Monday, November 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 604

உத்தவா! இவ்வுலகம்‌ மனத்தினாலேயே தோற்றுவிக்கப்படுகிறது. உண்மை போலிருந்தாலும் அப்படி அல்ல. இவ்வுடல் மூவகை குணங்களால் வந்த பேதமாகும். மாயை கனவு போன்றது‌. 

மது அருந்துபவனுக்கு போதையால் உடல் பற்றிய உணர்வு இருக்காது. அதுபோலத்தான் ஞானிக்கும். உடலைக் கொண்டு ஆன்மாவை அறிந்தபின் உடல் பற்றிய உணர்வு இருக்காது. 
அதைப் பற்றிக் கவலையும் படமாட்டான். 

உடல் கர்மாவினால் ஏற்படுகிறது. கர்மா இருக்கும் வரை உடல்‌  இருக்கும். அதனால் ஞானி அதன் மீதுள்ள பற்றை ஒழித்துவிடுகிறான்‌.

இவ்வாறு கூறிய நான் பின்னர் ஸனகாதியரிடம், நான் தான் பகவான், தத்துவ ஞானத்தை போதிக்க வந்தேன் என்பதைக் கூறினேன். 

நானே எல்லா விதமான குணங்களுக்கும் ஆதாரம். ஆனால் நானோ குணங்கள் அற்றவன். எல்லோரிடமும் சமமாக இருப்பவன், ஒட்டுத்தல் அற்றவன் ஆகியவை என் குணங்கள். இவை என்னிடம்‌ எப்போதும் உள்ளவை. ஸத்வ ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் பரிமாணங்கள் அல்ல. அனைவர்க்கும் பிரியமான ஆத்மா நானேதான்.

இவ்வாறு நான் உபதேசம் செய்தபின் ஸனகாதியர் என்னைப் பலவாறு துதித்தனர். அதன்பின் அங்கிருந்து மறைந்துவிட்டேன்.

என்றான் கண்ணன்.

உத்தவர் அடுத்த கேள்வியைத் தயாராக வைத்தார்.

கண்ணா! உன்னை நன்கறிந்த சான்றோர் உன்னை அடையப் பல வழிகளைக் கூறுகிறார்கள். அவை அனைத்துமே பின்பற்றப்பட வேண்டியவையா? அல்லது முக்கியமான வழி ஏதாவது ஒன்று உள்ளதா?

கண்ணன் கூறத் துவங்கினான்‌

உத்தவா! ப்ரளயம் முடிந்து வெகுகாலம் ஆனதால் மறைஞானம் முற்றிலுமாக அழிந்துபோயிருந்தது. மீண்டும் படைப்பைத் துவங்கியபோது நான் ப்ரும்மாவிற்கு ஞானத்தை உபதேசம் ‌செய்தேன். ப்ரும்மா தன் மூத்த மகனான மனுவிற்கு உபதேசம் செய்தார். அப்போது ஸப்தரிஷிகளும் உடன் கேட்டு அறிந்துகொண்டனர்.

அவர்களுடைய புதல்வர்களான தேவர்கள், கிம்புருஷர்கள், தானவர்கள், குஹ்யகர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், நாகர்கள், அரக்கர்கள் ஆகியோர் அவரவர் குண விசேஷத்திற்கேற்ப வேதத்தை ரிஷிகளிடமிருந்து அறிந்துகொண்டனர்.

அவரவர் இயல்பு, யுக்திகளுக்கேற்ப பற்பல வாதங்கள் தோன்றின. சிலர் அவற்றை ஏற்கிறார்கள். சிலர் வேதத்திற்குப் புறம்பான பாஷண்ட மதத்தை ஏற்கிறார்கள்.

அவர்களது மனம் எந்தக் கர்மாவில் மயங்குகிறதோ அதையே மோக்ஷ ஸாதனம் என்று கூறத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, November 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 603

கண்ணா! ஸனகருக்கு நீதானே உபதேசம் செய்திருக்க வேண்டும்? எப்போது செய்தாய்? என்று கேட்டார் உத்தவர்.

கண்ணன் உத்தவனின் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்தான். 

ஹிரண்யகர்பனாகிய ப்ரும்மாவின் மனத்திலிருந்து ஸனகர் ஸனந்தனர், ஸநாதனர், ஸனத்குமாரர், ஆகியோர் தோன்றினர்.

நால்வரும் ஒரு சமயம் தந்தையான ப்ரும்மாவிடம் யோக சூட்சுமங்கள் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள்.

தந்தையே! மனம் இயல்பாகப் புலன் இன்பங்களில்தான் ஈடுபடுகிறது‌. அவற்றையேதான் சிந்திக்கிறது. ஆனால் அதே சமயம் முக்தியின் மீதும் ஆசை கொண்டுள்ளது. இந்நிலையை எப்படிக் கையாள்வது? புலன் இன்பங்களை வெல்லும் வழிதான் என்ன? 

ப்ரும்மா அனைத்து தேவர்கட்கும் மேலானவர். ஆனாலும் அவர் கர்மங்களிலேயே மூழ்கியிருந்தார். அவரால் இக்கேள்வியின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

அதனால் சற்று திகைத்தார். பின்னர் அதற்கு பதில் தேடி என்னை தியானம் செய்தார். நான் ஒரு பெரிய ஹம்ஸ வடிவம் எடுத்து அவர் அருகில் சென்றேன்.

என்னைப் பார்த்ததுமே அவர்கள் ஐவரும் வந்து என்னைப் பணிந்து தாங்கள் யார் என்று வினவினர்.

உண்மையான ஆன்ம வேட்கை கொண்ட அவர்களுக்கு நான் பதிலிறுக்கத் துவங்கினேன்.

தாங்கள் யார்? என்று கேட்டீர்கள். இந்தக் கேள்வி ஆத்மாவைப் பற்றியதா? என்றால் ஆத்மா என்பது இரண்டல்லவே. எப்போதும் ஒன்றே ஒன்றுதான்.

ஆத்மாக்கள் பல என்றானால் தான் நீங்கள், நான் என்றெல்லாம் பிரிக்க இயலும். ஆத்மாவைத் தவிர வேறொன்று இல்லாததால் இக்கேள்விக்கு பதில் கூற இயலாது. 

பஞ்ச பூதங்கள் எல்லா உடல்களிலும் இருக்கின்றன. எனவே அவை அனைத்தும் சமம்மானவை. தாங்கள் யார் என்பவை வெற்றுச் சொற்களே தவிர, அவற்றிற்குப் பொருள் இல்லை.

மனம், வாக்கு, கண், மற்றும் பிற பொறிகளால் ஆகியவற்றால் எவையெல்லாம் உணரப்படுகின்றனவோ, பார்க்கப்படுகின்றனவோ, கேட்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் நான்தான். என்னைத்தவிர இங்கு வேறெதுவுமே இல்லை.

மனம் புலன் இன்பங்களில்‌ மூழ்குவதால் குணத்தைப் பதிய வைத்துக் கொள்கிறது. குணங்களற்ற சித்தமாகவும் குணங்களாகவும் ஜீவன் இரு உடல்களைக் கொள்கிறது. 

ஜீவன் ஆத்மஸ்வரூபம் என்பதை உணர்ந்தால் இவற்றைத் துறந்துவிடும். 

விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்றும் புத்தியின் செயல்கள். ஜீவன் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது‌. அந்த நான்காவதான துரீய நிலையில்‌நின்று பரமாத்ம ஸ்வரூபத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும். பொருட்பற்று, மனம் இரண்டையும் உதறித்தள்ளவேண்டும். நான் எனது என்ற எண்ணங்கள்தாம் உண்மையை உணரத் தடையானவை. ஞானி அவ்வெண்ணங்களைத் துறந்து நான்காவது நிலையான நான் பரமாத்மாவின் வடிவம் என்பதில் உறுதிப்பாட்டுடன் நிற்கவேண்டும். 

பொருள்கள் பல என்பதை ஆத்மவிசாரத்தின் மூலம் விலக்காதவனுக்கு, ஞானத்தின் வாசல் திறவாது. ஆனால் ஞானிக்கும் உலக வாழ்வு நடக்கிறதே என்று வினவலாம். ஞானிக்கு இவ்வாழ்வு கனவு நிலை போன்றது. கனவு எப்படி விழிப்பில் நடப்பவைகளைப் பாதிக்காதோ அதுபோல் ஞானிக்கு இவ்வுலக வாழ்வு பாதிப்பதில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, November 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 602

கண்ணன் தொடர்ந்து கூறலானான்.

உத்தவா! ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் புத்தியினுடையவை. ஆத்மாவினுடையவை அல்ல. ஸத்வ குணத்தினால் மற்ற இரு குணங்களையும் அழித்து விட வேண்டும். பின்னர் ஸத்வ குணம் முழுவதுமாக வியாபிக்கும் நிலையில் அதையும் கடந்து குணங்களற்று நிற்கவேண்டும். 

ஸத்வகுணம் அதிகரிக்கும்போது பக்தி வளரும். ஸாத்வீகப் பொருள்களை ஏற்பதால் ஸத்வகுணமும் தர்ம சிந்தனையும் வளரும்.

சாஸ்திரம், நீர், சந்ததி, வாழும் தேசம், காலம், கர்மா, பிறப்பு, தியானம், மந்திரம், கர்ம வாசனை ஆகிய பத்தும் குணங்கள் அமையக் காரணிகளாகின்றன. 

சுலபமாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், 
எவைகளைப் பற்றி சான்றோர் புகழ்கிறார்களோ அவை ஸாத்வீகம் எனவும், எவற்றைத் தள்ளுகிறார்களோ அவை ராஜஸம் எனவும், எவற்றை இழித்துப் பேசுகிறார்களோ அவற்றை தாமஸம் எனவும் கொள்ளலாம். 

மூங்கில் காட்டில், மூங்கில்கள் உராய்வதாலேயே நெருப்பு உண்டாகும். அது காட்டையே அழித்துவிடும். அதுபோல் குணக் கலவைகளினால் தோன்றிய இவ்வுடலைக் கொண்டு விசாரம் செய்து ஞானம் பெற்றதும் அந்த ஞானாக்னியாலேயே அழிந்துபோகும்.

உத்தவன் இடை மறித்தான்.

கண்ணா! புலன்களால் நுகரப்படும் விஷயங்கள் தீமை விளைவிக்கும் என்பதை அறியாத மனிதர்களே இல்லை எனலாம். தீய செயல்களைச் செய்யும்போதே அதைத் தீமை என்று அறிந்தேதான் இருக்கிறார்கள். இருப்பினும் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து, நாய், கழுதை, மற்றும் ஆடு போல துன்பத்தைத் தாங்கிக்கொண்டு புலன் இன்பத்திலேயே குறியாக இருக்கிறார்களே. அதன் காரணம் என்ன?

கண்ணன் உத்தவனை வாஞ்சையுடன் பார்த்தான். 
உத்தவா! நான், எனது என்ற அஹங்காரம்தான் காரணம். மனம் ஸாத்வீக அஹங்காரத்திலிருந்துதான் தோன்றுகிறது. ஆனால் நான், எனது என்று பற்று கொண்டு மெல்ல மெல்ல ரஜோகுணம் தோன்றி‌ முழுதுமாக ஆக்ரமிக்கிறது.

ரஜோகுணத்தினால் சங்கல்பங்கள் தோன்றுகின்றன. விருப்பு, வெறுப்புகள் பெருகி, தீய குணமும் வளர்கிறது‌.

அது தாங்கமுடியாத அளவு பெருகும்போது காம சிந்தனை ஆக்ரமிக்கும். அதிலிருந்து விடுபடுவது மிகக் கடினம். காமவயப்பட்ட மனிதனால் எந்தப் புலனையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாது. அதற்குத் தீனி போடுவதற்காகப் பல்வேறு காரியங்களைச் செய்து மேலும் மேலும் மாட்டிக்கொள்கிறான். அவற்றின் விளைவு துன்பம்தான் என்று அவன் நன்கறிந்தபோதிலும் அவனால் நிறுத்த இயலாது. 

மெய்யறிவு பெற்றவர்களும் கூட சில சமயம் ரஜோ குணத்தினால் தடுமாறுவார்கள். ஆனால், ஞானத்தின் பயனாக பெருமுயற்சி எடுத்து மனத்தைத் திருப்பி மீண்டுவிடுவார்கள். 

ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமானால் சோர்வில்லாத பயிற்சியும் முயற்சியும் செய்து மனத்தை என்னிடம் வைக்கவேண்டும். அலுப்பின்றிச் செய்யப்படும் முயற்சியால் ஆசனமும் சுவாசமும் வசப்படும். இவற்றால் மனம் மற்ற விஷயங்களிலிருந்து விடுபடுவது சுலபம். இந்த யோகம் ஸனகரால் உபதேசிக்கப்பட்டதாகும். 

உத்தவர் அடுத்த கேள்விக்குத் தயாரானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 601

கண்ணன் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்ட உத்தவன் கேட்டான்.

கண்ணா! யோகேஸ்வரன் நீ. என்னதான் சொல்ல வருகிறாய்? நான் கர்மாக்களைச் செய்யவேண்டுமா? அல்லது வேண்டாமா?

குழந்தையைப் போல் கேட்ட உத்தவனைப் பார்த்துக் கண்ணனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

கண்ணன் மீண்டும் யோக தத்துவங்களை விளக்கத் துவங்கினான்.

உத்தவா! ஒரு உடலில் தங்கும் ஜீவன் மூலாதாரத்தில் நாதப்ரும்மமாக பரா என்ற பெயரில் இருக்கிறது‌. பின்னர் மணிபூரக சக்ரம் வந்து பஸ்யந்தி என்று பெயர் பெறுகிறது. அதன் பின் கழுத்துப் பகுதியில் விசுத்தி சக்ரத்தில் மத்யமா என்ற பெயர் பெறுகிறது. பின்னர் வாய் வழியாக வெளிப்படும்போது மாத்ரை, ஸ்வரம், வர்ணம் ஆகிய வடிவங்களை ஏற்று வைகரீ என்ற பெயரைக் கொள்கிறது. ஆகாயத்தில் மின் சக்தியாக விளங்குகிறது‌. சின்னஞ்சிறு பொறியாகத் தோன்றும் நெருப்பு பஞ்சு போன்றவற்றில் பற்றிக்கொள்ளும்போது பெரிய அக்னியாக மாறுகிறது‌.

அது போலவே சப்த ப்ரும்மம் சிறு வடிவெடுத்து பின்னர் பெரிய உருவம்‌ கொள்கிறது. இவை அனைத்துமாக நானே வெளிப்படுகிறேன்.

இவ்வாறே பேசுவது, சிரிப்பது, நடப்பது, வேலை செய்வது, கழிவை வெளியேற்றுவது, நுகர்வது, உண்பது, தொடுவது, கேட்பது, சிந்திப்பது, அகங்காரம் கொள்வது, அறிந்துகொள்வது அனைத்துச் செயல்களும் ஸத்வ ரஜஸ், தமஸ் குணங்களின் சேர்க்கையால் நிகழ்வது. அனைத்தும் என் வெளிப்பாடுகளே என்றுணர்வாயாகில் இந்த சந்தேகம் வராது. பரமாத்மாதான் முக்குணக் கலவையான ப்ரும்மாண்ட வடிவிலான தாமரையைத் தோற்றுவிக்கிறார்.

அவரேதான் பல்வேறு சக்திகளாகப் பிரிந்து பல்லாயிரம் வடிவங்களாக வெளிப்படுகிறார். 

குறுக்கும் நெடுக்குமாகப் பாவப்பட்ட நூலில்தான் துணி உருவாகிறது.

அதே போல இவ்வுலகம் பகவானில் விளங்குகிறது. கர்மாக்கள் மலர் போன்ற உலகியங்களையும், பழம் போன்ற முக்தியையும் வழங்க வல்லவை.

உலக வாழ்வு என்பது மரம் என்று கொண்டால், பாவம், புண்ணியம் ஆகியவை இரண்டு விதைகள், கர்ம வாசனைகளே நூற்றுக்கணக்கான வேர்கள், முக்குணங்களே தண்டுகள், ஐந்து பூதங்கள் ஐந்து பெருங்கிளைகள், ஐந்து புலனின்பங்கள் ஐவகை சாறுகள், பத்துப் புலன்களுடன் மனம் சேர்த்து பதினோறு சிறு‌கிளைகள், ஜீவன், ஈஸ்வரன் ஆகிய இரு பறவைகளின் கூடுகள், வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று பட்டைகள், சுகம் துக்கம் ஆகிய இரண்டு பழங்கள் என்று ஸம்ஸார வ்ருக்ஷம் சூரிய மண்டலம் வரை விரிந்து பரவியுள்ளது.

விஷய சுகங்களில் ஈடுபடுபவர்கள் கழுகு போன்றவர்கள். அவர்கள் புலன்களின் கூட்டான உடலால் துன்பப் பழத்தைப் புசிக்கிறார்கள். பற்றற்ற வாழ்வை மேற்கொள்பவர்கள் சுகம் என்ற பழத்தை உண்கிறார்கள்.

பரமஹம்ஸர்களான ஞானிகள் இவற்றை உணர்ந்துகொண்டு அனைத்தையும் மாயை என்று தள்ளுகிறார்கள். குருவிடம் உபதேசம் பெற்று மெய்ஞானம் என்ற கத்தியைத் தீட்டி நான் ஜீவன் என்ற எண்ணத்தை வெட்டி எறியவேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்ததும் ஞான வடிவான கத்தியையும் துறக்கவேண்டும். பரமாத்ம ஸ்வரூபத்தில் கலந்து எல்லைகளற்ற வெளியில் திளைக்கலாம்.

என்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, November 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 600

கண்ணன் மேலும் தொடர்ந்தான்.

பூமியில் வேதிகை அமைத்து ஆராதனம் செய்யலாம். என்னுள் விளங்கும்‌ பரமாத்மாதான் இவ்வுணவை உண்கிறார் என்ற எண்ணத்துடன் உண்பதாலும், எல்லாப் பொருளிலும் விளங்கும் ஜீவன் பரமாத்மாவின் அம்சமே என்ற என்ற எண்ணத்தாலும் சமத்ருஷ்டி உண்டாகும்.

சங்கு சக்ரம் கதை பத்மம், நான்கு திருக்கரங்கள், கொண்ட பகவான் எல்லாப் பொருளிலும் மன அமைதியின் உருவமாக விளங்குகிறார். இவ்வாறு மன ஒருமைப்பாட்டுடன் எந்தக் காரியம் செய்தாலும் அது என்னை வழிபடுவதே ஆகும்.
சொந்த விஷயமான கர்மாக்கள், பொதுச்சேவை அனைத்தையும் என்னிடம் அர்ப்பணமாகச் செய்பவனுக்கு என்னை உணர்தல் எளிது. சாதுக்களுக்கு சேவை செய்வதால் என்னுடைய நினைவு ஏற்படும்.

உத்தவா! பக்தி யோகம், சத்சங்கம் ஆகிய இரண்டு வழிகளைத் தவிர இந்த சம்சாரக்‌கடலைக் கடக்க வேறு வழியில்லை.
சான்றோர்களின் புகலிடம் நானே.

நான் உனக்கு இன்னுமொரு ரகசியத்தைச் சொல்ல விழைகிறேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அணுக்கமான சேவகன். மேலும் சத்விஷயங்களைக் கேட்பதில் உனக்கு‌ மிகுந்த ஆர்வம் இருக்கிறது.

கவனமாகக் கேள் உத்தவா! யோகம், சாங்க்யம், தர்மம், தவம், தியாகம், விரும்பியதற்காகச் செய்யும் கர்மா, சுய ஒழுக்கம், தட்சிணை (பணம்) ஆகிய எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது.

விரதங்கள், நியமங்கள், வேதமந்திரங்கள், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றையெல்லாமும் விட என்னை மிகவும் வசப்படுத்துவது ஒன்றுண்டு. அது யாதெனில் சத்சங்கம். மஹான்களின் சேர்க்கை.

கலியுகத்தில்‌ மட்டுமல்ல, நான்கு யுகங்களிலுமே சத்சங்கத்தினால் என்னைச் சுலபமாக அடைந்தவர் பலர். அசுரர்கள், ராட்சஸர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாக, சித்த, குஹ்ய, வித்யாதரர்கள், பெண்கள் ஆகியோர் வெவ்வேறு யுகங்களில் சத்சங்கத்தினால் என்னை அடைந்திருக்கிறார்கள்.

வ்ருத்திராசுரன், ப்ரஹ்லாதன், வ்ருஷபர்வா, பலி, பாணாசுரன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வைசியன், தர்மவியாதன், குப்ஜை, கோபிகைகள், யக்ஞ பத்னிகள், மற்றும் பலரும் சத்சங்கம் வாயிலாக என்னை அடைந்தார்கள்.

கோபிகள், பசுக்கள், மரங்கள், வ்ரஜ பூமியின் மான்கள் முதலிய ஜீவன்கள், இவர்களைத் தவிர மந்த புத்தியுடைய காளியன் முதலிய பாம்புகள் ஆகியவர்கள் பக்தியாலும் ப்ரேம பாவத்தாலும் என்னை அடைந்தார்கள்.

கடும் முயற்சி செய்து யோகம், சாங்க்யம், தானம், விரதம், தவம், வேள்வி, வேத அத்யயனம், சுய ஒழுக்கம், துறவு ஆகியவற்றைப் பழகினாலும் என்னை அடைவது சுலபமன்று. அவற்றால் சித்த சுத்தி ஏற்படும். 

அக்ரூரர் என்னையும் பலராமனையும் மதுராவிற்கு அழைத்துச் சென்றபோது ஆழங்காண இயலாத அன்பினால் கோபிகளின் இதயம் தளும்பியது. என்னுடைய பிரிவால் பாதிக்கப்பட்ட அவர்கள் அதன் பின் என்னைத் தவிர வேறெதையும் நினைக்க இயலாதவர்கள் ஆனார்கள்.

என்னுடன் பல இரவுகள் ராஸக்ரிடையில் ஆழ்ந்திருந்தார்கள்‌. அப்போதெல்லாம் நீண்ட இரவுகள் அவர்களுக்கு நொடி போல் கடந்தன. என்னைப பிரிந்ததும் அவர்களது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கல்ப காலம் போல் கழிந்தது.

முனிவர்கள் சமாதி நிலையில்‌ உடல் உணர்வை இழந்து என்னுடன் ஒன்றுவார்கள். அதேபோல கோபிகள் ப்ரேமையினால் சரீர உணர்வை இழந்துவிட்டார்கள். 
அவர்கள் என் பரமாத்ம வடிவை முழுமையாக அறிந்தவர்கள் அல்லர். வெறும் அளவுகடந்த ப்ரேமையினால் என்னை அடைந்தார்கள்.

எனவே உத்தவா! இவ்வுலகம், அவ்வுலகம், வாழ்க்கை, கேட்பது, சொல்வது என்ற ஆராய்ச்சிகளை யெல்லாம் விட்டுவிட்டு முழுமையாக ஒன்றிய மனத்துடன் என்னைச் சரணடைவாய். அப்போது உனக்கு எதைப் பற்றியும் பயம் ஏற்படாது. உன் செயல்கள் அனைத்தும் எனதாகிவிடும்.
என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 599

கண்ணன் கூறியதைக் கேட்ட உத்தவன் மீண்டும் கேட்டார்.

நீங்கள்தான் பரப்ப்ரும்மம். உங்கள் சொந்த சங்கல்பத்தின்படி உருவம் ஏற்றிருக்கிறீர்கள்.சாதுக்களின் லட்சணம் என்ன? பக்தி செய்யும் முறை என்ன? உங்களையே நம்பியிருக்கும் எனக்கு விளக்குங்கள் என்றான்.

கண்ணன் உத்தவனைக் கருணையுடன் பார்த்தான்.

உத்தம பக்தன் எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளவன். நன்றி மறவாதவன். உடலுக்கேற்படும் துன்பங்களை லட்சியம் செய்ய மாட்டான்.

உண்மையே பேசுவான். தூய்மையான உள்ளத்துடன் அனைவரிடத்தும் சமமாகப் பழகுவான். அனைவர்க்கும் உதவி செய்வான். தனிப்பட்ட விருப்பங்கள் அற்றவன்‌. மிகவும் மென்மையானவன். செல்வத்தில் ஆசையற்றவன். அளவாக உண்பவன். எப்போதும் மன அமைதியோடு இருப்பவன். நிலையான எண்ணம் கொண்டவன். என்னை எப்போதும் நம்புபவன்‌. அவனிடம் மனத் தடுமாற்றம் இருக்காது.

ஆறு பகைவர் எனப்படும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யங்கள் அற்றவன். இழிவுகளைப் பொருட்படுத்தாதவன். பிறரை மனமார வாழ்த்துபவன். தெள்ளிய ஞானம் உடையவன். 

நலம் விளைவிக்கும் நற்செயல்களைக் கூட பக்திக்குத் தடையாக இருப்பின் தியாகம் செய்துவிடுவான். 

என்னைப் பற்றி அறிந்தோ அறியாவிட்டாலுமோ கூட முழு மனத்துடன் என்னை நம்பி பக்தி செலுத்துவான். என் உருவச் சிலைகள், என் பக்தர்கள் ஆகியவற்றைக் காண்பதில் பேராந்தம் கொள்வான்.

  • வழிபாடு, துதித்தல், வணங்குதல்,
  • என் லீலைகளையும் குணங்களையும் சிரத்தையாகக் கேட்டல், பாடுதல், என்னை எப்போதும் நினைத்தல்,
  • தான் உள்பட எல்லாவற்றையும் எனக்கு அர்ப்பணம் செய்தல். 

  • என் அவதாரங்களையும் லீலைகளையும் பேசி பேசி மகிழ்தல்,
  • என் அவதார தினங்களைக் கொண்டாடுதல்,
  • இசை, நாட்டியம், வாத்யங்கள், ஆகியவற்றைத் தனியாகவும், கோஷ்டியாகவும் வீட்டிலும் கோவில்களிலும் பாடி உற்சவங்கள் நடத்துதல்,
  • ஆண்டுதோறும் தீர்த்த யாத்திரை,
  • தலங்களுக்குச் செல்லுதல்,
  • என் தொடர்புடைய விரதங்களை அனுஷ்டிப்பது,
  • என் அர்ச்சாமூர்த்தி களை நிறுவுதல்,
  • தோட்டம், சோலைகள், மைதானம், நகரம், கோவில் ஆகியவற்றைக் கட்டுதல்,
  • முதலிய பொதுச் சேவைகளைத் தனியாகவோ கூட்டாகவோ செய்தல்,
  • ஒரு அடிமை போல் கோவில் சேவகம் செய்தல்,
  • கர்வமில்லாமல் இருத்தல்,
  • எவரையும் ஏமாற்றாமல் இருந்த்தல்,
  • தான் செய்த நற்காரியங்களைப் பறை சாற்றாமை,
  • தனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு அர்ப்பணம் செய்தல்,
ஆகியவை மிகுந்த பலனைத் தரக்கூடியவை.

சூரியன், அக்னி, ப்ராமணன், பசு, வைஷ்ணவன், ஆகாயம், வாயு, தண்ணீர், பூமி மற்றும் எல்லா ப்ராணிகள் ஆகியவற்றில்‌ என்னை உருவகமாக எண்ணி வழிபடலாம்.

மூன்று வேத மந்திரங்களால் சூரியனை நானாக வழிபடவேண்டும். அந்தணர்க்கு விருந்தளிப்பதும், அக்னியில் ஆஹூதி கொடுப்பதும், பசுவுக்குப் புல்லைக் கொடுப்பதும் என்னைப் பூஜிப்பதே ஆகும்.
என் அடியார்களை சகோதரர் போல் நேசிக்கவேண்டும். தியானத்தின் மூலம் மனம் எனும் ஆகாயத்திலும், ப்ராணன் என்ற வாயுவிலும் தண்ணீரிலும் என்னை ஆராதிக்கலாம். பூக்களால் வழிபடுவது சிறந்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 598

கண்ணன் மேலும் கூறலானன்.

உத்தவா! இவ்வுடல் தெய்வாதீனமாகக் கிடைக்கிறது. முன் வினைப் பயனுக்கேற்ப குணங்கள் தூண்டுவதால் செயல் புரிகிறது. அறிவற்றவன் எல்லாவற்றையும் தானே செய்வதாக எண்ணுகிறான்.

இவ்வுலகின் அனைத்து நியமங்களையும் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் ஞானி அவற்றில் ஒட்டுவதில்லை. ஆகாயம், பூமி, சூரியன் போல் அவனும் சாட்சியாக நிற்கிறான். 

கனவிலிருந்து விழிப்பவன் போல் ஞானியின் எல்லா மயக்கங்களும் விலகிவிடுகின்றன. யாருடைய புலன், புத்தி, மனம் ஆகியவை முழுமையடைந்து கட்டுப்பாடுகளிலிருந்து விலகுகிறதோ, உலகாயத கர்மத் தளைகள் அகன்றனவோ, அவன் ஒரு உடலில் இருந்தாலும் குணங்களற்றவனாக விளங்குகிறான். 

யாராவது துன்பம் இழைத்தாலும், கௌரவம் அளித்தாலும் அவை அவனைப் பாதிப்பதில்லை. 
அவதூறுகள், புகழுரைகள் எதையும் அவன் பொருட்படுத்தமாட்டான்‌.

அப்படிப் பேசுகிறவர்கள் மீதும் விருப்போ வெறுப்போ இன்றி சமத்ருஷ்டியுடன் இருப்பான். எதையும் பேசாமல், செய்யாமல் நினைக்காமல் ஜடம் போல் சுற்றுவான். 

எவ்வளவு உயர்ந்த கல்வி கற்றாலும் ப்ரும்மத்தை அறியவில்லை எனில் அவை வீண். கற்கும் வித்தை அனைத்தும் தன்னை உணர்த்தவேண்டும்.

இவ்வுலகைப் படைத்து காத்து அழித்துப் பல லீலைகள் செய்யும் என்னைக் கூறாத உரைகள் பயனற்றவை. அவை பிறவிச் சுழலில் அழுத்தக்கூடியவை.

என்னிடமே மனத்தை முழுமையாக அர்ப்பணித்து மற்ற செயல் சிந்தனைகளிலிருந்து விடுபடவேண்டும். மனம் ஒருமைப்படவில்லை எனில், செய்யும் அனைத்து செயல்களின் பலன்களையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

என் கதைகளை அடிக்கடி கேட்கவேண்டும். என் அவதார தினங்களைக் கொண்டாடி உற்சவங்கள் செய்யவேண்டும். 

என்னையே புகலாகக் கொண்டு என் பொருட்டே அனைத்து செயல்களையும் செய்பவன் என்னிடம் அசைக்க முடியாத பக்தியைப்‌ பெறுகிறான். நல்லோர் சங்கத்தினால் பக்தி உண்டாகும். அவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும்.

இவ்வாறு நடப்பவர் விரைவில் என்னையே அடைகிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 597

கண்ணன் கூறியதனைத்தையும் செவி மடுத்த உத்தவர் கேட்டார்.

கண்ணா!
கர்மாக்களுடன் ஜீவனுக்குத் தொடர்பில்லையா?
அப்படியெனில் குணங்களுக்குக் கட்டுப்படுவானா? குணங்களுக்கு ஆட்பட்டவன், குணங்களை ஆள்பவன் இருவருக்கும் என்ன வித்தியாசம்? 
எவ்வாறு அவனுக்கு இன்பம் கிட்டும்? அவனுடைய அடையாளங்கள் என்ன? எதை அனுபவிக்கிறான்? எதை விடுவான்? எத்தகைய தோற்றம் அவனுடையது? எப்படிப் படுப்பான்? அமர்வான்? உண்பான்? ஒரு ஞானியை எவ்வாறு அடையாளம் காண்பது?

முகத்தில் விழுந்த குழற்கற்றையை ஒற்றை விரலால் ஒயிலாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே பேசத் துவங்கினான் கண்ணன்.

உண்மையில் ஆத்மா கட்டுப்படுவதே இல்லை. குணம் என்பதே மாயையின் தோற்றம். ஆத்மா தனிப்பட்டது. அதற்கு விடுபடுதல், கட்டுப்படுதல் ஆகிய ஒன்றும் இல்லை. 

இன்பம், துன்பம், சரீரம், சோகம், மோகம் ஆகிய அனைத்தும் மாயையால் ஏற்படும் தோற்றம். பிறப்பு, இறப்பு ஆகிய அனைத்துமே கனவு போன்றது. அஞ்ஞானத்தினால் அவை சத்யம் போல் தோன்றும்.

என்னுடைய அம்சமேதான் ஜீவன். அவன் அஞ்ஞாத்தால் மாட்டிக்கொள்கிறான். ஞானம் வந்த கணமே அனைத்து கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ஜீவன் என்னைப் போன்றவனே. ஒரே உடலில் உறையும் ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் வெவேறு சுபாவம் உடையவை. ஜீவாத்மா துன்பத்தை இயல்பாகக்‌ கொண்டது. ஆளப்படுபவது. பரமாத்மாவின் இயல்போ ஆனந்தம். ஆள்வது. 

ஜீவனும் ஈஸ்வரனும் ஒரே மரத்தில் கூடு கட்டும் பறவைகள் போல் சரீரத்தினுள் வசிக்கிறார்கள். சமமானவர்கள். நட்புக் கொண்டவர்கள். ஒன்று மரத்தில் பழுக்கும் கர்மாவாகிய பழத்தை உண்டும் பலமின்றி இருக்கிறது. மற்றொன்று பழத்தை உண்ணாமலே பலமாக இருக்கிறது‌. பழத்தை உண்ணாதவன் தன்னையும் மற்றவனையும் முழுமையாக அறிகிறான். உண்பவனோ தளையினால் கட்டுப்பட்டவன்‌. பழத்தை உண்ணாதவனுக்கு மரத்தின் மீது பற்றில்லை. அவன் நித்ய முக்தன்.

சரீரத்தில் தங்கி கர்மாக்களில் ஈடுபட்டாலும் ஞானம் வந்தவுடன் திரை விலகி அனைத்தும் பொய்யென்று உணர்கிறான்.

ஜீவனோ ஆத்மாவுக்கு உடல், உருவம் ஆகியவை இல்லை என்றுணராதவனாக உடலைத் தான் என்றெண்ணி கனவில் வருவதையெல்லாம் உண்மையென்று நம்புபவன் போலிருக்கிறான்.

ஞானி அனைத்தையும் குணவிகாரம் என்றுணர்வதால் உண்பது, உறங்குவது, நடப்பது, சுற்றுவது, குளிப்பது என்று எதைச் செய்தாலும் அதை உடலுக்கான செயலாகப் பார்ப்பானே தவிர, தன்னுடன் அதைத் தொடர்பு படுத்துவதில்லை.

கண்ணாடியில் இருக்கும் அழுக்கு, பிம்பத்தில் தெரியுமே தவிர பார்ப்பவனை ஒட்டாது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 596

ஜீவன் சுதந்திரமானது அல்ல. அதற்கு சுதந்திரம் இருக்குமானால் துக்கத்தை விரும்புமா என்ன? ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் தலையீடு இல்லாமலேயே முன்கர்ம வினைப்பயனின்படி சுகமும் துக்கமும் ஏற்படுகிறது.

ஸத்வகுணம் அதிகமுள்ள தேவதைகளை ஆராதனை செய்வதால் மனிதனுக்கும் ஸத்வகுணம் அதிகமாகிறது. அவனுடைய புத்தி, குணங்களுக்கேற்பவே செயல்படுகிறது.

அனைத்துமே உடலுடன் ஜீவனைத் தொடர்பு படுத்துவதால் நிகழ்கிறது. எல்லா ஜீவன்களுமே கால வெள்ளத்தில் ஒவ்வொரு நாளும் தம் அழிவை நோக்கியே நகர்கின்றன.

உடல் எடுத்தவன் பெரிய அறிவாளியானாலும் சரி, முட்டாளாயினும் சரி. அவனுக்கு அகங்காரம் உள்ளவரை சுகமில்லை. மரணம் நிகழாமல் தடுக்க என்ன வழி என்று அவர்கள் ஆராய்வதில்லை. 

தூக்கு தண்டனைக் கைதிக்கு எந்தப் பொருள்தான் சுகம் தரும்? அதுபோல் மரணம் தன்னை விழுங்கத் துரத்துகிறது என்று உணரும் ஞானிக்கு எப்பொருளும் சுகம் தராது.

இவ்வுலகைப் போலவே தேவலோகத்திலும் போட்டி, பொறாமை, சண்டை, வெறுப்பு ஆகியவை உள்ளன. புண்யபலனுக்கேற்ப‌ அவர்களின் சுகமும் தேய்கிறது. சுவர்கத்திற்குப் போனாலும் ஆனந்தம்‌ சாஸ்வதமில்லை.

நிறைய யாகங்கள் செய்பவன் தேவர்களைத் த்ருப்தி செய்து ஸ்வர்கம் செல்கிறான். அங்கு விருப்பம் போல் செல்லும் தேவவிமானத்தில் ஏறிக்கொண்டு தேவமாதர்களுடன் கூடிக் குலவுகிறான். இன்பமாகப் பொழுதைக் கழிக்கும் அவன் புண்யபலன் தேய்வதை அறிவதில்லை. புண்யபலன் முற்றுமாக அழிந்த நிலையில், ‌காலம் அவனை மீண்டும் கீழே தள்ளுகிறது. 

அதர்மங்கள் செய்பவன், பிறரைத் துன்புறுத்துபவன், தீய செயல்கள் செய்பவன் ஆகியோர் இருள் சூழ்ந்த கோரமான நரகங்களை அடைகின்றனர். பாவ கர்மாவின் பலன் தீரும் வரை நரகத்தில் துன்புறுத்தப்பட்டு, பிறகு கீழே தள்ளப்படுகிறார்கள்.

இருவருமே மீண்டும் புவியில் பிறந்து,‌ அழியும் உடல் கொண்ட பிறவியை அடைகின்றனர். 

வெகு நீண்ட காலமான இரண்டு பரார்தம் ஆயுள் பெற்ற ப்ரும்மா முதல் அனைவரும் காலனான எனக்கு பயப்படுகிறார்கள்.

முக்குணங்களின் சேர்க்கையே கர்மா செய்யத் தூண்டுகிறது. அவை ஒருக்கும் வரை ஆத்மா பலவனாது என்றெண்ணத் தூண்டும்.

பரமாத்மாவான என்னை குணங்களுடன் தொடர்புள்ளவனாக எண்ணுவதால் காலம், ஆத்மா, ஆகமம் (விதிகள்) உலகம், இயற்கை, தர்மம் என்று பலவாறாக அழைக்கிறார்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 595

கண்ணன் உத்தவனைப்‌ பார்த்து மேலும் கூறத்துவங்கினான்.

உத்தவா என்னையே புகலாகக் கொண்டவன், என்னால் உபதேசிக்கப்பட்ட விஷயங்களை மிகுந்த கவனத்துடன் பின்பற்றவேண்டும். கனவில் காணும் விஷயங்கள் எப்படி பொய்யானவையோ அதுபோல் விழித்திருக்கும் போது காண்பவையும் பொய்யே. ஒன்றேயான பரமாத்மாதான் எல்லாப் பொருள்களிலும் வியாபித்திருக்கிறது. 

என்னிடம் நிலைபெற விரும்புபவன் உலகாயத வேலைகளைத் துறந்து ஆன்ம மேம்பாட்டிற்கான பணிகளைச் செய்யவேண்டும். கர்மாவை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடலாகாது. 

என் பக்தன் அஹிம்சை, ஸத்யம், திருடாமை, ப்ரும்மசர்யம், தேவைக்கதிகமாகப் பொருள் சேர்க்காதிருத்தல் ஆகியவற்றைப் பின்பற்றவேண்டும். 

குரு ஸேவை செய்பவன் பொறாமை, அகந்தை, மமதை ஆகியவை இல்லாமல் இடுக்கவேண்டும். திட்டமிட்டுச் செயலாற்றும் தன்மை கொண்டு அதே சமயம் பரபரப்பின்றி இயங்க வேண்டும். எப்போதும் எல்லோரிடத்தும் அன்பு பாராட்டவேண்டும். தத்துவத்தை அறியும் வேட்கையுள்ளவனாக இடுக்கவேண்டும். மனைவி, உற்றார், உறவினர், செல்வம் ஆகியவற்றில் ஒட்டுதலின்றி இருக்கவேண்டும். அவன் தன்னுடைய நலன் போலவே பிறரின் நலனையும் காண்பவன் ஆகிவிடுகிறான்.

ஆத்மா தன்னொளி கொண்டது. எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குவது. பாஞ்சபௌதிகமான மற்றும் சூக்ஷ்ம உடலினின்று மாறுபட்டது. எரியும் பொருளில் பொருள் வேறு, நெருப்பு வேறு. அதுபோல் ஆத்மா உடலினின்று வேறானது.

இவ்வுடல் மூன்று குணங்களின் கலவை கொண்டு மாயையால் ஆக்கப்பட்டது. பிறப்பும் இறப்புமற்ற ஆன்மாவின் மேல் ஒரு போர்வை போல மாயை மூடியிருக்கிறது.‌ஞானம் ஏற்பட்டால் இந்த பிரமை அகன்றுவிடும்.

எனவே மற்ற பொருள்களின்மேல் இருக்கும் அபிமானத்தை விட்டொழித்து தனிப்பரம்பொருளாகத் தனக்குள்ளேயே ஒளிந்திருக்கும் ஆன்மாவைக் கண்டுபிடிக்கவேண்டும்.

தூய்மையடைந்த புத்தி, மாயையின் செயல்பாடுகளைச் சரியாக இனம் கண்டு உதறித்தள்ளிவிடும். கட்டை முழுவதும் எரிந்தபின் அக்னி தானே அடங்கும். மாயையின் குணங்களை எரித்தபின் புத்திக்கு விஷயமில்லாமல் போகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, November 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 594

பகவானிடம் நிலை பெற்ற மனத்துடையவர்களிடமிருந்து கர்ம வாசனைகள் விலகும். ஸத்வகுணம் வளர வளர, ரஜோ, மற்றும் தமோ குணங்கள் விலகும். அமைதி கிட்டும். நன்றாக ஆத்மாவில் நிலைபெற்றவர்க்கு சூழலில் நடைபெறுவது எதுவும் தெரியாது. பாதிக்காது.

முனிவன் எப்போதும் தனித்திருக்கவேண்டும். கூட்டத்தோடு சேரக்கூடாது. சொந்தமாக இருப்பிடம் வைத்துக்கொள்ளக் கூடாது. எப்போதும் கவனமாக இருக்கவேண்டும். தன் ஆசார அனுஷ்டானங்களை விளம்பரம் செய்யக்கூடாது. குறைந்த அளவு பேசவேண்டும்.

சிலந்தி தன் வாயிலிருந்து ஒரு நூலை வெளியே விடும். அதைக் கொண்டு முழு க் கூட்டையும் கட்டும். ஏதாவது சரியாக வரவில்லை என்றால் அந்த நூலை உள்ளிழுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் விடும்‌. இதனால் அதன் உடம்பு இளைப்பதோ குண்டாவதோ இல்லை. அதன் இயல்பு மாறாமல் அப்படியே இருக்கும். அதே போல பகவான் தனக்குள்ளிருந்து இப்பிரபஞ்சத்தை வெளியே விடுகிறார். பிறகு மீண்டும் தனக்குள்ளேயே ஒடுக்கிக்கொள்கிறார்.

மனிதன் அன்பினாலோ, வெறுப்பாலோ, பயத்தாலோ எதைப் பற்றி எப்போதும் நினைக்கிறானோ அதன் குணங்கள் அவனுக்கு வந்துவிடும். மெதுவாக அவன் நினைக்கும் பொருளின் உருவத்தை அடைந்துவிடுவான்.

குளவி தான் கட்டும் கூட்டினுள் ஒரு புழுவை அடைத்துவைத்துவிட்டு மூடும்போது அதைக் கொட்டிவிடும். உள்ளிருக்கும் புழு தன்னைக் கொட்டிய குளவியை நினைத்து நினைத்து பயந்துகொண்டே இருக்கும். பின்னர் அதுவும் குளவியாகவே மாறிவிடும். பகவானையே எண்ணிக்கொண்டிருக்கும் பக்தன் பகவத் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.

இவ்வாறு இருபத்து நான்கு ஜீவன் களிடமிருந்து பற்பல பாடங்களைக் கற்றேன்.
வைராக்யத்திற்கும் விவேகத்திற்கும் காரணம் இவ்வுடலே. இதைப் பார்க்கும்போதே இது அழியக்கூடியது என்ற எண்ணம் உண்டாகிறது. அதனால் இவ்வுடல் நானல்ல என்று புரிகிறது‌. இவ்வுடல் எனக்கானது அல்ல என்றெண்ணும்போது உடல்மீதுள்ள‌ பற்று அழிந்துபோகிறது.

மனைவி, மக்கள், வீடு, செல்வம் என்று சுகத்தை எதிர்பார்த்து இவைகளைப் போஷித்தாலும் முடிவில் அவற்றால் துக்கமே. பற்றினால் அடுத்த பிறவிக்கான விதை விதைக்கப்படுகிறது‌. 

பல மனைவிகள் கொண்ட ஒருவன் அவர்களால் அலைக்கழிக்கப்படுவான். அதுபோல் புலன்கள் மனிதனை அலைக்கழிக்கின்றன. அதனால் அவனது நிம்மதி பறிபோகிறது.

எல்லா ஜீவன்களையும் படைத்த பகவானுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதனால் மனிதப் பிறவியை, சிந்தித்து முக்தியடையும் வழியைக் காண்பவனாகப் படைத்து மகிழ்ச்சியடைந்தார். 

இந்த நரஜென்மம் மிகவும் அரிதானது. இது நிலையற்றதென்றாலும் இப்பிறவியில்தான் முயற்சி செய்து ஞானத்தை அடைய இயலும். எந்த ஜந்துவாகப் பிறந்தாலும் சிற்றின்பங்கள் கிடைக்கும். மனிதப்பிறவியால் மட்டுமே பேரின்பத்தின் கதவைத் திறக்க இயலும். எனவே கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறவியை வீணாக்கலாகாது. நல்ல சமயமிதை நழுவவிடாதே.

இவ்வாறு யதுவிற்கு உபதேசம் செய்தார் தத்தாத்ரேயர். யது மன்னன் அவரை கௌரவித்து வணங்கினான். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

என் முன்னோரான யது மஹாராஜா அவரது உபதேசத்தால் பற்றுக்களை நீக்கி ஞானத்தை அடைந்தார் என்று உத்தவரிடம் கூறினான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, November 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 593

தத்தாத்ரேயர் தொடர்ந்தார்

அடுத்ததாக பிங்களை என்னும் பொதுமங்கை ஒரு காலத்துக்குப் பிறகு, தன்னைத் தேடி எவரும் வராதது கண்டு துயருற்றாள். பின்னர் அவளது சுகமான வாழ்வு பறிபோக, ஏழ்மையில் அவளுக்கு வைராக்யம் பிறந்தது. பாவச் செயல்களுக்காக வருந்தி இறைவனைச் சரணாகதி செய்தாள்.

அதன் பின் மனத்துன்பம் அனைத்தும் நீங்கி நிம்மதியாக பவித்ரமான வாழ்வை வாழ்ந்தாள்.

புலன்களுக்கு பிரியமானவற்றிற்காக மனம் ஏங்கும் வரை துன்பம் பெருகுகிறது. வாழ்விற்கு அவசியமான அளவு மட்டும் பொருளை வைத்துக்கொண்டு வாழ்பவனுக்கு நீங்காத செல்வமான நிம்மதி கிடைக்கிறது. 

அடுத்த குரு ஒரு குர்ரப் பறவை. ஒரு நாள் அதற்கு ஒரு மாமிசத்துண்டு கிடைத்தது. ஆனால் அதை நிம்மதியாக உண்ணமுடியவில்லை. ஏனெனில் மாமிசம் கிடைக்காத மற்ற பறவைகள் அதைக் கடுமையாகத் தாக்கின. தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக அது மாமிசத்துண்டைக்‌கீழே போட்டுவிட்டது. மற்ற பறவைகள் குர்ரப் பறவையை விட்டுவிட்டு மாமிசத்தின் பக்கம் ஓடின. பொருளின் மீதுள்ள பற்றினால் துன்பம் என்பதே கருத்து.

எனக்கோ‌ மான அவமானங்கள், வீடு மக்கள், எதுவும் இல்லை. ஒரு குழந்தையைப் போல் ஆனந்தமாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன்.

உலகில் கவலையற்றவர் இருவர். ஒன்றுமறியாத குழந்தை மற்றும் அனைத்தும் அறிந்த ஞானி.

அடுத்த பாடத்தை ஒரு பெண்ணிடமிருந்து கற்றேன். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்தார்கள். அவளது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவளே விருந்தாளிகளை உபசரித்தாள். அவர்களுக்கு சமைப்பதற்காக அரிசி எடுக்க நெல்லைக் குத்தத் துவங்கினாள். பணியாளர்கள் இன்றி தானே நெல்லைக் குத்துவதால் வந்திருப்பவர்கள் தன்னை ஏழை என்று எண்ணக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. எனவே நெல்‌குத்தும் சத்தம் வந்தவர்களுக்குக் கேட்காமல்‌ இருக்க கைகளில் இருந்த வளையல்களில் இரண்டைத் தவிர மீதி எல்லாவற்றையும் ‌கழற்றிவிட்டுக் குத்தினாள். அப்படியும் இரண்டு வளையல்கள் உராய்ந்து சத்தம் கேட்டது. பின்னர் அதிலும் ஒன்றைக் கழற்றிவிட்டுக்‌ குத்தினாள்.

சமுதாயத்தின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களுள் ஒருவராகத்தான் வாழவேண்டும். 

மேலும் பலர் இருந்தால் வீண்பேச்சு, சண்டை வரும். எனவே அப்பெண்ணின் வளையலைப்போல ஓசையற்று தனித்திருக்கவேண்டும். மனத்தை ஒருமுகப் படுத்த அமைதியாக இருத்தல் அவசியம். 

யோகி ஆசனம், சுவாசம் ஆகியவற்றை வெல்லவேண்டும். வைராக்யம் பயின்று மனத்தை ஓரிடத்தில் நிறுத்துதல் வேண்டும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, November 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 592

தத்தாத்ரேயர் அடுத்ததாக கடலை விளக்குகிறார்.

ஒரு பெருங்கடலைப்போல யோகியானவன் மகிழ்ச்சியுடனும் கம்பீரத்துடனும், ஆழம் காண முடியாதவனாகவும், கடந்து செல்ல அதாவது அவனை இழிவுபடுத்த இயலாதவனாகவும், அலட்சியம் செய்ய இயலாதவனாகவும், கலங்காதவனாகவும், எப்போதும் அமைதியுடனும் இருக்கவேண்டும்.

நதிகள் வந்து கலப்பதால் கடல் பெருகுவதில்லை. நீர் வரத்து நின்று விட்டாலும் குறைவு படுவதில்லை. யோகியும் ஆன்மாவை பரம்பொருளில் நிறுத்தி விடுவதால் மாறுபாடுகளுக்கு உட்படமாட்டான்.

புலன்களை வெல்லாதவன் விட்டில்பூச்சி போல் அவற்றால் இழுக்கப்பட்டு நரகத்தில் விழுகிறான். (பதினோராவது குரு)

மலருக்கு சிரமம் கொடுக்காமல் தேனீ தேனை எடுக்க்கும். அதேபோல யோகி இல்லறத்தார்க்கு சிரமம் கொடுக்காமல் அவர்கள் தரும் உணவை சிறிதளவு ஏற்கவேண்டும்.

மலர் சிறியதோ பெரியதோ தேனீ அதன் சாரமான தேனை மட்டும்தான் எடுக்கும். அதைப்போல பல்வகைப்பட்ட சாஸ்திரங்களிலிருந்து யோகி சாரத்தை மட்டும் கிரஹித்துக் கொள்ளவேண்டும்.

தேனீயைப்போல் சேர்த்து வைக்கக் கூடாது. யோகி பிக்ஷை ஏற்ற உணவை இரவுக்கு, நாளைக்கு என்றெல்லாம் சேர்த்துவைக்கக்கூடாது. சேர்த்தால் அழிவு வரும். கைகளே பிக்ஷைக்கான பாத்திரம். வயிறு கொள்ளும் மட்டுமான உணவை ஏற்றல் வேண்டும்.

அடுத்ததாக பதிமூன்றாவது குருவான ஆண்யானை பற்றிக் கூறுகிறார்.

பெண்யானையைக் கண்டு மயங்கி அருகில் செல்லும் ஆண்யானை அதைப் பிடிக்க வெட்டப்பட்டிருக்கும் குழிக்குள் விழும். அதுபோல யோகி மனத்தினாலும் பெண்ணைத் தீண்டலாகாது.
அது அவனது தவம் அனைத்தையும் அழித்து நரகத்தில் தள்ளும்.

தேன் எடுப்பவன் அடுத்த குருவாகச் சொல்லப்படுகிறான். தேன் எடுப்பவன் ஒருக்காலும் எடுத்த தேனை அனுபவிப்பதில்லை. அதை யாருக்காவது கொடுத்துவிடுவான். அதேபோல இல்லறத்தானின் பொருள் துறவிகளுக்கும் சாதுக்களுக்கும் செலவிடுவதற்காகவே.

அதிவேகமாக ஓடக்கூடிய மான் வேடனின் ஊதும் கொம்பு இசையில் மயங்கி நின்று பிடிபடும். அதுபோல யோகி உலகியல் இன்பங்களைத் தூண்டும் இசையைக் கேட்கலாகாது. 

மான்வயிற்றில் பிறந்த ரிஷ்யச்ருங்கர் உலகாயத ஆடல் பாடல்களில் மயங்கி மாட்டிக் கொண்டார்.

தூண்டில் முள்ளில் செறுகப்பட்ட உணவுத்துளிக்கு ஆசைப்பட்டு மீன் மாட்டிக்கொள்ளும். அதுபோல் சுவையான உணவுக்கு மயங்கி நாவிற்கு அடிமையாகக் கூடாது.

ஆகாரத்தை நிறுத்தினால் இந்திரியங்கள் வசப்படும்‌. மற்ற புலன்களைக்கூட அடக்கிவிடலாம். நாவை அடக்குவது மிகவும் கடினம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, November 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 591

புறாவைப் பற்றிக் கூறும்போது தத்தாத்ரேயர் ஒரு சிறிய நிகழ்வைக் கூறுகிறார்.

புறாவைப்போல் சம்சாரத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிறார்.

ஒரு காட்டில் ஒரு ஜோடிப்புறாக்கள் கூடு கட்டிக்கொண்டு வசித்துவந்தன. இரண்டும் ஒன்றன்மேல் ஒன்று ‌மிகுந்த அன்பு வைத்திருந்தன. பெண்புறா எதையெல்லாம் விரும்பிற்றோ அனைத்தையும் ஆண்புறா சிரமம் பார்க்காமல் கொண்டுவந்தது. இரண்டும் ஒன்றாகக் காட்டில் சுற்றித் திரிந்தன. விளையாடின. பேசி மகிழ்ந்தன. உணவு உண்டன. 

பெண்புறா கருவுற்று முட்டைகள் இட்டது. காலம் செல்ல செல்ல முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வந்தன. அவை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருந்தன. அவற்றின் மீது அன்பு கொண்டு சீராட்டிப் பாராட்டி வளர்த்தன. அவைகளின் அகவல் பெரிய புறாக்களுக்கு உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. 

மாயையினால் மயங்கி குஞ்சுகளின் அழகில் மயங்கித் திரிந்தன. ஒரு நாள் பெரிய புறாக்கள் இரண்டும் இரை தேட வெளியே சென்றிருந்தன. அவ்வமயம் ஒரு வேடன் வந்தான். கூட்டின் அருகே இன்னும் பறக்கத் தெரியாமல் தத்தி தத்தி நடந்து கொண்டிருந்த குட்டிப்புறாக்களை வலைவீசிப் பிடித்தான். 

பின்னர் அவற்றை எடுத்துச் செல்லாமல் வலையோடு அங்கேயே போட்டுவிட்டு ஒளிந்துகொண்டான். முதலில் கூடு திரும்பிய தாய்ப்புறா தன் குஞ்சுகள் வலையில் அகப்பட்டுக்கொண்டதைப் பார்த்து மிகுந்த துயருடன் அரற்றிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிற்று. பறந்தது. 

மிகவும் தீனமாக சக்தியற்று குஞ்சுகள் எழுப்பும் அகவலை கேட்க கேட்க, அதனால் அதன் குட்டி இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் தானும் வலையில் விழுந்தது. இப்போதும் வேடன் வலையை எடுத்துப் போகவில்லை. 

சற்று நேரத்தில் அங்கே வந்த ஆண்புறா அதிர்ந்தது. கதறிற்று. 

நான் துர்பாக்யசாலி! துர்மதியுள்ளவன். எனக்கு இன்னும் இல்லறம் அலுக்கவில்லை. இவளோடு நான் இன்னும் இன்பமாகப் பல காலம் வாழ இச்சை கொண்டுள்ளேனே. மனைவி போன பின்பு, மற்ற மூன்று புருஷார்த்தங்கள் எப்படிக் கிட்டும். அவளது தெய்வம் நான். என்னை மிகவும் நம்பினாள். என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லையே. இந்தப் பாழடைந்த கூட்டில் தனியாக என்னை விட்டு அவள் மட்டும் குஞ்சுகளுடன் மேலுலகம் செல்வாள்.

எனக்கு மட்டும் இனி இவ்வுலகில் என்ன வேலை? யாருக்காக வாழப்போகிறேன். என்றெல்லாம் அரற்றி மதி கெட்டுப்போய்த் தானும் வலையில் விழுந்தது. 

இப்போது கொடூரமான அந்த வேடன் வந்து எல்லாவற்றையும் சுருட்டி வலையோடு கொண்டுபோனான்.

குடும்ப வாழ்க்கை நடத்துபவனின் நிலையும் இதுவே. பரமார்த்திகம் பற்றிய சிந்தனையே இல்லாமல் எப்போதும் மனைவி, மக்கள், அவர்களின் சுகம், மனமகிழ்ச்சி, கேளிக்கை என்று அலைகிறான்.

 மனித சரீரம் முக்தியின் வாசலைத் திறக்கும் கதவு.

 பல கோடி பிறவிகளுக்குப் பிறகு அபூர்வமாக ஒருவனுக்கு மனிதப்பிறவி வாய்க்கிறது. 

அதை இறையறிவு இன்றி முக்தி அடைய முயற்சியும் இன்றி வீணாக்குபவர் இந்தப் புறாக்களைப் போன்றவர் ஆவர்.

புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்கள் அனைத்தும் சுவர்கம் மற்றும் நரகத்தில் கூடக் கிடைக்கும். துன்பம் வருவதற்கு மனிதன் எப்படி முயற்சி எடுப்பதில்லையோ அதே போல இன்பம் வருவதற்கும் முயற்சி தேவையில்லை. எனவே அவற்றின் மேல் பற்று கொள்ளலாகாது.

யோகியானவன் தானாக எது கிடைக்கிறதோ அதில் த்ருப்திகொள்ளவேண்டும். கிடைக்கும் உணவு சுவையானதோ, சுவையற்றதோ, நிறையவோ, குறைவானதோ மலைப்பாம்பைப் போல் அப்படியே ஏற்கவேண்டும்‌. மலைப்பாம்பு வாயைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும். வாயில் எது விழுகிறதோ அதை அப்படியே ஏற்கும். இதற்கு அஜகர வ்ருத்தி என்று பெயர். அதை யோகியும் கைக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து பல நாள்களுக்கு உணவே கிட்டாவிடிலும் முயற்சி செய்யலாகாது‌.

 வினைப்பயன் என்றெண்ணி அமைதி காக்கவேண்டும்.

 மனோபலம், உடல் பலம், சாமர்த்தியம் அனைத்தும் இருந்தாலும் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு தன் க்ஷேமத்தைப் பற்றிய கவலையின்றி இருக்கவேண்டும்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, November 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 590

தத்தாத்ரேயர் தொடர்ந்தார்.

அக்னியில் விழும் பொருளின் குணத்தை அது பார்ப்பதில்லை. நல்லதோ கெட்டதோ எதுவாகினும் சாம்பலாக்கிவிடும். ஞானியும் எந்த ஒரு விஷயத்திலும் குணம் தோஷம் என்று பிரித்துப் பார்த்து ஒதுக்கலாகாது. அவருடைய ஞானத்தீயில் அனைத்தும் சாம்பலாகிவிடும்.

ஞானி சிலரிடம் தன்னை மறைக்கிறார். சிலரிடம் தன் உண்மை ஸ்வரூபத்தைக் காட்டுகிறார். ஆனால் தனக்கு உணவளிப்பவர் எவராயினும் அவரது முன்/ பின் வினைகளை எரித்து விடுகிறார்.

ஒரு மரக்கட்டை எரியும்போது அக்னியின் வடிவம் அந்தக் கட்டை வடிவில் தென்படும். அதைப் போலவே ஆன்மாவும் உடல்களினுள் புகுந்துகொண்டு அவற்றின் வடிவமாகவே தோன்றுகிறது‌.

எப்படித் தேய்கிறது? எப்படி வளர்கிறது என்று அறியமுடியாத வேகத்தில் சந்திரனின் கலைகள் வளர்கின்றன. அதே போல பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உடல் வளர்ந்தும் தேய்ந்தும் மாறுபடுகிறது. ஆனால் அதன் வளர்ச்சியையோ தேய்மானத்தையோ ஒருவரும் அறியமுடிவதில்லை. ஆனால் அதற்கும் ஆத்மாவுக்கும் தொடர்பில்லை.

 அக்னியின் ஜுவாலைகளுக்குத் தோன்றுமிடமும் மறையும் இடமும் தெரியாது.

அதுபோல உயிர்களின் தோற்றுவாயும், மறைவும் கால மாற்றத்தில் கண்ணுக்குத் தெரிவதில்லை.

சூரியன் நீரை உறிஞ்சி அதையே மழையாகப் பொழிந்துவிடுகிறான். அதுபோல யோகியும் பொருளைப் பெறுவதிலும் வழங்குவதிலும் பற்றின்றி இருக்கவேண்டும்.

ஒரே சூரியன் பல்வேறு நீர்த்தேக்கங்களில் ப்ரதிபலித்து வெவ்வேறாகத் தோன்றும். அதுபோல் உண்மையில் இருப்பது ஒரே ஒரு ஆன்மாவே. பல்வேறு உடல்களில் பலவாகப் ப்ரதிபலிக்கிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..