Saturday, March 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 239 கடல் கடைந்த கடல்வண்ணன் - 3

தேவர்களும் அசுரர்களும் நாகராஜனான வாசுகியிடம் சென்று, அமுதத்தில் உனக்கும் பங்கு தருகிறோம் என்று இனிக்க இனிக்கப் பேசி அழைத்து வந்தனர்.

நம்பி வந்த வாசுகியை மலையைச் சுற்றிக் கட்டினர். பிறகு, பெரு முயற்சியுடன் மலையைக் கடலில் போட்டு கடையத் துவங்கினர்.

ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டுச் செய்த பகவான், தான் சென்று முதலில் வாசுகியின் தலைப் பக்கம் பிடித்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தேவர்களும் வாசுகியின் தலைப்பக்கம் வந்து பிடித்தனர்.

தன் பக்கம் வந்து பிடித்த தேவர்களைப் பார்த்து பகவான் விஷமமாகச் சிரித்தார். அதைக் கண்ட
அசுரர்கள் அதில் ஏதோ சூது இருக்கிறதென்று சந்தேகம் கொண்டு, பாம்பின் அமங்கலமான வால் பக்கத்தை நாங்கள் பிடிக்கமாட்டோம்.
தேவர்களை விட நாங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவர் அல்லர் என்றனர்.

அவர்களைக் கண்டு பகவான் புன்முறுவல் பூத்தவாறு வாசுகியின் வால் பக்கம் சென்றார். அவரைத் தொடர்ந்து தேவர்களும் வாசுகியின் வால் பக்கம் சென்று பிடித்துக்கொண்டன. தங்கள் உரிமையை மீட்டதாக மகிழ்ந்த அசுரர்கள் தலைப் பக்கம் பிடிக்க, பாற்கடலைக் கடையத் துவங்கினர்.
பெரும்பலம் படைத்த அனைவரும் சேர்ந்து உறுதியாகப் பிடித்துக்கொண்டு கடைந்தபோதும், மலை பாரம் தாங்காமல் கடலில் மூழ்கத் துவங்கியது.

தங்கள் முயற்சி வீணாவது கண்டு தேவர்களும் அசுரர்களும் உற்சாகம் இழந்தனர். அவர்கள் மனம் சோர்வதைக் கண்டு மனம் பொறாத பகவான் தானே பெரிய ஆமை உருவம் கொண்டு கடலுக்குள் இறங்கினார். மலைக்கடியில் சென்று முதுகில் தாங்கினார்.

மலை மேலே எழும்புவதைக் கண்டு அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியோடு கடையத் துவங்கினர். அழுத்தி அழுத்திக் கடைய கடைய மலை பகவானின் முதுகில் சுழன்றது.
அவ்வளவு பெரிய மலையின் அடிப்புறம் முழுதும் பகவான் முதுகில் படிய அவர் ஒரு பெரிய தீவைப் போல் பாற்கடலில் பரந்து விரிந்திருந்தார்.

மலை அவர் முதுகில் சுழல்வது கூர்மபகவானுக்கு முதுகைச் சொறிந்து கொடுப்பதுபோல் இருந்ததாம்.

கடல் கடையத் துவங்கியதும், தேவர்களின் பக்கத்தில் ப்ரத்யக்ஷமாக நின்று கடைந்த பகவான், அசுரர்களின் உடலினுள் பெரும் சக்தியாகப் புகுந்தார். களைப்படைந்த தேவர்களின் உடலிலும் சக்தியாகப் புகுந்தார். கடையும்போது ஏற்படும் சிரமத்தால் வாசுகிக்குத் துன்பம் ஏற்படாத வாறு மயக்கமாகப் புகுந்தார்.

மலை ஒரே அச்சில் சுழல்வதற்காக பகவான் தானே இன்னொரு மாபெரும் மலைபோல் உருக்கொண்டு அதன் கொடுமுடியைப் பிடித்துக் கொண்டார்.

ஒரு பக்கம் மேலே அழுத்திப் பிடித்துக் கொண்டும், இன்னொரு புறம் கீழே மலையைத் தாங்கிக் கொண்டும், அத்தனை பேரின் உடலிலும் சக்தியாகவும், தானே நேரிலும் நின்று மலையை சுழற்றி சுழற்றிக் கடைந்தார்.

அப்போது கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் கலங்கின. வாசுகியின் முகத்திலிருந்து கொடுமையான விஷப்புகை கிளம்பியது. அப்புகையால் அசுரர்கள் துன்புற்றனர்.

தேவர்களுக்கும் வாசுகியின் விஷம் நிரம்பிய மூச்சுக்காற்றினால் மயக்கம் வந்தது. பகவான் உடனே காற்றைக் குளிர்வித்து, மேகங்களைத் தூண்டி மழை பெய்வித்தார்.

நீலமேகத் திருமேனி, அரையில் தங்கப் பட்டாடை, காதுகளில் மின்னலன்ன ஒளிரும் மகர குண்டலங்கள், தாமரைக் கண்கள், கழுத்தில் வனமாலை அசைய தாமரைக் கரங்களால் வாசுகியைப் பற்றிக்கொண்டு, முன்னும் பின்னும் அசைந்தசைந்து பாற்கடலைக் கடைந்தார் பகவான்.

வெகுநேரம் கடைந்தபின்பு, கலங்கிய கடலினுள்ளிருந்து முதன்முதலில் வெளியில் வந்தது ஹாலஹாலம் எனப்படும் கொடிய விஷம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, March 29, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 238 கடல் கடைந்த கடல்வண்ணன் - 2

தேவர்கள் ப்ரும்மாவை முன்னிட்டுக்கொண்டு வைகுண்டம் சென்று பகவானைத் தஞ்சமடைந்தனர். தாயுள்ளம் படைத்த பகவான் அவர்களை நோக்கிக் கூறலானர்.

தேவர்களே! என் யோசனையைக் கேளுங்கள். இப்போது அசுரர்களுக்கு நல்ல காலம். எனவே, அவர்களுடன் சமாதானமாகச் செல்லுங்கள்.

நமக்கு பெரிய காரியம் ஆகவேண்டுமானால், அவ்வமயம் அனைவருடனும் சமாதானமாகத்தான் செல்லவேண்டும். காரியம் முடிந்தபின், வேண்டுமானால் பாம்பு எலி போல் பகைமை பாராட்டலாம்.

பாம்பு ஒரு பெட்டியில் அடைபட்டு வருந்திக்கொண்டிருந்தது. அச்சமயம், பெட்டியினுள் திடீரென ஒரு எலி நுழைந்தது. பாம்பைக் கண்டதும் எலி பயந்து ஓடத்துவங்க, பாம்பு அதை அழைத்து சமாதானம் பேசியது.
பயப்படாதே! நான் உன்னை விழுங்கமாட்டேன். நீ என் நண்பன். இந்தப் பெட்டியில் ஓர் ஓட்டை போடு. நாமிருவரும் தப்பி விடலாம்‌
என்று அன்பு பொங்கக் கூறியது. எலி அதன் பேச்சை நம்பி ஓட்டை போட்டது. வெளியே வந்ததும் பாம்பு முதல் வேலையாக எலியை விழுங்கிவிட்டது. சமாதானம் தப்பிக்கும் வரை மட்டுமே. மற்றபடி இயல்பை மாற்ற இயலாது.

நீங்கள் தாமதிக்காமல் சென்று கடலைக் கடைந்து அமுதத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். அதை அருந்தினால் மரணமற்றவர் ஆவீர்கள்.
அனைத்து வகையான மூலிகைகளையும் பாற்கடலில் போட்டு, மந்தர மலையை மத்தாகவும், வாசுகியை நாண்கயிறாகவும் கொண்டு கடையுங்கள். நானும் உதவி செய்வேன். சோம்பேறித்தனமோ, கவனக்குறைவோ இன்றி முழுமுயற்சி செய்தால் அமுதம் கிட்டும்‌. அசுரர்களுக்குத் துன்பமே‌ மிஞ்சும்.

அசுரர்களுடன் சமாதானம் பேசும்போது, அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, அப்படியே ஒத்துக்கொள்ளுங்கள். அமைதியாக இருந்தால் காரியத்தை சாதிக்கலாம். கோபம்‌ கொள்வதால் பயனில்லை.

கடையும்போது விஷம் தோன்றும். அதைக் கண்டு அஞ்சவேண்டாம். இன்னும் பல உயர்ந்த பொருள்களும் தோன்றும். அவற்றில் ஆசை கொள்ளாதீர். ஒருக்கால் நீங்கள் விரும்பும் பொருள் கிடைக்கவில்லை என்றாலும் சினம் கொள்ளக்கூடாது. அமுதம் வரும் வரை பொறுமை காக்கவேண்டும்.

இவ்வாறு கட்டளையிட்டு பகவான் மறைந்துபோனார்.

ப்ரும்மதேவரும், பரமேஸ்வரனும் தத்தம் உலகம் சென்றனர். இந்திரன் முதலான தேவர்கள் நேராக பலிச் சக்ரவர்த்தி யிடம் சென்றனர்.

போருக்கான ஆயத்தமின்றி வெறும் கையுடன் வரும் தேவர்களைக் கண்டு குழப்பமும் கலக்கமும் அடைந்தனர் அசுரர்கள். அசுரர்கள் தேவர்களைப் பிடிக்க ஓடிவர, பலி அவர்களைத் தடுத்தான்.

அரியாசனத்தின் மேல் அமர்ந்திருந்த பலியிடம், சிறந்த புத்திமானான இந்திரன் சமாதானம் பேசினான். பகவான் கூறிய விஷயங்கள் அனைத்தையும் கூறினான். மரணமில்லாமல் காக்க அமுதம் உதவும் என்ற செய்தி அசுரர்களுக்கும் பிடித்திருந்தது.

கிடைக்கும் அமுதத்தில் அனைவர்க்கும் பங்கு என்ற நிபந்தனையுடன் திருப்பாற்கடலைக் கடைய ஒத்துழைப்பதாக ஒப்புக்கொண்டனர்.
தடிதடியாக உடல் படைத்த அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மந்தரமலையைப் பெயர்த்தெடுத்தனர். பெருங்கூச்சலுடன் பாற்கடலுக்குத் தூக்கி வரத் துவங்கினர்.

மந்தரமலையோ பெரும் பாரம். பாற்கடல் வெகுதொலைவில் இருந்தது. அதனால் அனைவரும் களைத்துப்போய், கை சோர்ந்து பாதியிலேயே மலையைக் கீழே போட்டுவிட்டனர்.

பெரும் பாரமான அத்தங்கமலை கீழே விழும்போது அதனடியில் சிக்கி பல தேவர்களும் அசுரர்களும் பொடிப் பொடியாயினர்.

இதைக் கண்டு மற்ற தேவாசுரர்களின் மனோபலம் குன்றிப்போனது. இதைப் பார்த்துக்கொண்டே இருந்த பகவான், மனம் பொறாமல், கருடன் மீதேறி விரைந்து வந்து மலையை அலட்சியமாக ஒரு கையால் தூக்கினார்.

மலைக்கடியில் நசுங்கிப்போயிருந்த தேவர்களையும் அசுரர்களையும் தன் அருட்பார்வையால் எழுப்பினார்.
பின்னர் மலையை கருடன் மேல் வைத்துக்கொண்டு, தானும் அமர்ந்து சென்றார். அனைவரும் அவரைத் தொடர்ந்தனர்.

பாற்கடலை அடைந்ததும் கருடன் மலையை இறக்கி கடற்கரையில் வைத்துவிட்டு, பகவானிடம் அனுமதி பெற்றுத் தன்னிருப்பிடம் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, March 28, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 237 கடல் கடைந்த கடல்வண்ணன் - 1

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
இனி ரைவத மன்வந்தரம் பற்றிக் கூறுகிறேன். நான்காவது மனுவான தாமஸ மனுவின் உடன் பிறந்தவன் ரைவதன். அவனது புதல்வர்கள் அர்ஜுனன், பலி, விந்தியன் ஆகியோர். இதில் இந்திரனாக இருந்தவன் விபு. பூதரயன் முதலானோர் தேவர்கள். இரண்யரோமா, வேதசிரஸ், ஊர்த்வபாகு முதலியோர் ஸப்தரிஷிகள்.

அவர்களில் சுப்ரர் என்ற ரிஷிக்கும் அவர் மனைவி விகுண்டாவிற்கும் வைகுண்டன் என்ற பெயருடன் பகவான் அவதரித்தார்.

சக்ஷுஸ் என்பவரின் புதல்வர் சாக்ஷுஸ் என்பவரே ஆறாவது மனு. அவரது புதல்வர்கள் பூரு, பூருஷன், ஸுத்யும்னன் முதலியோர்.
அந்த மன்வந்தரத்தில் மந்த்ரத்ருமன் என்பவன் இந்திரன். ஆப்யர் முதலியோர் தேவகணங்கள். ஹவிஷ்மான், வீரகன் முதலியோர் ஸப்தரிஷிகள். அப்போது வைராஜகன் என்பவருக்கும் ஸம்பூதி என்பவளுக்கும் அஜிதர் என்ற பெயருடன் பகவான் பிறந்தார். அவரே திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அளித்தவர். கூர்மாவதாரம் செய்து மந்தர மலையைத் தூக்கி நிறுத்தியவரும் அவரே.

பரிக்‌ஷித் உடனே கேட்டான். அதென்ன கதை மஹரிஷி? பாற்கடலை எதற்காகக் கடைந்தார்கள்? ஆமை உருவேற்று பகவான் எதற்காக மந்தர மலையைத் தூக்கினார்?
விவரமாகக் கூறுங்கள் என்றான்.

இக்கேள்வியைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார் சுகமுனி.
பரீக்ஷித்! முன்பொரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில், அசுரர்கள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். தேவர்கள் பலர் படுகாயமடைந்தனர். துர்வாசரின் சாபத்தால், இந்திரனும் தேவர்களும் செல்வங்கள் அனைத்தையும் இழந்தனர்.

அவர்கள் அனைவரும் சுமேரு மலையின் கொடுமுடியிலிருந்த ப்ரும்ம சபைக்குச் சென்று ப்ரும்ம தேவரிடம் முறையிட்டனர்.


ப்ரும்மா, அவர்களிடம் மனமிரங்கினார். பின்னர், தேவர்களே! நீங்கள், நான், மனிதர்கள், விலங்குகள், அசுரர்கள், ஜீவராசிகள் அனைத்திற்கும் புகலிடம் பகவான் ஒருவரே. அவர் சரணத்தையே பற்றுவோம். அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களை ஏற்று முத்தொழில் புரிகிறார். இப்போது ஸத்வ குணமேற்றிருக்கிறார். இந்த ப்ரபஞ்சத்தைக் காக்கும் பொறுப்பு அவருடையது. அவர் நமக்கு நிச்சயம் நன்மை செய்வார்
என்று கூறி அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் சென்றார்.

தேவர்கள் பகவானைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்களே தவிர, அவரைக் கண்டதில்லை. எனவே, ப்ரும்மாவே, மனத்தை ஒருநிலைப்படுத்தி, வேதங்களால் பகவானைத் துதிக்கலானார்.
அவர் சொல் கேட்டு தேவர்களும் பகவானை மனமுருக வேண்டினர். மிக விரிவாக பகவானின் விபூதிகள் அனைத்தையும் புகழ்ந்து அவர்கள் துதி செய்தனர். அப்போது ஸர்வ வல்லமை பொருந்திய பகவான் ஆயிரம் சூரிய ப்ரகாசத்துடன் அவர்கள் முன் தோன்றினார்.

பகவானது ஒளியால், தேவர்களது கண்கள் கூசின. அதனால் சுற்றி இருப்பது எதையும், தங்களையும் கூடப் பார்க்க இயலவில்லை.
பரமேஸ்வரனும், ப்ரும்மாவும் மட்டும் அவ்வொளியைக் கண்டனர். அவ்வழகு தனிச் சிறப்புடையது.

மரகதமலை போன்ற திருமேனி. செவ்வரியோடிய சிவந்த கண்கள், உருக்கி வார்த்த தங்கம் போல் பட்டாடை, அழகே உருவான அங்கங்கள், வில் போல் வளைந்த புருவங்கள், அழகிய திருமுகம், ரத்ன கிரீடம், தோள்வளைகள், மகர குண்டலத்தின் ஒளியால் மின்னும் கன்னங்கள், முத்துமாலைகள், திருமார்பில் திருமகள், கழுத்தில் கௌஸ்துபம், நீண்ட வனமாலை, சுதர்சனமும், சக்ரமும் தாங்கிய திருவுருவம்.

அனைவரும் விழுந்து வணங்கினர்.
நேரில் வந்த பகவானைப் பலவாறு துதித்தபின்,

பகவானே! தங்களை நேரில் காணவேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தோம். இப்போது எங்கள்‌ மனம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைக்கிறது. எங்கள் உள்ளும் புறமும் விளங்குவது தாங்களே. எங்கள் விருப்பம் தங்களுக்குத் தெரியாததா? எங்களைக் காத்து அருள் புரியுங்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கட்டளையிடுங்கள் என்று கூறினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, March 26, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 236

அனைத்து உலகங்களுக்கும் ஒரே ஆதாரமான பகவான் கஜேந்திரனின் குரல் கேட்டு, சுதர்சனத்தைக் கையிலேந்திக்கொண்டு, வேதமே உருவான கருடன் மேலேறி வெகுவேகமாக வந்தார்.

ஒரு பக்கம் காலை ‌முதலை இழுக்க, நிலை தடுமாறிக்கொண்டிருந்த கஜேந்திரன், தன்னைக் காக்கப் பறந்தோடு வரும் பகவானைக் கண்டதும், அருகிலிருந்த தாமரை மலரைத் துதிக்கையால் பறித்தது. துதிக்கையை உயரத் தூக்கி, நாராயணா! அகில குருவே! பகவானே! வணங்குகிறேன்! என்று மனத்தில் நினைத்தபடி சத்தமாகப் பிளிறியது.

அனைத்து ஜீவராசிகளின் தலைவனான இறைவனுக்கு அதன் குரல் புரியாதா? சட்டென்று கஜேந்திரனைப் பிடித்து கரைக்கு இழுத்து வந்தார். அதே சமயம் சக்ராயுதத்தால் முதலை வாயைப் பிளந்தார்.

அப்போது அனைத்து தேவர்களும் பூமாரி பொழிந்தனர். துந்துபி முதலிய வாத்யங்களை முழங்கினர். யானையைப் பீடித்திருந்த முதலை முற்பிறவியில் ஹூஹூ என்ற கந்தர்வனாக இருந்தான். தேவலர் என்ற மஹரிஷியின் சாபத்தால் முதலையானான். இப்போது பகவானது திருவருளால் முதலை உருவிலிருந்து விமோசனம் பெற்றுத் தன் பழைய உருவை அடைந்தான்.

அவன் இறைவனைத் தலையார வணங்கி வலம் வந்து அவரைப் பலவாறு துதித்தான். பின்னர் அனைவரும் பார்க்கும்போதே தன்னுலகம் சென்றான்.

கஜேந்திரன் பகவானது திருக்கரம் பட்டதும் அறியாமைத் தளை நீங்கி, பார்ஷத உருக்கொண்டான். பீதாம்பரமும், நான்கு திருக்கரங்களும், கொண்டு இறைவனை ஒத்த திருமேனியை அடைந்தான்.
கஜேந்திரன் முற்பிறவியில், இந்திரத்யும்னன் என்ற பெயருடன் பாண்டிய தேசத்து மன்னனாக இருந்தான்.

ஸ்ரீமன் நாராயணனை அல்லும் பகலும் பூஜித்து, அனைத்து விரதங்களையும் மேற்கொண்டான்.
ஒரு சமயம் தவம் செய்வதற்காகக் காட்டில் வந்து தங்கினான். ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு, ஜபங்களையும், பூஜைகளையும் செய்துவந்தான்.

அப்போது அகத்திய முனிவர் அங்கு சிஷ்யர்களுடன் எழுந்தருளினார். அவரை கவனித்தபோதும், உபசாரங்கள் எதுவும் செய்யாமல், பூஜையைத் தொடர்ந்தான்.

ஒரு பூஜையோ, விரதமோ மேற்கொள்ளும் சமயத்தில் ஒரு மஹாத்மாவோ, குருவோ, அல்லது பெரியவர்களோ வந்தால், இறைவனே வந்ததாக எண்ணி, அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்த பிறகே பூஜையைத் தொடரவேண்டும்.

அவனது அலட்சியத்தைக் கண்டு கோபம் கொண்ட அகத்தியமுனி, இவனென்ன அறநெறிகளை அறியாதவனா? மதம் கொண்டு அந்தணரை அவமதிக்கிறானே. யானை போல் அறியாமை கொண்டவன். எனவே, யானையாகப் பிறக்கக் கடவது என்று சாபமிட்டார்.

இந்த்ரத்யும்னன் இதுவும் தெய்வ சங்கல்பம் என்று கொண்டான். இறைவனைப் பூஜித்த பலனால், அவனுக்கு யானைப் பிறவியிலும், பக்தி தொடர்ந்தது.

பகவான் அவனை சாபத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுவித்து சாரூப்ய முக்தி அளித்தார். பின்னர் அவனையும் அழைத்துக்கொண்டு கருடன் மீதேறி வைகுண்டம் சென்றார்
.
ஸ்ரீ சுகர் மேலும் கூறினார்.
பரீக்ஷித்! பகவானின் மஹிமையைக் கூறும் இந்த கஜேந்திரனின் கதையைக் கேட்பவர்க்குக் காலபயம் விலகும்.

கெட்ட கனவுகளின் தீய விளைவுகள் அழியும். இம்மையில் புகழும், மறுமையில் ஸ்வர்கமும் கிட்டும். எல்லாத் துன்பமும் விலகவேண்டுமெனில் அதிகாலை இதைப் பாராயணம் செய்ய வேண்டும்.

கஜேந்திரன் துதி கேட்டு மகிழ்ந்து பகவான் பின்வருமாறு கூறினார்.

அதிகாலை எழுந்து பொறி புலன்களை தன்வயப்படுத்தி, என்னையும், கஜேந்திரனான உன்னையும், இத்தடாகத்தையும், திரிகூடம் என்னும் இம்மலையையும், அதிலுள்ள குகை, வனம், மரங்கள், புதர்கள், கொடுமுடிகள், வைகுண்டம், ப்ரும்மதேவரின் ஸத்யலோகம், கைலாயம், பாற்கடல், ஒளிமிகுந்த ஸ்வேதத்தீவு, ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, கௌமோதகீ, சுதர்சனம், பாஞ்சஜன்யம், கருடன், ஆதிசேஷன், திருமகள், ப்ரும்மா, நாரதர், பரமேஸ்வரன், ப்ரஹலாதன், என் திரு அவதாரங்கள், சூரியன், சந்திரன், அக்னி, ப்ரணவம், என் மாயை, பசுக்கள், அறநெறிகள், தட்சனின் பெண்கள், கங்கை, ஸரஸ்வதி, அளகநந்தா, யமுனை, ஐராவதம், துருவன், ஸப்த ரிஷிகள், நளன், தர்மபுத்ரர், ஜனகன், என் விபூதிகள் ஆகியவற்றை மனதார நினைப்பவர்கள் அனைத்து பாவங்களும் நீங்கப்பெறுவர்.

ஹே! இந்த்ரத்யும்னா! நீ கஜேந்திரனாக இருந்தபோது செய்த இத்துதியை ப்ரும்ம முஹூர்த்தவேளையில் சொல்பவர்க்கு, இறுதிக்காலத்தில் தூய்மையான என் நினைவைத் தருவேன்.

இவ்வாறு கூறிய பின்னர், பகவான் பாஞ்சஜன்யத்தை ஊதியவண்ணம் கருடன் மேல் ஏறிச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, March 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 235 கஜேந்திர ஸ்துதி - 2

அனைத்திற்கும் தலைவரான இறைவனே  எல்லா ஜீவன்களுக்கும் அறிபவராகவும், அறியப்படுபவராகவும், சாட்சியாகவும் விளங்குகிறார். தனக்குத் தானே காரணமானவர். பரிபூரணரான அவரை வணங்குகிறேன்.

பொறி புலன்களையும், அதற்கான விஷங்களையும் காண்பார். அவற்றைத் தூண்டுபவர். நிழல் போலிருக்கும் ப்ரபஞ்சம் தங்களை எப்போதும் உணர்த்துகிறது. அதாவது ப்ரதிபிம்பம் தெரிவதாலேயே பிம்பத்தின் இருப்பு நிச்சயமாகிறது. 
அனைத்து பொருள்களிலும் அதன் இருப்பை விளக்கும் இறைவனை வணங்குகிறேன்.

இறைவனுக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எந்த ஒரு மாறுபாடும் இல்லை. பரிணாம மாற்றங்களும் இல்லை. அனைத்து நதிகளுக்கும் புகலிடம் கடல். அதுபோல்,  ஆகமங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முடிவானவர் இறைவனான தாங்களே. அடியார்களும் சான்றோர்களும் தங்களையே தஞ்சமடைகின்றனர். தங்களைப் பன்முறை வணங்குகிறேன்.

அரணிக்கட்டையில் நெருப்பு மறைந்திருப்பது போல், ஞான வடிவினை முக்குணங்களாலான மாயையால் மறைத்து வைத்திருக்கிறீர். முக்குணங்களின் ஏற்றத்தாழ்வினாலேயே பல படைப்புகளைப் படைக்கிறீர்கள். கர்மங்களைப் பற்றற்று செய்பவனுக்கு அனுபவமாக நீங்களே‌ ப்ரகாசிக்கிறீர். அவ்வாறான இறைவனை வணங்குகிறேன்.

தங்களுக்குத் தளைகளே இல்லை. அனைவரையும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவிப்பவர் தாங்களே. கருணையே உருவானவர். சோம்பேறித்தனமே இன்றி  பக்தர்களைக் காப்பவர். அந்தர்யாமியான தங்களை வணங்குகிறேன்.

உடல், மனைவி, மக்கள், உற்றார், உறவினர், வீடு, வாசல்‌, சொத்து ஆகியவற்றில் பற்று கொண்டவர்க்கு தங்களை அடைவது கடினம். ஏனெனில் தாங்கள் பற்றற்றவர். பற்றற்ற முனிவர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவர். ஸர்வேஸ்வரனான‌ தங்களை வணங்குகிறேன்.

தம்மை நாடுபவர்க்கு அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை வழங்குகிறீர். அவர்கள் விரும்பாவிடினும் அனைத்து சுகங்களையும் அருள்பவர் தாங்களே. விஷ்ணுபார்ஷதர் போன்ற உருவமும் தருகிறீர். அந்த இறைவன் என்னைக் காக்கட்டும்.

இறைவனின் அடியார்கள் எல்லா நலன்களையும் தரும் தங்கள் கதையமுதத்தையே விரும்புகின்றனர். அவர்கள் முக்தியைக்கூட விரும்புவதில்லை.

அழிவற்றவர், அக்ஷர ப்ரும்மமானவர், அனைத்து வல்லமைகளும் பொருந்தியவர், இப்படித்தான் என நிச்சயித்துக் கூற இயலாதவர், அணுவிற்கும் அணுவானவர், பெரிதினும் பெரிதானவர், அருகிலேயே இருப்பவர், ஆனால் எட்டிப்பிடிக்க இயலாதவர், முழுமுதற் கடவுள், எல்லையற்றவர், நீக்கமற நிறைந்தவர். இத்தைகைய இறைவனை வணங்குகிறேன்.

இறைவனின் ஒரு கலையின் ஒரு சிறிய அம்சத்தைக் கொண்டு ப்ரும்மா முதலான தேவர்கள் படைக்கப் படுகின்றனர்.

இறைவன் யார்? தேவனா? அசுரனா? மனிதனா? விலங்கா? பெண்ணா? ஆணா? இரண்டுமற்றவரா? சாதாரண ஜீவனா? உலகியலுக்கெட்டாதவரா? ஸத்வம் முதலிய குணங்களா? அல்லது செயல்களா? செயலின் காரணங்களா? ஸத்தா? அஸத்தா? இவ்வாறு ஒவ்வொன்றாக இல்லை இல்லை என்று தள்ளினால், முடிவில் அனைத்தின் காரணமாக எது மிஞ்சுகிறதோ அதுவே இறைவன். அந்தப் பரமாத்மா என்னை இங்கு வந்து காக்கட்டும்.

இந்த யானைப் பிறவியால் என்ன பயன்? நான் ஆன்ம ஒளியைப் பெறவே விரும்புகிறேன். பகவான் ஒருவரால்தான் அது கிட்டும். எனக்கு‌ முதலையின் பிடியிலிருந்து விடுதலை கிடைப்பதை விட, ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை கிடைக்கட்டும்.

தனித்திருப்பவர். ஜீவன்களைப் படைத்து, பொம்மைகளோடு விளையாடுவதுபோல் அவற்றுடன் விளையாடுபவர். ஆனால், இவற்றுக்கெல்லாம் அப்பாலுள்ளவர். பிறப்பற்றவர். அவரையே சரணமடைகிறேன்.

அஷ்டாங்க யோகிகள் கர்மங்களை பக்தியோகத்தால் ஒழித்து கர்மாக்களின் படிவுகளையும், பயன்களையும் எரித்து ஹ்ருதயத்தைத் தூய்மையாக்கி யாரைக் காண்கிறார்களோ அவரை வணங்குகிறேன்.

படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவற்றை எல்லையற்ற வேகத்துடன் செய்கிறீர். எல்லையற்ற சக்தி உள்ள தங்களைப் பலமுறை தொழுவேன்.எல்லையற்ற மகிமையுள்ள தங்களையே அடைக்கலமாகப் பற்றுகிறேன்.

இவ்வாறு உருவமற்ற, பெயரற்ற முழுமுதற்கடவுளை கஜேந்திரன் துதித்தது. ஆகையால் பெயர்களையும், உருவங்களையும் தாங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எந்த தெய்வமும் காக்க முன்வரவில்லை.

 அப்போது, அகில உலகங்களின் ஆன்மாவான ஸ்ரீமன் நாராயணன் அங்கு தோன்றினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, March 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 234 கஜேந்திர ஸ்துதி - 1

முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டு பல காலமாகியும், யானையால் தன்னை விடுவித்துக்கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம், முதலையாவது வெற்றி பெற்றதா என்றால் அதுவுமில்லை. 

உற்றாரும் கைவிட்ட நிலையில் பூர்வ ஜென்ம வாசனையினால் கஜேந்திரன் இதிலிருந்து விடுபட என்ன வழி என்று யோசித்து, இறைவனைச் சரணடையலாம் என்று முடிவு செய்தது. 

எந்த இறைவனை அழைப்பது, அவர் பெயர் என்ன என்பதை எல்லாம் யோசிக்காமல் பொதுவாக, உலகைப் படைத்து காத்து அழிக்கும் ப்ரும்ம ஸ்வரூபத்தை அழைத்தது.

மிகவும் அருமையான இந்த துதியை இயன்றவரை அனுபவிப்போம்.

முற்பிறவியில் இறைவனைப் பூஜித்தபோது செய்த துதிகளின் வாசனையினால் இப்போது துதிக்கலாயிற்று.

சித்ஸ்வரூபனான பகவானாலேயே இவ்வுடல் சைதன்யம் உள்ளதாகிறது. காரணமாகவும், காரணத்திற்கு ஆட்படும் ப்ரக்ருதியாகவும் இருக்கும் ப்ரணவ ரூபமான இறைவனை த்யானிக்கிறேன்.

இந்த ப்ரபஞ்சம் முழுவதும் இறைவனிடம் நிலைத்திருக்கிறது. அவரை காரணமாக அதிஷ்டானமாக வைத்தே ப்ரபஞ்சம் உருவானது. அவரே ப்ரபஞ்சத்தைப் படைத்து, தானே அதில் விளங்கவும் செய்கிறார். ஆனால், இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். அந்த இறைவனைச் சரணடைகிறேன்.

இந்த ப்ரபஞ்சம் சில சமயம்‌ கண்ணுக்குப் புலனாகிறது. ப்ரளய காலத்தில் இறைவனிடம் ஒடுங்குகிறது. எப்போதும் குறைவற்றவர். அவர் இருப்பதற்கு வேறு காரணம் இல்லை. அணுவிற்கு அணுவானவர். மிகவும் உயர்ந்தவர். அந்த இறைவன் என்னைக் காக்கட்டும்.

ப்ரளய சமயத்தில் எண்டிசை பாலர்கள் உள்பட பஞ்ச பூதங்கள், நிமித்த காரணங்கள் அனைத்தும் அழிந்து எங்கும் அடர்ந்த இருள் நிரம்புகிறது. அப்போதும் எவர் ஒருவர் தானாகவே ப்ரகாசிக்கிறாரோ அந்த இறைவன் என்னைக் காப்பாற்றட்டும்.

இறைவனது திருவிளையாடல்களின் ரகசியம் ஒருவருக்கும் தெரியாது. ஒரு நடிகன் போல் பற்பல வேடங்களில் தோன்றுகிறார். தேவர்களும் முனிவர்களும்கூட அவரை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவரது குணங்களையும், புகழையும் முழுமையாகச் சொல்லும் சக்தி ஒருவருக்கும் இல்லை. அத்தகைய இறைவன் என்னைக் காக்கட்டும்.

அவருடைய திவ்ய தரிசனத்திற்கு ஆசைப்பட்டு சான்றோர்கள் அனைத்து பற்றுக்களையும் விடுகிறார்கள். வனம் சென்று கடுமையான விரதங்களை மேற்கொள்கிறார்கள். அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு பாராட்டுகிறார்கள். அந்த இறைவனே எனக்குத் துணை. அவரே எனது புகலிடம்.

இறைவனுக்குப் பிறப்பு, செயல், பெயர், வடிவம் எதுவும்‌ இல்லை. குணமும் குற்றங்களும் இல்லை. அனைத்தும் தேவைக்கேற்ப மாயையைக் கொண்டு  அவ்வப்போது அவர் ஏற்பவை. அந்த இறைவனைச் சரணடைகிறேன்.

இறைவன் உருவமற்றவர். பரமாத்மா. அளப்பரிய சக்தி படைத்தவர். பலப்பல உருவங்களை ஏற்பவர். அனைத்து செல்வங்களும் நிரம்பியவர். அவரை மீண்டும் மீண்டும் வணக்குகிறேன்.

வேறொரு துணையின்றி தானே ஒளிர்பவர். மற்ற அனைத்தும் அவராலேயே ஒளிர்கின்றன. சகல ஜீவராசிகளையும் தன் ஆளுமைக்குள் கொண்டவர். மனம், வாக்கு, சித்தம் ஆகியவற்றுக்கு எட்டாதவர். அந்த பகவானை சரணடைகிறேன்.

அனைத்து கர்மங்களையும் பற்றற்று செய்து முடித்தபின், உள்ளத்தை தூய்மையாக்கி இறைவனுக்கே அர்ப்பணிப்பவன் அவரையே அடைகிறான். அவர் எவ்வித தளைகளும் அற்றவர். சுதந்திரமானவர். ஞானஸ்வரூபர். அவரே முக்தியின்பத்தை அளிப்பவர். அவரைச் சரணடைகிறேன்.

ஸத்வ குணத்தை ஏற்று சாந்தராகவும், ரஜோகுணம் ஏற்று பயங்கர ரூபியாகவும், தமோ குணத்தை ஏற்று மூடன் போலும் உண்மையில் எந்த குணவேறுபாடுகள் அற்றவரும், எங்கும் நீக்கமற நிறைந்தவரும், சைதன்யம் நிரம்பியவரும்  சமமானவருமான இறைவனுக்கு நமஸ்காரம்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, March 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 233 கஜேந்திரன்

பரீக்ஷித், ஸுகமஹரிஷியைப்‌ பார்த்து,

கஜேந்திரன் என்னும் யானையா? அதை பகவான் காத்தது எவ்வாறு? என்று வினவினான்.

சுகர் மிகவும் மகிழ்ந்து பரீக்ஷித்தைக் கொண்டாடிக் கூறத் துவங்கினார்.

திருப்பாற்கடலின் மத்தியில் பத்தாயிரம் யோஜனை உயரமுள்ள திரிகூடம் என்னும் பெரிய மலை உள்ளது. அதன் மத்தியில் வெள்ளி, இரும்பு, தங்கம் ஆகியவற்றிலானால் ஆன மூன்று பெரிய  சிகரங்கள் உள்ளன. அப்பகுதி மிக மிகச் செழிப்பாக விளங்கியது.

நீரோடைகளும், குளங்களும், பற்பல தோட்டங்களும், பல்வகையான மிருகங்களும் நிரம்பிய பகுதி. சித்த சாரண கந்தர்வ வித்யாதரர்கள், நாகர்கள், கின்னரர்கள் ஆகியோர் மகிழ்ந்து அவ்வனங்களில் ஆடிப் பாடினர்.

பூக்களையும் பழங்களையும் வாரி இறைக்கும் மரங்களும், செடிகொடிகளும் அங்கு  நிறைந்திருந்தன.‌ அங்கு மலர்களால் நிரம்பிய அழகிய பெரிய தடாகம் இருந்தது.

அம்மலையிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில், கஜேந்திரன் என்னும் ஆண்யானை தன் பிடிகளுடன் சுற்றித் திரிந்துவந்தது. அநேக யானைகளடங்கிய பெரிய கூட்டத்தின் தலைவனாக அந்த யானை விளங்கியது.

இந்த கஜேந்திரனின் தயவால், பல எளிய மிருகங்கள் சிங்கம் முதலியவற்றின் பயமின்றி சுற்றித் திரிந்தன.

எப்போதும் பல யானைகளுடன் விளங்கியது கஜேந்திரன். ஒரு சமயம், வேனில் காலத்தில் நீரின்றி தாகத்தால் அந்த யானைகள் தவித்தன. நீரைத் தேடி அலையும் சமயம், தாமரை மலர்களின் நறுமணத்தைக் கொண்டு அருகில் தடாகம் இருப்பதை ஊகித்தது கஜேந்திரன். விரைவில் அந்த தடாகத்தை அடைந்தது. இனிமையான நீர் நிரம்பிய அந்த நீர்நிலையைக் கண்டதும் அனைத்து யானைகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தன.

கஜேந்திரன் முதலில் நீரில் இறங்கிற்று. துதிக்கையால் தன் மேல் நீரை வாரியிறைத்துக்கொண்டு, நீர் அருந்தியது. மற்ற யானைகள்‌ மீதும் நீரை வாரியடித்தது.

ஒரு குடும்பத்தலைவன் போல் தன் கன்றுகளையும், பெண்யானைகளையும் குளிப்பாட்டி, நீரூட்டியது.

தடாகம் யானைகளால் கலங்குவதைக் கண்டு அதில் வசித்து வந்த முதலை மிகுந்த சினம் கொண்டது. முன்வினைப்பயனால், கஜேந்திரனின் காலைப் பற்றியது.

ஆபத்தை அறியாமல் விளையாடிக்கொண்டிருந்த யானையரசன் நிலைகுலைந்து போயிற்று. தன் காலை விடுவித்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.
எவ்வளவு போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து தன் காலை விடுவித்துக்கொள்ள இயலவில்லை.

முதலை இன்னும் பலமாக யானையை நீரினுள் இழுக்கலாயிற்று. மற்ற யானைகள் மிகவும் வருத்தமுற்று பிளிறிக்கொண்டு, தங்கள் தலைவனை வெளியில் இழுக்க எண்ணிப் பிடித்திழுத்தன. ஆனால், விடுவிக்க முடியவில்லை.

முதலை நீருக்குள் பலம் பொருந்தியதாகவும், யானை நீருக்கு வெளியில் பலமானதாகவும் இருந்தது.

வெகு நாள்களாகியும் கஜேந்திரனை விடுவிக்க இயலாததால், மற்ற யானைகள், முயற்சியைக் கைவிட்டு தங்களுக்கும் வேறொரு தலைவனை நியமித்துக்கொண்டு  அவ்விடம் விட்டு அகன்றன.

முதலையும், யானையுமாக ஆயிரம் வருடங்களுக்கு மேல் போராடியும், இருவருக்கும் வெற்றி கிட்டவில்லை.

கஜேந்திரன் உணவில்லாததாலும், தொடர் போராட்டத்தினாலும் உடல் வலுவிழந்து சோர்ந்தது. தான் காப்பற்றிய உறவினர்கள் நிர்கதியாக விட்டுப் பிரிந்ததில் மனமுடைந்து போயிருந்தது.

ப்ராண சங்கடத்தில் மாட்டிக்கொண்ட அந்த யானை யோசிக்கலாயிற்று.

இது விதிப் பயனே ஆகும். எவ்வளவோ காலமாக முயற்சி செய்தும் இதிலிருந்து விடுபட இயலவில்லை. என்னைக் காப்பவரும் எவரும் இல்லை. எனவே, நான் எல்லாம் வல்ல இறைவனைச் சரணடையவேண்டும். அவன் நிச்சயம் காத்தருள்வான். மனிதர்கள் மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் அவனே அடைக்கலம். எனவே அந்த இறைவனைச் சரணடைவேன் என்று நினைத்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, March 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 232 மன்வந்தரங்களின் விவரங்கள்

பரீக்ஷித், சென்ற மன்வந்தரங்களில் பகவான் செய்த லீலைகள் அனைத்தையும் கூறுமாறு சுகரிடம் கேட்டான். சுகர் பரீக்ஷித்தைப் பார்த்துக் கூறலானார்.

இந்த கல்பத்தில்
ஸ்வாயம்புவ மனு முதலான ஆறு மன்வந்தரங்கள் முடிந்துவிட்டன. இவற்றுள் முதல் மன்வந்தரக் கதைகளை உனக்குக் கூறினேன்.

தர்மங்களைக் காக்க ஆகூதியின் மகனாக பகவான் யக்ஞராக அவதரித்தார். பின்னர் தேவஹூதியின் மகனாக கபிலராக அவதரித்து ஸாங்க்ய யோகத்தை நிறுவினார்.
இந்தக் கதைகளையெல்லாம் உனக்கு முன்பே கூறினேன்.

ஸ்வாயம்புவ மனு அரசைத் துறந்து தவம் செய்ய மனைவியுடன் கானகம்‌ சென்றார். 
சுநந்தா எனும் நதிக்கரையில் ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி நூறு வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டார். அப்போது அவர் தினமும் பகவானை ப்ரார்த்தனை செய்வார்.

எந்த சைதன்யத்தினால் இந்த ப்ரபஞ்சம் உயிருள்ளதாக விளங்குகிறதோ அதுவே பரமாத்மா. இவ்வுலகமே உறங்கும்போதும், எவர் சாட்சியாக விழித்திருக்கிறாரோ, அனைத்தும் அறிந்தவர் எவரோ, அவரே பகவான்.

இந்த ப்ரபஞ்சமும், மற்ற ஜீவராசிகளும் அவரிடமே குடிகொண்டிருக்கின்றன. அனைத்திலும் பகவானே நீக்கமற நிறைந்துள்ளார். அனைத்து செல்வங்களும் அவருடையதே.

அவரை புத்தியாலோ, அறிவாலோ, ஊனக்கண்களாலோ, மற்ற புலன்களாலோ அறிய இயலாது. எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் உறைந்து நின்று, ஆனால் எதிலும் ஒட்டாமல் இருக்கும் ஸ்வயம்ப்ரகாசரை சரணடைவோம்.

ரிஷிகளும், முனிவர்களும், ப்ரும்மத்துடன் இரண்டறக் கலக்க விரும்பி கர்மயோகம் செய்கிறார்கள். முடிவில் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள்.

சர்வ சக்தி படைத்த இறைவனும் கர்மங்களைச் செய்கிறார். ஆனால், அவற்றில் பற்று கொள்வதில்லை.

அவரே அனைத்திற்கும் தலைவர். எனவே எவருடைய தூண்டுதலும் இன்றி தானே அறநெறிகளை வகுத்து, அவற்றைக் காக்கவும் செய்கிறார். அத்தகைய பகவானை நான் சரணமாகப் பற்றுகிறேன்.

என்று தினமும் ப்ரார்த்தனை செய்தார் மனு.

ஒரு சமயம், தவத்திலிருந்த அவரைப் புசிப்பதற்காக அசுரர்கள் அவரை நோக்கி ஓடிவந்தனர். அவ்வமயம், யக்ஞ நாராயணர் தேவர்கள் சூழ அங்கு வந்து அசுரர்களைக்‌ கொன்று, மனுவைக் காத்தார்.

அக்னியின் புத்திரரான ஸ்வாரோசிஷர் இரண்டாவது மனு. த்யுமான், ஸுஷேணர், ரோசிஷ்மான் ஆகிய மூவரும் அவரது மகன்கள். 

அந்த மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்தவர் ரோசிஷ்மான். ஊர்ஜஸ்தம்பன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.
அப்போது இருந்த வேதசிரஸ் என்ற ரிஷியின் மனைவி துஷிதா. அவர்கள் இருவருக்கும் விபு என்ற பெயரில் பகவான் மகனாக அவதரித்தார்.

அவர் வாழ்நாள் முழுதும் ப்ரும்மசர்யத்தைப் பின்பற்றினார். அவரைப் பின்பற்றி 88000 ரிஷிகள் ப்ரும்மசர்யத்தில் இருந்தனர்.

ப்ரியவிரதனின் மகனான உத்தமன் மூன்றாவது மனுவாகப் பிறந்தான். அவரது புதல்வர்கள் பவனன், ஸ்ருஞ்ஜயன், யக்ஞஹோத்ரன் ஆகியோர்.

அந்த மன்வந்தரத்தில் வசிஷ்டரின் புதல்வரான ப்ரமதன் முதலானவர்கள் ஸப்தரிஷிகளாக இருந்தனர். ஸத்யர், வேத ச்ருதர், பத்ரர் ஆகியோர் ப்ரதான தேவர்கள். ஸத்யஜித் என்பவர் இந்திரன்.

அச்சமயத்தில் தர்மர் என்பவரின் மனைவியான ஸூந்ருதா என்பவளுக்கு ஸத்யசேநர் என்ற பெயருடன் பகவான் அவதரித்தார்.
அவரோடு ஸத்யவிரதர்கள் என்ற தேவர்கள் இருந்தனர்.

ஸத்யசேனர் இந்திரனின் தோழனாக இருந்து, தீய நடத்தையுள்ள அசுரர்களையும், பூதங்களையும் கொன்றார்.

உத்தமனின் சகோதரன் தாமஸன் என்பவர் நான்காவது மனு. ப்ருது, க்யாதி, நரன், கேது முதலிய பத்துபேர் அவரது புதல்வர்கள்.

ஸத்யகர்கள், ஹரிகள், வீரர்கள் ஆகியோர் தேவர்கள். திரிசிகர் என்பவர் இந்திரன். ஜ்யோதிதர்மன் முதலானவர்கள் ஸப்தரிஷிகள்.

தாமஸ மன்வந்தரத்தில் வித்ருதீ என்பவருக்கு வைத்ருதிகள் என்ற பெயருடைய பல தேவர்கள் தோன்றினர். அவர்கள் மறைந்திருந்த வேதத்தை தங்கள் சக்தியால் காப்பாற்றினர்.

இந்த மன்வந்தரத்தில் தான் ஹரிமேதஸ், ஹரிணி என்ற ரிஷி தம்பதியர்க்கு பகவான் ஹரி என்ற பெயரில் அவதரித்தார். அவர் முதலையிடம் சிக்குண்ட கஜேந்திரன் என்ற யானையைக் காத்தருளினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, March 18, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 231

எட்டாவது ஸ்கந்தம்

இந்த எட்டாவது ஸ்கந்தம் மன்வந்தரங்களின் வர்ணனையுடன் துவங்குகிறது.

கஜேந்திரனுக்கு பகவான் அருள் செய்தது, பாற்கடலைக் கடைதல், மோஹினி அவதாரம், இனி வரும் ஏழு மன்வந்தரங்களின் விவரங்கள், மனுக்களின் விதிகள், பலி ஸ்வர்கத்தை வெற்றி கொண்டது, பயோ விரத மஹிமை, வாமன அவதாரம், மஹாபலிக்கு அருளல், மத்ஸ்யாவதாரக் கதை ஆகியவை இந்த ஸ்கந்தத்தில் விவரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பகுதியாக இயன்றவரை விரிவாகப் பார்க்கலாம்.

Thursday, March 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 230 நாரதரின் கதை

நாரதர் தன் பூர்வாசிரம கதையைக் கூறலானார்.

யுதிஷ்டிரா! என் முற்பிறவியில் சென்ற மஹா கல்பத்தில், ஒரு கந்தர்வனாக இருந்தேன்.
அப்போது என் பெயர் உபபர்ஹணன் என்பதாம். கந்தர்வர்களுள் சிறந்தவனாக இருந்தேன். அனைத்து கந்தர்வர்களும் என்னைப் புகழ்ந்து கொண்டாடுவர்.

அழகு, இளமை, இனிய பேச்சு, உடற்கட்டு‌ ஆகியவற்றால் அனைவரின் மனத்திலும் சுலபமாக இடம் பிடித்துவிடுவேன். தேவ கன்னிகைகள் முதல் எந்தப் பெண் என்னைப் பார்த்தாலும் மனம் மயங்குவர். அதனால் அளவற்ற கர்வம் கொண்டு போகத்தில் திளைத்திருந்தேன்.


ஒரு சமயம் தேவர்கள் ஞான ஸத்ரம் என்னும் வேள்வி நடத்தினர். அங்கு அனைத்து ப்ரஜாபதிகளும் வந்திருந்தனர். வேள்வியின் விராம காலத்தில்  பகவானின் புகழ் பாடுவதற்காக அப்ஸரஸ் பெண்கள் வந்திருந்தனர்.

அது சான்றோர் கூடிய சபை என்பதால் பகவானைப் பற்றி மட்டும்தான் பாடுவார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும், அஹங்காரத்தால், பெண்கள் சூழ, ஒரு பைத்தியம்போல் பாமரத்தனமான ஒரு பாடலைப் பாடிக்கொண்டு அங்கு சென்றேன். இதனால் தேவர்கள் தங்களை அவமதித்ததாக எண்ணி, 'உன் அழகும், பெருமையும் அழியட்டும். பாமரனாகப் பிறந்து பூமியில்‌ உழல்வாய்' என்று சாபமிட்டனர்.

அவர்கள் சாபத்தால் பூமியில்  ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தேன். அங்கு வந்த சான்றோர்களின் அருளாலும், அவர்களுக்குப் பணிவிடை செய்ததாலும், மறுபிறவியில் ப்ரும்மதேவரின் மகனாகப் பிறக்கும் பேறு பெற்றேன்.

சான்றோர்களை அவமதித்தல், சான்றோர்க்குப் பணிவிடை செய்தல் ஆகிய இரண்டு செயல்களின் பலன்களையும் அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.

ஆகவே, தர்மநந்தனா! சான்றோர்க்குச் செய்யும் பணிவிடைகளால் இறைவன் வெகு சீக்கிரம் மனம் மகிழ்கிறார் என்பதை உணர்.

இல்லறத்தானின் அனைத்துப் பாவங்களையும் போக்கும் வழிமுறைகளை உனக்குக் கூறினேன். இந்த அறநெறிகளை ஒருவன் முறைப்படி பின்பற்றினாலேயே, துறவிகள் மிகவும் சிரமப்பட்டு அடையும் பலனை எளிதில் அடைந்துவிடலாம்.

உங்கள் வீட்டில் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த பரப்ரும்மத்தை மகான்கள் தேடியலைகின்றனர். இதுதான் இவரது ஸ்வரூபம் என்று ப்ரும்மா உள்பட ஒருவராலும் நிர்ணயித்துக் கூற இயலாதவர்.
இவரைப் பூஜை செய்வோம். என்றார்.

தர்மபுத்ரர் நாரதர் சொன்னதைக் கேட்டு கண்ணீர் மல்க, கண்ணனை முறைப்படி பூஜை செய்தார்.

பின்னர் நாரதர் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.

ஏழாவது ஸ்கந்தம்‌ முற்றிற்று.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, March 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 229 யுதிஷ்டிர நாரத ஸம்வாதம்

தர்மபுத்ரர் நாரதரிடம் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகளை விளக்கிக் கூறும்படி கேட்டார்.

நாரதர், நான்கு வர்ணத்தவரின் தர்மங்களையும், அவர்கள் வாழ்க்கை நடத்தவேண்டிய முறைகள், பெண்களின் தர்மங்கள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். இவர்களைத் தவிர ஜாதிக் கலப்பால் பிறந்தவர்களின் தர்மங்களையும், விரிவாகக் கூறினார்.

வேதங்களை ஆராய்ந்த ரிஷிகளும், முனிவர்களும் அந்தந்த யுகத்திற்கும், மனிதர்களின் இயல்பிற்கும் ஏற்றவாறு அறநெறிகளை வகுத்துள்ளனர். அவற்றுள் தனக்கென்று விதிக்கப்பட்ட வழிமுறையை ஏற்றுக் கடைமையாகச் செய்பவன் அந்த கர்மங்களாலேயே உயர்ந்து குணாதீதனாகவும், இறைவனுக்குப் பிடித்தவனாகவும் ஆகிறான்.

தொடர்ந்து உழுது சாகுபடி செய்யப்படும் வயல், நாளடைவில் செழிப்பை இழந்துவிடுகிறது. அதில் பயிர் விளைவதும் நின்று போகிறது. நல்ல விதைகளை விதைத்தாலும் கூட முளைப்பதில்லை.

அதுபோல், முற்பிறவி வாசனைகளைத் தாங்கி நிற்கும் மனம், அதிகப்படியான உலக ஆசைகளை அனுபவிப்பதால் திறனிழந்து சேர்ந்து விடுகிறது. அளவோடு இன்பங்களை நுகர்ந்தால் மனச்சோர்வு ஏற்படாது. சொட்டு சொட்டாக விடப்படும் நெய் அக்னியை வளர்க்கும். அதே அக்னியில் ஒரே சமயத்தில் அதிக அளவு நெய்யை ஊற்றினால், அக்னி அணைந்துபோகும்.

ஒவ்வொரு வர்ணத்தாருக்கும், ஏற்ற விதிமுறைகள் கூறப்பட்டாலும், அவர்களது மன இயல்பு பிற வர்ணங்களுக்கேற்றபடி அமையுமானால், அதன் படியே அவனது வர்ணமும் அமைகிறது.

மேலும், ப்ரும்மசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், ஸன்யாசி ஆகியவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் செய்யத் தகாதவை, பின்பற்றவேண்டிய அறங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒரு சமயம் ப்ரஹலாதன், பூவுலகைச் சுற்றி வரும்போது அவதூதர்களைச் சந்தித்ததையும், அவர்களிடம், தியான முறைகள், பகவானை அடையும் வழிகள், மோக்ஷதர்மம் ஆகியவற்றையும் கேட்டுத் தெரிந்தான். அவற்றையும் நாரதர் ஐயம் திரிபற யுதிஷ்டிரருக்கும், சபையோருக்கும் எடுத்துரைத்தார்.

இல்லறத்தான் செய்ய வேண்டிய கர்பாதானம் முதல் இறுதிச் சடங்குவரை உள்ள அத்தனை சடங்குகளின் செயல் முறையையும், அவற்றின் உண்மைப் பொருளையும், பலன்களையும் விரிவாகக் கூறினார். 

மோக்ஷத்தின் வழிகளான பித்ருயானம், தேவயானம் ஆகிவற்றைப் பற்றியும் விரொவாகக் கூறினார். 

பின்னர் ஆன்ம தத்துவம் பற்றி விளக்கலானார்.

உடல் என்பது பொய் என்பதை பஞ்ச பூதங்களின் தன்மையையும் குணங்களையும் கொண்டு மிக விரிவாக விளக்கினார்.

ஆன்மாவின் குணங்கள், இயல்புகள், உணரும் முறைகள் ஆகியவையும் விளக்கப்பட்டன.

மனம், சொல், உடல் வாயிலாகச் செய்யப்படும் அனைட்க்து காரியங்களும், பரமனால் செய்யப்படுபவை. அவனையே சென்றடைபவை என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல் அனைத்தையும் பகவானிடம் அர்ப்பணிப்பது க்ரியாத்வைதம் எனப்படும்.

இவ்வுலகிலுள்ள உறவுகள், பொருள்கள் ஆகியவை அனைத்தும் போகங்களே. இதில் தனது, பிறனது என்ற வேறுபாட்டைத்  துறப்பது த்ரவ்யாத்வைதம் எனப்படும்.

யாருக்கு, எந்த ஒரு பொருள், எச்சமயத்தில் எவ்விடத்தில் எந்த உபாயத்தால் யாரிடமிருந்து பெறலாம் என்று அறநெறிகளில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விதமே வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டும். ஆபத்துக் காலங்கள் தவிர இவற்றிலிருந்து மாறுபடுதல் கூடாது. 

இறையினிடத்தினில் அன்பு கொண்டவன், தன் நித்ய நைமித்ய கர்மாக்களை வீ ட் டி லிருந்து கொண்டே முறைப்படி செய்து,  இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதன் வாயிலாகவே வைகுண்டத்தை அடையலாம்.

தர்மநந்தனா! தேவர்களால் கூட உதவ இயலாத பெரும் ஆபத்துக்களிலிருந்து  பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் தயவால் காப்பாற்றப்பட்டீர்கள். அவரது கருணையாலேயே, அனைத்து அரசர்களையும் வென்று ராஜசூய யாகத்தைச் செய்து முடித்தீர்கள். அவனருளாலேயே இந்த ஸம்ஸார சாகரத்தையும் தாண்டுவீர்கள்.

என்று கூறி, தனது முற்பிறவிக் கதையைக் கூற த் துவங்கினார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, March 11, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 228 புரமெரித்த முக்கண் கரும்பு

தர்மபுத்ரர் கேட்ட கேள்விக்கு நாரதர் விடை  கூறத் துவங்கினார்.

மயன் என்பவன் அசுரர் தலைவன். முன்பொரு சமயம் போரில்,  தேவர்கள் அசுரர்களை வென்றனர். அசுரர்கள் சென்று தங்கள் தலைவனான மயனிடம் முறையிட்டனர்.

அவனும் தன் மாய சக்தியால், தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று பட்டணங்களைப் படைத்து அவர்களிடம் கொடுத்தான்.

அவை எங்கு செல்கின்றன? எப்போது எப்படி வரும்? என்பதை ஒருவரும் அறிய இயலாது. மேலும் அவை, சக்தி வாய்ந்த பல போர்த்தளவாடங்களை உள்ளடக்கியவை.

அசுரர்கள் அவற்றில் மறைந்திருந்து திடீர் திட்டிரென்று தேவர்களைத் தாக்கத் துவங்கினர்.
மூவுலகங்களையும் சற்றும் எதிர்பாராத சமயங்களில் தாக்கி அழிக்கலாயினர்.

மிகவும் துன்பமடைந்ததால், மூவுலகங்களின் தலைவர்களும் பரமேஸ்வரனிடம் சரணடைந்து, 

மஹாதேவா! தங்கள் பக்தர்கள் எங்களை மிகவும் வாட்டி வதிக்கிறார்கள். தயை கூர்ந்து காத்தருளுங்கள் என்று வேண்டினர்.

பரமேஸ்வரன் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய வில்லான பிநாகத்தை எடுத்து முப்புரங்கள்  மீதும் அம்பெய்தினார்.

ஈஸ்வரன் விட்ட அம்பிலிருந்து சூரியக் கிரணங்கள் போல் பலப்பல பாணங்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டு  வெளிக்கிளம்பி முப்புரங்களையும் மறைத்தன.

முப்புரங்களிலிருந்து பல அசுரர்கள்‌ மயக்கமுற்று பூமியில் விழுந்தனர்.
மஹா மாயாவியான மயன் அவர்களைத் தூக்கிக்கொண்டுபோய் தான் ஏற்படுத்திய அமுதக் கிணற்றில் போட்டான்.

அக்கிணற்றின் அமுதம் பட்டதும் அசுரர்கள் உயிர் பெற்றதோடு மட்டுமின்றி வஜ்ரம் போல் பளபளக்கும் உடலையும் பெற்று முன்னிலும் பலசாலிகளாக விளங்கினர்.

பரமேஸ்வரன் தன் எண்ணம் வெற்றியுறாததைக் கண்டு திகைத்தார். அப்போது ஸ்ரீஹரி, அவரிடம் உபாயத்தைக் கூறினார்.

ஸ்ரீமன் நாராயணன் பசுவாகவும், ப்ரும்மதேவர் கன்றுக்குட்டியாகவும் மாறி முப்புரங்களிலிருந்த அமுதக் கிணறுகளின் அமுதம் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்.

அங்கு காவற்காத்த அசுரர்கள் இதைக் கண்டபோதும், பகவான் அவர்களை மாயையால் கட்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மயன் இதைக் கண்டு வருந்தாமல், தன் காவலாளிகளுக்கு தைரியம் கூறினான்.

தேவரோ, அசுரரோ, மனிதரோ, எந்த ஜீவனானாலும், முன் வினைப் பயனை மாற்ற இயலாது. நடக்க வேண்டியது நடந்தே தீரும். மனம் வருந்தாதீர். ஆகவேண்டியதைப் பார்ப்போம் 
என்றான்.

பகவான் ஹரி ருத்ரனுக்கான போர்க்கருவிகள் பலவற்றை உருவாக்கினார். ரதம், தேரோட்டி, குதிரைகள், வில், கவசம், பாணங்கள் அனைத்தையும் ஆக்கித் தந்தார்.

அனைத்தையும் ஏற்றுத் தயாராகி பரமேஸ்வரன் தேரிலேறிக் கிளம்பினார். அபிஜித் முஹூர்த்தத்தில் நாணேற்றி, முப்புரங்களின் மேல் மழைபோல் அம்பு தொடுக்க, அவை எரிந்து சாம்பலாயின. மூவுலகத்தோரும்  வெற்றி முழக்கமிட்டனர். 
பரமேஸ்வரனுக்கு புரமெரித்தோன் என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று.

அனைவரும் இருப்பிடம் சென்றனர்.

பகவான் ஹரியின் திருவிளையாடல்கள் ஒப்பற்றவை. அனைவராலும் புகழப்படுபவை. 
என்றார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, March 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 227 யுதிஷ்டிர நாரத ஸம்வாதம்

நாரதர் தொடர்ந்து கூறலானார்.
தர்மநந்தனரே! 
ப்ரஹலாதனுக்கு பகவான் செய்த அருளைக் கண்டு அனைத்து தேவர்களும் மகிழ்ந்தனர். ப்ரும்மா மீண்டும் பகவானைத் துதி செய்தார். நரஹரி அவரிடம், இனி மீண்டும் இம்மாதிரி வரங்களைத் தராதீர்கள் என்று கூறிவிட்டு அனைவரும் பார்க்கும்போதே மறைந்தார்.

எல்லா தேவர்களையும் ப்ரஹலாதன் முறைப்படி பூஜை செய்ய, அவர்கள் மகிழ்ந்து அவனை வாழ்த்திவிட்டுத்  தத்தம் இருப்பிடம் சென்றனர். 

இவ்வாறு துவார பாலகர்களான ஜெயனும், விஜயனும் திதியின் புதல்வர்களாகப் பிறந்து, பகவானின் கையாலேயே இறந்துபட்டார்கள்.

முனிவர்களின் சாபமானதால், மீண்டும் ராவண கும்பகர்ணர்களாகப் பிறந்தனர். அவ்வமயம் ஸ்ரீ ராமனின் கரத்தால் மடிந்தனர். போர்க்களத்தில் ஸ்ரீ ராமனின் அம்பு பட்டு வீழ்ந்தபோதும், பகவானைப் பார்த்துக் கொண்டே அவரை மனத்திலிருத்திய வண்ணம் உயிர் நீத்தனர்.

அவர்களே இப்போது சிசுபாலன், தந்தவக்த்ரனாகப் பிறந்துள்ளனர். சிசுபாலன் இப்போது நம் கண்ணெதிரிலேயே ஸாயுஜ்யத்தை அடைந்தார்.

பகவான் க்ருஷ்ணனிடம் பகை கொண்ட அனைத்து அசுரர்களும் பகவானை நினைத்ததாலேயே பாவங்கள் நீங்கி ஸாயுஜ்யத்தை அடைகின்றனர். கூட்டில் அடைபட்ட புழு,  குளவியை  நினைத்து பயந்து பயந்து தானும் குளவியாக மாறுவதுபோல் தான் இதுவும்.

தீயோரை நினைத்து நினைத்து விமர்சனம் செய்துகொண்டே இருப்பவருக்கு அந்த தீய குணங்கள் வந்துவிடும். ஸாதுக்களை நினைக்க நினைக்க ஒருவன் தானும் ஸாதுவாகிறான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு ஸாயுஜ்யம் எப்படிப் பொருந்தும் என்று கேட்டாயல்லவா? எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். 

பகவானைப் பெறுவதற்கான பக்தி யோகமும், பாகவத தர்மமும் விளக்கிக்கூறப்பட்டது. பகவத் தத்வமும் விளக்கப்பட்டது.

இந்த சரித்திரத்தை சிரத்தையோடு கேட்கிறவர்களும், சொல்பவர்களும், நினைக்கிறவர்களும் இவ்வுலகத் தளைகளினின்று விடுபடுவர்.

யுதிஷ்டிரா! இம்மாநிலத்தில் தங்களைப் போல் பாக்யவான்கள் எவருமில்லை. ஸாக்ஷாத் பரப்ரும்மமாகிய பகவான், உங்கள் வீட்டில் ஒரு உறவினராய்த் தங்கி, விளையாடி, உங்களிடையே உலா வருகிறார். 
பல பக்தர்களுக்குக் கணநேரக் காட்சியளித்து மறைந்துவிடும் பெருமான், தங்களுடன் வருடக்கணக்காய் உறவாடுகிறார். 

அனைத்து தேவர்களும், முனிவர்களும் அவரது தரிசனம் பெறவேண்டி தங்கள் திருமாளிகைக்கு அடிக்கடி வந்து போகிறார்கள். அந்த பகவான் க்ருஷ்ணன் உங்கள் நண்பன், அம்மான் மகன், உங்கள் கட்டளைகளை முடித்து வைப்பவன், குருவாகவும் இருந்து நல்வழிப்படுத்துகிறான். நீங்கள் அழைக்கும் குரலுக்கு ஓடிவருகிறான்.

இப்போது இச்சபையில் நாங்கள் செய்யும் பூஜையை ஏற்று அவர் அருள் புரியவேண்டும். முன்பொரு சமயம் மயன் என்ற மாயாவி ருத்ரனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த முனைந்தபோது, பகவான் க்ருஷ்ணன்தான் அவரது புகழைக் காத்தார்.

அவ்வாறே அவர் தங்கள் புகழையும் காக்கிறார்.
என்றார்.

உடனே யுதிஷ்டிரர், அதென்ன விஷயம்? மயன் யார்? அவன் ஏன் ருத்ரனின் புகழை அழிக்க முற்பட்டான்? பகவான் எப்படி அவரது புகழைக் காத்தார்? 
என்று கேட்டார்.

நாரதர் மீண்டும் கூறத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, March 9, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 226 பக்த சக்ரவர்த்தி

தான் மட்டுமல்லாது ஜீவகோடிகள் அனைத்தும் உய்யவேண்டும் என்று ப்ரஹலாதன் வேண்டியதைக் கேட்டு நரஹரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படி ஒரு குழந்தையா என்று அவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக, அதுவே ப்ரஹலாதனுக்கு பட்டாபிஷேகமாயிற்று.

பகவான் கூறலானார். அனைத்து நலன்களையும் பெற்ற குழந்தாய்! உன்னைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நீ விரும்பிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருவதற்குச் சித்தமாய் இருக்கிறேன்.

என்னை மகிழ்விக்காதவனுக்கு என் காட்சி இல்லை. என் தரிசனம் பெற்றபின் ஹ்ருதயத்தில் தாபங்களே இருக்கக்கூடாது. நன்மையை விரும்பும் பக்தர்கள் தங்களுடைய அனைத்துச் செயல்களாலும் என்னை மகிழ்விக்கின்றனர். நீ விரும்புவதைக் கேள்.
என்றார்.

பெரும் சாதகர்களும் கூட வரம் என்றால் மயங்குவார்கள். ஆனால், ப்ரஹலாதனோ பகவானே மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டும் எவ்வரத்தையும் விரும்பவில்லை.

சிறு குழந்தையானாலும், வரம் பெறுவது அன்பு மார்கத்தின் தடைக்கல் என்று உணர்ந்திருந்தான்‌.

எனவே, தெளிவாகச் சொன்னான்.

பகவானே! பிறந்தது முதலே இவ்வுலக இன்பங்கள் எதிலும் எனக்கு நாட்டமில்லை. ஆசைக்கூட்டங்களைக் கண்டு பயந்து அவற்றிலிருந்து விடுபடவே தங்களைச் சரணடைந்துள்ளேன். என்னை மீண்டும் ஆசை காட்டவேண்டாம்.

என்னைச் சோதிக்கத்தானே வரம் வேண்டுமா என்று கேட்கிறீர்கள். வரம் பெறுவது ஆசைதானே. எவ்வித ஆசையானாலும் அது பிறவிச் சுழலில் தள்ளிவிடும்.

எவன் தன் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள வரம் கேட்கிறானோ, அவன் பக்தனல்ல. வியாபாரி.

நான் பயன் கருதாத பக்தன். நீங்களும் பயன் கருதாத தலைவர். நம் இருவருக்கும் அன்பைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை. நீங்கள் வரம் கொடுக்க விரும்பினால், என் மனத்தில் இனி வரம் கேட்கும் எண்ணமே எழாமல் இருக்க வரம் தாருங்கள்.

என் மனத்தில் எப்போதும் ஒரே சீராக வீற்றிருங்கள். அழகிய சிங்கரான  தங்கள் நாமம் எப்போதும் என் நாவில் இருக்கட்டும். பரமாத்மாவான தங்களை வணங்குகிறேன். 
என்றான்.

பகவான் அவனைப் பார்த்து அயர்ந்துபோனார். அவனைக் கட்டி உச்சிமோந்து கூறலானார். 
உன்னைப் போன்ற பக்தர்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை. நீ என்னை வென்றுவிட்டாய். நீ விரும்பாவிட்டாலும்,  நானாக, உனக்கொரு வரம் தருகிறேன். 

இந்த மன்வந்தரம் முடியும்வரை மட்டும் என் மகிழ்ச்சிக்காக இவ்வுலகில் அசுரர் தலைவனாக இருந்து அனைத்து இன்பங்களையும் அனுபவி. வேள்வியைத் திருமேனியாகக் கொண்ட நான் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறேன். 

என்னை உன் ஹ்ருதயத்தில் நினைத்துக்கொண்டு ‌என்னைப் பற்றிய கதைகளைக் கேட்டுக்கொண்டிரு. எல்லா செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணம்‌ செய். அப்படிச் செய்வதால் உன் கர்மங்களின் பலன் அழியும். 

இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதன் மூலம் உன் புண்ணிய பலனைக் கரைத்துக்கொள். பற்றற்று கர்மாக்களைச் செய்வதால் பாவபலனை அழித்துக்கொள். காலத்தால் உன் ப்ராரப்த உடலை விட்டு அதன் பின் என்னை வந்து அடையலாம். 

உன்னால் போற்றப்பட்ட எனது இந்த துதியைச் சொல்பவன் அனைத்து கர்மத்தளைகணின்றும் விடுபடுவான் என்றார்.

ப்ரஹலாதன் மீண்டும் கூறினான்.

பெருமானே! என் தந்தை தங்களின் ஈசுவரத் தன்மையை அறியமாட்டார். அவர் தங்களைப் பலவாறு நிந்தித்திருக்கிறார். இந்த விஷ்ணுதான் என் தம்பியைக் கொன்றவன் என்ற பொய்யான நம்பிக்கையில் கோபம் கொண்டு எனக்கும் பல தீங்குகள் புரிந்தார். அவர் செய்த பாவங்களுக்கு எல்லையே இல்லைதான்.

ஆனாலும், தங்கள் திருக்கரம் பட்டதுமே அவை பொசுங்கியிருக்கும்  என்பதிலும் ஐயமில்லை. எனினும் என் தந்தை தூய்மை பெறவேண்டும் என்று பேதையான என் உள்ளம் விரும்புகிறது. அதற்காக அருள் செய்யுங்கள் என்றான்.

பகவான், குழந்தையைத் தன் மடியில் இருந்திக்கொண்டு அவன் தலையைத் தடவிக்கொண்டே பதிலுரைத்தார்.

பவித்ரமானவனே! நீ ஒருவன் இந்தத் திருமாளிகையில் பிறந்ததாலேயே உன் தந்தையும் மற்றும் அவனது முன்னோரின் இருபத்தோரு தலைமுறைகளும், உனக்குப் பினால் வரும் இருபத்தோரு தலைமுறைகளும் பரிசுத்தமாகிவிட்டனர்.

சாதுக்களும், அனுஷ்டானங்களை விடாமல் பின்பற்றுபவர்களும், சமதர்சிகளும், அடக்கமுடையவர்களுமான என் அடியார்கள் எங்கெல்லாம்‌ இருக்கிறார்களோ, அவ்விடங்களும், அங்கு வாழும் உயிர்களும் தூய்மை பெறுகின்றன.

உன்னை முன்னோடியாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் என் அடியார். நீயே பக்தர்கள் அனைவர்க்கும் ஆதர்ச புருஷனாவாய்! 

என்னைத் தீண்டியதாலேயே உன் தந்தை புனிதமாகி விட்டாலும், அவனுக்கான ஈமச் சடங்குகளை விடாமல் செய். உன்னைப் போன்ற நன்மக்களால் செய்யப்படும் கர்மாக்களாலேயே முன்னோர் நல்லுலகங்களை அடைகின்றனர்.

உன் தந்தையின் சிங்காதனத்தை ஏற்றுக்கொள். என்னை மனத்தில் நிறுத்தி எனக்கு அர்ப்பணமாக இந்த ராஜ்யபாரத்தை வகிப்பாய்! 
என்று கூறினார்.

நிஜமான சிங்கத்தின் மடியில் அமர்ந்து, அவரது தாமரைக் கரமே கிரீடமாய், பகவானின் ஆனந்தக் கண்ணீரே அபிஷேகமாய் ஏற்று, ப்ரஹலாதன் ஹரி பக்தர்கள் அனைவர்க்கும் சக்கரவர்த்தியாக பதவியேற்றான்.  குருவை விஞ்சிய சிஷ்யனாக இன்றளவும் விளங்குகிறான்.

ப்ரஹலாத நாரத பராசர புண்டலீக
வ்யாஸ அம்பாரீஷ சுக சௌனக பீஷ்மதால்ப்யான்|
ருக்மாங்கத அர்ஜுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி||

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, March 8, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 225 ப்ரஹலாத ஸ்துதி

இறைவா! ஸத்வ குணத்தின் உறைவிடம் தாங்கள். ப்ரும்மதேவர் முதலான அனைத்து தேவர்களும் யாரிடமும் அசுரர்களான எங்களைப்போல்  வீண்பகை கொள்வதில்லை. 

தங்களது விதம்விதமான அனைத்து அவதாரங்களும் இவ்வுலகின் நலனுக்காகவும், அடியார்களைக் காத்து மகிழ்விக்கவும்தான். 

கோபத்தை விட்டு அமைதி கொள்ளுங்கள். அசுரனைத்தான் கொன்றுவிட்டீர்களே. அதனால், அத்தனை ஜீவன்களும் மகிழ்கின்றன. இப்போது அனைவரும் சாந்தம் கமழும் தங்கள் திருமுகத்தை தரிசிக்க விரும்புகிறோம். எந்த விதமான பயமானாலும் அது நீங்குவதற்காக அனைவரும் தங்களின் இந்த உருவத்தைத் தான் தியானிக்கப் போகிறார்கள்.

தங்களது செந்தீ போல் சுழலும் கண்களையும், கூர்மையான கோரைப் பற்களையும், கழுத்திலுள்ள குடல் மாலைகளையும், குருதி படர்ந்த திருமேனியையும், யானைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் சிம்ம கர்ஜனையையும் கூர்மையான நகங்களையும் கண்டு எனக்கு அச்சமில்லை.

நான் பயப்படுவதெல்லாம், கோரமான இந்த ஸம்ஸாரத்தைக் கண்டுதான். என் முன்வினைப் பயன் எனும் பயங்கரமான ஜந்துக்கள் மத்தியில் விழுந்துகிடக்கிறேன். தங்கள் சரணம் ஒன்றே ஒரே பற்றுக்கோடு. என்னை இப்போதே அழைத்துக் கொள்ளுங்களேன்.

எப்போது முதல் இந்த மாயையில் சிக்கி உழல்கிறேன் என்று அறியேன். ஆனால், தங்களைக் கண்டபின்னும் உழல்வது தகுமா? எனக்கு தங்களிடத்து பக்தியைக் கொடுங்கள்.

எனக்கு மிகவும் பிரியமானவர் தாங்களே. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நன்மை செய்யும் இனிய நண்பர் தாங்களே. நான் பூஜிக்கும் பொருளும் தாங்களே. ப்ரும்மதேவர் தங்கள் திருக்கல்யாண குணங்களை பலவாறாக வர்ணித்துள்ளார். அவற்றை ஸாதுக்கள் வாயிலாக தினமும் கேட்பேன், சொல்லுவேன். அதனாலேயே விருப்பு வெறுப்பு நீங்கப்பெற்று, ஸம்ஸாரப் பெருங்கடலை எளிதில் தாண்டுவேன்.

இறைவா! உலகில் ஒவ்வொரு துன்பம் நீங்குவதற்கும் ஒரு ப்ராயச்சித்தம் உள்ளது. ஆனால், தங்களிடம் பக்தியில்லாது அவை செய்யப்படுமானால், அவை சிறிது நேரமே பலன் தரும். வினையின் வேரையும், தவறு செய்யும் எண்ணத்தையும் அது அறுப்பதில்லை.

ப்ரும்ம தேவர் முதல், உலகில் அனைத்து படைப்புகளின் உபாதான காரணமும் தாங்களே. மற்ற படைப்பாளிகளின் உந்து சக்தியும்‌ தாங்களே.

வெறும் எண்ணக்குவியலான மனம், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள்,‌ஐந்து தன்மாத்திரைகள் ஆகிய பதினாறு ஆரங்களைக் கொண்டது ஸம்ஸார சக்கரம். தங்களது அருளின்றி எவனாவது இந்த சக்கரத்திலிருந்து தப்பிக்க இயலுமா?

ஆலைக் கரும்புபோல் என்னைப் பிழிந்தெடுக்கும் இந்த ஸம்ஸார சக்கரத்தினின்று என்னைக் காத்தருளுங்கள்.

ஸ்வர்க போகங்கள், நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவற்றிறை என் அனுபவத்தினால் வெறுக்கிறேன். ஏனெனில் இவை அனைத்தையும் தன் புருவ நெறிப்பினால் கலங்கடிக்கும் என் தந்தையும் கூட வீழ்ந்தார்.

ஆகவே நான் இவை எதையும் விரும்பவில்லை. தாங்கள் இப்போது என்னருகில் இருப்பினும், மின்னல் போல் தோன்றி மறையக்கூடியவர். தாங்கள் விரும்பி நிரந்தரமாக வாசம் செய்யும் ஒரே இடம், தங்களது அடியார்களின் ஹ்ருதயம். எனவே தங்கள் அடியார்களின் கூட்டத்திலேயே எப்போதும் இருக்க விரும்புகிறேன்.

கானல் நீர் போன்ற பொய்யான உலக இன்பங்கள், நோய் பிடித்தழியும் இவ்வுடல். நிலையாமை முகத்தில் அறைந்தாலும், மனிதனின் மனம் போகங்களையே தேடுகிறது.

தமோகுணமும் ரஜோகுணமும் நிரம்பிய அசுரப் பிறவியான நான் எங்கே? பள்ளம் நோக்கி ஓடிவரும் வெள்ளம்போல், அணையற்றுப் பாயும் தங்கள் கருணை எங்கே?

 அனைத்து தாபங்களையும் போக்கும் தங்கள் திருக்கரத் தாமரைகளை என் தலையில் வைத்தருளினீர்களே! இந்த பாக்யம் தேவர்களுக்குக் கூட இதுவரை கிட்டவில்லையே!

பாமரனைப்போல், தேவர்கள் உயர்ந்தவர்கள், அசுரர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமே உங்களுக்கில்லையே. கற்பகத் தருவைப் போல் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்கள் அருள் அமைகிறதேயன்றி, தாங்கள் உயர்வு தாழ்வு நோக்குவதில்லையே.

விழுங்கக் காத்திருக்கும், காலனாகிய பெருநாகம் குடியிருக்கும் பாழுங்கிணற்றில் கூடாவொழுக்கத்தால் விழத்தெரிந்தேன்‌. நாரதர் வந்து காக்காவிடில், என் நிலைமை என்னவாகியிருக்கும்? எனவே ஸாது சேவையை நான் கைவிடவே இயலாதே.

தங்களிடம் பெருங்காதல் கொண்டுள்ள ஸனகாதியர், தேவர்கள் மற்றும் நாரதரின் சொல்லை மெய்ப்பிக்கவே தாங்கள் ஓடி வந்து என்னைக் காத்தீர்கள்!

ப்ரளய காலத்தில் அனைத்தையும் தங்களுக்குள் ஒடுக்கிக்கொண்டு, யோக நித்திரை செய்கிறீர். நீங்கள் எழும்போது, சிறிய விதையிலிருந்து பெரிய மரம் முளைப்பதுபோல், தங்கள் தொப்புளிலிருந்து இந்த ப்ரபஞ்சம் மீண்டும் முளைக்கிறது.

இதே ப்ரபஞ்சத்தில் தாங்கள் மீன், விலங்கு, பறவை, முனிவர், தேவர்கள் ஆகிய பல திருமேனிகள் தாங்கி அவதரித்து ஜீவன்களின் துன்பத்தைப் போக்குகிறீர்கள்.
ஒவ்வொரு யுகத்திலும் அந்தந்த யுகதர்மங்களைக் காக்கிறீர்கள். மூன்று யுகங்களிலும் வெளிப்படையாகத் தோன்றுவதால் த்ரியுகன் என்ற பெயர் பெறுகிறீர்கள். கலியுகத்தில் மறைந்து நின்று அருள் புரிகிறீர்கள்.

புலன்களால் ஜீவன்களின் மனம்  அலைக்கழிகிறது. 
பற்றினால், இவன் நம்மவன், இவன் பிறன் என்ற வேறுபாடு கொண்டு அலைகிறான். தாங்கள் என் மேல் செலுத்திய அன்பைச் சிறிதேனும் இந்த ஜீவன்களின் மீதும் செலுத்தி அனைவரையும் கரையேற்றுங்கள்.

ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் தங்களுக்கு இது ஒரு சிரமமா? ஒன்றுமறியாதவரிடம்தானே சான்றோர் கருணை மிகக் கொள்வர். 

வைதரணியைக் கடப்பது மற்றவர்க்குச் சிரமம். 
தங்கள் அடியார்களுக்கோ அது சுலபம். என் மனம் தங்கள் திருவடித் தாமரையில் மூழ்கியுள்ளது. எனவே, எனக்கு என்னைப் பற்றிய கவலையே இல்லை. என் கவலை அனைத்தும் உழலும் இந்த ஜீவன்களைப் பற்றித்தான். 

முனிவர்கள் வேண்டுமானால் காடுகளில் சென்று தவமியற்றி முக்தி பெறட்டும். நானோ எவ்வித உதவியுமின்றி பரிதாபமாக உழலும் இந்த ஜீவகோடிகளை விட்டுவிட்டுத் தனியொருவனாக முக்தியடைய விரும்பவில்லை. 

அனைத்திலும் சிறந்த இறைவா! நமஸ்கரித்தல், துதித்தல், இறையர்ப்பணமாகச் செயல்கள் செய்தல், ஸாது சேவை, திருவடி ஸ்மரணம், தங்கள் கல்யாண குணங்களைக் கேட்டல், ஆகிய ஆறும் பக்தியின் முக்கியமான அங்கங்கள். தங்களையே பற்றியிருக்கும் சாதுக்களின் செல்வம் தாங்களே. எனக்கு சாது சேவை எப்போதும் கிடைக்க அருளுங்கள்!

என்று கண்களில் நீர் வழியக் கூறி முடித்தான் ப்ரஹலாதன்.

தனக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவன்களுக்காகவும் சேர்த்து வேண்டும் இந்த ஸ்துதி, ஆகச் சிறந்த துதி என்று அனைத்து சாதுக்களாலும் கொண்டாடப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..