கும் ஸ்ரீ ஸத்குருநாதர் வரை அத்தனை கோடி மஹான்களுக்கும் கோடானு கோடி நமஸ்காரம்!
நாம ஸங்கீர்த்தனம் யஸ்ய
ஸர்வ பாப ப்ரணாசனம்
ப்ரணாமோ துக்க ஶமன:
தம் நமாமி ஹரிம் பரம்||
கூறிய மாத்திரத்தில் பாவங்களைக் களையும் நாமங்களை உடையவரும், சரணாகதி செய்த மாத்திரத்தில் துன்பங்களைக் களைந்து அமைதி நல்கும் திருவடிகளை உடையவருமான பகவான் ஸ்ரீ ஹரியை வண்க்குகிறேன்.
ஹரி: ஓம்.
தத் ஸத்||
ஸ்ரீமத் பாகவத புராணம் நிறைவுற்றது.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Wednesday, July 7, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 659

ஸூதர் கூறினார். இந்த ஸ்த்ர யாகத்தின் இடைவெளியில் நீங்கள் கேட்டவாறே பகவானின் திருவிளையாடல்கள், அவதாரங்கள், அவற்றின் பயன் அனைத்தையும் நான் அறிந்தவரை கூறிவிட்டேன்.

யார் ஒருவர் இடறி விழும்போதோ, துன்பத்தின்போதோ, தும்மல் வரும்போதோ, தன்னிலை மறந்த நிலையிலோ, ஹரி ஹரி என்று கூறுவாரோ அவர் அனைத்துப் பாவங்களினின்றும் அக்கணமே விடுபடுகிறார்.
பகவானின் திருநாமங்கள் இடம், பொருள், காலம் என்ற பேதங்கள் அற்றது. அவற்றை வாயாரப் பாடினாலோ கேட்டாலோ பகவான் இதயத்தில் குடியமர்ந்துவிடுகிறார்‌. காரிருளைச் சூரியன் சிதறடிப்பது போல அவரது துன்பங்களைச் சிதறடிக்கிறார்.
பகவானின் திருநாமங்களை உச்சரிக்காத நாவிலிருந்து வரும் சொற்கள் எவ்வளவு பொருள் பொதிந்ததாயினும் அவை சாரமற்றவை.
ஆடம்பரங்கள் நிறைந்த அவற்றில் அழகில்லை. எனவே வீண் சொற்களாகின்றன. பகவத் குணத்தை உணர்த்தும் சொற்களே ஆத்ம அனுபவத்தையும், சாந்தியையும் தரக்கூடியவை.
அச்சொற்களே இனிமையானவை, மனத்தை மயக்கக்கூடியவை. ஒவ்வொரு முறை சொல்லும்போதும் கேட்கும்போதும் புதிய இனிய சுவையைத் தரக்கூடியவை‌. அவற்றைக் கேட்பதால் எல்லையற்ற கவலை எனும் வலை அறுபடும். நிலையான ஆனந்தம் கிடைக்கும்.
சொல்லழகும், கருத்தழகும், நடையழகும் இருப்பினும் உயிரற்ற சிலையால் யாது பயன்? ஜீவன் உள்ளது பகவன் நாமமே.
பகவத் குணங்களைச் சொல்லும் சொற்களில் எந்த அழகும் இல்லையென்றாலும் அவற்றைத் தான் சான்றோர் கேட்பர். ஏனெனில் அவை பாவங்களைச் சுட்டெரித்து நிம்மதி தருபவை.
பகவத் பக்தி இல்லாத ஞானமே ஆகிலும் அதில் அழகேது? எவ்வளவு உயர்ந்த கர்மா ஆகிலும் அது பகவானுக்கு அர்ப்பணம் செய்யப்படவில்லை எனில் அதன் பயன் மீண்டும் கர்மச்சுழலில் மாட்டிவைக்கும். அதை அடியார் ஏற்கமாட்டார்.
வர்ணாசிரமம், தர்மங்கள், அனுஷ்டானங்கள், ஒழுக்கம், தவம், நற்கல்வி, நற்குடிப்பிறப்பு அனைத்தும் புகழையும், பொருளையும் ஈட்டித் தரலாம். ஆனால், பகவன் நாமமோ, பக்தியோ இல்லாத எவ்வித செயலும் பயனைத் தராது. இறைநாமம் இறைவனின் திருவடிக் கமலங்களில் நீங்காத அன்பைப் பெருக்கும். அது ஒன்றே அத்தனை பேதங்களையும்‌, இடர்ப்பாடுகளையும், பாவங்களையும் களைந்து‌ மனத்தூய்மை தரும். பகவானைப் பற்றிய உண்மை அறிவையும் இறைநாமமே பெற்றுத்தரும்.
ஹே! பெரியோர்களே! நீங்கள் அனைவரும்‌ பாக்யசாலிகள். தினமும் இடையறாமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை உள்ளத்தில் நிறுத்தி வழிபடுகிறீர்கள்.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திற்கு கங்கைக் கரையில் இந்த ஸ்ரீ மத் பாகவதக் கதைகளைக் கூறினார். அப்போது ரிஷிகளும், பெரியோருமாக 88000 பேர் அமர்ந்து கேட்டனர். நானும் அவர்களிடையே அங்கு அமர்ந்து கேட்டேன். இப்போது நீங்கள் அதை நினைவுபடுத்திக் கேட்டு எனக்குப் பெரிய உதவி செய்தீர்கள்.
பகவானின் அனைத்து லீலைகளையும் கேட்கவும், நினைக்கவும், பாடவும் பேறு பெற்றேன்.
யார் தினமும் மன ஒருமையுடன் ஒரு நொடியாவது பகவானின் பெருமைகளைக் கேட்கிறாரோ அல்லது பிறரைக் கேட்கச் செய்கிறாரோ அவர் தன் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கிக்கொள்கிறார்.
ஏகாதசியிலும் துவாதசியிலும் இக்கதைகளைக் கேட்பவர் நீண்ட ஆயுளைப் பெறுகிறார்.
புலனடக்கத்துடன் உபவாசம் இருந்து படிப்பவன் முன் செய்த அத்தனை பாவங்களையும் தொலைக்கிறான்‌. பாவ எண்ணங்களும் அவனை விட்டு விலகுகின்றன.
புஷ்கரம், மதுரா, துவாரகை முதலிய புண்ணியத் தலங்களில் இந்த பாகவதத்தைப் பாரயணம் செய்து கேட்பவருக்கு சம்சார பயம் அறவே விடுபடுகிறது.
இக்கதையைக் கேட்பதால் தேவ, பித்ரு, ரிஷி கடன்கள் தீர்ந்துபோகின்றன. சித்தர்கள், மனுக்கள், அரசர்கள் அனைவரும் மகிழ்கின்றனர்.
சதுர் வேதங்களையும் ஓதிய பலன் இந்தக் கதைகளைக் கேட்பதாலேயே கிடைத்து விடுகிறது.
நியமத்தோடு படிப்பவர் பரமபதத்தை அடைகிறார்.
எத்தனையோ புராணங்கள் இறைவனைப் பாடினாலும் இடையீடே இன்றி ஒவ்வொரு பதத்திலும் இறைவனின் புகழ் பாடப்படுவது ஸ்ரீ மத் பாகவதத்தில் தான். ஒவ்வொரு சொல்லும், பகவான் ஹரியின் ரூபமே.
ஸத் சித் ஆனந்த ஸ்வரூபரான அந்த பகவானை வணங்குகிறேன்.
எந்த பகவான், தன் ஸ்வரூபத்திலேயே ப்ரக்ருதி, புருஷன், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஒன்பது சக்திகளையும் ஒன்றிணைத்து தன் சங்கல்பத்தினாலேயே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்து தானும் அந்தர்யாமியாக அதன் ஒவ்வொரு துளியிலும் வீற்றிருக்கிறாரோ, எவர் ஞானத்தின் ஆதாரமோ, எவருடைய பரமதம் அவரையே அனுபவத்தில் உணர்த்துகிறதோ, எவர் தேவாதி தேவரோ, எவர் ஆதி அந்தமற்றவரோ அந்த பகவானை வணங்குகிறேன்.
என்றார்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Sunday, July 4, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 658

ஸ்ரீமத் பாகவத ஸங்க்ரஹம் - 3

ஒன்பதாம் ஸ்கந்தத்தில் பரசுராமாவதாரம், இளையின் மகன் புரூரவஸ், யயாதி, நகுஷன், யதுவம்சம் ஆகிய கதைகளும் விளக்கப்படுகின்றன.
பத்தாவது ஸ்கந்தம் முழுவதும் பகவான் கண்ணனின் அவதாரக் கதைகளைக் கூறுவதாகும். பிறப்பு, நந்தன் வீட்டிற்கு மாற்றப்படுதல், பல்வேறு அசுரர்களுக்கு முக்தி அளித்தது, எண்ணற்ற லீலைகள், காட்டுத்தீயிலிருந்து கோபர்களைக் காத்தது, காளியனை அடக்கியது, மலைப்பாம்பிடமிருந்து நந்தனைக் காப்பாற்றிய கதை, கோபிகளின் காத்யாயனி விரதம், கண்ணன் அவர்களுக்கருளிய விதம், யக்ஞ பத்னிகளுக்கு அருள் செய்தது, கோவர்தன மலையைத் தூக்கிய கதை, கோவிந்த பட்டாபிஷேகம், ராஸக்ரீடை, சங்கசூடன், அரிஷ்டன், கேசி ஆகியோரின் வதம், அக்ரூரர் வருகை, கண்ணனும் பலராமனும் மதுரா செல்லுதல்.
குவலயாபீடம், மல்லர்கள், மற்றும் கம்ச வதம் ஆகிய கதைகள், சாந்தீபனியிடம் கல்வி பயின்றது, அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்ட கதை,
கண்ணன் உத்தவனோடும் பலராமனோடும் மதுராவில் நிகழ்த்திய பல இனிய லீலைகள், ஜராஸந்தனுடன் பன்முறை யுத்தம் செய்து பூபாரத்தைக் குறைத்தது, காலயவனனை முசுகுந்தரைக் கொண்டு வதம் செய்வித்தது, துவாரகா நிர்மாணம், அனைவரையும் ஒரே இரவில் அங்கே குடியமர்த்தியது.
ருக்மிணியை வென்று அழைத்துவந்து திருமணம் செய்தது, அஷ்ட மஹிஷிகளுடன் திருமணம், தேவலோகத்திலிருந்து கற்பகத் தரு, பாரிஜாத மலர் ஆகியவற்றை எடுத்துவந்தது,
பாணாசுர யுத்தம், அப்போரில் பரமேஸ்வரனைக் கொட்டாவி விடுமாறு செய்து அஸ்திரம் விட்டு, பாணாசுரனின் கரங்களை அறுத்தது.
ப்ராக்ஜோதிஷபுரத்தின் அரசனான நரகாசுரனின் வதம், பதினாயிரம் கன்னிகைகளை சிறை மீட்டு விவாஹம் செய்தது. சிசுபாலன், பௌண்ட்ரகன், சால்வன், தந்தவக்த்ரன், சம்பராசுரன், த்விவிதன், பீடன், முரன், பஞ்சஜனன் ஆகியோரின் வீரம், பகவான் அவர்களை அலட்சியமாக வதம் செய்த கதைகள், காசியை எரித்த கதை, மஹாபாரதப் போர் நிகழ்த்தி பூமியின் பாரத்தைக் குறைத்த லீலை ஆகியவை விளக்கமாகக்‌ கூறப்படுகின்றன.
பதினோராவது ஸ்கந்தத்தில் பகவான் அந்தண சாபத்தைக் காரணமாக வைத்து பல்கிப் பெருகி நின்ற யதுவம்சத்தை அழித்த கதை, உத்தவனுக்கும் கண்ணனுக்கும் நிகழ்ந்த உரையாடல். அதில் உண்மையான ஞானம், பக்தி, வாழ்வியல் நெறி, கண்ணன் பூவுலகை நீத்தது ஆகியவை கூறப்படுகின்றன.
பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் யுகங்களின் லட்சணங்கள், அவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலியுகம் பற்றிய விவரணம், நால்வகை பிரளயங்கள், மூன்றுவிதமான ச்ருஷ்டிகள், பரீக்ஷித் உடலைத் துறத்தல், வியாஸர் வேதங்களைப் பிரித்தல், மார்க்கண்டேயருக்கு மாயையின் தரிசனம், பகவானின் அங்கங்கள், உபாங்கங்கள், சூரிய பகவானின் கணங்கள் ஆகியவை விளக்கப்பட்டன.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Saturday, July 3, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 657

ஸ்ரீமத் பாகவத ஸங்க்ரஹம் - 2
ஐந்தாவது ஸ்கந்தம் ப்ரியவுரதன் சரித்ரம், நாபி, ரிஷபதேவர், பரதர் ஆகியோரின் புண்ணியக் கதைகளைப் பேசுகிறது. மேலும் புவன கோச வர்ணனம் அதாவது ககனமுட்டைக்குள் விளங்கும் தீவுகள், வர்ஷங்கள், கடல்கள், குலபர்வதங்கள் (ப்ரபஞ்ச எல்லைகளாக நிற்கும் மாபெரும் மலைகள்) மகாநதிகள் அவற்றின் அளவு, காலம், தொலைவு, அந்தந்த இடத்தின் மக்கள், அங்கு வழிபடப்படும் பகவானின் அம்சம், மற்றும் பாதாளம், ஸ்வர்கம், நரகம் முதலிய லோகங்களின் விவரங்களும் ஐந்தாம் ஸ்கந்தத்தில் அடங்கும்.
ஆறாவது ஸ்கந்தம் ஸ்ரீ மத் பாகவத ரத்ன மாலையின் பதக்கம் போன்றது‌. இதில் தக்ஷனின் பிறப்பு, அவனது மகள்களின் வம்சங்கள், விருத்திராசுரன் கதை, அவன் முக்தியடைந்த விதம், அஜாமிளனின் கதை ஆகியவை இந்த ஸ்கந்ததில் விளக்கப்படுகின்றன.
ஏழாம் ஸ்கந்தம் முழுவதும் பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான பிரஹலாதனுக்காக ஒதுக்கப்பட்டது. ஹிரண்யகசிபுவின் விரிவான கதை, ப்ரஹலாதனின் குணநலன்கள், வாழ்க்கை, நரஸிம்மாவதாரம் ஆகியவற்றைச் சுவைக்கலாம்.
எட்டாவது ஸ்கந்தம் கஜேந்திர ஆழ்வாரின் சரித்திலிருந்து துவங்குகிறது.
மன்வந்தரங்களின் கதை, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் எடுத்த அவதாரங்கள், ஹயக்ரீவர், கூர்மாவதாரம், தன்வந்த்ரி, மத்ஸ்யாவதாரம், வாமனாவதாரம், பாற்கடல் கடைதல், தேவாசுர யுத்தம், ஆகியவை எட்டாவது ஸ்கந்தத்தில் கூறப்படுகின்றன.
ஒன்பதாவது ஸ்கந்தத்தில் முக்கியமாக விளக்கப்படுபவை ரகு வம்சத்து அரசர்களின் கதைகள் ஆகும். இக்ஷ்வாகு, அவனது வம்சம், இளை, தாரை, சூரிய வம்சக் கதைகள், சுகன்யாவின் கதை, சர்யாதி, ககுத்ஸ்தன், நிருகன், சசாதன், கட்வாங்கர், மாந்தாதா, சௌபரி, சகரன், ஸ்ரீ ராமாவதாரம், நிமி, ஜனக குலம் ஆகியவை விளக்கப்படுகின்றன.

#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே. 

Wednesday, June 30, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 656

ஸ்ரீ மத் பாகவத ஸங்க்ரஹம் - 1

ஸ்ரீ ஸூதபௌராணிகர் இவ்வளவு நேரமாகத் தான் விவரமாக வர்ணித்த ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைக் கூறத் துவங்கினார்.
நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பிக்கேட்ட உயர்ந்ததான இந்த பாகவதக் கதையை என்னால் இயன்றவரை கூறினேன்.
இந்த ஸ்ரீ மத் பாகவதத்தில் யோகிகளால் போற்றப்படும், ஸகல கல்யாண குணங்களும் உடைய பகவானான ஸ்ரீ ஹரியின் பெருமைகள் பேசப்படுகின்றன.
இதில் ப்ரும்ம தத்வம் ரகசியமாக விவரிக்கப்படுகிறது. அதிலிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம், இருப்பு, அழிவு மூன்றும் ஏற்படுகின்றன. இந்த தத்வத்தின் விளக்கங்களும், அவற்றின் பயனான ஞானமும், அதஅதை அடைவதற்கான வழிகளும் விரித்துக் கூறப்பட்டுள்ளன‌.
பக்தியோகம், அதைப் பின்பற்றும் வைராக்யம், துறவு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. முதல் ஸ்கந்தத்தில் பரீக்ஷித்தின் தோற்றம், வியாஸர், நாரதர் இவர்களுக்கிடையே ஆன உரையாடல் மூலம் நாரதரின் வரலாறு ஆகியவை கூறப்படுகின்றன.
முனி குமாரனின் சாபத்தால் பரீக்ஷித், கங்கைக் கரையில் வடக்கிருந்து உயிர்துறக்க முடிவு செய்து அமர்கிறான்‌ அப்போது சுகமுனி அங்கு வர, இருவருக்குமான உரையாடல் கூறப்பட்டது.
இரண்டாவது ஸ்கந்தத்தில் யோக மார்கம், அர்ச்சிராதி மார்கம், நாரதர் மற்றும் ப்ரும்மாவுக்கிடையே ஆன உரையாடல், அவதாரங்களின் கதைச் சுருக்கம், தத்வங்களின் வரிசை, விராட் புருஷன், ச்ருஷ்டி ஆகியவை கூறப்பட்டன.
மூன்றாவது ஸ்கந்தம் விதுரருக்கும் உத்தவருக்குமான உரையாடல், தொடர்ந்து விதுரருக்கும் மைத்ரேயருக்குமான உரையாடல். அதில் ப்ரளயத்தின் போது நிகழும் செயல்கள், பகவானின் யோக நிலை, இந்த ப்ரபஞ்ச ச்ருஷ்டி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஏழு தத்துவங்களால் நிகழும் காரியங்களும், படைப்பும், பிரும்மாண்டத்தின் தோற்றம், அதில் விராட் புருஷனின் நிலை, காலத்தின் பரிமாணங்கள், ப்ரும்மாவின் தோற்றம், இரண்யாக்ஷ வதம், தேவர், அசுரர், மாந்தர் ஆகியோரின் படைப்பு, பதினோரு ருத்ரர்களின் தோற்றம், அர்த்தநாரீ தத்துவம், ஸ்வாயம்புவ மனு, மற்றும் உலகின் முதல் பெண்ணான சதரூபையின் தோற்றம், கர்தம ப்ரஜாபதியின் சரித்ரம், அவரது மனைவி, குழந்தைகள், ஆகியோரின் வரலாறு, கபில பகவானின் தோற்றம், தேவஹூதிக்கும் கபிலருக்குமான உரையாடல் மூலம் சாங்க்ய தத்துவ விளக்கம் ஆகியவை வர்ணிக்கப்பட்டன.
நான்காவது ஸ்கந்தத்தில் மரீசி முதலான ஒன்பது ப்ரஜாபதிகளின் தோற்றம், தக்ஷனின் வேள்வியை வீரபத்ரர் அழித்தல், துருவ சரித்ரம், பிருது, பிராசீனபர்ஹிஸ் ஆகியோரின் சரித்ரங்கள், நாரதருக்கும் ப்ராசீனபர்ஹிஸுக்குமான உரையாடல், புரஞ்ஜனன் கதை ஆகியவை அடங்கும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரசானுபவங்களில் இவையும் சிலவே.

Monday, June 28, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 655

ஐப்பசி மாதத்தின் சூரியன் துவஷ்டா. ரிஷி ஜமதக்னி, நாகம் கம்பளன், அப்ஸரஸ் திலோத்தமா, ராக்ஷஸன் ப்ருமமாபேதன், யக்ஷன் சதஜித், கந்தர்வன் திருதராஷ்டிரன்.

கார்த்திகை மாதத்தின் அதிபதிகள் விஷ்ணு என்னும் சூரியன், அச்வதரன் என்ற நாகம், ரம்பை என்ற அப்ஸரஸ், சூர்யவர்ச்சஸ் என்ற கந்தர்வன்,
ஸத்யஜித், என்ற யக்ஷன், விஸ்வாமித்ர ரிஷி, மகாபேதன் என்ற ராக்ஷஸன் ஆகியோர்.
மார்கழி மாதம் அம்சு என்ற சூரியன், கச்யப ரிஷி, தார்க்ஷ்யன் என்ற யக்ஷன், ருதசேனன் என்ற கந்தர்வன், ஊர்வசி என்ற அப்ஸரஸ், வித்யுச்சத்ரு என்ற ராக்ஷஸன், மகாசங்கன் என்ற நாகம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
தை மாதம் பகன் என்ற சூரியன், ஸ்பூர்ஜன் என்ற ராக்ஷஸன், அரிஷ்டநேமி என்ற கந்தர்வன், ஊர்ணன் என்ற யக்ஷன், ஆயு என்ற ரிஷி, கார்கோடகன் என்ற நாகம் பூர்வசித்தி என்ற அப்ஸரஸ் ஆகியோரால் நடத்தப்படுகிறது.
மாசி மாதத்தை நடத்துபவர்கள் பூஷா என்னும் சூரியன், தனஞ்ஜயன் என்ற நாகம், வாதன் என்னும் ராக்ஷஸன், ஸுஷேணன் என்ற கந்தர்வன், ஸுருசி என்ற யக்ஷன், க்ருதாசீ என்ற அப்ஸரஸ், கௌதம ரிஷி ஆகியோர்.
பங்குனி மாதத்தின் அதிகாரம் பெற்றவர்கள் பர்ஜன்யன் என்ற சூரியன், கிரது என்ற யக்ஷன், வர்ச்சஸ் என்ற ராக்ஷஸன், பரத்வாஜ ரிஷி, சேனஜித் என்ற அப்ஸரஸ், விச்வன் என்ற கந்தர்வன், ஐராவதன் என்ற நாகம் ஆகியோர்.
இவர்கள் அனைவரும் ஆதித்யனான பகவானின் அம்ச பூதங்கள். காலையிலும் மாலையிலும் இவர்களை நினைப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் அழியும்.
சூரியனைப் பற்றி ருக் யஜுர் சாமம் முதலிய மூன்று வேதங்களும் மஹான்களும் ரிஷிகளாலும் பலவாறு ஓதப்படுகின்றன. அப்ஸரஸ்கள் அவர்முன் நர்த்தனமாடுகின்றனர். சூரியனின் தேரை இழுத்துக் கட்டுபவர்கள் நாகர்கள், கந்தர்வர்கள் புகழ்ந்து பாடுகின்றனர். யக்ஷர்கள் அழகுபடுத்துகிறார்கள். அரக்கர்கள் பின்புறமிருந்து தள்ளுகின்றனர். வாலகியர்கள் என்ற அறுபதினாயிரம் ப்ரும்மரிஷிகள் அவரைத் துதித்துக் கொண்டு முன் செல்கின்றனர்‌.
முதலும் முடிவுமற்ற, பகம் எனப்படும் ஆறு குணங்களும் கொண்ட ஸ்ரீ மன் நாராயணன் ஒவ்வொரு கல்பத்திலும் தானே பலவிதமான உருவங்கள் எடுத்து மக்களைக் காக்கிறார்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Sunday, June 27, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 654

சௌனகர் அடுத்த கேள்வி கேட்டார்.

ஸ்வாமி! ஐந்தாவது ஸ்கந்தத்தில் ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், யட்சர்கள், ராக்ஷஸர்கள், தேவர்கள், ஆகிய 7 பிரிவும் சேர்ந்தது சூரியகணம் என்று கூறினீர்கள். இவை ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருப்பதாகக் கூறினீர்களே. பன்னிரண்டு மாதங்களுக்குரிய பன்னிரண்டு கணங்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும் யாவர்? அவர்கள் என்ன பணி செய்கிறார்கள்? என்று கேட்டார்.
ஸூதர் விடையிறுக்கத் துவங்கினார்.
ஸ்ரீ மன் நாராயணனின் மாயையால் உருவாக்கப்பட்டது சூரியமண்டலம். அவரே உலகம் முழுவதும் பயணிக்கிறார்.
பகவான் ஸ்ரீ ஹரியே அனைத்திற்கும் அந்தர்யாமியாக இருப்பவர். அவர் ஒருவராயினும் அனைவரும் பல வடிவங்களில் காண்கின்றனர்‌. அவரே வேதத்தில் கூறப்படும் அத்தனை காரியங்களுக்கும் மூல காரணமாவார்.
விடியும் காலம் முட்கலிய அனைத்துக் காலங்கள், மேடு, பள்ளம், சமம் ஆஹியவை உடைய இடம், வேள்வி முதலான கர்மாக்கள், கர்த்தா, நெயை ஆஹுதி செய்யப் பயன்படும் ஸ்ருக் எனும் கரண்டி, நெல் முதலானவை, வேள்வியின் பயனான ஸ்வர்கம் அனைத்தும் பகவானே.
இவ்வுலக நடைமுறைகள் குறைவின்றி நடைபெறுவதற்காக பகவான் சூரிய நாராயணன் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு கணங்களுடன் சுற்றி வருகிறார்.
தாதா என்ற சூரியன், க்ருதஸ்தலி என்ற அப்ஸரஸ், ஹேதி என்ற அரக்கன், வாசுகி என்ற நாகம், ரதகிருத் என்ற யட்சன், புலஸ்த்ய ரிஷி, தும்புரு என்ற கந்தர்வன் ஆகியோர் சித்திரை மாதத்தில் பணி செய்கிறார்கள்.
அர்யமா என்ற சூரியன், புலஹர், அதௌஜஸ் என்ற யக்ஷன், ப்ரஹேதி என்ற ராக்ஷஸன், புஞ்ஜிகஸ்தலி என்ற அப்ஸரஸ், நாரதன் என்ற கந்தர்வன், கச்சனீரன் என்ற நாகம் ஆகியோர் வைகாசி மாதம் பணி செய்பவர்கள்.
மித்ரன்‌என்ற சூரியன், அத்ரி ரிஷி, பௌருஷேயன் என்ற ராக்ஷஸன், தக்ஷகன், மேனகை, ஹாஹா என்ற கந்தர்வன், ரதஸ்வனன் என்ற யக்ஷன் ஆகியோர் ஆனி மாதத்தின் பணியாளர்கள்.
ஆஷாட (ஆடி) மாதத்தின் பணியாளர்கள் வருணன் எனப்படும் சூரியன், வசிஷ்டர், ரம்பை, ஸகஜன்யன் என்ற யக்ஷன், ஹூஹூ‌என்ற கந்தர்வன், சுக்ர நாகம், சித்ரஸ்வனன் என்ற ராக்ஷஸன் ஆகியோர்.
சிரவண (ஆவணி) மாதம் பணியாற்றுபவர்கள் இந்திரன் என்ற சூரியன், விஸ்வாவசு என்ற கந்தர்வன், சுரோதா என்ற யக்ஷன், ஏலாபத்ர நாகம், ஆங்கிரஸ் ரிஷி, பிரம்லேசா என்ற அப்ஸரஸ், வர்யன் என்ற
ராக்ஷஸன் ஆகியோர்.
புரட்டாசி மாதம் விவஸ்வான் என்ற சூரியன், உக்ரஸேனன் என்ற கந்தர்வன், வியாக்ரன் என்னும் அரக்கன், ஆஸரணன் என்ற ய்க்ஷன், பிருகு, லோசை என்ற அப்ஸரஸ், சங்கபால நாகம் ஆகியோர் பணியாற்றுவர்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில்‌ கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Wednesday, June 23, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 653

விராட் ஸ்வரூப லட்சணங்கள்..

வைகுண்டமே பகவானின் வெண்கொற்றக்குடை. கைவல்யம் அவரது வாசஸ்தலம். மூன்று வேதங்களின் உருவமே கருடன்.
மாயையே அவரது சக்தி. வைகானஸ ஆகமத்தின் ஸ்வரூபமான விஷ்வக்ஸேனர் பகவானின் கைங்கர்யபரர்களின் தலைவர். பகவானின் இயல்பு குணங்களான அஷ்டமா சித்திகளும் உருவமெடுத்து வாயிற்காவலர்களாக நிற்கின்றன.
பகவான் வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என நான்கு உருவங்கள் எடுத்து வியூக மூர்த்திகளாய் நிற்கிறார்.
விழிப்பு (ஜாக்ரத்) நிலையின் அபிமான தேவதையான விஸ்வன் என்பவராக இருந்து பகவான் மற்ற உணர்வுகளை ஏற்கிறார்.
கனவு (ஸ்வப்ன) நிலையின் அங்கமாகியா கனவு நிலையின் அபிமான தேவதையான தைஜசன் என்பவராக இருந்து மனத்திலேயே பல காட்சிகளைக் காண்கிறார்.
ஸுஷுப்தி எனப்படும் உறக்க நிலையின் அபிமான தேவதையான ப்ராக்ஞன் என்பவராகி மனத்தின் வாசனைகளுக்கேற்ப ‌அஞ்ஞானத்தினால் மறைக்கப்படுகிறார். துரீய நிலையின் தேவதையான துரீயன் என்ற பெயரில் ஞானத்திற்கு ஆதாரமாக விளங்குவதும் அவரே.
எல்லா நிலைகளிலும் இருந்துகொண்டு இயக்கும் பகவானுக்கு தான் ஜீவன் என்ற எண்ணமில்லை.
பகவான் தன்னொளி பொருந்தியவர். எங்கும் நிறைபவர். மாயையை ஏற்று ப்ரும்மா என்ற பெயருடன் படைத்தலையும், விஷ்ணு என்ற பெயரில் காத்தலையும், ருத்ரன் என்ற பெயரில் அழித்தலையும்‌ செய்கிறார்.
பெயர்கள் பலவாயினும் அவர் ஒருவரே. அனுபூதிமான்கள் அவரை ஆன்மா என்கிறார்கள்.
கூறிக்கொண்டே போன ஸூதர் தன்னிலை மறந்து உரத்த குரலில் ப்ரார்த்தனை செய்தார்.
ஹே க்ருஷ்ணா! அர்ஜுனனின் ஆத்ம நண்பனே! யாதவகுலத்தில் பிறந்து பூவுலகின் பாரத்தை நீக்கியவனே! வீரத்திருமகனே! பசுக்களின் காவலனே! இடையர்களுக்கும் கோபியர்களுக்கும் நாரதர் முதலானோர்க்கும் அன்பை வாரி வழங்கியவனே! உங்கள் திருநாமம், புகழ், குணங்கள் ஆகியவற்றைக் கேட்பதாலேயே நன்மையை அருள்பவனே! எங்களைக் காத்தருள்வீராக!
என்று மேனி சிலிர்த்து கண்ணீர் மல்கக் கதறினார்.
அதிகாலையில் எழுந்து தூய்மையுடன் புருஷோத்தமனான பகவானின் அங்கங்கள், உப அங்கங்கள், ஆயுதங்கள், ஆகியவற்றை மனம் ஒன்றி தியானிப்பவர் க்கு இதய கமலத்தில் வீற்றிருக்கும் ப்ரும்மஸ்வரூபமான பகவான் தெரிகிறான். ஞானம் கைகூடுகிறது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Monday, June 21, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 652

மார்க்கண்டேயர் பல கோடி காலம் பிரளய அனுபவம் பெற்றார் என்று சொல்லும்போது அது பகவானின் மாயை என்பது புலப்படுகிறது.

அது அவருக்காக தனிப்பட்ட முறையில் பகவானால் கற்பிக்கப்பட்ட ப்ரளயமாகும். பகவானின் சுவாசத்தில் ஏழுமுறை உட்புகுந்து திருவயிற்றினுள் சென்று வெளிவந்ததால் அந்த ஏழு நொடிப் பொழுதுகள் ஏழு கல்பங்களாக மாயையால் காட்டப்பட்டது என்பர் பெரியோர்.
ஶௌனகர் ஸூதரைப் பார்த்துக் கேட்டார்,
முனிவரே!
இம்மை மறுமை பற்றிய உண்மைகளை அறிந்தவர்களுள் சிறந்தவர் தாங்கள். எங்களுக்கு க்ரியா யோகம் பற்றி விளக்குங்கள்.
பாஞ்சராத்ரம், வைகானஸம், மற்றும் தந்திர மார்கங்களில் பகவானை ஆராதனை செய்வது எங்ஙனம்? அவரது அங்கங்கள், கருடன், சுதர்சனம் முதலிய உப அங்கங்கள், கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் எவ்வாறு அறியப்படுகின்றன. இவை பற்றியும் விளக்குவீராக. என்றார்.
ஸூதர் பதிலிறுக்கத் துவங்கினார்.
என் குருவான வியாஸரின் திருவடிகளை வணங்கி ப்ரும்மா முதலான ஆசார்யர்களும், வேதங்களும், ஆகமங்களும் கூறும் பகவானின் விராட் ரூபத்தையும் அதன் பெருமைகளையும் கூற முயல்கிறேன்.
அனைத்து உலகங்களுக்கும் ஆதார ஸ்தலமாக விளங்குவது பகவானின் விராட் ஸ்வரூபமாகும். ப்ரக்ருதி, சூத்திரம், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், அறிவுப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, மனம், ஐந்து மஹா பூதங்கள், ஆகிய அனைத்து தத்துவங்களுக்கும் நிலைக்களனாய் விளங்குவது விராட் ஸ்வரூபம் ஆகும்.
பூமியே அவரது திருவடி, தேவலோகமே தலை, ஆகாயம் தொப்புள், சூரியனே கண்கள், வாயு மூக்கு, எட்டுத் திசைகளும் இரு காதுகள், எண்டிசை லோகபாலர்களும் பகவானின் திருக்கரங்கள், சந்திரனே மனம், யமன் புருவங்கள், வெட்கம் மேலுதடு, பொறாமை கீழுதடு, புன்னகையே மயக்கம், மரங்களே ரோமங்கள், மேகங்களே கேசங்கள்.
பகவான் பிறப்பற்றவர். கௌஸ்துப மணி என்ற சுத்த ஜீவ சைதன்யமான ஆன்மஜோதியை அணிந்திருக்கிறார்.
அதன் ஒளியை ஸ்ரீ வத்ஸமாக அணிகிறார்.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள்‌கொண்ட வனமாலையை மார்பில் அணிகிறார்.
வேதஸ்வரூபமே பீதாம்பரம். அகரம், உகரம், மகரம் என மும்மாத்திரைகள் உடைய ப்ரணவம் முப்புரிநூலாகும்.
ஸாங்க்யம், யோகம் ஆகிய இரண்டும் மகர குண்டலங்கள். ப்ரும்மலோகமே கிரீடமாகும். அனந்தனாகிய ஆதிசேஷன் மூலப்ரக்ருதி. ஸத்வகுணமே தொப்புள்.
மனம், இந்திரியம், உடல்‌ ஆகியவற்றோடு தொடர்புள்ள பிராண தத்வமே கௌமோதகீ எனப்படும் கதை. ஜலதத்துவம் பாஞ்சஜன்யமாகும். சுதர்சனம் தேஜஸ் ஆகும்.
ஆகாயத்தின் நீல நிற தத்துவம் நந்தகி எனப்படும் வாள். தமோ குணம் கேடயம்‌. காலதேவதையே சார்ங்கமாகும். கர்மங்களே அம்புறாத்தூணி.
இந்திரியங்களே அம்புகள். க்ரியா சக்தி கொண்ட மனமே தேர். ஐந்து தன்மாத்திரைகளும் தேரின் வெளிப்புறமாகும். அபயம், வரதம் எனும் முத்திரைகள், பயத்தைப் போக்குவது, வரங்களை அருள்வது ஆகியவற்றைச் செய்கின்றன.
சூரிய மண்டலம் மற்றும் அக்னி மண்டலம் ஆகியவை பகவானின் இருப்பிடங்கள்.
ஆசார்யன் அளிக்கும் மந்திர தீட்சையே சித்த சுத்தி. அதுவே பகவானைப் பூஜிப்பதற்கான தகுதியாகும்.
பக என்னும் சொல்லின் பொருளான ஐஸ்வர்யம், தர்மம், செல்வம், ஞானம், புகழ், வைராக்யம் ஆகிய ஆறும் ஒன்றாகச் சேர்ந்து அவரது திருக்கரத்தில் தாமரையாக விளங்குகிறது. தர்மமும் புகழும் வெண்சாமரமும், விசிறியுமாகும்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Thursday, June 17, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 651

தானாகவே தம்முன் எழுந்தருளிய பரமேஸ்வரனைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து வணங்கினார் மார்க்கண்டேயர். அவருக்கு முறைப்படி இருக்கை அளித்து அனைத்து உபசாரங்களையும் செய்தார்.


உலகனைத்தையும் இயக்கும் மங்கள ரூபரான தங்களை வணங்குகிறேன். என்று துதித்தார்.

அவரது தெள்ளிய மனம் கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரன் அவரைப் பார்த்துக் கூறலானார்.

தேவர்களுக்குத் தலைவர்களாகிய ப்ரும்மா, விஷ்ணு, சிவனாகிய நான் ஆகிய நாங்கள் அளிக்கும் வரங்கள் ஸத்யமாகும். அவை ஒருக்காலும் வீணாவதில்லை. தங்களைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

தாங்கள் விரும்பும் வரத்தைக் கேளுங்கள். இயல்பிலேயே பரோபகாரியும், ஒழுக்கமுடையவர்களாகவும், அமைதியாகவும், பொறாமையின்றியும், பற்றற்றும், அனைத்து ஜீவன்களிடமும் கருணையும், சம நோக்கும், எங்களிடம் பக்தியும் உடையவர்களை எல்லா உலகத்தாரும் பூஜை செய்கின்றனர்.
நானும், ப்ரும்மாவும், விஷ்ணுவும், மற்ற சான்றோரும் இத்தகையோர்களை வணங்குகிறோம். இந்த ஸாதுக்கள் எங்கள்‌ மூவரிடமும் வித்யாசம் காண்பதில்லை. மற்ற ஜீவன்களுக்கும் தமக்கும் கூட வேறுபாட்டை உணர்வதில்லை.
எல்லா நீரும் புனித நீராகாது. எல்லா தெய்வச்சிலைகளும் தெய்வங்கள் அல்ல. அனைத்தையும் பாகுபாடின்றி உய்விப்பது தங்களைப் போன்ற ஸாதுக்களே. ஒரு தெய்வ உபாசனையோ, நதி நீராட்டமோ பல காலம் சிரத்தையாகச் செய்தால்தான் பலன் தரும். ஆனால் ஸாதுக்களின் தர்சனமோ கண்டவுடனேயே ஜீவனைப் பவித்ரமாக்கிவிடுகிறது.
மன ஒருமைப்பாடு, தவம், வேதம், அறநெறி, ஆகியவற்றின் மூலம் சாதுக்கள் இறைவனைத் தமக்குள் நிலை நிறுத்தி நடமாடும் ஆலயங்களாக விளங்குகிறார்கள்.
ஸாதுக்களான உங்களோடு உரையாடுவது, ஏதேனும் சிறிய தொடர்பு ஆகியவற்றின் மூலமே பஞ்சமாபாதகர்கள் கூட மனத்தூய்மை பெற்றுவிடுகிறார்கள்.
என்றார் பரமேஸ்வரன்.
சந்த்ரமௌலீஸ்வரரின் இத்தகைய சொற்கள் மார்க்கண்டேயருக்கு அமுதம்‌ பருகினாற்போல் புத்துணர்வு கொடுத்தன.
ஸகல லோகங்களுக்கும் தலைவரான தாங்கள் என்னைப் போன்ற எளியோரைப் போற்றுவது தங்கள் நீர்மையையும் எளிமையையும் காட்டுகிறது.
அனைத்தும் அறிந்தவராயினும் ஜீவன்களுக்குப் புரிவதற்காக அறநெறிகளை உபதேசம் செய்வதோடு அவற்றை நடந்தும் காட்டுகின்றனர் சான்றோர்.
செப்படி வித்தைக்காரன் மக்களைப் பல மாய வித்தைகளைக் காட்டி மயக்கினாலும் அவனிடம் மயக்கம் இல்லை. அதுபோல பகவான் உலகை நன்னெறியில் செலுத்த லீலையாகப் பல காரியங்களைச் செய்கிறார்.
கனவில் காணும் காட்சியை உறக்கம் கலையும் வரை உணமையென்று எண்ணுவதுபோல ஜீவன்கள் மாயையின் திரை விலகும் வரை அதை ஸத்யமென்ற்ஸத்யமென்ற் எண்ணுகிறார்கள்.
தங்கள் தரிசனத்தாலேயே நான் பூரணனாகிவிட்டேன். இதற்கு மேலாக வேண்டுவதற்கு எனக்கு என்ன இருக்கிறது? தாங்கள் ஏதேனும் அருள விரும்பினால், பகவானின் சரணாரவிந்தங்களிலும், அடியார்களிடத்தும், தங்களிடத்தும் எனக்கு நிலையான பக்தி ஏற்படும்படி அருளுங்கள் என்றார்.
இதைக் கேட்டு பார்வதி தேவி மிகவும் மகிழ்ந்தார். பரமேஸ்வரன் குளிர்ந்து போனார்.
உமக்கு நிலையான பக்தி சித்திக்கட்டும். உலகங்கள் இருக்கும்வரை தங்கள் பெயரும் புகழும் நிலைக்கும். மரணம் ஏற்படாது. என்றும் இளமையோடும், ஆரோக்யத்தோடும் இருப்பீராக. தங்களின் ப்ரும்மதேஜஸ் வளரட்டும். மு க் கால ங் களையும் உணரும் ஞானம், ஆன்ம விஞ்ஞானம், வைராக்யம் ஆகியவை நிலைக்கட்டும். புராணங்களை எடுத்துக் கூறி பலருக்கும் குருவாக நல்வழி காட்டுவீராக என்று அருளினார்.
பின்னர், பரமேஸ்வரன் பார்வதியிடம் மாயையின் சக்தியையும் மார்க்கண்டேயரின் மஹிமைகளையும் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றார்.
அதுமுதற்கொண்டு மார்க்கண்டேயர் பக்தி வெள்ளத்தைப் பெருக்கிக்கொண்டு உலகெங்கும் சுற்றித் திரிந்து வருகிறார்.
இந்தக் கதையை மனம் ஒன்றிக் கேட்பவர் சொல்பவர், சொல்லத் தூண்டுபவர் ஆகிய மூவரும் பிறவிப் பயனை எய்துவர். அவர்களின் பிறவிச் சுழல் முற்றிலுமாக அறுபடும் என்றார் ஸூத பௌராணிகர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Wednesday, June 16, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 650

சட்டென்று மார்க்கண்டேயருக்கு இவை அனைத்தும் யோகமாயையின் விளைவு, தாம் கேட்ட வரத்தைப் பூர்த்தி செய்யவே இக்காட்சிகள் என்று புரிந்துவிட்டது.

இப்படிப்பட்ட மாயையிலிருந்து விடுபட ஒரே வழி பகவானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதே என்று அறிந்துகொண்டார்.

உடனே பகவானைத் துதிக்கத் துவங்கினார்.

இறைவா! தங்களது மாயையின் சக்தியை நன்கு கண்டேன்‌. அவை அனைத்தும் மாயக்காட்சிகள், பொய் என்று தெரிந்தாலும், சத்யமான வஸ்துவைப் போல் எங்கும் விளங்குகிறது. பெரிய ஞானிகள் கூட இதில் விதிவிலக்கல்ல. இந்த மாயையின் பயம் நீங்க தங்கள் திருவடிகளைத் தொழுகிறேன். அபயமளியுங்கள்.

என்று ப்ரார்த்தனை செய்துகொண்டே தன்னிலை மறந்து துரீய நிலைக்குச் சென்றுவிட்டார்.

அப்போது வான்வழியில் பரமேஸ்வரனும் பார்வதி தேவியும் ரிஷபத்தின் மேலேறி தம் சிவகணங்கள் சூழ சென்றுகொண்டிருந்தனர்.

கீழே மார்க்கண்டேயரைப் பார்த்த பார்வதி தேவிக்கு தாயன்பு பெருகிற்று.

ஐயனே! காற்றில்லாதபோது அசையாமல் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப்போல அனைத்து இந்திரியங்களையும் ஒடுக்கி மனம் அடங்கி தன்னிலை மறந்து இருக்கும் இந்த அந்தணர் மீது கருணை வையுங்கள். இவரது தவத்திற்கேற்ற பலனைத் தாங்கள் அருளவேண்டும்‌ என்றார்.

பரமேஸ்வரனும் அதைக் கேட்டு‌மிகவும் மகிழ்ந்து பதிலிறுத்தார். எனக்கும் கூட இவருடன் உரையாட மிகவும் விருப்பமாயிருக்கிறது. இவர் பகவான் நாராயணனை மனத்தில் இருத்தி புலன்களை வென்றுவிட்டார். முக்தியில் கூட விருப்பமில்லாதவர்க்கு என்ன பலனைக் கொடுத்து விட முடியும்.
இத்தகைய ப்ரும்ம ஞானிகளைப் பார்ப்பதே மிகவும் அரிது. இவர்களுடன் பேசுவது பெரும் பேறன்றோ. வா. போய்ப் பார்க்கலாம். என்று கூறினார். அனைவரும் அந்த ஆசிரமத்திற்குள் இறங்கினார்கள்.

இதயத்தில் பகவான் நிலை பெற்றிருந்த படியால் மார்க்கண்டேயர் தன்னைச் சுற்றி நிகழும் எதையும் உணர்ந்தாரில்லை.
பரமேஸ்வரன் அவர் அருகில் சென்று அழைத்துப் பார்த்தார்.

ம்ஹூம்.. சலனமே இல்லை.

அணிமாதி ஸகல சித்திகளிலும் வல்லவரான கைலாசநாதர் தன் யோக மாயையால் மார்க்கண்டேயரின் ஹ்ருதயத்தினுள் புகுந்தார்.

மின்னல் போன்ற பளீரென்ற மேனி, மஞ்சள் நிறத் திருச்சடைகள், மூன்று கண்கள், பத்து கரங்கள், நெடிய திருவுருவம், சூலம், மழு, பரிகம், கேடயம், ருத்ராக்ஷ மாலை, உடுக்கை, ப்ரும்மகபாலம், கத்தி மற்றும் வில்லுடன் திடீரென்று தானே இதயத்தில் வந்து நின்ற பரமேஸ்வரனைக் கண்டு திகைத்தார் மார்க்கண்டேயர். மேனி சிலிர்க்க, ஸமாதி கலைந்தது.

கண்ணைத் திறந்தால் உள்ளே கண்ட காட்சி கண்முன்னே உருக்கொண்டு பரிவாரங்களுடன் நிற்பதைக் கண்டார்.

கிடைத்தற்கரிய பேறு.
தானே வந்து ஆட்கொண்டதே.

கண்டவுடன் கைநழுவிய தடிபோல அப்படியே திருவடிகளில் விழுந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 14, 2021

ஸ்ரீமத் பாகவத பழம் - 649

பிரளய நீரில் பல்லாண்டுகாலம் அலைக்கழிக்கப்பட்ட மார்க்கண்டேய மஹரிஷி ஒரு நாள் ஒரு திடலின் மீது செழித்த ஆலமரம் ஒன்றைக் கண்டார்.


வ்வாலமரத்தின் கிளை நுனியில் ஒரு சிறிய இலையின் மீது ஒரு சின்னஞ்சிறு குழந்தை படுத்திருந்தது.


அக்குழந்தையின் மேலிருந்து பெருகிய ஒளியில் இவ்வளவு நேரம் அவரைச் சூழ்ந்திருந்த இருட்டு காணாமல் போயிற்று.

கார்மேக வண்ணம், தாமரைபோலத் திருமுகம், வலம்புரிச் சங்கு போன்ற கழுத்து, அகன்ற மார்பு, அழகிய நாசி, வில்லைப் போல் வளைந்த புருவங்கள், முன்னெற்றியிலும் கன்னத்திலும் தவழும் சுருண்ட குழல், மாதுளம்பூ போல சிவந்த செவிகள், மனம் மயக்கும் புன்னகை, முத்துப்பல் வரிசை, அரசிலை போன்ற திருவயிறு, அதில்‌ மூன்று மடிப்புகள், ஆழமான தொப்புள், இளந்தளிர் போன்ற திருவிரல்கள், இரண்டு கரங்களாலும் ஒரு காலைத் தூக்கி கட்டைவிரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டிருந்தது.

அக்குழந்தையைப் பார்த்ததும் இத்தனை ஆண்டுகாலமாக அவர் பட்ட துயரெல்லாம் மறந்துபோயிற்று. களைப்பனைத்தும் நீங்கிவிட்டது‌.

பளீரென்று ஒரு மகிழ்ச்சிப் பேரலை இதயம் முழுவதும் வீசி வியாபித்தது. கண்கள் மலர, மேனி சிலிர்த்தது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே இக்குழந்தை யார் என்று மனம் கேள்வியெழுப்பியது.

அதனிடம் பேச எண்ணி அருகில் சென்றார்.
ஒரே கணத்தில் சுதாரிப்பதற்குள் அதன் சுவாசக் காற்றால் இழுக்கப்பட்டு குழந்தையின் திருவயிற்றினுள் சென்று விட்டார்.

அங்கே பிரளயத்திற்கு முன் தான் கண்ட காட்சி போலவே அனைத்து உலகங்களையும், படைப்புகளையும் கண்டார்.

பூமி, சுவர்கம், ஆகாயம், நக்ஷத்ர மண்டலம், மலைகள், கடல்கள், தீவுகள், எட்டு திசைகள்,‌ தேவர்கள், அசுரர்கள், காடுகள், நாடுகள், நகரங்கள், வயல்கள், உழவர்கள், இடைச்சேரிகள், முனிவர்கள், ஆசிரமங்கள், பஞ்ச பூதங்கள், யுகங்கள், கல்பங்களைக் காட்டும் காலம் அனைத்தையும் கண்டார். இடம், பொருள், காலம் ஆகிய அனைத்தும் உண்மையாகவே இருப்பதுபோல் கண்டார்.

புஷ்பபத்ரா நதி, அதன் கரையில் தன் ஆசிரமம், மற்ற முனிவர்களின் ஆசிரமங்களாகிய அனைத்தையும் கண்டார்.

ஒன்றும் புரியாமல் வியப்பின் உச்சிக்கே போனார்.

பார்க்கும்போதே அடுத்த சுவாசத்தால் இழுத்து வெளியே தள்ளப்பட்டு பிரளயக் கடலில் மீண்டும் விழுந்தார்.

மீண்டும் கண்ணெதிரே திடல். அதில் ஆலமரம். ஆலமரக்கிளையில் குழந்தையின் காட்சி. இப்போதும் அதே புன்முறுவலுடன் குழந்தை அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதுவே பரம்பொருள் என்று உணர்ந்தார். பேரன்பு மேலிட
எப்படியாவது அதன் அருகில் சென்று பேசவேண்டும். அதை மார்புறத் தழுவ வேண்டும் என்றெண்ணினார்.

மிகுந்த சிரமப்பட்டு கடலில் இருந்து எழுந்து மணல் திட்டில் கரை ஏறி குழந்தையின் அருகில் சென்றார்.
அனைத்து ஜீவராசிகளின் அந்தர்யாமியான அந்தக் குழந்தை அவர் பார்க்கும்போதே மறைந்துபோயிற்று.

மார்க்கண்டேயர் கண்ட அத்தனையும் மறைந்தது. ஆலமரமும் இல்லை. ப்ரளயக் கடலும் இல்லை. முன்போல் தன் ஆசிரமத்தில் தான் அமர்ந்திருக்கக் கண்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.