Friday, March 8, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 225 ப்ரஹலாத ஸ்துதி

இறைவா! ஸத்வ குணத்தின் உறைவிடம் தாங்கள். ப்ரும்மதேவர் முதலான அனைத்து தேவர்களும் யாரிடமும் அசுரர்களான எங்களைப்போல்  வீண்பகை கொள்வதில்லை. 

தங்களது விதம்விதமான அனைத்து அவதாரங்களும் இவ்வுலகின் நலனுக்காகவும், அடியார்களைக் காத்து மகிழ்விக்கவும்தான். 

கோபத்தை விட்டு அமைதி கொள்ளுங்கள். அசுரனைத்தான் கொன்றுவிட்டீர்களே. அதனால், அத்தனை ஜீவன்களும் மகிழ்கின்றன. இப்போது அனைவரும் சாந்தம் கமழும் தங்கள் திருமுகத்தை தரிசிக்க விரும்புகிறோம். எந்த விதமான பயமானாலும் அது நீங்குவதற்காக அனைவரும் தங்களின் இந்த உருவத்தைத் தான் தியானிக்கப் போகிறார்கள்.

தங்களது செந்தீ போல் சுழலும் கண்களையும், கூர்மையான கோரைப் பற்களையும், கழுத்திலுள்ள குடல் மாலைகளையும், குருதி படர்ந்த திருமேனியையும், யானைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் சிம்ம கர்ஜனையையும் கூர்மையான நகங்களையும் கண்டு எனக்கு அச்சமில்லை.

நான் பயப்படுவதெல்லாம், கோரமான இந்த ஸம்ஸாரத்தைக் கண்டுதான். என் முன்வினைப் பயன் எனும் பயங்கரமான ஜந்துக்கள் மத்தியில் விழுந்துகிடக்கிறேன். தங்கள் சரணம் ஒன்றே ஒரே பற்றுக்கோடு. என்னை இப்போதே அழைத்துக் கொள்ளுங்களேன்.

எப்போது முதல் இந்த மாயையில் சிக்கி உழல்கிறேன் என்று அறியேன். ஆனால், தங்களைக் கண்டபின்னும் உழல்வது தகுமா? எனக்கு தங்களிடத்து பக்தியைக் கொடுங்கள்.

எனக்கு மிகவும் பிரியமானவர் தாங்களே. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நன்மை செய்யும் இனிய நண்பர் தாங்களே. நான் பூஜிக்கும் பொருளும் தாங்களே. ப்ரும்மதேவர் தங்கள் திருக்கல்யாண குணங்களை பலவாறாக வர்ணித்துள்ளார். அவற்றை ஸாதுக்கள் வாயிலாக தினமும் கேட்பேன், சொல்லுவேன். அதனாலேயே விருப்பு வெறுப்பு நீங்கப்பெற்று, ஸம்ஸாரப் பெருங்கடலை எளிதில் தாண்டுவேன்.

இறைவா! உலகில் ஒவ்வொரு துன்பம் நீங்குவதற்கும் ஒரு ப்ராயச்சித்தம் உள்ளது. ஆனால், தங்களிடம் பக்தியில்லாது அவை செய்யப்படுமானால், அவை சிறிது நேரமே பலன் தரும். வினையின் வேரையும், தவறு செய்யும் எண்ணத்தையும் அது அறுப்பதில்லை.

ப்ரும்ம தேவர் முதல், உலகில் அனைத்து படைப்புகளின் உபாதான காரணமும் தாங்களே. மற்ற படைப்பாளிகளின் உந்து சக்தியும்‌ தாங்களே.

வெறும் எண்ணக்குவியலான மனம், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள்,‌ஐந்து தன்மாத்திரைகள் ஆகிய பதினாறு ஆரங்களைக் கொண்டது ஸம்ஸார சக்கரம். தங்களது அருளின்றி எவனாவது இந்த சக்கரத்திலிருந்து தப்பிக்க இயலுமா?

ஆலைக் கரும்புபோல் என்னைப் பிழிந்தெடுக்கும் இந்த ஸம்ஸார சக்கரத்தினின்று என்னைக் காத்தருளுங்கள்.

ஸ்வர்க போகங்கள், நீண்ட ஆயுள், செல்வம் ஆகியவற்றிறை என் அனுபவத்தினால் வெறுக்கிறேன். ஏனெனில் இவை அனைத்தையும் தன் புருவ நெறிப்பினால் கலங்கடிக்கும் என் தந்தையும் கூட வீழ்ந்தார்.

ஆகவே நான் இவை எதையும் விரும்பவில்லை. தாங்கள் இப்போது என்னருகில் இருப்பினும், மின்னல் போல் தோன்றி மறையக்கூடியவர். தாங்கள் விரும்பி நிரந்தரமாக வாசம் செய்யும் ஒரே இடம், தங்களது அடியார்களின் ஹ்ருதயம். எனவே தங்கள் அடியார்களின் கூட்டத்திலேயே எப்போதும் இருக்க விரும்புகிறேன்.

கானல் நீர் போன்ற பொய்யான உலக இன்பங்கள், நோய் பிடித்தழியும் இவ்வுடல். நிலையாமை முகத்தில் அறைந்தாலும், மனிதனின் மனம் போகங்களையே தேடுகிறது.

தமோகுணமும் ரஜோகுணமும் நிரம்பிய அசுரப் பிறவியான நான் எங்கே? பள்ளம் நோக்கி ஓடிவரும் வெள்ளம்போல், அணையற்றுப் பாயும் தங்கள் கருணை எங்கே?

 அனைத்து தாபங்களையும் போக்கும் தங்கள் திருக்கரத் தாமரைகளை என் தலையில் வைத்தருளினீர்களே! இந்த பாக்யம் தேவர்களுக்குக் கூட இதுவரை கிட்டவில்லையே!

பாமரனைப்போல், தேவர்கள் உயர்ந்தவர்கள், அசுரர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமே உங்களுக்கில்லையே. கற்பகத் தருவைப் போல் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்கள் அருள் அமைகிறதேயன்றி, தாங்கள் உயர்வு தாழ்வு நோக்குவதில்லையே.

விழுங்கக் காத்திருக்கும், காலனாகிய பெருநாகம் குடியிருக்கும் பாழுங்கிணற்றில் கூடாவொழுக்கத்தால் விழத்தெரிந்தேன்‌. நாரதர் வந்து காக்காவிடில், என் நிலைமை என்னவாகியிருக்கும்? எனவே ஸாது சேவையை நான் கைவிடவே இயலாதே.

தங்களிடம் பெருங்காதல் கொண்டுள்ள ஸனகாதியர், தேவர்கள் மற்றும் நாரதரின் சொல்லை மெய்ப்பிக்கவே தாங்கள் ஓடி வந்து என்னைக் காத்தீர்கள்!

ப்ரளய காலத்தில் அனைத்தையும் தங்களுக்குள் ஒடுக்கிக்கொண்டு, யோக நித்திரை செய்கிறீர். நீங்கள் எழும்போது, சிறிய விதையிலிருந்து பெரிய மரம் முளைப்பதுபோல், தங்கள் தொப்புளிலிருந்து இந்த ப்ரபஞ்சம் மீண்டும் முளைக்கிறது.

இதே ப்ரபஞ்சத்தில் தாங்கள் மீன், விலங்கு, பறவை, முனிவர், தேவர்கள் ஆகிய பல திருமேனிகள் தாங்கி அவதரித்து ஜீவன்களின் துன்பத்தைப் போக்குகிறீர்கள்.
ஒவ்வொரு யுகத்திலும் அந்தந்த யுகதர்மங்களைக் காக்கிறீர்கள். மூன்று யுகங்களிலும் வெளிப்படையாகத் தோன்றுவதால் த்ரியுகன் என்ற பெயர் பெறுகிறீர்கள். கலியுகத்தில் மறைந்து நின்று அருள் புரிகிறீர்கள்.

புலன்களால் ஜீவன்களின் மனம்  அலைக்கழிகிறது. 
பற்றினால், இவன் நம்மவன், இவன் பிறன் என்ற வேறுபாடு கொண்டு அலைகிறான். தாங்கள் என் மேல் செலுத்திய அன்பைச் சிறிதேனும் இந்த ஜீவன்களின் மீதும் செலுத்தி அனைவரையும் கரையேற்றுங்கள்.

ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் தங்களுக்கு இது ஒரு சிரமமா? ஒன்றுமறியாதவரிடம்தானே சான்றோர் கருணை மிகக் கொள்வர். 

வைதரணியைக் கடப்பது மற்றவர்க்குச் சிரமம். 
தங்கள் அடியார்களுக்கோ அது சுலபம். என் மனம் தங்கள் திருவடித் தாமரையில் மூழ்கியுள்ளது. எனவே, எனக்கு என்னைப் பற்றிய கவலையே இல்லை. என் கவலை அனைத்தும் உழலும் இந்த ஜீவன்களைப் பற்றித்தான். 

முனிவர்கள் வேண்டுமானால் காடுகளில் சென்று தவமியற்றி முக்தி பெறட்டும். நானோ எவ்வித உதவியுமின்றி பரிதாபமாக உழலும் இந்த ஜீவகோடிகளை விட்டுவிட்டுத் தனியொருவனாக முக்தியடைய விரும்பவில்லை. 

அனைத்திலும் சிறந்த இறைவா! நமஸ்கரித்தல், துதித்தல், இறையர்ப்பணமாகச் செயல்கள் செய்தல், ஸாது சேவை, திருவடி ஸ்மரணம், தங்கள் கல்யாண குணங்களைக் கேட்டல், ஆகிய ஆறும் பக்தியின் முக்கியமான அங்கங்கள். தங்களையே பற்றியிருக்கும் சாதுக்களின் செல்வம் தாங்களே. எனக்கு சாது சேவை எப்போதும் கிடைக்க அருளுங்கள்!

என்று கண்களில் நீர் வழியக் கூறி முடித்தான் ப்ரஹலாதன்.

தனக்கு மட்டுமின்றி அனைத்து ஜீவன்களுக்காகவும் சேர்த்து வேண்டும் இந்த ஸ்துதி, ஆகச் சிறந்த துதி என்று அனைத்து சாதுக்களாலும் கொண்டாடப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment