Friday, November 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 360

தத்தித் தத்தி நடக்கும் கண்ணன் சில சமயம் புல் தடுக்கிக் கீழே விழுவான். சட்டென்று நிமிர்ந்து தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று பார்ப்பான். யாரும் பார்க்கவில்லையென்றால் தானே எழுந்து, மண்ணைத் தட்டிக்கொண்டு மீண்டும் நடப்பான்.

யாராவது கோபி பார்த்து விட்டால், அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பான். அவள் ஓடிவந்து தூக்குவதற்கு வந்தால், பேசாமல் அப்படியே உட்கார்ந்துவிடுவான். அவள் வந்து கண்ணனைக் கொஞ்சி முத்தமிட்டு மண்ணைத் தட்டிவிட்டு தூக்கிவைத்துக் கொள்வாள். அல்லது இறங்கி மீண்டும் நடையைத் தொடர்வான்.

அந்த கோபி கண்ணன் விழுந்ததைக் கண்டு சிரித்துவிட்டால் அன்றைக்குத் தொலைந்தாள் அவள். பெருங்குரல் எடுத்து அழுது, அமர்க்களம் செய்து யசோதையை வரவழைத்துவிடுவான். யசோதை வந்து கண்ணனைத் தூக்கி சமாதானப் படுத்த முயலும்போது சிரித்த கோபியைக் கையைக் காட்டி, என்னமோ அவள்தான் தள்ளிவிட்டாள் என்னும்படியாக மாட்டிவிட்டுவிடுவான்.

ஒரு சமயம் கண்ணன் கீழே விழுந்தபோது, சுற்றுமுற்றும் யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு எழுந்து நடக்கத் துவங்கினான். அப்போது 'கொல்'லென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. ஆயிரவரின் சிரிப்பொலி அது. சுற்றி எவரும் இல்லையே என்று நிமிர்ந்து மேலே பார்த்தபோது, தேவர்கள் அனைவரும் நின்றுகொண்டிருந்தனர்.

பகவான் நிமிர்ந்து பார்த்ததும் பயந்துபோய் வாயை மூடிக்கொண்டார்கள்.
மூவுலகையும் ஒரு காலால் அளந்தவன் புல் தடுக்கிக் கீழே விழுகின்றானே என்று சிரித்துவிட்டார்கள் போலும்.

அவ்வளவுதான். வந்ததே கோபம் கண்ணனுக்கு. உங்களை யார் இங்கு அழைத்தார்கள்? இங்கேயே வந்து பிறந்திருக்கவேண்டியதுதானே. இப்போது மேலிருந்து என்ன வேடிக்கை? என்று கடிந்துகொள்ள பயந்துபோய் கலைந்து சென்றனர்.

வெகு விரைவிலேயே நன்றாக நடக்கவும் பழகிக்கொண்டான் கண்ணன்.

கறுத்த மேகம் போல் திருமேனி. குண்டு தொப்பை, அழகழகான அவயவங்கள். ஸ்ரீ சுகர் பாதி ச்லோகத்தில் கண்ணன் நடக்க ஆரம்பித்ததைச் சொல்லிவிட்டு அடுத்த லீலைக்குப்‌ போய்விடுகிறார். பெரியாழ்வாரோ பத்து பாசுரங்களில் அனுபவிக்கிறார்.

கண்ணனையும், யானையையும் ஒப்பிடுகிறார். குட்டி யானை போல் நடக்கிறானாம்.

கண்ணனும் குண்டு, யானையும் குண்டு.
யானைக்கு வாயிலிருந்து மதநீர் சொட்டிக்கொண்டே இருக்கும். கண்ணனுக்கும் வாயிலிருந்து இற்றுச் சொட்டும்.

யானை வரும் பின்னே மணியோசை வரும்‌முன்னே என்பதற்கிணங்க யானை வருமுன் அதன் கழுத்தில் கட்டிருக்கும் மணியின் ஓசை கேட்கும். கண்ணனுக்கும் இடுப்பில் கிண்கிணி, மேகலை, காற்சதங்கைகள் எல்லாம் போட்டுவிட்டிருப்பாள் யசோதை. அவன் வருவதற்கும் முன் அவை சலசலவென்று ஒலியெழுப்பும்.

யானை தெருவில் போனால் யானை யானை என்று பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் வியந்து நோக்குவர். ஆனால், அது யாரையும் லட்சியம் செய்யாமல் போய்க்கொண்டே இருக்கும்.

கண்ணன் தெருவில் போனாலும் அப்படித்தான். கோகுலத்திலுள்ள அனைவரும் வந்து கண்ணன் கண்ணன் என்று சொல்லிக்கொண்டு வைத்த கண்ணை எடுக்காமல் தலை மறையும்வரை பார்த்துக் கொண்டே நிற்பார்கள். இவன் யாரையும் லட்சியம் செய்யாமல் போய்க்கொண்டே இருப்பான்.

இவ்வாறு மிக அழகாக ஒப்புநோக்கும் ஆழ்வாரின் பாசுரம் கீழ்வருமாறு.

தொடர் சங்கிலிக்கை சலார் பிலாரென்ன
தூங்கு பண்மணியொலிப்ப
படுமும் மதப்புனல் சோர வாரணம்
பைய நின்றூர்வதுபோல்
உடன்கூடி கிண்கிணி ஆரவாரிப்ப
உடைமணி பறைகறங்க
தடந்தாளினைக் கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ!

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, November 27, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 359

கண்ணன் தவழத் துவங்கினான். அவனைப் பார்த்து பலராமனும் அவனோடு சேர்ந்து தவழ்ந்தான்.

ஒருநாள் வாசல்படி தாண்டி தவழ்ந்ததும், அதை அனைவரும் உற்சவமாகக் கொண்டாடினார்கள்.

குழந்தைகள் நகரத் துவங்கியதும் யசோதைக்கு ஒரு வேலையும் ஆவதில்லை. எந்த நேரம் எந்த அரக்கன் வருவானோ என்று கண்கொத்திப் பாம்பாக கண்ணனை கவனித்து கவனித்து ஏரார்ந்த கண்ணியாகிப்போனாள்.

யார் வாசல் பக்கம் போனாலும் அவர்கள் பின்னாலேயே தவழ்ந்து ஓடுவதும், சலங்கை சத்தம் கேட்டு யசோதை ஓடி வருவதுமாக ஆயிற்று.

சிலசமயங்களில் யசோதையின் புடைவை நிறத்தில் வேறு யாராவது உடுத்தியிருந்தால் அவர்கள் பின்னால் போய் விடுவான் கண்ணன். சலங்கை சத்தம் கேட்டு அந்த கோபி திரும்பிப்பார்த்தால் முகத்தைப் பார்த்துவிட்டு அம்மா இல்லை என்று அழுவான்.
பின்னர் திரும்பித் தவழ்ந்து வருவான்.

வீட்டுக்குள் கண்ணனுக்கு விஷமத்துக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

நீரை அடித்து விளையாடுவது, பால், தயிர்ச் சட்டிகளைக் கவிழ்ப்பது, வெண்ணெய்ப் பானைக்குள் கைவிட்டு அண்ணனும் தம்பியுமாக உண்பதுபோக, உடல் முழுவதும் பூசிக் கொள்வது, உலக்கையைத் தள்ளிவிடுவது, திமிரும் கன்றுக்குட்டியை அழுத்திப் பிடிப்பது, கோட்டை அடுப்பை சிறுநீர் கழித்து அணைத்துவிட்டு வந்துவிடுவது, காலிப் பானையைத் தலையில் கவிழ்த்துக்கொள்வது என்று ஒரே அமர்க்களம்.

தோட்டத்திற்குச் சென்றால், பெரிய கொம்புள்ள மாடுகளுக்கு நடுவில் போய் நிற்பது, கன்றுக்குட்டியின் வாலைப் பிடித்து இழுப்பது, பட்டாம்பூச்சி பின்னால் ஓடுவது, சேற்றுக்குள் இறங்கி காலை இழுத்துக்கொண்டு நடப்பது, அதை மேலே பூசிக்கொள்வது.

இவற்றைத் தவிரவும், கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதும், உலக்கையை இடிக்கவிடாமல் அதைப்‌பிடித்துக்கொண்டு தொங்குவதும், கன்றுக்குட்டிக்குப் போட்டியாக தானும் நேராக மாட்டின் மடியில் வாய் வைத்துக் குடிப்பதும், மாட்டுச் சாணியை எடுத்து கோபிகளின் மீது அப்பிவிடுவதுமாக எண்ணற்ற விளையாட்டுகள்.

பொழுது புலர்ந்தது முதல் உட்காரக்கூட விடாமல் யசோதையையும் மற்ற கோபிகளையும் வேலை வாங்கினான் கண்ணன்.

இவைகளுக்கு நடுவில் எப்படியாவது கண்ணனை நீராட்டி, உச்சிக் கொண்டை போட்டு, முத்து மாலைகளால் அலங்கரித்து, சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களைப் பூசி, அழகாகக் கஸ்தூரி திலகம்‌ இட்டு, கைகளில் வளைகளும், கால்களில் சதங்கைகளும் மாட்டி அலங்காரம் செய்வாள் யசோதை. நீராடுவதற்குத்தான் அமர்க்களமே தவிர, அலங்காரங்கள் செய்யப் பொறுமையாகக் காட்டுவான் கண்ணன். எல்லா நகைகளையும் கண்ணனுக்கு அணிவித்து அழகு பார்க்கும் யசோதை அவனுக்கு இடுப்பில் ஒன்றும் அணிவிக்கமாட்டாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Tuesday, November 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 358

ஸஹஸ்ர நாமங்கள் உடையவனின் பெயர் சூட்டும் விழா குலதெய்வத்தின் கோவிலில் ரகசியமாக ஏற்பாடாயிற்று.

ஜாதகர்மா சடங்குகள் முடிந்ததும், ரோஹிணியின் புதல்வனுக்கு பெயர் சூட்டினார் ஆசார்யர்.

இவன் நண்பர்களைத் தன் நற்குணங்களால் மகிழ்விப்பவன். எனவே ராமன் என்று பெயர் பொருத்தமாக இருக்கும். மிகவும் வலிமை வாய்ந்தவனாக விளங்குவான். எனவே பலபத்ரன், பலராமன், என்றழைக்கப் படு வான். யாதவர்கள் அனைவரையும் பகையைப் போக்கி ஒன்று திரட்டுவான். எனவே ஸங்கர்ஷணன் என்ற பெயரும் இவனுக்குப் பொருத்தமாகிறது. என்றார்.

இப்போது நந்தன் தன் பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

யசோதைக்கு நெஞ்சமெல்லாம் படபடப்பு. என்ன பெயர் வைக்கப்போகிறாரோ. ஏதாவது பழங்காலத்துப் பெயர் வைத்துவிட்டால் என்ன செய்வது? ஆசார்யரை மறுத்துப் பேசவும் இயலாது. வாயில் நுழையாமலோ பெரிய பெயராகவோ வைக்ககூடாது. சின்னதாக, எல்லோராலும் விரும்பத்தக்கதாக, புதிய பெயராக வைக்க வேண்டுமே.

யசோதையின் முகத்தையும் படபடப்பையும் பார்த்த கர்காச்சார்யார், அவளையே கேட்டார். ஞானியான அவருக்குத் தாயுள்ளம் தெரியாதா?

உன் பிள்ளைக்கு என்ன மாதிரி பெயர் வைக்கலாம் சொல் யசோதா.

மனத்தில் இருந்ததை அப்படியே கொட்டிவிட்டாள் யசோதை. அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தாரே தவிர ஆச்சார்யருக்கு சற்றே தலை சுற்றியது.

சமாளித்துக்கொண்ட பிறகு பேசத் துவங்கினார்.
இவன் பகவான் நாராயணனுக்குச் சமமானவன். (பகவானுக்கு ஒத்தார் மிக்கார் இல்லையென்பதால் பகவானே என்பது பொருள்)
ஒவ்வொரு யுகத்திலும், வெண்மை, சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருந்தான். இப்போது கறுப்பு நிறத்தை ஏற்றுள்ளான். முன்பு வசுதேவரின் மகனாகப் பிறந்திருந்தான். அதனால் வாசுதேவன் என்றழைக்கப்படுவான்.

நான் ஒரு பெயர் வைக்கப்போகிறேனே தவிர, இவனது குணங்களையும் சிறப்புகளையும் கொண்டு இவனுக்குப் பல பெயர்கள் அமையப்போகின்றன. அவை அனைத்தையும் நான் அறிவேன்.

இவனை மட்டுமல்ல, இவனிடம் அன்பு கொண்டவரைக்கூட எவராலும் வெல்ல ‌இயலாது. இவனை நீங்கள் வெகு கவனமாகக் காப்பாற்றவேண்டும்.

பெயரைச் சொல்லமாட்டேங்கறாரே. யசோதை முணுமுணுத்தாள். நாராயணன், வாசுதேவன் என்ற பெயர்களெல்லாம் மிகவும் பழைய பெயர்கள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கர்கர் இவனுக்கு க்ருஷ்ணன் என்ற பெயர் பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.
என்றார்.

க்ருஷ்ணன், க்ருஷ்ணா, க்ருஷ் வாய்க்குள் சொல்லிப்‌ பார்த்துக்கொண்டாள் யசோதை. நாவு இனித்தது. முகம் மலர்ந்தது. கர்காச்சார்யாருக்கு அப்பாடா என்றிருந்தது.

ஒருவழியாக பகவானின் தாயாருக்குப் பெயர் பிடித்துவிட்டது.
இரண்டு பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்த க்ருஷ்ணன் கர்காச்சார்யாரைப் பார்த்துக் கள்ளமாய்ச் சிரித்தான். உன் வேலைதானா என்று நினைத்தவர் அச்சிரிப்பில் மயங்கினார்.

க்ருஷ்ணன் க்ருஷ்ணன் க்ருஷ்ணன் என்று குழந்தையின் வலக்காதில் மூன்று முறை ஓதினார் நந்தன். நெல்லைப் பரப்பி பெயரை எழுதினார்கள்.

அன்றைய நாளிலேயே க்ருஷ்ணா க்ருஷ்ணா என்று ஆயிரம் முறைக்கி மேல் அழைத்து அழைத்துப் பார்த்துவிட்டாள் யசோதை. பெயரைச் சொல்லும்போதெல்லாம் நாவில் தேன் ஊறினால் என்னதான் செய்வாள் அவள்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 357

ஒருநாள் யசோதை குழந்தையை எடுத்து மடியிலிட்டுப் பாலூட்டினாள். பால் குடித்த குழந்தையின் அழகிய முகத்தை முத்தமிட்டுத் தாலாட்டியபோது, குழந்தை பெரியதாக கொட்டாவி விட்டான்.

அவனது வாயில் ஆகாயம், பூமி, ஸ்வர்கம், ஒளி மண்டலம், திக்குகள், சூரியன், சந்திரன், அக்னி, வாயு, கடல், தீவுகள், மலைகள், அவற்றிலிருந்து பெருகும் ஆறுகள், காடுகள், தாவர - ஜங்கமங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களையும் கண்டாள்.

திடீரென்று குழந்தையின் வாய்க்குள் என்னென்னமோ தெரிய, பயந்து போனாள் யசோதை. பால் ஜீரணமாகவில்லை என்று யோசித்து ஓமம் கலந்த நீரைப் புகட்டினாள்.

அவையனைத்தும் என்னவென்பது புரியவிடாமல் அவளை மாயையில் ஆழ்த்தினான் கண்ணன். உறங்கும் குழந்தையைச் சற்று நேரம்‌ ரசித்தாள். பின்னர், இவன் உறங்கும் சமயம் வேலை செய்தால்தான் உண்டு என்று புலம்பிக்கொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண்ணை நியமித்துவிட்டு உள்ளே சென்றாள்.

அவ்வப்போது இதைப்போல் எதையாவது செய்து கோகுல வாசிகளை வியப்பிலாழ்த்துவதும், பின்னர் மாயையில் ஆழ்த்துவதுமாக இருந்தது தெய்வக் குழந்தை. அதற்கும் பொழுது போக வேண்டாமா? சர்வ சக்தனாக இருந்துகொண்டு பொம்மையைப்போல் யசோதையும் இடைச்சிகளும் ஆட்டுவிப்பதை அனுமதிக்கிறானல்லவா?

வசுதேவரின் குலப்ரோஹிதர் கர்காச்சார்யார்.
வசுதேவர் அவரை ரகசியமாக அழைத்து,
என் மனைவி ரோஹிணியும், என் புதல்வனும் கோகுலத்தில் வசிக்கிறார்கள்.


அவன் பிறந்து வெகுநாள்கள்‌ ஆகியும் ஜாதகர்மம் முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து பெயர் வைக்கவில்லை. நீங்கள் ரகசியமாகச் சென்று, என் மகனுக்கும், நந்தரின் குழந்தைக்கும் பெயர் வைத்துவிட்டு, கர்மாக்களைச் செய்து வைத்து விட்டு வாருங்கள். இந்த விஷயம் கம்சனுக்குத் தெரிந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து நேரலாம். எனவே, விமரிசையாக இல்லாமல் ரகசியமாகச் செய்யவேண்டும். என்று சொல்லி அனுப்பினார்.

கர்காச்சாரியார் நந்தனைப் பார்க்க வந்தார்.
ஏதும் முன்னறிவிப்பின்றி அதிதியாக வந்த ஆசார்யரைப் பார்த்ததும் நந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அதிதி தேவோ பவ என்பதற்கிணங்க, அவரை தெய்வமாகவே எண்ணி வழிபட்டு உபசாரங்கள் செய்தார்.

பின்னர், கர்காசார்யாரைப்‌ பார்த்து வினவினார்.
தன்னிறைவு பெற்ற ஞானியான தங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்?
தங்களின் வரவு என் நன்மைக்காகவே நிகழ்ந்திருக்கிறது.

ஒளி மண்டலங்கள், சூரியன், கிரஹங்கள் ஆகியவற்றின் கதி(பாதை) பற்றிய விவரங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை ஜ்யோதிஷம் என்ற பெயரில் தொகுத்தவர் தாங்களே. அதனால்தானே மாந்தரின் அறிவுக்கு அப்பாற்பட்ட பாவ புண்ய பலன்களை அறிய முடிகிறது.

தெய்வமே வந்தாற்போல் தானாக வந்திருக்கிறீர்கள். தங்கள் திருக்கரங்களால் இந்தச் சிறு குழந்தைகளை ஆசீர்வதியுங்கள். தாங்களே இவர்களுக்கு ஜாதகர்மா முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

அதற்காகத்தானே வந்தார் ஆசார்யர்?
உடனே ஒப்புக்கொண்டார்.
ஆனால்,
நான் வசுதேவரின் குலப் புரோஹிதர். நான் இக் குழந்தைகளுக்கு ஜாதகர்மம் செய்துவைத்தால், கம்சனுக்கு சந்தேகம் வரும். அவனால் ஆபத்து வரக்கூடும் என்று அஞ்சுகிறேன். எனவே, ரகசியமாகச் செய்யலாம்
என்று சொன்னார்.

குலதெய்வத்தின் கோவிலில் வைத்து மறுநாளே ரகசியமாகச் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கடகடவென்று காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பாடுகள் நடந்தன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, November 21, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 356

அனைவர் கண்களிலும் புழுதியை வாரி இறைத்துவிட்டு கணத்தில் குழந்தையைத் தூக்கிச் சென்றவன் காற்றரக்கன். த்ருணாவர்த்தன் என்பது அவன் பெயர்.

கண்ணனைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வெளியே வெகுதூரம் சுழன்று பறந்தான். உயர உயரக் கொண்டுபோய், ஆகாயத்திலிருந்து குழந்தையை பூமியில் விட்டெறிவது அவன் திட்டமாயிருக்கவேண்டும்.

அவன் குழந்தையைத் தன் பிடியில் கொண்டுபோனதாய் நினைத்துக் கொண்டிருக்க, உண்மையில் அவன்தான் தெய்வக் குழந்தையின் பிடியில் அறியாமலே மாட்டிக் கொண்டிருந்தான்.

நல்ல உயரம் சென்றபோதும் குழந்தை அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சிரித்தவண்ணம் இருந்தது.

அவனது கண்ணுக்கருகில் தன் கண்ணை வைத்துப் பார்த்தது குழந்தை. கோபியர்க்கே‌ கிட்டும் பாக்யம். அசுரனுக்குக் கொடுக்கிறான். யார் கேட்பது அவனை?

மெதுவாகச் சிரித்துக்கொண்டே அவனது கழுத்தை வளைத்து இறுக்கத் துவங்க, ஏதோ விபரீதம் என்று அசுரன் உணர்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

தன் முகத்தின் வெகு அருகில் இறைவனைக் கண்டவாறே விழிகள் பிதுங்கி, நாக்கு வெளியில் தள்ளி, மிக அதிகமான உயரத்திலிருந்து கீழே விழத் துவங்கினான் த்ருணாவர்த்தன்.

பரமேஸ்வரனின் அம்பினால் அடிபட்ட திரிபுரம்போல் உடல் சிதறிக் கீழே விழும் அரக்கனை அங்கே கூடி நின்று அழுதுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் கண்டனர்.

கீழே விழுந்திருந்த அசுரனின் உடலைப்‌ பார்த்ததும் மிகவும் பயந்துபோயினர். அருகில் ஓடிச்சென்று பார்த்தபோது, அரக்கனின் மார்பில் விளையாடிக்கொண்டிருந்தான் குழந்தை.

அவனை எடுத்துக்கொண்டுபோய் யசோதையிடம் கொடுத்ததும் அவளுக்குப்‌ போன உயிர் மீண்டு வந்ததுபோலாயிற்று.

குழந்தை நலமுடன் வந்ததற்கு மிகவும் மகிழ்ந்தபோழ்திலும் அவர்கள் அனைவர் அனைவரையும் ஒரு இனம் புரியாத பயம் அழுத்த ஆரம்பித்தது.

வான் வழியே அரக்கனால் கொண்டு செல்லப்பட்டு, எமனின் வாயிலை மிதித்துவிட்டு நலமுடன் வந்துவிட்டானே என்று சொல்லி சொல்லி அங்கலாய்த்து மகிழ்ந்தனர்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுவதற்கு நாம் என்ன செய்துவிட்டோம்? தவம் செய்தோமா? இறைவனை உளமுருகி வழிபட்ட பலனாயிருக்குமோ? குளம், கிணறு வெட்டி, நற்பணிகள் செய்திருப்போமா? உயிரினங்களிடம் கருணை காட்டினோமா? எந்த நல்வினை இப்படி ஒவ்வொரு முறையும் காப்பாற்றுகிறது?

விதம் விதமாக யோசித்த நந்தன், வசுதேவரின் சொற்களை நினைந்து நினைந்து அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தார்.

மீண்டு வந்த குழந்தையைக் கண்டு சிரிக்கக்கூடத் தோன்றாமல், கண்ணீரையும் துடைக்காமல் முத்தமிட்ட வண்ணமே இருந்தாள் யசோதை. தலை மற்றும் உடல் முழுவதும் புழுதி அப்பிக்கொண்டிருந்ததால் குழந்தையை நன்னீரால் நீராட்டினாள்.

பாலூட்டியபின் மறுபடி கோசாலைக்குக் கொண்டுபோனாள்.

கோசாலைக்கு வந்ததுமே அடுத்தது கோமிய ஸ்நானம்தான் என்று பயந்த கண்ணன், கண்களை மூடி உறங்குவதுபோல் பாசாங்கு செய்யத் துவங்கினான்.
பசுக்கள் இருக்கும் இடத்திலேயே தொட்டிலைப் போட்டு, உறங்குகின்ற குழந்தையை அதில் விட்டு, பல்வேறு வகையான ஸ்லோகங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்.

கண்ணைத் திறந்தால் கோமிய ஸ்நானம் செய்விப்பாள் என்று பயந்து கண்களை இறுக்கி மூடிக்கொண்டான் அந்த தேவர் தலைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, November 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 355

மெல்லத் தவழத் துவங்கியிருந்தது குழந்தை. கைகளை ஊன்றி ஆனை ஆடுவதும், வழுக்கிக் கீழே விழுந்து மூக்கை நசுக்கிக்கொண்டு அழுவதும், அன்னை சமாதானப் படுத்துவதும், அன்னை சொல்லும் சின்ன சின்ன வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லப் பழகுவதும், அவ்வப்போது நிறங்களைப் பார்த்து விளையாடுவதும், கன்றுக்குட்டியைக் கண்டால் அன்னை இடுப்பிலிருந்து துள்ளித் தொட முயல்வதும்..

ரோஹிணியின் புதல்வனைப் பார்த்தால் மகிழ்ச்சியில் சிரிப்பதும், கையைக் காலை ஆட்டி இருவரும் அவர்களது மொழியில் பேசிக்கொள்வதுமாக..

அங்கு ஒருவர்க்கும் பொழுது போவதே தெரிவதில்லை.
யசோதைக்கு குழந்தையை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.

ஒருநாள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தோட்டத்தில் இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

குழந்தையைக் கண்டதும் துள்ளி ஓடிவந்தது குட்டிக் கன்றுக்குட்டி.
தெய்வக்குழந்தை பிறந்த அன்றே பிறந்த கன்று அது.
நெற்றியில் அழகாக திலகம் போல் வெண்மையாக இருக்கும்.

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை மடியில் உட்காரவைத்து ஆனை ஆட்டிக்கொண்டிருந்தாள் அன்னை.

திடீரென்று அவளுக்கு கால்கள் வலிக்க ஆரம்பித்தன. கைகளாலும் குழந்தையை ஆட்ட முடியவில்லை. குழந்தையின் எடை அதிகரித்துக் கொண்டே போக, யசோதை அதை உணர்ந்தாளில்லை.

வெகு நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் மரத்துப்போய்விட்டதென்று நினைத்தாள்.

குழந்தையைக் கீழே இறக்கிவிட, அவன் சிணுங்கினான். ஒரு சேடியை அழைத்து பக்கத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, காலுக்கு எண்ணெய் தேய்க்க, நொண்டிக்கொண்டு உள்ளே போனாள். யசோதை சற்றே பருமனாக இருப்பவள். எனவே, தன் உடல் எடை அதிகமானதால், தனக்கு முடியவில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

அவள் உள்ளே சென்றாளோ இல்லையோ, மெல்லியதாக வீசிக் கொண்டிருந்த தென்றல், சற்று வேகமாக வீசி, அனைவர் கண்களிலும் புழுதியை வாரி இறைத்தது.

சேடிப் பெண் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிமிர்வதற்குள், பேரிரைச்சலோடு பெரும் சூறாவளி ஒன்று சுழன்று வந்தது. வரும் வழியில் இருந்த மாடுகள், கோபர்கள், வீடுகளின் கூரைகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.
குழந்தை அருகிலிருந்த சேடி, கன்றுக்குட்டி எல்லாம் திசைக்கொன்றாய் வீசப்பட்டனர்.

சற்று நேரம் கழித்து சூறாவளி சுழன்று ஊருக்கு வெளியே வேகமாகப் போய்விட்டது.
இங்கே திண்ணையில் விடப்பட்டிருந்த குழந்தையைக் காணவில்லை.

சேடி பயந்துபோனாள். தான் வீசப்பட்டதுபோல், குழந்தையும் எங்காவது வீசப்பட்டிருக்கலாம் என்று நினைத்தாள் அவள்.

புயற்காற்றைப்‌ பார்த்ததுமே குழந்தையின் நினைவு வந்த யசோதையும் மற்ற கோப கோபியரும் ஓடிவந்துவிட்டனர்.

குழந்தையைக் காணவில்லை‌என்றதும் அதிர்ந்து போனார்கள். நுழைந்து நுழைந்து வண்டிகளுக்கடியிலும், மாட்டுக் கொட்டகை, அக்கப் பக்கத்து வீடுகள், தெருக்கள் என்று தேடத் துவங்கினர்.

குழந்தையோ, சந்தோஷமாகக் காற்றில் பறந்துகொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 354

குழந்தை உதைத்து வண்டி நொறுங்கியது என்று சிறுவர்கள்‌சொன்னதை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குழந்தையை உள்ளே கொண்டுபோய், பாலூட்டி, அந்தணர்களிடம் காட்டி நல்வாழ்த்துப்‌ பெற்று உறங்கவைத்தாள் யசோதை.

அந்தணர்களின் ஆசி பயனற்றுப்போகாது என்று மனநிம்மதி கொண்ட நந்தன், அவர்களை உபசரித்து, நிறைய செல்வங்களை வழங்கினார்.

உண்மையில் என்னவாயிற்று?
குழந்தைகளைக் கொன்று வருவதாகச் சொல்லிச் சென்ற பூதனையை வெகு நாள்களாகியும் காணவில்லை. என்னவாயிற்று என்று பார்த்து வரும்படி ஒற்றர்களை அனுப்பினான் கம்சன். அவள் இறந்தாள் என்ற செய்தியை கம்சனால் நம்பவே முடியவில்லை. அதுவும், ஒரு கைக்குழந்தையால் பூதனை போன்ற ஒரு பெரும் அரக்கி இறப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

மிகவும் கவலை கொண்டான். அடுத்ததாக அந்தக் குறிப்பிட்ட குழந்தையைக் கொன்று வரும்படி இன்னொரு அசுரனை அனுப்பினான்.

கம்சனால் அனுப்பட்ட அந்த சகடாசுரன் என்பவன், குழந்தையைக் கொல்வதற்காக சமயம் பார்த்திருந்தான்.

யசோதை குழந்தையைக் கொண்டு வந்து தோட்டத்தில் வண்டிக்கடியில் தூளி கட்டி விட்டதும், வண்டிச் சக்கரத்தில் புகுந்து வண்டியைக் குழந்தை மேல் கவிழ்ந்து கொன்றுவிட எண்ணினான்.

ஆனால், நடந்தது என்னவென்று தெரியுமல்லவா?
கோகுலத்தில் ஒருவருக்கும் அசுரன் வந்ததும் தெரியாது. இறந்ததும் தெரியாது. அவர்கள் குழந்தைக்கு பாலாரிஷ்டம். எனவே மாற்றி மாற்றி ஏதோ ஆபத்து வருகிறது என்று கவலை கொண்டனர்.

இந்நிகழ்வின் பிறகு குழந்தையைப்‌ பார்த்துக்கொள்ள இன்னும் இரு பெண்களைப் பிரத்யேகமாக நியமித்தார் நந்தன்.

ஒன்றுமே செய்யாமல் படுத்துக் கிடக்கும் சின்னஞ்சிறு குழந்தை வீட்டிலுள்ள அனைவரையும் தன் பால்‌இழுக்கிறது. வேலை வாங்குகிறது. சாதாரணக் குழந்தையே அப்படி என்றால், தெய்வக் குழந்தை?
கோகுல வாசிகளுக்கு மூச்சும் பேச்சுமாக ஆகிப்போனது.

சகடாசுரன் இறந்த செய்தி கம்சனை எட்டியதும், அவனுக்கு அடி வயிற்றைப் பிசைந்தது.
அவன் குழந்தையைக் கொல்ல அடுத்த அசுரனை அனுப்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 18, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 353

மதுரா சென்றிருந்த நந்தன் ஊருக்குள் நுழையும்போதே அத்தனை விஷயங்களையும் கேள்வியுற்று மிகவும் அதிர்ச்சியுற்றார்.
பூதனையின் உடலைப்‌ பார்த்து மிகவும் வியந்தார்.

வசுதேவர் சொன்னது அப்படியே நடக்கிறதே. அவர் யோகேஸ்வரராக இருப்பாரோ என்றெண்ணினார்.
அரண்மனை திரும்பியதும் குழந்தையை எடுத்து உச்சி மோந்து பேரானந்தம் கொண்டார்.

இந்த பூதனையின் கதையைக் கேட்பவர்கள் எல்லோரும் ப்ரேம பக்தியைப் பெறுவார்கள் என்று பலச்ருதி சொல்கிறார் ஸ்ரீ சுகர்.

பரிக்ஷித் மேலும் கேட்டான்.
மஹரிஷி, இறைவனின் பால லீலைகளைக் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். தயை கூர்ந்து விரிவாகக் கூறுங்கள் என்றான்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்.
மணிக்கொரு குறும்பும், கணத்துக்கொரு லீலையுமாகப்‌ பொழுது போய்க்கொண்டிருந்தது. நாள்கள் ஓடின.
ஒரு நாள் தெய்வக் குழந்தை குப்புறித்துக்கொண்டது.
அந்நன்னாளில் ரோஹிணி நட்சத்திரமும் சேர்ந்து வநதது.

நந்த பாலன் பிறந்ததிலிருந்து, கோகுலத்தில் ஒவ்வொரு நாளுமே திருநாள்தான். அப்படியிருக்க இந்நாளை விடுவார்களா?

அரண்மனை விழாக்கோலம் பூண்டது. காலை முதல் செல்வோரும் வருவோருமாக இருக்க, அனைவரையும் உபசரித்து, குழந்தைக்கு வாழ்த்துக்கள் பெற்று, தானங்கள் கொடுத்து, உணவு படைத்து, அப்பப்பா! யசோதையும் நந்தனும் மாற்றி மாற்றி தாங்களே‌ முன் நின்று எல்லாவற்றையும் செய்தனர்.

குழந்தைக்கு மங்கல திரவியங்கள்‌ சேர்த்து எண்ணெய்க் குளியல் செய்வித்து, நன்கு அலங்கரித்து தொட்டிலில் விட்டிருந்தாள் யசோதை.
எல்லோரும் மாற்றி மாற்றி‌வீட்டினுள் குழுமிக்கொண்டே இருந்ததால், காற்றாட தோட்டத்திற்குக் குழந்தையைக் கொண்டு போனாள்‌ யசோதை.

அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டியின் அடியில் புடைவையால் ஒரு தூளி கட்டி, குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு சேடியை இருத்திவிட்டு உள்ளே போனாள்.

சிறிது நேரம் உறங்கிய குழந்தை, பசி வந்ததால்‌ அழத் துவங்கியது. சேடி குழந்தையை எடுப்பதற்குள் தன் பிஞ்சுக் காலால் வண்டியின் சக்கரத்தை ஒரு உதை விட, வண்டிச் சக்கரம் இடி போன்ற பெரிய சத்தத்துடன் தூள் தூளாய் நொறுங்கியது.

சத்தம் கேட்டு கை கொட்டிச் சிரித்தான் குழந்தை. சேடியோ பயந்து போய் மயங்கி விழுந்தாள்.
அனைவரும் தோட்டத்திற்கு ஓடி வர, அம்மாவைப் பார்த்ததும் பால் நினைவு வந்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அழத்துவங்கியது அந்த ஆயர் குலச் செல்வம்.

வண்டிக்கடியிலிருந்த குழந்தையை வாரி எடுத்தான் நந்தன். தோளில் தட்டி சமாதானம் செய்து, யசோதையிடம்‌ கொடுக்க, அவளோ மிகவும் பயந்துபோயிருந்தாள். அத்தனை ஆயர்களின் முகங்களும் வெளிறிக் கிடந்தன.

எவ்வாறு நடந்தது என்று , அங்கே சற்று தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த இடைச் சிறுவர்களை விசாரித்தார் நந்தன்.

அவர்களோ, இவன் அழுதுகொண்டே வண்டியை உதைத்தான். வண்டி உடைந்துவிட்டது என்றனர்.
குழந்தையின் பிஞ்சுக் காலால் உதைத்தால் வண்டி நொறுங்குமா..
ஆச்சரியம் தாங்கவில்லை. நம்பவும் முடியவில்லை. கோபர்களும் நந்தனும், சிறுவர்கள் அறியாமையால் ஏதோ சொல்கிறார்கள் என்று நினைத்து அலட்சியம் செய்தனர்.

ஏனெனில் அவர்கள் பகவானின் மகிமையை அறிய இயலாமல் மாயையால் கட்டி வைத்திருந்தான் இறைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, November 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 352

அருள் செய்வதொன்றே இறைவனின் இயல்பு. பூதனையின் உயிரை உறிஞ்சினான். ஆனால், அவளுக்கு பிறவிச் சுழலிலிருந்து முக்தி அளித்தான்.

இதென்ன? விஷம் கொடுக்க வந்த அரக்கிக்கு முக்தி கொடுப்பானா? எனில், ஆசை ஆசையாக வெண்ணெய்யையும், பாலையும், அன்பையும் வாரிக் கொடுத்த இடைக் குலத்தோருக்கும், மற்ற பக்தர்களுக்கும் கொடுப்பதற்கு வேறு ஏதாவது தனிச்சிறப்புடன் வைத்திருக்கிறானா? அல்லது அவர்களுக்கும் பூதனைக்குக் கொடுத்த அதே பரமபதமா?

இதை அரங்கனிடம் கேட்டேவிட்டார் ஒரு பக்தர். நான் தினமும் உனக்கு பள்ளியெழுச்சி பாடி, உற்சவங்கள்‌செய்து, பார்த்து பார்த்து ஆராதனம் செய்கிறேன். எனக்கு முக்தி கொடுப்பாயா? என்றார்.

நிச்சயம்‌கொடுக்கிறேன் என்று அரங்கன் பதிலுரைத்ததும் அடுத்த கேள்வி கேட்டார்.

அப்படியானால், வைகுந்தம் வந்தால் என் பக்கத்தில் பூதனை, சகடாசுரன், கம்சன் போன்றவர்களும் அமர்ந்திருப்பார்களா? இதென்ன நியாயம்? என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது சிறப்பான இடம் கொடு. என்று அதிக உரிமையினால் கேட்கிறார்.

தன்னைப் புகழ்வதும், இகழ்வதும் இறைவனுக்கு ஒன்றே.

புகழ்தல், இகழ்தல், அன்பு, தாய்மை, நட்பு, விரோதம், எந்த விஷயமானாலும் அது இறைவனை நினைக்கத் தூண்டுமாயின் அதே வழியில் இறைவனை அடைந்துவிடலாம். இவை எதுவும் வராவிட்டால் இருக்கவே இருக்கிறது அவனது திருப்பெயர்.

மலை போன்ற அரக்கியின் உடலை எப்படி அழிப்பது? அப்படியே கொளுத்தி விட்டால் ஊருக்கே ஆபத்தாய் முடியுமே. எனவே சிற்சிறு பாகங்களாக வெட்டி எரியூட்டினர் கோபர்கள். அப்போது எரியிலிந்து துர்நாற்றம் வரவில்லையாம். அகில், மற்றும் சந்தன வாசனை கோகுலத்தைச் சூழ்ந்ததாம்.

இதுவொன்றே போதும். அவளது ஆன்மா கரையேறிவிட்டதற்கும், இறைவன் கரம் பட்டதால் அவளது உடல் புனிதமடைந்ததற்கும் சாட்சியாகிறது.

ஆனால், இவை எதையும் உணரும் நிலையில் கோபர்கள் இல்லை. இறைவன் தன் மாயையினால் அவர்கள் கண்களைக் கட்டி வைத்திருந்தான். குழந்தைக்கு ஏதோ ஆபத்து வந்ததென்று பயந்து பயந்து அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஏனெனில் பூதனையின் அலறல் அவர்களது மண்டையைப் பிளந்ததுபோல் வலியை ஏற்படுத்தியிருந்தது.

பாற்கடல் வாசிக்கு கோமியத்தால் ரக்ஷை. பல்வேறு நியாசங்கள்‌ செய்துவைத்தனர்.

உன் பாதங்களை அஜரும், முழங்கால்களை கௌஸ்துபம் தரித்த இறைவனும், தொடைகளை யக்ஞ புருஷரும், இடையை அச்சுதரும், வயிற்றை ஹயக்ரீவரும், இதயத்தைக் கேசவரும், மார்பை ஈசனும்,‌ கைகளை‌ ஸ்ரீ விஷ்ணுவும், கழுத்தை சூரியனும், முகத்தை வாமனரும், தலையை பகவானும் காக்கட்டும்.

முன்புறம் சக்ரதாரியும், பின்புறம் கதை ஏந்தியவரும், பக்கவாட்டில் சார்ங்கமேந்திய மதுசூதனரும், நந்தகி ஏந்திய அஜனரும், திக்குகளில் கீர்த்தி பொருந்திய உருகாயரும், வானில் உபேந்திரரும், பூமியில் கருடரும், நாற்புறமும் கலப்பை ஏந்திய ஹலதரரும் உன்னைச் சுற்றி நின்று காக்கட்டும்.

பொறிகளை ஹ்ருஷீகேசரும், உயிரை ஸ்ரீமன் நாராயணரும், சித்தத்தை வாசுதேவரும், மனத்தை அநிருத்தரும் காக்கட்டும்.

புத்தியை பிரத்யும்னரும், அஹங்காரத்தை ஸங்கர்ஷணரும், விளையாடும்போது கோவிந்தனும், படுத்திருக்கும்போது மாதவனும் உன்னைக் காக்கட்டும். நடக்கும்போது வைகுந்தரும், அமர்ந்திருக்கும் போது ஸ்ரீபதியும், உண்ணும்போது யக்ஞநாராயணரும் காக்கட்டும்.

டாகினிகள், அரக்கிகள், கூஷ்மாண்டர்கள், பூத, பிரேத, பிசாச, ராட்சஸர்கள், கோடரை, ஜ்யேஷ்டா, பூதனா, மாத்ருகா, பொறிகளைக் கெடுக்கும் உன்மாதம், அபஸ்மாரம் முதலியவை, கெட்ட கனவுகள், குழந்தைகளைப் பீடிக்கும் பால கிரஹங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும். இவை அனைத்தும் பகவானின் பெயரைச் சொன்னாலே அழிந்துபோகும்.

எல்லா கோபிகளும் வந்து பல்வேறு வசனங்களைச் சொல்லி அனைவரையும் காக்கும் இறைவனுக்கு ரக்ஷை செய்வித்தனர்.

யசோதை ஒருவாறு மனக்கலக்கம் குறைந்து, குழந்தையை நன்கு நீராட்டி, அலங்கரித்து, தன் பாலை ஊட்டி உறங்கவைத்தாள்.

அவர்களது கைப்பாவையாக மாறிப்போன பரம்பொருள் தாயின் நிம்மதிக்காக மீண்டும் அறிதுயில் கொள்ள ஆரம்பித்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, November 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 351

நல்லோரைக் காத்து தீயோரை மாய்க்க அவதாரமேற்று வந்த இறைவன், இப்போது அரக்கி வந்ததும் கண்ணை மூடிக்கொள்வானேன்?

முந்தைய அவதாரத்திலும் முதலில் தாடகை என்னும் அரக்கியை வதம் செய்யும்படி நேர்ந்தது. இந்த அவதாரத்திலும் முதலில் வரும் எதிரி பெண்ணாக அமைந்துவிட்டதே
என்று நினைத்தானோ..

கருணைமழை பொழியும் கண்களைத் திறந்து அரக்கியைப் பார்த்துவிட்டால் பின்னர் கொலை எப்படிச் செய்வது? இவளைக் கொன்று பிறவியில்லாமல் செய்துவிடலாம் என்று நினைத்துக் கண்களை மூடிக்கொண்டானோ..

இந்த அரக்கி விஷத்தைக் கொடுக்க வந்திருக்கிறாள். நமக்கோ விஷம் உண்டு பழக்கமில்லை. ஏற்கனவே விஷம் அருந்திப் பழகிய பரமேஸ்வரனிடம் தங்கள் அனுபவம் ‌எப்படி என்று விசாரிப்பதற்காக தியானத்தில் மூழ்கிக் கண்களை மூடிக்கொண்டானோ..

அக்காலத்தில் கைக்குழந்தைக்கு பேதமின்றி யார் வேண்டுமானாலும் தாய்ப்பால் கொடுப்பார்கள். அதனாலேயே குழந்தைகள் உடலுறுதி மிகப் பெற்று விளங்கின. மேலும், பெண்கள் அனைவரையும் தாயாக வணங்கும் குணம் இயல்பிலேயே வந்தது.

பேரழகு கொண்ட ஒருத்தி தன் குழந்தையைக் கையிலேந்திக்கொண்டு நிற்பதைக் கண்ட யசோதை ஒன்றும் சொல்லாமல், முகமலர்ச்சியுடன் அவளை நோக்கினாள். அவள் எதுவும் சொல்வதற்குள் பூதனை இறைவனுக்கு தாய்ப்பாலை, இல்லை இல்லை, விஷம் தடவிய முலையைக் கொடுத்தாள்.

அனைத்தையும் உண்டு செரிக்கும் வித்தகனான எம்பெருமான், தன் பட்டு அதரங்களால், மெல்ல அவளது உயிரை உறிஞ்சத் துவங்கினான்.

வலி தாளாமல் விடு விடு என்று கதறிக்கொண்டு எழுந்து ஓடத் துவங்கினாள் பூதனை.
எல்லா பக்தர்களும்‌ இறைவனைப் பார்த்து என்னை விட்டுவிடாதே விட்டுவிடாதே என்று கதறிக்கொண்டிருக்க, பூதனையின் பாக்யம் பகவான் அவளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறான். அவளோ, விடு விடு என்கிறாள்.

அழகான பெண்ணுருவம் மறைந்து அரக்கியின் சுயரூபம் வெளிப்பட, மலை போன்ற உடலெடுத்து பூமி அதிர, ஹோவென்று அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினாள்.

என்ன செய்தாலும் இறைவன் அவளை விடவில்லை. மொத்தமாக உயிரை இழந்து பூமியில் விழுந்தாள்.

முன்பொரு காலத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தனவாம். அவை பறந்து பறந்து பூமியில் இறங்கும்போது நிறைய உயிர்ச்சேதங்கள் விளைந்தன என்று இந்திரன் அவைகளின் இறக்கைகளை வெட்டினானாம்.
அவ்வாறு கீழே விழுந்த மலைபோல் இருந்தது பூதனையின் உடல்.

அதிர்ந்துபோனார்கள் இடைசேரியில் இருந்தவர்கள்.

யசோதைக்கு மயக்கமே வந்துவிட்டது. சற்றும் எதிர்பாராத தருணத்தில் தேவமங்கைபோல் உருவெடுத்து ஒரு அரக்கி வந்து குழந்தையை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கொண்டு சென்று விட்டாள்.

எப்படி இருக்கும் அவர்களுக்கு?

சுதாரித்துக்கொண்டு கோகுல வீரர்கள் அரக்கியைத் தொடர்ந்து ஓடினார்கள்.
மலைபோல் விழுந்திருந்த அரக்கியின் உடல்மீது, எதுவுமே அறியாதவன்போல் பச்சிளம் பாலகன் விளையாடிக் கொண்டிருந்தான்.

வீரர்கள் அருகில் வந்தது கண்டு சற்றே பயந்தவன்போல் அழத் துவங்கினான்.
சட்டென்று குழந்தையை வாரியெடுத்து அன்னையிடம் கொடுத்தனர்.

குழந்தைக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று சோதித்தனர். பயந்துவிட்டானே.. என்று அங்கலாய்த்தனர்.

அவர்களுக்கு பிரத்யக்ஷ தெய்வம் கோமாதா. எனவே நேராக மாட்டுக் கொட்டிலில் கொண்டுபோய் வைத்து, பசுவின் குளம்பு மண்ணைப் பூசினார்கள். கோமியத்தால், பன்னிரு நாமங்களைச் சொல்லியவாறு அனைத்தையும் காப்பவனுக்கு காப்பு செய்தார்கள் யசோதையும் ரோஹிணியும்.

அன்னை இடுப்பில் அமர்ந்துகொண்டு, திருதிருவென்று விழித்துக்கொண்டு,‌ கோபியரின் கைப்பாவையாக மாறி, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் எல்லாம் வல்ல நம் இறைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 350

கோகுலம் இருக்கும் திசையில் தீய சகுனங்கள் தென்படுகின்றன என்ற வசுதேவரின் சொற்களைக் கேட்டு நந்தன் மிகவும் கவலை கொண்டார்.

வசுதேவர் அனைத்து சாஸ்திரங்களும் கற்றவர். ஸத்யமே மூச்சாகக் கொண்டவர். அவரது வாக்கு பிறழ்வதே இல்லை. எனவே, ஏதேனும் ஆபத்து வந்திருக்குமோ என்று அஞ்சினார்.

அவரது உள்ளத்தின் வேகத்திற்கு மாட்டு வண்டியால்‌ ஈடு கொடுக்க முடியவில்லை. மனத்தினால் பகவானைச் சரணடைந்து பிரார்த்தனை செய்யத் துவங்கினார்.

நந்தன் மதுராவிற்குக் கிளம்பியதும் கோகுலத்தில் என்ன நடந்தது?

பிறந்து பத்து நாள்களும் அதற்கு மேலும் ஆன குழந்தைகளைக் கொல்லும்படி கம்சன் உத்தரவிட்டிருந்தான் என்று பார்த்தோம். அவனது உத்தரவைச் சிரமேற்கொண்டு செயலாற்றக் கிளம்பினாள் ஒருத்தி.

பூதனை என்பது அவள் பெயர். சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொல்வதே அவளது வேலை.
இவ்விடத்தில் ஸ்ரீ சுகர் அழகாக நாம மகிமையை எடுத்துச் சொல்கிறார்.

அரக்கர்கள் எங்கிருப்பார்கள் என்றால், அவர்களை அழிக்கும் ஹரியின் நாமம் ஒலிக்காத இடத்தில் என்கிறார்.

இறை நாமம் ஒலிக்காத வீட்டுக் குழந்தைகளையெல்லாம் பூதனை சுலபமாகக் கொன்று கொண்டே வந்தாளாம். கிராமம் கிராமமாகச் சுற்றியவள், நந்தகோகுலத்திற்கும் வந்துவிட்டாள்.

ஊருக்குள் வரும்போதே அவ்வூரின் குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டாள்.

கோகுலத்தின் அரசன் வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றறிந்ததால், அதற்கேற்ப தன்னை அலங்கரித்துக் கொண்டாள். விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிந்து, மல்லிகைப்பூக்களைச் சூடி, சுருண்ட முன்னெற்றி முடி தவழ, தன்னை ஒரு தேவ மகளைப்போல் உருமாற்றிக்கொண்டு, கைவளை குலுங்க, சலங்கைகள் இசைக்க, அசைந்து அசைந்து கோகுலத்தின் தெருக்களில் நடந்தாள்.

அவளைக் கண்ட கோபியர், வானுலகிலிருந்து தன் நாயகனைக் காணத் திருமகளே வந்தனளோ என்று அதிசயித்தனர்.

நந்தபவனத்தின் வாயிலில் அவள் தயங்கி நின்றதைக் கண்ட காவலர்கள், ஏதோ பெரிய இடத்துப் பெண் என்றெண்ணி அவளை உள்ளே செல்லும்படி அனுமதித்தனர்.

கோபியர் அவளை தேவமகளென்று முடிவே செய்துவிட்டனர். எனவே தங்கள் இளவரசனை வாழ்த்திச் செல்லும்படி அவர்களே அழைத்தனர்.

நந்த பவனத்தின் செல்வச் செழிப்பு நிறைந்த அரண்மனையின் உள்ளே சென்றாள் பூதனா. உள்ளே வரவேற்பறையில் நடுநாயகமாக ஒரு அழகிய தொட்டிலில் குட்டி இறைவன் இமை மூடி அறிதுயில் கொண்டிருந்தான்.

யசோதை அப்போது உள்ளே சென்றிருந்தாள்.
நீறு பூத்த நெருப்பைப்போல் மகிமையை மறைத்து அழகை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டு உறங்கும் குழந்தையை அள்ளி எடுத்தாள் அரக்கி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..