Saturday, August 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 320

விதர்ப்பனின் மகன்கள் மூவர். குசன், க்ரதன், ரோமபாதன். இவர்களுள் ரோமபாதன் மிகவும் புகழ் பெற்று விளங்கினான்.

ரோமபாதனின் மகன் பப்ரு. இவனது வம்சத்தில் தோன்றியவன் சேதி. சேதி வம்சத்தில் பிறந்தவர்கள் தமகோஷனும், சிசுபாலனும்.

விதர்ப்பனின் மகன் க்ரதனின் வம்சம் குந்தி, த்ருஷ்டி, நிர்வ்ருதி, தாசார்ஹன், வியோமன், ஜீமுதன், விக்ருதி, பீமரதன், நவரதன், தசரதன், சகுனி, கரம்பி, தேவராதன், தேவக்ஷேத்ரன், மது, குருவசன், அனு, புருஹோத்ரன், ஆயு, ஸாத்வதன் ஆகியோர்.

ஸாத்வதனுக்கு பஜமானன், பஜி, திவ்யன், விருஷ்ணி, தேவவிரதன், அந்தகன், மஹாபோஜன் ஆகிய ஏழு மகன்கள். பஜமானனின் குமாரர்கள் அறுவர். நிம்லோசி, கிங்கிணன், திருஷ்டி, சதாஜித், ஸஹஸாஜித், அயுதாஜித் ஆகியோர்.

ஸாத்வதனின் மகனான தேவவிருதனின் புதல்வன் பப்ரு. இவன் மிகவும் புகழ் பெற்று விளங்கினான். இவனிடம் உபதேசம் பெற்று பதிநான்காயிரத்து அறுபத்தைந்து பேர்கள் கரையேறினர்.

ஸாத்வதனின் மகன்களுள் மஹாபோஜன் ப்ரிய தர்மாத்மா. அறநெறி தவறாது ஒழுகுபவன்.
அவனது வம்சத்தில் போக வம்சத்தவர்களான யாதவர்கள் தோன்றினர்.

வ்ருஷ்ணியின் புதல்வர்கள் சுமித்திரன், யுதாஜித் ஆகியோர். யுதாஜித்திற்கு சினி, அனமித்ரன் என இரு மகன்கள். அனமித்ரனின் மகன் நிம்னன். அவனது புதல்வர்கள் ஸத்ராஜித், பிரஸேனன் ஆகியோர்.

சினியின் மகன் ஸத்யகன்.
அவனது மகன் யுதானன் என்கிற ஸாத்யகி.
அனமித்ரனின் மூன்றாவது மகன் வ்ருஷ்ணி. இவனது புதல்வர்கள் ச்வபல்கன், சித்ர்ரதன் ஆகியோர். ச்வபல்கனது மனைவி காந்தினி. அவர்கள்து மகன்கள் அக்ரூரன், அஸங்கன், ஸாரமேயன், மிருதுரன், மிருதுவித், கிரி, தாம்வ்ருத்தன், ஸுகர்மா, க்ஷேத்ரோபேக்ஷன், அரிமர்தனன், சத்ருக்னன், கந்தமாதன், ப்ரதிபாஹு ஆகியோர்.

அவர்களுக்கு ஸுசீரா என்ற தங்கை உண்டு.
அக்ரூரரின் புதல்வர்கள் தேவவான், உபதேவன். ச்வபல்கனது சகொஇதரனான சித்ரரதனுக்கு பிருது, விதூரதன் முதலான பல மகன்கள் உண்டு.

சாத்வதனின் மகன் அந்தகன். அவனுக்கு குகூரன், பஜமானன், சுசி, கம்பலபர்ஹிஷன் என நான்கு மகன்கள். குகூரனின் வம்சம் வஹ்னி, விலோமா, சுபோதரோமா, அனு, அந்தகன், துந்துபி, அரித்யோதன், புனர்வஸு. புனர்வஸுவுக்கு ஆஹுகன் என்ற மகனும் ஆஹுகி என்ற மகளும் இருந்தனர்.

ஆஹுகனின் மகன்கள் தேவகன், உக்ரஸேனன் ஆகியோர். தேவகனது புதல்வர்கள் தேவவான், உபதேவன், ஸுதேவன், தேவவர்தனன். புதல்விகள் திருததேவி, சாந்திதேவி, உபதேவி, ஸ்ரீ தேவி, தேவரக்ஷிதை, ஸஹதேவி, மற்றும் தேவகி. இவர்கள் அனைவரையும் வஸுதேவர் மணந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, August 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 319

மன்னா! யது வம்ச சரித்ரம் மிகவும் பவித்ரமானது. அனைத்து பாவங்களையும் போக்கக்கூடியது. இந்த வம்சத்தில்தான் பகவான் ஸ்ரீமன் நாராயணன் கண்ணனாக அவதாரம் செய்தார்.

யதுவின் மகன்கள் ஸஹஸ்ரஜித், க்ரோஷ்டா, நளன், ரிபு ஆகிய நான்கு மகன்கள். ஸஹஸ்ரஜித்தின் மகன் சதஜித். அவனுக்கு மஹாஹயன், வேணுஹயன், ஹைஹயன் என்ற மூன்று புதல்வர்கள்.

ஹைஹயனின் வம்சாவளி முறையே. தர்மன், நேத்திரன், குந்தி, ஸோஹஞ்ஜி, மஹிஷ்மான், பத்ரஸேனன் ஆகியோர்.

பத்ரஸேனனின் மகன்கள் துர்மதன், தனகன். தனகனின் மகன்கள் க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருதவர்மா, க்ருதௌஜஸன் ஆகிய நான்கு மகன்கள்.

க்ருதவீர்யனின் மகன் கார்த்தவீர்யார்ஜுனன். இவனது கதையை முன்பே பார்த்தோம். இவன் ஏழு தீவுகளுக்கும் ஒரே அரசனாக விளங்கினான். தத்தாத்ரேயரிடமிருந்து யோக வித்தைகளைக் கற்று எண்வகை ஸித்திகளையும்‌ பெற்றிருந்தான்.

ஆயிரம் கரங்கள் கொண்ட இவன் எண்பத்தையாயிரம் வருடங்கள் மிகவும் சக்தி படைத்தவனாக வாழ்ந்தான். இவனது உடல்வலியோ, செல்வமோ குறையவில்லை. மேலும் இவன் பெயரை நினைத்தாலே தொலைந்த பொருள் திரும்பக் கிடைத்துவிடும் என்னும்போது அவனுக்கென்ன குறை வரப்போகிறது?

இவனது ஆயிரக்கணக்கான புதல்வர்களில் பரசுராமரால் கொல்லப்பட்டவர்கள் போக ஜயத்வஜன், சூரஸேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் ஆகிய ஐவரே மீதமிருந்தனர்.

ஜயத்வஜனின் மகன் தாலஜங்கன். அவனுக்கு நூறு புதல்வர்கள். அவர்கள் அனைவருக் தாலஜங்கர்கள் எனப் பெயர் பெற்றனர். ஸகர மன்னன் ஔர்வ முனிவரின் அருளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.

அந்த நூற்றுவரில் மூத்தவன் வீதிஹோத்ரன். அவனது மகன் மது. மதுவின் மகன் வ்ருஷ்ணி.
மது, யது, வ்ருஷ்ணி ஆகியோரின் பெயரால் இவ்வம்சம் மாதவர்கள், வ்ருஷ்ணிகள், யாதவர்கள் என்றழைக்கப்பட்டது.

க்ரோஷ்டாவின் வம்சம் முறையே வ்ருஜினவான், சுவாஹி, ருசேகு, சித்ரரதன், சசபிந்து.

சசபிந்து பெரும் யோகி, பெருஞ்செல்வம் படைத்தவன், மகாவீரனும் கூட. அவன்
தோல்வியே காணாமல் பூமண்டலம்‌ முழுவதையும் ஆண்டான். அவனுக்குப் பதினாயிரம்‌ மனைவிகள். ஒவ்வொருத்திக்கும் ஒரு லட்சம்‌ புதல்வர்கள். இவ்வாறு நூறு கோடிப் பேர் அவன் மக்களே.

அவர்களுள் அறுவர் முக்கியமானவர்கள். மூத்தவன் பிருதுசிரவா. அவனது வம்சம் முறையே தர்மன், உசனஸ், ருசகன். அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் புருஜித், ருக்மன், ருக்மேஷு, பிருது, ஜ்யாமகன் ஆகியோர்.

ஜ்யாமகனின் மகன் சைப்யை. அவன் மனைவிக்கு பயந்தவன். மக்கட்பேறில்லாததால் ஒரு சமயம்‌ பகைவன் வீட்டிலிருந்து போஜ்யா என்ற ஒரு சிறு பெண்குழந்தையை எடுத்துவந்தான்.

சைப்யை சினத்துடன் அவள் யாரென்று வினவ, இவள் உன் மருமகள் என்றான்.
எனக்கு குழந்தையே இல்லையே. எப்படி இவள் மருமகளாவாள்
என்று சைப்யை கேட்டாள்.

ஜ்யாமகனோ, இனி பிறக்கப்போகும் மகனை இவளுக்கு மணம் முடிக்கலாம் என்று கூறி சமாளித்து வைத்தான்.

அவ்வமயம் அவனால் ஆராதிக்கப்பட்ட விஸ்வேதேவர்கள் 'ததாஸ்து' என்று ஆமோதிக்க விரைவிலேயே சைப்யை கருத்தரித்து அழகிய ஆண் மகவைப் பெற்றாள். அவன் பெயர் விதர்ப்பன் என்பதாம். அவன் போஜ்யாவை மணம் முடித்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, August 29, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 318

மன்னன் அங்கனின் மகன் கனபானன். அவனது மகன் திவிரதன், திவிரதனின் மகன் தர்மரதன். அவனது மகன் சித்ரரதன்.

சித்ரரதனின் மற்றொரு பெயர் ரோமபாதன் என்பதாகும். அவன் தசரதனின் நண்பன். இவனுக்கு மக்கட்பேறில்லாததால் தசரதன் தன் மகளான சாந்தையை தத்துக் கொடுத்தார்.

ஒரு சமயம் ரோமபாதனின் பலகாலம் தேசத்தில் மழை பொய்த்துப் போயிற்று. அதனால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவ்வமயம் அவன் பற்பல கணிகைப் பெண்களை அனுப்பி நாட்டியம், பாடல்கள், வாத்தியங்கள் ஆகியவற்றால் காட்டிலிருந்த ரிஷ்ய ச்ருங்கரை மயக்கி அங்க தேசத்திற்கு அழைத்துவந்தான். ரிஷ்யச்ருங்கர் நாட்டின் எல்லையை மிதித்ததுமே பெருமழை பெய்து நாட்டின் பஞ்சம் தீர்ந்தது.

பின்னர் நாட்டின் சுபிக்ஷத்திற்காக அவரைத் தன் நாட்டிலேயே தங்க வைக்க விரும்பிய ரோமபாதன் சாந்தையை அவருக்கு மணம்‌ முடித்துக் கொடுத்தான்.

இந்த ரிஷ்ய ச்ருங்கர் விபண்டக முனிவரின் புதல்வர். மானின் வயிற்றில் தோன்றியவர்.

தசரதன் பிள்ளைப்பேறின்றி தவித்தபோது, ரிஷ்யச்ருங்கர் மருத் தேவதைகளைக் கொண்ட புத்ரகாமேஷ்டியை செய்துவைத்தார். அதனால் தசரதர்க்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

ரோமபாதனுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அவனது மகன் சதுரங்கன். அவனது மகன் ப்ருதுலாஷன். அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ருஹத் கர்மா, ப்ருஹத்பானு ஆகிய மூன்று புதல்வர்கள். ப்ருஹத்பானுவின் மகன் ப்ருஹத்மனஸ். அவனது மகன் ஜயத்ரதன். அவனது வம்சம் முறையே விஜயன், திருதி, திருதவிரதன், ஸத்கர்மா, அதிரதன் ஆகியோர்.

அதிரதனுக்கு மக்கட்பேறில்லை. அவன் ஒருநாள் கங்கையில் நீராடும்போது ஒரு பெட்டி மிதந்து வந்தது. அதனுள் ஒரு குழந்தை இருந்தது. அதை இறைவனின் பிரசாதமாக நினைத்து கர்ணன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தான்.

அந்தக் குழந்தை பாண்டுவின் மனைவி குந்தியின் குழந்தை. திருமணமாவதற்கு முன்பே சூரியனின் அருளால் குந்திக்கு குழந்தை பிறந்தது. அதை வளர்க்க அஞ்சிய குந்தி பெட்டியில் வைத்து கங்கையில் விட்டுவிட்டாள். அந்தக் குழந்தைதான் கர்ணன்.

துரியோதனின் நண்பனான கர்ணனை அவன் அங்கதேசத்தின் அரசனாக்கினான்.
கர்ணனின் மகன் வ்ருஷஸேனன்.

யயாதியின் மூன்றாவது மகனான த்ருஹ்யுவின் வம்சம் முறையே பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், தர்மன், திருதன், துர்மனன், பிரசேதஸ். அவனுக்கு நூறு புதலவர்கள். அவர்கள் வடதிசையில் இருந்த மிலேச்சர்களை ஆண்டனர்.

யயாதியின் இரண்டாவது மகன் துர்வஸுவின் வம்சம் வஹ்னி, பர்க்கன், பானுமான், திரிபானு, காந்தமன், மருதன். மருதனுக்குப் பிள்ளைப்பேறில்லாததால், பூரு வம்சத்தில் பிறந்த துஷ்யந்தனை வளர்ப்பு மகனாக்கிக் கொண்டான்.

பூருவைத் தவிர மற்ற பிள்ளைகளுக்கு யயாதியின் சாபத்தால் அரசுரிமை இல்லாமல் போயிற்று. துஷ்யந்தன் மருதனுக்கு வளர்ப்பு மகனான போதும் அரச போகத்திற்காக மீண்டும்‌ புரு வம்சத்திற்கே சென்றுவிட்டான்.

ஹே! பரீக்ஷித்! இனி யயாதியின் மூத்த மகனான யதுவின் வம்சத்தை விரிவாகக் கூறுகிறேன். என்றார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 317

பரீக்ஷித் கங்கைக் கரையில் ப்ராயோபவேசத்திற்காக வந்து அமர்ந்ததும், அவன் மீதிருந்த அன்பினால், அவனது மகன்களும், உறவினர்களும்‌ அங்கு வந்து அமர்ந்திருந்தனர். அவர்களைக் காட்டி ஸ்ரீ சுகர் கூறலானார்.

பரீக்ஷித், உன் எதிரே இருக்கும் ஜனமேஜயன், ச்ருதசேனன், பீமசேனன், உக்ரசேனன் ஆகிய நால்வரும் உன் புதல்வர்கள்.

நீ தக்ஷகன் கடித்து இறந்துபட்டதும், உன் மகன் ஜனமேஜயன் சினம் கொண்டு சர்ப்பயாகம் செய்யப்போகிறான். அனைத்துப் பாம்புகளையும் ஹோமம் செய்து அழிக்கப்போகிறான்.

பின்னர் கவஷாவின் மகனான துரன் என்பவனைக் கொண்டு அச்வமேத யாகம் செய்து, எண்டிசைகளையும் வெல்வான். பூமி முழுவதையும் தனதாக்கிக் கொண்டு, பற்பல வேள்விகளால் இறைவனை ஆராதிக்கப்போகிறான்.

ஜனமேஜயனின் மகன் சதானீகன். அவன் யாக்ஞவல்க்யரிடம் சென்று மூன்று வேதங்களையும், கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறநெறிகளைகளையும் ஐயம் திரிபறக் கற்பான். க்ருபாசார்யாரிடம் அஸ்த்ர வித்யையையும், சௌனகரிடம் ஆத்ம வித்யையையும் கற்றுத் தெளிந்து பகவானை அடைவான்.

சதானீகனின் மகன் ஸஹஸ்ரானீகன். இவனும் அச்வமேத யாகம் செய்வான்.
அவனது வம்சம் முறையே அஸீமக்ருஷ்ணன், நேமிசக்ரன் ஆகியோர். அஸ்தினாபுரம் நீரில் மூழ்கி அழிந்ததும் நேமிசக்ரன் கௌசாம்பி என்னும் நகரத்தில் வாழ்வான். அவனது வம்சம் முறையே சித்ரரதன், கவிரதன், வ்ருஷ்டிமான், ஸுஷேணன், ஸுநீதன், ந்ருசக்ஷு, ஸுகீநலன், பரிப்லவன், ஸுநயன், மேதாவி, ந்ருபஞ்ஜயன், தூர்வன், திமி, பிருஹத்ரன், ஸுதாசன், சதானீகன், துர்தமன், பஹீநரன், தண்டபாணி, நிமி, க்ஷேமகன். ஆகியோர்.
க்ஷேமகன்தான் கலியுகத்தில் சந்திர வம்சத்தின் கடைசி அரசன்.

இனி மகத தேசத்து மன்னர்கள் பற்றிக் கூறிகிறேன்.
ஜராஸந்தனின் மகன் சஹதேவனின் வம்சம் பின்வருமாறு.

மார்ஜாரி, சுருதசிரவா, அயுதா, நிரமித்ரன், ஸுநக்ஷத்ரன், ப்ருஹத்ஸேனன், கர்மஜித், ஸ்ருதஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேமன், ஸுவிரதன், தர்மசூத்ரன், சமன், த்யுமத்சேனன், ஸுமதி, ஸுபலன், ஸுநீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் ஆகியோர். பிருஹத்ரதனின் வழித்தோன்றல்களான இவர்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆளப்போகிறார்கள்.

அனு என்பவனின் வம்சம் முறையே.. ஸபாநரன், காலநரன், ஸ்ருஞ்ஜயன், ஜனமேஜயன், மகாசீலன், மஹாமனஸ்.

மஹாமனஸிற்கு உசீநரன், திதிக்ஷு ஆகிய இரு புதல்வர்கள்.

உசீநரனினின் மகன்கள் சிபி, வனன், சமி, தக்ஷன் ஆகியோர். சிபியின் புதல்வர்கள் விருஷதர்பன், ஸுவீரன், மத்ரன், கைகயன் ஆகியோர்.

திதிக்ஷுவின் வம்சம் முறையே.. ருசத்ரதன், ஹேமன், ஸுதபஸ், பலி. பலிக்கு தீர்கதமஸ் என்ற முனிவரின் அருளால் அங்கன், வங்கன், கலிங்கன், ஸுஹ்மன், புண்ட்ரன், ஆந்திரன் ஆகிய ஆறு புதல்வர்கள் பிறந்தனர்‌.

இவர்கள் தத்தம்‌பெயரிலேயே ஆறு தேசங்களைத் தோற்றுவித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Picture courtesy : Sri. Keerthivasan Rajamani

Saturday, August 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 316

சந்தனுவுக்கு கங்காதேவியிடம் பீஷ்மர் பிறந்தார். அவர் இம்மை, மறுமைக்கான தர்மங்கள், ராஜதர்மம், ஆபத்தர்மம் ஆகியவற்றை மிக நன்றாக அறிந்தவர். பகவானிடம் அளவற்ற பக்தி கொண்டவர். ஞானி. மிகச் சிறந்த வீரர். தன் குருவான பரசுராமரைப் போரில் வென்று அவரை சந்தோஷப் படுத்தியவர்.

சந்தனு மீனின் கருவில் தோன்றி செம்படவர்களால் வளர்க்கப்பட்ட ஸத்யவதியை மணந்தான். அவர்களது மகன்கள் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் ஆகியோர்.

தன் பெயர் கொண்டவன் என்பதற்காக அவன் மேல் சினந்த கந்தர்வன் சித்ராங்கதனைப் போரில் கொன்றுவிட்டான்.

சந்தனுவைத் திருமணம் செய்வதற்கு முன்பாகவே ஸத்யவதி பராசரர் மூலமாக ரிஷி கர்பமாக (கர்பவாசமில்லாத அல்லது கண்டதும் குழந்தை) என் தந்தை வியாசரைப் பெற்றாள்.
அவர் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாகப் பிறந்தவர்.

க்ருஷ்ணத்வைபாயனர் என்றழைக்கப்பட்ட அவர், அநாதியாகப் பரந்துபட்டிருந்த வேதங்களைத் தொகுத்து, நான்காகப் பிரித்தார்.

அவரிடமிருந்துதான் நான் இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கற்றுக்கொண்டேன். இலந்தை மரத்தடியில் வசித்ததால் அவருக்கு பாதராயணர் என்ற பெயரும் உண்டு.

பீஷ்மர் சுயம்வர மண்டபத்திலிருந்து காசி மன்னனின் மகள்களை வலுவில் அழைத்துவந்தார்.
அவர்களில் அம்பிகை, அம்பாலிகை என்ற இருவரை சந்தனுவின் இளைய மகன் விசித்ரவீர்யன் மணந்தான். ஆனால், அளவுக்கதிகமான காமவேட்கை கொண்டிருந்ததால் ராஜ்யக்ஷ்மா என்ற நோய் பாதிக்கப்பட்டு இளம்வயதிலேயே விசித்ரவீர்யன் இறந்துபோனான்.

குருவம்சம் சந்ததியற்றுப் போனது. எனவே, தாயான ஸத்யவதியின் வேண்டுகோளின்படி, வியாசர் அம்பிகை, அம்பாலிகை இருவரிடமும் தன் தவசக்தியால் கர்பத்தைத் தோற்றுவித்தார். அவர்கள் பாண்டுவும், த்ருதராஷ்ட்ரனும் ஆவர். அவ்வமயம் அங்கிருந்த தாதியிடமும் கர்பம் தோற்றுவித்தமையால், விதுரர் பிறந்தார்.

த்ருதராஷ்ட்ரனின் மனைவி காந்தாரி. அவளுக்கு நூறு குழந்தைகள்‌ பிறந்தன. அவர்களுள் மூத்தவன் துரியோதனன். கடைசியாக துச்சலை என்ற பெண் பிறந்தாள்.

காட்டில் ஏற்பட்ட ஒரு சாபத்தால் பாண்டுவுக்கு பெண் இன்பம் அனுபவிக்க முடியாமல் போயிற்று. அதனால் அவனது மனைவிகள் குந்தியும், மாத்ரியும், தேவர்களின் அருளால் குழந்தைகள் பெற்றனர். யமதர்மராஜனின் அருளால் தர்மபுத்ரரும், வாயுவின் அருளால் பீமனும், இந்திரனின் அருளால் அர்ஜுனனும், குந்திக்குப் பிறந்தனர்.

மாத்ரிக்கு அச்வினி தேவர்களின் அருளால் நகுலனும், சகதேவனும் பிறந்தார்கள்.

இந்த ஐந்துபேரும் பாண்டவர்கள்‌ என்றழைக்கப் பட்டனர். இவர்களின் மனைவி திரௌபதி. அவளுக்கு உபபாண்டவர்கள் எனப்படும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். தர்மபுத்ரருக்குப் பிறந்தவன் ப்ரதிவிந்தியன். பீமனின் மகன் ச்ருதஸேனன். அர்ஜுனனின் மகன் ச்ருதகீர்த்தி. நகுலனுக்கு சதானீகன் என்பவனும் சகதேவனுக்கு ச்ருதகர்மா என்பவனும் பிறந்தனர்.

இவர்களைத் தவிர, தர்மபுத்ரரின் இன்னொரு‌ மனைவியான பௌரவி என்பவளிடம் தேவகன் பிறந்தான். பீமனுக்கு ஹிடிம்பியிடம் கடோத்கஜனும், காளி என்பவளிடம் ஸர்வகதனும் பிறந்தனர். சகதேவனுக்கு விஜயா என்பவளிடம் சுஹோத்ரன் பிறந்தான்.

நகுலனின் இன்னொரு மனைவியான கரேணுமதியிடம் நிரமித்ரன் என்பவன் பிறந்தான். அர்ஜுனன் நாககன்னிகையான உலூபியிடம் இராவனைப் பெற்றான். மணிபூரக மன்னனின் மகளிடம் பப்ருவாஹனன் பிறந்தான். ஆனால் அவன் மணிபூரக மன்னனுக்கு ஆண்வாரிசு இல்லாததால் பப்ருவாஹனன் அவனது மகனாகக் கருதப்பட்டான்.

ஹே! பரீக்ஷித்!
எல்லா எதிரிகளையும் வெற்றி கொள்ளும்‌ உன் தந்தை அபிமன்யு அர்ஜுனனுக்கும் சுபத்ராவுக்கும் பிறந்தவன். அவன் உத்தரையை மணந்து உன்னைப் பெற்றான்.

குலமே அழிந்துபோகும் நிலையில் அச்வாத்தாமாவின் ப்ரும்மாஸ்திரம் கருவிலிருந்த உன்னை அழிக்க முயன்றபோது, நீ கண்ணனால் காப்பாற்றப்பட்டாய்.

என்று சொன்ன ஸ்ரீ சுகர் தொடர்ந்து இனி வரப்போகும் பரீக்ஷித்தின் வம்சத்தை அவனுக்கே கூறலானார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, August 16, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 315

முத்கலரின் மகன் திவோதசன். அவனது மகன் மித்ரேயு. அவனுக்கு சியவனன், ஸுதாசன், ஸஹதேவன், ஸோமகன் என்று நான்கு மகன்கள். ஸோமகனுக்கு நூறு புதல்வர்கள். அவர்களுள் மூத்தவன் ஜந்து. இளையவன் ப்ருஷதன். அவனது மகன் த்ருபதன். த்ருபதனுக்கு த்ருஷ்டத்யும்னன் என்ற மகனும், திரௌபதி என்ற மகளும் பிறந்தனர்.

திருஷ்டத்யும்னனின் மகன் த்ருஷ்டகேது. இவர்கள் அனைவரும் பாஞ்சாலர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

அஜமீடனின் இன்னொரு மகன் ருஷன். அவனது மகன் ஸம்வரணன். அவன் சூரியனின் மகளான தப்தியை மணந்தான். அவர்களது புதல்வன் குருக்ஷேத்ரத்தின் அதிபதியான குரு. இவனுக்கு பரீக்ஷித், ஸுதனுஸ்(ஸுதன்வா), ஜன்ஹு, நிஷதாச்சன் என்று நான்கு மகன்கள்.

ஸுதன்வாவின் வம்சம் முறையே ஸுஹோத்ரன், சியவனன், க்ருதீ, உபசாரின். அவனுக்கு ப்ருஹத்ரதன், குசாம்பன், மத்ஸ்யன், ப்ரத்யரன், சேதிபன் ஆகிய ஐந்து மகன்கள்.
இவர்கள் சேதிநாட்டு அரசர்களானார்கள்.

ப்ருஹத்ரதனின் வம்சம் முறையே குசாக்ரன், ரிஷபன், ஸத்யஹிதன், புஷ்பவான், ஜஹு ஆகியோர். ப்ருஹத்ரதனின் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பாகங்களாக ஒரு உடல் பிறந்தது.

குழந்தை உயிருடன் இல்லை என நினைத்து அதன் தாய் அதைத் தூக்கி எறிந்துவிட்டாள். அப்போது அங்கு வந்த ஜரை என்ற அரக்கி, விளையாட்டாக அவ்வுடல்களை ஒன்று சேர்த்தாள். எதிர்பாராத விதமாக அக்குழந்தை உயிர் பெற்றது. எனவே அது ஜராஸந்தன் எனப்‌பெயர் பெற்றது.

ஜராஸந்தனின் மகன் சகதேவன். அவனது மகன் ஸோமபி. அவனது மகன் ச்ருதச்ரவன்.

குருவின் மூத்த மகன் பரீக்ஷிதிற்கு மகப்பேறில்லை. ஜன்ஹுவின் வம்சம் ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயசேனன், ராதிகன், அயுதன், குரோதனன், தேவாதிதி, ருஷ்யன், திலீபன், ப்ரதீபன். ப்ரதீபனின் மகன்கள், தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் ஆகியோர்.

தேவாபி தனக்கு அரசு வேண்டாம் என்று சொல்லி வனம் சென்றான்.
எனவே சந்தனு பட்டமேற்றான்.

சந்தனு யாரை இருகைகளால் தீண்டுகிறானோ அவன் இளமையையும், மன நிம்மதியையும் அடைவான்.

ஒரு சமயம் அவனது நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யவில்லை. அவன் அந்தணர்களை அழைத்து வினவ, அவர்கள் மூத்தவன் இருக்க இளையவனான நீ அரசு ஏற்றதால் தோஷம்‌ ஏற்பட்டிருக்கிறது. உடனே உன் தமையனைத் தேடிச் சென்று அரசை ஒப்படைத்தால் மழை வரும் என்றனர்.

அவனும் தமையனான தேவாபியைத் தேடிச் சென்று அரசுரிமையை ஏற்க வேண்டினான்.
அதற்குள் சந்தனுவின் மந்திரி அச்மராதன் என்பவன் சிலரை அனுப்பி தேவாபியின் மனத்தை நாத்திகத்தில் திருப்பிவிட ஏவியிருந்தான். அவர்கள் பேசி பேசி அவனை நாத்திகனாக்கி விட்டனர். அவன் வேத நிந்தனை செய்யத் துவங்கினான். எனவே அவன் அரசுரிமையை ஏற்கும் தகுதியை இழந்துவிட்டான். அதனால் சந்தனுவின் தோஷம் நீங்கி நாட்டில் மழை பொழியலாயிற்று.

தேவாபி யோக மார்கத்தில் இருந்ததால் யோகிகள் வசிக்கும் கலாபக் கிரமத்தில் இருக்கிறான். கலியுகத்தின் முடிவில் சந்திர வம்சம் அழிந்துபடும். அப்போது க்ருதயுகத்தின் துவக்கத்தில் சந்திர வம்சத்தை தோற்றுவிக்கப் போகிறான்.

சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தன் பிறந்தான். அவனது மகன்கள் பூரி, பூரிசிரவஸ், சலன் ஆகியோர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 314

பரதனின் மகனான பரத்வாஜனின் மகன் மன்யு. அவனது வம்சாவளி முறையே கர்க்கன், சினி, கார்க்கியன். இவன் க்ஷத்ரியன் ஆனாலும் இவனிடமிருந்து அந்தணர் குலம் தோன்றியது.

மகாவீர்யன் எனப்படும் இவனது மகன் துரிதக்ஷயன். அவனுக்கு த்ரய்யாருணி, கவி, புஷ்கருணி என்று மூன்று புதல்வர்கள். இவர்கள் அந்தணத் தன்மையை அடைந்தனர்.

மன்யுவின் முதல் மகன் ப்ருஹத்க்ஷத்ரன். அவனுக்கு ஹஸ்தி என்றொரு மகன் பிறந்தான். இவன்தான் ஹஸ்தினாபுரத்தை நிர்மாணித்தவன். ஹஸ்திக்கு அஜமீடன், த்விமீடன், புருமீடன் என மூன்று புதல்வர்கள். அஜமீடனின் வம்சத்தில் பிறந்த ப்ரியமேதன் முதலானவர்கள் அந்தணத் தன்மையை அடைந்தார்கள்.

அஜமீடனின் வம்சம்‌ முறையே ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்காயன், ஜயத்ரதன், விசதன், ஸேனஜித். அவனது மகன்கள் ருசிராஸ்வன், திருடஹனு, காசியன், வத்ஸன் ஆகியோர்.

ருசிராஸ்வனின் மகன் பாரன். அவனது மகன்கள் ப்ருதுஸேனன், நீபன் ஆகியோர். நீபனுக்கு நூறு பிள்ளைகள். நீபன் சாயாசுகரின் மகள் க்ருத்வியை மணந்தான். அவனது மகன் ப்ரும்மதத்தன். ப்ரும்மதத்தன் பெரும்‌ யோகியாவான். அவனது மனைவி ஸரஸ்வதியின் அம்சமான கவி என்பவள். அவளது மகன்‌ விஷ்வக்ஸேனன்.

மஹாயோகியான ப்ரும்மதத்தன் ஜைகீஷவ்யர் என்ற முனிவரிடம் உபதேசம்‌பெற்று யோக சாஸ்திரத்தைத் தோற்றுவித்தார். விஷ்வக்ஸேனனின் குமாரன் உதக்ஸ்வனன். அவனது மகன் பல்லாதன்.

ஹஸ்தியின் மகனான த்விமீடனின் வம்சம்‌முறையே யவீநரன், க்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன்,ஸுமதி, ஸந்ததிமான், க்ருதி. இந்த க்ருதி ஹிரண்யநாபர் என்பவரிடமிருந்து யோகசாஸ்திரத்தைப் பயின்று ப்ராச்யஸாமா என்ற ருக்குகளில் ஆறு ஸம்ஹிதைகளைப் பிரித்துக் கொடுத்தார்.

க்ருதியின் வம்சம்‌ முறையே நீபன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுவீரன், ரிபுஞ்ஜயன், பஹுரதன் ஆகியோர்.

த்விமீடனின் தம்பியான புருமீடனுக்கு மக்கட்பேறில்லை.

ஹஸ்தியின் முதல் மகன் அஜமீடன். அவனது இரண்டாவது மனைவி நளினி. அவளது மகன் நீலன். அவன் வம்சம் வருமாறு. சாந்தி, ஸுசாந்தி, புருஜன் அர்க்கன், ப்ரம்யாஸ்வன். அவனது மகன்கள் முத்கலன், யவீநரன், ப்ருஹதிஷு, காம்பில்யன், ஸஞ்ஜயன் என ஐந்து புதல்வர்கள். ஒருநாள் ப்ரம்யாஸ்வன் என் இந்த ஐந்து புதல்வர்களும் ஐந்து தேசங்களை நிர்வகிக்கத் தகுந்தவர்கள் என்று கூறினான். பஞ்ச + அலம் என்பதாக அவர்கள் பாஞ்சாலர்கள் என்று அறியப்பட்டனர்.

இவர்களுள் மூத்தவரான முத்கலனிடமிருந்து மௌத்கல்ய வம்சம் தோன்றியது.
அவரது புதல்வன் திவோதஸன், மகள் அகல்யை. இவள் கௌதம முனிவரை மணந்தாள். இவர்களது புதல்வர் ஸதானந்தர்.

சதாநந்தரின் மகன் ஸத்யதிருதி தனுர்வேதத்தில் சிறந்தவர். அவரது மகன் சரத்வான். அவர் ஒரு சமயம் ஊர்வசியைக் கண்டு காமுற, இரண்டு குழந்தைகள் அக்கணமே தோன்றினர். அவ்விரட்டையரில் ஆண்ம்கவு க்ருபாசார்யார். பெண் மகவு க்ருபி ஆவாள். கிருபி துரோணாசார்யாரை மணந்தாள்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Monday, August 12, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 313

பரதனின் தத்துப் பிள்ளை பரத்வாஜன் எனப்படும் விததன். அவனது மகன் மன்யு. அவனது மகன்கள் ப்ருஹத்க்ஷத்ரன், ஜயன், மஹாவீர்யன், நரன், கர்க்கன். நரனது மகன் ஸங்க்ருதி.

ஸங்க்ருதியின் புதல்வர்கள் குருவும், ரந்திதேவனும். இவர்களுள் ரந்திதேவனின் புகழ் உலகளாவியது.

ஆகாயம் போல் செல்வம் பெற்று அதை இழந்தவர் ரந்திதேவன். எந்த ஒரு முயற்சியும் இன்றி கிடைத்ததைப் பெற்று மழையைப் பெய்விக்கிறது ஆகாயம்.
அதுபோல் ரந்திதேவனும் இறையருளால் ‌கிடைத்ததைக் கொண்டு மனநிறைவு பெறுபவர். கிடைத்ததையும் பிறருக்கு அளித்துவிட்டுப் பட்டினி கிடப்பவர்.

தமக்கென்று எதையும் சேமித்துவைத்துக்கொள்ளாதவர். என்னுடையது என்ற எண்ணம் அற்றவர். மிகுந்த தைரியம் படைத்தவர். எல்லா நற்குணங்களும் இருந்தபோதும், குடும்பத்துடன் துன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது. குடிக்க நீர் கூட இன்றி நாற்பத்தெட்டு நாள்கள் கழிக்க நேரிட்டது. குடும்பமே துன்பத்தில் உழன்றது. பசிதாகத்தால் மிகவும் துயருற்றனர். அப்போது யதேச்சையாக கொஞ்சம்‌ நெய், கோதுமை, தீர்த்தம் ஆகியவை கிடைத்தன. மிகவும் மகிழ்ச்சியுடன் உண்ணப்போகும் நேரத்தில் ஒரு அந்தணர் விருந்தினராக வந்தார்.

எதிலும் ஸ்ரீமன் நாராயணனைக் கண்டு மகிழும் ரந்திதேவன், அவருக்கு மிகுந்த மரியாதையுடன் தன் பங்கு உணவை அளித்தான்.

மீதமுள்ள உணவைப் பகிர்ந்துண்ணத் துவங்கும் நேரத்தில் ஒரு வேளாளன் விருந்தாளியாக வந்தான். அவனை ரந்திதேவன் ஸாக்ஷாத் ஸ்ரீஹரியாகவே நினைத்து, தான் பகிர்ந்துண்ண வைத்திருந்த உணவை அவனுக்குக் கொடுத்தான்.

அவன் சென்றபின் மற்றொருவன் தன் நாய்கள் சூழ வந்தான்.
மன்னா! பசியில் துடிக்கும் என் நாய்களுக்கு ஏதேனும் உணவளியுங்கள் என்று கேட்டான்.

அவனையும், நாய்களையும் பகவத் ஸ்வரூபமாகப் பார்த்த ரந்திதேவன் தன்னிடம் மீதியிருந்த உணவை அவர்களுக்கு அளித்துவிட்டு வணங்கினான்.

அதன் பின் நீர் மட்டும் கொஞ்சம் மீதமிருந்தது. அதைப் பகிர்ந்து குடிக்கலாம் என்று எடுத்தபோது, பிணங்களை எரிக்கும் ஒருவன் வந்து தாகமாக இருக்கிறது நீர் கிடைக்குமா என்று வினவினான்.
அவனது பரிதாபமான குரலைக் கேட்ட ரந்திதேவன், மிகவும் மனம் கசிந்தான்.

எண்வகை சித்திகளையும் நான் விரும்பவில்லை. அனைத்து உயிர்களிலும் உள்ளிருந்து அவர்களின் துன்பத்தை நானே அனுபவிக்கவேண்டும். வேறெவரும் துன்பம் அனுபவிக்காமல் இருக்கவேண்டும் என்றான்.

என்று சொல்லி தன்னிடமிருந்த நீரை அவனுக்குக் கொடுத்தான்.
அழையா விருந்தாளிகளாக வந்த நால்வரும் உண்மையில் பகவானின் திருமேனிகளே. ரந்திதேவனின் கருணையைச் சோதித்தபின், ஸ்ரீமன் நாராயணன், ப்ரும்மதேவர், பரமேஸ்வரன் மூவரும் அவன் முன் தோன்றினர்.

பற்றற்று விளங்கிய ரந்திதேவன் அவர்களிடம் வரம் வேண்டவில்லை.
ரந்த்திதேவனின் சேர்க்கையால் அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே பகவானைச் சரண் புகுந்த அடியாராகவும், யோகியராகவும் விளங்கினர்.

தனக்கு மிஞ்சியது தானமும் தர்மமும் என்ற கூற்றின் விளக்கம் ரந்திதேவன் ஆவான். தான் அனுபவித்ததுபோக மிஞ்சியதை தானம் செய்யவேண்டும் என்று கொள்ளாமல், அனைத்து செல்வங்களும் நிலையற்றவை. நிலையற்ற இவ்வுலகில் உயிர் பிரியும் தருணத்தில் எதுவும் நம்முடன் வாரா. அவ்வமயம் நம்மோடு வருவதற்காக எஞ்சியிருப்பது நாம் செய்த தான தருமங்களால் வரும் புண்ணியங்களே.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, August 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 312

துஷ்யந்தனுக்குப் பிறகு பரதன் சக்ரவர்த்தியானான். இறையம்சத்துடன் பிறந்த அவனது வலது கையில் சக்ர ரேகையும், தாமரை மொட்டுக்களின் ரேகையும் காணப்பட்டன.

அரசர்க்கரசனாக அரியணை ஏறிய பரதன், பற்பல வேள்விகளைச் செய்தான்.

மமதா என்பவரின் மகனான தீர்கதமஸ் அவனது புரோஹிதர். அவரைக் கொண்டு கங்கோத்ரியில் துவங்கி, கங்கை கடலில் கலக்கும் வரையிலுள்ள கங்கைக் கரையில் ஐம்பத்தைந்து அஸ்வமேத யாகங்களும், யமுனோத்ரியிலிருந்து பிரயாகை வரையிலுள்ள கரையில் எழுபத்தெட்டு அசுவமேத யாகங்களையும் செய்தான்.

ஏராளமான செல்வங்களை தானமாகக் கொடுத்தான். ஒவ்வொரு முறையும் வேள்வித்தீ துவக்கும் சமயத்தில் ஆயிரம் அந்தணர்களுக்கு, ஒவ்வொருவர்க்கும் பதிமூன்றாயிரத்து எண்பத்து நான்கு பசுக்களை தானமாகக் கொடுத்தான்.

அந்த வேள்விகளில் நூற்று‌முப்பத்து மூன்று குதிரைகளை யூதஸ்தம்பத்தில் கட்டி வைத்து, நூற்று முப்பத்து மூன்று அசுவமேதங்களைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான்.
இவைகளால் அவனது புகழ் உலகெங்கும் பரவியது.

பரதன் செய்ததைப் போல் வேள்விகளை அதற்குமுன் ஒருவரும் செய்ததே இல்லை. இனியும் எவரும் செய்யக்கூடுமா என்ன?

எண்டிசைகளை வெற்றிகொள்ள திக்விஜயம் சென்றபோது, அந்தணர்களிடமும், ஸாதுக்களிடமும் பகைமை கொண்டவர்களும், ஹிம்ஸிப்பவர்களுமான கிராதர்கள், ஹூணர்கள், யவனர்கள், கங்கர்கள், கசர்கள், சாகர்கள், மிலேச்சர்கள் ஆகியவர்களுள் தீய எண்ணம் கொண்டவர்களை அழித்தான்.

முன்பொரு சமயம் பலம் மிக்க அசுரர்கள் தேவப் பெண்களை வலுவில் இழுத்துக்கொண்டு ரஸாதலத்தில் வைத்தார்கள். பரதன் அவர்களை வென்று தேவப்பெண்களை மீட்டான்.

விண்ணிலும் மண்ணிலும் அனைத்துவிதமான தேவைகளும் பரதனால் பூர்த்தி செய்யப்பட்டன. இருபத்தேழாயிரம் வருட காலம் ஒரே குடையின் கீழ் எண்டிசைகளையும் ஆண்டு வந்தான் பரதன்.

அளப்பரிய செல்வம், ஒரே குடையின் கீழ் உலகனைத்தும் ஆளும் போகம், தடையற்ற செங்கோன்மை, இவ்வுடல் அனைத்தையும் ஒருநாள் பொய்யென்றுணர்ந்து உலகியலிலிருந்து ஒதுங்கித் துறவேற்றான்.

விதர்ப்ப மன்னனின் மகள்கள் மூவர் பரதனின் மனைவிகள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தேஜஸ்வியாகவும், பரதனை ஒத்த பராக்ரமம் இல்லாதவர்களாகவும், பலம்‌ குறைந்தவர்களாகவும் பிறந்தனர். அவர்கள் இளம் வயதிலேயே இறந்துபட்டனர். இது கண்டு பரதன் மிகவும் வருந்தினான்.

இவ்வளவு செல்வம் இருந்தும் மக்கட்செல்வம் இன்றி துயருற்றான் பரதன். பிள்ளைப்பேற்றிற்காக மருத்ஸோமம் என்ற வேள்வியைச் செய்தான். தேவர்கள் அவ்வேள்வியால் மகிழ்ந்து அவனுக்கு ஒரு மகனைக் கொடுத்தனர். அவனது பெயர் பரத்வாஜன் என்பதாம்.

அவன் தேவகுருவின் புதல்வன். அவனை தேவகுரு கைவிட்டுவிட, மருத்கணங்கள் அவனை எடுத்து வளர்த்தனர். பரதனது வம்சம் தொடர்ச்சியற்றுப் போகாமல் இருக்க அக்குழந்தையை பரதனிடம் கொண்டுவந்து கொடுத்து விட்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, August 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 311

ஸ்ரீ சுகர் தொடர்ந்து பூருவின் வம்சத்தைக் கூறலானார்.

பரீக்ஷித்! நீ பிறந்த பூரு வம்சத்தின் பெருமையைக் கூறுகிறேன் கேள்.
பூருவின் மகன் ஜனமேஜயன். மேலும் அவனது வம்சாவளி முறையே ப்ரசின்வான், ப்ரவீரன், நமஸ்யு, சாருபதன்,ஸுத்யு, பஹுகவன், ஸம்யாதி, அஹம்யாதி, ரௌத்ராசுவன்.

ரௌத்ராசுவனுக்கு க்ருதாசீ என்ற அப்ஸரப் பெண்ணின் மூலம் ருதேயு, குக்ஷேயு, ஸ்தண்டிலேயு, க்ருதேயு, ஜலேயு, ஸந்ததேயு, தர்மேயு, ஸத்யதேயு, வ்ரதேயு, வனேயு ஆகிய பத்து புத்திரர்கள்.

இவர்களுள் ருதேயுவின் மகன் ரந்திபாரன். அவனுக்கு ஸுமதி, துருவன், அப்ரதிரதன் என்று மூன்று மகன்கள். அப்ரதிரதனின் மகன் கண்வன். அவனது மகன் மேதாதிதி. அவனுக்கு பிரஸ்கண்வன் முதலான அந்தணர்கள் பிறந்தனர்.

ஸுமதியின் மகன் ரைப்யன். இவனது மகன் மிகவும் புகழ் வாய்ந்த துஷ்யந்தன் பிறந்தான்.

ஒரு சமயம் வேட்டையாடச் சென்ற துஷ்யந்தன், கண்வ மஹரிஷியின் குடிலின் அருகில் வந்துவிட்டான். அங்கே திருமகளோ, தேவமகளோ என்னும்படியான பேரழகுடன் ஒரு பெண் தனிமையில் அமர்ந்திருந்தாள். கண்டதும் அவள்‌மேல் காதல் கொண்டான் துஷ்யந்தன்.

அவளிடம் இனிமையாகப் பேசத் துவங்கினான். நீ அரசகுமாரியாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் பூரு வம்சத்தவர்களின் மனம் அறநெறி பிறழ்வதில்லை. நீ யார் என்று சொல்வாயாக.
என்று கேட்டான்.

அவள், நீங்கள் சொல்வது உண்மைதான். என் தந்தை விஸ்வாமித்திரர். என் தாயான மேனகை என்னை வனத்தில் விட்டுச் சென்றுவிட்டாள். என் பெயர் சகுந்தலை. என்னை கண்வ முனிவர் எடுத்து வளர்த்தார். தாங்கள் யார்?

இங்கே அமருங்கள். எங்கள் பணிவிடைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். காட்டு நெல்லால் செய்யப்பட்ட அன்னம் இருக்கிறது. உணவு ஏற்கவேண்டும். விரும்பினால் தங்கி இளைப்பாறலாம்
என்றாள்.

துஷ்யந்தன் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான்.
குசிக வம்சத்தில் பிறந்த நீ இவ்வாறு விருந்தோம்புவது இயற்கையே. அரசகுமாரிகளுக்கு தங்கள் கணவரைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டே. நான் பூரு வம்சத்து அரசன் துஷ்யந்தன். என்னை ஏற்பாயா? என்றான்.

அவள் மனமும் துஷ்யந்தனைக் கண்டதும் நெகிழ்ந்திருந்த காரணத்தால், ஒப்புதல் தெரிவித்தாள். இடம், காலம் நெறிமுறைகளை நன்கறிந்த துஷ்யந்தன் அவளை காந்தர்வ முறைப்படி அப்போதே திருமணம் செய்துகொண்டான். அவ்விரவு அங்கேயே களித்திருந்த பின், மறுநாள் அரண்மனை சென்றான்.

கண்வர் அவ்வமயம் வெளியில் சென்றிருந்தபடியால், சில காலம் கழித்து அவர் திரும்பி வந்ததும் அவரிடம் கூறிவிட்டு முறையாக அழைத்துச் செல்லலாம் என்று அவளை விட்டுச் சென்றான்.

இதற்கிடையில் துர்வாச முனிவரின் சாபத்தாலும், விதிப்பயனாலும், நடந்தவை அனைத்தும் அவனது நினைவிலிருந்து நீங்கிற்று.

உரிய காலத்தில் சகுந்தலை ஓர் அழகிய ஆண்மகவைப் பெற்றாள். ஞானத்ருஷ்டியால் அனைத்தையும் உணர்ந்த கண்வர், அனைத்தும் இறைவன் திருவுளம் என்று கொண்டு, குழந்தைக்கு ஜாதகர்மா முதலிய கர்மாக்களைச் செய்து வைத்து, பரதன் என்று பெயரிட்டு அங்கேயே வளர்த்து வந்தார்.

அக்குழந்தையோ நடக்கும் பருவம் வந்தவுடனேயே, வலிமை பொருந்திய சிங்கங்களைப் பிடித்துக் கட்டி வைத்து அவைகளுடன் விளையாடலாயிற்று.

ஒரு நாள் சகுந்தலா கணவனை நாடி, குழந்தையுடன் துஷ்யந்தனின் அரண்மனைக்குச் செல்ல, அரசனுக்கோ அவளது நினைவு அறவே இல்லை.

அப்போது ஆகாசவாணியாக,
துஷ்யந்தா! இவள் உன் மனைவி. குழந்தையும் உன் பிள்ளை. அவர்களை ஒதுக்கலாகாது. உன் மனைவியையும் மகனையும் ஏற்றுக்கொள்
என்று உத்தரவு கேட்டது.

அறநெறி தவறாத அரசர்களுக்கு குழப்பம் வரும் சமயம், தெய்வம் உடனேயே உதவுவதைப் பல புராணங்களில் பார்க்கிறோம். ஆனாலும் இது பெரிய அதிசயமே.

தெய்வ வாக்கைக் கேட்டு துஷ்யந்தன் அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, August 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 310

முதுமையை சாபமாகப் பெற்ற யயாதி, எவரேனும் விரும்பினால் அவருடன் மாற்றிக்கொள்ளலாம் என்ற விமோசனத்தையும் சுக்ராசார்யாரிடமிருந்து பெற்றான்.

தன் நகரம் திரும்பி, தன் மூத்த மகனான யதுவிடம், உன் தாத்தா எனக்களித்த சாபத்தால் முதுமை வந்துவிட்டது. என் மனத்தில் இன்னும் உலகியல் ஆசைகள் அடங்கவில்லை. உன் இளமையை எனக்குக் கொடு. சில காலம் நான் இன்பங்களை அனுபவித்துவிட்டு மீண்டும் முதுமையை வாங்கிக்கொள்கிறேன். என்றான்.

யது அதற்கு மறுத்துவிட்டான். யயாதியின் மற்ற புதல்வர்களான, த்ருஹ்யு, துர்வஸு, அனு ஆகிய மூவரும்கூட யயாதி எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் மறுத்துவிட்டனர்.

யயாதி் கடைசி மகனான பூருவை அழைத்துக் கேட்டான்.

அவனோ,
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அளிக்கவல்ல இவ்வுடலை அளித்ததே நீங்கள்தான். உங்களுக்கு என்னால் என்ன கைம்மாறு செய்து விட முடியும்? தங்களை மகிழ்விப்பதே எனக்கு எல்லா அருளையும் பெற்றுத்தரும்‌.

தந்தை நினைப்பதை அவர் சொல்லாமலே நிறைவேற்றுபவன் உத்தமன். தந்தை சொல்வதைச் செய்பவன் மத்யமன். தந்தை கூறியபின் அதை ஈடுபாடின்றிச் செய்பவன் அதமன். செய்யாதவன் மகனே அல்லன்.

என்று சொல்லி முதுமையை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இளமையைக் கொடுக்க இசைந்தான்.

யயாதி இளமையைப் பெற்று பற்பல உலகியல் இன்பங்களை விருப்பம்போல் அனுபவித்தான். ஏழு தீவுகளுக்கும் ஒரே தலைவனாக இருந்து தந்தை போல் மக்களைக் காத்தான்.

அவனிடம் அதிக அன்பு கொண்டிருந்த தேவயானியும் நன்கு பணிவிடை செய்து, அவனுக்கேற்ற இல்லாளாக விளங்கினாள்.

யயாதி பற்பல வேள்விகள் செய்து ஸ்ரீமன் நாராயணனை ஆராதித்தான்.
ஆயிரமாண்டுகள் விருப்பம்போல் வாழ்ந்த யயாதி, எவ்வளவு அனுபவித்தும் புலன்கள் அடங்காததைக் கண்டு ஒருநாள் வெட்கினான்.

தேவயானியை அழைத்து, புலன்களின் பற்றால் தன் மனம் அடங்காததையும் தன் இழிநிலையைச் சொல்லி வருந்தினான்.
இனியும் இவ்வாறு இருக்கலாது என்று உணர்ந்து பூருவிடம் அவனது இளமையைக் கொடுத்துவிட்டு, தன் கிழத்தனத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டான்.

தென்கிழக்கு நாடுகளை த்ருஹ்யுவிற்கும், தென்திசை நாடுகளை யதுவிற்கும், மேற்றிசை நாடுகளை துர்வஸுவிற்கும், வடதிசை நாடுகளை அனுவிற்கும் அரசர்களாக நியமித்தான்.

பூருவை தன் ராஜ்ஜியத்தின் அரசனாக்கிவிட்டு அவனை ஏழு த்வீபத்திற்கும் ஒரே சக்ரவர்த்தியாக அறிவித்து, மற்ற புதல்வர்களை பூருவிற்குக் கீழ் அரசாட்சி செய்யுமாறு பணித்தான்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக புலன்களின் பிடியிலிருந்த யயாதி, இறக்கை முளைத்ததும் கூட்டை விட்டுப் பறக்கும் பறவை போல் ஒரு கணத்தில் சிற்றின்ப வேட்கையைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினான்.

வனத்தை அடைந்த யயாதி, ஆன்மாவின் உண்மை நிலையை உணர்ந்து, இவ்வுடலை மறந்து நற்கதியடைந்தான்.

அச்செய்தியைக் கேள்வியுற்ற தேவயானியும், விரக்தியடைந்து பற்றை ஒழித்தாள். இறைவனையே த்யானம் செய்து நற்கதி அடைந்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, August 4, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 309

குலகுருவான சுக்ராசார்யார் மகளுடன் ஊரை விட்டுச் செல்வதை அறிந்த அசுர அரசன் வ்ருஷபர்வா, அவர் பகைவர்க்கு அருளச் செல்வாரோ என்று அஞ்சினான். எனவே, ஓடிச்சென்று அவரது திருவடி பணிந்தான்.

உடனேயே மனங்கனிந்த சுக்ராசார்யார், அவனிடம்
என் மகளை என்னால் விட்டுக்கொடுக்க இயலாது. நீ அவளது சினம் தணியச் செய்தால் நகரம் திரும்புவேன் என்றார்.

வ்ருஷபர்வா தேவயானியிடம் கேட்க, அவளோ,
என் தந்தை என்னை யாருக்குத் திருமணம் செய்து வைத்தாலும், நான் எங்கெங்கு சென்றாலும், அங்கெல்லாம் சர்மிஷ்டையும் அவளது தோழிகளும் எனக்குப் பணிவிடை செய்துகொண்டு வரவேண்டும் என்றாள்.

குரு திரும்பி வராமல் போனால், நிகழும் சங்கடங்களையும், அவர் தம்முடன் இருப்பதால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகளையும் மனத்தில் கொண்டு தேவயானி இதற்கு சம்மதித்தாள்.

சுக்ராசார்யார் தேவயானியை யயாதிக்குத் திருமணம் செய்து கொடுத்தார். சர்மிஷ்டை அவர்களுடன் பணிப்பெண்ணாகச் சென்றாள்.
சுக்ராசார்யார் எக்காரணம் கொண்டு அவளை அந்தரங்கத்திற்கு அழைக்கக்கூடாது என்ற விதியுடன் சர்மிஷ்டையை யயாதி மற்றும் தேவயானியுடன் அனுப்பினார்.

சில நாள்களில், தேவயானிக்குக் குழந்தை பிறந்ததைக் கண்டு, சர்மிஷ்டை தன்னையும் மனைவியாக ஏற்கும்படி யயாதியிடம் தனிமையில் வேண்டினாள்.

மக்கட்பேற்றிற்காக தன்னை ஏற்கும்படி வேண்டும் சர்மிஷ்டையை மறுதலிப்பது அரசதர்மம் அன்று என்பதாலும், குருவின் வாக்கு நினைவிருந்ததாலும், தெய்வாதீனமாக ஏற்படும் சங்கடத்தை சமாளிக்க எண்ணி சர்மிஷ்டையின் வேண்டுகோளை ஏற்றான்.

தேவயானி, யது, துர்வஸு ஆகிய புதல்வர்களைப் பெற்றாள். சர்மிஷ்டை த்ருஹ்யு, அனு, பூரு ஆகிய மூன்று பிள்ளைகளைப் பெற்றாள்.

தன் கணவன் மூலமாக சர்மிஷ்டைக்கு குழந்தை பிறந்ததை அறிந்த தேவயானி கடுஞ்சினம் கொண்டு தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டாள். யயாதி எவ்வளவு சமாதானப் படுத்தியும், அவள் கேட்டாளில்லை.

மகளின் நிலையைப் பார்த்து மனம் கலங்கிய சுக்ராசார்யார், யயாதியை வயோதிகம் ஆட்கொள்ளட்டும் என்று சபித்தார்.

அதைக் கேட்டு யயாதி,
அந்தணோத்தமரே! உலக இன்பங்களிலிருந்து என் மனம் விடுபடாத நிலையில் இந்தச் சாபம் அளித்துவிட்டீர். உங்கள் மகளுக்கும் இதனால் துன்பம்தானே. தயவு கூர்ந்து விமோசனம் அருளுங்கள் என்றான்.

அவனது பணிவைக் கண்ட சுக்ராசார்யார் மனமிரங்கி,
யாராவது மகிழ்ச்சியுடன் தம் இளமையை உனக்குத்தந்து உன் முதுமையை வாங்கிக் கொள்வாராயின் நீ மாற்றிக்கொண்டு இளமையை அடையலாம் என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, August 3, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 308

யயாதி அரசனானதும், தன் நான்கு தம்பிகளையும் நாற்றிசை நாடுகளுக்கு அரசர்களாக்கினான். சுக்ராசார்யாரின் மகளான தேவயானியையும், அசுர மன்னன் வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்துகொண்டான்.

இவ்வாறு ஸ்ரீ சுகர் கூறியதும்,
பரீக்ஷித் இடை மறித்தான்.
முனிச்ரேஷ்டரே! சுக்ராசார்யர் அந்தணர். யயாதியோ க்ஷத்ரியன். இவர்களது திருமணம் எவ்வாறு நடைபெற்றது? வழக்கிற்கு மாறாக உள்ளதே
என்றான்.

அசுர மன்னனான வ்ருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டை ஒரு பேரழகி. அவளது தோழிகளுள் ஒருத்தி, அசுரகுல குருவான சுக்ராசார்யாரின் மகள் தேவயானி.

சர்மிஷ்டை ஒரு சமயம் தேவயானியுடனும், மற்றும் பல தோழிகளுடனும் நகரிலுள்ள அழகிய நந்தவனங்களில்‌ உலவிக்கொண்டிருந்தாள்.
அவ்வனங்களில் பூத்துக் குலுங்கும் மரங்களும், செடிகளும், தாமரைகள் பூத்த தடாகங்களும் இருந்தன.

பேரழகிகளான அவர்கள் ஒரு நந்தவனத்திலிருந்த தடாகத்தின் கரையில் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டு நீர்விளையாட்டு ஆடினார்கள்.

அவ்வமயம் பரமேஸ்வரன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலேறி அவ்வழியே வந்து கொண்டிருந்தார்.


உடனே அப்பெண்கள் அனைவரும் ஓடிச்சென்று தத்தம் ஆடைகளை அவசரம் அவசரமாக அணிந்துகொண்டனர். பரபரப்பினால் சர்மிஷ்டை தேவயானியின் ஆடையைத் தன்னுடையதென்று எண்ணி தவறாக அணிந்துகொண்டுவிட்டாள்.

அதைக் கண்ட தேவயானிக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. அவளைப் பார்த்துச் சுடுசொல் கூறி ஏசினாள்.

அடியே! வேள்விக்கான அவியுணவை நாய் கவ்வியதுபோல், என் ஆடையை இவள் உடுத்திக்கொண்டாளே. ஸ்ரீமன் நாராயணனே கொண்டாடும் ப்ருகு வம்சத்தவர் நாங்கள். இவள் தந்தையோ அசுர வேந்தன். என் தந்தையின் சீடன். அவரது திருவடி தொழுபவன். இவள் எப்படி என் ஆடையை உடுக்கலாம்? இதென்ன அநியாயம்?

இதைக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்ட சர்மிஷ்டை,
நீ ஒரு பிச்சைக்காரி. காக்கையும் நாயும் பிறர் வீட்டு வாசலில் உணவுக்காகக் காத்து நிற்பதுபோல் நீ எங்கள் வீட்டைப் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாய். உனக்கு இவ்வளவு ஆணவமா?
என்று கத்திவிட்டு, தேவயானியின் ஆடைகள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டுப் போய்விட்டாள்.

வேட்டையாடிவிட்டு அவ்வழியே வந்த யயாதி மன்னன், தாகத்திற்காக நீர் இறைக்கக் கிணற்றின் அருகில் சென்றான். கிணற்றினுள் ஆடையின்றித் தவிக்கும் தேவயானியின் மேல் பரிதாபப்பட்டுத் தன் மேலாடையைக் கொடுத்தான். அவளைக் கிணற்றிலிருந்து மேலேற்றிவிட்டான்.

வெளியில் வந்த தேவயானி, யயாதியைப் பார்த்து,
தாங்கள் பற்றிய இக்கரத்தை வேறெவரும் பற்றலாகாது. கிணற்றில் விழுந்த எனக்கு இறையருளால் தங்கள் தொடர்பு கிடைத்தது. முன்பொரு சமயம் ப்ருஹஸ்பதியின் புதல்வனான கசனை நான் சபித்தேன். அதற்கு பிரதி சாபமாக எனக்கு அந்தணனுடன் திருமணம் நடக்காது. என்னை மணந்துகொள்ளுங்கள் என்றாள்.

இந்த சம்பந்தம் அறநெறிக்குப் புறம்பானதால், யயாதி இதை விரும்பவில்லை தான். ஆனாலும் இத்தொடர்பு தெய்வாதீனமாக எதிர்பாராமல் நிகழ்ந்ததாலும், தேவயானியை அவனுக்குப் பிடித்திருந்ததாலும் அவளது சொல்லை ஏற்றான்.

யயாதி சென்றதும், தேவயானி அழுதுகொண்டே தன் தந்தையிடம் நடந்ததனைத்தையும்‌ கூறினாள்.
தன் மகள் கூறியதைக் கேட்டு மனம் வருந்திய சுக்ராசார்யார், அசுர‌மன்னனுக்கு புரோஹிதனாக இருப்பதை விட உஞ்சவ்ருத்தி வாழ்க்கையே மேல் என்று நினைத்து பெண்ணையும் அழைத்துக்கொண்டு அந்நகரத்தை விட்டுச் சொல்லாமல் வெளியேறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..