Sunday, June 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 285

மாந்தாதா ஆன்ம ஸ்வரூபத்தை நன்கறிந்தவன். இருப்பினும் நிறைய தக்ஷிணைகள் கொடுத்து பெரு வேள்விகளைச் செய்தான். 
யக்ஞஸ்வரூபனான நாராயணனை ஆராதித்தான்.
எம்பெருமானைத் தவிர இரண்டாவதாக எதுவுமே இல்லை. வேள்வி, அவியுணவு, மந்திரங்கள், செயல்முறை, வேள்வியை நடத்தும் யஜமானன், ரித்விக்குகள், வேள்வியின் பயன், வேள்வி செய்யும் காலம், திரவியங்கள் அனைத்துமே பகவானின் ஸ்வரூபம் என்று எண்ணினான்.

பூமண்டலத்தில் சூரியன் உதிக்கும் இடம் முதல், மறையும் இடயும் வரை அவனது ஆட்சியின் கீழ் இருந்தது.

மாந்தாதாவின் மனைவி சசபிந்துவின் மகளான பிந்துமதி. மகன்கள் புருகுத்ஸன், அம்பரீஷன் (சுதர்சனத்திடமிருந்து துர்வாசரைக் காத்த அம்பரீஷன் அல்ல), முசுகுந்தன் ஆகியோர். பெண்குழந்தைகள் ஐம்பதுபேர். அவர்கள் அனைவருமே சௌபரி என்னும் முனிவரை மணக்க விரும்பினர்.

ஒரு சமயம் சௌபரி யமுனை நதியில் நீருக்கடியில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருந்தார்.
எவ்வளவுதான் வைராக்யமாக இருந்தாலும் யோகிகளையும் கூட உலக விஷயங்கள் ஒரு கணத்தில் கவிழ்த்துவிடுகின்றன. காட்டில் தவம் செய்தால் தொந்தரவு வருமோ என்று எண்ணி நீருக்கடியில் தவம் செய்த சௌபரிக்கு அங்கும் தொந்தரவு காத்திருந்தது.

யோகம் செய்துகொண்டிருந்த சௌபரி, ஒரு கணம் கண்ணைத் திறந்தார். கண்ணெதிரே மீன்களின் அரசன் தன் மனைவிகளுடன் களியாட்டம் புரிந்து கொண்டிருந்தான்.

உடனே அவருக்கும் இல்லற இன்பத்தை நுகர ஆசை எழுந்தது.

நேராக மாந்தாதாவிடம் சென்றார். உன் ஐம்பது பெண்களில் ஒருத்தியை எனக்குத் திருமணம் செய்து வை என்று கேட்டார்.

தபஸ்விதான். ஆனால், மிகவும் வயதான, உடல் சுருங்கி, தாடியும் மீசையுமாக, ஒட்டி உலர்ந்துபோய் இருக்கும் முனிவருக்குப் பெரும் வனப்புள்ள தன் இளம் பெண்களில் ஒருத்தியைக் கொடுக்கச் சற்றுத் தயங்கினார் மாந்தாதா.

பெற்ற பாசம் கண்களை மறைத்தது. ஆனால், மறுத்துவிட்டுப் பின் முனிவரின் சாபத்திற்கு ஆளாகவும் விரும்பவில்லை. எனவே சாமர்த்தியமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு
என் பெண்களின் திருமணத்திற்காக ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்யப்போகிறேன். அதில் என் புதல்விகளில் யார் உங்களைத் தேர்ந்தெடுக்கிறாளோ அவளை உங்களுக்கு மணம் செய்து கொடுக்கிறேன் என்றார்.

பருவ வயதிலிருக்கும் தன் பெண்கள் வயதான இந்த முனிவரைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது மன்னனது எண்ணமாக இருந்தது.

ஆனால், யோகேஸ்வரரான சௌபரி மன்னனின் எண்ண ஓட்டத்தை அறிந்தார். மன்னன் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
இக்காலத்திலேயே திருமணம் என்றால் ஒப்பனைகளால் மணமக்களின் தோற்றத்தையே அடையாளம் தெரியாமல் மாற்றுகிறார்கள்.
யோகேஸ்வரருக்கு தோற்றத்தை மாற்றுவது கடினமா என்ன? ஸ்வயம்வரத்திற்கு வரும்போது யோக சக்தியால் தன் உடலை மிக அழகிய, கட்டுக்கோப்பான இளைஞனாக மாற்றிக்கொண்டார்.

மாந்தாதாவின் ஐம்பது பெண்களும் அவ்விளைஞனின் அழகில்‌ மயக்கி அவரையே மணக்க விரும்பினர். அதோடு மட்டுமல்லாமல், இவர் எனக்கேற்றவர். நீ இவர் மீது ஆசைப்படாதே என்று ஒருவருக்கொருவர் சண்டையிடத் துவங்கினர்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டி ஐம்பது பெண்களையும் சௌபரிக்கே திருமணம் செய்து கொடுத்தார் மாந்தாதா.

சௌபரி தன் யோகசக்தியால் அனைத்து இன்பங்களும் நிரம்பிய ஒரு பெரும் மாளிகைகளையும், தோட்டங்கள், தெளிந்த நீரோடைகள், பூஞ்சோலைகள், ஏராளமான அணிகலன்கள், பட்டாடைகள், நீராடும் இடங்கள், உடற்பூச்சுகள், பணிமகளிர், துதி பாடகர்கள் அனைத்தையும் படைத்து தன் மனைவிகளுக்கு ஒரு குறையும் ஏற்படாத வண்ணம் அங்கு சுகமாக வாழ்ந்தார்.

ஏழு தீவுகளடங்கிய புவிமண்டலத்தைக் காத்து வரும் மாந்தாதா, சௌபரி நடத்தும் நல்லறத்தைப் பார்த்து ஏகசக்ராதிபதி என்ற தன் செருக்கை விட்டொழித்தார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 28, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 284

புரஞ்ஜயனின் மகன் அநேனஸ். அவனது மகன் பிருது. பிருதுவின் மகன் விச்ரவந்தி. அவனது மகன் சந்திரன். அவனது மகன் யுவனாச்வன்.

அவனது மகன் சாபஸ்தன். அவன் சாபஸ்தீ என்ற நகரத்தை உருவாக்கினான். அவனது மகன் பிருஹதச்வன். இவன் மகன் குவலயாச்வன். இவன் மிக்க பலம்‌கொண்டவன். இவனுக்கு இருபத்தோராயிரம் புதல்வர்கள். அவர்கள் அனைவருடனும் சேர்ந்து 'துந்து' என்ற அசுரனைக் கொன்றான். அதனால் துந்துமாரன் என்று பெயர் பெற்றான்.

ஆனால், அசுரன் துந்துவின் வாயிலிருந்து வெளிப்பட்ட அக்னியால் அவன் மகன்களில் மூவரைத்தவிர மீதி அனைவரும் சாம்பலானார்கள்.
அழிவிலிருந்து தப்பித்த மூன்று மகன்களின் பெயர்கள் திருடாச்வன், கபிலாச்வன், பத்ராச்வன்‌ என்பதாகும்.

திருடாச்வனின் மகன் ஹர்யச்வன். அவனது மகன் நிகும்பன்.

நிகும்பனின் மகன் பர்ஹணாச்வன். அவனது மகன் கிருசாச்வன். இவனது மகன் ஸேனஜித். ஸேனஜித்தின் மகன் யுவனாச்வன்.நூறு மனைவிகள் இருந்தும் அவனுக்கு மக்கட்பேறில்லை. எனவே மனைவிகளுடன் கானகம் சென்றான்.

கானகத்திலிருந்த முனிவர்கள் அவன் மீது கருணை கொண்டு இந்திரனைக் குறித்து ஒரு யாகம் செய்துவைத்தனர்.

ஒரு நாள் கானகத்தில் ஆசிரமத்தில் நள்ளிரவில் யுவனாச்வனுக்கு தாகம் எடுத்தது. எங்குமே நீரில்லாமல் அவன் வேள்விச்சாலைக்குள் நுழைந்து யாகத்தின் கலச நீரைக் குடித்துவிட்டான்.

காலையில் எழுந்த முனிவர்கள் கலசத்தில் நீரில்லாததைக் கண்டு திகைத்தனர்.
மன்னன் அதைக் குடித்துவிட்டான் என்றறிந்த ரிஷிகள் இறைவனின் சங்கல்பத்தை மாற்ற முடியாதென்று உணர்ந்து துதித்தனர்.

பத்து மாதங்கள் கழித்து யுவனாச்வனின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு ஒரு ஆண்மகவு பிறந்தது.

குழந்தை பிறந்ததும் தாய்ப்பாலுக்கு அழுதது. என்ன செய்வதென்று அனைவரும் திகைத்தபோது, தேவேந்திரன் அங்கு வந்து,
இதோ நான் தருகிறேன்.(மாம் தாதா) குழந்தாய் அழாதே என்று சொல்லித் தன் வலது கை ஆள்காட்டி விரலைக் குழந்தையின் வாயில் வைத்தான். இந்திரன் மாம் தாதா என்று கூறியதால், குழந்தைக்கு மாந்தாதா என்ற பெயர் நிலைத்தது.

யுவனாச்வனின் வயிறு கிழிந்தபோதிலும், இறைவனின் அருளால் அவன் இறக்கவில்லை. அவன் அங்கேயே தங்கி தவமிருந்து முக்தியடைந்தான்.

மாந்தாதா பெரும் பலசாலியாக விளங்கினான். திருடர்கள் அவனைக் கண்டு படந்ததால் இந்திரன் அவனுக்கு த்ரஸத்தஸ்யு என்று பெயரிட்டான்.
மாந்தாதா பகவானின் அருளால் ஸார்வபௌமனாக, ஏழுதீவுகள் கொண்ட இப்பூவுலகம் முழுவதையும் தன் ஒரே குடையின் கீழ் ஆண்டான்.

#மஹாரண்யம்‌‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 27, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 283

வைவஸ்வத மனுவின் பத்து புதல்வர்களுள் ப்ருஷத்ரன், கவி இருவருக்கும் வம்சமில்லை. கரூஷன் முதலான ஏழு புதல்வர்களின் வம்சத்தையும் பார்த்தோம். இனி பத்தாவது புதல்வரான இக்ஷ்வாகுவின் வம்சத்தைக் கூறினார் ஸ்ரீ சுகர்.

முன்பொரு சமயம் மனு தும்மினார். அப்போது அவரது தும்மலிலிருந்து பிறந்தவர் இக்ஷ்வாகு. அவருக்கு நூறு புதல்வர்கள். அவர்களில் விகுக்ஷி, நிமி, தண்டகன் ஆகியோர் மூத்தவர்கள்.

இவர்களுள் கடைசி இருபத்தைந்து மகன்களும் ஆர்யாவர்த்தம் எனப்படும் இப்புண்யபூமியின் கிழக்குப் பகுதியின் அரசர்கள்.

மூத்தவர் மூவரும் நடுப்பகுதியை ஆள, இருபத்தைந்து பேர் மேற்குப் பகுதியின் பொறுப்பை ஏற்றனர்.

மீதி நாற்பத்தேழு பேரும் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை ஆண்டனர்.
ஒரு சமயம் விகுக்ஷி ஒரு பெரிய தவறிழைத்ததற்காக அவனை நாடு கடத்தினார் இக்ஷ்வாகு. பின்னர், வஸிஷ்டரின் அருளுடன் ஞானவிசாரம் செய்து, யோகத்தால் உடலை நீக்கி பரமபதம் எய்தினார்.
அதன்பின் நாடு திரும்பிய விகுக்ஷி மண்ணுலகை ஆண்டு வந்தான். பற்பல வேள்விகள் செய்து ஸ்ரீமன் நாராயணனை ஆராதித்தான். அவனுக்கு சசாதன் என்ற பெயரும் உண்டு.

விகுக்ஷியின் புதல்வன் இந்திரவாஹனன். அவனை ககுத்ஸ்தன் என்றும் அழைப்பர்.
க்ருதயுகத்தின் முடிவில் தேவாசுர யுத்தம் வந்தது. அதில் தேவர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது தேவர்கள் புரஞ்ஜயன் என்ற வீரனை உதவிக்கு அழைத்தனர்.
அவன் தேவர்கோன் தனக்கு வாகனமாக வந்தால் தான் போர் செய்வேன் என்று கூறினான். முதலில் இந்திரன் மறுத்தான். பின்னர் ஸ்ரீமன் நாராயணனின் கட்டளைக்கிணங்க ஒரு காளையுருவம் தாங்கி வந்தான்.

போருக்குத் தயாரான புரஞ்ஜயன், தெய்வீகமான ஆயுதங்களுடன், தேவர்கள் புகழ் பாட, காளையாய் வந்த தேவேந்திரனின் முதுகுத் திமிலில் அமர்ந்து கொண்டான்.

ஸ்ரீ மன் நாராயணனை தியானம் செய்ய, அவரது பலமும் சேர்ந்தது. தேவர்கள் புடைசூழச் சென்று அசுரர்களின் நகரத்தை முற்றுகையிட்டான்.

அசுரர்களுக்கும் புரஞ்ஜயனுக்கும் கடும்போர் நடந்தது. அவனை எதிர்த்தவர்கள் அனைவரையும் 'பல்லம்' எனப்படும் பாணங்களால் அடித்து யமலோகம் அனுப்பினான்.
அசுரர்கள் சினாபின்னமாகி பாதாளத்திற்கு ஓடிச்சென்றனர்.

புரஞ்ஜயன் அசுரர்களின் நகரை வென்று அனைத்து செல்வங்களையும் இந்திரனுக்கு அளித்தான். அசுரர் நகரை வென்றதால் புரஞ்ஜயன் என்றும், இந்திரனை வாகனமாகக் கொண்டதால் இந்திரவாஹனன் என்றும், காளையின் திமில் மீதமர்ந்து போர் செய்ததால் ககுத்ஸ்தன் என்றும் (ககுத் என்றால் காளையின் திமில் என்று பொருள்) அழைக்கப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, June 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 282

சக்கரம் அமைதியடைந்ததும், அம்பரீஷன் துர்வாசரை வணங்கி உணவு ஏற்க அழைத்தான்.
தான் திரும்பி வரும்வரை அவன் ஒரு வருட காலமாக உணவு ஏற்கவே இல்லை என்பதையறிந்து துணுக்குற்றார் துர்வாசர். தான் உண்டால்தான் அவன் உண்பான் என்பதற்காக அம்பரீஷன் பக்தியோடு பரிமாறிய உணவை ஏற்றார்.
பின்னர் அம்பரீஷனைப் பலவாறு புகழ்ந்தார்.

அம்பரீஷா! உன்னைப்போல் ஒரு பக்தனை இதுவரை எவருமே கண்டிருக்க இயலாது. பகவான் நாராயணன் உன் விஷயத்தில் பேருவகை கொண்டிருக்கிறார். அதை அவரே என்னிடம் சொன்னார். இதைவிட ஒருவனுக்கு வேறென்ன வேண்டும். இனி நான் ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சென்று உன் பக்தியையும் புகழையும் அனைவர்க்கும் எடுத்துக் கூறுவேன். உனக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும் என்று மனமார ஆசீர்வாதம் செய்துவிட்டுக் கிளம்பினார்.

இங்கு அம்பரீஷனால் காப்பாற்றப்பட்டோம் என்ற கழிவிரக்கம் அவரிடம் இல்லை. மாறாக பகவான் நடத்திய இந்தச் சோதனையில் தான் ஒரு பகடைக்காயாக ஆனதையும், அதில் அம்பரீஷன் வென்றதையும் மிகவும் பெருமையாய் எண்ணினார்.

அஹங்காரம் என்பதே இல்லாத உண்மையான ஸாதுவான துர்வாசர் வேண்டுமென்றே தன்னைத் தாழ்த்திக் கொண்டு, அம்பரீஷனை உயர்த்தினார். உண்மையில் பகவானின் குணமும் இதுவே.
துர்வாசர் விடைபெற்றுச் சென்றபின், அம்பரீஷன் பிரசாதமாகச் சிறிது உண்டான்
.
தன்னால் முனிவர் துன்பமடைந்ததையும், பின்னர் தன் பிரார்த்தனை யினால் அவரது துன்பம் நீங்கியதையும் அவன் பெருமையாக எண்ணவில்லை. அனைத்தும் பகவானின் திருவுள்ளம் என்றெண்ணினான்.

மென்மேலும் தன் பக்தியை வளர்த்துக்கொண்டான். ஸத்சங்கத்தில் ஈடுபட்டான். அனைத்து சுக போகங்களையும் நரகத்திற்குச் சமமாய் எண்ணினான்.

வெகுகாலம் நல்லாட்சி செய்த பின், தன்னைப்போலவே உயர்ந்த குணங்கள் கொண்ட தன் புதல்வர்களிடம் அரசை ஒப்படைத்துவிட்டுக் கானகம் ஏகினான். பகவான் வாசுதேவனிடம் மனத்தை நிலைநிறுத்தி உடலை விட்டு முக்குண பிரபஞ்சத்தைக் கடந்து அழியா உலகம் சென்றான்.
இப்புண்யக்கதையைக் கேட்பவரும் நினைப்பவரும் ஸ்ரீமன் நாராயணனின் பக்தராகிவிடுவர்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறினார்.
பரீக்ஷித்! அம்பரீஷனின் புதல்வர்கள் விரூபன், கேதுமான், சம்பு என்பவர்கள். விரூபனின் மகன் பிருஷதசுவன். அவனது மகன் ரதீதரன்.

மக்கட்பேறற்ற ரதீதரன் வாரிசு வேண்டுமென்பதற்காக ஆங்கிரஸ‌முனிவரை வேண்டினான். அவர் தன் பிரும்மதேஜஸை ரதீதரனின் மனைவிக்கு அருள, அவள் மிகவும் சக்தியுள்ள புதல்வர்களைத் தோற்றுவித்தாள்.

(ரிஷி கர்பம் என்பது இந்நாளில் உள்ளதுபோல் தாம்பத்தினால் ஏற்படுவதல்ல. சூரிய பகவானும் மற்ற தேவர்களும் குந்திக்கு எப்படி அருளினால் புதல்வர்களை வழங்கினார்களோ அப்படி என்று அறிக. அஞ்சனை வயிற்றில் வாயுவின் அம்சமாகவும், சிவனின் அம்சமாகவும் ஹனுமான் தோன்றிதும் இவ்வாறே)

ஆங்கீரஸ மஹரிஷியின் திருவருளால் தோன்றியதால் அந்தப் புதல்வர்கள் ஆங்கீரஸர்கள் எனவும், ரதீதரன் வம்சம் என்பதால் ரதீதரர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். பிராமணர் மற்றும் க்ஷத்ரியர் இரு வர்ணங்களையும் சேர்ந்தவர்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, June 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 281

தான் தன்னலமற்ற உத்தம பக்தர்களின் அடிமை என்றும், அவர்களுக்குத் தீங்கிழைத்தால் தன்னாலும் காக்க இயலாது என்றும் அம்பரீஷனையே சரணடையும்படியும் பகவான் துர்வாசரிடம் கூறினான்.

வேறு வழியின்றி துர்வாசர் மதுவனத்தை நோக்கி ஓடினார்.
மதுவனத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து எல்லா லோகங்களுக்கும் ஓடி, ஸத்யலோகம், கைலாசம், வைகுந்தம் வரை சென்று திரும்ப எவ்வளவு காலமாயிற்றோ. இதில் மற்ற லோகங்களுக்கும் பூமிக்கும் காலக்கணக்கு வெவ்வேறானவை.

அவ்வளவு காலமாக அம்பரீஷன் நீர் கூட அருந்தாமல், தான் தவறிழைத்துவிட்டதாகவே எண்ணி, வருந்திக்கொண்டு இருந்தான். சக்கரம் திரும்பி வரும் அல்லது ஏதேனும் செய்தி வரும். எது வந்தாலும் தனக்கான தண்டனை வேண்டும் என்று எதிர்பார்த்து விரதத்தைத் தொடர்ந்தான்.

துர்வாசர் உணவு ஏற்காமல் போனதோடு, சக்கரம் அவரைத்  துரத்தியதில் மிகவும் மனவருத்தம் கொண்டிருந்தான்.

அம்பரீஷா! காப்பாற்று! என்று அலறிக்கொண்டு துர்வாசர் திரும்பி ஓடிவந்து அம்பரீஷனின் சரணங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழ, அரசனோ, ஓடிச் சென்று ஒளிந்துகொண்டான்.

நாமாக இருந்தால் என்ன நினைப்போம்? பார்த்தீரா மஹரிஷியே! என் பக்தியின் பெருமையை? என்னிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று இறுமாந்திருப்போம்.

ஆனால், அம்பரீஷனோ, மஹரிஷியின் இந்தத் துன்பத்திற்குத் தானே காரணம். இதில் அவர் வந்து என் சரணத்தில் வீழ்வதாவது என்றுவெட்கினான். மிகவும் பதறிப்போனான்.

இருப்பினும், ஸ்ரீ சுதர்சனத்தை சாந்தப்படுத்தும்படி துர்வாசர் வேண்ட, அம்பரீஷன் சக்கரப்படையின் முன்னால் போய் இருகரம் கூப்பி நின்றான்.

திருவாழியே! சூரியபகவானின் திருவுருவானவர் தாங்கள். உடுகணங்களின் தலைவனான சந்திரனும் உமது பிம்பமே. ஐம்பூதங்களாகவும், ஐந்து தன்மாத்திரைகளாகவும், பதினோரு புலன்களாக விளங்குபவரும் தாங்களே.

ஆயிரம் ஆரங்கள் கொண்டவர். பகவானுக்குப் பிரியமானவர். இறையடியார்க்கு அன்பர். இன்சொல் மிக்கவர்.

அறவுருவானவர். அறநெறி விடுத்து மறநெறி புகுவோரை தூமகேதுவைப்போல் சுட்டெரிப்பவர். அனைத்து உலகங்களையும் காப்பவர். ஒளி வடிவானவர். மனோவேகம் படைத்தவர். தீயவரை அழிப்பதற்காகவே பகவானால் நியமிக்கப்பட்டவர்.

எங்கள் குலம் விளங்க இந்த அந்தணரை மன்னியுங்கள். இதுநாள் வரையில் நான் ஏதாவது தானம், வேள்வி, மற்றும் அறநெறிகளைக் கடைப்பிடித்திருப்பின் இவர்க்கு அருள் புரியவேண்டும்.

என் முன்னோர் அந்தணர்களையே முழுமுதல் தெய்வமாகக் கொண்டு ஆராதனை செய்திருப்பார்களேயானால், இவரை இந்தத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்.

குணபூரணனான பகவானை நான் அனைத்து ஜீவராசிகளிலும் கண்டு போற்றி ஒழுகுவது ஸத்யமெனில், எனது உபாசனையில் பகவான் ஸ்ரீ ஹரி சிறிதளவாவது மகிழ்ந்திருப்பாராகில் இந்த அந்தணர், துர்வாச முனிவர்க்கு ஏற்பட்ட ஆபத்து விலகட்டும் என்று கூறி நமஸ்கரித்தான்.

அம்பரீஷன் கூறியதைக் கேட்ட ஸ்ரீ சுதர்சனம் அமையடைந்து சிம்மாசனத்தில் போய் அமர்ந்தது.

இவ்விடத்தில் முற்றும் துறந்த முனிவர், ஒரு பக்தனுக்குத் தீங்கிழைத்ததால் ஞானம் விலகி, தேக அபிமானத்துடன் உயிரைக் காக்க அனைத்துலகங்களுக்கும் ஓடுகிறார். ஆனால், அரசன், எல்லா போகங்களையும் அனுபவிப்பவன், செல்வந்தன், பகவானைச் சரணடைந்தவன், தேக அபிமானத்தை முற்றும் துறந்து பிசாசு அழிக்க வந்தபோதும் அசையாமல் நின்றான்.
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 280

எங்கு சென்றாலும் துர்வாசரை சக்கரப்படை துரத்திவந்தது.
அவர் சத்யலோகம் சென்றார். ப்ரும்மதேவரிடம் சரணடைந்தார்.
தானாகத் தோன்றியவரே! எல்லா ஜீவன்களையும் படைத்தவரே! பகவானின் ஒளிமிகுந்த சக்கரப்படையிலிருந்து என்னைக் காத்தருளுங்கள் என்றார்.

ப்ரும்மதேவரோ சக்கரப்படையைப் பார்த்ததும் பயந்துவிட்டார்.

துர்வாசரே! என் ப்ரும்ம பதவி, இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே இரண்டு பரார்த்த காலம் முடிந்ததும், கால ரூபியான பகவானின் புருவ நெறிப்பில் அழிந்து விடக்கூடியவை.

நான், பரமேஸ்வரன், தக்ஷன், பிருகு, பிரஜாபதிகள்,யமன், தேவர்கோன், அனைவருமே எந்த பகவானுக்குக் கீழ்ப்படிந்து கடைமையாற்றுகிறோமோ அவருடைய பக்தனுக்குத் தீங்கிழைத்தால் நாங்கள் எப்படிக் காக்கமுடியும்? அதற்கான திறன் எம்மிடம் இல்லை.
என்றார். இதைக் கேட்டதும், துர்வாசர் அங்கிருந்து கிளம்பி கைலாசம் வந்தார்.

சத்யலோகத்தின் வாயிலில் காத்திருந்த ஸ்ரீ ஸூதர்சனம், துர்வாசர் வெளியில் வந்ததும் தொடரலாயிற்று.

துர்வாசர் கைலாசம் வந்ததும் ஸ்ரீ சுதர்சனம் மரியாதை நிமித்தமாக வாசலில் நின்றது.

துர்வாசர் வருமுன்னரே, விஷயம் அறிந்துகொண்ட பரமேஸ்வரன்,
அப்பா துர்வாசா! நீ செய்தது தவறு. பகவானின் பக்தர்களுக்கு தீங்கிழைத்தவர்களைக் காக்கும் சக்தி ப்ரும்மா உள்பட இங்கு எவர்க்குமில்லை.

நான், ஸனத்குமாரர், நாரதர், ப்ரும்மா, கபிலர், தேவலர், தர்மராஜர், ஆஸுரி, மரீசி முதலியவர்களும் யோக சித்தி பெற்றவர்களும்கூட விஷ்ணு மாயையை வெல்ல இயலாது. சர்வசக்தனான பகவானின் சக்கரத்தை நிறுத்த எவரும் துணியார். நீ சென்று பகவானையே சரணடைவாய். அவர் அண்டியவர்களின் துன்பம் களைபவர். அவர் உனக்கு நன்மை செய்வார். என்றார்.

கைலாயத்திலும் தனக்குப் புகலிடம் இல்லை என்பதை உணர்ந்த துர்வாசர் வைகுந்தம் சென்றார்.

நாராயணா! வாசுதேவா! அச்சுதா! என்று அலறல் சத்தம் கேட்டதும்,
பகவான் கேட்ட குரலாயிருக்கிறதே என்று அனந்தசயனத்திலிருந்து எழுந்தார்.
வாருங்கள் துர்வாசரே! வாய் நிறைய வரவெற்றார் பகவான்.
என்னவாயிற்று? ஏன் பதட்டம்?

ப்ரபோ! என்னைக் காப்பற்றுங்கள்.

என்னவாயிற்று? சுதர்சனம் பின்னால் வருகிறதே. என்ன செய்தீர்கள்? ஒன்றுமறியாதவர்போல் கேட்க,
துர்வாசர் சொன்னார்.

அம்பரீஷனைக் காணச் சென்றேன் ப்ரபோ!

ஓ! என் பக்தனைப் பார்த்தாலே நாமம் வாயில் வருமே. என்னவாயிற்று? அவன் துவாதசி விரதம் ஏற்றிருந்தானே. போயிருந்தீர்களா

ஆம்.

ஏகாதசி பஜனைக்குப் போனீரா?

இல்லை. துவாதசிக்குத்தான் போனேன்.

ஓ. சரி. சாப்பிடப் போனீரோ. சாப்பிட்டீர்களா. ப்ரசாதம் மிகவும் பாவனமானதாயிற்றே.

இல்லை ப்ரபோ. அவன் மேல் கோபித்துக்கொண்டு ஒரு ஆபிசாரம்..

செய்யலாமா துர்வாசரே? உணவுண்ணச் செல்லும் வீட்டிற்கு இரண்டகமா? சாப்பிட வாவென்று அழைத்ததற்கு தண்டனையா?
அம்பரீஷன் பொறுமைசாலி. சுதர்சனம் பொறுக்காதே. அதனால்தான் துரத்துகிறதா?
ஒரு ரகசியம் சொல்கிறேன் கேளும் துர்வாசரே! என்னை எல்லாரும் ஸ்வதந்த்ரன் என்கிறார்கள். ஆனால், உண்மையில் நான் ஸ்வதந்த்ரன் இல்லை.
உமக்குத் தெரியுமா? நான் என் பக்தர்களுக்கு அடிமைப்பட்டவன்.
சாதுக்கள் என் இதயத்தைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னை நேசிக்க, நான் அவர்களை நேசிக்கிறேன்.
மனைவி மக்கள், உற்றார், நண்பர், சொத்து சுகம் அனைத்தையும் மறந்து என்னை நினைப்பவர்களுக்காக நான் சேவகம் செய்கிறேன். அவர்கள் என்னிடம் முக்தியைக் கூட வேண்டுவதில்லை.
நானோ அவர்களது குடும்ப பாரம், கடைமைகள் அனைத்தையும் என் பொறுப்பில் ஏற்கிறேன்.
எனக்கு தீங்கிழைத்தால் பொறுத்துக்கொள்வேன். என் பக்தனுக்குத் தீங்கு செய்தால்
என்னாலும் உங்களைக் காக்க இயலாது. குற்றமற்ற சாதுக்களுக்கு இழைக்கப்படும் துன்பம் துன்பம் இழைத்தவனுக்கே திரும்பும்.

தவமும் கல்வியும் அந்தணர்க்கு நன்மை பயப்பவை. ஆனால், வணக்கமின்றி செருக்கினால் அலைபவர்க்கு அவையே தீங்காய் முடியும்.
என்னால் உம்மைக் காக்க இயலாவிட்டாலும் உங்களைப் பார்த்தாலும் பாவமாக இருக்கிறது. எனவே ஒரு உபாயம் சொல்கிறேன்.

நீங்கள் காலம் கடத்தாமல் வேகமாகச் சென்று அம்பரீஷனையே சரணடையுங்கள். அவனிடமே மன்னிப்பு வேண்டுங்கள். என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 279

துர்வாசர் மிகுந்த கோபத்துடன் ஆபிசாரம் செய்து ஒரு பிசாசைப் படைத்து, அதை அம்பரீஷன் மீது ஏவினார்.
தீப்பிழம்பைப் போல் ஒளிர்ந்த அந்தப் பிசாசு கையில் ஒரு கத்தியை ஏந்திக்கொண்டு, பூமி அதிரும்படி நடந்து அம்பரீஷனை நோக்கி வந்தது.
அம்பரீஷன் தான் நின்ற இடத்திலிருந்து சற்றும் அசையவில்லை. கலங்கவும் இல்லை. கைகளைக் கூப்பிக்கொண்டு அசையாமல் நின்றான்.

ஏன் அப்படி?
துர்வாசர் ஸாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரம். ஞானி. மஹான்கள் புலன்களையும் உணர்வுகளையும் ஜெயித்தவர்கள். அத்தகைய ஒரு மஹரிஷிக்கே கோபம் வரும்படி தான் நடந்து கொண்டிருந்தால், அதற்குப் பின் உயிருடன் இருந்து என்ன செய்யப் போகிறோம்?

மாபெரும் தவறைச் செய்துவிட்டு, தண்டனையிலிருந்து எதற்காகத் தப்பிக்க வேண்டும்? இங்கு தண்டனை யிலிருந்து தப்பிக்க நினைத்தால், அதைப்போல் இரு மடங்கு நரகத்தில் அனுபவிக்க நேரிடும்.

சாதுக்களுக்கு கோபம் வரும்படி உண்மையிலேயே நான் நடந்து கொண்டிருந்தால் அந்தப் பிசாசு என்னைக் கொல்லட்டும் என்று நினைத்தான் அரசன்.

கணத்திற்கொருதரம் பகவன் நாமத்தைச் சொல்லும் அம்பரீஷன், இப்போது பகவானை அழைக்கவில்லை. காப்பாற்றச் சொல்லி வேண்டவில்லை. அமைதியாக கைகூப்பி, கண்களை மூடியபடி நின்றான்.

சபையிலிருந்தவர் அனைவரும் தெறித்து ஓட, சிலை போல் நின்ற அம்பரிஷனைக் கொல்ல பிசாசு வந்து கொண்டிருந்தது.

தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்ட பக்தனைக் காப்பது இறையின் கடைமையாகிவிறது. தன்னைக் காத்துக்கொள்ள சிறு முயற்சி செய்தாலும், அது நம்பிக்கைக் குறைபாடு.

பிரஹலாதனின் நிலையைப்‌ பார்த்தோமல்லவா?
நெருப்பில் போட்டாலும், மலையிலிருந்து உருட்டினாலும், விஷம் கொடுத்தாலும், யானையை விட்டு இடறச் சொன்னபோதும், குழந்தை தன்னைக் காக்கும்படி வேண்டவில்லை. நாராயண நாமத்தை விடவும் இல்லை.

இப்போது அமைதியாக நின்ற அம்பரீஷனைக் காப்பது இறையின் பொறுப்பாகிவிட்டது. ஆனால், அவர்தான் முன்னமேயே ஸ்ரீ சுதர்சனத்தை அம்பரீஷனின் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றிருந்தாரே.

ஸ்ரீ சுதர்சனத்தால் அதற்குமேல் பொறுக்க இயலவில்லை. சிம்மாசனத்திலிருந்து சீறிப் பாய்ந்துவந்த சுதர்சனம், சிறு பாம்பைக் காட்டுத் தீ பொசுக்குவதுபோல க்ருத்தியா என்ற அந்த பிசாசைப் பொசுக்கியது.

ஆபிசாரம் செய்வதில் உள்ள ஆபத்து என்னவெனில், ஏவப்பட்ட சக்தி தோல்வியுற்றால் அது ஏவியவரைத் தாக்கும்.
இங்கே பிசாசை எரித்த ஸ்ரீ சுதர்சன ஆழ்வார், அதை ஏவிய துர்வாசரின் பக்கம் திரும்பினார்.

அவ்வளவுதான். பயந்துபோன துர்வாசர், தன் உயிரைக் காத்துக்கொள்ள எட்டுத் திக்கிலும் ஓடினார்.

ஆழிப்படை தன்னைத் துரத்துவதைக் கண்ட துர்வாசர் மேருமலையின் தாழ்வறைகளில் சென்று ஒளிந்துகொள்ளத் தலைப்பட்டார். அங்கேயும் சுதர்சனம் தொடர்ந்து வரவே, விண்ணுலகம், அதலம், விதலம், முதலிய கீழ் உலகங்கள், ஸமுத்ரம், ஸ்வர்கம் எல்லா இடங்களுக்கும் ஓடினார். அவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே சக்கரம் தொடர்ந்தது.

இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும்.
துர்வாசரோ கிழவர். கால்களால் தடுமாறி ஓடுகிறார். ஸ்ரீ சுதர்சனமோ கால சக்கரத்தைக் காட்டிலும் சக்தியும், வேகமும் வாய்ந்தது.
ஒருவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பினால் அதிவேகமாக ஓடமுடியும் என்றாலும்,
சக்கரப்படையை விட வேகமாக அவரால் ஓடமுடியுமா?

ஆக, அவரை எரிப்பதல்ல நோக்கம். அவரை பயமுறுத்தி, தன் தவற்றை உணரச் செய்வதே ஸ்ரீ சுதர்சனத்தின் நோக்கமாக இருக்கவேண்டும்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 278

ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை முடித்துப் பின் உணவேற்பதாகச் சொல்லிவிட்டுத் தன் சீடர்களுடன் யமுனைக்குச் சென்றார் துர்வாசர்.

ஒரு பூஜையோ, பாராயணமோ, அல்லது சாதனையோ முடியும் தறுவாயில் ஒரு மஹாத்மா விஜயம் செய்தால், உண்மையில் இறைவனே வந்ததாகக் கொள்ளவேண்டும். அந்த பூஜை இறைவனுக்கு உகப்பு என்று பொருள்.

அவ்வாறே ஒரு வருடமாக அனுஷ்டித்துவரும் துவாதசி விரதத்தை முடிக்கும் தறுவாயில் துர்வாசர் வந்தது அம்பரீஷனுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. தன் விரதம் நல்லபடியாகப் பூர்த்தி அடைந்ததென்று மகிழ்ந்தான்.

இறைவன் தன் விரதத்தை ஏற்றார் என்று பூரித்தான்.
அதிதியை விட்டுவிட்டு உணவு ஏற்பது பாவம் என்பதால் துர்வாசருக்காகக் காத்திருக்கத் துவங்கினான்.
துர்வாசரோ அம்பரீஷனை சோதிக்க எண்ணினார்.

அவர் ப்ரும்மத்யானம் செய்துகொண்டு நீருக்கடியில் அமர்ந்துவிட்டார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. அம்பரீஷன் என்ன செய்கிறான் என்று தன் ஞானத்ருஷ்டியால் கவனித்துக்கொண்டே இருந்தார் துர்வாசர்.

நேரம் ஆக ஆக, துவாதசி திதி போய்க்கொண்டே இருந்தது. 24நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் அம்பரீஷன்.

துவாதசி திதி இருக்கும்போதே பாரணம் செய்யாவிடில், இவ்வளவு நாள்களாகக் கட்டிக் காத்த விரதம் நஷ்டமாகிவிடும்.

உணவு ஏற்கலாம் என்றாலோ, அதிதியா ல்க ஒருவர் வந்திருக்கும் போது, அவர் உண்ணாமல் தான் உண்பது மஹாபாவமாகும்.

இத்தகைய தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்ட அம்பரீஷன், சபையிலிருந்த அந்தணர்களைக் கலந்தாலோசித்தான்.

இதிலிருந்து மீள வழி உண்டா என்று சிந்தித்தபோது, அந்தணர்கள் ஒரு வழி சொன்னார்கள்.

நீர் மட்டும் அருந்தினால், பாரணம் செய்ததாகவும் ஆகும்‌. செய்யாததாகவும் ஆகும் என்பதால், சாளக்ராமத்திற்கு அபிஷேகம் செய்த நீரை ஏற்கும்படி அரசனிடம் கூறினர்.

அம்பரீஷனும் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்த தீர்த்தத்தை ஒரு உத்தரிணியில் பருகி பாரணையை முடித்தான்.

பின்னர், துர்வாசரின் வருகையை எதிர் பார்க்கலானான்.
அம்பரீஷன் பாரணையை முடித்தானோ இல்லையோ, ஞானக் கண்ணால் அனைத்தையும் பார்த்த துர்வாச‌முனி உடனே அங்கு வந்தார்.
பசியோடு, சினத்தினால் உடல் நடுங்க, புருவங்களை நெறித்து, முகம் சிவக்க, அம்பரீஷனைப் பார்த்துச் சாடலானார்.

எவ்வளவு தீய எண்ணம் உனக்கு? அரசன் என்ற இறுமாப்போ? பக்தி இருக்கிறதென்ற கொழுப்பா? சர்வ வல்லமை படைத்தவன் நீ என்ற ஆணவமா? எவ்வளவு திமிர்? அழையா விருந்தாளியாக வந்த என்னை அத்தி ஸத்காரம் என்று விருந்துண்ண அழைத்துவிட்டு, எனக்கு முன் இவன் உண்டுவிட்டானே. இப்போதே இதன் பலனை அனுபவி
என்று கர்ஜித்த வண்ணம் தன் சடையிலிருந்து ஒன்றைப் பிடுங்கி எறிந்து, ஊழிக்காலப் பெருந்தீ போன்ற "க்ருத்யா" என்ற பிசாசைப் படைத்தார் துர்வாசர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 277

இறைவனால் அளிக்கப்பட்ட ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துவிட்டு கீழமர்ந்து அரசபாரம் வகித்தான் அம்பரீஷன்.

ஒரு சமயம் தன்னைப் போலவே உலகப் பற்றுக்களைத் துறந்து அறநெறியுடன் விளங்கும் ஸ்ரீமதியுடன் துவாதசி விரதம் இருந்து ஒருவருடம் வரை அனுஷ்டிக்க உறுதிகொண்டான் அம்பரீஷன்.

விரதம் ஏற்கும் நாள்களில் முழுமனத்துடன் இறைவனின் தியானத்திலும், கதைகளிலும், பஜனைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய அரசன் அரசப் பொறுப்பை தகுந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸ்ரீசுதர்சனத்தையும் அழைத்துக்கொண்டு கண்ணன் நித்யவாசம் செய்யும் மதுவனம் சென்று அங்கு ஒரு வருடம் தங்கினான்.

மதுவனம் என்பது கண்ணன் அவதரித்த மதுராவாகும்.
துருவனையும் அவனது குருவான நாரதர் தவம் செய்வதற்காக மதுவனத்திற்கு அனுப்பினார் என்பதைப் பார்த்தோம்.

பல்வேறு மஹரிஷிகள் பலகாலம் தவம் செய்து வந்த புண்யபூமி மதுவனம் ஆகும். கண்ணன் பிறந்த சமயத்தில் நகரமாக மாறிவிட்டிருந்தது. இப்போதும் அதைச் சுற்றிய அடர்ந்த விருந்தாவனக் காடுகள் உள்ளன.

மதுவனத்தில் ஒரு வருடம் தங்கியிருந்து புண்ய நதியான யமுனையில் ஸ்நானம் செய்து, விதிப்படி துவாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்தான் அம்பரீஷன்.

ஒரு வருட முடிவில் கார்த்திகை மாதத்து துவாதசி சமயத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் உபவாசம் இருந்தான். நீர் கூட அருந்தாமல் ஸ்ரீமன் நாராயணனை பூஜை செய்தான்.

மஹா அபிஷேக விதிமுறைப்படி, ஸ்ரீசுதர்சன ஆழ்வாருக்குத் திருமஞ்சனம் செய்து, சான்றோர்களையும் பூஜை செய்தான்.

பின்னர் மிகவும் ருசியான பலவிதமான பக்ஷ்யங்களுடன் கூடிய உணவை அந்தணர்களுக்குப் படைத்தான். பின்னர் கொம்புகளில் தங்கக்குப்பிகளும், குளம்புகளில் வெள்ளியும் , அழகிய பட்டு வஸ்திரங்களால் போர்த்தப்பட்டதும், சாதுவான குணமுள்ளவைகளும், நன்றாகப் பால் கறப்பவைகளும், கன்றுகளுடன் கூடியவைகளுமான அறுபதுகோடி பசுக்களை அந்தணர்களுக்குத் தானமாக அளித்தான். அவ்ற்றுடன் அவைகளைப் பராமரிக்க ஆகும் செல்வத்தையும், பால் கறக்கும் பாத்திரங்களை யும் அவர்களது வீட்டுக்கு அனுப்பினான்.

வந்த அனைவரும் உணவேற்றபின் உயர்ந்த தக்ஷிணைகள் கொடுத்து அனுப்பிவைத்துவிட்டுக் கடைசியாகத் தான் பெரியோரின் அனுமதி பெற்று பாரணம் செய்ய அமர்ந்தான்.

அவ்வமயம், ஸாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரமான துர்வாச முனிவர் அதிதியாக (அழையா விருந்தாளி) அங்கு வந்தார்.

அளவற்ற அருள்புரியவும், சாபம் கொடுக்கவும் திறன் பெற்றவர் அவர். மற்ற ரிஷிகள் அனைவருக்கும் சாபம் கொடுத்தால் தவசக்தி குறையும். ஆனால், துர்வாசரோ, சாபம் கொடுக்க கொடுக்க தவசக்தி வளருமாறு அருள் பெற்றிருந்தார்.
எனவே, துர்வாசரைக் கண்டாலே அனைவரும் ஓடி ஒளிந்துகொள்வர்.

தானாகத் தன் இருப்பிடம் தேடி ரிஷி வந்திருப்பதை அறிந்த அம்பரீஷன் உணவு ஏற்காமல் ஓடிச் சென்று வரவேற்றான். பதினாறு வித உபசாரங்கள் செய்து முறைப்படி பூஜை செய்தான். அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி உணவு ஏற்குமாறு அன்புடன் வேண்டினான்.

தன்னைத் தாழ்த்திக்கொண்டு பக்தனுக்கு உயர்வளிப்பதில் பகவானைப் போலவே சான்றீர்களும் விரும்புவர்.

துர்வாசர் தலைசிறந்த பக்தனான அம்பரீஷனின் புகழை உலகில் சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை நிலைநிறுத்தத் திருவுளம் கொண்டார் துர்வாசர்.

அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று, யாம் யமுனையில் நீராடி அனுஷ்டாங்களை முடித்துப் பின் வந்து உணவு ஏற்கிறோம் என்று சொல்லிவிட்டுத் தன் சீடர்களுடன் கிளம்பி யமுனைக்குச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, June 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 276

அம்பரீஷனின் உயர்ந்த குணங்களைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்ன ஸ்ரீ சுகர், அவனது மனைவி பற்றிச் சொல்லும்போது 'மஹிஷ்யா துல்ய சீலயா' என்று ஒரே வரியில் தெளிவுபடுத்திவிடுகிறார்.
அம்பரீஷனுக்குச் சமமாக நற்குணங்கள் அனைத்தும் பொருந்தியவள் அவனது மனைவி என்பதாக.

அம்பரீஷனுக்குத் திருமணம் நடந்த விவரங்களை பெரியோர்கள் வாயிலாக அறிகிறோம்.

அம்பரீஷன் தினமும் கோவிலுக்குச் சென்று, அரசன் என்ற படாடோபம் இல்லாமல், தானே கோவில் வேலைகளில் பங்கெடுப்பான் என்று பார்த்தோம். இறைவன் ஸ்ரீ ஹரியே தன் எஜமானன். தான் அவனது சேவகன் என்ற எண்ணத்தில் கோவிலைச் சுத்தம் செய்வது, மலர்கள் சேகரிப்பது, இன்ன பிற சேவைகளையும், சமயத்திற்குத் தகுந்தபடி தினமும் செய்யும் பழக்கமுள்ளவன். கோவிலுக்கு அரச உடையோடு வராமல், சாதாரணமாக வருவான் அம்பரீஷன்.

அந்நாட்டில் பகவானின் மேல் அளவற்ற பக்தி கொண்ட ஸ்ரீமதி என்பவள் தானும் இயன்றபோதெல்லாம் வந்து கோவிலில் கோலம் போடுவது, சுத்தம் செய்வது, மாலை கட்டுவது போன்ற கைங்கர்யங்களைச் செய்துவந்தாள்.

வயதான அவளது தந்தையோ, அவளுக்கு மணம் முடிப்பதற்காக விரும்பினார். அவளோ ஹரிபக்தர் ஒருவரை மணப்பதே விருப்பம் என்று வரும் வரன்களையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் மாலை கோவிலில் சிரத்தையாக கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அம்பரீஷனைப் பார்த்து, தந்தையிடம் காட்டினாள்.

இவர் மிகவும் ஆசையாக இறைவனுக்கு கைங்கர்யம் செய்கிறார். இவரை மணக்கச் சம்மதம். என்றாள்.

அவர் யாரென்று விசாரித்ததில் அரசன் என்று தெரிந்ததும், அதிர்ந்துபோனார் பெண்ணைப் பெற்றவர்.
இரவு வீட்டில், தந்தைக்கும் பெண்ணுக்கும் விவாதம் துவங்கியது.

கல்யாணம் வேணாம் வேணாம்ன. இப்ப ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கறேங்கற. சத்தமா சொல்லாதம்மா. சுவத்துக்குக் கூட காது உண்டு. நம்மளை உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க.

ஏழு த்வீபங்களுக்கும் ராஜா, ஸார்வபௌமனான அவர் எங்க? குடிசைல வாழற நாம எங்க? உன் பேராசைக்கு ஒரு அளவில்லையா? நீ என்ன ராஜகுமாரின்னு நினைப்பா?
அவள்‌ மகளைப் பார்த்து சத்தம் போட, அவளோ
அப்பா, அவர் ராஜான்னு எனக்குத் தெரியாது. அவர் பகவான் ஹரியின் சிறந்த பக்தர். ரொம்ப ஆசையா கைங்கர்யம் பண்றார். அவரைக் கல்யாணம் செய்துண்டா நான் பக்தி பண்ணவும் தடையிருக்காது. நான் அரசபோகத்துக்கு ஆசைப்பட்டு சொல்லலப்பா என்றாள்.

இறைவனின் சங்கல்பத்தினால், அன்றைய இரவு மாறுவேடத்தில் நகர சோதனைக்குச் சென்ற அம்பரீஷன் ஒரு குடிசையிலிருந்து ராஜா ராஜா ‌என்று சத்தம் கேட்பதைப் பார்த்து, மறைந்திருந்து தந்தையும்‌ பெண்ணும் பேசுவதைக் கேட்டான்.

மறுநாள் அரசவையில், ஒரு வீரனை அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னான்.
பயந்து நடுங்கிவிட்டார் தந்தை.
பாரு. உன் துடுக்குத்தனத்தால ராஜ தண்டனை கிடைக்கப்போறது
என்று பலவாறு பெண்ணைத் திட்டிக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு அரசவைக்கு வந்தார்.

அம்பரீஷன் ஸ்ரீமதியைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான், அவள் சிறந்த பக்தை என்றும், தனக்கேற்றவளாக இருப்பாள் என்பதையும்.
சபையோருக்காக விசாரித்தான்.

என்ன தைரியத்தில் நீ என்னைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டாய்? செல்வந்தன் என்பதாலா? அரசியாகவேண்டுமா? என்றதும் காதைப் பொத்திக்கொண்டாள் ஸ்ரீமதி.

பின்னர் தைரியமாக பதில் சொன்னாள்,
உங்கள் பக்திக்காகவும், கைங்கர்யத்தில் தங்களுக்கு இருக்கும் ருசிக்காகவும், மேலும் தங்களுடன் இணைந்து தானும் பல கைங்கர்யங்களில் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டும் என்பதற்காகவுமே ஆசைப்பட்டேன். அரசன் என்பதற்காக அல்ல. என்றாள்.

அவளது மன உறுதியைப்‌ பார்த்து சபையோர் அசந்துபோனார்கள். பின்னொரு நன்னாளில் அம்பரீஷனுக்கும் ஸ்ரீ மதிக்கும் நன்முறையில் விவாஹம் நடந்தது.

ஒருவருக்கொருவர் மிகவும் அனுசரணையாய் தினமும் கைங்கர்யம் செய்யத் துவங்கினர்.
அம்பரீஷன் பெருக்கினால், ஸ்ரீ மதி குப்பையை வாரிக் கொட்டுவாள்.
அவன் மலர் பறித்து வந்தால், மாலை கட்டிக் கொடுப்பாள். இவ்வாறாக இன்னும் பல கைங்கர்யங்களை அரசனும் அரசியும் இணைந்தே செய்வதைக் கண்ட மக்களுக்கும் தன்னலமற்ற சேவையிலும், இறைவன் மீதும் நாட்டம் அதிகரித்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 15, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 275

அடுத்ததாக ஸ்ரீ சுகர், நாபாகனின் மகனான அம்பரீஷனின் கதையைச் சொல்லப்போகிறேன் என்றார்.
அதைக் கேட்டு பரீக்ஷித் மிக்க மகிழ்ச்சியுற்றான்.

பெருமானே! அவர் பெரிய பக்தர் என்றும் ராஜரிஷி என்றும் கேட்டிருக்கிறேன். எவராலும் தடுக்க இயலாத அந்தண சாபம் அவரை ஒன்றும் செய்யவில்லையாமே. தீய தேவதை அவர்மீது ஏவப்பட்டபோதும், அதனால் இவரைத் துன்புறுத்த இயலவில்லையாமே. எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. அம்பரீஷனின் கதையை விரிவாகக் கூறுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் கருணை பொங்க பரீக்ஷித்தை நோக்கிவிட்டுக் கூறத் துவங்கினார்.
ஆம். அரசே! அம்பரீஷன் பெரும் பாக்யசாலி. ஏழு த்வீபங்கள் கொண்ட பூமி முழுதும் அவனது வெண்கொற்றக்குடையின் கீழ் இருந்தது. பெரும் செல்வமும், அளவற்ற செழுமையும் அவனது ஆட்சியில் நிரம்பி வழிந்தது.
ஆனால், இவை அனைத்தையும் கனவு போல் மதித்தான் அம்பரீஷன்.

செல்வமும் செழிப்பும், சில நாள்களில் அழியக்கூடியவை, அவற்றை நம்பிக்கொண்டு வாழத்துவங்கினால் நரகவாசம் நிச்சயம் என்று உணர்ந்திருந்தான்.

பகவான் ஸ்ரீ ஹரியிடத்தும், அடியார்களிடத்தும் எல்லையற்ற பக்தி கொண்டிருந்தான்.

எப்போதும் இறைவனின் தாமரைத் திருவடிகளையே எண்ணிக்கொண்டிருப்பான். பரமனது குணங்களை புகழ்ந்து பாடுவதிலும், அவற்றைக் கேட்பதிலுமே பொழுதைச் செலுத்தினான்.

இறைவனின் திருக்கோவிலில் பணி செய்ய ஆள்களை நியமித்துவிட்டு கம்பீரமாக, அரசதோரணையில் சென்று மேற்பார்வை செய்பவன் இல்லை.

தன்னை இறையின் சேவகனாக எப்போதும் உணர்பவன். திருக்கோவிலை தினமும் சுத்தம் செய்வது, மெழுகி அலகிடுவது ஆகியவற்றைத் தானே செய்தான்.

கண்களை எப்போதும் அர்ச்சாவதாரத்தை தரிசிப்பதிலும், உடலை ஸாதுசேவை செய்வதிலும், ஈடுபடுத்தினான்.

இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதம் தவிர வேறெதையும் உண்ணமாட்டான்.

தன் அரசவை, மாளிகை அனைத்து இடங்களிலும் எங்கிருந்து பார்த்தாலும் கோவிலின் வானளாவிய கோபுரம் தெரியும் வண்ணம் சாளரம் அமைத்திருந்தான். மற்ற பணிகள் செய்யும் நேரத்திலும், அவனது கண்கள் கோபுரத்தை நோக்கியபடி இருக்கும்.

அரசனின் அருகில் வாசனைத் திரவியங்கள், போன்றவை இருக்காது. இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிர்மால்ய துளசியை எப்போதும் அருகில் வைத்துக்கொண்டு அதை அடிக்கடி முகர்ந்த வண்ணமே இருப்பான்.

கோவில்களுக்கும், திருத்தலங்களுக்கும் நடந்தே செல்லும் பழக்கமுள்ளவன்.

அரசன் என்பதால் சந்தனம், மாலை, பட்டாடை ஆகியவற்றைப் பயன்படுத்தும் நியதி இருப்பதால், அவற்றை பகவானுக்கு சாற்றிவிட்டு பிரசாதமாகவே தான் ஏற்பான்.

எந்த வேலையைச் செய்தாலும், அந்தர்யாமியான பகவான் பார்த்துக்கொண்டிருக்கிறார், இதன் பலனும் அவரைச் சேர்ந்ததே என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் முழுமனத்துடன் நம்பிச் செய்வான்.

பக்தி என்ற பெயரில் நாட்டை வெறும் பஜனை மடமாக மாற்றாமல், மக்களை நல் வழிப்படுத்தி, தானே அவர்களுக்கு முன்னுதாரணமாக நின்று திறம்பட்ட அமைச்சர்களைக் கொண்டு நல்லாட்சி செய்துவந்தான்.

ஸரஸ்வதி நதிக்கு அந்தப்பக்கம் இருந்த வறண்ட பாலை நிலத்தில் வசிஷ்டர், அஸிதர், கௌதமர் முதலிய‌ ரிஷிகளைக் கொண்டு ஏராளமான அஸ்வமேத யாகங்களைச் செய்தான்.
அவ்வேள்விகளின் பயன் அனைத்தையும் யக்ஞபுருஷனான பகவானுக்கே அர்ப்பணித்தான்.

அம்பரீஷனின் வேள்விச்சாலையில் இருந்த ரித்விக்குகள் நல்லாடைகள் அணிந்து, இமைப்பதை விட்டு தேவர்கள் போல் காட்சியளித்தனர்.
மக்களையும் தன் வழியில் செலுத்தியபடியால், அவர்கள் எப்போதும் இறையின் புகழைக் கேட்பதும், பாடுவதும், உற்சவங்கள் கொண்டாடுவதுமாக இருந்ததனர். அதனால் எவரும் வைகுண்டத்தையும் விரும்பவில்லை.

பக்தியினால் அரசாட்சியையும், அரசபாரத்தினால் பக்தியையும் விட்டானில்லை.

பற்றற்று விளங்கிய அம்பரீஷனிடம் பெருமகிழ்ச்சி கொண்ட பகவான் ஒரு நாள் அவனுக்குக் காட்சியளித்தார்.
பழக்கத்தினால், என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அம்பரீஷனுக்கு வேண்டியதுதான் என்ன?
இறைவனையே நேரில் கண்டபின்பு ஒரு உண்மையான பக்தனுக்கு என்ன தேவை இருக்கமுடியும்?
ஸ்ரீ ஹரி அவனது நிலையை மெச்சி, வந்ததன் அடையாளமாக, தன் சுதர்சனத்தை அவனிடம் கொடுத்தார். உன்னிடமே உனக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும். என்று சொல்லி மறைந்துவிட்டார்.

பகவான் விரும்பிக் கொடுத்த சக்கரத்தாழ்வாரைப் பூஜையில் வைத்து ஆராதனம் மட்டும் செய்ய அம்பரீஷனுக்கு விருப்பமில்லை.
ஸ்ரீ சுதர்சன ஆழ்வாரையே சிம்மசனத்தில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்வித்து, அவருடைய குடையின் கீழ் தான் நிர்வாகம் செய்யத் துவங்கினான்.

தினமும் நடைபெறும் ராஜாங்க காரியங்கள் அனைத்தையும் சக்கரத்தாழ்வாரிடம் தெரிவித்து, கணக்கு வழக்குகளைப் படித்துக்காட்டி, கப்பத்தை அவரது திருவடிக்கே சமர்ப்பித்து, இவ்வாறாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாரைக் கொண்டாடத் துவங்கினான் அம்பரீஷன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 274

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
பரீக்ஷித்! மனுவின் மகன் நபகன். அவனது மகன் நாபாகன். இவன் கவி என்றும் அழைக்கப்படுகிறான்.

அவன் குருகுலம் சென்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்றபின் வெகுகாலம் கழித்து வீடு திரும்பினான். வெகுநாள்கள் ப்ரும்மச்சாரியாக இருந்தபடியால், அவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான், அவனுக்கு எதற்கு சொத்து என்பதாக நினைத்து அவனது மூத்த சகோதரர்கள், சொத்தில் அவனுக்குப் பங்கு வைக்காமல் பிரித்துக் கொண்டனர்
படிப்பை முடித்துவிட்டு, குருகுலத்திலிருந்து திரும்பி வந்த கவி சொத்தில் தனக்கான பங்கைக் கேட்டான். அவனது சகோதரர்கள் நீ தந்தையை வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டனர்.

உடனே அவன் தந்தையைப் பார்க்க,
அவர்கள் உன்னை ஏமாற்றுகிறார்கள். நீ இதை ஏற்கவேண்டாம். எனினும் நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த ஒரு உபாயம் சொல்கிறேன்.

நீ நன்கு படித்திருக்கிறாய். ஆங்கீரஸ கோத்ரத்து மஹரிஷிகள் இப்போது ஸத்ரயாகம் செய்கின்றனர். அவர்கள் மிகவும் மேதாவிகளாக இருப்பினும், ஆறு நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய வேள்வி, மற்றும் அதன் கிரியைகள் அனுஷ்டானங்கள் ஆகியவற்றில் குழப்பம் ஏற்பட்டு செய்வதறியாமல் நிற்கின்றனர்.

நீ மகான்களாகிய அவர்களிடம் சென்று அவர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வண்ணம் ரிக்வேதத்தில் அமைந்துள்ள மந்திரங்களை எடுத்துக்கூறு. அவர்கள் யாகத்தில் மிகுந்ததனைத்தையும் உனக்கு தக்ஷிணையாகத் தருவார்கள். அதை வைத்துக்கொண்டு உன் வாழ்வை சுகமாக வாழலாம் என்றார்.

கவி தந்தையான நபகனின் சொல்படி யாகசாலைக்குச் சென்று மஹரிஷிகளின் குழப்பத்தைத் தெளிவித்தார். அவர்கள் யாகத்தில் மிகுந்துபோன அத்தனை செல்வங்களையும் கவிக்கு அளித்துவிட்டு ஸ்வர்கம் சென்றனர்.

அவற்றைக் கவி எடுத்துக்கொள்ள முயன்றபோது, வடதிசையிலிருந்து ஸ்ரீருத்ரன் வந்தார்.
யாகத்தில் மீந்ததனைத்தும் என்னைச் சேர்ந்தது. என்று சொன்னார்.

அதைக் கேட்ட நாபாகன் (கவி)
இவற்றை ரிஷிகள் எனக்குக் கொடுத்தனர். எனவே என்னைத்தான் சேரும்
என்று கூற, ஸ்ரீ ருத்ரன்
எனில், உன் தந்தையிடம் இது பற்றிக் கேள் என்றார்.

நாபாகன் தந்தையிடம் சென்று, நடந்ததனைத்தையும் சொல்லி, செல்வம் பற்றிக் கேட்க, அவர்,
ஒரு சமயம் தக்ஷ யாகத்தில், வேள்வி முடிந்ததும், மிகுவதனைதும் ஸ்ரீ ருத்ரனைச் சேர்ந்தது என்று முடிவு செய்தனர். எனவே, இந்தச் செல்வம் முழுவதும் அவருக்குரியதே. அவரிடமே கொடுத்துவிடு என்றார்.

கவி, திரும்ப வேள்விச் சாலைக்கு வந்து, ஸ்ரீ ருத்ரனை வணங்கி,
இறைவா! என் பிழையைப் பொறுத்தருளுங்கள். வேள்விச் சாலையில் மிகுந்ததனைத்தும் தங்களைச் சேர்ந்ததே என்று என் தந்தை கூறலுற்றார். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் என்றார்.
இதைக் கேட்டு ஸ்ரீ ருத்ரன் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தாய்! உன் தந்தை அறநெறிகளின்படி தீர்ப்பு கூறினார். நீயும் அதை அப்படியே ஸத்யமாக என்னிடம் சொன்னாய். நீ வேதமந்திரங்களை நன்கு அறிந்திருக்கிறாய். உனக்கு ப்ரும்மஞானத்தை அளிக்கிறேன்.
மேலும், இங்கு வேள்வியில் மிகுந்த செல்வம் அனைத்தையும் உனக்கே அளிக்கிறேன். என்று கூறி கவிக்கு அனுக்ரஹம் செய்துவிட்டு மறைந்தார்.

ரிக்வேதத்தில் விளக்கப்பட்டுள்ள இக்கதையை காலை மாலை இரு வேளைகளிலும் கேட்பவர் புத்திக்கூர்மை பெறுவர். வேதக்கருத்தை அறிந்து பரமாத்ம நிலையை அடைவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..