Friday, August 31, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 85 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 29

கபில பகவான் தன் பவள வாய் திறந்து தன்னைச் சுமந்த தாயின் பந்தங்களை அறச்செய்யுமாறு பேசினார்.
அம்மா! நான் அனைத்து ஜீவனுள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன். ப்ரக்ருதி, புருஷன் இவர்களை வழி நடத்துபவன்.

என்னை வணங்குவதால் மரணபயம்‌ நீங்கும்.

என்னிடம்‌ உள்ள பயத்தினாலேயே பஞ்ச பூதங்களும் தன் பணிகளைச் செவ்வனே செய்கின்றன.

ஆகவே, யோகிகளும், பக்தர்களும் பயமே இல்லாத என் சரணத்தையே பற்றுகிறார்கள்.

ப்ரக்ருதி முதலிய தத்வங்களின் இலக்கணத்தைத் தொடர்ந்து கூறினார் கபிலர்.

அன்பு அம்மா! ஆன்மாவைப் பற்றிய உண்மை அறிவே மோக்ஷத்திற்கு வழி காட்டும். அதுதான் மனிதர்களின் யான், எனது என்ற அஹங்காரத்தைக் களைய உதவும்.

இந்த அகில உலகங்களும் எந்த பரமானால் எங்கும் நிரம்பி வழிகிறதோ, அந்த ஆன்மதத்வமே புருஷன்.

அவன் அனாதி. தோற்றமும் முடிவும் இல்லாதவன். ப்ரக்ருதி வயப்படாதவன். ஹ்ருதய குகையில் காட்சி தருபவன். தனக்குத்தானே ஒளிர்பவன்.

ப்ரக்ருதி ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்னும்‌ முக்குணங்கள் உடையது. அதற்கு சுயமாக சக்தி கிடையாது. பகவானுடன் இருப்பதாலேயே சக்தி பெற்று தன் மாயையால் செயல்களைப் புரிகிறது.

ப்ரக்ருதி என்பது ஆவரண சக்தியான மறைக்கும் திறன், விக்ஷேப சக்தியான கலக்கும் திறன் என்று இருவகைப்படும்.

ஆவரண சக்தியோடு ஜீவனுடன் கூடினால் அது அவித்யை அல்லது அறியாமை எனப்படும். விக்ஷேப சக்தியுடன்‌ பகவானைக் கலந்தால், அது மாயை எனப்படுகிறது.

புருஷன் ஜீவன், ஈஸ்வரன் என்று இருவகையாகத் தோன்றமளிக்கிறான்.
ப்ரக்ருதியின் உண்மையறிவு இன்மையால், உலகியல்‌ இன்ப துன்பங்களை அடைகிறான் ஜீவன்.
அதே ப்ரக்ருதியைத் தன்வயப்படுத்தி படைப்பு முதலியவைகளைச் செய்கிறான்.

ப்ரக்ருதியின் உண்மை அறிவைப் பெறும் ஜீவன் ஈஸ்வரனின் ஸ்தானத்தை அடைந்து அவனுடன் கலந்து விடுகிறான்.

அவ்வாறு உண்மை அறிவைப் பெற்ற ஜீவனையும் ஈஸ்வரனையும் வேறுபடுத்த இயலாது.

ப்ரக்ருதியின் உண்மை அறிவற்ற ஜீவன் உலகை ஐந்து வழிகளால் அடைகிறது.

ப்ரக்ருதியின் ஸத்வகுணத்தைக் கொண்டு ஆதிபுருஷன் போன்ற ஜீவன் படைக்கப்படுகிறான்.

அந்த ஜீவன் ப்ரக்ருதியின் சக்தியில் மயங்கித் தன் உண்மை ஸ்வரூபத்தை மறந்துவிடுகிறான். இதனாலேயே ஆண் பெண்களுக்குள் ஈர்ப்புத்தன்மை தோன்றியது. அதை ஜீவன் தன் குணமாக ஏற்றுக்கொண்டான்.

அந்த ஜீவன் முக்குணத்தினால் ஏற்படும் செய்கைகளைத் தான் செய்வதாகவே எண்ணுகிறான்.

நானே செயல்களைச் செய்கிறேன் என்ற எண்ணத்தால்தான், செயலற்ற, ஸ்வந்தந்திரமான, ஆனந்தமயமான ஜீவனுக்கு பிறப்பு இறப்பு, ப்ரக்ருதிக்கு அடிமையாவது போன்ற தன்மைகள் ஏற்படுகின்றன.
தேவஹூதி கேட்டாள்.

புருஷோத்தமா! ப்ரக்ருதி அதாவது கண்ணால் காணப்படும் உலகம், புருஷன் இவை இரண்டின் இலக்கணம் என்ன? இவைதானே ப்ரபஞ்சத்திற்குக் காரணம்? இவை இரண்டும் எங்கிருந்து உற்பத்தியாகின்றன?
பகவான் சொல்லத் துவங்கினார்.

ப்ரக்ருதி முக்குணங்களை உடையது. அழிவில்லாதது. காரண காரிய வடிவானது. எல்லாவிதச் செயல்பாடுகளுக்கும் நிலைக்களனாக விளங்குவது.

ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், அஹங்காரம், மஹத், அவ்யக்தம்‌ என்ற நான்கு அந்தக்கரணங்கள், பத்து பொறிகள், ஆகிய இருபத்து நான்கு தத்துவங்கள் அடங்கிய திறன் ப்ரக்ருதியின் காரியம்‌ என்று கூறப்படுகிறது.

மேற்கொண்டு இந்த தத்வங்களை விளக்கிக் கூறினார் கபிலர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, August 30, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 84 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 28

மூலகாரணனான இறையைத் தன் மகவாகப் பெறும் பேறு பெற்ற தேவஹூதி வினவினாள்.

பக்தியோகத்தினால் உங்களை அடையலாம் என்று சொன்னீர்கள். பக்தி யோகம் எத்தகையது? அதன் உண்மை ஸ்வரூபம் என்ன? உலகியல் தளைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்ணாகிய நான் எத்தகைய பக்தியைச் செய்தால், ஆனந்தமே உருவான உங்களைச் சுலமாஅக அடையலாம்?

இலக்கைக் குறியாக அடிக்கும் அம்பைப்போல், பகவானைக் குறியாக அடித்துத் தரும் அந்த பக்தியோகத்தைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்.

நீங்கள் கூறிய பக்தியோகம் சுலபம் போல் தோன்றினாலும்‌ அறிஞர்க்கும் அரிது. நீங்களோ அண்டியவரைக் காக்கும் ஹரி. நானோ மந்தபுத்தியுள்ள பெண்பிள்ளை.
எப்படிக் கூறினால் எனக்கு எளிதாக விளங்குமோ அப்படிக் கூறியருளவேண்டும்.

கபிலர் இதைக்கேட்டு பெரிதும் மகிழ்ந்து பக்தியோகத்தை விளக்கும் ஸாங்க்யம் என்ற யோகத்தை எடுத்துரைத்தார்.
அம்மா! உலக விஷயங்களை என்னென்னவென்று அறிவிக்கும் ஞானேந்திரியங்கள், கர்மங்களைச்‌ செய்யும்‌ கர்மேந்திரியங்கள், இவற்றை ஊக்குவிக்கும் மனம் ஆகிய இம்மூன்றுமே காரணமின்றி எந்தப்‌ பயனையும் விரும்பாது.

இவற்றைத் தூய்மையான இறைவனிடத்தில் நிலைபெறச் செய்வதே பக்தியாம்.
இது முக்தியைக் காட்டிலும் சிறந்தது.

வயிற்றிலுள்ள அக்னி, உண்ணப்பட்ட உணவை ஜீரணம்‌செய்து அழிப்பதுபோல், அனாதி கர்மவாசனைகளின் கொள்கலனான இவ்வுடலை பக்தி விரைவில் பொசுக்குகிறது.
கர்மா அழியுமானால் உடல் தேவையில்லை. கர்மாவை அனுபவிக்கவே உடல்.

எனது திருவடி சேவையில் ஈடுபாடு கொண்டு அனைத்துச் செயல்களையும்‌ எனக்காகவே செய்யும்‌ பக்தர்கள், எனது கல்யாண குணங்களை விவரிக்கும்‌ லீலைகளை ஒருவருக்கொருவர் அன்புடனும் ஆசையுடனும் பேசிக்கொள்வார்கள். இத்தகைய பக்தர்கள் முக்தியையும் விரும்ப மாட்டார்கள்.

சிரித்த முகமும், தாமரைக்‌ கண்களும் கொண்ட என் அழகிய திருமேனியைக் கண் குளிரக் கண்டு மகிழ்கிறார்கள். செவிக்கும் மனத்திற்கும் இனிதான என் அழகைப் புகழ்ந்து பாடி பாடி பொழுதைப் போக்குகிறார்கள். பெரிய தவச்சீலர்களாயினும், அவர்கள் விரும்புவது இஃதே.

என் திருமேனியின் ஒவ்வொரு அங்கமும்‌ அழகின் எல்லை. என் மேல் கொண்ட பக்தி, அவர்கள் விரும்பாவிடினும் அவர்களுக்கு முக்தியளிக்கிறது.

என் பக்தர்கள் அவித்யை அறவே நீங்கிய பின்னர், என் மாயையினால் படைக்கப்பட்ட ப்ரும்மலோகம் முதலான அனைத்து போகங்கள், அஷ்டமா சித்திகள், வைகுண்ட லோகத்தையும் கூட விரும்புவதில்லை.

ஆனால், அவர்களுக்கு இவையெல்லாம் தானாகவே கிடைக்கின்றன.

அவர்களுக்கு
அன்புக்கிடமான ஆத்மா, காதலுக்கிடமான காதலி, மனைவி, மக்கள், நம்பிக்கைக்கிடமான தோழன், நன்மையே நவிலும்‌ ஆசிரியன், நன்மையே செய்யும்‌ தோழன், பூஜை செய்யத் தகுந்த குலதெய்வம் அனைத்தும் நானே.

என்னுடைய காலச் சக்கரம்‌ இவர்களைத் தீண்டாது.

இவர்களை நான் ஸம்சார ஸாகரத்தினின்றும் கரையேற்றுகிறேன்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 29, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 83 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 27

தாயைப் பார்த்து சாதகனின்‌ தன்னிறைவை விளக்கிய கபிலர் மேற்கொண்டு ஸாதுக்களின்‌ மகிமைகளைக் கூறுகிறார்.

தாயே! உலகியல் இன்பங்களைப் பெரிதென நினைத்து ஒழுகுபவர்களுடனான இணக்கம், என்றும் எதனாலும் அறுக்க இயலாத பாசக்கயிறு.

அதே மன ‌இணக்கம், உத்தம ஸாதுக்களிடம் ஏற்படுமாயின் அது இடையூறின்றித் திறந்து வைக்கப்பட்ட முக்தி வாயில் என்றும் அறிஞர்கள்‌ கூறுகிறார்கள்.
அத்தகைய சாதுக்களைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.
சாதுக்கள் பூமியினும் பொறுமை மிக்கவர்.
பிறர் துன்பங்கண்டு இரங்கி, பயன் நோக்காது உதவி புரியும் கருணை மிக்கவர்.
ஆகவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பராவார்.
பகைவரற்றவர்.
ஐம்புலன்களையும், மனத்தையும் வெற்றி கொண்டவர்.
ஒழுக்கமே அவர்க்குப் பொன்னகை.

பிறவற்றில் மனத்தை ஓடவிடாது பகவானான என்னிடம்‌ காதல்‌ கொண்டவர்.
எனக்காக அனைத்து கர்மங்களையும் துறந்தவர்.
சுற்றமனைத்தையும் நீக்கி, என்னையே சுற்றமாய்க் கொண்டவர்.

எனது திருவிளையாடல்களைக்‌ கேட்டு மகிழ்பவர்.
அவற்றையே திரும்ப திரும்பக் கேட்பதும் சொல்வதுமாகப் பொழுது போக்குவர்.

என்னிடமே நிறைந்த மனம் கொண்ட இத்தகைய சாதுக்களை வினைப்பயனால் விளையும்‌ துன்பங்கள் கூட வருந்தச் செய்யாது.

கற்பின் சிகரமே! இத்தகைய ஸாதுக்களையே ஒருவன் தேடிச் சென்று அடையவேண்டும்.
அவர்களுடைய ஒரு தொடர்பினால், செவிக்கும் இதயத்திற்கும்‌ அமுதாய் விளங்கும் எனது திருவிளையாடல்கள் பற்றிய கதைகளை எப்போதும் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.‌
அக்கதைகளைக் ‌கேட்பதால், முக்தியில் ஈடுபாடும், என்னிடம்‌ அன்பும்‌ தோன்றும்.

படைத்தல், காத்தல், அழித்தலாகிய எனது திருவிளையாடல்களைக் கேட்டு, அதையே சிந்தனை செய்வதால் என்னிடம்‌ அசைவற்ற பக்தி உண்டாகும்.

அதனால் ஸ்வர்கம் முதலியவற்றில் இருக்கும் பற்று நீங்கி பக்தி யோகத்தால் மனத்தைத் தனதாக்கிக் கொள்ள இயலும்.அப்படிப்பட்ட சாதகன் முடிவில் என்னையே அடைகிறான்.
என்றார் கபிலர்.

தொடர்ந்து பக்தியோகம்‌ பற்றி வினவினாள் தேவஹுதி.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 28, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 82 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 26

கர்தமர் வனம் சென்றபின், கபிலர் தன் தாயான தேவஹூதியை மகிழ்விக்க எண்ணி, அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கினார்.

ஒருநாள் தேவஹூதி, கர்தமர் தன் மகனான கபிலரைப் பற்றிக்‌ கூறியவைகளை நினைவு கூர்ந்தாள்.

கர்தமர் என்ற பெரிய ஆத்மஞானியைக் கணவராகப் பெற்றும் நாள்களை வீணே கழித்துவிட்டோம்.

மகனாக இறைவனே அவதரித்திருக்கும்போதும் இப்பிறவியை உய்விக்கும் வழியை அறியத்தவறினால், அது முட்டாள்தனம் என்றெண்ணினாள்.

கபிலர் தனித்திருக்கும் சமயத்தில், அவரிடம் சென்றாள்.
ப்ரபோ! இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து, பொறிகளின் அடிமையாய்க் காலத்தை வீணடித்துவிட்டேன். அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கிறேன்.

பற்பல பிறவிகள் எடுத்து நொந்துபோய் முடிவில் உன் கருணையால் இம்மானுடப்பிறவி கிடைத்துள்ளது. நீ என்னைக் கரையேற்றவே எனக்கு மகனாகப் பிறந்துள்ளாய். என் அஞ்ஞான இருளகற்றி எனக்கு ஞானக் கண் அருள்வாய்!

அனைத்து ஜீவராசிகளுக்கும் நீயே தலைவன். அனைத்திற்கும் மூலகாரணன். நற்குணங்களின் கொள்கலன்.

ஜீவர்களை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் சூரியன் போல் அஞ்ஞான இருளிலிருந்து ஞானப்பாதையில் அழைத்துச் செல்லவந்த ஞானசூரியன் நீயே.

உன்னைத் தவிர சரணமடையத் தக்கவர்கள் யாருளர்?
ஆகவெ, உன்னையே சரணடைகிறேன்.

ப்ரக்ருதி (மாயை), புருஷன் (இறைவன்) பற்றிய தத்துவத்தை எனக்கு உபதேசம் செய்தருளும்படி இறையான உன்னை வணங்கி வேண்டுகிறேன்.
என்றாள்.

தேவஹூதி தன் பொருட்டு வேண்டினாலும், இவற்றை நாம் படிக்கும்போது, நம்பொருட்டுச் சொன்னாள் என்றே தோன்றுகிறது.
ஒருவரின் பொருட்டுச் சொன்னாலும், ஞானவழி நம் அனைவர்க்குமானதே..

தாய் கேட்ட கேள்வி, அனைத்து ஜீவர்களுக்கும் முக்தியில் ஆசையை உண்டுபண்ணுவதாகவும், எவ்வித மறைவு எண்ணமும் இன்றித் தூய்மையான வேண்டுகோளாகவும் இருப்பது கண்டு, சான்றோர்களின் புகலிடமான கபிலர் முகம்‌ மலர்ந்தார்.

பின்னர் தாயிடம்‌ கூறலானார்.
தாயே! ஆன்மாவின் உண்மையை உணர்த்தும் ஞானயோகம் உலகியல் தளைகளிலிருந்து விடுபட, சிறந்த சாதனமாகும்.
இதில்‌ இன்ப துன்பங்கள் இல்லை. இரண்டும்‌ அழிந்துவிடும்.

முன்பு, நாரதர் முதலிய மஹரிஷிகளுக்கு இதை நான் உபதேசித்தேன்.

ஒரு ஜீவன் தளைகளில் சிக்கிக் கொள்ளவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய காரணமாக இருப்பது மனமே.

உலகியல் இன்பங்களில் சென்றால் அது தளைப்படுகிறது. இறைவனிடம் ஒன்றினால் விடுதலை அடைகிறது.

உண்மையற்ற பொய்யான உலகியல் விஷயங்களில் ஈடுபட்டால், காமம், ஆசை, கோபம் முதலியவற்றிற்குக் காரணமாகிறது. அதே மனம், ஆசைகளை ஒதுக்கிவிட்டுத் தூய்மை பெறுமாயின் இன்ப துன்பங்களைச் சமமாக எண்ணும் தன்மை பெறுகிறது.

இவ்வாறான மனம் கொண்டவன்,
ஆன்ம ஞானம், வைராக்யம், பக்தி ஆகியவற்றைக் கொண்டவனாய் இருப்பான். ப்ரக்ருதியின் பரிமாணங்களான உடல், பொறி, புலன், மனம்,‌ப்ராணன் இவைகளிலிருந்து இயல்பாகத் தனித்திருப்பான். முக்குணங்களால் பாதிப்படையமாட்டான். தேவர், மனிதர் என்ற வேறுபாடு அற்றிருப்பான்.
உடலால் வேறுபட்டிருப்பினும், ஞானத்தினால் வேறுபாடில்லாமலும், அணுவிலிருந்து பிரிக்கமுடியாதவனாயும்‌ இருப்பான்.

இவன் இன்ப துன்பங்களில் ஈடுபடாமல் தனித்திருக்கும் ஆன்மாவையும்,
உலகியல் தளைகளை விளைவிக்கும் திறன் இன்றித் தோற்றுப்போன மாயையையும் காண்பான்.

அம்மா!
அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக விளங்கும் பகவானிடம் ஏற்படும் பக்தியைத்தவிர, முக்தி அடைய வேறொரு எளிய சாதனம் இல்லவே இல்லை என்பது யோகிகளின் கருத்து.

மனம் பற்றிய இக்கருத்துக்களை எதிரொலிக்குமாறு மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் இயற்றிய
மதுரகீதம் பின்வருமாறு..
ராகம் : அடாணா
தாளம் : ஆதி
பல்லவி
மனமே நீ அழிவாய்
சரணம்
நான் நான் என்று ஆடிடும் பேயே
நானற்ற இடத்தைக் கண்டிலை நீயே || ம ||
ஈசனை மறைத்திடும் நீசனும் நீயே
மோசம் செய்திடும் வாஸனாபலமே || ம ||
அடக்க நினைத்தால் ஓடி ஒளிந்திடுவாய்
சற்றே அயர்ந்தால் ஆட்டம் போட்டிடுவாய் || ம ||
மூன்று குணங்களின் மூலகாரணமே
இன்றே அழிவாய் சபித்தேன் உன்னை || ம ||
இருப்பதை மறைத்து இல்லாததைக் காட்டும்
இருப்பே இல்லாத இறுமாப்பே || ம ||
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும்
அஞ்சாதவரே இல்லை உன்னை கண்டு || ம ||
இருமையின் மறுமையே கருமையின் உருவமே
அருமையை மறைத்திடும் சிறுமை கொண்டோனே || ம ||
நீ அழிந்தால் நான் வாழ்வேன்
நீ நான் அற்று தன்னிலை நின்றிடுவேன் || ம ||

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, August 27, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 81 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 25

தன் ஒன்பது பெண்களின் திருமணத்தையும் முடித்த கர்தமர், தனக்கு மகனாகப் பிறந்திருக்கும் கபிலரிடம்‌ தனிமையில் சென்றார். அவரை வணங்கிப் பின் கூறலானார்.
தத்தம் ‌வினைகளால் பாவ புண்யங்களை அனுபவிக்கும் ஜீவர்களிடம்‌ தேவதைகள் வெகு நாள்கள் கழித்துத்தான் அனுக்ரஹம் செய்கிறார்கள்.

துறவிகளோ பக்தியோகத்தினால் தனிமையில் தங்களது திருப்பாதகமலங்களை ஆராதிக்கிறார்கள்.

ஆனால், பகவானாகிய தாங்களோ ஸம்சாரிகளான இவர்கள் உலகியல்‌ இன்பங்களை விரும்புபவர்கள் என்றும், எங்களது தாழ்மையையும்‌ சற்றும்‌ நினையாமல் அற்பர்களான எங்கள் வீட்டில்‌ வந்து அவதாரம்‌ செய்தீர்கள்.

முன்பு‌ என்னிடம்‌ என் மகவாய்ப் பிறப்பதாகக்‌ கூறிய வாக்கை மெய்ப்பித்தீர்கள். நான்கு கரங்கள்‌ கொண்ட திருமேனியை விட்டு இரு கரங்களோடு மானிட உருவம்‌ கொண்டீர்.

ஐஸ்வர்யம், வைராக்யம், புகழ், அறிவு, வீரம், ஸ்ரீ எனப்படும் செல்வம் இவை ஆறும் ஒருங்கே கொண்ட பகவான் ஆகிய உங்களை சரணமடைகிறேன்.
(மேற்சொன்ன ஆறு குணங்களும் ஒன்றிணைந்தது 'பக' என்னும் குணம். அந்த குணத்தை உடையவர் பகவான்.)
சக்திகள் அனைத்தும் தங்களுக்கு அடிமை. ப்ரக்ருதி, அதன் அதிஷ்டான புருஷன், மஹத் தத்வம், அவற்றை இயக்கும்‌ காலம், முக்குணங்களின்‌ அஹங்காரம், அண்ட சராசரங்கள், அதனுடைய பாலர்கள் அனைத்தும்‌ தாங்களே. அனைத்தையும் நீங்கள் ‌உங்கள் வாயில் அடக்கிக்கொள்கிறீர்கள். அனைத்திலும் பெரியவரான கபில மூர்த்தியான தங்களைச் சரணமடைகிறேன்.

தங்கள்‌ கருணையால் மூன்று விதமான கடன்களிலிருந்தும் விடுபட்டேன். என் விருப்பங்கள்‌ அனைத்தும் நிறைவேறின. நான் துறவறம்‌ ஏற்று இவ்வுலகியல் இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டு உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டு உலா வர விரும்புகிறேன்.
எனக்கு அனுமதி தாருங்கள்.
என்றார்.

பகவான் கூறினார்.

முனிவரே, நான் முன்பு உம்மிடம் கூறியதை மெய்ப்பிக்கவே உமக்கு மகனாகப்‌ பிறந்தேன்.

இவ்வுடலானது ஆன்மா என்று தவறாக அறியப்பட்டு வருகிறது. இவ்வுலகோர்க்கு ப்ரக்ருதி, ஜீவன், பரமன் இவைகளின் உண்மை தத்துவத்தை எடுத்துரைக்கவே அவதாரம்‌ செய்துள்ளேன்.
ஆன்ம அறிவைப் பற்றிய இந்த நுண்ணிய வழி வெகு காலமானதால் அழிந்தேபோனது. அதைத் திரும்பவும் நிறுவுவதற்காகவே இத்திருமேனியைக் கொண்டுள்ளேன்.
நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீங்கள் துறவறம்‌ மேற்கொள்ளலாம். பயனில் பற்றில்லாமல் பணி செய்து, பயனை எனக்கு அர்ப்பணம் செய்து, ம்ருத்யுவை வெற்றிகொண்டு முக்தி அடைவதற்காக என்னைப் பணிந்து வாரும்.

நான் தேவஹூதிக்கு ஆன்மவித்யையை உபதேசிக்கப்போகிறேன். அவளும் உலகியல்‌ துன்பங்களைத் தாண்டி, ஞானம்‌ பெற்று என்னை அடையப்போகிறாள்.

மைத்ரேயர் தொடர்ந்தார்..
பகவான் சொன்னதைக்கேட்டு கர்தமர் கபில பகவானை விழுந்து வணங்கிவிட்டு யாருக்கும் சொல்லாமல் அவ்விடம் விட்டு நீங்கினார்.

அதன் பின் அஹிம்சையை வேராகக் கொண்ட துறவறத்தை ஏற்று, வைதிக கர்மங்களையும்‌ துறந்து, எங்கும், எதிலும் பற்றின்றிச் சுற்றித் திரிந்தார்.
யான், எனது என்ற அஹங்காரத்தை விட்டு பகவானிடம்‌ மனத்தை ஒரு நிலைப்படுத்தினார். அவரது அறிவு உள்நோக்கி அமைதியாய் இருந்தது.

அலைகளற்ற நடுக்கடல்போல் அமைதியாய் விளங்கினார் கர்தமர்.
அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று, விருப்பு வெறுப்பற்ற சமநோக்குடன் பகவத் பக்தி நிறைவு பெற்று பரமபதத்தை அடைந்தார் கர்தமர்.

சாங்க்ய சாஸ்திரத்தை எடுத்துரைக்க வந்த கபில பகவானின் பெருமைகள் கேட்கக் கேட்க அலுக்கவேயில்லையே. அவர் மேலும் என்னென்ன செய்தார் என்று விளக்கிக் கூறுங்கள் என்றார் சௌனகர்.

ஸூத பௌராணிகர் இதையே தான் விதுரரும் கேட்டார். அதற்கு மைத்ரேயர் கூறியவற்றைக் கூறுகிறேன் என்று கூறி, தொடர்ந்து தேவஹூதிக்கும் கபிலருக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறத் துவங்கினார்.

#மஹாரண்‌யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, August 26, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 80 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 24

நூறு வருட காலம் திவ்ய விமானத்திலேயே சுகமாய் வாழ்ந்தனர் கர்தமரும், தேவஹூதியும். அத்தனை காலமும் ஒரு நொடிபோல் கடந்தது.
கர்தமர், தேவஹூதி நிறைய மக்கட்செல்வம் விரும்புகிறாள் என்றறிந்து தன்னை ஒன்பது ரூபங்களாக ஆக்கிக்கொண்டு கர்பாதானம் செய்தார்.

அதன் பின் உரிய காலத்தில் ஒரே நாளில் ஒன்பது மிக அழகான பெண் குழந்தைகளைப் பெற்றாள் தேவஹூதி. குழந்தைகள் பிறந்ததும், கர்தமர் தான் துறவறம் மேற்கொள்ளப்போவதாகச் சொன்னார்.

மனம் கலங்கிய தேவஹூதி, கண்ணீருடன் தரையைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
பகவானே! எனக்கு அபயம்‌ கொடுங்கள். இக்குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கமுள்ள கணவர்களைத் தேடிக் கொடுங்கள். தாங்கள் துறவறம் மேற்கொண்டபின் என் வருத்தம் போக்கவும், வாழ்விற்குப் பிடிமானமாகவும் ஒரு புதல்வன் வேண்டும்.

இன்பங்களில் மனத்தைச் செலுத்தி, அந்தோ, நூறு வருட காலம் ஒரு நொடிபோல் கழிந்தது. எனக்கு இனியாவது இறை சிந்தனை ஏற்படட்டும்.

ப்ரும்மத்தை அறிந்த தங்களுடன், எனக்கு ஏற்பட்ட இவ்வுறவே எனக்கு அபயம் அளிக்கட்டும். அருள்புரியுங்கள்
அறியாமையால் அஸத்துக்களிடம் வைக்கும் அன்பு, உலகியல் தளைகளுக்குக் காரணமாகிறது. அதே அன்பை தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் வைத்தால், அதுவே உலகியல் தளைகளைக் களைகிறது.
மாயையால் நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன். மோக்ஷத்தையே பெற்றுத் தரும்‌ தங்களைக் கணவராய் அடைந்தும்‌ உலகியல் இன்பங்களில் மனத்தைச் செலுத்தி தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு எழும்பவில்லை.
என்று வேண்டினாள்.

கர்தமருக்கு, அப்போதுதான் பகவான் தனக்கு மகவாய்ப் பிறப்பதாக வாக்களித்தது நினைவுக்கு வந்தது.
தேவஹூதியைப் பார்த்துக் கூறலானார்.

மாசற்றவளே! நீ இவ்வாறு வருந்தவேண்டா. எல்லையற்ற கல்யாண குணங்கள் கொண்ட பகவான், உன் திருவயிற்றில் அவதாரம் செய்யப்போகிறார். உனக்கு மகவாய்ப் பிறந்து, அஞ்ஞானத்தைப் போக்கி, ஆன்ம தத்துவத்தை விளக்கி, என் புகழையும் பரப்பப்போகிறார். எனவே நீ புலன்களை அடக்கி, பகவானிடம்‌ மனத்தை நிறுத்தி, தானங்களாலும், கற்பு நிலையாலும், தவத்தாலும் பகவானை வழிபடுவாய்
என்றார்.

அதையே உபதேசமாக ஏற்ற தேவஹூதி, அவ்வாறே பகவானைப் பூஜிக்கலானாள்.

வெகுகாலம் சென்றதும், ஒரு திருநாளில், பகவான் அவளது திருவயிற்றில் ப்ரவேசித்து உரிய காலத்தில் அரணியிலிருந்து அக்னி தோன்றுவதுபோல் அவதாரம் செய்தார்.

அப்போது, ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் கர்தமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். பல மங்கள வாத்யங்களை முழங்கினர்.

இட்ட கட்டளையை ஏற்று செவ்வனே நிறைவேற்றியதற்காக ப்ரும்மா கர்தமரைப் பலவாறு புகழ்ந்தார்.

ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரியே உன் வீட்டில் பிறந்திருக்கிறார். அவர் கபிலர் என்னும் திருநாமத்துடன் ஸாங்க்ய யோகத்தை நிறுவுவார்.

உன் குமாரிகளை மரீசி முதலிய ரிஷிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொடு.

என்று கர்தமரை வாழ்த்தி, சின்னஞ்சிறு உருவில் பிறந்த குழந்தையாய்க் காட்சியளிக்கும் பகவானை வணங்கி விடை பெற்றார் ப்ரும்மா.
ப்ரும்மாவின் வார்த்தைப்படி, கர்தமர் தன் புதல்விகளின் திருமணத்தை நடத்தினார்.

மரீசிக்கு கலை என்பவளையும்,
அத்ரிக்கு அநஸூயை என்பவளையும்,

ஆங்கிரஸுக்கு ச்ரத்தை என்பவளையும்,

புலஸ்தியருக்கு ஹவிர்பூ என்பவளையும்,

புலஹருக்கு கதி என்பவளையும்,
கிரதுவுக்கு கிரியை என்பவளையும்,

ப்ருகு முனிவருக்கு கியாதி என்பவளையும்,

வஸிஷ்டருக்கு அருந்ததி என்பவளையும்,

அதர்வருக்கு சாந்தி என்பவளையும்

கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு முறைப்படி அத்தனை உபசாரங்களையும் செய்தார் கர்தமர். அனவரும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, August 25, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் -79 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 23

மைத்ரேயர் தொடர்ந்தார்.
அனைவரின் உள்ளத்தையும்‌ அறியும் திறன்‌கொண்ட கர்தம மகரிஷி, இவ்வளவு அழகான விமானத்தைப் படைத்தும் தேவஹூதி மகிழ்ச்சி அடையவில்லை என்று உணர்ந்தார்.

தேவஹூதி கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்தாள். மிகவும்‌ இளைத்துப்போய், கேசங்கள் அழுக்கடைந்து சடை போட்டிருந்தது.

அவளைக் கண்ணுற்ற கர்தமர்,
பயந்த சுபாவம்‌ உடையவளே, நீ இந்த பிந்துஸரஸில் நீராடி விமானத்தில் ஏறிக்கொள். இந்த நீர்நிலை பகவானால் உண்டாக்கப்பட்டது. அனைத்து விருப்பங்களையும்‌ பூர்த்தி செய்யவல்லது.
என்றார்.

அழகிய கண்களை உடைய தேவஹூதி, கணவரின் ஆணைப்படி, பிந்துஸரஸ் என்ற அந்த நீர்நிலையில்‌ மூழ்கினாள்.
அங்கே அவளுக்கு மிக ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.
பிந்துஸரஸினுள் ஒரு அழகிய மாளிகை இருந்தது‌. ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களது திருமேனி யிலிருந்து தாமரை மணம் வீசியது. அவர்கள் தேவஹூதியைக் கண்டு கைகூப்பி,
அம்மா, நாங்கள் உங்கள் பணிப்பெண்கள். தங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? கட்டளையிடுங்கள்.
என்றனர்.

அவர்கள் தேவஹூதியின் விருப்பத்திற்கிணங்க, அவளை உயர்ந்த வாசனைப்பொடிகளல் தைல ஸ்நானம் செய்வித்தனர். உயர்ந்த பட்டாடைகளை அணிவித்தனர். விலை உயர்ந்த ஆபரணங்களால் அவளை அலங்கரித்தனர். அறுசுவை உண்டியையும், இனிய நன்னீரும் கொடுத்தனர்.

மிக அழகிய பெண்ணாக அவளை உருமாற்றியிருந்தனர் அப்பெண்கள்.
ஏராளமான நகைகளுடன் அழகு மிளிரும்‌ தன்னை தன் கணவரான கர்தமருக்கு அர்ப்பணிக்க விரும்பினாள் தேவஹூதி. அவ்வாறு அவள் நினைத்ததுமே, பணிப்பெண்களோடு கணவனின் எதிரே நிற்கக்கண்டு வியந்தாள்.

கர்தமரின் யோகசக்தியைக் கண்டு மிகவும் ஆச்சரியமுற்றாள்.
கர்தமருடன், அவரால் படைக்கப்பட்ட அழகிய விம்மானத்தில் ஏறினாள்.

தன் மனைவி தேவஹூதியாலும், ஆயிரக்கணக்கான வித்யாதரப் பெண்களாலும் பணிவிடை செய்யப்பெற்று கர்தமர் தன்னையும் மிகுந்த அழகுடன் ஆக்கிக்கொண்டார்.

மன்மதன் போன்ற அழகுடன் தேவஹூதியின் மனம் மகிழும் வண்ணம்‌ விளங்கினார் கர்தமர்.
தன் மனைவியுடன் பலவிதமான தேவ உத்யான வனங்களிலும், மானஸ ஸரஸ்களிலும்‌ விமானம் மூலம் சுற்றினார்.

அவ்விமானம் நினைத்தபடி தடையின்றி எங்கும் செல்ல வல்லது. அதிலேறி அனைத்து உலகங்களிலும் தடையின்றி சஞ்சாரம் செய்து தேவர்களையும் விஞ்சினார்.

பகவானின் திருவடிகளில் பற்றுள்ளவர்க்கு அனைத்தும் கிடைக்கும். அவர்கள் விரும்ப மாட்டார்கள். விரும்பினால், அவர்களால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

உலகங்கள்‌ முழுவதையும் மனனைவிக்குச் சுற்றிக் காண்பித்து , அவளோடு பலவாறு இன்புற்ற பின்னர், தன் இருப்பிடம்‌ திரும்பினார் கர்தமர்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, August 24, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 78 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 22

மைத்ரேயர் தேவஹூதியின் சரித்திரத்தைச் சொல்லத் துவங்கினார்.

தனது பெற்றோர் புறப்பட்டுச் சென்றதும், கற்புக்கரசியான தேவஹூதி, தன் கணவரின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு சேவை செய்வதுபோல் பணிவிடை செய்து வந்தாள்.

மிகுந்த நம்பிக்கை, மனத்தூய்மை, அன்பு கலந்த மரியாதை, தன்னடக்கம், பணிவிடை செய்வதில் ஆவல், நட்புணர்வு, இன்சொற்கள், ஆகியவையுடன் மனதார பணிவிடைகள் செய்தாள். உலகியல் சுகம், கபடு, பகைமை, பேராசை, கீழான ஒழுக்கம், செருக்கு, சோம்பல், ஆகியவற்றைத் துறந்தாள். ஒளியே திருமேனி கொண்டாற்போல் விளங்கும் கணவரைப் பணிவிடைகளால் ஆராதித்தாள். தெய்வத்திற்கும் மேலாகக் கணவரை நினைத்தாள்.

திருமணம் நடைபெற்றதும், கர்தமர் இயல்பாக எழும் பகவத் சிந்தனையினால் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். ஸமாதி நிலையில் எவ்வளவு காலம் இருந்தாரோ தெரியாது. தியானத்தில் இருக்கும் கணவருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தேவஹூதி பணிவிடைகள் செய்தாள்.

அனவரதமும், அவரைச் சுற்றி சுத்தம்‌ செய்வதும், விசிறுவதும், அவரது மேனியை பூச்சிகள் தொந்தரவு செய்யாமலும், பார்த்துக்கொண்டாள். உலகப் ப்ரக்ஞையே இல்லாமல் சிலை போல் அமர்ந்து வெகுநாள்கள் ஸமாதியிலேயே இருந்தார் கர்தம ரிஷி.

பிறகு ஒருநாள் தியானம் கலைந்தபோது, தன் மனைவியான தேவஹுதியைக் கண்டார். தனக்குச் செய்யும் பணிவிடைகளாலேயே தவம் கைகூடப்பெற்று, மிகுந்த தேஜஸ்வினியாக இருந்த தேவஹூதி, நிறைய விரதங்கள் இருந்து உடல் மெலிந்திருந்தாள்.

திருமண காலத்தில் அவளின் அழகையும், இப்போது தனக்குப் பணிவிடை செய்ததனால் மிகவும் மெலிந்திருந்த தேவஹூதியையும் ஒப்பு நோக்கி அவள் விஷயத்தில் மிகவும் மகிழ்ந்து மனம் கசிந்தார்.

மனைவியைப் பார்த்துச் சொன்னார்.
மனு மஹாராஜனின் மகளான நீ, என்னிடம் காட்டும்‌ மரியாதை மிக உயர்ந்தது. உயிர் கொண்ட அனைத்து ஜீவன்களுக்கும் தத்தம் உடலே முக்கியமாய் இருக்க, நீயோ எனக்குப் பணிவிடை செய்யும் ஆர்வத்தினால் உன் உடலை அலட்சியம் செய்துவிட்டாய்.

எனது தவம், தியானம், உபாசனை, பக்தி இவற்றால் எனக்குக் கிடைத்த இறைவனின் அருள் ப்ரசாதங்களான செல்வங்களை உனக்குக் காட்டுகிறேன். இவற்றை நான் கேட்கவில்லை. இறைவனே விரும்பி எனக்களித்தவை இவை. இவற்றில் உனக்கும் பங்கு உண்டு.

இந்த திவ்ய காட்சிகளைவிட உலகில் வேறெதுவும் பெருமை வாய்ந்து இல்லை. பகவானின் புருவ நெறிப்பினால் அழியக்கூடியவை உலகியல் செல்வங்கள். நீ உன் பிறவிப் பயனை அடைந்தாய். உன் கற்பின் பெருமையால் இறை ப்ராசாதம் உனக்கு கிட்டியது.
என்றார்.

கணவரின் அன்பான பேச்சைக்கேட்டு வெட்கத்தால் சிவந்த தேவஹூதி, அவர் யோகசித்திகளிலும் , ஸகல கலைகளிலும் வல்லவர் என்று உணர்ந்துகொண்டாள். அன்பால் தழுதழுத்த குரலில் பேசலானாள்.

தங்களது யோக சித்திகளாலும், தவத்தாலும் பெறப்பட்ட இச்செல்வங்கள் ஒன்றும் எனக்கு வியப்பளிக்கவில்லை. கற்புக்கரசியான மனைவிக்கு கணவன் மூலம் பெறப்படும் குழந்தையே பெறும்பேறு.

நமது இல்லறம் செழிக்க நான் பின்பற்றவேண்டியவற்றைக் கூறுங்கள். நான் இப்போது பலமற்றவளாக இருக்கிறேன். தங்களுடன் இன்பம் துய்க்க ஏற்றவளாக நான் மாறுகிறேன். என்னைக் காமதேவன் வாட்டுகிறான். நாம் இன்பமாக வாழ ஒரு மாளிகையையும் தயார் செய்து கொடுக்கவேண்டும்.
என்றாள்.
தன் அன்பு மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய கர்தமர், விருப்பம்போல் செல்லக்கூடிய ஒரு விமானத்தைத் தன் யோக சக்தியால் உண்டு பண்ணினார்.

அந்த விமானமே அரண்மனைபோல் இருந்தது. தங்கமயமானது. அழகானது. ரத்தினங்கள் இழைத்த தூண்கள் கொண்டது.ஏராளமான செல்வங்களை உடையது. பலவிதமான வண்ணங்களாலும், கொடிகளாலும், திரைச்சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதில் பல அடுக்குகள் கொண்ட அறைகள் இருந்தன. எல்லாவற்றிலும் தனித்தனியே கட்டில்கள், விசிறிகள், இருக்கைகள் அனைத்தும் அழகுற விளங்கின.

சுவர்கள் நெடுக அழகிய ஓவியங்கள் அலங்கரித்தன. பவளப் படிகள், கதவுகள் வைரத்தால் ஆனவை. மேற்கூரை இந்திரநீலக் கற்களால் ஆனது. அழகான தங்க கோபுர கலசங்கள். விமானங்களில் ஆங்காங்கே மாடப்புறாக்கள், அன்னப்பறவைகள் செதுக்கப்பட்டிருந்தன. அவற்றை உண்மையென நினைத்து பல பறவைகள் வந்து உறவாடின. அங்கு வசதிக்கேற்றவாறு, விளையாட்டு மைதானங்கள், ஓய்வறைகள், உள் முற்றங்கள், வெளி முற்றங்கள் எல்லாம் இருந்தன. இப்படியாக கர்தமர் நிர்மாணித்த விமானம் அவருக்கே வியப்பூட்டியது.
ஆனால், இவற்றையெல்லாம் பார்த்து தேவஹூதி மகிழ்ச்சியடையவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே
.

Thursday, August 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 77 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 21

ஸ்வாயம்புவ மனு தன் மகள், மனைவி இருவரின் விருப்பத்தையும் அறிந்துகொண்டு, நற்குணக் கொள்கலனான கர்தம மஹரிஷிக்கு தன் மகளான தேவஹூதியை மகிழ்ச்சியோடு கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

அவளுக்கு விவாஹ காலத்தில் கொடுக்கவேண்டிய அத்தனை சீர் வரிசைகளையும், ஆபரணங்களையும், குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உபகரணங்களையும் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.

பெண்ணைத் தகுந்த வரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து கவலை நீங்கப் பெறினும், அவளைப் பிரிவதனால் மிகுந்த மனவருத்தம் கொண்டார். பாசத்துடன் நா தழுதழுக்க 'அம்மா, மகளே', என்று கேவிக் கலங்கி அழுதார்.

பின்னர் பலவாறு மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு மனைவியுடனும், பரிவாரங்களுடனும் கிளம்பினார்.
கர்தமரிடம் விடைபெற்றுக்கொண்டு ஸரஸ்வதி நதியின் இரு‌மருங்கிலும் அமைந்துள்ள முனிவர்களின் ஆசிரமங்களின் அழகை ரசித்துக்கொண்டே தன் தலைநகரான பர்ஹிஷ்மதி நகருக்குள்‌ நுழைந்தார்.
ப்ரும்மாவர்த்தத்திலிருந்து தமது அரசன் திரும்பி வருவது கண்டு குடிமக்கள் மகிழ்ந்து மேளதாளங்களுடன் வரவேற்றனர்.

அனைத்துச் செல்வங்களும் நிரம்பியது மனு மன்னனின் தலைநகரமான பர்ஹிஷ்மதி நகரம். ரஸாதலத்திலிருந்து பூமியைத் தூக்கி வந்த யக்ஞ வராஹமூர்த்தி தன் உடலைச் சிலிர்த்துக் கொண்ட போது அவரது ரோமங்கள் இங்கு விழுந்தன. அவை பச்சை நிறம் கொண்ட தர்பைகளாகவும் நாணல்களாகவும் ஆகின. அவற்றைக் கொண்டு முனிவர்கள்‌ வேள்விகளுக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை விரட்டியடித்தனர்.

மனு இந்த தர்பைகளைப் பரப்பி யக்ஞ புருஷரான நாராயணனை பூஜித்தார்.
அந்த தர்பைகளுக்கு பர்ஹிஸ் என்று பெயர். அந்த நாணல்கள் நிரம்பிய நகரம் பர்ஹிஷ்மதி.

தன் அரண்மனைக்குள் சென்று தர்மத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்தினார்.
கந்தர்வர்கள்‌ அதிகாலையில்‌ அவர் புகழைப் பாடியபோதும், அதில் மனத்தைச் செலுத்தாமல், ஸ்ரீ ஹரியின் புகழையே மனதார நினைத்தார்.

பகவான் விஷ்ணுவின் புகழையே நினைப்பது, அவரது திருவிளையாடல்களையே கேட்பது, அதையே நினைத்து நினைத்து உருகுவது அதைப் பற்றியே எழுதுவது, அதை உலகெங்கும் பரப்புவது என்று இருந்ததனால், அந்த மன்வந்தரம் முழுவதும் அவரது நேரம் வீணாகவே இல்லை.

இவ்வாறு மனு தனது ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) மூன்று நிலைகளிலும், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின்‌ நிலைகளிலும் பகவானிடமே பக்தி செய்தார்.
இவ்வாறே ஸ்வாயம்புவ மனு தன் 71 சதுர்யுகங்களையும்‌ கழித்தார்.
விதுரா, பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைவோரை உடல் பற்றிய, விதிப் பயனால் விளையக்கூடிய, மற்றும் மனிதர்களாலும், ஜீவராசிகளாலும்‌ உண்டாகக்கூடிய துன்பங்கள் என்ன செய்துவிடும்?

அனைத்து ஜீவராசிகளுக்கும்‌ நன்மையைச் சிந்திக்கும் ஸ்வாயம்புவ‌மனு முனிவர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்ணசிரமங்களின்‌ நியதியை வகுத்தார். அதுவே இன்றும் மனுநீதி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மிகவும்‌ அற்புதமான மனுவின் சரித்ரம் புண்ணியகரமானது. தொடர்ந்து அவரது மகளான தேவஹூதியின் கதையைப் பார்ப்போம்
என்றார் மைத்ரேயர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 22, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 76 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 20

கர்தமர் பதினாயிறம் ஆண்டுகள் தவம்‌ செய்தும், இறைவனை அடைய பக்குவம் போதவில்லையே என்று வருந்தினார். அவரது பக்தியை மெச்சி, அவருக்குக் காட்சி தந்தார் இறைவன்.

பக்தி செய்பவருக்கு தன்னையே தருவதற்கு பகவான் தயாராய் இருக்க, தான் இல்லறம் நடத்த மனைவி கேட்கிறோமே என்று கூனிக் குறுகினார் கர்தமர். இருப்பினும், அவரது தவத்தின் நோக்கம் அதுவே என்பதால், இறைவன் நல்ல இல்லறத்தையும் அருளி, தானே அவருக்கு மகவாய்ப் பிறப்பதாய் வாக்களித்து முக்தியும் தருவேன் என்று வாக்களித்துப்போனான்.

கர்தமரின் பக்தியை எண்ணி எண்ணி பகவானும் உண்மையில் உருகிப்போனார். அவரது கண்களிலிருந்து தன் பக்தரான கர்தமரை நினைத்து ஆனந்தக்கண்ணீர் பெருகியது.
பகவான் சிந்திய ஆனந்தக்கண்ணீர் ஒரு குளமாகி பிந்துஸரஸ் என்றழைக்கப்படுகிறது.
பகவான் கிளம்பிச் சென்றதும்,‌கர்தமர் பகவான் கூறிய காலத்தை எதிர் பார்த்திருந்தார். அவர் மனமோ, தான் கண்ட இறைக்காட்சியில் மூழ்கிப்போயிருந்தது.
அப்போது, தங்கத் தகடுகள் வேய்ந்த தேரில், ஸ்வாயம்புவ மனுவும், சதரூபையும் மகள் தேவஹூதியோடு அங்கு வந்தனர்.

நிறைய முனிவர்கள் வசிக்கும் ஸரஸ்வதி நதிக்கரையில் இருந்தது பிந்துஸரஸ். அதன் நீர் பரிசுத்தமானது. அமுதம் போன்ற சுவையுடையது. மரம் செடி கொடிகளால் சூழப்பட்டது. பூக்களும், பழங்களும்‌ நிறைந்தது. வண்டுகளின் ரீங்காரம்‌ எப்போதும்‌ கேட்டுக்கொண்டே இருக்கும். அங்கு நிறைய விலங்குகள் இருந்தன.

மனு செல்லும் சமயத்தில், கர்தமர் தமது அனுஷ்டானங்களை‌முடித்து அமர்ந்திருந்தார்.

வெகுநாள்கள் தவம்‌ செய்திருந்தபடியால்‌ அவரது மேனி ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டது.

பகவானைக் கண்டதால், அவர் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில்‌ குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது.
நல்ல உயரமானவர். அகன்ற திருக்கண்கள். ஜடாமுடி, மரவுரி அணிந்திருந்தார்.
அவரைக் கண்டதுமே மனத்தைப் பறிகொடுத்தாள் தேவஹூதி.

தம் இருப்பிடம் நோக்கி வந்த மனுவை வரவேற்று இன்மொழிகளால் பலவாறு பாராட்டி, உபசரித்தார்.

கர்தமர் தன்னைப் புகழ்வது கண்டு சற்றே வெட்கத்துடன் பேசினார் மனு.
தங்களது உயர்ந்த ஸ்வபாவமும், ஞானமும் தங்கள் பேச்சில் தெரிகிறது. தாங்கள் அனைத்து தர்மங்களையும் அறிந்திருக்கிறீர். என்னைப் பற்றிச் சொல்லும் சமயம் ஒரு அரசனது அறநெறிகளை எனக்கு உபதேசம் செய்தீர். இது எனது பாக்யம். தங்களின் அனுக்ரஹம் கிடைக்கப்பெற்றேன்.

இவள் என் மகள். தங்களுடைய குணங்கள், ஒழுக்கம், தவம் ஆகியவற்றைப் பற்றி நாரத மஹரிஷி மூலம்‌ அறிந்தாள். அதுமுதல் தங்களையே மணாளனாக நிச்சயித்திருக்கிறாள். ஆகவே, அந்தணோத்தமரான தங்களுக்கு என்‌ மகளைக்‌ கன்னிகாதானம் செய்துகொடுக்கிறேன். இவள் தங்கள் வாழ்க்கை‌முறை செவ்வனே நடைபெறுவதக்கு உறுதுணையாக இருப்பாள். இதுவரை ப்ரும்மசர்யத்தில் இருந்தீர்கள். இனி அப்படி இன்றி இவளை ஏற்று இனிய இல்லறம் நடத்துங்கள்
என்று வேண்டினார்.

கர்தமர் மகிழ்ச்சியோடு தேவஹூதியைப் பற்றித் தான் கேள்வியுற்றவற்றைக் கூறி, ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவ்வுத்தமியை திருமணம் செய்து, இவள் வயிற்றில் ஒரு மகன் பிறக்கும் வரை இல்லறம்‌மேற்கொள்வேன். அதன்பின் பகவான் எனக்கு உபதேசித்தபடி ஜீவஹிம்சையற்ற துறவறம்‌ மேற்கொண்டு நாராயணனை ஆராதிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு கூறிய கர்தமர், கண்களை ‌மூடி ஒரு கணம் மனத்தில் நாராயணனை நினைத்து தியானம் செய்து மௌனமானார். நாராயணன் செல்லும் முன் தன்னைப் பார்த்து கொவ்வைப்பழ இதழ் விரித்துச் செய்த புன்முறுவல் நினைவுக்கு வந்தது.
கர்தமரின் முகம்‌மலர்ந்தது. அவரும் புன்னகை புரிந்தார். அப்புன்னகையின் அழகில் மனத்தைக் கொடுத்த தேவஹூதி, நிபந்தனைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அவரை மணக்க தந்தையிடம் உடனே சம்மதம்‌ தெரிவித்தாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 21, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 75 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 19

கருடன் மீதேறி அழகே உருவாக எம்பெருமான் வந்த காட்சியை எவ்வளவு சொன்னாலும் முழுதும் சொல்ல இயலாது.

கர்தமர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். இரு கரங்களும் சிரமேற் குவிந்தன. தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.
ஸர்வேஸ்வரா! ஸத்வ குணமே உருவான தாங்கள் கண்கள் பயனுற தரிசனம் தந்தீர். பற்பல பிறப்புகளைப் பெற்றும் யோகிகள் மானுடப்பிறவியெடுத்து தங்களது இந்த தரிசனத்தைக் காணவே விரும்புகின்றனர்.

இந்த ஸம்ஸார ஸமுத்ரத்தை சுலபமாக கடக்க ‌ஒரே சாதனம் தங்களது திருவடித் தாமரைகளே. அப்படிப்பட்டவற்றைக்‌ கண்ட பின்னும் மனிதன் உலக சுகங்களைக் கேட்கிறான்.

நீங்கள் வேண்டியதனைத்தும் அளிக்கும் கற்பகத்தரு. என் இதயம் காமத்தால்‌ கலங்கியுள்ளது. எனக்கு இல்வாழ்க்கையின் நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகும் ஒழுக்கமான, பக்தியுள்ள பெண்ணை மனைவியாக அருளவேண்டும்.

தாங்களே இவ்வுலகைப் படைத்து, காத்து, முடிவில் உம்மிடமே அடக்கிக்கொள்கிறீர்கள்.

சிலந்திப்பூச்சி தன்னிடமிருந்து வரும் திரவத்தால் வலையைப் பின்னி விருப்பம்போல் விளையாடிவிட்டு தன்னுள்ளேயே இழுத்துக்கொள்கிறது. திரவத்தை வெளியெ விடுவதாலோ, உள்ளிழுத்துக்கொள்வதாலோ அதற்கு எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. அதுபோல் ப்ரபஞ்சம் உங்களிடமிருந்து தோன்றும்போதும், அதை நீர் உள்ளடக்கிக் கொள்ளும்போதும், எந்த மாறுபாடும் இன்றி பூரணராக விளங்குகிறீர்.

மாயை எனும் சக்தியை ஏவி உலகை ஆட்டிப் படைக்கிறீர்கள்.

உலகியல் இன்பம் விரும்புபவர்களாயினும் சரி, முக்தியை விரும்புபவர்களாயினும் சரி, நீங்கள் வேண்டுபவர்க்கு வேண்டியவற்றை அருளுகிறீர்கள்
என்று சொல்லி நமஸ்கரித்தார்.

மனத்தைக் கவரும் புன்னகையோடு பகவான் பேச ஆரம்பித்தார்.
கர்தமரே! தாங்கள் மனம், பொறிகள் ஆகியவற்றை அடக்கி என்னை வழிபட்டீர்.‌ தங்கள் எண்ணம் அறிந்து, அதற்கான ஏற்பாட்டை நான் முன்னமே செய்துவிட்டேன். என்னை வழிபடுவது ஒருபோதும் வீணாகாது. ப்ரும்மதேவரின் புதல்வரான ஸ்வாயம்புவ மனு ஏழு தீவுகள்‌அடங்கிய இவ்வுலகைக்‌ காத்து வருகிறார்.

தர்மங்கள் அனைத்தும் அறிந்த ராஜரிஷியாகிய ஸ்வாயம்புவ‌மனு நாளை காலை இங்கு வருவார். அவருக்கு அழகும், இளமையும், நற்குணங்களும், ஒழுக்கமும் நிறைந்த பெண் இருக்கிறாள். அவளைத் தங்களுக்கு மணம் செய்துவைப்பார்.
அந்த அரசகுமாரி, தங்களுக்கேற்றவள். தங்கள் மனம் போல் நடந்துகொள்பவள். அவளைத் திருமணம் செய்துகொண்டு, உலகம்‌போற்றும்படி இல்லறம் நடத்துவீர். தங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் மரீசி முதலிய மஹரிஷிகளை மணந்து உலகம்‌போற்றும்‌ சந்ததிகளைத் தோற்றுவிப்பார்கள்.
கடைசியில் நானும் தங்கள் மகனாக அவதரித்து சாங்க்ய சாஸ்திரத்தை எழுதப்போகிறேன்.
இனிய இல்லறம் அமையப்பெற்று, ஜீவராசிகளிடம் அன்பு காட்டி வாழ்ந்து, பின் மனத்தையடக்கி உள்ளும் புறமும் என்னையே காண்பீர்.
என்று கூறினார்.

பகவானை ஆராதிக்கும் ஒவ்வொரு பக்தர்க்கும் இத்தகைய வாழ்வை அவர் அனுக்ரஹம் செய்கிறார்.
மனத்தை உட்செலுத்தினால் பகவான் வெளித்தோன்றுகிறார்.

இறைவன் கர்தம மஹரிஷிக்கு அருள் செய்துவிட்டு, அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பிந்துஸரஸ் என்ற அவ்விடத்திலிருந்து கிளம்பி வைகுண்டம் சென்றார்.

அவர் செல்லும் வழியெங்கும் சித்தர் துதி செய்தனர். கருடனின் இறக்கைகள் இரண்டும், ப்ருஹத், ரதந்திரம் எனும் ஸாம வேதங்களாகும். அவற்றிலிருந்து வரும் கானத்தைக் கேட்டுக்கொண்டே பகவான் வைகுண்டம் சென்றார்.

இறைவன் போகும் முன் கர்தமரைப் பார்த்து அன்பொழுக கண்களும் இதழ்களும் பேச, முறுவலித்துவிட்டுச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..