Monday, August 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 551

#ச்ருதி_கீதை

வேதங்கள் பகவானைத் துதிக்கின்றன.

அனைத்துலகையும் ஆட்டிப்‌ படைக்கும் இறைவா! பரமாத்ம தத்வத்தை உணர்தல் மிகக் கடினம். அதனாலேயே நீங்கள் பற்பல அவதாரங்கள் செய்து திருவிளையாடல்கள் புரிகிறீர்கள். அவை கேட்பதற்கும், பாடுவதற்கும் இனியவை. அமுதம் போன்றவை. மனம் மயக்குபவை. அவற்றில் மூழ்கும் ஜீவன் உலகியல் துன்பங்கள் அழியப்பெற்று பிறிவிச் சுழலினின்று விடுபடுகிறான்.

தங்கள் கதையமுதம் பருகுபவன் உலகியல் மட்டுமல்ல, விண்ணுலக இன்பங்களையும் துச்சமாக எண்ணுகிறான்.

பஞ்சபூதங்களாலான இவ்வுடல் தங்களை அடைவதற்கான சாதனமாகத் தங்களால் அளிக்கப்பட்டிருக்கிறது.

தங்களை அடையும் வழியில்‌ இவ்வுடல் செயல்பட்டால் தனக்குத்தானே நன்மை செய்துகொள்கிறது. உண்மையில்‌ ஜீவனின் உற்ற நண்பன் தாங்களே. தாங்களே ஜீவனின் உண்மையான நலம் விரும்பி. ஜீவனைத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறீர்கள். ஆனால், மனிதர்களோ இவ்வுடல் நுகர்ச்சியை விழைந்து அதைக் காத்து, ஆன்மாவை நசுக்கிப் பிழிந்து தன்னைச் சிதைத்துக்கொள்கின்றனர்.

அதன் பயனாக விலங்கு, பறவை எனப் பல பிறவிகள் எடுத்து உழல்கின்றனர்.

தாங்கள் சமநோக்குடையவர். அனைவரிடத்தும் ஒரே மாதிரியான கருணையைப் பொழிபவர். யோக புருஷர்கள் மனத்தை அடக்கித் தங்களை அடைகிறார்கள். சிசுபாலன், ராவணன், கம்சன் போன்றவர்கள் தங்களிடம் மாளாப்பகை கொண்டதால் தங்களையே அடைந்தனர். பக்தியோ, பகையோ நினைப்பது தங்களைத்தானே. கோபிகள் தங்களைக் காதலன் என்று மயங்கியதால் தங்களை அடைந்தனர். வேதங்களாகிய நாங்களும் தங்களையே அடைகிறோம். ப்ரப்ப்ரும்மம் என்றாலும் காதலன் என்றாலும் அடைவது தங்களைத்தான்.

உலகம் தோன்றும் முன்பும், அழிந்த பின்னும் நிலைத்துள்ள உம்மை காலவசப்பட்டவன் எவ்வாறு அறிய இயலும்? உம்மிடமிருந்து ப்ரும்மா தோன்றினார். அவரைத் தொடர்ந்து புலன்களும் அவற்றின் தேவதைகளும் தோன்றின. அவர்களைத் தொடர்ந்து மற்ற ச்ருஷ்டிகள் துவங்கின. இவ்வுலகமைத்தையும் தம்முள் அடக்கி உறங்கும்போது வாசனைகளைக் கொண்டு உறங்கும் ஜீவன்களுக்கு உணர்வுப் புலன்கள் ஏதுமில்லை. அப்போது மஹத் முதலிய தத்துவங்களும் இல்லை. அவற்றை முறைப்படுத்திச் சொல்லும் வேதங்களாகிய நாங்களும் இல்லை. ச்ருஷ்டிக்குப் பிறகு ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களால் புத்தி தடுமாறுவதால் நீங்கள்‌ உணரப்படுவதில்லை. ப்ரயளயத்திலோ ஜீவனுக்கும் தங்களுக்கும் இடைவெளி இல்லை. ஆனாலும் புலன்களற்றிருப்பதால் உணர இயலாது. எனவே, தங்கள் சரணங்களைப் பற்றி பக்தி செய்வதே எளிய மார்கமாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, August 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 550

#ச்ருதி_கீதை

யோகநித்ரையில் இருக்கும் பகவானைப் பார்த்து 
வேதங்கள் கூறுகின்றன

சில ‌மனிதர்கள், ரிஷிகளால் வகுக்கப்பட்ட ஸம்ப்ரதாய வழிகளைப்‌ பின்பற்றித் தங்களை உபாசிக்கிறார்கள்.

யோகிகள் வயிற்றிலுள்ள மணிபூரக சக்ரத்தில், அக்னி மண்டலத்தின் நடுவிலிருக்கும் உம்மை பூஜிக்கின்றனர்.

சூரிய மண்டல உபாசகர்கள் அனைத்து ரத்த நாளங்களுக்கும் ஆதாரமான ஹ்ருதய கமலத்தில் தங்களை பூஜிக்கிறார்கள்.

இன்னும் சில யோகிகள் தலை உச்சியில் ப்ரும்மரந்திரத்தின் வெளிவரை செல்லும் சுழுமுனையை எழுப்பி ஒளிமயமான வழியில் மேல்நோக்கிச் சென்று தங்களை அடைகின்றனர்.

தாங்களை எப்படிப் பூஜித்தாலும் தாங்கள் அவர்களது மரண பயத்தைப் போக்குகிறீர்கள்.

வயிறு, இதயம், தலை என்று கூறுங்கால் ப்ரும்மத்திற்கும் இவ்வுறுப்புகள் உள்ளனவா என்று பரீக்ஷித் ஐயம் கொள்ள வாய்ப்பிருந்ததால் தொடர்ந்து அதை விளக்குகிறார் ஸ்ரீ சுகர்.

வேதங்கள் கூறுகின்றன.

பகவானே! உயர்ந்தது, தாழ்ந்தது, நடுநின்றது என அனைத்து இடங்களிலும் அனைத்துப் பிறவிகளாகவும் தோன்றி பரவியிருக்கிறீர்கள்.

நீங்கள் ஒரே மாதிரி பரவிருந்தாலும் பொருள்களின் உயரம், தடிமன், தன்மை ஆகியவற்றிற்கேற்ப மாறுபாடுகள் தோன்றுகின்றன. அது தங்களின் தோற்றம்போல் இருந்தாலும் உண்மையில் இல்லை. தாங்கள் ஆனந்த மயமானவர், மாறுபாடற்றவர். சான்றோர்கள் உடலை வெறுத்து உள்ளிருக்கும் ஆத்ம ஜ்யோதியான தங்களையே எங்கும் எப்போதும் காண்கிறார்கள்.

ஜீவனுக்கு அவனது நல்வினை தீவினைக்கேற்ப‌ உடலைத் தருவது தாங்களே. ஜீவன் தங்களது அம்சமேயாகும். சைதன்ய ரூபமான தங்களை எப்படி ஜடம் என்ற தத்துவத்தில் பொருத்த இயலாதோ, அதேபோல் ஜீவனையும் ஜடம் என்று தள்ள இயலாது. ஆத்மாவை புத்ர நாமாஸி, அதாவது தந்தைதான் தனயன் என்ற பெயரில் விளங்குகிறான் என்பதற்கேற்ப தந்தையான தங்களுக்கும் தங்களிடமிருந்து தோன்றிய ஜீவனுக்கும் தொடர்பு உள்ளது.

மாயையினால்‌ மயங்கும் ஜீவன் காரியங்களைத் தான் செய்வதாக எண்ணுகிறது. காரியங்கள் அற்றுப்போன நிலையில் ஜீவன் தங்களுடன் ஒன்றிவிடுகிறது. தங்கள் திருவடிகளில் பக்தி செலுத்துவதன் மூலம் ஜீவன்களின் உலகியல் தளைகள் நீங்குகின்றன.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, August 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 549

#ச்ருதி_கீதை

வேதங்கள் ப்ரும்மத்தைத்தான் குறிப்பிடுகின்றன என்று முன்னால் கூறப்பட்டது. ஒரு இடத்தில் அனைத்து சராசரங்களுக்கும் தலைவன் இந்திரன் என்கிறது. ஒரு இடத்தில் அக்னியை உலகைக் காப்பவன் என்கிறது.

இவ்வாறு பல தேவதைகளை வர்ணிக்கும் வேதங்கள், ப்ரும்மம் ஒன்றே என்று கூறுகின்றன.
இது எப்படிப் பொருந்தும் என்று பரீக்ஷித் நினைக்கக்கூடும் என்பதால் அந்தக் கேள்விக்கு மீண்டும் விளக்கமாகப் பதில்‌ கூறினார் ஸ்ரீ சுகர்.

ச்ருதிகள் இறைவனை எழுப்புமாறு கூறுகின்றன. இந்திராதி தேவர்களைப் பற்றிய வர்ணனை உண்மைதான். ஆனாலும், ரிஷிகள் இங்கு காண்பது அனைத்தையுமே ப்ரும்மம் என்று தான் எண்ணுகிறார்கள்.

இப்போது காணும் உலகம் ப்ரளயத்தின்போது அழிந்தாலும் ப்ரும்மமான தாங்கள் இருக்கிறீர்கள். இந்த ஜகத் தங்களிடமிருந்தே தோன்றி வளர்ந்து தம்மிடமே ஐக்கியமாகிறது. கடைசியில் மிஞ்சுவது ப்ரும்மமாகிய தாங்களே. 

குடம், மடக்கு போன்றவை மண்ணைக்கொண்டு செய்யப்பட்டாலும், மக்கி மண்ணாகவே ஆகின்றன.

குடமாவதற்கு முன்பாகவும் உடைந்து அழிந்த பின்பும் அது மண்ணே. குடம் என்று சொன்னாலும் அது மண்ணை வர்ணிப்பதே ஆகும். 

ப்ரும்மம் மாறுபாடு உடையதா என்றால் அதுதான்‌ இல்லை. இந்தப் பிரபஞ்சம் தங்களிடமிருந்து தோன்றுவதுபோல் காணப்பட்டாலும் அனைத்தும் தாங்களே. இந்திராதி தேவர்களை வர்ணிப்பதும், தங்களை வர்ணிப்பதே ஆகும்.

மாயையினால் இவ்வுலகில் ஒவ்வொரு கணமும் மாற்றங்கள் நிகழ்கின்றன. முனிவர்களோ வாக்கினாலும் மனத்தினாலும் மாறாத ப்ரும்மமான தங்களையே எண்ணுகின்றனர்.

கல், மண், கட்டில் எங்கு கால் வைத்தாலும் அது பூமியில் கால் வைப்பதே ஆகும். ஏனெனில் அவை அனைத்தும் பூமியின் வடிவங்களே. எனவே வேதங்களாகிய நாங்கள் எதை வர்ணித்தாலும்‌ அது தங்களைப் பற்றியதே.

வேதங்களாகிய நாங்கள் தங்கள் கல்யாண குணங்களையே வர்ணிப்பதால், சான்றோர்கள் தங்களது மங்கலமான குணங்களைக் காதுகளால் பருகி, வாயால் மற்றவர்க்குச் சொல்லி, உள்ளத்தில் இருத்தி, அன்பை வளர்க்கிறார்கள். தங்கள் மேலுள்ள மேலான அன்பால் இவ்வுலகியலிலிருந்து விடுபடுகிறார்கள்.

மானுட உடல் பெற்ற ஒருவன் அப்பிறவியிலேயே ப்ரும்மமாகிய தங்களை உணர்வானாகில் அவனது பிறவி பயனுற்றதாகும். இல்லையேல் பிறவி வீணாகும்.

(பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார்.
- திருக்குறள்)

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, August 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 548

#ச்ருதி_கீதை
ஜய ஜய என்று துவங்கும் உபநிஷத், ஸனகர் முதலியவர்களால் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்டது. அதை நம்பிக்கையுடன் ஏற்பவன் எல்லா தளைகளினின்றும் விடுபடுகிறான்.

இதன் விளக்கமாக பகவான் நாராயணர், நாரத மஹரிஷிக்குச் சொன்ன கதையை உனக்குச் சொல்லுகிறேன். என்றார் ஸ்ரீ சுகர்.

நாரதர் ஒரு சமயம் பத்ரியிலுள்ள நாராயண ரிஷியைக் காணச் சென்றார். அவர் இந்தக் கல்பத்தின் துவக்கத்திலிருந்து உலக நன்மைக்காகத் தவம் செய்து வருகிறார்.

பரீக்‌ஷீத்! அந்த நாராயணரின் ஆசிரமத்தில் அவர் பல ரிஷிகள் புடைசூழ அமர்ந்திருக்கும் சமயம் நாரதர் அங்கே சென்று நீ இப்போது என்னிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்.

நாராயணர் கூறத் துவங்கினார்.

நாரதரே! முன்பொரு சமயம் ஜனலோகத்தில் ஸனகாதியர் நால்வரும் ப்ரும்ம ஸத்ரம் நடத்தினார்கள்.

அப்போது நீங்கள் ஸ்வேத தீபத்திற்கு அநிருத்தனைக் காணச் சென்றிருந்தீர்கள். அப்போது ப்ரும்மத்தைப் பற்றிய விவாதம் நிகழ்ந்தது. 

ஸனகாதியர் நால்வருமே கல்வி, கேள்வி, ஒழுக்கம், தவம் ஆகியவற்றில் சிறந்தவர்கள். என்றாலும் அவர்கள் ஸனந்தனரை ப்ரும்மத்தை வேதம் எவ்வாறு விளக்குகிறது என்று கேட்டனர்.

ஸனந்தனர் கூறிய பதில் ச்ருதி கீதை என்று போற்றப்படுகிறது.

ப்ரளய சமயத்தில் பரமாத்மாவான ஆதிபுருஷன் அனைத்துலகையும் தனக்குள் லயமாக்கிக்கொண்டு தன் அனைத்து சக்திகளையும் அடக்கி யோக நித்ரை செய்து கொண்டிருந்தார். ப்ரளய காலம் முடிந்து படைப்பு துவங்கும் காலம் வந்தது. அப்போது அவரது மூச்சுக்காற்றாக வேதங்கள் அவரிடமிருந்தே வெளிவந்தன. 

அயர்ந்து உறங்குகின்ற அரசனை வந்திகள் துதிபாடி எழுப்புவதுபோல் வேதங்கள் அவரைத் துதி செய்யலாயின.

அகில உலகங்களையும் வெற்றிகொண்டவரே! இயற்கையிலேயே அனைத்து செல்வங்களையும் பெற்றவரே! அனைத்துயிர்களையும் கட்டுப்படுத்தும் மாயையை அழித்தருள வேண்டும்.

இந்த மாயை ஜீவன்களின் உண்மை நிலையை மறக்கடிக்கிறது. ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களை ஏற்கிறது. ஜீவன்களின் சாதனை, அறிவு, செயல் ஆகியவற்றைத் தூண்டுபவர் அந்தர்யாமியாக உறையும் தாங்களே. தாங்கள் சில சமயம் மாயையை ஏற்று இவ்வுலகமாக விளங்குகிறீர்கள். சில சமயம் ஸத் சித் ஆனந்த ஸ்வரூபமாகத் தனித்து நிற்கிறீர்கள். ஸங்கல்ப மாத்திரத்தில் உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிகிறீர்கள். உலகின் நலனுக்காக திருவவதாரங்களும் செய்கிறீர்கள். தங்களை வர்ணிக்கும் திறனோ, துதிக்கும் வல்லமையோ எங்களுக்கில்லை.

இதன் பொருளாவது ஒரு அரசனை சாமான்யன் அரசவையில் சென்று காண இயலாமல் போகலாம். ஆனால் அரசனே நகர்வலம் வரும்போது காண இயலும்‌. ஆனால் அப்போது அரசன் மாறுவேடத்திலிருந்தால் சாமான்யனால் அறிய இயலாது. ஆனால் அவன் கண்டது அரசனைத்தானே. உண்மை அறியாதவர்கள் வேதத்தின் கூற்றை மறுக்கலாம். உணர்ந்தவர் அனைவரும் நிர்குணம்தான் ஸகுணமும் என்ற கூற்றை ஒப்புக்கொள்வார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 547

ச்ருததேவனுக்கும் பஹுளாச்வனுக்கும், 
வேதங்கள் ப்ரும்மஸ்வரூபத்தைக் கூறுகின்றன என்று கண்ணன் உபதேசம் செய்தான் என்று கூறியதைப் பிடித்துக்கொண்டான் பரீக்ஷித்.

மஹரிஷி! வேதங்கள் தமக்குத் தாமே ப்ரமாணமாக நிற்பவை. ப்ரும்மமோ ஸத், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களினின்றும் விலகி நிற்பது. இதுதான், இப்படித்தான், என்று விளக்க இயலாதது. அப்படியிருக்க ஏற்கனவே அறிந்த ஏதோவொன்றைக் காட்டித்தான் ப்ரும்மத்தை விளக்க இயலும். ஆனால் அவ்வாறு விளக்கினால் அது முழுமையாகாது. வேதங்கள் எப்படி விளக்கியிருக்கின்றன? ப்ரும்மம் வேதத்திற்கும் எட்டாக் கனிதானே. சொல், பொருள், செயல் ஆகிய எவ்வடிவமும் அற்ற ப்ரும்மத்தை வேதங்களால் மட்டும் எப்படித் தெளிவாகச் சுட்ட இயலும்? என்றான்.

நமது அறிவிற்கு எட்டாத உயர்ந்த விஷயத்தை சுலபமாகக் கேட்டுவிட்டான் பரீக்ஷித்.

ஒரு ஆரம்பப் பள்ளி மாணவனுக்கு உயர்கல்விப் படிப்பிலுள்ள ஒரு சூத்திரத்தை விளக்குவதுபோல, மஹான்களுக்கே இது கடினமான செயலாகும்.‌

சுகப்ரும்மம் சிரித்தது.
தன்னைப்பற்றியே எப்படி விளக்குவது என்று யோசித்ததோ என்னவோ. ஆனால் ப்ரும்மத்தைப் பற்றி ப்ரும்மத்தை உணர்ந்தவர், ப்ரும்மமாகவே இருப்பவர் கூறுவதுதானே பொருத்தம்? அதுதானே விளங்கும்? எட்டாத உயர்ந்த ஆனந்த அனுபவத்தில் திளைக்கும் ஸ்ரீ சுகர், பரீக்ஷித்தின்பாலிருந்த கருணையால் தன்னை மிகவும் இறக்கிக்கொண்டு வாய் திறந்து பேச வந்தார். இப்போது ப்ரும்மம் பற்றிய விளக்கமும் சொல்கிறார்.

பகவான் ஜீவன்களுக்கு இன்பங்களை நுகரப் புலன்களைத் தந்திருக்கிறார். அவற்றை அனுபவிக்க மனத்தைக் கொடுக்கிறார். பின்னர் கர்மாக்களைச் செய்ய புத்தியைக் கொடுக்கிறார்.
முக்தி பெறுவதற்கு ஒரு மார்கமாக அமைவதற்காக ப்ராணனைக் கொடுக்கிறார்.

புத்தி முதலியவற்றால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் பெறவேண்டும். உடலின் சுகங்களை அனுபவித்து, படைப்பின் சங்கிலியைத் தொடரச் செய்து, கர்மங்களைச் செய்துகொண்டே வந்து, பின்னர் அனைத்தும் அழியும் தன்மையுடையவை என்ற ஞானத்தைப் பெற்று, ஆன்மாவை உணர்ந்து, தளைகளை அறுத்து முக்தி பெறுவது ஒரு வகை.

மற்றொரு வகை யாதெனில், புலன்களின் மூலமாக மஹாவாக்கியங்களின் பொருளைக் கேட்டு, மனத்தால் பலமுறை சிந்தித்து, பின்னர் புத்தியால் ஆராய்ந்து, ப்ரும்ம ஸாக்ஷாத்காரம் அடைவது.

நிர்குணமாக இருக்கும் ப்ரும்மம், படைக்கும்போது, மாயையின் துணையுடன் ஸத்வ குணத்தை ஏற்கிறது. அந்தக் கணத்தில் வேதங்கள் துதி செய்வதால் அது குணங்களை வர்ணிக்கிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 546

கண்ணன் விருந்துண்டபின்பு அவனது சரணங்களைப் பிடித்துக்கொண்டு பேசினார் ச்ருததேவர்.

தெரிந்தும் மறைந்தும் விளங்கும் பரம்பொருளான தாங்கள் என் கண்களுக்குப் புலப்படுகிறீர்கள். மூன்று குணங்களால் இவ்வுலகைப் படைத்து அதற்குள் ஸத் என்னும் சைதன்ய சக்தியாக உள் நுழைந்தீர்கள். அப்போது முதல் காணும் அனைத்துப் பொருள்களிலும் உமது அழகிய உருவம் தெரிகிறது.

உறங்கும் மனிதன் மாயையில் மயங்கி கனவில் வேறொரு உலகைப் படைத்து அதில் தானும் புகுந்து ஏதேதோ செயல்களைச் செய்கிறான். அதைப் போலவே தாங்கள் படைத்த உலகில் தாங்களே புகுந்து பற்பல காரியங்களைச் செய்கிறீர்கள்.

தங்கள் கதைகளைக் கேட்டு, பாடி, அதையே பேசிக் கொண்டிருப்பவர்களின் மனத்தில் உறைபவரே. உலகியலில் மாட்டிக்கொண்டு உழல்பவர்க்கு அருகிலேயே இருந்தும் தொலைவிலிருப்பதாகத் தெரிகிறீர்கள். தம் கதையைக் கேட்பவர் மற்றும் பாடுபவரின் உள்ளம் பண்படுகிறது. அவர்கள் தங்களை வெகு அருகிலிருப்பவராக உணர்கிறார்கள்.

ஆன்மாவை உணர்பவர்க்கு முக்தியளிக்கிறீர்கள். உடலையே ஆன்மா என்று எண்ணுபவர்க்கு காலனாய் நின்று மரணத்தை அளிக்கிறீர்கள்.

மாயையாகிய திரையைப் போடுபவர் தாங்களே. ஆதலால் உங்களை மயக்காமல், அது மற்றவர்க்கு தங்களை மறைக்கிறது. தங்கள் தரிசனம் பெற்ற ஒருவனுக்கு உலகியலால் துன்பமில்லை. நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்றார் ச்ருததேவர்.

கண்ணன் அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டான்.

அந்தணரே! இந்த முனிவர்கள் உங்களுக்காகத் தான் வந்துள்ளனர். இவர்களது பாத தூளியால் இப்புவனமே தூய்மையுறுகிறது. அதற்காகவே என்னுடன் சுற்றுகிறார்கள். 

தேவர்களும், புண்ணிய க்ஷேத்ரங்களும் தீர்த்தங்களும் தொடர்ந்து பலகாலம் வழிபடுவதாலேயே பலனளிக்கின்றன. ஆனால் சான்றோர்கள் தங்கள் பார்வையாலேயே தூய்மை செய்துவிடுகிறார்கள்.

தவமும், நற்கல்வியும், மனநிறைவும் கொண்ட அந்தணன் மிகவும் உயர்ந்தவன். எனக்கு மிகவும் பிரியமானவன். வேதங்களின் நடமாடும் கோவிலாக விளங்குபவன் அந்தணனே. வேதமே என் சுவாசம். இதை உணராத மக்கள் ப்ரதிமைகள் மட்டுமே தெய்வம் என்றெண்ணி குருவான என்னையும் என் ஆன்மாவான அந்தணர்களையும் மதிப்பதில்லை.

அசைவதும் அசையாததுமான இவ்வுலகம், அதன் செயல்கள், அதன் மூலகாரணமான ப்ரக்ருதி, மஹத் முதலிய அனைத்து தத்துவங்களும் என் வடிவமே.

இந்த ப்ரும்மரிஷிகள் அனைவரும் என் வடிவங்களே. இவர்களைக் கொண்டாடுவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதைக் கேட்டு ச்ருததேவன் ரிஷிகளை மீண்டும் பூஜித்தான்.

இவ்வாறு பஹுளாச்வனும், ச்ருததேவனும் கண்ணனையும், சான்றோர்களையும் வழிபட்டு நற்கதியடைந்தனர்.

அவர்களுக்காக சில காலம் கண்ணன் மிதிலையிலேயே தங்கியிருந்துவிட்டு பின்னர் துவாரகை திரும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, August 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 545

கண்ணனின் பாதங்களை மடியில் வைத்து வருடிக்கொண்டே பஹுளாச்வன் செய்த அழகிய ஸ்துதி இதோ.

அனைத்துயிரின் ஆன்மாவாக விளங்குபவரே! சாட்சிபூதரே! ஸ்வயம் ப்ரகாசரே! உமது திருவடிகளையே எண்ணிக்கொண்டிருந்த எனக்கு தயை செய்த ப்ரபுவே! என் முன் தானே வந்து காட்சியளித்த தெய்வமே!

தன்னிடம் பக்தி கொண்டவனை விடவும் தனக்கு திருமகளோ, ஆதிசேஷனோ, ப்ரும்மாவோ கூட நெருங்கியவரில்லை என்பதை மெய்ப்பிக்க இன்று என் இல்லம் தேடி வந்தீரா?

இவ்விஷயத்தை அறிந்த எவரேனும் தம்மை ஒதுக்குவரா?

மக்களைப் பிறவிச் சுழலினின்று காக்க தாங்கள் யது வம்சத்தில் பிறந்தீரா?

குறைவற்ற ஞானரூபரே! உமக்கு நமஸ்காரம். பத்ரியில் நாராயணராக விளங்குபவரே உமக்கு நமஸ்காரம்!
பகவான் கண்ணனே! உமக்கு நமஸ்காரம். எங்கும் நிறைந்த தாங்கள் தங்களுடன் வந்த ரிஷிகளுடன் சில நாள்கள் என் மாளிகையில் தங்கவேண்டும். 

இவ்வாறு பஹுளாச்வன் அன்பாக வேண்டினான். அவன் சொல்லைத் தட்ட முடியாமல் கண்ணன் அங்கு சிலகாலம் தங்கினான்.

அங்கே ச்ருததேவர் வீட்டிற்கு மற்றொரு உரு எடுத்துச் சென்ற கண்ணன் தன்னுடன் வந்த முனிவர்களுக்கும் மற்றொரு உரு வழங்கி அழைத்துச் சென்றான்.

அவர்களைக் கண்டதும் விழுந்து விழுந்து வணங்கிய ச்ருததேவர், பெருமகிழ்ச்சியால் தன் வஸ்திரங்களை வீசிக்கொண்டு வீதியிலேயே நடனமாடத் துவங்கினார்.

பாய்கள் பலகைகள் எல்லாவற்றையும் எடுத்து வந்து போட்டு அவர்களை அமரச் செய்து அனைவரின் பாதங்களையும் தூய நீரால் சுத்தம் செய்து தலையில் தெளித்துக்கொண்டு மனைவிக்கும் தெளித்தார்.

மஹாபாக்யவானான அவர் மகிழ்ச்சியினால் அடிக்கடி தன்னை மறந்து காரியங்களை மாற்றி மாற்றிச் செய்து கொண்டிருந்தார்.

பழங்கள், சந்தனம், விளாமிச்சை மணமிக்க நீர், துளஸி, தர்ப்பை, தாமரை மலர்கள் போன்ற சுலபமாகக் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு விமரிசையாகப் பூஜை செய்தார். இனிய சுவை மிக்க ஸத்வ உணவு வகைகளை அவர்கட்குப் படைத்தார்.

இல்லறமாகிய பாழுங்கிணற்றில் விழுந்து அல்லாடும் எனக்கு இத்தகைய உயர்ந்த பேறு எப்படிக் கிடைத்தது என்று எண்ணி எண்ணி மறுகினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, August 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 544

சுபத்ரையின் திருமணக் கதையைக் கூறிய ஸ்ரீ சுகாசார்யார் மேலும் தொடர்ந்தார். 

மிதிலா நகரத்தில் ச்ருததேவர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் கண்ணனின் பக்தராவார்.‌ ஆடம்பர வாழ்வில்லாவிட்டாலும் அவர் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் அவருக்குக் கிடைத்தது. மிகவும் நிறைவான குறைகளற்ற வாழ்வு அவருடையது. கண்ணனின் பக்தர்க்கேது குறை?

மிதிலா தேசத்தின் அரசரான பஹுளாச்வன் மிகவும் புகழ் பெற்றவன். அகந்தையின்றி நல்லாட்சி புரிந்துவந்தான். அவனும் கண்ணனிடம் மாறாத பக்தி கொண்டிருந்தான்.

அந்தர்யாமியான கண்ணன் பக்தரின் உள்ளம் அறியானா? அவர்கள் இருவருக்கும் தரிசனம் அளிக்க விரும்பினான். 

நாரதர், வாமதேவர், அத்ரி வியாஸர், பரசுராமர், அஸிதர், அருணர், ப்ருஹஸ்பதி, கண்வர், மைத்ரேயர், சியவனர் மற்றும் நான் எல்லோரையும் அழைத்துக்கொண்டு கண்ணன் மிதிலையை நோக்கிப் புறப்பட்டான். வழியெங்கும் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் ஒன்றுகூடி கண்ணனைப் பூஜை செய்தனர்.

ஆனர்த்தம், தன்வம், குருஜாங்காலம், கங்கம், மத்ஸ்யம், பாஞ்சாலம், குந்தி, மது, கேகயம், கோசலம், அர்ணம் முதலிய நாடுகளைக் கடந்து சென்றோம். எல்லா நாடுகளிலும் மக்கள் தேடிவரும் கண்ணனின் தாமரை முகத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டனர். 

அவர்களது அறியாமை இருள் அகலும் வண்ணம் கண்ணன் அவர்களுக்கு அபயம் அளித்துக்கொண்டே வந்தான். எங்களுடன் இணைந்துகொண்டு பலர் உடன் வந்தனர் மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. 

விதேக தேசத்தினுள் நுழைந்தோம். அந்த தேசத்தின் மக்கள் அனைவரும் கண்ணனின் புகழைக் கேட்டிருந்தபடியால், பூஜைப் பொருள்களை எடுத்து வந்து வழிபட்டனர். இதுவரை அவர்கள் கண்டிராத முனிவர்களையும் நன்கு உபசரித்தனர். 

விதேகத்தின் தலைநாகரான மிதிலையின் எல்லையில் பஹுளாச்வன் வந்து வரவேற்றான். அனைவரையும் தன் இல்லுக்கு விருந்தேற்க அழைத்தான்.

கண்ணன் ச்ருததேவன் வீட்டிற்கும் செல்ல விரும்பியதால் இரு வடிவங்கள் எடுத்துக் கொண்டான். பஹுளாச்வன் அறியாத வண்ணம் ச்ருததேவன் வீட்டிற்கும், ச்ருததேவனுக்குத் தெரியாமல் பஹுளாச்வன் வீட்டிற்கும் ஒரே நேரத்தில் இரண்டு வடிவங்களுடன் சென்றான்.

தீயோர்களின் செவிகட்கெட்டாத திருப்பெயர் கொண்ட கண்ணனையும், முனிவர்களையும், பஹுளாச்வன் உயர்ந்த ஆசனங்களில் அமர்த்தி முறைப்படி பூஜை செய்தான். அனைவரின் திருவடிகளையும் நீரால் சுத்தம் செய்து அந்நீரைக் குடும்பத்துடன் தலையில் ஏற்றான்.

அனைவர்க்கும் சந்தனம், தூபம், தீபம், பூமாலைகள் சமர்ப்பித்து காணிக்கைகளை அளித்தான்.

விருந்துண்ட பின் அனைவரும் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தான். கண்ணன் அருகே சென்று உலகளந்த அவனது தாமரைத் திருவடிகளைத் தன் மடிமீது எடுத்து வைத்துக்கொண்டு வருடிக்கொண்டே மிகவும் மென்மையான குரலில் கண்ணனைத் துதி செய்யலானான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, August 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 543

பரீக்ஷித் கேட்டார். 
மஹரிஷி! என் பாட்டியான சுபத்ரைக்கும், தாத்தாவான அர்ஜுனனுக்கும் எப்படித் திருமணமாயிற்று? அதை விவரமாகக் கூறுவீர்களா? என்றார்.

ஸ்ரீ சுகர் பதில் கூறலானார். ஒரு சமயம் உன் தாத்தா அர்ஜுனன் ப்ரபாஸ தீர்த்தத்திற்கு யாத்திரையாகச் சென்றார்.

அங்கே தன் மாமன் வசுதேவரின் மகள் சுபத்ராவை துரியோதனனுக்கு மணம் செய்துவிக்க பலராமன் நிச்சயித்திருப்பதைக் கேள்வியுற்றார். ஆனால் வசுதேவருக்கும் கண்ணனுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதையும் அறிந்தார். சுபத்ராவைத் தான் மணக்கலாம் என்ற ஆசை வந்ததும், ஒரு சன்யாசி வேடம் தரித்து துவாரகை சென்றார்.

அப்போது சாதுர்மாஸ்யம் வந்ததால் அக்காலம் முழுவதும் துவாரகையில் தங்கினார். அவரை அடையாளம் காணாத பலராமனும் நகர மக்களும் நன்கு உபசரித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

ஒருநாள் பலராமன் அர்ஜுன ஸன்யாசியை பிக்ஷைக்கு அழைத்தார். அப்போது சுபத்ரையைக் கண்டதும் அர்ஜுனனின் காதல் பெருகிற்று. அவரை சுபத்திரை அடையாளம் கண்டுகொண்டாள். கண்டவுடன் காதல் கொள்ளும் வசீகரம் பெற்ற அர்ஜுனனின் அழகில் மயங்கினாள்.

இருவரும் திருமணம் பற்றிப் பேச தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தனர்.

ஒரு நாள் தேர்த் திருவிழாவிற்காக அரண்மனையை விட்டு சுபத்ரை வெளியே வந்தாள். அவ்வமயம் வசுதேவர், தேவகி மற்றும் கண்ணன் மூவரும் சம்மதிக்க அவளைத் தேரிலேற்றிக் கவர்ந்து சென்றார்.
தாக்க வந்த அத்தனை படைவீரர்களையும் அடித்து விரட்டினார்.

அதைக் கண்டு பிரளய காலக் கடலைப் போல் கோபத்தால் பொங்கினார் பலராமன்.
கண்ணன் அவரது திருவடிகளில் விழுந்து சமாதானப் படுத்தி அண்ணனான பலராமனின் கோபத்தை அடக்கினான்.

பெரியவர்களின் கோபத்தை சமாதானப்படுத்தும் வழியை எவ்வளவு அழகாகச் சொல்லித் தருகிறான்.

பின்னர் பலராமன் தங்கையின் மேலிருந்த பாசத்தால் மகிழ்வுடன் ஏராளமான சீர் வரிசைகளையும், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை அனுப்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 542

தான் வசிக்கும் ஸுதல லோகத்திற்கு எழுந்தருளிய கண்ணனையும் பலராமனையும் வணங்கி பலி துதித்தார்.

உலகைத் தாங்கும் பலராமரே! உமக்கு நமஸ்காரம். உபநிடதங்கள் கொண்டாடும் பரம்பொருளே உமக்கு நமஸ்காரம். காண அரிதான காட்சி எனக்கு இன்று கிட்டியது. ரஜோ குணமும் தமோ குணமும் நிரம்பிய எங்களுக்கு தங்களது தரிசனம் மிகவும் அரியதாகும். தைத்யர்கள், தானவர்கள், ஸித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், யக்ஷ கின்னரர்கள், ராட்சசர்கள், பிசாசர்கள், ஆகிய பலரும் சுத்த ஸத்வ வடிவமாகிய தங்களிடம் விரோதம் பாராட்டுபவர்களே.

ஆனால் சிசுபாலன் போன்றோர் பகையாலும் ப்ரஹலாதன் முதலியோர் பக்தியாலும் தங்கள் ஸாயுஜ்யத்தை அடைந்துள்ளனர். ஸத்வ குணம் படைத்த தேவர்கள் தங்கள் அருகிலேயே இருந்தும் ஸாயுஜ்ய பதவியைப் பெறுவதில்லை.

ஐயனே! எனக்கு எப்போதும் தங்களது திருவடி தியானம் வேண்டும். மன நிம்மதி தருவது தங்கள் சரணங்களே. தங்கள் உபதேசங்களை ச்ரத்தையுடன் பின்பற்றுபவன் கர்மாக்களிலிருந்து விடுதலை பெறுகிறான். தாங்கள் எங்கள் பாவங்களைப் போக்கியருளுங்கள். என்றார். 

பலியின் உபசரிப்பில் மிகவும் மகிழ்ந்த கண்ணன் பேசத் துவங்கினான். 

ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் மரீசி என்ற மஹரிஷிக்கும் ஊர்ணை என்பவளுக்கும் ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் ப்ரும்மாவைப் பரிஹாசம் செய்தனர். அச்செயலால் சபிக்கப்பட்டு ஹிரண்யகசிபுவின் மகன்களாக அசுரர்களாகப் பிறந்தனர்.

பின்னர் அவர்கள் யோகமாயையால் கொண்டுவரப்பட்டு தேவகியின் வயிற்றில் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டனர். அவ்வறுவரையும் எண்ணி தேவகி மாதா கலங்குகிறாள். இதோ உங்கள் பக்கத்தில் நிற்கிறார்களே. இவர்கள்தான் அந்த அறுவர். எங்கள் தாயின் துயரம் நீங்க, நாங்கள் இவர்களை அழைத்துச் செல்கிறோம். பின்னர் சாபம் நீங்கபெற்று தேவலோகம் செல்வார்கள்.

ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், க்ஷுதப்ருத், க்ருணி என்ற அறுவரும் என்னால் நற்கதியடைந்து முக்தி பெறுவர்
என்றான்.

பலி சம்மதிக்க அவர்களை அழைத்துக்கொண்டு துவாரகை வந்தனர் கண்ணனும் பலராமனும்.

தேவகி தன் புத்திரர்களைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டாள். அவளுக்குப் பால்‌ சுரந்தது. தன் மக்கள் அறுவரையும் தன் பாலைக் குடிக்கச் செய்தாள் தேவகி. அதை உண்டதும் அவர்களுக்கு ஞானம் சித்தித்தது. அனைவரும் பார்க்க அவர்கள் அங்கிருந்து கிளம்பி தேவலோகம் சென்றனர்.

தேவகி அனைத்தையும் கண்ணனின் மாயையென்று நினைத்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

ஸ்ரீமத் பாகவத பழம் - 540

வசுதேவரால் ரித்விக்குகளாக முறைப்படி வரிக்கப்பட்ட ரிஷிகள், சிறந்த முறையில் ஒரு யாகத்தை நடத்திக் கொடுத்தனர்.

அனைவரும் உறவுகளுடன் புத்தாடை ஆபரணங்கள் அணிந்து விளங்க தேவலோகத்தில் நடக்கும் யாகம் போல் இருந்தது அக்காட்சி.

வசுதேவர் ரிஷிகளுக்கு ஏராளமான தக்ஷிணை கொடுத்தார். வந்திருந்த அரசர்களை நன்கு கௌரவித்து பரிசுகள் கொடுத்தார்.

அனைவரும் வேள்வியைப் புகழ்ந்து கொண்டே தத்தம் இருப்பிடம் சென்றனர்.

எல்லாரும் கிளம்பியதும் வசுதேவர் நந்தகோபரை ஆரத் தழுவிக்கொண்டார். பிரியா விடை கொடுத்தார். 

பாசத்தை வெல்ல எவராலும் இயலாது. செய்நன்றி மறந்த எங்களிடம் தாங்கள் காட்டும் பாசம் மிக உயர்ந்தது. கைம்மாறு செய்ய இல்லாதது. என்றார் வசுதேவர்.

நந்தர் மேலும் ஒருநாள் தங்கிவிட்டு பின்னர் கிளம்பி மதுரா சென்றார்.

கண்ணனுடன் அனைவரும் துவாரகை திரும்பினர். அனைவரும் வெகு நாள்களுக்கு இந்தக் கதைகளைப்‌ பேசிக்கொண்டிருந்தனர்.

வசுதேவர் முனிவர்களின் உபதேசத்தால் சித்தம் தெளிந்து கண்ணனை வணங்கித் துதித்தார்.

கபிலர் தேவஹூதிக்கு வழங்கியதைப் போல கண்ணன் வசுதேவருக்கு ப்ரும்ம ஞானத்தை அருளினான்.

அப்போது தேவகி கண்ணன் தன் குருவின் இறந்த பிள்ளையை மீட்டுத் தந்தான் என்று கேள்வியுற்று மிகவும் வியப்படைந்தாள். அவளும் தாயல்லவா. தன் இறந்த குழந்தைகளை நினைத்து மிகவும் வருந்தினாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 541

கண்ணன் சாந்தீபனியின் இறந்த பிள்ளையை மீட்டுத் தந்த விஷயத்தை தேவகி அப்போதுதான் கேள்வியுற்றாள் போலும். அவள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது. கம்சனால் கொல்லப்பட்ட தன் ஆறு புதல்வர்களை எண்ணினாள். 

அவர்கள் இருந்திருந்தால் கண்ணனுக்கு ஏழு அண்ணன்கள் இருந்திருப்பார்களே. 

கண்ணன் பிறக்கும்போதே கம்சனால் ஆபத்து இருந்தது என்று பார்த்தால், வளர்ந்த பின்னும் ஒவ்வொரு நாளும் அசுரர்கள் தொடர்ந்தனர். கம்சனின் அழிவுக்குப் பின்னரும் யாராவது ஒரு அரசன் அல்லது அசுரன் மூலம் கண்ணனுக்கு ஆபத்து வந்துகொண்டுதான் இருக்கிறது. பலகாலம் வாழ்ந்த மதுராவை விட்டு துவாரகை வந்து அப்பப்பா..

ஆறு அண்ணன்களும் இருந்திருந்தால் தம்பியான கண்ணனுக்கு அரணாய் இருந்திருப்பார்களே. எந்தப் போர் வந்தாலும் இவன் ஓடவேண்டாம். 

பெற்ற குழந்தைகளுக்கு ஒரு வேளை பாலூட்டக்கூட இயலாமல் போனதே.

எண்ணி எண்ணி நெஞ்சம் விம்மினாள். தாயின் வருத்தமதைத் தனயன் அறியானா?

அன்னையைக் காண வந்தான். 

இறந்த குழந்தைகளைக் கேட்பது விதிக்கு விரோதமல்லவா..
குருவென்பதால் குழந்தையை மீட்டான். தன் சகோதரர் என்றால் என்ன சொல்வானோ என்று யோசித்தாள். எனவே 
மெதுவாக தயங்கி தயங்கிக் கேட்டாள் தேவகி.

கண்ணா! நீயும் பலராமனும் உலகின் பாரம் நீக்கத் தோன்றியவர்கள். உலகின் தலைவர்கள். அசுரர்களை அழிப்பதற்காகவே வடிவம் எடுத்தீர்கள்.

உன் ஆற்றலின் சிறு வடிவமே மாயை. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவற்றைத் தன்னிச்சையாகச் செய்கிறாய். உன்னை முழுமையாகச் சரணடைந்தேன்.

குருதட்சிணை செலுத்த குருதேவர் சாந்தீபனியின் புதல்வனை எமலோகத்திலிருஎது மீட்டு வந்தாயல்லவா? அதேபோல என் விருப்பத்தையும் நிறைவேற்றுவாயா? கம்சனால் கொல்லப்பட்ட என் ஆறு புதல்வர்களையும் நான் மீண்டும் ஒருமுறையாவது காண விரும்புகிறேன்‌. என்றாள்.

உதரத்தில் சுமந்த தாயின் கண்ணீரைத் துடைக்க எண்ணினான் கண்ணன். அவன் நினைத்தால் ஆகாததென்ன? 

பலராமனையும் அழைத்துக்கொண்டு ஸுதலலோகம் சென்றான். 

அங்கே தலைவனாக கொலுவிருப்பது பரம பக்தனான பலிச் சக்ரவர்த்தி. தன் லோகத்திற்குக் கண்ணன் வந்திருப்பதை அறிந்து ஓடோடி வந்தான். மனைவி மக்களுடன் தடியைப்போல் விழுந்து வணங்கினான்.

கண்ணனையும் பலராமனையும் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி, பாத பூஜை செய்தான். 

ப்ரும்மா முதல் அனைத்து தேவர்களும் ரிஷிகளும் தலையில் தரிக்கின்ற பாத தீர்த்தத்தை மனைவி மக்களுக்குத் தெளித்து தானும் சிரசில் ஏற்றான்.

உயர்ந்த காணிக்கைகளைக் கொண்டு வந்து திருவடிகளில் ஸமர்ப்பித்து நா தழுதழுக்க கண்ணீர் மல்கத் துதி செய்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, August 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 539

வசுதேவர் முனிவர்களை வணங்கிக் கேட்டார்.
 In 
அனைத்து தெய்வங்களின் வடிவங்களும் தாங்களே. கர்மாக்களைச் செய்வதே வினை தீரும் வழி. எவ்வெந்தக் கர்மாக்கள் வினைகளைத் தீர்க்கவல்லவை?
தயை கூர்ந்து தெளிவுபடுத்துங்கள் என்றார்.

நாரதர் பதில் கூறலானார்.

முனிச்ரேஷ்டர்களே! இதுவல்லவோ வியப்பு! இந்த வசுதேவரைப் பாருங்கள். ஸாக்ஷாத் பகவானான கண்ணனைக் குழந்தையென்று எண்ணிக்கொண்டு நம்மிடம் வினை தீரும் வழியைக் கேட்கிறார்.

கங்கைக் கரையிலேயே குடிலமைத்து வசிப்பவன் ஸ்நானத்திற்கு வேறு நதியைத் தேடிச் செல்வதுபோலிருக்கிறது. கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கலைவதுபோல் இருக்கிறது. அருகிலேயே இருப்பதால் அருமை தெரியவில்லை.

கண்ணன் காலத்தால் மாறாதவர். வெவ்வேறு சரீரம் எடுப்பதால் பகவானது அனுபூதி தேய்வதில்லை. எந்தக் காரணங்களாலும் அழிவென்பதே இல்லாதவர்.

பகவானின் திருமேனி ஞான மயமானது. அறியாமை, துவேஷம், விருப்பு, வெறுப்பு, ஈடுபாடு ஆகியவை, அவற்றால் வரும் துன்பங்கள், பாவ புண்ணியங்கள், ஆகியவற்றால் பாதிக்கப்படாதது.

தன் சக்திகளால் 
தன்னைத்தானே மறைத்துக்கொள்கிறார். அறிவிலிகள் அவரை மனிதன் என்றெண்ணுகின்றனர். கிரஹணத்தால் சூரியன் மறைக்கப்படுவதுபோல் மறைந்திருக்கிறார்.
என்றார்.

பின்னர் கண்ணன், பலராமன், மற்ற அரசர்கள் அனைவரின் முன்னிலையில் முனிவர்கள் வசுதேவரை அழைத்து,

பகவான் விஷ்ணுவை வேள்விகளால் ஆராதிப்பதே கர்மத்தைக் கொண்டு கர்மாவை அழிக்கும் வழியாகும்.

இவ்வழி மனத்திற்கு அமைதி தரவல்லது. முக்தியும் கிடைக்கும். அரச வம்சத்தினரின் கடைமையும் ஆகும். 

இல்லறத்திலுள்ளவர்க்கு அறநெறி தவறாமல் வாழ்வதும், தூய்மையான வழியில் ஈட்டிய பொருளைக்கொண்டு பகவானை வழிபடுவதும் நன்மை பயக்கும் வழிகளாகும்.

வேள்விகளைச் செய்து பொருளின் மேலுள்ள ஆசையைத் துறக்கவேண்டும். மனைவி மக்கள் மீது கொண்ட பற்றையும் துறந்து இல்லறத்தில் இருந்துகொண்டே ஸத்காரியங்களைச் செய்து பின்னர் வனத்திற்கு ஏகவேண்டும்.

தேவ, ரிஷி, பித்ரு கடன்கள் இருபிறப்பாளர்களான மாந்தர்க்கு உண்டு. வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், மக்களைப் பெறுதல் ஆகிய கர்மங்கள் கடன்களை அடைக்கும் வழிகளாம்.
 வசுதேவரே! நீங்கள் ரிஷிகளின் கடனையும், பித்ருகடனையும் தீர்த்து விட்டீர். இனி தேவர்க்கான கடனைத் தீர்க்க முயலுங்கள். தேவர்களைத் திருப்தி செய்ததும் வானப்ரஸ்தம் ஏகி முக்தி பெறலாம். 

தாங்கள் செய்த அளவற்ற புண்ணியத்தின் காரணமாகவே பகவான் தங்களுக்கு இரண்டு வடிவங்களில் மகன்களாகப் பிறந்துள்ளார்

என்றனர். அவர்களை வணங்கிய வசுதேவர் அவர்களையே யாகம் நடத்திக் கொடுக்கும் ரித்விக்குகளாக இருக்கும்படி வேண்டினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

Wednesday, August 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 538

முனிவர்கள் கண்ணனைத் துதித்தனர்.

ப்ரபோ! ப்ரஜாபதிகளுக்கும் மேலாக எங்களை நினைத்துக் கொண்டிருக்கிற நாங்கள் அனைவரும் தங்களது மாயையில் மயங்கியவர்களே ஆவோம்.

 வேதங்களாலேயே இதுதான் என்று காட்ட இயலாத பரம்பொருளே! தங்களது அனைத்து வைபவங்களையும் மறைத்துக்கொண்டு ஒரு சாதாரண மனிதனைப்போல் லீலை புரிகிறீர்களே! இது மாபெரும் விந்தையாகும். செடி, கொடி, கல், எனப் பெயர்கள் பல பெற்றிருந்தபோதும் அனைத்தும் நிலத்தின் பரிமாணங்களே.

அனைத்திற்கும் காரண வஸ்துவாக விளங்கும் தாங்கள் பற்பல திருவுருவங்களையும், திருநாமங்களையும் ஏற்று தங்கள் விருப்பம் போல் இவ்வுலகைப் படைத்து காத்து அழிக்கிறீர்கள்.

 தங்களுக்கு தான், உங்களைச் சேர்ந்தவர், பிறர், பகை கொண்டவர் என்ற வேறுபாடுகள் இல்லை. எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கிறீர்கள். 
ப்ரும்மஸ்வரூபமாக இருப்பினும் பக்தரைக் காக்கவும், தீயோரை மாய்க்கவும் ஸத்வகுணமேற்றுத் திருமேனி தாங்குகிறீர்கள்.

சாஸ்திரங்கள் மூலமாகத் தங்களை உணரலாம். சாஸ்திரங்களுக்கு அச்சாணியாக விளங்குபவர் அந்தணர்கள். ஆகவேதான் நீங்கள் அந்தணர்களை மதிக்கிறீர்கள்.

இன்று எங்கள் பிறப்பும், கல்வியும் பயனுற்றன. அடையவேண்டிய பொருள் தாங்களே.

மேலான குணங்கள் நிறைந்தவரும், பூரண ஞானமுள்ளவரும், யோகமாயையால் தன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டவரும், பரமாத்மாவுமான தங்களை வணங்குகிறோம். 

கால வடிவினரான தங்களை, தங்களுடன் எப்போதும் தங்கி உண்டு உறங்குபவர்களும் கூட அறிவதில்லை.

மாயையினால் மனம் மயங்கிய ஜீவன், மனக்கலக்கத்தால் தங்களைப் பற்றிய உண்மைகளை மறந்து தங்களை உணரும் சக்தியையும் இழக்கிறான்.

எல்லா விதமான பாவங்களையும் களையும் கங்கையின் தோற்றுவாய் தங்கள் திருவடிகளே. யோகிகள் அவற்றை ஹ்ருதயத்தில் காண்கிறார்கள். நாங்கள் இப்போது நேராகக் காணப்பெற்றோம். தங்களையே அண்டியுள்ள எங்களுக்கு அருள் புரிவீராக 
என்றனர்.

முனிவர்களின் வேண்டுதலைக் கேட்ட கண்ணன் கள்ளச் சிரிப்பொன்றை உதிர்த்து ஆமோதித்து அவர்களுக்கு விடை கொடுத்தான்.

பகவானின் திருவுள்ளத்தை அறிந்து அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பிய முனிச்ரேஷ்டர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களின் திருவடிகளில் விழுந்தார் வசுதேவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 537

ஸமந்த பஞ்சகத்தில் கண்ணனையும் பலராமனையும் தரிசனம் செய்வதற்காகப் பல முனிவர்கள் வந்தனர். 

வியாஸர், நாரதர், சியவனர், தேவலர், அஸிதர், விஸ்வாமித்திரர், சதானந்தர், பரத்வாஜர், கௌதமர், பரசுராமர், பகவான் வஸிஷ்டர், காலவர், ப்ருகு, புலஸ்தியர், கச்யபர், அத்ரி, மார்க்கண்டேயர், பிருஹஸ்பதி, ஏகதர், த்விதர், த்ரிதர், ஸனகாதிகள், ஆங்கீரஸ், யாக்ஞவல்க்யர், வாமதேவர் இன்னும் பல முனிவர்கள் அங்கு குழுமினர்.

பாண்டவர்களும், வஸுதேவரும், க்ருஷ்ணனும் அவர்கள் அனைவரையும் வரவேற்று வணங்கினர். அவர்களுக்கு ஆசனம், பாத்யம், அர்க்யம், மாலை, தூப தீபங்கள், சந்தனம் ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தனர். 

அந்த அறிஞர் சபையில் கண்ணன் பேசத் துவங்கினான்.

மஹரிஷிகளே! அனைவர்க்கும் வணக்கங்கள். நாங்கள் பிறந்த பயனை இன்று பெற்றோம்‌. இறைவனின் தரிசனம் கூட ஒருவனுக்குக் கிட்டிவிடும். ஆனால் ஸாதுக்களின் தரிசனம் சுலபத்தில் கிடைக்காது.

அனைத்து உயிர்களிலும் இறைவன் நிறைந்திருப்பதை ஒருமுகமாய்க் காணாமல் உலகியலில் உழலும் அறிவிலிகளுக்கு புகலிடம் தங்களின் திடுவடிகளே ஆகும். தங்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கிடைத்தால் போதும். அந்த ஜீவன் கரையேறிவிடும். ஆனால் அது கிடைப்பது துர்லபம்.

எல்லா நதிகளும், நீர்நிலைகளும் புண்யதீர்த்தங்களாகா. எல்லா தெய்வச் சிற்பங்களும் வழிபடத் தக்கவையன்று. ஸாந்நித்யம் உள்ள சிற்பங்களே கருவறை நிறைக்கும். அவையும் தொடர்ந்து வழிபடுவதாலேயே மனத்தூய்மை தருகின்றன.

உண்மையில் மஹான்களே வழிபடத் தக்கவர்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் நமது உடலும் மனமும் தூய்மையடைகின்றன.

அக்னி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, ஜலம், ஆகாயம், வாயு ஆகியவை தொடர்ச்சியான வழிபாட்டினால் பலனளிக்கக் கூடியவை. அவற்றால் பேதபுத்தி நீங்குவதில்லை. அஞ்ஞானம் அழிவதில்லை.

வாதம், பித்தம், கபம் ஆகியவற்றாலான இவ்வுடலை ஆத்மா என்றும் பொருள்களையும் உறவுகளையும் என்னுடையது என்றும் எண்ணுபவன் அறிவிலியாவான். 

என்றான்.

தாங்கள் பகவானை வணங்கலாம் என்று வந்தால் அவன் இவ்வாறு நம்மை உயர்த்திப் பேசுகிறானே என்று குழம்பினார்கள் முனிவர்கள். பகவானின் உள்ள்ளக் கருத்தை அறியாததால் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். பின்னர், அவன் உலகோர்க்கு ஸாதுக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை உபதேசிப்பதற்காக இவ்வாறு பேசுகிறான் என்று தெளிவுற்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, August 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 536

கோசல ராஜகுமாரியான ஸத்யா தன்னைக் கண்ணன் கரம் பிடித்த விதத்தை விளக்கினாள்.

என் தந்தை கூரிய கொம்புகளும் அளப்பரிய வலிமையும் உடைய ஏழு காளைகளை வளர்த்துவந்தார். அவைகளை அடக்குபவர்க்கே என்னைத் திருமணம் செய்து கொடுப்பதாக நிபந்தனை வைத்து சுயம்வரம் வைத்தார். பகவான் கண்ணன் அந்தக் காளைகளை ஏழு உருவம் எடுத்து ஆட்டுக் குட்டிகளைக் கட்டுவதுபோல் விளையாட்டாக அடக்கிக் கட்டினார்‌. திருமணம் முடித்து, சீர்வரிசையுடன் கிளம்பிய எங்களை வழியில் எதிர்த்த அத்தனை அரசர்களையும் வென்றார். இவ்வாறு என்னை அழைத்து வந்த பகவானுக்கு நான் எப்போதும் அடிமையாக இருக்க விரும்புகிறேன்‌.

பத்ரா கூறத் துவங்கினாள்.

கண்ணன் என் மாமாவின் மகனாவார். இளவயதுமுதலே இவரிடம் நான் காதல் கொண்டிருந்தேன். அதை அறிந்த என் தந்தை தானே அவரை அழைத்து என்னை மணம் முடித்து வைத்தார்‌.
என்னுடைய எல்லாப் பிறவிகளிலும் அவரது திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்றாள்.

லக்ஷ்மணா பேசத் துவங்கினாள். 
எங்கள் அரண்மனைக்கு நாரதர் அடிக்கடி வருவார். கண்ணனின் லீலைகள், அவதாரம் அனைத்தையும் பற்றி அடிக்கடி உபன்யாசம் செய்வார்.

மஹாலக்ஷ்மியே இவரைக் கணவராக வரித்த விஷயங்களை அடிக்கடி கேட்டு நன்கு ஆராய்ந்து நானும் கண்ணனையே காதலிக்கத் துவங்கினேன். இதை அறிந்த என் தந்தை ஒரு ஏற்பாடு செய்தார். திரௌபதி! உன் திருமணத்தில் சுழலும் மீனை வைத்து ஒரு யந்திரம் அமைக்கப்பட்டதல்லவா? அதுபோலவே என் தந்தையும் ஒரு யந்திரம் அமைத்தார். அது கண்ணுக்குப் புலப்படாது. அந்தரத்தில் சுழலக்கூடியது. அதன் பிம்பம் கீழே உள்ள நீரில் மட்டுமே தெரியும். 
அதை அடிப்பவர்க்கே என்னைத் திருமணம் செய்துகொடுப்பதாக அறிவித்து சுயம்வரம் ஏற்பாடு செய்தார். 

எல்லா தேசங்களிலிருந்தும் அஸ்திர சஸ்திர விற்பன்னர்கள், ஆயிரக்கணக்கான அரசர்கள் அனைவரும் வந்தனர். என் தந்தை அனைவரையும் நன்கு உபசரித்தார். வந்திருந்த ஒவ்வொரு வீரரும் என்னை அடையும் ஆசையில் அந்த யந்திரத்தை அடிக்க முற்பட்டனர்‌. ஆனால், சிலரால் வில்லையே ஏந்த இயலவில்லை. சிலர் நாணேற்ற இயலாமல் திரும்பினர். சிலர் நாணேற்றும் தருவாயில் அதைக் கட்ட இயலாமல் வில்லால் அடிபட்டு விழுந்தனர். ஜராசந்தன், அம்பஷ்டன், சிசுபாலன், பீமன், துரியோதனன், கர்ணன் ஆகியோர் வில்லில் நாணேற்றிய போதும் மீன் இருக்கும் இடத்தை அறியாமல் திணறினர்.

அர்ஜுனன் ஒருவரே மீனைக் கண்டார். பெருமுயற்சி செய்து அம்பையும் எய்தார். ஆனால் அம்பு மீனைத் தொட்டுச் சென்றது. அறுத்துத் தள்ளவில்லை.

நிறைய அரசர்கள் அவமானப்பட்டுத் திரும்பினர். பகவான் கண்ணன் விளையாட்டாக வில்லை எடுத்து நாணேற்றி ஒரே ஒரு முறை மீனைப் பார்த்துவிட்டு அபிஜித் வேளையில் யந்திரத்தை அடித்து மீனைக் கீழே தள்ளினார்.

அப்போது ஜெயகோஷம் விண்ணைப் பிளந்தது. தேவர்கள் பூமாரி பெய்தனர்.

நான் மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு ரத்தின மாலையுடன் அரங்கத்தில் வந்து அவருக்கு மாலையிட்டேன். 

அதைக் கண்டதும் பல அரசர்களுக்குக் கோபம் வந்தது. 

பகவான் நான்கு திருக்கரங்கள் கொண்டு வேகமாகச் செயல்பட்டார். என்னை ரதத்திலேற்றிக்கொண்டு கிளம்பினார். சார்ங்கத்தினால் எதிர்த்த அத்தனை அரசர்களையும் துவம்சம் செய்தார். எல்லோரு பார்க்கும்போதே தங்கரதத்தைத் தாருகன் துவாரகைக்கு செலுத்தி வந்து விட்டார்.

பின்தொடர்ந்த அத்தனை அரசர்களையும் கொன்றார். 

என் விருப்பம் நிறைவேறியது கண்ட என் தந்தை மிகவும் மகிழ்ந்து ஏராளமான சீர்வரிசைகளையும், செல்வங்களையும் பக்தியுடன் கண்ணனுக்கு சமர்ப்பித்தார்.

ஆத்மாராமனான கண்ணனுக்கு நாங்கள் பணிப்பெண்ணானதன் காரணம் முற்பிறவிகளில் பற்றுகளை அறுத்து நாங்கள் செய்த தவமே ஆகும். என்றாள்.

மற்ற மனைவிகள் அனைவரும், தன்னிறைவு பெற்ற கண்ணன் எங்கள் அனைவரையும் நரகாசுரனைக் கொன்று விவாஹம் செய்துகொண்டார். 

திக் விஜயத்தில் எங்கள் தந்தையரை வென்று எங்களை சிறைபிடித்து வந்தான் நரகன். கண்ணன் எங்களை விடுவித்ததும் நாங்கள் அவர் மீது காதல் கொண்டதால் திருமணம் செய்துகொண்டார். விருப்பு வெறுப்பற்ற அவர், எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுபவராவார்.

திரௌபதி! இவ்வுலகிலோ, மற்ற லோகங்களிலோ எங்களுக்கு எந்த செல்வமும் வேண்டாம். ப்ரும்மா, இந்திரன் முதலான பதவிகளையும் நாங்கள் விரும்பவில்லை. அணிமா, லஹிமா, முதலிய ஸித்திகளும், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் போன்ற முக்திகளும் கூட வேண்டாம். நாங்கள் எப்போதும் கண்ணனின் திருவடித் தாமரைகளை எங்கள் நெஞ்சில் தாங்குவதையே விரும்புகிறோம். எப்போதும் அந்த திருவடிகளை ஆராதனம் செய்ய விரும்புகிறோம்.

என்றனர்.

கண்ணனின் மனைவிகள் கூறியதைக் கேட்ட குந்தி, காந்தாரி, திரௌபதி, சுபத்திரை, கோபிகள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அனைத்துலகங்களுக்கும் பதியான கண்ணனைக் கணவனாகப் பெற்றும் அவனது மனைவிகள் துளியும் கர்வமின்றி எப்போதும் சரணாகதி செய்யும் நிலையிலேயே இருப்பதைப் பார்த்து அவர்களின் கண்களில் நீர் மல்கிற்று. 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, August 7, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 535

சமந்த பஞ்சகத்தில் கண்ணனின் மனைவிகள் அனைவரையும் சந்தித்து அளவளாவினாள் திரௌபதி.

அஷ்ட லட்சுமிகளான அவர்களை வணங்கிப் பின் அனைவரையும் பார்த்து,

நீங்கள் ஒவ்வொருவரும் கண்ணனை மணந்த வரலாற்றை நீங்களே எனக்குக் கூறுங்கள் என்றாள்.

முதலில் திருமகளான ருக்மிணி திருவாய் மலர்ந்தாள்.

என்னை சிசுபாலனுக்குத் திருமணம் முடிப்பதாக நிச்சயம் செய்துவிட்டார்கள். அப்போது ஜராசந்தன் முதலிய எண்ணற்ற வீரர்கள் எதிர்த்தனர். சிங்கம் ஆட்டு மந்தையிலிருந்து தன் இரையைக் கொண்டுபோவதுபோல, கண்ணன் தனியொருவராக அனைவரையும் வென்று என்னைத் தூக்கிக்கொண்டுவந்தார். அவரது திருவடி எனக்கு எல்லாப் பிறவிகளிலும் கிடைக்கவேண்டும். அவரது சேவை ஒன்றே நான் எப்போதும் விரும்புவது என்றாள்.

ஸத்யபாமா, 
என் சிற்றப்பா இறந்துபட்டதால் பகவான் கண்ணன் மீது பழிச்சொல் பரப்பினார் என் தந்தை. அதைப் போக்க ஜாம்பவானை வென்று ஸ்யமந்தக மணியைக் கொணர்ந்து என் தந்தையிடம் கண்ணன் கொடுத்தார். வீண்பழி பரப்பியதற்காக அஞ்சி பிராயசித்தம் செய்ய எண்ணினார் என் தந்தை. வேறொருவர்க்கு நிச்சயம் செய்திருந்த போதிலும் என்னை பிரபுவான கண்ணனுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டார். என்றாள்.

ஜாம்பவதி பேசத் துவங்கினாள்.
தான் வணங்கும் தெய்வமான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இவரே என்றறியாமல் என் தந்தை ஜாம்பவான் கண்ணனுடன் 27 நாள்கள் போரிட்டார்‌. பின் இந்நிலவுலகில் தன்னால் வெல்லமுடியாத ஒருவர் இருப்பாராகில் அது தன் தெய்வமான ராமனே என்றுணர்ந்தார். சண்டையில் அவரைக் கடுமையாக அடித்ததற்காக மிகவும் பச்சாதாபப்ப்ட்டு வருந்தினார். பின்னர் ஸ்யமந்தக மணியுடன், என்னையும் காணிக்கையாக அளித்துவிட்டார். அன்று முதல் நான் பகவான் கண்ணனின் பணிப்பெண்ணாவேன். எப்போதும் அவரது சேவையையே விரும்புகிறேன். என்றாள்.

நான் அவரது திருவடிகளை எப்போதும் தழுவ விரும்பும் யமுனாதேவியின் அம்சமாவேன். அதற்காக வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த என்னை அர்ஜுனனுடன் வந்து கைப்பிடித்தார். எப்போதும் பகவான் கண்ணன் உறையும் வீட்டைத் தூய்மை செய்வதையே விரும்புகிறேன். என்றாள் காளிந்தி.

என்னை சுயம்வரத்தில் வந்து கரம் பிடித்தார் பகவான். அங்கு கூடியிருந்த அத்தனை அரசர்களையும் துவம்சம் செய்து, நாய்க் கூட்டத்தின் நடுவே சிங்கம் தன் பங்கை எடுத்துச் செல்வதுபோல் வீரக் காணிக்கையாக என்னை அழைத்துவந்தார்.
கங்கை தோன்றும் அவரது திருவடிகளைச் சுத்தம் செய்யும் பணியையே ஒவ்வொரு பிறவியிலும் வேண்டுகிறேன் என்றாள் மித்ரவிந்தா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, August 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 534

கோகுலத்திலிருந்து கண்ணன் மதுரா கிளம்பிய அன்று அவனைக் கடைசியாகக் கண்ட கோபிகள், பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் கண்டனர். விழிவிரியக் கண்ணனைக் கண்டு உள்ளத்தால் அணைத்துக்கொண்டனர்.
தொடர்ந்து கண்ணாரக் காண இயலாமல் தடை செய்த இமைகளைப் படைத்த பிரம்மனை சபித்தனர்.

கண்ணனும் பலராமனும் அவர்களைத் தனியிடத்தில் சந்தித்தார்கள்.

என் அன்புக்குரிய பெண்களே! எனக்காக அனைத்தையும் தியாகம் செய்த உங்களை விட்டுவிட்டு, என்னைச் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்வதற்காகச் சென்றுவிட்டேன். அதன் பின் கடைமைகளில் மூழ்கிவிட்ட என்னை நீங்கள் நினைப்பதுண்டா?
நன்றிகொன்றவன் என்று என்மீது கோபப்பட்டீர்களா?

எல்லாம் வல்ல இறைவன் ஜீவன்களை ஒன்றாகச் சேர்க்கிறார். மற்றொரு சமயம் பார்த்துப் பிரிக்கிறார். காற்றில் எப்படி புழுதியும் பஞ்சும் அலைக்கழிக்கப்படுகின்றனவோ அவ்வாறே ஜீவன்களும் தன்னிச்சையின்றி இறைவனால் சேர்த்தும் பிரித்தும் வைக்கப்படுகின்றன.

ஐம்பெரும் பூதங்களின் மூலமான நீர், காற்று, ஆகாயம் ஆகியவை உள்ளும் புறமுமாக எங்கும் நிறைந்துள்ளன. அதுபோலவே நானும் அனைத்துப் பொருள்களின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளேன்.

அனைத்து உயிரினங்களுக்கும் பஞ்சபூதங்களே ஆதாரமாகும்‌. அந்த ஜீவன்களின் ஆத்மாவாக விளங்குபவன் நானே. பிறப்பு இறப்பு போன்ற மாறுபாடுகள் அற்ற நானே அனைத்திற்கும் மூலகாரணமாவேன். என்னிடத்தில் அனைத்து சராசரங்களும் விளங்குவதைப் பாருங்கள். ஜீவனும், உலகமும் என்னுள்ளேயே அடக்கம் என்பதைக் காணுங்கள்.

இவ்வாறு கண்ணன் அனைத்து கோபிகளுக்கும் ஞானோபதேசம் செய்தான். அவனது திவ்ய காட்சியைக் கண்ட அப்பெண்களுக்கு அக்கணமே ஞானம் சித்தித்தது.

கண்ணா! எங்கள் இறைவா! யோகீஸ்வரர்களும் உன் திருவடியை இடைவிடாமல் தியானிக்கின்றனர். ஸம்ஸாரமாகிய பாழுங்கிணற்றில் விழுந்தவர்களுக்கு உன் திருவடி இணையே பற்றுக்கோடு. இல்லறத்தில் ஆழ்ந்த பற்றுள்ள எங்களுக்கு உன் திருவடி தியானம் நீங்காமல் எப்போதும் இருக்க அருள் செய்வாயாக. என்றார்கள்.

நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறே உங்கள் ஹ்ருதய கமலத்தில் எப்போதும் என்னைக் காணலாம்‌ என்று கோபியர்க்கு வரமளித்தான் கண்ணன்.

அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த கோபிகள், தங்களை மறப்பதலேயே இவ்வுடல் ஏற்படுகிறது. ஸாதுக்கள் எப்போதும் தங்களது லீலைகளையே நினைக்கின்றனர். வியாஸர் போன்றவர்களின் ஹ்ருதயத்திலிருந்து தங்களது லீலைகள் அமுதமாகப் பொங்கி, அவர்களது திருவாக்கால் கதாம்ருதமாக வருகின்றது. அவற்றை ஒரு முறை கேட்டாலும் அவனுக்கு ஸம்ஸாரத் தொல்லைகளே இல்லை.

எங்கும் நீக்கமற நிறைந்த, மாறுபாடற்ற, பூரணரான தம்மை வணக்குகிறோம் என்று கூறினர்.

பின்னர் அவர்கள் அஞ்ஞானத்தை ஒழித்து, தங்கள் மீதி வாழ்க்கையை கண்ணனின் தியானத்திலேயே கழித்து ஜீவகோசமாகிய உடலைக் களைந்து அவனையே அடைந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 533

ஸமந்த பஞ்சகத்தில் குந்தி தன் சகோதர சகோதரிகளையும் அவர்களின் குடும்பங்களையும் வெகு நாள்களுக்குப் பின் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தாள்.

வசுதேவரிடம், அண்ணா, நான் மிகவும் அபாக்யசாலி. என் துன்பங்கள் எல்லை மீறியபோதும் நீங்கள் என்னை நினைக்கவே இல்லையே என்றாள்.

நாம் அனைவரும் இறைவனின் விளையாட்டுப் பொருள்கள் குந்தி. நாங்களும் கம்சனுக்கு பயந்து பலகாலம் வாழ்ந்திருந்தோம். இப்போதுதான் எங்களுக்கான இடத்தை அடைந்து நிம்மதியாக இருக்கிறோம் என்றார்.

பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன் , காந்தாரி, அவர்களது புதல்வர்கள், பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மனைவியர், குந்தி, நக்னஜித், விதுரர், க்ருபர், குந்திபோஜர், த்ருஷ்டகேது, விராடர், பீஷ்மகன், நக்னஜித், புருஜித், துருபதன், சல்யன், த்ருஷ்டகேது, காசிராஜன், தமகோஷன், விசாலாக்ஷன் அனைவரையும் வசுதேவர் மற்றும் மற்ற யாதவர்கள் உபசரித்தனர். (இந்நிகழ்வு பாரத யுத்தத்திற்கு முன்பாக நிகழ்ந்திருக்கவேண்டும். சுவாரசியமான சம்பவங்களை ஸ்ரீ சுகர் நினைவுபடுத்தி சொல்வதால் வரிசை மாறியிருக்கலாம்)

கண்ணனின் வடிவழகை முதன்முதலில் நேரில் கண்ட பல அரசர்கள் மிகவும் வியந்தனர்.

அவர்கள் உக்ரசேனரிடம், நீங்கள்தான் மிகபவும் பேறு பெற்றவர். யோகிகளும் சுலபத்தில் காண இயலாத இந்த கண்ணனின் அழகை நீங்கள் எப்போதும் பருகுகிறீர்கள். இவனது திருவடித் தீர்த்தமே பவித்ரமான கங்கையாக ஓடுகின்றது. வேதங்களும் சாஸ்திரங்களும் இவன் புகழையே பாடுகின்றன.

உங்களுக்கோ பகவானுடன் கோத்ர சம்பந்தமும், திருமண உறவுமுறையும் உள்ளது. அவனைக் காண்பது, பேசுவது, தொடுவது, அவனோடு உலாவுவது உறங்குவது, உண்பது, என்று பல விதங்களிலும் உறவாடும் பேறு பெற்றிருக்கிறீர்கள்.
என்று கூறி மகிழ்ந்தனர்.

நந்தகோபர் கோபர்களுடன் கண்ணனைப் பார்க்க வந்தார்.

கண்ணனைக் கண்ட யாதவர்கள் இறந்தவன் உயிர் பெற்றதுபோல் மகிழ்ந்து ஆரத் தழுவிக் கொண்டனர்.

வசுதேவரும் நந்தரும் பேச்சை மறந்து கண்ணீர் உகுத்து கட்டிக்கொண்டனர்.

கண்ணனும் பலராமனும் நந்தனையும் யசோதையையும் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யசோதை கண்ணனை மடியில் அமர்த்திக் கொண்டாள். அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். தாய்க்கும் சேய்க்கும் கண்ணீரே மொழியானது.

தேவகி, ரோஹிணி ஆகியோர் நந்தனையும் யசோதாவையும் புகழ்ந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, August 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 532

ஒரு சமயம் ப்ரளய காலத்தில் தோன்றுவதுபோல் மிகப்பெரிய சூரிய கிரஹணம் ஏற்பட்டது. 

வானியல் சாஸ்திரத்தின்படி கணித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கிரஹணங்களை மிகத் துல்லியமாக எழுதிவைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

 கிரஹண காலத்தில் செய்யப்படும் புண்ணிய கர்மாக்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் அதிகம். அதிலும் அந்த புண்ய கர்மாவை ஒரு புண்ய ஸ்தலத்தில் போய் செய்தால் இன்னும் பல மடங்கு பலன் கிடைக்கும்.

கிரஹணத்தைப் பற்றி முன்னமேயே அறிந்த மக்கள் பலர் அக்காலத்தில் புண்ணிய கர்மாக்களைச் செய்ய விரும்பி ஸமந்த பஞ்சகம் எனப்படும் குருக்ஷேத்ரத்தில் கூடினர்.

ஒரு சமயம் புவியில் க்ஷத்ரியர்களே இல்லாதவாறு செய்வேன் என்று சபதமிட்ட பரசுராமர் அரசர்களின் குருதியால் குருக்ஷேத்ரத்தில் உள்ள குளங்களை நிரப்பினார்.

பின்னர், பகவானாகவே இருந்தாலும் உலகிற்கு வழி காட்டுவதற்காக, இந்த க்ஷேத்ரத்தில் பாவங்கள் நீங்க யாகம் செய்வதுபோல் செய்தார்.

தீர்த்த யாத்திரையாக அவ்விடத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடினார்கள். அக்ரூரர், வசுதேவர், உக்ரஸேனர், கதன், ப்ரத்யும்னன், சாம்பன் ஆகியோரும் அங்கு வந்தனர். அநிருத்தனும் க்ருதவர்மாவும் துவாரகையைக் காப்பதற்காகத் தங்கி விட்டார்கள்.

யாதவர்கள் அனைவரும் பல்வேறு வாகனங்களிலும், குதிரை, யானை, தேர் முதலியவற்றிலும் குடும்பங்களாக வந்து கூடினர்.

அனைவரும் அங்கு நீராடி உபவாசங்கள் இருந்து அந்தணர்களுக்கு தானம் செய்தனர். 

பரசுராமர் வெட்டிய குளங்களில் நீராடிய யாதவர்கள் அனைவரும் செய்த ஒரே பிரார்த்தனை, கண்ணனிடம் எங்களுக்கு பக்தி உண்டாக வேண்டும் என்பதே.

கண்ணனும் பலராமனும் எல்லா மனைவிகளுடனும் வந்திருந்தனர்.

மத்ஸ்யம், கோசலம், உசீனரம், விதர்ப்பம், குரு, ஸ்ருஞ்ஜயம், காம்போஜம், கேகயம், மத்ரம், குந்தீ, ஆனர்த்தம் ஆகிய தேசத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். பலரும் தம்மைச் சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து கட்டித் தழுவிக்கொண்டனர். 

வ்ருஷ்ணிகள் வெகுநாள்களாகக் காணாமல் இருந்த யாதவர்களையும் நந்தர், யசோதா மற்றும் கோப கோபியர்களைக் கண்டனர்.

பிரிந்தவர் கூடினால் பேச இயலுமா? இறுகக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கி பேச்சற்று நின்றனர். சிறுவர்கள் முதியவர்களை வணங்கினர். பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து..
வேறென்ன?
கண்ணனைப் பற்றிப் பேசத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, August 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 531

இரண்டு நாள்கள் கண்ணனின் அன்பில் திளைத்த குசேலர் மூன்றாம் நாள் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினார். கண்ணனைப் பிரிய மனம் வரவில்லைதான். ஆனாலும் குடும்பம் இருக்கிறதே. மேலும் விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான். என்ற சொல்வழக்கிற்கேற்ப அங்கிருந்து புறப்பட்டார்.

கண்ணனிடம் ஏதேனும் செல்வத்தைக் கேட்டுப் பெறும் நினைவு கூட இல்லை. கண்ணனும் தானாக அவரிடம் எதையும்‌ கொடுக்கவில்லை. 

கண்ணீர் மல்கி அவரைக் கட்டியணைத்து இவ்வளவு நாள்கள் கழித்து என்னை நினைவு வைத்துக்கொண்டு வந்தீரே என்பதாக நெகிழ்ந்து வாசல் வரை வந்து வழியனுப்பினான் கண்ணன்.

வழியெல்லாம் கண்ணனின் தெய்வீகத் திருமுகம், தாமரைக் கண்கள், முகத்தில் தொங்கும் குழற்கற்றை, அதை அவன் சரி செய்துகொள்ளும் அழகு, அவனது பேச்சிற்கேற்ப காதிலாடும் குழைகள், மின்னலைப் போல் கன்னத்தில் ப்ரதிபலித்து ஆடும் அவற்றின் ஒளி, அவன் பேசிய சொற்கள், பேசும்போது கண்ணனின் இதழ்கள் குவிந்து விரிந்த அழகு, நடுநடுவே வீசும் முத்துப்பல் வரிசையின் ஒளி, தன் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அவன் நடந்த அழகு, உண்ணும்போது தனக்கு பார்த்து பார்த்துப் பரிமாற ருக்மிணிக்குச் செய்த கண்ஜாடைகள், தாமரைக் கரம் கொண்டு தன் காலைப் பிடித்துவிட்ட அழகு,
திருமகளின் பதியான கண்ணன் எங்கே. வறிய அந்தணனான நான் எங்கே. என்னைப்போய் தன் திருக்கரங்களால் அணைத்துக்கொண்டானே. தன்னோடு ஒன்றாக உறங்கச் செய்தானே. மஹாலக்ஷ்மியான ருக்மிணி எனக்கு சாமரம் வீசினாளே. 
எல்லா விதமான செல்வங்களையும், சித்திகளையும் பெற ஒருவன் கண்ணனின் திருவடிகளை ஆராதனம் செய்யவேண்டியிருக்க அவன் என் பாதத்தைப் பிடித்துவிட்டானே. செல்வச் செருக்கு வந்தால் இறைவனான அவனை நான் நினைக்கமாட்டேன் என்று மிகுந்த கருணையால் தான் அவன் எனக்கு செல்வம் எதுவும் கொடுக்க வில்லை போலும். நமக்கு இனி எதுவும் வேண்டாம். இந்த ஒரு சந்திப்பை எண்ணிக்கொண்டே வாழ்நாளைக் கடத்தி அவன் திருவடிகளை அடைந்துவிடுவேன்.

மாற்றி மாற்றி இதையே எண்ணிக்கொண்டு நடந்தார். வழியில் கண்ட ஒன்றும் அவர் மனத்தில் பதியவில்லை. வண்டி மாடு வீட்டை அடைவதுபோல் எப்படியோ மெல்ல மெல்ல தான் வசிக்கும் பகுதிக்கு வந்துவிட்டார்.

தான் வசிக்கும் தெருவிற்கு வந்தவர் தன் வீட்டைக் காணாமல் திகைத்தார்.
அங்கே வரிசையாக பெரிய பெரிய மாளிகைகளுக்கு நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ஒரு பெரிய மாளிகையைக் கண்டார். 

 பெரிய பழத் தோட்டத்தின் நடுவே பறவைகள் சூழ்ந்த நீர் நிலை, நன்றாக அலங்கரித்துக் கொண்டு உலாவும் ஆண்களும்‌ பெண்களும், இப்படியாக இருந்த அந்த மாளிகை குசேலரின் வீடு இருந்த இடத்தில் இருந்தது. 

இது யாருடைய வீடு? மாறி வந்துவிட்டேனா? நான் வசித்த தெருதானே. இந்தக் குழந்தைகளைப் பார்த்தால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் போல இருக்கின்றன. ஆனால் இவர்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்களே.

அதோ அவள் சூசீலாவைப் போல் இருக்கிறாளே. இவள் எப்படி இவ்வளவு நகைகள், பட்டுப்புடைவையுடன்? ஆம். இவர்கள் என் குழந்தைகள். காதுகளில் குண்டலங்களும், முத்து மாலைகளும் பட்டாடையும். எங்கிருந்து இந்த செல்வம் வந்தது? எப்படி என் வீடு இப்படி மாறிற்று? 

அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சில ஆண்கள் வந்து வாத்யங்களை முழங்க, பெண்கள் வந்து மங்கல ஹாரத்தி செய்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அவர் வந்ததை அறிந்து வேக வேகமாக வந்த சுசீலை குசேலரை நமஸ்கரித்தாள்.

அவரை மனத்தால் அணைத்துக்கொண்டாள். தேவமாதைப் போல் ஒளி பொருந்திய அழகுடன் விளங்கிய தன் மனைவியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் குசேலர். ஒரே கணத்தில் அவருக்கு இவையனைத்தும் கண்ணனின் லீலை என்பது விளங்கிற்று. நண்பன் என்றால் கண்ணனல்லவோ நண்பன். என் துயரத்தை நான் சொல்லாமலே போக்கியவன். என் கையில் கொடுத்தனுப்பாமல் யோக சக்தியால் ஒரே பார்வையில் அருளிவிட்டான் போலும். இல்லையில்லை இது ருக்மிணியின் கடாக்ஷமாக இருக்கவேண்டும். என்னைக் கண்டதும் நீங்கள் எந்த திசையிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். கை காட்டிய திசை முழுவதையும் கடாக்ஷித்துவிட்டாள் போலும். என் வீட்டை மட்டுமல்லாமல், நாங்கள் வறுமையில் இருந்தபோது எங்களுக்கு உதவிய நல்லிதயங்கள் வாழும் அக்கம் பக்கத்து வீடுகளையும் சேர்த்து கடாக்ஷம் செய்திருக்கிறார்களே.

எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார் குசேலர். தன் மனைவியுடன் மாளிகையினுள் சென்றார். தங்க ஆசனங்கள், திண்டுகள், ஆங்காங்கே தொங்கும் முத்துச் சரங்கள், தந்தத்தாலான கட்டில்கள், மென்மையான படுக்கைகள், மரகதங்கள் பதிக்கப்பெற்ற ஸ்படிகங்களால் ஆன சுவர்கள், ரத்தின விளக்குகள் அத்தனை செல்வத்தையும் பார்த்த குசேலர் மிகவும் அமைதியாக சிந்திக்கலானார்.

இதன் காரணம் க்ருஷ்ண தரிசனம் மட்டுமே. வேண்டுவதை விட அதிகம் தரும் இயல்புடையவன் கண்ணன். எவ்வளவு அதிகமாகக் கொடுத்தாலும், கொடுப்பதில் அவனுக்கு திருப்தி ஏற்படுவதில்லை.

அவனுடன் பெற்ற நட்பு பெரும் பேறு. இனி எப்போதும் அவன் திருவடிகளையே தியானித்து உய்யும் வழி தேடுவேன். எப்போதும் அவனது நினைவே எனக்கு இருக்கட்டும். அவன் அடியார்களின் சங்கம் எனக்கு அமையட்டும். வருங்காலம் பற்றி சிந்திக்கத் தெரியாத பக்தனுக்கு இறைவன் செல்வத்தைக் கொடுப்பதில்லை. 

அவனை வெற்றி கொள்ள அவன் மீது அன்பு செலுத்துவதே ஒரே வழி. அவன் மீதுள்ள அன்பினால் மற்ற பற்றுக்களை அறுப்பேன். என்று எண்ணி, மிகவும் விரக்தராக செல்வத்தை அனுபவித்து வந்தார்‌. இறுதியில் நற்கதி பெற்று வைகுண்டத்தை அடைந்தார்.

அந்தணர்களை தெய்வமாகக் கொண்ட பகவான் குசேலருக்குச் செய்த அருளை நினைப்பவர்க்கு அவனிடமே உள்ளம் ஈடுபட்டு கர்மவினைகள் அழிந்துபோகும். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..