Thursday, March 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 224 சிங்கக்குட்டி

ஹிரண்யகசிபு இறந்து பட்ட போதும் பகவானின் கோபம் தணியவில்லை. அவரது திருவடிகளின் அழுத்தத்தால் பூமி நடுங்கியது. அவர் திருமுகத்தைக் கண்டு பயந்து,  எதிரில் செல்லவோ, அருகில் சென்று வணங்கவோ எவரும் துணியவில்லை.

அவர் அவையிலுள்ள ஹிரண்யகசிபுவின் ஆசனத்தில் ஏறி அமர்ந்தார்.

தேவமகளிர் ஹிரண்யகசிபு ஒழிந்தான் என்ற செய்திகேட்டு, ஆனந்தத்தால் பூமாரி பொழிந்தனர். 

அவரைக் காண வந்த தேவர்கூட்டத்தால் ஆகாயம் நிரம்பியது. துந்துபி, ஆனகம் முதலிய வாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாட, அப்ஸரஸ்கள் நடனமாடினர்.

அப்போது அங்கு வந்திருந்த ப்ரும்மா, இந்திரன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகணங்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், கிம்புருஷங்கள், விஷ்ணுபார்ஷதர்கள் எல்லோரும் ஸ்ரீ ந்ருஸிம்மரை அருகில் செல்லாமலும், வெகு தொலைவில்லாமலும் நின்று தனித்தனியே துதித்தனர்.

அவ்வளவு பேரும் துதி செய்தும், பகவானின் கோபத்தின் வேகம் குறையவில்லை. அவர்களால் அருகில் செல்லவும் இயலவில்லை.

தேவர்கள் பகவானை சமாதானப்படுத்தும்படி மஹாலக்ஷ்மியை அனுப்பிவைத்தனர். அவரோ, நரஸிம்மரின் பயங்கரமான திருமேனி கண்டு பயந்தார். இதற்கு முன் இவரை நான் இப்படிக் கண்டதே இல்லை என்றார். அருகில் செல்ல நடுங்கினார்.

ப்ரும்மதேவர், ப்ரஹலாதனைப் பார்த்து,

குழந்தாய்! உன் தந்தையிடம் சினம் கொண்ட பகவானை நீயே சமாதானம் செய்.
என்றார்.

குழந்தை குருவான நாரதரின் முகம் நோக்க, நாரதர் தலையசைத்தார்.

குருவும், பகவானும் ஒன்றாக நின்றால், முதலில் இறையைக் காட்டிக் கொடுத்த குருவை வணங்கவேண்டும்‌. அவர் அனுமதியுடன் இறையை வணங்க வேண்டும். 

உடனே, பரம பாகவதனான ப்ரஹலாதன், இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து, மெல்ல மெல்ல பகவானின் அருகில் சென்று, தரையில் விழுந்து வணங்கினான்.

பயங்கரமான, விசித்ரமான  திருமேனி கண்டு அவனுக்கு மட்டும் பயமில்லையா? குழந்தையாயிற்றே! என்றால், அப்பா சிங்கத்தைப் பார்த்து, சிங்கக்குட்டி பயப்படுமா? அனைவர் கண்களுக்கும் பயங்கரமாகத் தெரிந்த பகவான், குழந்தையின் கண்களுக்கு மட்டும் கருணை மிக்கவராகவும், அன்பு மிகுந்தவராகவும் காட்சியளித்தான்.

ஒன்றுமறியாத பாலகன், திருவடியில் விழுந்து வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட பகவானின் கோபம் சட்டென மாறியது. கருணை கொஞ்சும் உள்ளத்தோடு, அவனை வாரியெடுத்தார். அபயமளிக்கும், தாமரை போன்ற  தன் கரத்தை அவன் தலையில் வைத்தார்.

பகவானின் கரம் பட்டதும், அவனது எஞ்சியிருந்த பாவங்கள் அனைத்தும் சாம்பலாயின. ப்ரும்மானந்தம் சித்தித்தது.

காதலும், ஆனந்தமும் ஆட்கொள்ள ஆனந்தக் கண்ணீர் பெருகத்  தழுதழுத்தான். மயிர்க்கூச்செறிந்தான். 

இமைக்க மறந்தான். அவரையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். ஒன்று பட்ட மனத்துடன் குழந்தை பகவானைப் பார்க்க, நரஹரியும் அவனை அன்பு பொங்கப் பார்த்து முழுவதுமாய் ஊடுருவிக் கொண்டிருந்தார்.
வெகுநேரம் கழித்து, மெதுவாக, வாய்குழறத் துதிக்கலானான் குழந்தை.

இறைவா! ப்ரும்மா முதலான ஸத்வகுணம் நிரம்பியவர்களின் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்த துதிகளும் தங்களை இன்று வரை மகிழ்விக்க இயலவில்லை. அசுர குலத்தில் பிறந்து, தமோகுணம் நிரம்பிய என் துதி தங்களுக்குப் பிடிக்குமா?

செல்வம், நற்குலம், அழகு, தவம், கல்வி, திறன், பொலிவு, வீரம், உடல் வலிமை, முயற்சி, யோகம், அறிவு ஆகிய பன்னிரண்டு குணங்களாலும் தாங்கள் மகிழ்வதில்லை. பக்தி ஒன்று தான் தங்களை மகிழ்விப்பது. மேற்கண்ட எதுவும் இல்லாத கஜேந்திரனின் பக்திக்கு மகிழ்ந்து ஓடிவந்தீரே.

மேற்கண்ட அனைத்து நற்குணங்களும் நிரம்பியவனானாலும், அவன் தங்களை சரணடையாவிடில் யாது பயன்? அவனால் தன்னைக் கரையேற்றிக்கொள்ள இயலாதே.

சர்வ சக்தி படைத்த தங்களுக்கு எங்கள் பூஜையால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எனினும் கருணை கூர்ந்து அவற்றை ஏற்கிறீர்.

முகத்துக்குச் செய்யும் அலங்காரம், கண்ணாடியில் எதிரொளிப்பதுபோல், தங்களுக்கு எவ்விதத்தில்  பூஜை செய்கிறோமோ, அதே விதத்தில் எங்களையே வந்தடைகின்றன.

தங்கள் புகழைப் பாடுபவன், அக்கணத்திலேயே தூய்மையடைகிறான். நானும் அதனாலேயே என் அறிவிற்கு எட்டியவரை தங்கள் பெருமைகளைப் பாடுகிறேன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment