Saturday, October 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 589

யதுவின் கேள்விக்கு அவதூதரான தத்தாத்ரேயர் புன்முறுவலுடன் பதிலிறுக்கத் துவங்கினார்.

அரசனே! எனக்குப் பல ஆசார்யர்கள் பாடம்‌ கற்பித்திருக்கிறார்கள். அவைகளின் பலனாக எனக்கு இவ்வுலகத்துடனான ஒட்டுதல் அறுந்துபோய்விட்டது. 
என் ஆசார்யர்கள் யார் யார் தெரியுமா?

பூமி, காற்று, ஆகாசம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேனெடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் பொதுமங்கை, குரா எனப்படும் பட்சி, ஒரு சிறுவன், கன்னிப்பெண், வேடன், பாம்பு, சில்ந்தி, மற்றும் குளவி ஆகியோர்.

இந்த இருபத்துநான்கு குருமார்களிடம் நான் என்ன கற்றேன் என்று கூறுகிறேன் கேள்.

எல்லா ஜீவன்களாலும் வெகுவாகத் துன்புறுத்தப்பட்டாலும், அனைத்தையும் தன் கர்மா என்றெண்ணித் தன்னிலை மாறாமல் இருக்கும் பொறுமையை பூமியிடம் கற்றேன்.
புவியின் அனைத்து நிலைப்பாடுகளும் பிறர் நன்மைக்காகவே. அதற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதன் குழந்தைகளான மரங்களும் செடிகளும் கூட பரோபகாரத்தை மேற்கொண்டுள்ளன.

ஒரு யோகி தன் உடலில் உயிர் நிலைக்கத் தேவையான அளவு உணவை மட்டுமே ஏற்கவேண்டும். புலன் இன்பத்திற்காக ஏராளமான உணவுகளை உண்ணலாகாது. உணவுக்கட்டுப்பாட்டினால் வாக்கும் மனமும் அடங்கும்.

காற்று எங்கும் நிறைந்துள்ளது. ஆனாலும் எதனோடும் ஒட்டுவதில்லை. அதுபோல் யோகியும் எல்லா இடத்திலும் சுற்றினாலும் எதன் மீதும் ஒட்டுறவு கொள்ளலாகாது. வாயு நறுமணத்தையோ, துர்நாற்றத்தையோ தூக்கிக்கொண்டு சென்றாலும் அதனோடு ஒன்றுவதில்லை. ஆத்மாவானது பஞ்சபூதங்களால் ஆன சரீரத்தினுள் இருந்தாலும் எதனோடும் ஒட்டாமல் தனித்து நிற்கிறது‌. இதை நன்குணரவேண்டியது யோகியின் தர்மமாகும்.

ஆகாயம் இல்லாத இடமே‌ இல்லை. எல்லா ஜீவன் மற்றும்‌ பொருள்களிலும் உள்ளும் புறமுமாக வியாபித்திருப்பது ஆகாயம். யோகியானவன் எல்லா இடத்திலும் இருந்தாலும் எதனோடும் ஒட்டாத ஆகாயத்தோடு ஆன்மாவை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளவேண்டும்.

நீர் இயற்கையிலேயே தூய்மையானது. த்ருப்தி தருவது. தன்னைத் தொடுபவர்களைத் தூய்மைப் படுத்துவது. அதே போல ஒரு முனிவனும் தன் பார்வை மற்றும் வாக்கினால் மற்றவருக்கு அன்பையும் மனத் திருப்தியையும் வழங்கவேண்டும். எப்போதும் மனத்தூய்மை பெற்றிருக்கவேண்டும். அவனோடு தொடர்பு கொள்பவர்களின் பாவங்களைத் தூய்மைப் படுத்த வேண்டும். முனிவனுக்கு நீரின் நண்பன் என்ற செல்லப்பெயர் உண்டு.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, October 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 588

கண்ணன் கூறியதைக் கேட்ட உத்தவர் அவனது எண்ணத்தை மாற்ற முடியாது என்று அறிந்துகொண்டார். இருப்பினும் கண்ணன் கிளம்புவதற்குள் அவன் வாயிலாக தத்துவ ஞானத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் மேலும் கேட்டார். 

உத்தவர் பெரிய ரசிகர் ஆவார். கண்ணனிடம் ஏதாவது பேச்சு கொடுத்தால் அதற்கு விடை சொல்லும் விதமாக அவனது இதழ்கள் குவிந்து விரியும், அலையும் குழற்கற்றையை ஒயிலாக ஒதுக்குவான். கன்னத்தில் பளபளக்கும் அவனது குண்டலங்களின் ஒளியில் மின்னும் விழிகள் ஆகியவற்றை ரசிக்கலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். ஏனெனில் உத்தவருக்கு ஏற்கனவே ப்ரேம பக்தியையும் ஞானத்தையும் உபதேசித்த கண்ணன் அவரைத் தன் ஆருயிர்த் தோழராக ஏற்று உள்ளத்தைப் பகிர்ந்திருந்தான். பல நேரங்களில் கண்ணனின் பார்வையை வைத்தே அவனது எண்ணத்தை அறிந்து அதைத் தானே சபையில் முன்மொழிவார் உத்தவர்.

அவரது எண்ணங்களை முழுதுமாக அறிந்திருந்த கண்ணன், அவரை முன்னிட்டுக்கொண்டு உலகோர்க்காக தத்துவ ஞானத்தை உபதேசிக்கிறான்.

உத்தவா! தத்துவஞானத்தை உணர்ந்த மனிதர்கள் விவேகத்துடன் தீய மனப்பாங்கிலிருந்து தாமே விலகிவிடுகிறார்கள்.

அவர்கள் தனக்குத்தானே ஆசார்யனாக இருந்துகொள்வார்கள். பிறர் வாழ்க்கையிலிருந்து கண்ட அனுபவம், அனுமானங்கள், தமது ப்ரத்யக்ஷ அனுபவம் ஆகியவற்றின் மூலம் தாமே மனத்தெளிவு பெற்றுவிடுகிறார்கள்.

ஸாங்க்யம், மற்றும் யோகம் ஆகியவற்றில் தேர்ந்த ஞானிகள் வாழும் காலத்திலேயே பேராற்றல் படைத்த என்னை நேராகவும், காணும் பொருள் அனைத்திலும் மற்றும் ஸகுண, நிர்குண, விராட் வடிவங்களிலும் காணவல்லவர்கள்.

ஒரு கால், இரு கால்கள், மூன்று, நான்கு கால்கள், ஏராளமான கால்கள் மற்றும் கால்களே இல்லாமல் என்னால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் மனிதன்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவன். 

எதற்கும் அகப்படாத என்னை மனிதனால் சுலபமாகப் பிடித்து விட முடியும். சாஸ்திரம், பிரமாணம், அனுமானம், ஆப்த வாக்கியம் (ஏற்கனவே கண்டவர்களின் வாக்கு) ஆகியவற்றின் மூலம் சுலபமாகக் கண்டறியலாம். 

முன்பொரு முறை தத்தாத்ரேயருக்கும் யது அரசனுக்கும் இடையே இது விஷயமாக ஒரு உரையாடல் நடந்தது. 

எல்லா விதமான தர்மங்களையும் அறிந்த யது ஒரு முறை ஆடையின்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு வாலிப வயது அவதூத சன்யாசியைக் கண்டான். அவரைப் பார்த்து அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று கேட்டான்.

ஓ! உத்தமரே! தாங்கள் எந்த கர்மாவும் செய்வதில்லை. அப்படியிருக்க தங்கள் முகத்தில் ஞான ஒளி வீசுகிறதே. பார்ப்பதற்குச் சிறுவனாகத் தென்படும் தாங்கள் சிறந்த அறிவு பெற்றது எங்ஙனம்?

செல்வம், புகழ், ஆயுள் ஆகியவற்றிற்காக தர்ம அதர்ம காரியங்களை மனிதர்கள் செய்கிறார்கள். எல்லா செயல்களையும் மிக எளிதாகச் செய்யக்கூடிய நீங்கள் ஏன் செயல்களற்று பித்தனைப்போலவும், சித்தம் கலங்கியவன் போலவும் திரிகிறீர்கள்? 

எல்லா மனிதர்களும் காம க்ரோத லோப மோக மத மாத்ஸர்யங்களால் எரிக்கப்படுகிறார்கள். ஆனால் நீங்களோ கங்கா ப்ரவாஹத்தின் நடுவில் நிற்கும் யானையைப்போல் எதற்கும் கலங்காமல் அசைவற்று நிற்கிறீர்கள். உலகப்பொருள்களில் ஒட்டுதல் இன்றி ஆத்மாவிலேயே நிலைபெற்றிருப்பது தங்களுக்கு மட்டும் ‌எப்படி சாத்தியமாகிறது? என்று கேட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, October 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 587

யாதவர்கள் அனைவரும் பயணத்திற்குத் தயாராக, அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த உத்தவருக்கு மனம் கலங்கிற்று.

கண்ணனிடம் வந்து வண்ங்கிவிட்டுப் பேசலானார்.

தங்கள் லீலைகள் சொல்பவரையும் கேட்பவரையும் பவித்ரமாக்குகின்றன. பிராம்மண சாபம் உங்களுக்கு ஒரு பொருட்டில்லை. எவ்வளவோ அசுர சக்திகளை அழித்த தங்களுக்கு இதிலிருந்து தப்புவது ஒரு விஷயமா? ஆனாலும் அதைச் செய்ய விரும்பாமல் ஏற்றுக்கொண்டு இவ்வுலகை விட்டுக் கிளம்ப முடிவுசெய்துள்ளீர்கள்.

தங்கள் பாதகமலங்களைக் கணநேரமும் என்னால் பிரிய இயலாது. தாங்கள் செல்லுமிடத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

தங்களுடைய லீலைகளைச் சுவைத்த பின்பு மனம் வேறு எதில் நிலை கொள்ளும்? 
பல வருடங்களாக உட்காருதல், நடத்தல், உண்ணுதல், உறங்குதல் என்று எல்லாச் செயல்களையும் ஒன்றாகவே செய்தோம். அப்படியிருக்க என்னைப் பிரிந்து நீங்கள் செல்லலாமா?

தாங்கள் உபயோகித்த பொருள்களையே ப்ரசாதமாக இதுநாள் வரை பயன்படுத்தியிருக்கிறேன். நாங்கள் அனைவருமே தங்களது அடிமைகள். இந்த மாயையையும் வெற்றி கொள்ள எங்களுக்கு அருள் செய்யுங்கள்.

யோகீஸ்வரர்கள் தங்கள் சக்தியினால் ப்ரும்மலோகத்தை அடைவர். ஆனால் நாங்களோ இந்தக் கர்ம மார்கத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் கொடுமையான மாயையை நாங்கள் தங்கள் பெயரையும் லீலைகளையும் சொல்லிக்கொண்டு்ம் கேட்டுக்கொண்டும் சுலபமாகக் கடந்துவிடுவோம். அதற்காக உடலை வருத்தவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. ஆனால் உங்களைப் பிரியும் சக்தி எங்களுக்கில்லை என்றார்.

அதைக் கேட்ட கண்ணன் அழகாகப் புன்முறுவல் பூத்தான். பின்னர் உத்தவரின் தோளின் மீது கையைப் போட்டுக்கொண்டு ஒரு தனியிடத்திற்கு அழைத்துப்போனான்.

உத்தவா! நீ சொல்வது உண்மைதான். நான் இப்புவியை விட்டுக் கிளம்பப்போகிறேன். ப்ரும்மா முதலான தேவர்கள் அனைவரும் வந்து என்னை தேவலோகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

நான் பலராமனுடன் அவதாரம் செய்ததன் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது.

பிராம்மண சாபத்திற்கு ஆளான இந்த யதுவம்சம் தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு முழுவதுமாக அழியப்போகிறது.

இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த துவாரகை நகரைக் கடல் விழுங்கிவிடும். 

நான் இவ்வுலகிலிருந்து நீங்கியவுடன் நற்செயல்கள் யாவும் அழியும். கலியுகம் வரப்போகிறது. கலிபுருஷன் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கெடுத்துவிடப்போகிறான். 

மக்கள் அனைவரும் துர்நடத்தையுள்ளவர்கள் ஆவார்கள். அதர்மத்தைப் பின்பற்றுவதில் ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

உன்னால் அதையெல்லாம் தாங்கிக்கொள்ள இயலாது.
நான் சென்ற பிறகு நீ இங்கே இருக்கவேண்டாம். நீ உன் உறவுகளிடம் கொண்ட பாசத்தை அழித்து என்னிடமே மனத்தை ஒருமுகப்படுத்தி பற்றற்றுத் திரிவாயாக.

புலன்களால் அனுபவிக்கப்படுபவை அனைத்தும் அழியக்கூடியவை என்று அறிந்துகொள்.

மனத்தெளிவு இல்லாதவர்களுக்கு மனமயக்கம், குணம், தோஷம் அனைத்தும் உண்டு.
அவர்களுக்காகவே அனைத்து விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.

உன் மனத்தை ஒரு நிலைப் படுத்தி எல்லாப் பொருள்களிலும் என்னையே காண்பாய். நானே இவ்வுலகமாக விளங்குகிறேன்.

அனைத்து உடல்களிலும் உயிராக விளங்குவது நானே என்பதை உணர்வாய் உத்தவா!

எல்லா பிராணிகள், மற்றும் ஜீவன்கள் அனைத்தையும் அவற்றின் குண தோஷங்களைப் பாராமல் என் ஸ்வரூபமாகவே எண்ணி அவற்றை நேசிப்பாயாக! அது ஒன்றே இப்பிறவிச் சுழலினின்று மீளும் வழியாகும் என்றான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. 

Friday, October 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 586

எல்லா தேவர்களும் துதி செய்ததும் ப்ரும்மா பேசத் துவங்கினார்.

எல்லாவற்றிற்கும் தலைவரான ப்ரபோ! பூமியின் பாரத்தைக் குறைக்கவேண்டும் என்று நாங்கள் முன்பொரு முறை வேண்டிக்கொண்டோம். பெருங்கருணையால் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க தாங்கள் இப்புவியில் அவதாரம் செய்து எங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டீர்கள்.

தர்மத்தை நிலைநிறுத்தும் சான்றோர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தோற்றுவித்தீர்கள்.

மிகவும் அழகிய வடிவெடுத்து யாதவ குலத்தில் அவதரித்து கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பல லீலைகளைச் செய்தீர்கள்.

சாமான்ய மக்கள் எண்ணிக்கையில் அடங்காத அந்த லீலைகளைக் கேட்டும், பாடியும் அஞ்ஞான இருளைக் கடந்துவிடுவர்.

நீங்கள் இப்புவியில் தோன்றி நூற்றி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்களால் வேண்டப்பட்ட எல்லா காரியங்களும் நிறைவேறிவிட்டன. தாங்கள் விரும்பினால் தங்களது நிலயான ஸ்தானமான ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளலாம். எங்கள் அனைவரையும் காப்பவர் தாங்களே.

என்றார்.

கண்ணன் அனைவரையும் பார்த்து ஒரு மோஹனப் புன்முறுவல் செய்தான்.

ப்ரும்மதேவரே! நானும் அதையே தான் முடிவுசெய்துள்ளேன்‌. பூமியின் சுமை குறைந்துவிட்டது. 

இப்போது இந்த யாதவகுலம் வெல்லவே முடியாத அளவு பெரும்பலத்துடன் விளங்குகிறது. அவர்கள் இவ்வுலகைக் கைப்பற்றும் எண்ணத்துடன் மிகுந்த சக்தியுடன் செயல்படுகிறார்கள். என் கட்டளைக்குப் பணிந்து சற்றே அமைதி காக்கிறார்கள்.

இப்போது நான் கிளம்பிவிட்டால் பெரும் சக்தியாக மாறி நிற்கும் இவர்கள் கட்டுப்பாடின்றி நடந்து மக்களைத் துன்புறுத்துவார்கள். 

அந்தண சாபம் என்ற காரணம் கொண்டு அவர்களையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதன் செயலாக்கம் இப்போது துவங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் அழிந்ததும், நான் என் இருப்பிடமான வைகுண்டம் திரும்புவேன்.

என்றான்.

அதைக் கேட்டதும் ப்ரும்மா முதலிய அத்தனை தேவர்களும் தங்கள் திருமுடி தரையில் படுமாறு கண்ணனை விழுந்து வணங்கிவிட்டுத் தத்தம் இருப்பிடம் சென்றனர்.

பின்னர் துவாரகையில் மிகவும் கோரமான உற்பாதங்கள் ஏற்படத் துவங்கின.

கண்ணன் துவாரகையிலுள்ள சான்றோரையும் முதியோரையும் அழைத்து, 

பெரியவர்களே! இப்போது துவாரகையில் பெரிய ஆபத்துகளுக்கான நிமித்தங்கள் தோன்றுகின்றன. நமது குலத்திற்கு பிராம்மண சாபம் ஏற்பட்டிருக்கிறது‌. எனவே நாம் அனைவரும் இங்கிருந்து கிளம்பி பிரபாஸ க்ஷேத்ரம் செல்வோம். 

அதன் மஹிமை சொல்லில் அடங்காதது. முன்பொரு ‌சமயம்‌ தக்ஷ ப்ரஜாபதிக்கு ராஜபிளவை என்ற கொடிய நோய் ஏற்பட்டது. அப்போது அவர் அந்த ப்ரபாஸ தீர்த்தத்தில் நீராடியதும் உடனேயே அந்நோயிலிருந்து விடுபட்டார். நாமும் அங்கு சென்று தேவர்க்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தி தானங்கள் செய்வோம். இவற்றால் பெரிய இன்னல்களை சுலபமாகக் கடக்க இயலும் என்றான்.

கண்ணனின் சொல்லே துவாரகாவாசிகளுக்கு வேதம் என்பதால் அனைவரும் ப்ரபாஸம்‌ நோக்கிப் புறப்பட ஆயத்தம் செய்யத் துவங்கினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, October 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 585

ஸ்ரீ சுகர் மேலும் தொடர்ந்தார்.

ஹே பரீக்ஷித்! ஒரு முறை ப்ரும்மா தன் மானஸ புத்திரர்களான ஸநகாதி முனிவர்கள், ப்ரஜாபதிகள், பூதகணங்கள், பரமேஸ்வரன், மருத் கணங்கள், இந்திரன், பதினோரு ஆதித்யர்கள், அஷ்ட வசுக்கள், அஸ்வினி குமாரர்கள், ரிபு, ஆங்கீரஸர், ருத்ரர்கள், விஸ்வே தேவர்கள், ஸத்யர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், ஸித்த சாரணர்கள், குஹ்யர்கள், ரிஷிகள், பிதரர்கள், வித்யாதரர்கள், மற்றும் கின்னரர்கள் ஆகிய அனைவரும் புடை சூழ துவாரகை வந்தார்.

அனைவரும் எல்லா மங்களங்களையும் அருளும் அழகிய வடிவினனான கண்ணனைக் கண் இமைக்காமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் தாங்கள் கொண்டுவந்த மலர்களால் பூமாரிப் ‌பொழிந்து துதித்தனர்.

கர்மத்தளையிலிருந்து விடுபட்டு இறையுணர்வில் திளைக்கும் பக்தர்களின் ஹ்ருதயத்தில் தங்கள் திருவடிகள் ப்ரகாசிக்கின்றன‌. அவற்றை மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் வணங்குகிறோம்.

வெல்லமுடியாதவரே! தங்களுடைய ஏவலான முக்குண வடிவு கொண்ட மாயையை வெல்வது கடினம். ஆனால் அது உங்களிடம் ஒட்டுவதில்லை.

தீய எண்ணம் கொண்டவர்க்கு எத்தகைய உயர்ந்த சடங்கினாலும் மனத்தூய்மை ஏற்படாது. தங்கள் அடியார்க்கோ தங்கள் புகழ், லீலை, குணம் ஆகியவற்றைக் கேட்பதாலேயே சித்த சுத்தி எளிதாகிறது.

பக்தர்கள் சரணடையும் தங்கள் திருப்பாதங்கள் எங்களின் தீய எண்ணங்களை அழிக்கும் கொள்ளியாகட்டும்.
புலன்களைக் கட்டிய சாதுக்கள் சதுர்வியூக வடிவில் தங்களை வழிபட்டு பரமபதம் அடைகிறார்கள்.

வேத நெறியில் செல்லும் பக்தர்கள், ஞானநெறியில் ஆன்மவிசாரம் செய்பவர்கள், தங்கள் லீலைகளைப் பாடிப்பரவும் பக்தர்கள் அனைவரும் த்யானிப்பது தங்கள் திருப்பாதங்களைத்தான்.

அடியார்கள் சாற்றும் வனமாலைகள் தங்கள் மார்பிலுள்ள மஹாலக்ஷ்மி தேவியுடன் போட்டி போடுகின்றன. அந்த மாலைகளில் இருக்கும் துளசியால் தங்கள் மனம் மகிழ்கிறது. 

வாமன அவதாரம் செய்யும்போது இரண்டாவது அடியைத் தேவலோகத்தில் வைத்தீர்கள்‌. அதைக் கண்டு தேவ அசுரப் படைகள் அனைத்தும் நடுங்கின.

தங்கள் திருப்பாதங்கள் சாதுக்களுக்கு நற்கதியையும் தீயோர்க்கு நரகத்தையும் அளிக்கின்றன.‌ அவை எங்களைப் புனிதப்படுத்தட்டும்.

ப்ரும்மா முதல் சரீரம் கொண்ட அனைத்து ஜீவன்களுக்குள்ளும் சண்டை சச்சரவு உண்டு. ஆனாலும் அனைவரும் மூக்கணாங்கயிற்றால் பிணைக்கப்பட்ட மாடுகள் போல் தங்களது ஆளுமைக்குக் கீழ்ப்படிகின்றனர்.

ஹிரண்யகர்பனாக இருந்து மஹத் தத்வத்தைக் கருவாகத் தாங்குகிறீர்கள். பின்னர் மாயையைச் சேர்த்து நிலம், நீர், ஆகாயம், காற்று, அக்னி, மஹத் தத்வம், அஹங்காரம் ஆகியவற்றுடன் ஏழு உறைகளைக் கொண்ட பொன்வண்ணமான அண்டத்தைப் படைக்கிறீர்கள்.

இந்த அண்ட சராசரம் முழுவதற்கும் தாங்களே தலைவர். அனைத்து புலன்களின் ஆதார சக்தி தாங்களே‌ எனினும் அவற்றில் ஒட்டுவதில்லை. புலன்களை வென்றவர்களோ அவற்றைப் பார்த்து பயந்துகொண்டே இருக்கிறார்கள்.

தங்களது பதினாறாயிரம் மனைவிகளும் ஆன வரை முயன்றும் தங்களைக் காமவசப்படுத்த இயலவில்லை.

தங்கள் சரணங்களிலிருந்து இரண்டு நதிகள் பெருகுகின்றன.
முதலாவது நதி தங்களது நாம கீர்த்தனம். அதில் மூழ்குபவர் அனைவரும் மனத்தூய்மை பெற்று தங்களை அடைகின்றனர். இரண்டாவது நதி கங்கை‌. தங்கள் திருவடிகளைக் கழுவிய அதன் நீரில் மூழ்குபவர்கள் புனிதமடைகின்றனர். புண்ணியாத்மாக்கள் இவ்விரண்டு நதிகளிலும் நீராடுகிறார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, October 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 584

கரபாஜனர் தொடர்ந்தார்.

கலியுகத்தில் இறைவனின் வண்ணம் கறுப்பு. தன்னொளி கொண்டு அனைவரையும் ஆகர்ஷிக்கிறார்.
அறிவாளிகள் இவர் பெயரைக் கீர்த்தனம் செய்து உய்கிறார்கள்.

இறைவனின் நாமங்களே அனைத்து பாபங்களையும் ‌போக்கிவிடுகின்றன. அவருடைய திருவடித் தாமரைகளை இதயத்தில் தாங்குபவர்கள் எல்லாத் தீர்த்தங்களுக்கும் உறைவிடமாகிறார்கள். சரணாகதி செய்பவர்களின் இன்னல்கள் அனைத்தும் ஒழிகின்றன. சம்சாரக் கடலைத் தாண்டிவைக்கும் ஓடம் பகவானின் தாமரைப் பாதங்களே.

தர்மங்களின் கொள்கலனான பகவான் ராமனாக அவதாரம் செய்து அயோத்தியை உதறிவிட்டு பாதங்கள் நோக வனம் சென்றார். அந்தத் திருப்பாதங்களைப் போற்றியும் அவரது திருநாமத்தைச் சொல்லியுமே சுலபமாகக் கரையேறுகிறார்கள்.

இவ்வாறு அந்தந்த யுகங்களுக்கேற்ப மக்கள் இறைவனைப் போற்றுகிறார்கள்.

எல்லா விஷயங்களையும் அறிந்த பெரியோர் நன்கு ஆலோசித்துப் பார்த்து கலியுகத்தைத்தான் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் இறைவனை அடைய மிகச் சுலபமான வழியான நாம கீர்த்தனம் கலியுகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஸம்சாரத்தில் உழல்பவர்க்கு இதைவிடப் பெரிய லாபம் உண்டோ? ஒரு மாபெரும் மரத்தைக் கறையான் அரிப்பதுபோல காது வழியாக உள்ளே‌செல்லும் நாமம் ஒருவனின் பாவங்கள் முழுவதையும் அழித்துவிடுகிறது.

க்ருத யுகத்தில் பிறந்தவர்களெல்லாம்கூட இறைநாமத்திற்கு ஆசைப்பட்டு கலியுகத்தில் பிறக்க ஆசைப்படுகிறார்கள். எனவே கலியுகத்தில் இறை அடியார்கள் ஏராளமாகத் தோன்றுவார்கள்.

அதிலும் திராவிட தேசத்தில் பிறக்கும் அடியார்களின் எண்ணிக்கை மிக அதிகம். தாமிரபரணி, வைகை, பாலாறு, காவிரி முதலான நதிகளின் கரைகளில் பல இறையடியார் தோன்றுவர்.

பகவானை சரணடைந்துவிட்டவர் தேவ பித்ரு, ரிஷி ஆகிய மூவகைக் கடன்களிலிருந்தும் விடுபடுகிறார். அதிதி பூஜை, பூதபலி ஆகிய சடங்குகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். பகவான் ஒருவனுக்கே அடிமைகளாக ஆகிறார்கள். எல்லா விதமான கர்மவாசனை மற்ரூம் கர்மத்தளைகளிலிருந்தும் தப்பித்துவிடுகிறார்கள்.

எப்போதும் ஹரிநாமம் சொல்லும் அடியார் ஏதேனும் பிழை செய்தாலும்கூட, உள்ளிருக்கும் இறைவன் அவரை அச்செயலிலிருந்து காத்து பாவத்தை அழித்து விடுகிறார்.

நிமிச்சக்கரவர்த்திக்கு நவயோகிககளால் உபதேசிக்கப்பட்ட அனைத்தையும் நாரதர் வசுதேவருக்குக் கூறி முடித்தார்.

நிமி எல்லா யோகிகளையும் வணங்கி அனைவரையும் கௌரவித்தார். 
அதன் பின் அனைவரும் பார்க்கும்போதே யோகிகள் மறைந்துபோனார்கள். நிமி அவர்கள் கூறிய வழியைப் பின்பற்றி நற்கதியடைந்தான். 
நீங்களும் இதே வழியைக் கடைப்பிடித்து நற்கதியடையப்போகிறீர்கள். பகவான் நாராயணனே உமக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். உங்கள் இருவருடைய புகழும் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கப் போகிறது. 

வாத்ஸல்ய பக்தியினால் நீங்கள் மனத்தூய்மை பெற்றிருக்கிறீர்.

சிசுபாலன், பௌண்ட்ரகன், தந்தவக்த்ரன், சால்வன் முதலியோர் பகையினால் நிற்றல், நடத்தல், உண்ணல், என்று எதைச் செய்தாலும் கண்ணனையே எண்ணிச் செய்தனர். அவர்களுக்கே சாரூப்ய முக்தி கிடைத்ததே. உங்களைப்போல் ஆசையுடன் பூஜை செய்பவர்க்கு முக்தி கிடைப்பதில் என்ன சந்தேகம்?

அகில லொஇகத்திற்கும் ஆதாரமான கண்ணனை உங்கள் பிள்ளை என்று சாதாரணமாக எண்ணாதீர்கள்.
அவன் அசுரர்களை அழித்து, நல்லோரைக் காத்து மண்ணுலகத்தின் பாரத்தை நீக்க வந்தவன். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாரதர் முகமாக நவயோகிகளின் உபதேசங்கள் அனைத்தையும் கேட்ட தேவகிக்கும் வசுதேவருக்கும் ஞானம் பிறந்தது.

இவற்றை மனத்தை ஒருமுகப்படுத்திக் கேட்பவர் அனைவர்க்கும் சோகமோகங்கள் அகன்று பரப்ப்ரும்மம் வசமாகும்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, October 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 583

சக்ரவர்த்தியான நிமி மறுபடி ஒரு கேள்வி கேட்டார்.
பகவானை எப்போது ஆராதிக்கவேண்டும்? அதன் விதிமுறைகள் என்ன? அவருக்கு என்னென்ன பெயர்கள் உள? என்ன வடிவத்தில் என்ன நிறத்தில் இருப்பார்?

ஒன்பதாவது யோகியான கரபாஜனர் பேசத் துவங்கினார். 
க்ருதயுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களிலும் பகவானுக்கு வெவ்வேறு நிறங்கள், பெயர்கள், மற்றும் பூஜை முறைகள் உள்ளன.

அந்தந்த யுகத்தின் மக்களின் மனோபாவத்திற்கேற்றபடி பகவானின் நிறம், வடிவம், பூஜை முறைகள் மாறுபடுகின்றன.

க்ருதயுகத்தில் நான்கு கரங்கள், ஜடாமகுடம், மரவுரி, கறுப்பு மான்தோல், உபவீதம், ருத்ராக்ஷமாலை, தண்ட கமண்டலம் ஆகியவைகளுடன் வெண்மை நிறத்தில்‌ காட்சியளிக்கிறார். 

அந்த யுகத்தில் மனிதர்கள் மிகவும் அமைதியான ஸ்வபாவம் கொண்டவர்கள், பகையின்றி, அனைவரையும் சமமாகப் பார்ப்பார்கள். புலனடக்கம் அவர்களின் சொத்தாக இருந்தது. தியான மார்கம் அவர்களுக்கு சுலபமாகக் கைகூடிற்று.

ஹம்ஸர், ஸுபர்ணர், வைகுண்டர், தர்மர், யோகேஸ்வரர், மேலர், ஈஸ்வரர், புருஷர், அவ்யக்தர், பரமாத்மா ஆகிய பெயர்களால் வழங்கப்பட்டு வந்தார்.

திரேதா யுகத்தில் பகவான் சிவப்பு நிறம் கொண்டு விளங்குகிறார். நான்கு கைகள், வயிற்றில் மூன்று மடிப்புகள், தங்கநிறை சிகை, வேதமே உருவானவர், வேள்விக்குப் பயன்படும் ஸ்ருக், ஸ்ருவம் என்ற கருவிகளைக் கைகளில் வைத்திருப்பார்.

பகவான் ஸ்ரீஹரியைப் மூன்று வித வேத விற்பன்னர்களும் ப்ரும்ம விசாரம் செய்பவர்களும் வேதங்களாலேயே துதிக்கிறார்கள்.

விஷ்ணு, யக்ஞர், ப்ருச்னிகர்பர், ஸர்வதேவர்,‌ உருக்ரமர், வ்ருஷாகபி, ஜயந்தர், உருகாயர், ஆகிய பெயர்கள் அவருக்கு உண்டு.

துவாபரயுகத்தில் பகவான் பச்சைவண்ணராக விளங்குகிறார். பட்டாடை, சங்கு, சக்ரம், கதை, மார்பில் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி ஆகியவற்றுடன் காணப்படுகிறார்.

ஒரு பேரரசர் போல் விளங்கும் இவரை, வேததந்திர முறைப்படி வணங்குகிறார்கள்.
வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், நர நாராயணர், விஸ்வேஸ்வரர், விஸ்வரூபர், ஸர்வபூதாத்மா ஆகிய பெயர்களைச் சொல்லி வழிபடப்படுகிறார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, October 14, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 582

நிமிச் சக்ரவர்த்தி அடுத்த கேள்வியைக் கேட்டார்.

யோகீஸ்வரர்களே!
பகவானை வழிபடாதவர்கள் பெரும்பாலும் புலனடக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களது கதி என்ன?

இக்கேள்விக்கு சமஸர் பதிலுரைத்தார்.

குணங்கள் மற்றும் கர்மங்களுக்கேற்ப விராட் புருஷனின் வடிவம் மற்றும் அங்கங்கள் இருக்கின்றன. 
அந்தந்த அங்கங்களிலிருந்து தோன்றும் ஜீவன்கள் அவற்றிற்கேற்ற கர்மம் அமைகிறது‌.

எவர் அவரை அவமதிக்கிறார்களோ அவர்கள் தம் நிலையிலிருந்து இழிவு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கூட கர்மா வாய்ப்பதில்லை. வினைப்பயனின் வயப்பட்டு பிறவிச் சுழலில் மாட்டுகிறார்கள்.

அத்தகைய அனைவரும் உய்யும் வழி ஒன்றே. உம்மைப்போல் ஸத்சங்கத்தில் ஈடுபடுபவர்கள் கருணையின்பால் அவர்களை ஆதரிக்கவேண்டும். 

ஆசிரம விதிப்படி கர்மங்களை அனுசரிப்பவனுக்கு கர்ம பலனை பகவானுக்கு அர்ப்பணிப்பதால் பகவான் சுலபன் ஆகிறான்.
சிலரோ வேதம் படிக்கும் தகுதி இருப்பினும் படித்தாலும் அதில் கூறப்பட்டிருக்கும் கர்மகாண்டத்தில் மாட்டிக்கொண்டு அற்பபலனை எதிர்நோக்கி கர்மாக்களைச் செய்கிறான்.

எந்த கர்மாவானாலும் அதன் உட்பொருளை உணர்ந்து கர்வமோ, தாழ்வு மனப்பான்மையோ இன்றி அதைச் செவ்வனே செய்து பலனை பகவானுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும்.

சிலர் தமது கர்மம் உயர்ந்ததென்றும், சிலர் செவ்வனே செய்வதற்காகவும், குடிப் பிறப்பிற்காகவும் கர்வம் கொண்டு தம்மைத் தாமே அறிஞர் என்று நினைத்துக்கொள்கின்றனர்‌. இவர்களுக்கு ரஜோ குணம் அதிகமாகிவிடுகிறது. அதனால் செய்வது சீரிய பணியானாலும் சிந்தனை பாழ்படுகிறது. காமம், கோபம், பகட்டு, ஆகியவற்றாலும் தம்மைத் தாமே புகழ்வது போன்ற இழிச்செயல்களாலும் தம் நிலையை விட்டுக் கீழே விழுகின்றனர். அதனால் இன்னும் மோசமாகி பக்தர்களை இகழவும் துணிவர்.

பெண்ணாசை கொண்டவர்கள், வீடு, குடும்பம், பொழுதுபோக்கு காமம் இவற்றைப் பற்றியே எப்போதும் நினைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வீண் பொழுது போக்குகிறார்கள். ஆடம்பர செலவுக்கு சற்றும் அஞ்சாதவர்கள், வேதியர்க்கு தக்ஷிணை கொடுக்கக் கணக்கு பார்ப்பார்கள். அதனால் முறைகள் தவறி, வேதகர்மாக்களைச் செய்வார்கள்.
கால்நடைகளைக் கொல்லும் தொழிலை விரும்பிச் செய்வார்கள்.

இவர்களுக்குத் தமது அழகு, கல்வி, பணம், தானம், உடல்பலம், மனோபலம் ஆகியற்றால் மலையளவு அகந்தை பெருகிநிற்கும்.
அறிவுக்குருடர்களான இவர்களுக்கு ஸாதுக்கள் மீதும் பக்தர்கள் மீதும் ஒரு அலட்சியம் இருக்கும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்தி மகிழ்வார்கள்.

பெண்ணுறவு, மாமிசம், சுராபானம் ஆகியவை சாஸ்திரங்களில் சில சமயங்களில் சிலருக்கு அனுமதிக்கப்படுகிறதுதான். ஆனால், அவை கட்டாயமில்லை. இயல்பாக இருக்கும் வேட்கையை நெறிப்படுத்தவே அவை அனுமதிக்கப்படுகின்றன. ஞானத்தை அடைய விரும்புபவன் அவற்றிலிருந்து விலகி இருப்பதே நன்மை பயக்கும்.

தர்ம வழியில் பொருளைச் செலவிட்டால் ஞானம் பிறக்கும். ஞானத்திலிருந்து ஆத்ம ஸ்வரூபத்தின் அனுபவமும் சாந்தியும் கிடைக்கும்.

புலனுகர் வழிச் செல்பவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் திடீரென்று வரும் காலனை மறந்துவிடுவது விந்தையிலும் விந்தை.

நன்னெறியற்ற அறிவிலிகள் தங்கள் பாதையே சிறந்ததென்று வாதிட்டு விலங்குகளைக் கொல்வதோடு அது சரியென்று சாஸ்திரத்திலிருந்து ப்ரமாணம் காட்டுவார்கள். மரணத்திற்குப் பின் காலனால் அவர்கள் வேறு உலகம் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே இவர்களால் கொல்லப்பட்ட விலங்குகள் இவர்களை உண்ணக் காத்திருக்கின்றன என்பதை அறியமாட்டார்கள்.

புழுவானது முன் பக்க உடலை நகர்ந்தி அதை ஆதாரமாக வைத்து உடலை நகர்த்தும். பின்பக்க உடலை ஆதாரமாக வைத்து முனபக்க உடலை நகர்த்தும். ஒரு கணம்கூட புவியின் தொடர்பின்றி அதனால் நகர இயலாது.

அது போலவே ஜீவனும் யாதனா சரீரம் என்ற ஒரு உடலைப் பிடித்துக்கொண்ட பின்பே பாஞ்சபௌதிகமான இந்த உடலை விடுகிறான். காலதேவனால் யாதனா சரீரத்தில் கட்டப்பட்ட ஜீவனுக்கு சுதந்திரம் என்பதே இல்லை. மனிதப்பிறவியில் மட்டுமே பிறவிச்சுழலிலின்று விடுபட அவனுக்கு சுதந்திரத்தின் பாதை திறக்கப்படுகிறது.

மனிதப்பிறவியில் முக்தியின் வழியை பிடித்துக்கொள்ளாவிட்டால் பேரண்டத்தின் இருளில் காலதேவனால் பல்வேறு லோகங்களுக்கு கட்டி இழுத்துச் செல்லப்படுவார்கள். முக்திப்பாதையை தேர்ந்தெடுக்காதவர்கள், மற்றும் பகவானிடம் பக்தி கொண்டு பிறவிச் சுழலினின்று விடுபட முயற்சி எடுக்காதவர்களின் நிலை இதுவே.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, October 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 581

த்ருமிலர் மேலும் தொடர்ந்தார்.

ஸ்ரீமன் நாராயணன் ஒரு முறை ஹம்ஸ பட்சியின் வடிவத்தில் தோன்றி ஆத்மயோகத்தை உபதேசம் செய்தார். தத்தாத்ரேயராயகவும், சனத்குமாரராகவும், எங்களது தந்தையான ரிஷபதேவராகவும் தோன்றி ஆத்மயோகத்தை விளக்கினார்.

ஒரு சமயம் மது மற்றும் கைடபன் என்ற அசுரர்கள் வேதத்தைத் திருடிச் சென்றுவிட்டனர். அவ்வமயம் ஹயக்ரீவராக அவதாரம் செய்து, அவர்களைக் கொன்று வேதங்களை மீட்டார்.

மற்றொரு சமயம் மீனாகத் தோன்றி ஸத்யவ்ரதன் என்ற மனுவையும் புவியையும், மூலிகைகளையும் காப்பாற்றினார். 

ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமியை எடுத்துச் சென்று ரஸாதலத்தில் ஒளித்து வைத்து விட்டான். அப்போது பகவான் ப்ரும்மாவின் மூக்கிலிருந்து வராஹமாக வெளிப்பட்டு அவனைக் கொன்று பூமியை அதனிடத்தில் நிறுவினார்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த சமயத்தில் ஆமையாக வடிவெடுத்து மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார். 

ஒரு சமயம் கஜேந்திரன் என்ற யானை முதலையின் பிடியில் மாட்டிக்கொண்டது. அப்போது அதன் அழைப்பில் பேரில் ஓடிவந்து அதை விடுவித்தார்.

மற்றொரு நேரம்‌ சில முனிவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது அவர்கள் பகவானை அழைக்க, விரைந்துவந்து அவர்களை மேலே தூக்கிவிட்டார்.

த்வஷ்டா என்பவரின் புதல்வரையும், விருத்திராசுரன் என்ற பரமபாகவதனையும் இந்திரன் கொன்றுவிட்டான். அதனால் அவனை ப்ரும்மஹத்தி பாபம் பிடித்துக்கொண்டது. அவனை அந்தப் பாவத்திலிருந்து காப்பாற்றினார்.

நரசிம்மராக அவதாரம்‌ செய்து ஹிரண்யகசிபுவைக் கிழித்துப் போட்டார். ஹிரண்யகசிபு தேவமகளிரைச் சிறைப்பிடித்து அவனது வீட்டில் ஒளித்துவைத்திருந்தான். அவர்களையும் விடுவித்தார்.
ப்ரஹலாதனையும் காப்பாற்றினார்.

தேவாசுர யுத்தத்தில் அசுரவேந்தனை அழித்தார். வாமனாவதாரம் செய்து பலிச் சக்ரவர்த்தியிடமிருந்து தேவலோகத்தையும், பூமியையும் யாசித்துப் பெற்று அவற்றை தேவேந்திரனிடம் ஒப்படைத்தார்.

பரசுராமராகப் பிறந்து இருபத்தியொரு தலைமுறை க்ஷத்ரியர்களைக் கொன்றார். கார்த்தவீர்யார்ஜுனனின் பரம்பரையை அழித்தார். ராமனாக அவதாரம் செய்து கடலின் மீது அணை கட்டி, அதன் மீது நடந்து சென்று ராவணனை வதைத்தார்.

ஒப்பில்லாத பெருமைகளை உடைய பகவான் பூபாரம் குறைப்பதற்காக யது வம்சத்தில் தோன்றினார்‌. ஒருவராலும் செய்ய இயலாத பல அரிய காரியங்களைச் செய்தார். பின்னர் வேள்விச் சடங்குகளைக் குதர்க்கமாகச் செய்யும் தகுதியற்றவரிடம் வாதம் செய்து அவற்றை நிறுத்தப்போகிறார். கலியுகத்தில் அரசுப் பொறுப்பேற்கும் நீசர்களை மாய்க்க அவதாரம் செய்யப்போகிறார்.

இன்னும் அவரது லீலைகள் எண்ணில. இவற்றையெல்லாம் பல மஹாத்மாக்கள் விரிவாகப் பாடியிருக்கிறார்கள்‌. நான் உனக்கு சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று முடித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, October 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 580

முன்பொரு சமயம் நர நாராயணர்கள் இருவரும் தீவிரமான தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அதைக் கண்டு தேவேந்திரனுக்கு பயம் வந்தது. அவர்களது தவத்தைக் கலைக்க உத்தரவிட்டு மன்மதனைத் தன் பரிவாரங்களோடு அனுப்பினான். அவன் ஏராளமான தேவமாதர்களோடு நரநாராயணர்கள் தவம் செய்யும் இடத்திற்கு வந்தான்.

தவம்‌செய்துகொண்டிருந்த நர நாராயணர்கள் மீது தென்றலை வீசச் செய்தான். மனம் மயக்கும் தேவமாதர்களுடன் சேர்ந்து மன்மதன் காமத்துடன் ரிஷிகளைப் பார்த்து ஆடத் துவங்கினான்.

தவம் கலைந்த நாராயணர் அச்செயலுக்கு தேவேந்திரனே காரணம், மன்மதன் வெறும் ஏவப்பட்ட அம்பு என்று புரிந்து கொண்டார்.

காமக் கணைகளால் நாராயணர் பாதிக்கப்படாமல் இருப்பதையும், அவரது தோற்றத்தையும் கண்ட மன்மதனும் தேவமாதர்களும் அவரது மஹிமையை உணர்ந்துகொண்டனர். அவ்வளவுதான் அவர்களை பயம் பிடித்துக்கொண்டது. பயத்தினால் முகம் வெளிறி என்ன சொல்வாரோ என்று நடுங்கிக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து நாராயணர் சிரித்தார். 

பின்னர், பயப்படாதீர்கள் என்று அபயம் கொடுத்தார். நீங்கள் எங்கள் இடத்திற்கு விருந்தினராக வந்திருக்கிறீர்கள். இவ்வாசிரமம் விருந்தினரைக் கௌரவிக்காத இடம் என்று இகழப்பட்டுவிடக்கூடாது. என்றார்.

அவர்கள் அனைவரும் அதைக் கேட்டு பயம் நீங்கினாலும், மிகவும் கூச்சத்துடன் தலையைக் கவிழ்ந்துகொண்டார்கள். 
மன்மதன் மெதுவாகத் தழுதழுக்கும் குரலில் பேசினான்.

ப்ரபோ! தாங்கள் ப்ரும்ம ஸ்வரூபமாக விளங்குகிறீர்கள். மாறுபாடு இல்லாத ஆத்மாராமர்கள் தங்கள் திருவடிகளை வணங்குகிறார்கள். எங்களைப் போன்ற அறிவிலிகளின் சாகசங்களுக்கு மயாங்காததோடு எங்களை மன்னிப்பதும் தங்களுக்கு சுபாவமாகும். 

மற்ற தெய்வங்களை உபாசனை செய்பவர்கள் வேள்விகளில் அவியுணவின் மூலம் அந்தந்த தெய்வங்களை த்ருப்தி செய்து விடுவார்கள். இந்த மாதிரியான சாதனைகளில் தேவர்கள் இடையூறு செய்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கும் பங்கு வந்துவிடும். ஆனால் தங்களின் பக்தர்கள் தேவ லோகத்தைக் கடந்து பரமபதம் போய்விடுவர். சுலபமான மார்கத்தினால் தங்கள் அருளைப் பெற்று அனைவரும் மோக்ஷம் போய்விட்டால் தேவர்களுக்கு அவியுணவு கொடுக்க எவர் கிடைப்பார்? என்ற பயத்தினால், தொந்தரவு செய்ய எண்ணுகிறார்கள். ஆனால் தாங்களோ, தங்கள் தேவர்கள் துன்பம் தர இடம் கொடாமல் பக்தரின் இடத்தில் தங்கள் பாதங்களைப் பதித்துவைத்திருக்கிறீர்கள்.

சிலர் பசி, தாகம், கோபம், இயற்கை, சுவை, காமம் அனைத்தையும் அடக்கிப் பொறுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சிலரோ சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு பசுமாட்டின் குளம்படி அளவு உள்ள நீரில் மூழ்கித் தவிக்கிறார்கள்.
அதனால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்த தவத்தின் சக்தியை இழந்துவிடுகிறார்கள்.

இவ்வாறு மன்மதன் கூறியதும், பகவான் நாராயணர் பகவானுக்குச் சேவை செய்து கொண்டிருக்கும் சில பேரழகுப் பெண்களைக் காட்டினார். அவர்களின் அழகில் வந்திருந்த அனைவரும் மயங்கித் தத்தம் வனப்பை இழந்தனர். 

இவர்கள் வைகுண்டத்தில் பகவானுக்கு சேவை செய்யும் பெண்கள். நீங்கள் விரும்பி அவர்களுள் ஒருவரை உங்கள் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லலாம்‌ என்று கூறினார்.

காமதேவன் முதலான தேவர்கள் நாராயணரை வணங்கி ஊர்வசியை அழைத்துக்கொண்டு தேவலோகம் சென்றனர்.

நடந்தவை அனைத்தையும் அவர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட தேவேந்திரன் பயந்து நடுங்கினான். அங்கிருந்தவாறே மானசீகமாக நாராயணரை வணங்கினான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, October 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 579

காலத்தின் தேவைக்கேற்றபடி பற்பல வடிவங்கள் எடுத்து லீலைகள் செய்யக்கூடியவர் பகவான். அவர் இதுவரை செய்துள்ள லீலைகள், செய்துகொண்டிருப்பவை, இனி வருங்காலத்தில் செய்யப்போகும் லீலைகள் எல்லாவற்றையும் விரிவாகக் கூறுங்கள் என்றான் நிமிச் சக்ரவர்த்தி.

இக்கேள்விக்கான பதிலை ஏழாவது யோகியான த்ருமிளர் கூறத் துவங்கினார்.

பகவான் எல்லைகள் அற்றவர். அவரது குணங்களும் கணக்கில் அடங்கா. அவருடைய லீலைகள் அனைத்தையும் கூறவல்லவர் எவருமிலர். பூமியிலுள்ள தூசியின் துகள்களைக்கூட எப்படியாவது எண்ணிவிடமுடியும். ஆனால், பகவானின் லீலைகளைச் சொல்லி மாளாது.

தனக்குள்ளேயே பஞ்சபூதங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் அகண்ட ப்ரபஞ்சத்தை உருவாக்கி, லீலையாகத் தன் அம்சத்தை அதனுள் புகுத்தியவர் அவர். அவரே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவதால் புருஷர் எனப்படுகிறார்.

மூவுலகங்களும் பகவானின் உடலே ஆகும். உடல் கொண்ட அனைத்து ஜீவன்களும் அவரது சக்தியால் படைக்கப்பட்டவையே. அந்தர்யாமியாக விளங்குவதோடு, ஞானம், மனோ பலம், உடல் பலம் ஆகியவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார்.

ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களாகவும் தானே பரிணமிக்கிறார்.
ஆதிபுருஷன் முதலில் ரஜோ குணத்தை ஏற்று ப்ரும்மாவாக ஆனார்.

பின்னர் வேதங்களுக்கும் கர்மாக்களுக்கும் பலன் அளிப்பதற்காக ஸத்வ குணத்தை ஏற்று விஷ்ணு ரூபம் ஏற்றார்.

அதன் பின் தமோ குணத்தை ஏற்று ருத்ரவடிவம் கொண்டு அழிக்கும் செயலைச் செய்கிறார். 

தக்ஷ ப்ரஜாபதியின் மகள் மூர்த்தி என்பவள் தர்மரின் மனைவி. அவர்களுக்கு நர நாராயணர்களாகப் பிறந்தார். அந்த அவதாரத்தில் பயன்களை அலட்சியம் செய்து கர்மாக்கள் செய்யும் விதத்தை (நைஷ்கர்ம்யம்) உபதேசம் செய்தார்.

அவர்கள் தாங்களும் அதைச் செய்துகாட்டினர். இன்றும் பதரிகாஸ்ரமத்தில் இருவரும் விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, October 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 578

செய்யும் செயல்களையும் அவற்றின் பலன்கள் யாவற்றையும் இங்கேயே உதறிவிட்டு முக்தியின்பத்தை அடையச் செய்யும் மார்கம் கர்ம யோகம். அதைப் பற்றிக் கூறுங்களேன்.  முன்பொருமுறை நான் இதே கேள்வியை என் தந்தை இக்ஷுவாகுவின் எதிரில் ஸனகாதி முனிவர்களிடம் கேட்டேன்‌. அவர்கள் பதில் கூறாமல் மௌனம் சாதித்தனர். அதற்கான காரணத்தையும் கூறுங்கள் என்றான் நிமிச் சக்ரவர்த்தி.

ஆறாவது யோகியான ஆவிர்ஹோத்ரர் கூறலானார்‌.

அறநெறிப்படி சில கர்மாக்கள் விதிக்கப்பட்டும், சில தடுக்கப்பட்டும் இருக்கின்றன. அவற்றை வேதமே பகுத்துக் கொடுக்கிறது.

வேதங்கள் அனைத்தும் மறைமுகமாகத் தத்துவங்களைக் கூறுபவையே. நெறியுடன் வாழ்வதற்கான வழிமுறையைக் கூறுபவை. நோய் தீரக் கொடுக்கப்படும் கசப்பு மருந்து இனிப்பு தடவிக் கொடுக்கப்படுகிறது. அதுபோல் கர்மாக்களைச் செய்வது எளிது. மனத்தை ஒருமுகப்படுவது கடினம். எனவே வேதம் கர்மாக்கள் மூலமாக மனத்தைப் பக்குவப்படுத்தி விடுதலைக்கு வழிவகுக்கிறது.

புலன்களைக் கட்டுப்படுத்த இயலாதவன், விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்வதாலேயே பக்குவமடைந்துவிடுகிறான். அதையும் தவறினால் அவனைப் பாவம் சேர்கிறது. பிறவிச் சுழலில் மாட்டிக்கொள்கிறான்.

பலனில் பற்றை விடுத்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் கர்ம மார்கமே சுலபமாக முக்திக்கு வழி செய்கிறது. பலன் பகவானுக்கு என்றாகிவிடுவதால் கர்மத்தைச் செய்தாலும் அது செய்யப்படாததே‌.

நற்கர்மத்தைச் செய்தால் மேல் உலகங்களை அடையலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் அது ஊக்கமளிப்பதற்காகவே சொல்லப்பட்டது. பலனை பகவானுக்கு அர்ப்பணம் செய்வதால் சுலபத்தில் கர்மத்தளை விடுபட்டுவிடும்.

அஞ்ஞானம் நீங்க வேத நெறிப்படி பகவானை ஆராதனம் செய்யவேண்டும். ஒரு குருவை ஆச்ரயித்து வழிபடும் முறையைக் கற்றுக்கொண்டு தன் இஷ்ட மூர்த்தியின் அர்ச்சாவதாரத்தை ஆராதனம் செய்யவேண்டும்.

பகவானின் உருவச்சிலை முன் அமர்ந்து ப்ராணாயாமம், நாடி சுத்தி ஆகியவற்றின் மூலம் தம்மைத் தூய்மைப் படுத்திக்கொண்ட பின் பூஜையைத் துவங்கவேண்டும்.

எதிரில் உள்ள மூர்த்தியை தியானிக்கவேண்டும். அதில் பகவான் எழுந்தருளியிருப்பதாகவும், தன்னைப் பார்ப்பதாகவும் பாவனை செய்யவேண்டும். பூஜைக்கான பொருள்களையும் தன்னையும், ஆசனத்தையும் மந்திரத்தால் புனிதமாக்கப்பட்ட நீரால் தெளித்து சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.
பின்னர் அந்த மூர்த்தியின் மூலமந்திரத்தால் அங்க நியாஸம், கர நியாஸம், ஹ்ருதய நியாஸம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

தன் தேவதை தன் கணங்கள், பார்ஷதர்களோடு விளங்குவதாக எண்ணி மூர்த்திக்கு பாத்யம், அர்க்யம், ஆசமனம், பால், ஸ்நானம், வஸ்திரம், ஆபரணங்கள், சந்தனம், புஷ்பம், தயிர், அக்ஷதை, மாலை, தூபம், தீபம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அர்ச்சனை, ஸ்லோகங்கள், ஸ்துதிகள் ஆகியவற்றைச் செய்து நமஸ்காரம் செய்யவேண்டும். பின்னர் நிர்மால்யத்தை தலையில் வைத்துக்கொள்ளவேண்டும். ஸ்வாமியை அதனிடத்தில் வைக்கவேண்டும்.

இவ்வாறு அக்னி, சூரியன், தண்ணீர், அதிதி, மற்றும் ஆத்மாவாக விளங்கும் பகவான் ஆகியவர்களைப் பூஜை செய்து வருபவன் வெகு விரைவில் சம்சாரச் சுழலினின்று விடுபடுவான்

என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, October 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 577

நாராயணன் என்றழைக்கப்படும் அந்த பரப்ரும்மத்தின் வடிவம் எப்படிப்பட்டது?
அதை தயைகூர்ந்து விளக்குங்கள் என்றான் நிமிச் சக்ரவர்த்தி

இப்போது ஐந்தாவது யோகியான பிப்பலாயநர் திருவாய் மலர்ந்தார்.

மன்னவா! இந்த அண்டத்தின் தோற்றுவாய், அது நிலைத்திருத்தல், மறைவு, ஆகியவற்றின் காரணம் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அவருக்குத் தோற்றமே இல்லை. அவர் ஜீவன்களின் கனவு மற்றும் உறக்கத்திலும் கூட சாட்சியாய் விளங்குகிறார்.

உறங்கி எழுந்தபின் நன்றாக உறங்கினேன் என்று மகிழ்ச்சியாகச் சொல்லமுடிவதன் காரணம், உறக்க நிலையிலும் ஆன்மா விழிப்புடன் சாட்சியாக பார்த்துக்கொண்டிருப்பதே ஆகும். அதன் இயல்பான ஆனந்தத்தில் சற்று நேரம் தன்னை மறந்து லயிப்பதால் எழுந்ததும் அனுபவிக்கப்பட்ட ஆனந்தத்தை மட்டும் நினைவுகூர முடிகிறது.

அவர் ஆத்ம ஸ்வரூபமாக உள்ளிருப்பதாலேயே எல்லா காரியங்களையும் செய்யமுடிகிறது. இவை எல்லாவற்றையும் கடந்து தனித்திருப்பவரும் ஸ்ரீமன் நாராயணனே. 

அக்னியிலிருந்து தோன்றும் ஜ்வாலைகள் அக்னியை ப்ரகாசப்படுத்த இயலாது. அதனால் மற்ற பொருள்கள் ப்ரகாசமாகத் தெரியும். அதுபோல் ஆத்மாவின் வெளிச்சத்தாலேயே கண்கள், ப்ராணன் மற்றும் அனைத்துப் புலன்கள் எல்லாம் இயங்குகின்றன.
அவற்றால் ஆத்மாவைக் காணவோ விவரிக்கவோ இயலாது.

வேதங்கள் கூட பகவானைக் கூறும்போது இது அல்ல, இது அல்ல, என்று தள்ளிக்கொண்டே வந்து கடைசியில் எஞ்சி நிற்கும் பொருள் என்று தான் சொல்லமுடிகிறது.

அவ்வாறு எஞ்சும் பொருளே‌ சேஷன் எனப்படும் நாராயணன் ஆவார்.

முதலில் பரப்ரும்மம் மட்டுமே இருந்தது. அதனிடமிருந்து ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களால் ஆன ப்ரக்ருதி தோன்றிற்று. அதன் மீது பகவானின் பார்வை பட்டதும் ஹிரண்யகர்பம் எனப்படும் மஹத் தத்வமும், அஹங்காரமும் தோன்றின. பின்னர் அஹங்காரத்திலிருந்து மனம், புலன்கள் ஆகியவற்றின் அதிதேவதைகள் தோன்றின. அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் தனித்து நின்றபோது பரமாத்மாவே ஆத்ம ரூபத்தில் அவற்றுள் ப்ரவேசித்தார். பின்னர் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப்பொய் அவற்றின் சேர்க்கை விகிதத்தால் மேலும் பல பொருள்கள் தோன்றின.

அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தின் ஆதாரமும் பரமாத்மாவேதான்.

ஆத்மாவிற்கு பிறப்பு இறப்பு இல்லை. அது வளர்வதில்லை. தேய்வதுமில்லை. நிலையில்லாத பொருளுக்குத்தான் மாற்றம் உண்டு. அழிவற்ற ஆத்மா மாறுபாடற்றது. அது தங்கியிருக்கும் உடலுக்கேற்ப வடிவம், குணம், பெயர் ஆகியவற்றைப் பெறுகிறது.

பிறப்பு நால்வகைப்பட்டது.
முட்டையிலிருந்து தோன்றுவது, கருவிலிருந்து தோன்றுவது, 
முளை விடுவது, வியர்வையிலிருந்து தோன்றுவது.

அவ்வாறு பிறப்பெடுக்கும் ஜீவனிடம் அதற்கேற்ப கர்மச்சுழல் கொண்ட ப்ராணன் ஒட்டிக்கொள்கிறது. 
இந்திரியக் கூட்டமாகிய இவ்வுடலை நான் என்று எண்ணத் தூண்டுவது உறக்கத்தில் கூட விடாது.

பகவானின் பாதகமலங்களில் பக்தி ஏற்படுபவர்க்கு உள்ளத்தூய்மை கிட்டும். அவருக்கு மாசற்ற ஆத்ம தத்வம் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். சூரிய வெளிச்சம் எப்படி நேராகத் தெரியுமோ அதுபோல் அவரிடம் ஆத்ம ப்ரகாசம் வெளிப்படும்.

என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, October 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 576

மனத்தை வசப்படுத்த இயலாமல் சிற்றின்பங்களில் உழலும் பாமரர்க்கு மாயையைக் கடப்பது கடினமே. முனிச்ரேஷ்டரே! அப்படிப்பட்டவர்க்கு மாயையைக் கடக்க அதிகம் சிரமம் இல்லாத மார்கம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அதை எனக்குக் கூறுங்கள் என்றான் நிமிச் சக்கரவர்த்தி.

இக்கேள்விக்கு நான்காவது யோகியான பிரபுத்தர் விடை பகரத் துவங்கினார்.

செல்வத்தை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் ஈட்டவேண்டியுள்ளது. அப்படியும் அது கஷ்டத்தைத்தான் கொடுக்கும். அப்படித்தான் வீடு, மனை, மக்கள், உறவு அனைத்தும்.
இவை அனைத்துமே அழியக்கூடியவை. அழியும் பொருளால் எவ்வாறு நிலையான ஆனந்தத்தைத் தர இயலும்?

பலனுக்காகப் பெரிய கர்மங்களைச் செய்யலாம். அவற்றால் அடையப்படும் மேலுலகங்கங்களும் அழியக்கூடியவையே.

இப்பூவுலகிலுள்ள போட்டி, பொறாமைகள் மேலுலகங்களிலும் உள்ளன. அச்சூழலிலும் அமைதி கிட்டாது.

ஆகவே நிரந்தர ஆனந்ததைத்தை வேண்டுபவன் செய்யவேண்டியது ஒன்றேயாகும். அது யாதெனின் பரப்ரும்மத்தை உணர்ந்த ஒரு உயர்ந்த ஞானியை குருவாக அடையவேண்டும். அவரையே தன் இஷ்டதெய்வமாக வழிபடவேண்டும்.

அவரிடமிருந்து பாகவத தர்மத்தைக் கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். பகட்டுக்காக இல்லாமல் மனப்பூர்வமாக அவருக்குச் சேவை செய்து அவரது நன்மதிப்பைப் பெறவேண்டும். குருவுக்குச் செய்யும் தன்னலமற்ற சேவை ஒன்றே பகவானான ஸ்ரீ மன் நாராயணனை உடனடியாக மகிழ்விக்கக்கூடியது.

யாரிடமும் பற்றில்லாமல் பழகவேண்டும். சாதுக்களையே உறவாக எண்ணவேண்டும். சூழலுக்கேற்ப மற்ற ஜீவன்களிடமும் மனிதர்களிடமும் அன்புடனும் தயையுடனும் பழகவேண்டும்.

மனத்தூய்மை, உடல்தூய்மை, மௌனம், சாஸ்திரங்களை அவ்வப்போது சிந்தித்தல், நேர்மை, பிரம்மச்சர்யம், அஹிம்சை, சமநோக்கு ஆகிய குணங்களைக் கைக்கொள்ளவேண்டும்.

எல்லா இடங்களிலும் பகவானைக் காண்பது, ஆத்மாவிலேயே லயித்திருப்பது, எளிய தோற்றம், கிடைப்பதைக் கொண்டு த்ருப்தி அடைவது, சாஸ்திர நூல்களிடம் நம்பிக்கை, மற்ற மார்கங்களை நிந்திக்காமல் இருப்பது, வாய்மை, மனவடக்கம், புலனடக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பகவானின் குணங்கள் மற்றும் லீலைகளை ஆசையுடன் கேட்கவேண்டும். இயன்றபோதெல்லாம் கீர்த்தனம் செய்வதும் கேட்பதுமாக இருக்கவேண்டும். தான் செய்யும் எல்லாச் செயல்களையும் பகவானின் ப்ரீதிக்காகச் செய்யவேண்டும்.
அடியார் சேவை, மற்றும் சாமான்ய மக்களுக்கும் துன்பத்தில் இயன்ற உதவிகளைச் செய்தல் ஆகியவை முக்கியமானவை.

எப்போதும் பகவான் ஹரியின் நாமத்தைக் கீர்த்தனம் செய்வது சாதன பக்தியாகும். இதைத் தொடர்ந்து செய்தால் ப்ரேம பக்தி சித்திக்கும்.

அதனால் புளகாங்கிதம் அடைதல், பகவானின் லீலையை நினைத்து ஏங்குதல், அழுதல், சிரித்தல், ‌உலக நடைமுறைக்கு ஒவ்வாமல் நடந்துகொள்ளுதல்,‌ நடனமாடுதல், பாடுதல், பகவானின் லீலைகளை அபிநயம் செய்தல், ஆகிய லக்ஷணங்கள் ஏற்படும். சில சமயம் அனைத்தையும் கடந்து மௌனமாகவோ, மூர்ச்சையாகவோ ஆகிவிடுவதும் உண்டு. 

பகவத் பக்தியில் ஈடுபடுபவர்க்கு மாயையைக் கடப்பது வெகு சுலபம்

என்று முடித்தார் பிரபுத்தர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, October 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 575

நிமிச் சக்ரவர்த்தி அடுத்த கேள்வியைக் கேட்டார்.

பகவானின் மாயை பற்றி அறிய விரும்புகிறேன். விளக்கிக் கூற இயலுமா?

இக்கடுமையான வாழ்க்கையில் தவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஹரிகதாம்ருதமே நல்ல மருந்து. தாங்கள் பேசுவதைக் கேட்க கேட்க ஆனந்தம் பெருகுகிறது. போதும் என்ற எண்ணமே வரவில்லை. 

இப்போது நவயோகிகளுள் ஒருவரான அந்தரிக்ஷர் திருவாய் மலர்ந்தார்.

பரம்பொருளான பகவான், பஞ்ச பூதங்கள் என்னும் ஐந்து மூலப்பொருள்களை, தன் ஆத்மஸ்வரூபத்தின் துளிகளுக்கேற்ப, அனைத்து ஜீவன்களாகவும் படைத்திருக்கிறார்.

பஞ்ச பூதங்களாலான உடல்களில் ஆத்மாவாகத் தானே ப்ரவேசிக்கிறார். அவரால் உருவான உடலிலோ, குணக்கலவையிலோ தான் சிக்கிக் கொள்வதில்லை. தனித்துச் சாட்சியாக நிற்கிறார். நான் என்னும் அஹங்காரமுடைய ஜீவன் தன்னை ஆத்மாவிலிருந்து வேறென்று எண்ணி குணக்கலவைகளைத் தன் ஸ்வரூபமாக எண்ணிக்கொண்டு மாட்டிக்கொள்கிறது.

பலனில் ஆசை கொண்டு காரியம் செய்கிறது‌. சுக துக்கங்களை அனுபவித்து இங்கேயே உழல்கிறது. அதனால் பல பிறவிகளை எடுக்கிறது. மஹாப்ரளய காலம் வரை பல்வேறு பிறவிகளில் சுழன்றபின் ப்ரளயகாலத்தில் பகவானிடம் ஒடுங்குகிறது. மீண்டும் படைப்புக்காலம் துவங்கும்போது முன்போலவே பிறவிச் சுழலில் விழுகிறது.

ப்ரளய காலத்தில் படைப்புகள் அனைத்தும் தத்தம் மூலப்பொருளில் ஒடுங்குகின்றன. 
அவ்வமயம், நூறாண்டுகள் தொடர்ந்து மழை பெய்யாது. சகிக்கமுடியாத வெப்பத்தால் சூரியன் வறுத்தெடுப்பான்.


ஸங்கர்ஷணரின் முகத்தில் தோன்றும் நெருப்பு, காற்றால் வளர்ந்து மூவுலகங்களையும் பொசுக்கும்.

அதன் பின் ஸம்வர்த்தக மேகங்கள் யானையின் துதிக்கையளவு நீர்த்திவலைகள் கொண்ட மழையைப் பொழியும். மாபெரும் அண்டம் முழுதும் நீரில் மூழ்கும்.

கட்டை முழுதும் எரிந்த பின் பற்ற வேறெதுவும் இல்லையெனில் நெருப்பு சிறியதாகி அடங்குவதுபோல, உலக வடிவமாய் நிற்கும் பேராற்றல் ஒடுங்கி, உருவற்ற நிலையை ஏற்கும்.

ப்ரளயத்தில் புவியின் வாசனை என்னும் தன்மாத்திரையை வாயு இழுத்துக்கொள்ளும். மண் தண்ணீரில்‌ மூழ்கியதும் நீரின் தன்மாத்திரையான சுவையையும் வாயு இழுத்துக்கொள்ளும். எனவே நீர் அக்னியில்‌ மறையும்.

அக்னியின் ஒளியாகிய தன் மாத்திரையையும் வாயு இழுத்துக்கொள்ள எங்கும் இருள் கவ்வும். வாயுவின் தன்மாத்திரையாகிய தொடுதல் ஆகாசத்தால் உறிஞ்சப்பட்டு லயமாகிவிடும்.

காலரூபமான பகவான் ஆகாயத்தின் தன்மாத்திரையான ஒலியை இழுத்துக் கொள்வார். ஆகாயமும் அஹங்காரத்தில்‌ மறையும். புலன்கள், புத்தி, மனம் ஆகியவற்றின் தேவதைகளும் அஹங்காரத்தில் ஒடுங்கும். அஹங்காரம் தன்னுடைய மூலவடிவான மஹத் தத்வத்தில் ஒடுங்கும்.

இவையே மாயையின் செயல்கள்.

ஒரு மனைவி காலையில் எழும்போது வீட்டின் ஒவ்வொரு கதவாகத் திறந்து குழந்தைகளை எழுப்பி, வ்யவஹாரங்கள் முடிந்ததும் அனைவரையும் படுக்கவைத்து கதவைப் பூட்டி தானும் கணவனின் அருகில் சென்று உறங்குவதுபோல்,
பகவானிடமிருந்து வெளிப்படும் மாயை எல்லா காரியங்களையும் நிகழ்த்திவிட்டு, ப்ரளய காலத்தில் அனைத்தையும் ஒடுக்கி தானும் பகவானிடம் ஒடுங்குகிறது.

என்றார் அந்தரிக்ஷர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, October 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 574

நவயோகிகளுள் ஒருவரான கவி கூறியதைக் கேட்ட நிமிச்சக்ரவர்த்தி,

எனில், பகவத் பக்தரின் லட்சணங்களைக் கூறுங்கள்? பக்தர் எப்படி இருப்பார்? அவரின் இயல்பு என்ன? எப்படிப் பழகுவார்? ஒருவர் பகவனுக்குப் பிரியமானவர் என்பதைக் காட்டும் அடையாளங்கள் உள்ளனவா? என்று கேட்டான்.

அதற்கு நவயோகிகளுள் ஒருவரான ஹரி என்பவர் பதிலுரைக்கத் துவங்கினார்.

எல்லா பிராணிகளிடத்தும் இறைவனைக் காண்பவரே முதன்மையான பக்தர் ஆவார்.

பகவானிடம் ஆழ்ந்த அன்பும், அடியார்களிடம் நட்புணர்வும், ஸம்ஸாரத்தில் உழல்பவரிடம் கருணையும், பகவானை வெறுப்பவரிடமிருந்து விலகியும் இருப்பார். 

பகவானின் மூர்த்திகளை மிகவும் ஆசையோடு வழிபட்டுக்கொண்டு அதே சமயம் அடியார்களிடம் ஒட்டுதல் இல்லாமலும் அல்லது பாரபட்சத்துடனும் பழகுபவர் கீழ்நிலையில் உள்ள பக்தராவார்.

புலன் இன்பங்களை அனுபவித்தாலும் அவை பகவானின் மாயை என்பதை கவனத்தில் கொண்டு, அவற்றால் வெறுப்போ மகிழ்ச்சியோ அடையாமல் இருப்பவர் உத்தம பக்தர் ஆவார்.

பிறப்பு, இறப்பு, பசி, தாகம், துக்கம், அச்சம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் அனைத்தும் பகவானின் லீலை என்று பார்ப்பவர் உத்தம பக்தராவார்.

இன்பங்களை அனுபவிக்கும் ஆசையோ, நற்காரியங்களை புண்ணிய பலனுக்காகச் செய்து நல்ல லோகங்களை அடையவேண்டும் என்ற ஆசையோ இல்லாமல் நற்கர்மங்களைச் செய்பவர் உத்தம பக்தராவார்.

யார் தன்னுடைய பிறப்பு, குலம், செல்வம், படிப்பு, பக்தி ஆகியவற்றால் நான் என்ற கர்வம் கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உத்தம பக்தர்.

எவர் தன் உடல், மற்றும் செல்வத்தில் தன்னுடையது மற்றவருடையது என்ற வேறுபாடு கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உத்தம பக்தர்.

எவர் மூவுலக ஆதிக்கமே கிடைத்தாலும் பகவானின் திருவடியை மறக்காமல் இருக்கிறாரோ அவரே உத்தம பக்தர்.

தன்னையறியாமல் பேச்சுவாக்கில் பகவன் நாமத்தைக் கூறினாலே பாவங்கள் பொடிப்பொடியாகும். அப்படியிருக்க பகவானின் திருவடித் தாமரைகளில் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ள பக்தரின் நிலை என்ன? 

என்று கூறினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..