Tuesday, June 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 503

ஜ்வர தேவதை கண்ணனிடம் சரணடைந்தது.

எல்லையற்ற சக்தி படைத்த பரம்பொருளே! அனைத்து ஜீவன்களுக்கும் ஆன்மாவாக விளங்குபவரே! 

உலகின் தோற்றம், இருப்பு மற்றும் அழிவிற்கும் காரணமான மூலப்பொருள். மாறுபாடற்ற ப்ரும்ம ஸ்வரூபமான தம்மை வணங்குகிறேன்.

தாங்கள் காலரூபியாவீர். நல்வினை தீவினைகளின் பயனை அளிக்க அத்ருஷ்டமாக விளங்குபவர். ஐம்புலன்களின் தன்மை நீரே. பூதங்களின் மூலங்கள், இந்திரியங்கள் பதினொன்று, அவற்றின் மாறுபாடுகள்,  அவைகளின் கூட்டான உடல், நியாங்களுக்கேற்ற செயல், அவற்றின் விளைவுகள், இவை அனைத்தும் தாங்களே. மாயைகளற்ற எல்லை தாங்களே.

லீலையாகப் பல அவதாரங்கள் செய்து தேவர்கள் மற்றும் நல்லோரைக் காக்கிறீர்கள். உலகத்திற்குத் துன்பம் விளைவிப்பவர்களை அழிக்கிறீர்கள்.

(பரித்ராணாய ஸாதூனாம் - ஸாதுக்களைக் காப்பது முதற்கடைமை, விநாசாய ச துஷ்க்ருதாம் - கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்வோரை அழிப்பது அடுத்த கடைமைதான்)

அமைதியானதும் ஆனால் உக்ரமானதும் அளப்பரிய சக்தி‌கொண்டதும் தங்களது தேஜஸால் உருவானதுமான ஜ்வரதேவதையால் கடுமையாகத் தாக்கப்பட்டேன். அதனால் மிகவும் துன்பப்படுகிறேன். என்னைக் காத்தருளுங்கள் என்றது.

கண்ணன் நடுங்கிக்கொண்டு நிற்கும் அதைப் பார்த்து 
மூன்று தலைகள் கொண்ட ஜ்வர  தேவதையே! என்னால் உனக்கு அபயம் அளிக்கப்பட்டது. இந்த உரையாடலையும், நீ செய்த துதியையும் கூறுபவர்களுக்கு உன்னால் துன்பம் நேரக்கூடாது. என்றான்.

கண்ணனை வணங்கி அப்பால் சென்றது அந்த ஜ்வரதேவதை.

கண்ணன் ரதத்தின் மீதேறி பாணனைத் தேடினான்.

பாணாசுரன் அதற்குள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஆயிரம் கரங்களிலும் பல்வேறு விதமான ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கண்ணனைத் தாக்க வந்தான்.

கண்ணன் சக்ராயுதத்தை ஏவினான். அது பாணனின் கரங்களை மரத்தை வெட்டுவதுபோல்‌ சடசடவென்று வெட்டத் துவங்கியது.

தன் பக்தன் மீது இரக்கம் கொண்ட சிவன் அங்கு வந்தார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 502

அநிருத்தனைக் காணாமல் துவாரகையிலுள்ளவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நாரதர் அங்கு வந்தார். அவரை முறைப்படி வரவேற்று உபசாரம் செய்தான் கண்ணன். 

நாரதர், அநிருத்தன் சோணிதபுரம் சென்ற கதையையும் தற்போதைய நிலைமையையும் எடுத்துக் கூறினார்.

அநிருத்தனை பாணன் நாகபாசத்தால் கட்டினான் என்று கேட்டதும் பலராமன் துள்ளியெழுந்தான். பன்னிரண்டு அக்ஷௌஹிணி படையைத் திரட்டிக்கொண்டு அனைவரும் கிளம்பினர்.

கண்ணனின் சேனை பாணனின் நகரை நாற்புறங்களிலும் சூழ்ந்து கடுமையாகத் தாக்கியது. 

பாணன் கோபம் கொண்டு தானும் பன்னிரண்டு அக்ஷௌஹிணி சேனையைத் திரட்டிக்கொண்டு வந்தான்.

பாணனுக்காக காவல் இருந்த பரமேஸ்வரன் அவன் சார்பில் போரிட வந்தார். தந்தையுடன் தேவசேனாதிபதியான முருகனும் சமருக்கு வந்தார்.

கண்ணனுக்கும் சிவனுக்கும், ப்ரத்யும்னனுக்கும் முருகனுக்குமாக கடும் போர் மூண்டது.

ப்ரும்மா முதலான அத்தனை தேவர்களும் பயந்துபோய் வானில் குழுமினர்.

பரமசிவனின் பரிவாரங்களான பூதகணங்கள், குஹ்யர்கள், டாகினிகள், ராக்ஷஸர்கள், வேதாளர்கள், விநாயகர்கர்கள் இன்னும் பல கணங்களையும் கண்ணன் தன் அம்புகளால் அடித்து விரட்டினான்.

பரமேஸ்வரன் விட்ட அத்தனை அம்புகளையும் அடக்கினான் கண்ணன்.

கண்ணன் ஜ்ரும்பனாஸ்திரம் என்ற அஸ்திரத்தை ஏவி பரமேஸ்வரனை மயக்கி கொட்டாவியாக விடச் செய்தான். அவர் சற்று செயலற்ற சமயத்தில் பாணனின் படைகள் முழுவதையும்‌ அழித்தான். முருகன் இது ஏதோ லீலை என்று புரிந்துகொண்டு மயில் மீதேறி போர்க்களத்தைவிட்டு வெளியேறினார்.

பாணனின் மந்திரிகள்‌ கும்பாண்டன், கூர்பாண்டன் முதலியோர் அடிபட்டு விழுந்தனர். தளபதியர் இல்லாத பாணனின் மீதிப் படை சிதறி ஓடியது.

கடுங்கோபம் கொண்ட பாணன் தானே நேராக கண்ணனுடன் போரிடச் சென்றான். ஒரே சமயத்தில் ஐநூறு விற்களை ஏந்தி ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு அம்புகளைத் தொடுத்தான்.

கண்ணன் அவையனைத்தையும் ஒடித்தான். பாணனின் சாரதியையும்‌ குதிரைகளையும்‌ கொன்று தேரைச் சிதைத்தான். பின்னர் பாஞ்சஜன்யத்தை எடுத்து முழக்கினான்.

அதைக் கேட்ட பாணனின் தாய் தன் மகனுக்கு ஆபத்தென்று உணர்ந்தாள். மகனைக் காப்பாற்ற ஆடைகளின்றி கண்ணனின் எதிரில் தலைவிரிகோலமாய் ஓடிவந்தாள்.

கண்ணன் வில்லைக் கீழே வைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். கிடைத்த அவகாசத்தில் பாணன் நிராயுதபாணியாக நகருக்குள் சென்றான்.

அதற்குள் கண்ணனை ஜ்வரதேவதை எதிர்க்க வந்தது. மூன்று தலைகளும் மூன்று கால்களும் கொண்டு மஹாகோரமாய் விளங்கிய அந்த ஜ்வர தேவதையை அடக்க கண்ணன் இன்னொரு வித ஜ்வர தேவதையை அனுப்பினான். இரண்டும் தங்களுக்குள் சண்டையிட்டன. கண்ணன் அனுப்பிய தேவதையின் தாக்குதல் தாங்காமல் அந்த ஜ்வர தேவதை கண்ணனைச் சரணடைந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, June 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 501

ஊஷையின் அன்னையர்களும், காவலர்களும் சொன்ன செய்தியைக் கேட்டு மிகவும் கவலை கொண்டான் பாணாசுரன்.

என்னதான் பெரிய அசுரன், மூவுலகத்தோரையும் நடுங்கவைக்கும் பலம் பொருந்தியவன் என்றாலும் மகள் விஷயமாக ஏதேனும் தவறு நேர்ந்தால் உள்ளிருக்கும் பாசம் மிக்க மென்மையான மனம் கலங்கத்தானே செய்யும்.

மகளை வேவு பார்க்க ஆள்களை அனுப்ப அவனது மனம் இசையவில்லை. தானே நேரில் சென்று பார்க்கலாம் என்று கன்னிமாடத்திற்குச் சென்றான்.

அப்போது அநிருத்தனும் ஊஷையும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர்.

திடீரென்று எதிர்பாராமல் பாணன் நுழைந்ததும் அநிருத்தனால் ஒளிய முடியவில்லை. 

கன்னிமாடத்தில் அழகே உருவான ஆண்மகன். மன்மதனின் மகன். கண்ணனின் மகனான ப்ரத்யும்னனும் அநிருத்தனும் நீலத் திருமேனி கொண்டவர்கள். சட்டென்று பார்க்க கண்ணனைப்போலவே இருப்பார்கள். மஞ்சள் ஆடை உடுத்திய அவன் பெரும் வீரன் என்பதை அவனது அங்க லட்சணங்கள் கூறின. தாமரை போன்ற கண்கள், சுருண்ட கேசம். இவனது அழகில் மகள் மயங்கியதில் வியப்பில்லை என்று தோன்றியது பாணனுக்கு. 

ஒரு பக்கம் இவ்வளவு பலத்த காவலைத் தாண்டி இவன் எப்படி கன்னிமாடத்திற்குள் வந்தான் என்று வியப்புதான். ஆனால் மறுபக்கம் பாணனுக்கு மஹாகோபமும் வந்தது.
 
அவனது கண்ணசைவில் படைவீரர்கள் ஓடிவந்து அநிருத்தனைச் சூழ்ந்தனர். அநிருத்தனை அப்போதே கொல்ல எண்ணி கதையை ஏந்திக்கொண்டு பாணாசுரன் நின்ற கோலம் காலதேவனே உருவெடுத்தது போல் இருந்தது.

தன்னைப் பிடிக்க வந்த காவலர்களை அலட்சியமாகப் பந்தாடினான் அநிருத்தன். அவர்கள் எலும்புகள் நொறுங்க வலி தாங்காமல் ஓடிவிட்டனர். 

பாணாசுரனின் கோபம் தலைக்கேற அநிருத்தனை நாகபாசத்தால் கட்டினான். அதைக் கண்டு ஊஷை அழத் துவங்கினாள்.

அநிருத்தனைக் காணாமல் துவாரகையில் அனைவரும் கவலையில் மூழ்கினர். 

எப்போதும் ஒருவர் எல்லா விஷயங்களையும் அறிந்துகொண்டு தானே வந்து தெளிவித்துக் கவலை போக்குவாரே..

ஆம்.. 

அவரேதான்..

அவர் துவாரகையினுள் ப்ரவேசித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 27, 2020

ஸ்ரீ மத் பாகவத பழம் - 500


ஒரு நாள் பாணாசுரன் நகரைச் சுற்றி வரும்போது பரமேஸ்வரனைக் கண்டான். 
அவரை நமஸ்காரம் செய்தான். பின்னர் மிகுந்த செருக்குடன்,

ஐயனே தாங்கள் எனக்கு ஆயிரம் கரங்களைக் கொடுத்தீர்கள். ஆனால் அவை எனக்குச் சுமையாய் உள்ளன. என்னை எதிர்க்கும் வல்லமையுள்ள யாரும் மூன்று லோகங்களிலும் இல்லை. 
நான் தினவெடுத்தவனாக மலைகளை உடைத்து திக்கஜங்களைத் தாக்கினேன். அவை பயந்து ஓடிவிட்டன. என்று கூறிச் சிரித்தான்.

வரத்தினால் பெற்ற சக்தியை அவன் தவறாகப் பயன்படுத்துவதைக் கேட்ட பரமேஸ்வரன் கோபம் கொண்டார்.
முட்டாளே! என்னையொத்தவன் ஒருவன் வருவான். உன் திமிரை அடக்கும் போர் அவனுடன் நேரும் என்று கூறினார்.

சண்டையில் மிகுந்த விருப்பம் கொண்ட பாணன் அதைக் கேட்டு மகிழ்ந்தான். 

பாணனின் மகளின் பெயர் ஊஷை என்பதாம்.
அவளது கனவில் கண்ணனின் பேரனான அநிருத்தன் அடிக்கடி தோன்றினான். கனவில் கண்ட அவனைக் காதலிக்கத் துவங்கினாள் ஊஷை.

பாணாசுரனின் மந்திரி கும்பாண்டன் என்பவன். அவனது மகள் சித்ரலேகா என்பவள் இளவரசியின் தோழியாவாள். 

அவள் தன் தோழி, கனவில் கண்ட வாலிபன் யாரென்று கண்டுபிடிக்க பல்வேறு இளவரசர்களின் உருவங்களை வரைந்து காண்பித்தாள். பின்னர் தேவர்கள், அசுரர், வித்யாதரர், கின்னரர், ஸித்தர் யக்ஷர் அனைவரையும் வரைந்தாள். ஊஷையோ அவர்களுள் எவருமில்லை என்றாள்.

பின்னர் மனிதர்களை வரைந்தாள். சூரர், வசுதேவர், பலராமன், கண்ணன், ப்ரத்யும்னன் என்று வரிசையாக வரைந்து தள்ளினாள். ப்ரத்யும்னனைப் பார்த்ததும் மாமனார் என்பதால் ஊஷை வெட்கமடைந்தாள். பின்னர் ப்ரத்யும்னனின் மகனான அநிருத்தனை வரைந்ததும் இவர்தான் இவர்தான் என்று குதித்தாள் ஊஷை.

மிகுந்த யோகசக்தி வாய்ந்த சித்ரலேகா அநிருத்தன் துவாரகையிலிருப்பதைக் கண்டுபிடித்தாள். 

உடனே இரவு வேளையில் வான் வழியாகச் சென்று துவாரகையை அடைந்தாள். அங்கே அழகிய மாளிகையில் பஞ்சணையில் உறங்கிக்கொண்டிருந்தான் அநிருத்தன். அவனைக் கட்டிலோடு சோணிதபுரம் தூக்கிக்கொண்டு வந்து ஊஷையிடம் விட்டாள்.

கண்விழித்த அநிருத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் சித்ரலேகா  அவனுக்கு ஊஷையின் காதலைக் கூற, பேரழகியான அவளைக் கண்டதும் அவனும் காதல் கொண்டான்.

அவனை அங்கேயே மறைத்துவைத்தார்கள் இருவரும். ஊஷையும் அநிருத்தனும் கன்னிமாடத்திற்குள்ளேயே களித்திருந்தனர்.

ஊஷையின் அன்பினாலும் உபசரிப்பினாலும் அநிருத்தன் தான் எங்கிருக்கிறோம், வந்து எத்தனை நாள்களாயிற்று என்பதையெல்லாம் மறந்துவிட்டான்.

ஊஷையிடம் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்ட மற்ற அரசியரும் வீரர்களும் அதற்கான காரணம் என்னவென்றறிய முயன்று தோற்றனர்.

திருமணவயதில் இருக்கும் அவளது கன்யாவிரதம் பங்கமாகுமோ என்றஞ்சி, பாணனிடம் முறையிட்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 499

பேத்தியின் திருமணம் முடிந்ததும் நண்பர்களின் தூண்டுதலால்‌ ருக்மி பலராமனை சொக்கட்டான் ஆட அழைத்தான்.

பலராமன் ருக்மியின் அழைப்பை ஏற்று சொக்கட்டான் ஆட வந்தார். ஒவ்வொரு முறையும் பணயப் பணம் முழுவதையும் ருக்மியிடம் தோற்றார். அவ்வமயம் ருக்மியின் நண்பர்களான கலிங்க மன்னன் முதலானோர் பலராமனைப் பலவாறு இழித்தும் பழித்தும் பேசினர். அவர்களோடு சேர்ந்து ருக்மியும் சிரித்தான்.

அடுத்த ஆட்டத்தில் ருக்மி ஒரு லட்சம் பொட்காசுகளைப் பணயம் வைத்தான். அதை பலராமன் வென்றான். ருக்மி ஆட்டத்தை ஏமாற்றி நான் தான் வென்றேன் என்று சாதித்தான். அவனது நண்பர்கள் அதற்கு சாட்சி சொல்லி கேலி செய்தனர்.

ஏற்கனவே பலராமனுக்குக் கோபம் அதிகம். இப்போது அவர்கள் ஏமாற்றியது அவரது கோபத்தை அதிகமாக்கிற்று.
கண்கள் சிவக்க பத்துகோடி பொற்காசுகளை வைத்து ஆடினார்.

இம்முறையும் சூதாட்ட நெறிப்படி பலராமனே வென்றார். ஆனால் ருக்மி நான்தான் ஜெயித்தேன் என்று கூறி, நடுவர்கள் சொல்லட்டும் என்றான்.

அப்போது பலராமனுக்கே ஜெயம், ருக்மி சொல்வது பொய் என்று அசரீரி கேட்டது. 

அதைக் கேட்ட ருக்மி, அசரீரி வாக்கைப் பொருட்படுத்தாமல் தன் பழைய சுபாவத்தினால் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பலராமனை ஏசத் துவங்கினான்.

நீங்கள் இடையர்கள், மாடு மேய்ப்பவர்கள், காட்டில் அலையும் பரதேசிகள், சொக்கட்டான் ஆட்டம் அரசர்களுக்குரியது. காட்டுவாசிகளுக்கு இந்த ஆட்டம் எப்படித் தெரியும்? என்று கத்தினான்.

அதைக் கேட்ட பலராமன் மிகவும் சினம் கொண்டு அங்கிருந்த இரும்புத் தடியை எடுத்து திருமண மேடையிலேயே அவனை அடித்துக் கொன்றார்.

கலிங்க மன்னன் பற்களைக் காட்டி காட்டி கேலி செய்தான். இப்போது பயந்து தப்பி ஓடிய அவனைப் பிடித்து பற்களைத் தட்டினார்.

மீதி அரசர்கள் இரும்புத் தடியின் அடி தாங்காமல் ரத்தம் வழியச் சிதறி ஓடினர்.

இதைக் கண்ட கண்ணன் ஒன்றும்‌ சொல்லாமல்‌ அமைதியாக இருந்தான். ஏனெனில் ருக்மியைக்‌ கொன்றதற்கு பலராமனைப் பாராட்டினால் ருக்மிணி வருந்துவாள். பலராமனை அச்செயலுக்காக இகழ்ந்தால் அவன் வருத்தப்படுவான்.

எனவே அமைதியாக அடுத்த வேலைக்குத் தூண்டினான்.

அனைவரும் மணமக்களைத் தேரிலேற்றிக்கொண்டு துவாரகைக்கு வந்தனர். 

அப்போது பரிக்ஷித், மஹரிஷி, அநிருத்தன் பாணாசுரனின் மகள் உஷாவை மணந்தார் என்று கேள்வியுற்றேன்‌. அப்போது பரமேஸ்வரனுக்கும்‌ கண்ணனுக்கும் யுத்தம் நிகழ்ந்ததாமே. அதை விளக்கமாகக் கூற இயலுமா? என்றான்.

ஸ்ரீ சுகர், பதிலுரைக்கத் துவங்கினார்.

ஆமாம் அரச குலத் திலகமே! வாமன வடிவில் வந்த பகவானுக்கு தான் உள்பட‌ அனைத்தையும் தானம் வழங்கிய பலிச் சக்கரவர்த்தியின் கதையை‌ முன்பு கூறினேன் அல்லவா? அந்த பலிக்கு நூறு புதல்வர்கள். அவர்களுள் மூத்தவன் பாணன். அவன் சிறந்த சிவபக்தன். மிகவும் மரியாதை க்குரிய வன். வள்ளல், பெரிய அறிவாளி, ஸத்யஸந்தன்.

அவன் சோணிதம் என்ற அழகிய நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான்.
பரமேஸ்வரனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருந்த அவனுக்கு தேவர்களும் பணிவிடை செய்தனர்.

பரமேஸ்வரன் அவனுக்கு ஆயிரம்‌ கரங்களை அருளியிருந்தார். ஒரு முறை பாணம் கைலாயத்தில் சிவன் தாண்டவமாடும் சமயத்தில் தன் ஆயிரம் கரங்களாலும் வாத்தியங்களை வாசித்து அவரை மகிழ்வித்தான்.

சரணடைந்தவர்களை அன்புடன் காக்கும் பரமேஸ்வரன், அவனிடம்‌ என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பாணன் அவரை விழுந்து வணங்கினான். பின்னர் நீங்கள்‌என் நகரத்தையும் என்னையும் காக்கவேண்டும். அங்கேயே இருக்கவேண்டும் என்றான்.

கொடுத்த வரத்தைக் காப்பதற்காக பரமேஸ்வரன் சோணிதம் என்ற நகரத்தைக் காவல் காத்து அங்கேயே வசித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 498

துவாரகை முழுவதும் கண்ணனின் குடும்பம் நிறைந்தது. மனைவிகள், மகன்கள், பேரக்குழந்தைகள் என்று கண்ணனின் வழித்தோன்றல்கள் லட்சக்கணக்கில் இருந்தனர்.

ப்ரத்யும்னன் ருக்மியின் மகளான ருக்மவதியைத் திருமணம் செய்தான் என்று கேட்டதும் பரீக்ஷித் கேட்டான்.

ருக்மி கண்ணனைப் பகைவனாக எண்ணுபவன் ஆயிற்றே. கண்ணனால் அவமதிக்கப்பட்டவன். கண்ணனைக் கொல்வதற்கு சமயம் எதிர்பார்த்திருந்தவன். அவன் எவ்வாறு தன் பெண்ணைக் கண்ணனின் மகனுக்குக் கொடுத்தான்.
பகைவர்களுக்கிடையே திருமண உறவு எவ்வாறு சாத்தியமாயிற்று?

நீங்கள் நிகழ்ந்தது, நிகழவிருப்பது, புலன்களுக்கப்பாற்பட்டது, தூரத்தில் இருப்பது, மறைந்துள்ளது போன்ற அனைத்தையும் நேருக்கு நேர் காண்பவராயிற்றே. எனக்கு விளக்கிச் சொல்லுங்கள். என்றான் அரசயோகி.

ஒவ்வொரு முறையும் பரிக்ஷித் கேள்வி கேட்கும்போது அதை‌மிகவும் ரசித்தார் ஸ்ரீ சுகர். கதை சொல்வதற்கு ஆர்வத்தைத் தூண்டுவது கேட்பவர்கள் எழுப்பும் கேள்விகளே.

பரிக்ஷித்தைப் பார்த்து அன்பு பொங்கும் பார்வையுடன் கூறலானார்.

ப்ரத்யும்னன் இப்போது உடலை அடைந்த மன்மதன் ஆவான்.

ருக்மிணியைக் கண்ணன் அழைத்துக்கொண்டு வந்த பின்பு, ருக்மி தங்கை இல்லாமல் விதர்ப்பதேசத்துக்குள் ப்ரவேசிக்கமாட்டேன் என்று ப்ரதிக்ஞை செய்தான். 

துஷ்டர்களாயினும் தான் சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவர்களாயிருந்தனர். 

எனவே ருக்மி விதர்ப்பத்திற்குள் செல்லாமல் கண்ணன் அவனை அவமானப்படுத்திய இடத்திலேயே தான் வாழ போஜகடம் என்ற ஒரு நகரத்தை அமைத்துக்கொண்டான்.

தன் மகள் ருக்மவதியின் திருமணத்திற்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் மன்மதனாகிய ப்ரத்யும்னனின் அழகில் மயங்கிய ருக்மவதி அவனுக்கு மாலையிட்டாள். 

சுயம்வரத்திற்கு வந்திருந்த மற்ற அரசர்களைத் தன் பராக்ரமத்தால் வெற்றி கொண்டு ருக்மவதியை எடுத்து வந்தான் ப்ரத்யும்னன்.

ஏற்கனவே ருக்மிணியின் கல்யாணத்தில் ஏற்பட்ட பகையினால் தங்கையின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போது மகள் விஷயத்திலும் பகை பாராட்ட விரும்பவில்லை ருக்மி. தங்கை ருக்மிணியின் மனமகிழ்ச்சிக்காகவும், மகளின் மேலிருந்த பாசத்தாலும் ருக்மவதியை ப்ரத்யும்னனுக்கு முறைப்படி மணம் முடித்துக் கொடுத்தான்.

பத்து புதல்வர்களுக்குப்‌ பின் ருக்மிணிக்கு சாருமதி என்ற அழகான மகள் பிறந்தாள். அவளை க்ருதவர்மாவின் மகன் பலி என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

ப்ரத்யும்னனின் மகன் அநிருத்தனுக்கு ருக்மி தன் மகன் வயிற்றுப் பேத்தி ரோசனையைத் தானே விரும்பித் திருமணம் செய்து கொடுத்தான்.

அந்தத் திருமணத்தில் பங்கேற்க ருக்மிணி, கண்ணன், பலராமன், சாம்பன், ப்ரத்யும்னன் ஆகியோர் போஜகடம் சென்றனர்.

ருக்மி தங்கையின் அன்பைப் பெறுவதற்காகவும், கண்ணனிடம் நட்பு பாராட்டவும் மகள், பேத்தி இருவரையும் கண்ணனின் மகன் மற்றும் பேரனுக்குக் கொடுத்தான். இவ்வாறு திருமணம் செய்வது தர்மமில்லை என்றாலும் தங்கையின் அன்பிற்காக இவ்வாறு செய்தான். ஆனால் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்த ருக்மிக்கு அவனது நண்பர்கள் பகையை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருந்தனர்.

ரோசனையின் திருமணம் முடிந்ததும் பலராமனை சூதாட்டத்திற்கு அழைக்கச் சொல்லி ருக்மியைத் தூண்டினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, June 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 497

கண்ணனின் மனைவிகள் ஒவ்வொருவரும் அழகு, திறமை, செல்வம் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்.

அவர்கள் அனைவருமே கண்ணனுக்கீடான பத்து புதல்வர்களைப் பெற்றனர்.

எத்தனை மனைவிகளோ அத்தனை உருவங்களை எடுத்து கண்ணன் அவர்கள் திருமாளிகையிலேயே இருந்தான். அதனால் அவர்கள் ஒவ்வொருவரும் கண்ணன் தன்னைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. தன்னைத்தான் அதிகம் விரும்புகிறான் என்று எண்ணினர்.

ருக்மிணியைத் தவிர வேறொருவரும் கண்ணனின் பெருமைகளை உணர்ந்தவர் அல்லர். லீலைக்காக அவதாரம்‌ செய்தமையால் அவர்கள் அனைவரையும் மாயையிலேயே வைத்திருந்தான் கண்ணன்.

கண்ணனோ ஆத்மானந்தத்தில் ரமிப்பவன். அவனது அழகிலும், புன்சிரிப்பிலும், கனிந்த பார்வையிலும் மயங்கினர் அப்பெண்கள். ஆனால் அவர்கள் ஒருவராலும் கண்ணனின் இதயத்தைக் கவர இயலவில்லை. கண்ணன் அவர்கள் அனைவரின் செயல்களில் மயங்காது அவர்களின் ஸ்வரூபத்தை ரசித்தான். மிகவும் சாதாரணமாக உலகியல் வாழ்வில் ஈடுபடும் மனிதன்போல் அவர்களுடன் குடும்பம் நடத்தினான்.

கண்ணனின் எட்டு ப்ரதான மனைவிகளின் பெயர்களாவன

ருக்மிணியின் புதல்வர்கள்
ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சாருசந்த்ரன், விசாரு, சாரு ஆகியோர்.

ஸத்யபாமாவின் புதல்வர்கள் பானு, ஸுபானு, ஸ்வர்பானு, ப்ரபானு, பானுமான், சந்த்ரபானு, ப்ருஹத்பானு, அதிபானு, ஸ்ரீ பானு, ப்ரதிபானு ஆகியோர்.

ஜாம்பவதியின் மகன்கள்
ஸாம்பன், ஸுமித்ரன், புருஜித், சதஜித், ஸஹஸ்ரஜித், விஜயன், சித்ரகேது, வஸுமான், திரவிடன், கிரது ஆகியோர்

ஸத்யா என்னும் நக்னஜிதியின் மகன்கள் 
வீரன், சந்திரன், அஶ்வஸேனன், சித்ரகு, வேகவான், விருஷன், ஆமன், சங்கு, வஸு, குந்தி ஆகிய பதின்மர்.

காளிந்தியின் புதல்வர்கள்
ஶ்ருதன், கவி, விருஷன், வீரன், ஸுபாஹு, பத்ரன், சாந்தி, தர்சன், பூர்ணமாசன், ஸோமகன் ஆகியோர்.

பிரகோஷன், காத்ரவான், ஸிம்ஹன், பலன், பிரபலன், ஊர்த்வகன், மகாசக்தி, ஸஹன், ஓஜஸ், அபராஜிதன் ஆகியோர் லக்ஷ்மணாவின் செல்வங்கள்.

மித்ரவிந்தாவின் புதல்வர்கள்
விருகன், ஹர்ஷன், அநிலன், கிருத்ரன், வர்தனன், அன்னாதன், மகாசன், பாவனன், வஹ்நி, க்ஷுதி முதலானோர்.

பத்ராவின் புதல்வர்கள் பின்வருமாறு
ஸங்கிரமஜித், பிருஹத்ஸேனன், சூரன், பிரஹணன், அரிஜித், ஜயன், ஸுபத்ரன், வாமன், ஆயு, ஸத்யகன் ஆகியோர் பத்ரையின் புதல் வர்கள்.

இவர்களைத் தவிர கண்ணனுக்கு ரோஹிணி முதலான 16100 மனைவிகள் உள்ளனர் என்று பார்த்தோம். ருக்மிணியின் மகனான ப்ரத்யும்னன் மாயாவதியைத் தவிர தாய் மாமனான ருக்மியின் மகளான ருக்மவதி என்பவளை மணந்தான். அவளது மகன் அநிருத்தன் ஆவான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, June 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 496

கண்ணன் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கும் பதில் கூறினாள் ருக்மிணி.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள தங்களை ஞானிகளும் ஸாதுக்களும் விரும்புகின்றனர். என்னை எவரோ விரும்புவதாகச் சொன்னீர்களே அவர்கள் அனைவரும் அறிவிலிகள்.

எல்லோரிடமும் பகை கொண்டு கடலின் நடுவில் குடியிருப்பதாகச் சொன்னீர்கள். அவ்வரசர்கள் அனைவரும் முக்குணங்களால் பாதிக்கப்பட்டு ஐம்புலன்களின் அடிமைகளாக விளங்குபவர்கள். தாங்களோ தூய சைதன்ய வடிவமாவீர். ஐம்பொறிகளுக்காட்பட்டவர்கள் தங்கள் ஸ்வரூபத்தில் எப்படி நட்பு பாராட்டுவார்கள்? அவர்கள் தம்மைப் பகையாகத்தானே நினைப்பார்கள்? 

தங்கள் பக்தர்களே அரசு கட்டிலைத் துறந்து வனம் செல்லும்போது தாங்கள் அரச பதவியைத் துறப்பதில் என்ன வியப்பு?

உங்களது செயல்பாடுகள் யாருக்கும் புரியாதென்று கூறினீர்கள். நீங்கள் மற்றும் தங்கள் அடியவர்களின் நடைமுறைகள் எப்போதும் உலக நெறிக்கு மாறுபட்டதே. தங்களை எவரால் உணர இயலும்?

தாங்கள் காலஸ்வரூபன் மட்டுமல்ல உயிர் போகும் நேரத்தில் நினைத்தால் பிறவிச் சங்கிலியையே அறுப்பீர்கள் என்பதையும் அறியாதவர்கள் அவர்கள்.

நான்கு விதமான புருஷார்த்தங்களையும் தரவல்ல தங்களை அடையவிரும்புபவர் அனைத்தையும் தியாகம் செய்கின்றனர். சிற்றின்பத்தில் உழல்பவர்க்குத் தாம் எட்டாக்கனியாவீர்.

தம்மைத் துன்புறுத்துபவரையும் காக்கும் தன்மை கொண்ட தங்கள் கருணையை முனிவர்கள் பாராட்டுகின்றனர். அத்தனை தேவர்களும் திக்பாலர்களும் தமது புருவ அசைவிற்கேற்ப செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தே உங்களைக் கணவராக வரித்தேன்.

மற்ற அரசர்களிடம் பயந்து போய் கடலைச் சரணடைந்ததாகச் சொல்வது பொருந்தவில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரையும் சிதறடித்து வென்ற பின்பே என்னை அழைத்துவந்தீர்.

உங்களைத் தஞ்சமடைந்தவர் அனைவரும் துன்பக்கடலிலிருந்து கரையேறிவிடுகின்றனர் என்பதே உண்மையாகும். 

நிலையான சுகத்தை வழங்க வல்ல தங்களைவிட்டு எந்தப் பெண்ணாவது பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு ஆகியவற்றில் பயம் கொண்டவனைக் காதலிப்பாளா?

அனைத்துலகிற்கும் ஈசனாகவும், ஆன்மாவாகவும் திகழும் தாங்களே எனக்கு அத்தனை பிறவிகளிலும் புகலாக அமைய வேண்டுகிறேன்.

ருக்மிணிக்காக தவம் கிடந்த அரசர்களின் பெருமைகளைக் கண்ணன் வர்ணித்தான். அதைக் கேட்டு சற்றே வெறுப்புடன் பதிலுரைத்தாள் ருக்மிணி.

கழுதைபோல் கர்மப் பொதி சுமப்பவர்களும், எருதுகள் போல் தங்களது சிந்தனையே இல்லாமல் வேலை செய்து மடிபவர்களும், நாய்களைப் போல் எஜமானன் இட்ட வேலையைச் செய்பவர்களும், பூனைகள்போல் அவர்கள் தின்ற எச்சிற்சோற்றை உண்பவர்களும், 
வஞ்சனையுடையவர்களும், பெண்ணடிமைகளும், தங்களது திருவடி மகிமைகளைச் செவியுறாத பெண்களின் கணவர்களாகட்டும்.

தோலும் மீசையும், நகமும்,‌ முடியும் மறைக்க உள்ளே மாமிசமும், குருதியும், புழுக்களும் மலமும், கபமும் பித்தமும் வாதமும் கொண்ட உயிருள்ள நடைபிணத்தை ஆணழகன் என்று நினைப்பவள் மதிகெட்டவள். சாஸ்வத சுகத்தை அறியாதவள்.

நீங்கள் என் ஆன்மாவை ரசிப்பவர். என் தோற்றத்தை நோக்காதவர். அனைவரிடமும் சமமாகப் பழகுபவர். உம்மிடம் எனது பற்று இன்னும் ஆழ்ந்துவிளங்கட்டும்.
நீங்கள் என்னை வேறு கணவனை நாடிச் செல்லலாம் என்று கூறியதை நான் தவறாக எண்ணவில்லை. இப்போதைய காலம் அவ்வாறிருக்கிறது. காசிராஜனின் பெண்ணான அம்பை சால்வனிடம் ஆசை கொண்டாள். தாங்கள் என்னை அவ்வாறு எண்ணலாகாது. 
திருமணமான பின்பும் சில பெண்டிருக்கு வேறு ஆடவன் மீது இச்சை வருமாயின் அவளை ஏற்பவனுக்கு நிம்மதி இருக்காது.

இவற்றைக் கேட்ட கண்ணன் நெகிழ்ந்துபோனான்.

கற்பகத்தருவே! நீ உயர்ந்த பேச்சுக்களைப் பேசக்கூடியவள் என்பதை அறிவேன். உனது பவளவாய் திறந்து பேசிக் கேட்கவே கேலி செய்தேன். நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையனைத்தையும் உனக்குத் தந்தேன். நீ விரும்புபவை அனைத்தும் உன்னைக் காமத்தில் தள்ளாமல் என்னிடம் பக்தி அதிகரிக்கச் செய்யும்.

உனது அன்பையும் கற்பையும் நன்கறிவேன் திருமகளே. நீ என்னிடம் கொண்ட‌ ஈடுபாட்டினால் ஸம்ஸாரத் தளைகள் உன்னை ஒன்றும் செய்யாது. உனதன்பு தன்னிகரற்றது. உன்னைப்போல் ஒரு மனைவியை இதுவரை காணவில்லை. என் புகழை மட்டுமே கேட்டு என்னை மணக்க விரும்பினாய் நீ.

உன் சகோதரனை அவமதித்ததையும், அநிருத்தனின் திருமணத்தில் வீண் தகறாறு செய்த அவனை பலராமன் கொன்றதையும் நீ என்னோடு பிரிவு நேருமோ என்ற அச்சத்தால் பொறுத்தாய். பிறந்தவீட்டுப் பாசத்தை எனக்காகப் பொறுத்தாய். உனக்குக் கைம்மாறு செய்யும் வகையறியேன். 
என்று பலவாறு சமாதனம் செய்தான் கண்ணன்.

இவ்வாறு பலவாறான கேலிப் பேச்சுகளும் ஊடல்களும் சமாதானங்களுமாக கண்ணன் மற்றும் ருக்மிணியின் வாழ்க்கை ஆனந்தமயமாக விளங்கியது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 495

கண்ணன் ருக்மிணியின் பவனத்தில் இருந்தபோது ஒரு சமயம் அவளுடன் ஒரு லீலை செய்ய எண்ணினான். ருக்மிணி கண்ணனுக்கிணையான கல்யாண குணங்கள் கொண்டவள். பொறுமையின் கடலாவாள்.

உணவேற்றபின் கண்ணன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். ருக்மிணி தன் தோழிகளுடன் சேர்ந்து பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள்.

அந்த பவனம் மலர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டத்தின் நடுவில் இருந்தது. 

தோட்டத்து மலர்களின் நறுமணம் காற்றை நிறைக்க, அகிற்புகை அவற்றோடு போட்டியிட்டுக்கொண்டிருந்தது. சாளரத்தின் வழியே நிலவொளி எட்டிப் பார்த்தது.

தோழியிடமிருந்து சாமரத்தை வாங்கி ருக்மிணி தானே வீசத் துவங்கினாள்.

ஊஞ்சலின் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் அவள் அசைய அவளது காற்சிலம்பின் ஒலி மதுரமாக இசைத்தது. கைவளைகள் சேர்ந்திசை பாடின.

முத்து மாலைகளும் ரத்தினங்கள் ஒளிரும் தங்க ஒட்டியாணமும் அவளது அசைவிற்கு ஈடு கொடுத்தன.

அழகிய திருமுகம், சுருண்ட கேசம், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் அட்டிகைகள், கருணை சிந்தும் பார்வை தனக்கேற்ப திருமகள் அவதரித்திருப்பதை எண்ணி மகிழ்ந்தான் கண்ணன். தன்னிடம் மீளாக் காதல் கொண்ட அவளை சொற்களால் சீண்டினான்.

ராஜகுமாரி! உன்னை மணக்க இந்திரன், திக்பாலர்கள் அனைவரும் போட்டிபோட்டனர்.

சிசுபாலன் அரசவம்சத்தினன். அவனுக்காக வாக்கினால் தானம் செய்யப்பட்ட பின்பும் நீ எப்படி இடையனான என்னை விரும்பினாய்?

எங்களைப் பார்த்தாயா? அவர்களுக்கெல்லாம் பயந்து ஓடிவந்து கடலின் நடுவில் நகரம் அமைத்து வாழ்கிறோம். எங்கள் பழக்க வழக்கங்கள் விசித்திரமானவை. உலகோர்க்குப் புரியாதவை.

எங்களை மணந்த பெண்கள் பலர் இவ்வாழ்க்கை முறை புரியாமல் துன்பப்படுகின்றனர்.

செல்வம், குலம், ஆளுமை, அழகு, அந்தஸ்து ஆகியவற்றில் சமமானவர்களே சம்பந்தம் செய்யத் தகுந்தவர்கள். இவற்றில் ஒன்று உயர்வாகவோ தாழ்வாகவோ‌ இருப்பின் திருமணம் பொருந்தாமல் போக வாய்ப்புகள் அதிகம்.

விதர்ப்ப இளவரசியான நீ அதையெல்லாம் அறியாமல், எதிர்காலம் பற்றிச் சிந்திக்காமல் அந்தணர்கள் என்னைப் பற்றிக் கூறிய புகழுரையைக் கேட்டு என்னைக் கணவனாக வரித்தாய் போலும். நீ விரும்பினால் இப்போதே உனக்கேற்ற வீரமான க்ஷத்ரியன் ஒருவனை மணந்துகொள்ளலாம். இதனால் உனக்கு தோஷங்கள் எதுவும் நேராது.

சிசுபாலன், சால்வன், ஜராசந்தன், தந்தவக்த்ரன், உன் அண்ணன் ருக்மி ஆகிய பலம் பொருந்திய அரசர்கள் அனைவரும் என்னைப் பகைவனாக எண்ணுகின்றனர்.

அவர்களின் அகந்தையை அழிக்கவே நான் உன்னை எடுத்துவந்தேன்.

மற்றபடி எனக்கு மனைவி, மக்கள், செல்வம் என்று எதிலும்‌ பற்றில்லை. எல்லாவற்றிற்கும் சாட்சியாக விளங்குகிறேன். ஆத்மாவில் ரமிப்பவன். என்னால் உனக்கு என்ன மகிழ்ச்சி ஏற்பட்டுவிடப்போகிறது. உன் அருமைகள் தெரிந்து ரசித்து உன்னைக் கொண்டாடத் தெரியாதவன் நான்.

இவ்வாறாக கண்ணன் பேசிக்கொண்டே போனான்.

ஆயிரமாயிரம் மனைவியர் இருப்பினும் தன் மீது ஒரு தனித்த அன்புடையவன் கண்ணன் என்று எண்ணியிருந்தாள் ருக்மிணி. கண்ணனிடமிருந்து வந்த அன்பற்ற சொற்களைக் கேட்டு அந்தோ என்று அலறினாள்.

அவளது கண்ணீரால் கண்மையும் குங்குமமும் கரைந்து அவள் அணிந்திருந்த வெண்பட்டு கறையாயிற்று. கைவளைகள் நழுவி விழுந்தன. உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தாள்.

ஊஞ்சலிலிருந்து குதித்த கண்ணன் அவள் தரையில் விழுமுன் கரங்களில் ஏந்தினான்.

அவளது கண்ணீரைத் தன் திருக்கரங்களால் துடைத்தான். கலைந்துபோயிருந்த தலையை அழகாக வாரிமுடிந்துவிட்டு புதிய மலர்களைச் சூட்டினான்.

சமாதானம் செய்யும் கலையில் தலைசிறந்தவனான கண்ணன் அவளைத் தன்னுடன் ஊஞ்சலில் அமர்த்திக்கொண்டு பேசத் துவங்கினான்.

நான் விளையாட்டுக்காகச் சொன்னேன் ருக்மிணீ! உன் இனிய குரலில் நீ ஏதாவது பதிலிறுப்பாய் என்று எதிர்பார்த்தேன். இப்படித் தளர்ந்துபோகலாமா? என்னை அறியாதவளா நீ..
என்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 494

கண்ணன் செல்வம் கொழிக்கும் நரகாசுரனின் அரண்மனைக்குள் சென்றான். அங்கே ஆயிரக்கணக்கான பெண்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

 கண்ணன் தங்களை நோக்கி நடந்து வரும் காட்சியைக் கண்ட மாத்திரத்தில் அவர்கள் அனைவரும் கண்ணன் மீது காதல் கொண்டனர்.

 இவரே எனக்குக் கணவராக அமைய ப்ரும்மதேவன் அருள் செய்யட்டும் என்று அவர்கள் அனைவரும் மனத்தினுள் வேண்டினார்கள்.

கண்ணன் அவர்கள் அனைவரையும் நீராடிப் புத்தாடை அணிந்தபின் அவர்களைத் தனித்தனிப் பல்லக்குகளில் ஏற்றினான். பெரும் செல்வத்தையும், தேர்களையும்‌ குதிரைகளையும் அவர்களோடு சேர்த்து துவாரகைக்கு அனுப்பினான்.

ஐராவதத்தின் வம்சாவளிகளான நான்கு தந்தங்கள் கொண்ட அறுபத்து நான்கு வெள்ளை யானைகளையும் அவர்களுடன் அனுப்பினான்.

பின்னர் அங்கிருந்து ஸத்யபாமாவுடன் கருடன் மீதேறிக் கிளம்பினான். நேராக இந்திர லோகம் சென்றான்.

தேவேந்திரன் இந்திராணியுடன் சேர்ந்து கண்ணனையும் பாமாவையும் மிகுந்த மரியாதைகளுடன் வரவேற்றான். பாதபூஜைகள் செய்தான். நரகாசுரனிடமிருந்து கொண்டுவந்த அதிதியின் குண்டலங்களை தேவேந்திரனிடம் கொடுத்தான் கண்ணன்.

பின்னர் கிளம்பும் சமயம் பாரிஜாத மரத்தைக் கேட்டான் கண்ணன். தன் தாயின் குண்டலங்களை மீட்டுத் தரும்படி துவாரகைக்கு வந்து வேண்டிய இந்திரன் இப்போது கண்ணன் அதை நிறைவேற்றிக் கொடுத்ததும் தன் சுபாவத்தைக் காட்டினான். ஏற்கனவே இந்திரன் கண்ணனை எதிர்த்து மழையைப் பொழிவித்தான். அப்போது கண்ணன் கோவர்தனத்தை குடையாய்ப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினான். இப்போது அனைத்தும் மறந்து கண்ணனிடம் பாரிஜாதமரத்தைத் தரமறுத்தான் இந்திரன்.

பாரிஜாத மரம் தேவர்களுக்குரியது. நீர் இறைவனே ஆனாலும் மனிதன். மனித உலகத்திற்கு பாரிஜாதமரத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க இயலாது என்றான்.

மிகுந்த கோபம் கொண்ட கண்ணன், மரத்தை வேருடன் பிடுங்கி கருடன் மீது வைத்துக்கொண்டு பாமாவுடன் கிளம்பினான். அப்போது அறிவற்ற இந்திரன் தேவர் படையுடன் கண்ணனை எதிர்த்தான்.

கண்ணன்‌ தேவர் படையைச் சிதறடித்து தேவேந்திரனை வென்று பாரிஜாத மரத்தை துவாரகைக்கு எடுத்துவந்தான்.

ஸத்யபாமாவின் தோட்டத்தில் பாரிஜாதமரம் நிறுவப்பட்டது. பாரிஜாதமலரின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட வண்டுகள் தேவலோகத்திலிருந்து தொடர்ந்து வந்துவிட்டன.

தன் காரியம் நிறைவேறக் கண்ணனை வணங்கிய இந்திரன் காரியமானதும் சமருக்கு வருகிறான். பதவியால் வந்த ஆணவம்!

நரகனின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 16100 கன்னிகைகளையும் கண்ணன் ஒரே முஹூர்த்தத்தில் 16100 உருவங்கள் எடுத்து திருமணம் செய்துகொண்டான். பின்னர் அவர்களுடன் தனித்தனியாக மாளிகை அமைத்து வாழத் துவங்கினான்.

 தேவாதிதேவனாகவோ, அரசனாகவோ இல்லாமல் ஒரு சாதாரண இல்லறத்தான்‌போல் அவர்களுடன் குடும்பம்‌ நடத்தினான். 

அவர்கள் அத்தனை பேரும் அரசிளங்குமரிகள். ஒவ்வொருவர்க்கும் அவரவர் தேசத்திலிருந்து ஏராளமான செல்வங்களும் பணிப்பெண்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். 
ருக்மிணி உள்பட கண்ணனின் மனைவிமார்கள் அனைவரும் தங்களுக்கென்று 
நூற்றுக்கணக்கான பணிப்பெண்களைக் கொண்டவர்கள். இருந்தபோதிலும் கண்ணனுக்கான பணிவிடைகளைத் தாமே முன்வந்து செய்தனர்.

வரவேற்பது, திருவடி பூஜை, கண்ணனுக்காக சமைப்பது, உணவு பரிமாறுவது, தாம்பூலம் கொடுப்பது, விசிறுவது, நீராட்டுவது அனைத்தையும் தங்கள் கண்ணனுக்குத் தாமே ஆவலுடன் செய்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 493

முரனைக் கண்ணன் கொன்றதும் அவனது ஏழு புதல்வர்களும் கண்ணனுடன் சமருக்கு வந்தனர்.

பீடன் என்ற சேனாதிபதியின் தலைமையில் வந்த அவர்களைக் கண்ணன் தன் அம்புகளால் துண்டு துண்டாக ஆக்கினான்.

அதைக் கண்டு நரகாசுரனே நேரில் யுத்தம் செய்ய பெரிய யானைப் படையுடன் வந்தான்.

நூற்றுக் கணக்கானவர்களை ஒரே சமயத்தில் தாக்கும் சதக்னீ என்ற வேலை கண்ணன் மீது வீசினான் நரகன். கண்ணன் அவனது வேலை உடைத்ததோடு நரகனின் படையையும் த்வம்சன் செய்தான். 

கண்ணனைத் தாங்கிக் கொண்டிருந்த கருடனும் தன் இறக்கைகளால் யானைகளைத் தாக்கினார்.

நரகன் கருடன் மீது வஜ்ராயுதத்தை வீச, அது யானையைப்‌ பூமாலையால் அடிப்பதுபோல் கருடன் தாங்கிக் கொண்டார்.

நரகன் சூலத்தை ஏந்திக்கொண்டு கண்ணனைத் தாக்க ஓடிவந்தான். அதைக் கண்ட ஸத்யபாமா ஸ்வாமி! அவன் பயங்கரமானவனாக இருக்கிறான். அவனைக் கொல்லுங்கள் என்று கூறி வாளை எடுத்துக் கொடுத்தாள்.

கண்ணன் ஒரு புன்னகையுடன் அவள் கொடுத்த வாளை வாங்கி அதைக் கொண்டு யானையின் மேலிருந்த நரகாசுரனின் தலையை வெட்டினான்.

பூமியில் விழுந்தாலும் நரகனின் தலை மிகவும் ஒளியுடன் விளங்கியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அப்போது பூமாதேவி ஓடிவந்து அதிதியின் ஒளிமிக்க குண்டலங்கள், வருணனின் குடை, தேவர்களுக்குச் சொந்தமான மந்தர மலையின் கொடுமுடி ஆகியவற்றைக் கண்ணனிடம் ஸமர்ப்பித்தாள்.
வைஜயந்தி மாலையைக் கண்ணனின் கழுத்தில் இட்டாள்.

பின்னர் கண்ணனை வணங்கித் துதி செய்தாள்

தேவாதிதேவரே! உமக்கு நமஸ்காரம். சங்கு சக்கரம் ஏந்தியவரே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே! தாமரையைத் தொப்புளில் உடையவரே! தாமரை மாலை அணிபவரே! தாமரைபோன்ற திருவடிகளை உடைவரே! உமக்கு நமஸ்காரம்!

பக்தர்களின் தாபங்களை நீக்கிக் குளிர்விக்கும் தாமரைக் கண்ணரே! தாமரைப் பூவைப்போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே!

உமக்கு நமஸ்காரம்!

நம: பங்கஜநாபா4ய நம: பங்கஜ மாலினே |
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்3ரயே||

இதே ஸ்லோகத்தை குந்தியும் கூறித் துதித்தது நினைவிருக்கலாம்.

தாங்களே பகவான். எங்கும் நிறைந்து விளங்கும் நீர் விளையாட்டிற்காக வசுதேவரின் புதல்வராக அவதாரம் செய்திருக்கிறீர்.

மாயைக்கு முன்பாக ஸத் ஸ்வரூபமாக விளங்குபவரே! அனைத்து காரணங்களுக்கும் மூலகாரணர் தாங்களே! ஞானஸ்வரூபரே! தங்களுக்கு நமஸ்காரம்!

தாங்கள் பிறப்பற்றவர்! பேராற்றல் கொண்டவர்! ப்ரபஞ்சத்தின் அனைத்து பொருள்களின் ஆத்மா ஆவீர்! அனைத்தும் தன்னிச்சையாக செயல்படுவதற்கும் தாங்களே காரணம்!
தங்களுக்கு நமஸ்காரம்!

இந்த நரகனுக்கு தாங்கள் முக்தியளிக்கவேண்டும். மேலும் அவன் புகழ் உலகம் நிலைபெறும்வரை நிற்கவேண்டும். இந்த பகதத்தன் நரகனின் புதல்வன் ஆவான். இவனுக்கு ஆசீர்வாதம் நல்குங்கள். என்றாள்.

பகதத்தன் கண்ணனை வணங்க, கண்ணன் அவனுக்கு அபயம் அளித்தான்.

பின்னர் பாமாவை அழைத்துக்கொண்டு ப்ராக்ஜோதிஷபுரத்திற்குள் நுழைந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, June 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 492

கண்ணனின் அத்தை ச்ருதகீர்த்தி என்பவள் கேகய தேசத்து அரசனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அவளது மகள் பத்ராவை அவர்களே விரும்பி கண்ணனுக்குத் திருமணம் செய்துகொடுத்தனர்.

மத்ர தேசத்து இளவரசி லக்ஷ்மணாவை ஸ்வயம்வரத்தில் மணந்து பகையரசர்கள் அனைவரையும் வென்று அழைத்து வந்தான் கண்ணன்.

நரகாசுரனைக் கொன்று அவனது சிறையிலிருந்த ஆயிரக் கணக்கான இளவரசிகளை மணந்தான்.
 
பரீக்ஷித் இடைமறித்தான்.

நரகாசுரன் யார்? அவன் ஏன் இளவரசிகளைச் சிறைப் பிடித்தான்? கண்ணன் எவ்வாறு நரகாசுரனைக் கொன்றான்?

ஸ்ரீ சுகர் பரீக்‌ஷித்தின் ஆர்வத்தைப் பாராட்டினார். பின்னர் தொடர்ந்து கூறலானார்.

நரகாசுரன் பூமாதேவியின் புதல்வனாவான்.
ஹிரண்யாக்ஷன் பூமியைத் தூக்கிச் சென்று ஆவரண ஜலத்தில் ஒளித்துவைத்தான். அப்போது தான் படைக்கும் உயிர்கள் வாழ இடமில்லாமல் தவிப்பதைக் கண்டு ப்ரும்மா பகவானிடம்‌ முறையிட்டார். ப்ரும்மாவின் மூக்கிலிருந்து இரண்டங்குல அளவில் வெளிப்பட்ட வராஹ  பகவான் விஸ்வரூபம் எடுத்தார். பின்னர் பூமியைத் தேடிச் சென்று மீட்டார். அவ்வயம் தன்னுடன் சண்டைக்கு வந்த ஹிரண்யாக்ஷனை ஒரே அறையில் கொன்றார் வராஹ பகவான். தன்னை மீட்ட பகவானையே பூமிதேவி மணந்தாள். பகவான் அசுரனைக் கொன்ற உக்ரத்தில் இருந்த சமயம் பிறந்த குழந்தையானதால் நரகன் அசுரனாகிப்போனான். அவன் அசுரனானதால் சுபாவத்திலேயே பிறருக்குத் துன்பம் தருபவனாக இருந்தான். அவனுக்குத் தன்னைத்தவிர வேறெவராலும் மரணம் நிகழக்கூடாதென்று  பூமாதேவி பகவானிடம் வேண்டினாள். 

இப்போது பூமாதேவியின் அம்சமாக  ஸத்யபாமா அவதாரம் செய்திருக்கிறாள். ஆனால் தன்னிலை உணராமல் இருந்தாள். 

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தவம் செய்து பெரும் வலிமை பெற்றான். 
தவம்‌ முடித்து வந்த நரகாசுரன் பெருவலிமை பெற்று தேவர்களைத் தொந்தரவு செய்தான். வருணனின் குடை, தேவேந்திரனின் தாயான அதிதி தேவியின் குண்டலங்கள், தேவர்களுடைய மணிபர்வதம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டுவந்தான். மேலும், அப்போது பூமியில் இருந்த அத்தனை இளவரசிகளையும் சிறையெடுத்து வந்து அடைத்துவைத்தான்.

இதன் நடுவில் நாரதர் ஒரு பாரிஜாத புஷ்பத்தைக் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுத்தார். பகவான் அப்போது ருக்மிணியின் பவனத்தில் இருந்ததால் அவளிடம் கொடுத்தார். அதைக் கேள்விப்பட்ட பாமா, தனக்கும் மலர் வேண்டுமென்று கேட்க, உனக்கு பாரிஜாத மரத்தையே தருகிறேன் என்று வாக்களித்தான் கண்ணன்.

தாயின் குண்டலங்களை அசுரன் பறித்துச் சென்றது தேவேந்திரனுக்கு இழுக்கானதால், அவன் நரகாசுரனை எதிர்க்க பயந்தான். பகவான் இப்போது அவதாரம் செய்திருப்பதால் நேராகவே முறையிடலாம் என்று கண்ணனிடம்‌  வந்தான் இந்திரன். இந்திரன் வந்த சமயம் கண்ணன் பாமாவின் பவனத்தில் இருந்தான்.

கண்ணன் ஒரே சமயத்தில்‌ எல்லா வேலைகளையும் முடிக்க எண்ணி, ஸத்யபாமாவை அழைத்துக்கொண்டு கருடன் மீதேறி பாரிஜாத மரத்திற்காக இந்திரலோகம் கிளம்பினான். அப்படியே வழியில்  நரகாசுரனின் கோட்டையான ப்ராக்ஜோதிஷபுரத்திற்குள் நுழைந்துவிட்டான்.

அந்த நகரம் மலை, ஆயுதம், நீர், வாயு, நெருப்பு, முரன் என்ற அசுரனின் வலை ஆகிய ஆறு அரண்களைக் கொண்டது.

கண்ணன் மலையரணை கதையால் தகர்த்தான். ஆயுத அரணைத் தன் பாணங்களால் தவிடு பொடியாக்கினான்.
நெருப்பு, நீர், வாயு ஆகிய அரண்களை சுதர்சன சக்கரத்தால் சிதறடித்தான். முரனின் வலையை வாள் கொண்டு அறுத்தான்.

பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தால் அங்கிருந்த காவல் இயந்திரங்கள் செயலற்றுப்போயின. காவலர்களின் இதயங்கள் சங்கொலியாலேயே பிளந்துபோயின.

பாஞ்சஜன்யத்தின் ஒலி கேட்டு ஐந்துதலைகள் கொண்ட முரன் வந்தான். பார்க்கவே பயங்கரமாக இருந்த அவன் சூலத்தை எடுத்துக்கொண்டு கருடனைத் தாக்கவந்தான்.

கருடனை நோக்கி வந்த சூலத்தை பகவான் மூன்று துண்டுகளாக உடைத்துப் போட்டான். முரன் மறுபடி கதையை வீச, அதையும் பகவான் தன் பாணத்தால் உடைத்தான். நிராயுதபாணியான முரன் தானே கண்ணனை நோக்கி தாக்குவதற்காக ஓடிவந்தான். அவனது ஐந்து தலைகளையும் சக்ராயுதத்தால் வெட்டினான் கண்ணன். வானோர் பூமாரி பெய்து  வாழ்த்தினர். முரஹரி என்ற திருநாமம் பெற்றான் நம் இறைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 491

அவந்தி நாட்டு இளவரசி மித்ரவிந்தையின் சுயம்வரத்தில் பங்கேற்க கண்ணனுக்கு அழைப்பு வந்தது. சுயம்வரத்தில் மித்ரவிந்தா கண்ணனுக்கு மாலையிடச் சென்றாள்.

அப்போது அவளது சகோதரர்கள் விந்தனும் அனுவிந்தனும் அவளைத் தடுத்தனர். அவர்கள் இருவரும் துரியோதனனின் நண்பர்கள். தன் நண்பனுக்கு மாலையிடச் சொல்லி அவளை வற்புறுத்தினர். அதைக் கண்ட கண்ணன் அவர்கள் அனைவரையும் அடக்கிவிட்டு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மித்ரவிந்தாவை அழைத்துக்கொண்டு துவாரகை வந்தான். 

கோசல நாட்டின் அரசன் நக்னஜித் என்பவன். அவன் மகள் ஸத்யா. கோசலத்தின் தலைநகரம் அயோத்தி. முந்தைய அவதாரத்தில்‌ அங்கு பிறந்த இறைவனுக்கு இந்த அவதாரத்தில் அயோத்தி மாமனார் வீடாயிற்று. 

அயோத்தி நகரின் மற்றொரு பெயர் ஸத்யா என்பதாகும். பழனி போன்ற ஊர்களின் பெயர்களை அவ்வூரில்‌ பிறக்கும் குழந்தைகளுக்கு வைப்பதுபோல் ஸத்ய‌நகரத்தின் இளவரசியின் பெயரும் ஸத்யா என்பதாயிற்று. அவ்வூரில் தந்தையின்  ஸத்யத்தைக் காப்பாற்றிய ராமன் அவதரித்ததால் இன்னும் பெருமை சேர்ந்தது.

இந்த ஸத்யா என்பவள்  நீளாதேவியின் அம்சமாவாள். ராதையாகப் பிறந்து ப்ருந்தாவனத்தில் கண்ணனுடன் விளையாடினாள். அங்கு கண்ணனை காந்தர்வ விவாஹம்‌செய்துகொண்டாள். அவ்விவரம் ப்ரும்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. இருப்பினும் அவளால் தொடர்ந்து மதுரா வந்து கண்ணனுடன் வாழ இயலவில்லை. கண்ணனைப் பிரிய மனமில்லாததால் மீண்டும் ஸத்யாவாக அவதாரம் செய்து கண்ணனை மணந்தாள்.

நக்னஜித் கூரான கொம்புகளை உடைய குட்டி யானைகளைப் போல் விளங்கும் ஏழு காளைகளை வளர்த்துவந்தான். அக்காளைகளை அடக்குபவர்க்கு ஸத்யாவை மணம் முடித்துக்கொடுப்பதாய் அறிவித்திருந்தான். காளைகளைப் பார்த்ததுமே மயங்கி விழுந்தவர் பலர். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட கண்ணன் பெரிய சேனையுடன் அயோத்தி சென்றான்.

அவனை அன்புடன் எதிர்கொண்டழைத்தான் நக்னஜித். கண்ணனைக் கண்டதுமே காதல் கொண்டாள் ஸத்யா. ஸர்வேஸ்வரனான பகவான் திருவுருவெடுத்து புவியில் ‌கால் பதித்து நடக்கும்போது அவரை விட்டு வேறொருவரை மணக்க நினைப்பார்களா?

கண்ணன் ஸத்யாவை மணம் முடிக்க விரும்புவதாகக் கூற, நக்னஜித் காளைகளைப் பற்றிக் கூறினான். 

என் மகளுக்கு பலம் பொருந்திய வீரன் வரனை விரும்பிய நான் ஒரு பந்தயம் வைத்துள்ளேன். இந்த ஏழு காளைகளும் மிகவும் பலம் பொருந்தியவை.

இவைகளை இதுவரை எவராலும் பிடிக்க முடியவில்லை. அப்படி முயல்பவர்கள் குடல் கிழிபட்டு மரணமெய்தினர்.
இவைகளை அடக்குபவர்க்கே என் மகளை மணம் முடிப்பதாய் சங்கல்பம் செய்திருக்கிறேன் என்றான்.

அதைக் கேட்ட கண்ணன் தன்னை ஏழு உருவங்களாக்கிக் கொண்டான். ஒரே சமயத்தில் ஏழு காளைகளையும் எதிர்கொண்டான். மிக எளிதில் அவற்றை அடக்கி கயிற்றால் கட்டி மரபொம்மையை இழுத்து வருவதுபோல் வந்தான்.

மிகுந்த மகிழ்ச்சியுற்ற நக்னஜித் அனைத்து விதமான சீர் வரிசைகளுடனும் தன் மகளைக் கண்ணனுக்குக் கன்னிகாதானம்‌ செய்து கொடுத்தான். தனக்கு எல்லா வகையிலும் ஈடான ஸத்யாவை அழைத்துக்கொண்டு நகரம்‌ திரும்புகையில் ஏற்கனவே எருதுப் பந்தயத்தில் தோற்ற மற்ற அரசர்கள் கண்ணனை வழி மறித்தனர்.

கண்ணன் சார்பாக அர்ஜுனன் தன் காண்டீபத்தால் அவர்கள் அனைவரையும் முறியடித்தான்.

ஸத்யாவை அழைத்துக்கொண்டு துவாரகை வந்த கண்ணன் ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ்ந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, June 14, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 490

சிலகாலம்‌ சென்றதும் மறைந்திருந்த பாண்டவர்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் வெளிப்பட்டனர். அவர்களது பங்கு என த்ருதராஷ்ட்ரன் ஒரு வறண்டபூமியைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

பாறைகளும் புதர்களும் நிறைந்து வெடித்துப்போன அந்த பூமியைக் கண்ணன் தன் அமுத கடாக்ஷத்தால் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றினான். அங்கு தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு ஒரு நகரம் அமைக்கப்பட்டது. அதற்கு இந்திரப் பிரஸ்தம் என்று பெயரிட்டான் கண்ணன். கண்ணன் உருவாக்கிய நகரமே தில்லி என்ற பெயர் பெற்று இன்றும் நம் தலைநகராக விளங்குகிறது.

இந்நிகழ்வுகள் கழித்து துவாரகை வந்த கண்ணன் சில‌மாதங்கள் கழித்து பாண்டவர்கள் மேலிருந்த அன்பினால் மீண்டும் இந்திரப் பிரஸ்தம் சென்றான்.

கண்ணனைக் கண்டதும் பாண்டவர்களுக்குப் புதிய தெம்பு பிறந்தது.

அனைவரும் கண்ணனை வணங்கினர். புது மணப்பெண்ணான திரௌபதியும் கண்ணனை வணங்கினாள்.

குந்தியிடம் சென்று நலம் விசாரித்தான் கண்ணன். குந்தியோ கண்ணா நீ ஒருமுறை அக்ரூரரை நலம் விசாரிக்க அனுப்பினாயே. அப்போதே எங்களுக்கு எல்லா நலனும் வந்துவிட்டது. அதன் பிறகு எது நடந்தாலும் நான் பெரிதாகக் கவலை கொள்வதில்லை. கணவரை இழந்து நரிகளின் நடுவில் பசுவைப்போல் நின்றிருந்த எனக்கு ஆதாரமாக நீ தேடி வந்தாய். உனக்கு பேதங்கள் ஏதுமில்லை. ஆனாலும் உன்னை நினைப்பவரின் துயரங்களை நீ போக்குகிறாய். என்றாள்.

அப்போது மழைக்காலம் வந்துவிட்டதால் அந்த நான்கு மாதங்களும் கண்ணன் அங்கேயே தங்கினான்.

கண்ணனும் அர்ஜுனனும் ஒத்த வயதுடையவர்கள். இருவரும் உற்ற நண்பர்களாயினர். இருவரும் இணைந்து பொழுது போக்குவதற்காகத் தேரிலேறி நாடு நகரமெல்லாம் சுற்றிய பின் காட்டிற்கு வந்தனர்.

அர்ஜுனன் சில‌ மிருகங்களை வேட்டையாடினான். நாவறண்டுபோகவே இருவரும் அருகிலிருந்த யமுனைக்குச் சென்றனர்.
முகம் கழுவி, நீர் அருந்தி உள்ளம் குளிர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு அழகிய பெண் தவமியற்றிக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும், கண்ணன் அவள் யாரென்று அறிந்துவரச்சொல்லி அர்ஜுனனை அனுப்பினான்.

அர்ஜுனன் அவளருகே சென்று கேட்டான்.

ஓ! அழகிய பெண்ணே! நீ யார்? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? 

அவள் தவம் கலைத்து அர்ஜுனனைக் கண்டு வணங்கினாள்.

நான் சூரியதேவனின் மகள். என் பெயர் காளிந்தி என்பதாகும். பகவான் விஷ்ணுவைத் திருமணம் செய்ய விரும்பித் தவம் இயற்றுகிறேன். அவர் வந்து என்னைக் கைப்பற்றும்வரை இங்கேயே இருந்து தவம் செய்வேன் என்றாள்.

அர்ஜுனன் இதைக் கண்ணனிடம் தெரிவித்ததும் கண்ணன் அவளையும் தேரிலேற்றிக்கொள்ளச் சொன்னான். காளிந்தியை அழைத்துக்கொண்டுபோய் திரௌபதியின் பொறுப்பில் விட்டார்கள்.

காண்டவ வனம் என்ற அடர்ந்தவனத்தை அக்னிபகவான் உணவாக்க விரும்பினார். அதற்கு உதவி செய்வதற்காக அர்ஜுனனுக்குத் தேரோட்டினான் கண்ணன். அர்ஜுனனின் பராக்ரமத்தால் காண்டவவனம் முழுதும் அக்னிக்கு உணவாயிற்று. அக்னி பகவான் மிகவும் மகிழ்ந்து காண்டீபம் என்ற வில்லையும், குறைவுறாத இரு அம்பறாத் தூணிகளையும், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரையும், யாராலும் பிளக்க இயலாத கவசத்தையும் அர்ஜுனனுக்கு வழங்கினார்.

காண்டவத் தீயில் மாட்டிக்கொண்ட அசுர சிற்பியான மயனையும் காப்பாற்றினான் அர்ஜுனன். அவனும் மனம் மகிழ்ந்து ஒரு அழகிய மாயச் சபையை பாண்டவர்களுக்காக உருவாக்கித் தந்தான்.

தர்மபுத்திரர் ராஜஸூய யாகம் நடத்தினார். அதற்கு வருகை தந்திருந்த துரியோதனன் அந்த மாயச் சபையில் தடுமாறி விழுந்தான்.

வேள்வி முடிந்ததும் அனைவரின் அனுமதியையும் பெற்று காளிந்தியை அழைத்துக்கொண்டு துவாரகை திரும்பினான் கண்ணன்.

நல்லதொரு திருநாளில் பெற்றோரும் உற்றாரும் வாழ்த்த காளிந்தியை மணந்தான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 489

குதிரையில் ஏறித் தப்பிச்சென்ற சததன்வாவைக் கண்ணன் கருடக்கொடி பூட்டிய தேரில் துரத்திச் சென்று பிடித்து சக்ராயுதத்தால் கொன்றான். பின்னர் அவனிடம் தேடியதில் மணி கிடைக்கவில்லை. 

மணி‌ இல்லாமல் வெறும் கையுடன் திரும்பிய கண்ணனை பலராமன் நம்பவில்லை. 

நீ‌ இந்த விஷயத்தை விசாரித்து வை. நான் மிதிலைக்குச் சென்று என் நண்பர் ஜனகரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிக் கிளம்பிச் சென்று விட்டான். (சீதையின் தந்தையா, அல்லது அதே வம்சாவளியில் வந்த மன்னரா என்பது தெளிவில்லை)

மிதிலை மன்னர் பலராமனைக் கண்டதும் உடனே எழுந்து ஓடோடிச் சென்று வரவேற்றார். அவரது அன்பான உபசரிப்பினால் அங்கேயே சிலகாலம் தங்கினான் பலராமன். துரியோதனன் அவ்வமயம் மிதிலைக்கு வந்து கண்ணனுக்குத் தெரியாமல் பலராமனிடம் கதாயுத்தம் பயின்று சென்றான். 

துவாரகைக்குத் திரும்பிய கண்ணன், சததன்வாவிடம் ஸ்யமந்தகமணி இல்லை. அவன் யாரிடமோ ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறான்‌.
என்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் ருக்மிணியிடமும் சத்யபாமாவிடமும் கூறினான்.

பின்னர் இவ்வளவு நாள்களாக எண்ணெய்க் கொப்பறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சத்ராஜித்தின் உடலை எடுத்து உறவினர்களைக் கொண்டு ஈமக்கிரியைகளைச் செய்துமுடித்தான் கண்ணன்.

சததன்வா கண்ணனால் கொல்லப்பட்டதைக் கேள்வியுற்ற க்ருதவர்மாவும் அக்ரூரரும் பயந்துபோய்த் தலைமறைவாகிவிட்டனர்.

துவாரகையில் சில துர்நிமித்தங்கள் ஏற்படலாயின. அவற்றை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, கண்ணன் இருக்கும் இடமான துவாரகைக்கு துன்பங்கள் நேர வாய்ப்பில்லை.

நிகழ்வுகளை உற்றுக் கவனித்த கண்ணன் காசியில் பஞ்சம் நீங்கி மழை நன்றாகப் பொழிவதையும் நகரம் சுபிக்ஷமாக மாறிவருவதையும் கண்டான்.

ஒரு சமயம் காசியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அக்ரூரரின் தந்தையான ச்வபல்கர் காசிக்கு வந்தார். அவர் ஊரில் எல்லையில் கால் வைத்ததும் மழை பொழியலாயிற்று. அவரைத் தன் நாட்டிலேயே இருத்திக்கொள்வதற்காகவும் நாட்டு மக்கள் நலமுடன் வாழவும் தன் மகள் காந்தினியை ச்வபல்கருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் காசியின் அரசன். காந்தினியின் மகனான அக்ரூரருக்கும் தந்தையின் பெருமை இருந்தது. அக்ரூரர் வசிக்கும் நகரம் எப்போதும் மாதம்‌ மும்மாரி பொழிந்து பஞ்சமின்றி சுபிக்ஷமாக இருக்கும். 

காசியின் திடீர் செழிப்பைக் கண்ட கண்ணன் ஒற்றர்களை அனுப்பி அக்ரூரர் அங்கிருக்கிறாரா என்று பார்த்துவரச் செய்தான்.

அக்ரூரர் இயல்பாகவே கண்ணனிடம்‌ மாறாத பக்தி கொண்டவர்தான். ஏதோ அசூயையினால் நண்பனான சததன்வாவைத் தூண்டிவிட்டாரே தவிர, கண்ணன் இறைவன் அவனை ஏமாற்ற‌முடியாதென்பதை உணர்ந்து விட்டார். இப்போது கண்ணன் முன்னால் போய் நிற்பதற்கு அவருக்கு அவமானமாகவும் பயமாகவும் இருந்தது. 

காசியில் நியமங்களுடன் கூடிய தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். நாள்தோறும் ஸ்யமந்தகமணியை முறைப்படி பூஜை செய்தார். தூய்மையான உள்ளத்தோடு பூஜிப்பவர்க்கு ஸ்யமந்தகமணி அனைத்து செல்வங்களையும் நலன்களையும் வாரி வழங்கக்கூடியது. தினந்தோறும் ஸ்யமந்தகமணி தரும் எட்டு பாரம் தங்கத்தையும் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் தானம் செய்தார் அக்ரூரர்.

ஒற்றர் மூலமாக அத்தனை விவரங்களையும் அறிந்த கண்ணன் அக்ரூரரை துவாரகைக்கு வருமாறு தூதுச் செய்தி அனுப்பினான்.

கண்ணனின் ஆணையைத் தட்டமுடியாமல் துவாரகைக்கு வந்தார் அக்ரூரர். அவரை நன்முறையில் வரவேற்று உபசரித்தான் கண்ணன்.

பின்னர் அவரிடம்‌ கூறினான். 

சிற்றப்பா! தினமும் எட்டு பாரம் தங்கமளிக்கும் ஸ்யமந்தகத்தை சததன்வா உங்களிடம் கொடுத்தான் என்பதையும், அதை நீங்கள்‌ பூஜித்து வருவதும் எனக்குத் தெரியும் என்றான்.

அக்ரூரருக்கு வியர்த்துக் கொட்டியது. கண்களில் நீர் பெருகின.

கண்ணன் மேலும் பேசலானான். 

அந்த ஸ்யமந்தகமணி என் மாமனாரான சத்ராஜித்துக்கு சூரியதேவனால் கொடுக்கப்பட்டது. அது அவருக்கே உரியது. ஒருவர் இறந்தபின் அவரது சொத்துகள் அனைத்தும் வாரிசுகளைச் சாரும். அவருக்கு மகன் இல்லாததால் மகன் ஸ்தானத்திலிருந்து அவரது இறுதிக் கடைமைகளை நான் ஆற்றியிருக்கிறேன். அவர் மூலமாக எனக்கு வந்த அத்தனை சொத்துக்களையும் உறவினர்கட்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். அவரது உரிமைப்பொருளான ஸ்யமந்தகமணி எனக்கு வேண்டாம். மற்றவர்களால் அதன் சக்தியைத் தாங்கவும் இயலாது. பல்வேறு விரதங்களையும் அனுஷ்டானங்களையும் பின்பற்றிவரும் தாங்களே ஸ்யமந்தகத்தைப் பூஜிக்கத் தகுதியானவர். எனவே அது தங்களிடமே இருக்கட்டும். ஆனால், இவ்விஷயத்தில் என் அண்ணன் பலராமனே என்னை நம்ப மறுக்கிறார்.

எனவே நீங்கள் என் பொருட்டு ஸ்யமந்தகத்தை ஒரு முறை சபையோர்‌ முன்னால் கொண்டுவந்து காட்டவேண்டும். மணி தங்களிடம் வந்த கதையை அனைவரிடமும் கூறி என்மீதுள்ள கறையைப் போக்கவேண்டும். 

சத்யசந்தரான தாங்கள் நடத்தும் வேள்விகள் அனைத்தும் தடையின்றி நடக்கின்றன அல்லவா? தாங்கள் உண்மையை அனைவரிடமும் கூறவேண்டும். என்றான்.

அக்ரூரர் மிகவும் வெட்கினார். கண்ணனைப் பலவாறு வணங்கி இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒளிவீசும் ஸ்யமந்தகமணியை எடுத்து கண்ணனிடம் கொடுத்தார். கண்ணன் அதை சபையோர் அனைவரிடமும் காட்டினான். பின்னர் அதை அக்ரூரரிடமே திருப்பிக் கொடுத்தான்.

இந்த ஸ்யமந்தகமணியின் கதை மிகவும் பெருமை நிறைந்தது. அனைத்து பாவங்களையும் போக்கவல்லது. இதைப் படிப்பவர் அவப்பெயர்கள் நீங்கி ஆனந்தமான வாழ்வு பெறுவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 488

கண்ணன், பலராமன் இருவரும் துவாரகையில் இல்லாத சமயம் ஒரு சதி அரங்கேறியது.

அக்ரூரர் கண்ணனின் அத்யந்த பக்தர். ஆனால், மாயை என்பது எப்பேர்ப்பட்ட பக்தர்களையும் ஒரு கை பார்த்து விடுகிறது. இறைவனை ஒரு கணம் மறந்தாலும், மாயை ஆட்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிறது என்பது அக்ரூரரைப் பார்த்து நாம் அறியவேண்டிய பாடம்.

க்ருதவர்மாவும் அக்ரூரரும் சததன்வாவின் நண்பர்கள். சததன்வா ஒரு சிற்றரரசனாக விளங்கினான். 
கவனிக்கவும். கண்ணன் அரசன் அல்ல. உக்ரசேனரின் தலைமையிலேயே ஆட்சி நடைபெற்று வந்தது.
ஸ்யமந்தகமணி தந்த செல்வம் அவர்களின் கண்களை உறுத்திற்று. அளவுக்கதிகமான செல்வம் ஆபத்தை விளைவிக்கும்.

அக்ரூரரும் க்ருதவர்மாவும் கண்ணன் ஊரில் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சததன்வாவிடம் சென்றனர்.

என்ன இருந்தாலும் சத்ராஜித் செய்தது பெரும் தவறு. ரத்தினம் போன்ற சத்யபாமாவை உனக்குத் திருமணம் செய்துதருவதாக எங்கள் முன்னால் வாக்களித்தான். ஆனால், என்னவோ சொல்லி கண்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். இப்போது கண்ணன் பலராமன் இருவரும் ஊரில் இல்லை. அஸ்தினாபுரம் வரை போயிருக்கும் அவர்கள் திரும்ப சில மாதங்களாகும்.  சத்யபாமா கிடைக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் ஸ்யமந்தகமணியை வைத்துக்கொள்ளும் தகுதி சத்ராஜித்துக்கு இல்லை. நீ அதைக் கவர்ந்து வந்துவிடு என்று தூபம் போட்டார்கள்.

ஏற்கனவே பாமா கிடைக்காததால்  சத்ராஜித்தின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தான் சததன்வா. இப்போது அவனது பொல்லாத வேளையும் சேர்ந்துகொண்டது. நண்பர்களின் தூண்டுதலால் வெறிகொண்டு கிளம்பிச் சென்றான். நள்ளிரவில் சத்ராஜித்தின் அரண்மனைக்குள் சாமர்த்தியமாகச் சென்று உறங்கிக்கொண்டிருந்தவனின் தலையைக் கொய்தான். சத்ராஜித்தின் கழுத்திலிருந்த ஸ்யமந்தகமணியைப்‌ பறித்துக்கொண்டு வந்துவிட்டான்.

பொழுது விடிந்ததும் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்ட ஸத்யபாமா அலறித் துடித்தாள்.
கதறி கதறி மயங்கி விழுந்தாள்.

தந்தையின் உடல் கெடாமல் எண்ணெய்க் கொப்பறையில் போட்டுவைத்தாள். ஸத்ராஜித்துக்கு மகன்கள் இல்லாததால் ஈமக்கடன்களைச் செய்யும் அதிகாரம் மருமகனான கண்ணனைச் சார்ந்தது.
கண்ணனை உடனே அழைத்து வருவதற்காக தானே தேரிலேறி அஸ்தினாபுரம் புறப்பட்டாள் பாமா.

பாண்டவர்கள் இறக்கவில்லை என்று விதுரரும் ஊகித்திருந்தார்‌. இருந்தாலும் அவரும் யாரிடமும் கூறவில்லை. துக்கத்தில் ஆழ்ந்திருந்த பீஷ்மர், த்ருதராஷ்ட்ரன், காந்தாரி முதலியவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் கண்ணனும்‌ பலராமனும்.

அப்போது ஸத்யபாமா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் கூறிய விவரங்கள் கேட்டு மிகவும் வருந்தினான் கண்ணன்.

பலராமனுக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. இருவரும் உடனடியாக பாமாவை அழைத்துக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தனர்.

சத்ராஜித்தைக் கொன்றது சததன்வா என்று கண்டுபிடிக்க கண்ணனுக்கு வெகுநேரம்‌ பிடிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் கூறிய விவரங்களும் அதை ஊர்ஜிதம் செய்ய, சததன்வாவைத் தேடிச் சென்றான் கண்ணன்.

கண்ணன் தன்னைத் தேடுவதை அறிந்த சததன்வா ஒளிந்துகொண்டான். ஓடிச்சென்று க்ருதவர்மாவிடம் தன்னைக்‌ காப்பாற்றும்படி வேண்டினான்.


நண்பனைத் தீயசெயல்களைச் செய்யச் சொல்லி ஏவி்விட்டு அவன் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் கைவிட்டார்கள் க்ருதவர்மாவும் அக்ரூரரும்.

கண்ணன் ஸர்வேஸ்வரன். பகவான். பலராமனும் அவ்வாறே. அவர்களை எதிர்க்கும் துணிவு எனக்கில்லை. கம்சன் எவ்வளவு பெரிய பலசாலி. அவனையே கொன்றவன் கண்ணன். ஜராசந்தன் கண்ணனிடம் பதினேழு முறை தோற்று நிராயுதபாணியாகச் சென்றவன். இந்தக் கண்ணன் கோவர்தன மலையை ஒருவிரலால் தூக்கியவன். ஏதோ விளையாட்டிற்காக அவதாரம் செய்திருக்கிறான்.
அவன் ஆதி அந்தமற்ற பரம்பொருள். அவனைப் பகைக்கலாகாது என்றான் க்ருதவர்மா. அக்ரூரரும் இதேமாதிரி கூறி சததன்வாவைக் கைவிட்டார். 

என்ன செய்வதென்று தெரியாமல் தன்னிடம்‌ இருந்த ஸ்யமந்தகமணியை அக்ரூரரிடம்‌ கொடுத்துவிட்டு ஒரு குதிரையின் மீதேறித் தப்பி ஓடினான் சததன்வா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 487

ஸ்யமந்தக மணியைக் கண்ணனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஸத்ராஜித்துக்கு சுய பச்சாதாபம் அதிகமாகிவிட்டது. அநாவசியமாக கண்ணன் மீது பழி போட்டுவிட்டதற்காக மிகவும் வெட்கினான். தலையைக் குனிந்துகொண்டு வீடு சென்றாலும் அமைதியின்றித் தவித்தான். அதற்காக ஏதாவது ப்ராயசித்தம்‌ செய்துவிட அவனது மனம் துடித்தது.

கண்ணனை மகிழ்விக்க ஒரு உபாயம் தேடினான்.
எதைச் செய்தால் தன்மீதுள்ள பழி போகுமென்று பலவாறு யோசித்தான். கண்ணனிடமே‌ மணியைக் கொடுத்துவிடலாம் என்றெண்ணினான். ஆனால், கண்ணன் வாங்க மறுத்தால் என்ன செய்வது?

ரத்தினம் போன்ற தன் மகளைக் கண்ணனுக்குக் கொடுத்து சீராக ஸ்யமந்தக மணியைக் கொடுத்து விட முடிவு செய்தான்.

தானாகவே கண்ணனிடம் சென்று ஸத்யபாமையைத் திருமணம் செய்துகொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தான். ஸத்யபாமைக்கும் தன்னை மணம் செய்ய விருப்பம் என்றறிந்தபின் கண்ணன் சம்மதம் தெரிவித்தான்.

நல்லதொரு திருநாளில் ஸத்யபாமாக்கும் கண்ணனுக்கும் முறைப்படி வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. ஸத்யபாமையைத் திருமணம் செய்ய பல அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், ஸத்ராஜித்தே இந்தத் திருமணத்தை விரும்பி ஏற்பாடு செய்துவிட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அனைவரும் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

தன் மகளுக்குச் சீராக ஸ்யமந்தக மணியைக் கண்ணனிடம் கொடுத்தான் ஸத்ராஜித்.

ஆனால், கண்ணனோ அது தங்களிடமே இருக்கட்டும். ரத்தினம் போன்ற தங்கள் மகளை ஏற்கிறேன். தாங்கள் விரும்பினால் மணியின் பயனாக தினசரி கிடைக்கும் எட்டு பாரம் தங்கத்தை அரசரிடம் ஸமர்ப்பியுங்கள். அவற்றைக் கொண்டு இன்னும் தானங்களும் ஸத்காரியங்களும் நிகழ்த்தலாம். ஸத்காரியங்கள் ஏராளமாக நடைபெறுவதற்காகவும் அவற்றால் மங்களம் பெருகவுமே ஸ்யமந்தகம் செல்வத்தை அளிக்கிறது. மணி தரும் செல்வத்தை கஜானாவில் வைத்துப் பூட்டினால் அது ஆளை விழுங்கிவிடும் என்றான்.

ஸத்ராஜித்தும் அதற்கு உடன்பட்டான். எப்படியோ கண்ணன் மனம் மகிழ்ந்ததே அவனுக்குப் போதுமாக இருந்தது. மீண்டும் கண்ணன் சொல்லைத் தட்டும் துணிவில்லை அவனுக்கு.

ஆனந்தமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

 அவ்வமயம் பாண்டவர்களும் குந்தியும் அரக்கு மாளிகையோடு எரிந்துபோய்விட்டதாக அஸ்தினாபுரத்திலிருந்து தகவல் வந்தது.
கண்ணனுக்கு அவர்கள் தப்பிச்சென்றது தெரியும் என்றாலும் அதை யாரிடமும் கூறவில்லை. கால ஓட்டத்திற்கேற்ப ஞானியைப்போல் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருந்தான்.

சூரசேனரின் மகள் ப்ருதை. வசுதேவரும் சூரசேனரின் மகனாவார்.

தன் சகோதரரான குந்தி போஜனுக்கு சந்ததி இல்லாததால் சூரசேனர் தன் மகளான ப்ருதையை அவருக்கு ஸ்வீகாரமாகக் கொடுத்தார்.

குந்திபோஜனின் மகளான ப்ருதை குந்தி என்ற பெயர் பெற்றாள். தந்தையின் சகோதரி என்ற வகையில் குந்தி கண்ணனுக்கு அத்தையாவாள்.

அத்தையும் அத்தையின் வாரிசுகளும் இறந்ததைக் கேள்விப்பட்டதும் உறவுமுறைய அனுசரித்து துக்கம்‌ கேட்பதற்காக பலராமனும் கண்ணனும் அஸ்தினாபுரம் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, June 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 486

தன் மீது விழுந்த அபாண்டமான பழியைத் துடைக்க கண்ணனே செயலில் இறங்கினான்.

நகர மக்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ப்ரசேனனைத் தேடிச் சென்றான்.

காட்டில் சற்று தூரம் சென்றதும், ப்ரசேனனின் உடலும், குதிரையின் உடலும் கிடைத்தன. அவர்கள் மீதிருந்த காயங்களைக் கொண்டு சிங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று அறிந்தனர்.

மேலும் ஆங்காங்கு தெரிந்த சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து அத்திசையில் சென்றார்கள்.

வழியில் ஒரு மலை எதிர்ப்பட்டது. மலை மீது சிறிது தூரம் ஏறியதும் ஒரு  சிங்கம் இறந்து கிடந்ததைக் கண்டனர். அதன் அருகில் பெரிய கரடியின் காற்சுவடுகள் தென்பட்டன.

அவற்றைப் பின்பற்றிக்கொண்டு அனைவரும் போனார்கள். அது ஒரு குகையில் சென்று முடிந்தது. குகைக்குள் மிகவும் இருட்டாக இருந்ததால் மக்கள் உள்ளே செல்ல அஞ்சினர். கண்ணன் அவர்களை குகை வாசலிலேயே இருக்கும்படி பணித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றான்.

இருட்டான அந்த குகைக்குள் சிறிது தூரம் சென்றதும் உள்ளே பெரிய அறை போல் விரிந்தது. அவ்வறையில் ஒரு ப்ரகாசம் இருந்தது.

உற்று கவனித்ததில் அறையின் நடுவிலிருந்த தொட்டிலில் ஸ்யமந்தக மணி கட்டப்பட்டிருந்தது. அதன் ஒளியே குகையை நிறைத்திருந்தது. 

தொட்டிலில் இருந்த குழந்தைய ஒரு பெண் பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென குகைக்குள்‌ ஒரு ஆடவன் நுழைவதைப் பார்த்ததும் பயந்துபோய் அப்பா என்று அலறினாள்.

அவளது அலறலைக் கேட்ட ஜாம்பவான் ஓடிவந்தார்.

முந்தைய அவதாரத்தில் ராமனுக்கு ஆலோசனைகள் சொன்ன அதே ஜாம்பவான்தான். யுகங்கள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்குக் கண்ணனை அடையாளம் தெரியவில்லை. அதுவும் கண்ணனின் மாயையே. யாரோ மனிதன் என்றெண்ணி தாக்கத் துவங்கினார்.

ஒருவரையொருவர் வெல்லும் எண்ணத்துடன் படு பயங்கரமாகத் தாக்கிக்கொண்டார்கள்.

இருபத்தெட்டு நாள்களுக்கு இரவு பகல் பாராமல் சண்டை தொடர்ந்தது. குகைக்கு வெளியே நின்றிருந்த மக்கள் கண்ணனுக்கு ஏதோ ஆபத்தென்று அஞ்சி புலம்பிக்கொண்டிருந்தனர்.

கண்ணனின் அடி தாங்காமல் ஜாம்பவானுக்கு உடல் முழுவதும் உள்ள எலும்புகள் நொறுங்க ஆரம்பித்தன.

பெருவலிமை பொருந்திய தன்னை ஒரு சாதாரண மனிதனால் இவ்வாறு அடிக்க இயலாதென்று ஐயம் கொண்டார்.

சற்று நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராக
கண்ணனை வணங்கினார்.

அனைத்து உயிர்களின் மனம் மற்றும் உடல் வலிமை அனைத்தும் தாங்களே என்றெண்ணுகிறேன். தாங்கள் உயிர்களைக் காக்கும் பரம்பொருளாகத்தான் இருக்கவேண்டும்.

சிறிது கோபம் கொண்டு கண்கள் சிவந்ததற்கே ஸமுத்ரராஜன் நடுநடுங்கி கலங்கிப்போய் தன்னைக் கடக்க வழி தந்தான். அவன் மீது சேதுபாலம் கட்டப்பட்டது. எண்ணற்ற ராக்ஷஸர்கள் அம்புகளால் வீழ்த்தப் பட்டனர். அத்தகைய வலிமை பொருந்திய ஸ்ரீ ராமச்சந்திரப்ரபு தாங்களே. வேறு உருவில் வந்து என்னை வஞ்சிக்காமல், அருள் புரியுங்கள்.

கண்ணனின் அழகுத் திருமேனியின் காட்சி கண்ட பின்னரும் ஒருவர் ராமனை நினைவு கூர்வார் என்றால் அவருக்கு ராமன் மீது எத்தகைய பக்தி இருக்கவேண்டும்.

கண்ணன் கருணையோடு அவரருகில் வந்தான். தன் மங்கலமான அமுதக் கரத்தால் கரடியரசனைத் தடவிக் கொடுத்தான். அவரது காயங்களும் வலிகளும் பறந்தன.

இடிபோன்ற குரலில் கம்பீரமாகப் பேசினான்.
நான் இப்போது யதுகுலத்தில் கண்ணனாக அவதரித்திருக்கிறேன். இந்த ஸ்யமந்தக மணியால் எனக்கு வீண்பழி ஏற்பட்டுவிட்டது. அதைப்போக்கிக் கொள்வதற்காக மணியைத் தேடி என் மக்களுடன் இந்த குகைக்கு வந்தேன்.

என்றான்.

ஜாம்பவான் அடடா..
என் ஸ்வாமியான உங்களைப் போய் அடித்துவிட்டேனே என்று மிகவும் வருந்தினார். பச்சாதாபப்பட்டார்.

மணியைக் கண்ணனிடம் திருப்பிக் கொடுத்தும் அவரது மனம் ஆறவில்லை. அழகே உருவான தன் மகளை அழைத்தார்.
இவள் பெயர் ஜாம்பவதி. இவளைத் தங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினார்.

கண்ணன் சம்மதிக்க அக்கணமே குகைக்குள் இருவருக்கும் விவாஹம் நடைபெற்றது.

குகைக்கு வெளியே காத்திருந்த மக்கள் பன்னிரண்டு நாள்கள் கழித்து கண்ணன் இறந்துவிட்டான் என்று முடிவு செய்து ஊருக்குத் திரும்பி விட்டனர்.

ஆனால் கண்ணனுக்கு ஆபத்து நேர வாய்ப்பில்லை என்றும் ஒரு பக்கம் நம்பிக்கை இருந்ததால் மஹாமாயையான துர்கையை விமரிசையாக வழிபாடுகள் செய்து கண்ணன் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

கண்ணனின் உறவினர்களும் ருக்மிணியும் அழுது புலம்பினார்கள்.

அனைவரின் துயரையும் துடைக்கும் வண்ணம், கண்ணன் புது மனைவியான ஜாம்பவதியுடனும் ஸ்மந்தக மணியுடனும் நகரத்தின் எல்லையில் வந்து நின்றான்.

கண்ணன் வந்துவிட்ட விஷயம் காற்றாய்ப் பரவ, ஊரே விழாக்கோலம் பூண்டது. 

ஓடோடி வந்து அனைவரும் வரவேற்றனர். தேரிலேறி ஊர்வலமாக அரண்மனை வந்து சேர்ந்தான் கண்ணன்.

பின்னர், ஸத்ராஜித்தை சபைக்கு  அழைத்து அனைவர் முன்னிலையிலும் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினான். ஊர் மக்கள் கண்ணனுக்கு சாட்சியாய் நிற்க ஸ்யமந்தகமணியை ஸத்ராஜித்திடமே ஒப்படைத்தான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, June 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 485

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறாலானார்.

மன்னனே! இதன் நடுவில் ஸ்த்ராஜித் என்பவன் தான் இழைத்த தவறுக்கு ப்ராயசித்தம் வேண்டி தன் மகள் சத்யபாமையைக் கண்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவர்களுக்குத் திருமணச்சீராக ஸ்மந்தகமணியையும் கொடுத்தான் என்றார்.

பரீக்ஷித் இடை மறித்தான். 
முனிச்ரேஷ்டரே! ஸத்ராஜித் என்ன தவறு செய்தான்?
ஸ்யமந்தக மணி அவனிடம் எப்படி வந்தது? அதன் பெருமைகள் என்ன? கண்ணனின் திருமணம் எவ்வாறு நடந்தது?
கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் அபிமன்யு மைந்தன்.

ஸத்ராஜித் சிறந்த ஸூரிய உபாசகன் ஆவான். சூரியனை சக்யபாவத்தில் பக்தி செய்தான். அதில் மகிழ்ந்த சூரியன் அவனுக்கு ஸ்யமந்தகமணியைப் பரிசளித்தான்.

ஸ்த்ராஜித் அதைத் தன் பூஜையறையில் நிறுவினான்.

ஸ்யமந்தகமணியை வழிபடும் இடத்தில் பஞ்சம், மஹாமாரி முதலிய கொடுநோய்கள், மனநோய், பாம்புகள், மாயாவிகளின் தொல்லைகள், மற்றும் அமங்கலங்கள் ஏற்படாது. இவற்றைத்தவிர தினமும் எட்டு பாரம் தங்கத்தைக் கொடுக்கும். (746 கிலோ)

சத்ராஜித் தான் எங்கு சென்றாலும் மணியைக் கழுத்தில் அணிந்துகொண்டு செல்வான்.

ஒருமுறை ஒளிபொருந்திய அம்மணியை அணிந்துகொண்டு ஸத்ராஜித் துவாரகைக்கு வந்தான். அவன் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை. மணியின் ஒளியால் அனைவர்க்கும்‌ கண் கூசிற்று. சூரியனே தெருவில் வருவதாக எண்ணினர். 
  
ஓடிச்சென்று மண்டபத்தில் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த கண்ணனிடம் தெரிவித்தனர்.

கண்ணா! கோவிந்தா! சூரியன் உம்மைக் காண வருகிறார் என்றனர்.

அதைக் கேட்டு கண்ணன் சிரித்தான்.
வருவது சூரியபகவான் அல்ல. ஸத்ராஜித் ஸ்யமந்தகமணியைக் கழுத்தில் அணிந்து வருகிறான். என்றான்.

கண்ணன் ஸத்ராஜித்திடம் 
நண்பரே! இந்த ஸ்யமந்தகமணி மிகவும் மனத்தூய்மையுடன் பராமரிக்கப்படவேண்டும்‌. மனத்தில் மாசுகள் இருப்பின் விபரீத விளைவுகளைத் தந்துவிடும். நமது அரசர் உக்ரசேனர் அப்பழுக்கற்றவர். அவரிடம் இந்த மணியைக் கொடுத்து விடுங்கள். சிறந்த பொருள்களை அரசரிடம் கொடுப்பதே நல்லது என்றான்.

சத்ராஜித்துக்கு கண்ணன் சொன்னதன் உள்ளர்த்தம் புரியவில்லை. கண்ணன் பொறாமையால் கேட்கிறான் என்றெண்ணினான். எனவே மணியைத் தர இயலாதென்று மறுத்துவிட்டான்.

சில நாள்கள் கழித்து ஸத்ராஜித்தின் தம்பி ப்ரசேனன் என்பவன் மணியைக் கழுத்தில் அணிந்துகொண்டு குதிரை மீதேறி காட்டுக்கு வேட்டையாடச் சென்றான்.

ஒளிமிக்க அம்மணியால் கவரப்பட்ட சிங்கம் ஒன்று ப்ரசேனனையும் அவனது குதிரையையும் கொன்று மணியைப் பறித்துச் சென்றது.

ஒரு மலைமீது அது ஏறும் சமயம் ஜாம்பவான் அதைப்‌ பார்த்தார்.

ஸ்யமந்தகமணியின் ப்ரகாசத்தால் கவரப்பட்டு ஜாம்பவான் சிங்கத்தைக் கொன்று மணியை எடுத்துச் சென்று விட்டார்.

குகைக்குச் சென்று தன் குழந்தையின் தொட்டிலில் விளையாடுவதற்காக மணியக் கட்டிவைத்தார்.

ஸ்யமந்தகமணியைக் காணவில்லை என்றதும் சத்ராஜித்துக்கு கண்ணன் மீது சந்தேகம் வந்தது. மணியை கண்ணன் கேட்டு தான் கொடுக்காததால் தன் தம்பியைக் கொன்று மணியைத் திருடிச் சென்றான் என்று கூறினான்.

அச்செய்தி செவிவழியே மக்களுக்குப் பரவிற்று. ஆங்காங்கே மக்கள் கண்ணன் மணியைத் திருடினான் என்று பேசத் துவங்கினர்.

வெண்ணெய் போன்ற தூய்மையான உள்ளங்களைத் திருடும் கண்ணன் மேல் அபாண்டமாகப் பழி. வ்ரஜவாசிகள் கண்ணெதிரேயே வெண்ணெய் திருடினாலும் அவனைக் கொண்டாடுபவர்கள். நகரத்து மக்கள் அவ்வாறில்லை. கண்ணை மூடச் செய்து யோக சக்தியால் கடலின் நடுவே அனைவரையும் கொண்டு சேர்த்தாலும்கூட ஒரு சமயம் என்று வரும்போது சந்தேகப்படுகிறார்கள்.

நவநீதசோரன் என்பது கண்ணன் விரும்பி ஏற்ற பெயர். பொருளைத் திருடிய பழியை ஏற்க அவன் தயாராக இல்லை. பகவானே ஆனாலும் ஆயிரமாயிரம் மாயங்களைக் கண்முன்னே செய்து காப்பாற்றினாலும் மனித உருக் கொண்டுவிட்டதால் வீண்பழிக்குத் தப்பவில்லை. எனில் நாமெல்லாம் எந்த மூலை?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, June 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 484

மாயாவதியின் மூலமாக தன் ஸ்வரூபத்தை அறிந்த ப்ரத்யும்னன், மாயவித்யைகள் அனைத்தையும் அவளிடமே கற்றான். பின்னர் தன்னைக் கடத்தி வந்த சம்பரனின் எதிரில் போய் நின்றான்.

பச்சிளம் குழந்தையாக ப்ரத்யும்னனைப் பார்த்திருந்த சம்பரனுக்கு அழகே உருவான இந்த இளைஞனை அடையாளம் தெரியவில்லை.

 வேண்டுமென்றே சம்பரனின் கோபத்தைச் சீண்டும் வண்ணம் பல்வேறு வகையான வசைமொழிகளை ஆவேசத்துடன் கூறி விளித்தான் ப்ரத்யும்னன்.

அசுரனான சம்பரனுக்கு இயல்பாகவே கோபம் அதிகம். ப்ரத்யும்னனின் இழி சொற்களைக் கேட்டதும் அவனது கோபம் தலைக்கேறியது. கண்கள் சிவந்தன. கையில் கதையேந்தி ப்ரத்யும்னனைத் தாக்க ஓடிவந்தான்.

தன் மேல் வீசப்பட்ட கதையைத் தடுத்து, தன் கதையை ஓங்கி அவன் மேல் அடித்தான் ப்ரத்யும்னன்.

மயனின் சீடனான சம்பரன் அசுர மாயையைப் பயன்படுத்தி வானில் சென்று மறைந்தான். கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்துகொண்டு ப்ரத்யும்னன் மேல் அம்புமழை பொழிந்தான்.

அந்த அஸ்திர மழையை ப்ரத்யும்னன் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு சத்வ குண மாயையான மஹாமாயா வித்யையை சம்பரன் மேல் ப்ரயோகம்‌ செய்தான்.

சம்பரன் பதிலுக்கு கந்தர்வ, பைசாச, நாக, ராட்சசர்களின் மாய வித்யைகளை ஏவினான். அவையனைத்தையும் முறியடித்தான் ப்ரத்யும்னன்.

அத்தனை மாயவித்யைகளும் தோற்றதும் அதற்குமேல் சம்பரனால் ஒளிய இயலவில்லை.

கண்ணெதிரே தாமிர நிறமுள்ள மீசையுடன் தோன்றிய சம்பரனின் தலையை கணநேரத்தில் துண்டித்தான் ப்ரத்யும்னன்.

தேவர்கள் உடனே துந்துபி முழங்கி பூமாரி பெய்தனர்.

மாயாவதி உடனேயே ப்ரத்யும்னனை அழைத்துக்கொண்டு வான்வழியாகவே துவாரகைக்குச் சென்றாள்.

நேராக இருவரும் அந்தப்புரத்தில் இறங்கி ருக்மிணியின் கண்முன்னே தோன்றினர்.

நீலத்திருமேனி, அரையில் பொன்னாடை, முழங்கால் வரை நீண்ட திருக்கரங்கள், தாமரை போன்ற அழகிய ஒளிவீசும் திருமுகம், சட்டென்று பார்த்தால் கண்ணனைப் போலவே இருந்தான் ப்ரத்யும்னன். அவனைக் கண்ணன் என்றே நினைத்து அந்தப்புரப் பெண்கள் வெட்கத்தால் ஓடி ஆங்காங்கு ஒளிந்தனர்.

சற்று நேரத்தில் சில வித்யாசங்களைக் கண்டதும், இவர் கண்ணனல்ல என்றுணர்ந்து அருகில் சென்று யாரென்று விசாரித்தனர்.

ப்ரத்யும்னனைக் கண்டதுமே‌ ருக்மிணிக்குத் தன் குழந்தையின் நினைவு வந்தது. தொலைந்துபோன தன் குழந்தை வளர்ந்தால் இப்படித்தான் இருப்பான். இவன் கண்ணனைப் போலவே இருக்கிறான். யாரென்று தெரியவில்லையே. இந்தப் பெண்ணும் அவனையொத்த அழகுடையாளாய் இருக்கிறாளே என்று எண்ணினாள்.

உருவம், நடை, அழகு, பாவனைகள் அனைத்தும் கண்ணனைப் போலவே இருக்கிறதே. ஒருக்கால் இவன் எங்கள் மகன்தானோ என்ற எண்ணம் வந்ததும் ருக்மிணியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

அவ்வமயம் கண்ணன், தேவகி, மற்றும் வசுதேவருடன் அங்கு வந்தான்.
ஆனால், வாயே திறக்கவில்லை. 

அனைத்தும் அறிந்திருந்தும் கண்ணன் பேசாமல் இருந்தான். கண்ணனின் அச்சாக இன்னொருவனைப் பார்த்து அனைவரும் ஒன்றும் பேச இயலாமல் சொல்லற்றுச் சமைந்து நின்றனர்.

ருக்மிணியின் இடது தோள்கள் துடித்தன. இதற்கு மேல் மௌனம் தாங்காது என்று நாரதர் அங்கு வந்தார். 

அவரே அத்தனை விஷயங்களையும் ருக்மிணிக்கு விளக்கிச் சொன்னார்.

ப்ரத்யும்னனின் வ்ருத்தாந்தங்களைக் கேட்டதும் அனைவரும் இறந்தவர் மீண்டும் பிழைத்ததுபோல் மகிழ்ந்தனர்.

அனைவரும் அவனைக் கட்டித் தழுவிக்கொண்டனர்.

காட்டுத்தீபோல் த்வாரகை முழுதும் விஷயம் பரவ, ஊர் கோலாஹலம் கொண்டது.

சாதாரணமாகவே மன்மதன் மயக்கும் அழகுடையவன். கண்ணனுக்குப் புதல்வனான அவனை நேருக்கு நேர் கண்ட துவாரகைவாசிகள் அவன்மேல் மயக்கம் கொண்டதில் வியப்பென்ன?

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, June 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 483

ஸ்ரீ வாசுதேவனின் மனத்திலிருந்து தோன்றியவன் மன்மதன். அவன் ஒருமுறை பரமேஸ்வரனின் கோபத்தால் சாம்பலாகிவிட்டான்.

ரதிதேவியின் ப்ரார்த்தனைக்கிணங்க அவனுக்கு மீண்டும் தேகம் கிடைக்கும் வரை அனங்கனாக உருவமின்றி சுற்றும் வரம் கிடைத்தது.

இப்போது கண்ணனுக்குத் திருமணமானதும் மீண்டும் பகவானுக்கே மகனாகப் பிறந்து உடலை அடையும் பாக்யம் பெற்றான். ருக்மிணியின் வயிற்றில் பிறந்த அவன் ப்ரத்யும்னன் என்றழைக்கப்பட்டான்.

அவன் அப்படியே கண்ணனைப் போலவே எல்லா விஷயங்களிலும் ஒத்து விளங்கினான்.

சம்பரன் என்ற அசுரன் தனக்கு ப்ரத்யும்னனால் மரணம் ஏற்படும் என்பதை எப்படியோ அறிந்துகொண்டான். ஒரு மாய உருவெடுத்து ருக்மிணியின் அந்தப்புரத்தில் நுழைந்தான். பத்தே நாள்களான சிசுவை எவரும் அறியாமல் எடுத்துச் சென்று கடலில் எறிந்துவிட்டான்.

பிறந்து பத்தே நாள்களான முதல் குழந்தையை அந்தப்புரத்தில் காணவில்லை. இத்தனை கட்டுக்காவல்களை மீறி எங்கே போயிருக்கும்? அரண்மனையே அல்லோலகல்லோலப்பட்டது.

அனைவரும் குழந்தையைத் தேடத் துவங்கினர்.

ருக்மிணியின் அழுகையையும் பலராமனின் கோபத்தையும் கண்ட கண்ணன், இருவரையும் தனியே  அழைத்து, 
குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. தானே திரும்பிவரும். பதறவேண்டாம். என்று எடுத்துச் சொன்னான்.

பலராமன் கண்ணனை நன்கறிவான் ஆகையால் புரிந்துகொண்டு கோபத்தை விட்டான். குழந்தையைத் தேடும் பணியும் நிறுத்தப்பட்டது.

ருக்மிணியும் கண்ணனது ஸ்வரூபத்தை நன்குணர்ந்தவள். பெற்ற உள்ளம் ஆறாவிடினும், ஞானத்தினால் மனத்தை அமைதிப் படுத்திக்கொண்டாள். 

பகவானே ஆனாலும் மனிதப் பிறவி எடுத்தால்  வரும் துன்பங்களை மாயம்‌ செய்து விலக்கிக்கொள்ளவில்லை. அவனால்‌ இயலாதா என்ன? ஆனால், ஞானத்தினாலும், பக்குவத்தினாலும் தனக்கு வரும் ப்ரச்சினைகளைப் பொறுமையாக எதிர்கொள்கிறான்.
பக்தர்களுக்குத் துன்பமென்றால் மட்டும் அக்கணமே துயர் துடைக்க ஓடவும் செய்வான்.
 
கடலில் எறியப்பட்ட பச்சிளங்குழந்தையை ஒரு பெரிய மீன் விழுங்கியது.

மீனவர்கள் வலை வீசும்போது அம்மீன் வலையில் மாட்டிக்கொண்டது.

பெரிய மீனாக இருக்கவே, அதை சம்பரனுக்கு காணிக்கையாக்கினால் நிறைய பணம் கிடைக்குமே என்று எண்ணி அவனிடம் சேர்ப்பித்துவிட்டனர்.

சம்பரனின் சமையல்காரர்கள் சமைப்பதற்காக  அம்மீனை வெட்டினர்.

மீனின் வயிற்றினுள் ஒரு சின்னஞ்சிறுகுழந்தை  அவர்களைப் பார்த்துச் சிரித்தது. 
அதன் அழகில் அவர்கள் மயங்கி நின்ற நேரம், சமையல் முடிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக மாயாவதி என்பவள்‌ அங்கு வந்தாள். ரதியின் அவதாரமான அவள் மன்மதனை எதிர்பார்த்து சம்பரனின் அரண்மனையில் பணியாளாக இருந்தாள்.

சமையல்காரர்கள் அவளிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்துவிட்டு மீனைச் சமைக்கத் துவங்கினர்..

சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த மன்மதனை அவளால் அடையாளம் காண முடியவில்லை. அவள் அக்குழந்தையை சம்பரனிடமே கொண்டு செல்லப் புகுந்தாள்.

அப்போது ஆபத்பாந்தவரும், ஆதிகுருவுமான நாரதர் அவள்‌ முன் தோன்றி குழந்தை பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார்.

அவளுடைய மாயை விலகி, அக்கணமே தான் ரதிதேவி என்பதை உணர்ந்துகொண்டாள்.

குழந்தையை உடனே எவரும்‌ அறியாமல்‌ தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டாள்.

ரசவாதம் போன்றவற்றைச் செய்வதில் வல்லவள் அவள். மிகக்குறைந்த காலத்தில் அவளது அன்பினாலும், மாயவித்தைகளாலும் இளைஞனாக மாறிவிட்டான் ப்ரத்யும்னன். ஏற்கனவே அழகே உருவான அவனுக்கு இப்போது தந்தையான கண்ணனின் அழகும் சேர்ந்துகொண்டது. அவனைப் பார்க்கும் அத்தனை பெண்களும் மோகத்தில் விழுந்தனர்.

இருப்பினும் மாயாவதியை அவன் ரதியென்று உணரவில்லை. ஒருநாள் அவளது செயல்கள் பற்றி அவன் வினவ, மாயாவதி அவனுக்கு ஸ்வரூபத்தை விளக்கி, நடந்தவை அனைத்தையும் கூறினாள்.

மேலும் சம்பரனைக்‌கொன்று விரைவில் அன்னை தந்தையைக் காண  துவாரகை செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தாள். 

தாயான ருக்மிணி தன்னைப் பிரிந்து வாடுவதைக் கேட்டதும், ப்ரத்யும்னனுக்கு சம்பரன் மீது மஹாகோபம் வந்தது.

வெறும் கோபத்தினால் சம்பரனை வெல்ல இயலாது. அவன் மாய அசுரன் எனவே, மாயக் கலைகளைக் கற்றுச் செல்லவேண்டும் என்று சொல்லி, தனக்குத் தெரிந்த அத்தனை மாயக் கலைகளையும் ஒரே நாளில் ப்ரத்யும்னனுக்கு கற்றுக்கொடுத்தாள் மாயாவதி. அதோடு மற்ற எல்லா மாயவித்யை களையும் தவிடுபொடியாக்க வல்ல மஹாமாயவித்யையையும் உபதேசம் செய்தாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, June 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 482

துவாரகையை அடைந்ததும் ருக்மிணியை அழைத்துச் சென்று தேவகி மாதாவிடம்‌ ஒப்படைத்தான் கண்ணன். வசுதேவர் கர்காசார்யர் முதலிய குல ப்ரோஹிதர்களைக் கொண்டு ஒரு நல்ல திருநாளை நிச்சயம் செய்தார்.

அனைத்து தேசத்து அரசர்களுக்கும் கண்ணன் மற்றும் ருக்மிணியின் திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

துவாரகையின் மக்கள் அனைவரும் கண்ணனைத் தங்கள் வீட்டுப் பிள்ளை என்றே எண்ணினர். அவரவர் வீடுகளைத் தோரணங்களாலும் மாலைகளாலும் தீபங்களாலும் அலங்கரித்தனர். ஏராளமான அன்பளிப்புகளைக் கொண்டுவந்து கண்ணனுக்கு அளித்தனர்.

அழைப்பை ஏற்று வந்த மன்னர் பரிவாரங்களால் துவாரகையின் வீதிகள் அனைத்தும் நிறைந்தன.

கண்ணன் ருக்மிணியைக் கடத்தி வந்த கதையை உடன் சென்ற வீரர்கள் மூலம் கேட்டு ஆங்காங்கே அதைப்பற்றிய  பாடல்களைப் பாடி ஆடினர்.

துவாரகையின் மக்கள் அனைவரும் கண்ணனின் திருமணத்தைக் காண விரும்பியதால்‌ நகரின் மத்தியில் வெட்ட வெளியில்   ஆயிரம் கால்களைக் கொண்ட  ஒரு அழகிய ஸ்வர்ண மண்டபம் அமைக்கப்பட்டது. 
ஏராளமான ரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஒளிர்ந்தது அம்மண்டபம்.
பூலோகத்தில் நடக்கும் பரவாசுதேவனின் திருமணத்தைக் காண அனைத்து யோகிகளும் முனிவர்களும் தேவர்களும்  வந்துவிட்டனர்.

மகளின் திருமணத்தைக் காண பீஷ்மகரும் வந்துவிட்டார். அவளுக்கான அத்தனை சீர் வரிசைகளையும் குறைவின்றிக் கொண்டு வந்திருந்தார்.

பேரழகி ருக்மிணியை திருமணக்கோலத்தில்  கண்டவர் அனைவரும் இவள் மஹாலக்ஷ்மியேதான் பேசிக்கொண்டனர்.
அவள் சூட்டிய மணமாலையின் மீது மகரகுண்டலம் வசதியாய் அமர்ந்துகொண்டது.

கந்தர்வர்கள் வந்து கன்னூஞ்சலுக்குப் பாடினர். அப்ஸரஸ்கள் நாட்டியமாட அனைவரும் தேவலோகத்தில் இருப்பதாகவே உணர்ந்தனர்.

அனைவரும் வாழ்த்த மங்கை ருக்மிணியின் கழுத்தில் தங்கமணி மாலையிட்டான் கண்ணன். திருமணச் சடங்குகள் அனைத்தையும் மற்ற தவ ச்ரேஷ்டர்களுடன் இணைந்து குறைவற நடத்தி வைத்தார் கர்காச்சாரியார்.

துவாரகையில் எழுப்பப்பட்ட கெட்டிமேளச் சத்தம் தேவலோகம் வரை ஒலித்தது.

ஸ்ரீ ருக்மிணி ஸமேத க்ருஷ்ண சந்திரன் ரத்ன ஸிம்மாசனத்தில் அமர்ந்து அருள் செய்த காட்சியைக் கண்டவர் அனைவரும் சொல்லோணாத பேரின்பத்தை அடைந்தனர்.

த்3வாரகாபுர மண்டபே
த்3வாத3சாதி3த்ய ஸந்நிபே4
பூ4ரிரத்ன ஸிம்மாஸனே
பூ4ஸுரகணே
வீராஸனே ஸுகா2ஸீனம் விஶ்வமங்கள தா3யினம்
தீ4ரயோகி3 ஸம்ஸேவனம் 
தே3வகீ வஸுதே3வ ஸூனும்

ஆலோகயே ருக்மிணி கல்யாண கோ3பாலம்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, June 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 481

ருக்மியும் மற்ற அரசர்களும் பெரும்படையுடன் கண்ணனைத் துரத்திக்கொண்டு வந்தனர்.
அவர்கள் கண்ணனின் படை மீது அம்பு மழை பொழிந்தனர்.

அதைக் கண்ட ருக்மிணி பயந்து கண்ணனை இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டாள்.

கண்ணன் சிரித்துக்கொண்டே 

 க்ஷத்ரிய கன்னிகையே! பயப்படாதே! இவர்கள் அனைவரும் இப்போதே அழிக்கப்படுவர் என்றான்.

பலராமன் எதிரிகளின் யானைப்படையை முற்றிலுமாக அழித்தான்.

தேர்கள் முறிக்கப்பட்டன.
சண்டைக்கு வந்த அத்தனை வீரர்களின் அங்கங்களும் அறுக்கப்பட்டன.

கண்ணனின் படைகள் மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்குவதைக் கண்டு சால்வன் முதலான அரசர்கள் எஞ்சிய வீரர்களுடன் போர் முனையிலிருந்து பின்வாங்கி ஓடினர்.

ஜராசந்தன் சிசுபாலனிடம்

வருந்தாதே நண்பா! வெற்றி தோல்வியெல்லாம் வினைப்பயனாகும். நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் பகவான் ஆட்டிவைப்பதாலேயே நடக்கிறது.

நான் பதினேழு முறை கண்ணனிடம் தோற்றபோதும் வருந்தவில்லை. விதியால் ஏவப்பட்ட காலம் என்னை விரட்டுகிறது என்று அமைதியாய் இருந்தேன்.

இப்போதும் நமது பெருஞ்சேனையை யாதவர்களின் சிறுபடை தோற்கடித்தது என்றால் அதற்குக் காரணம் விதியே அன்றி வேறில்லை.

இப்போது காலம் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. நமக்கொரு காலம் வரும். அப்போது நாமும் வெல்லலாம். இப்போது இவ்விடம் விட்டுக் கிளம்பலாம் வா. என்று சொன்னான். 

சிசுபாலனைச் சார்ந்து வந்திருந்த அத்தனை அரசர்களும் மீதமிருந்த சேனையுடன் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி தத்தம் நகரம் திரும்பினர்.

அனைவரும் திரும்பி ஓடிவிட்டபோதும் ருக்மிணியின் அண்ணனான ருக்மி விடுவதாயில்லை. தோல்வியை ஏற்க மறுத்தான். மீதமிருந்த ஒரு அக்ஷௌஹிணி சேனையைத் திரட்டிக்கொண்டு கண்ணனுடன் சமர் செய்யப் புகுந்தான்.

தோற்றோடிய அரசர்கள் முன்னால் 

கோழைகளே! என் தங்கையைத் திரும்ப அழைத்து வராமல் ஊர் திரும்பமாட்டேன். இது சத்தியம் என்று சூளுரைத்து விட்டிருந்தான்.

ரதத்தை நேராகக் கண்ணனிடம் ஓட்டிச் சென்று அவனுடன் நேருக்கு நேராக யுத்தத்திற்கு அழைத்தான்.

ஹே இடையனே! மாடு மேய்க்கும் உனக்கு அரசகுலப் பெண் வேண்டுமா? இப்போதே உன்னை என் பாணங்களால் பிளந்துவிட்டு என் தங்கையை என்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கத்தினான்.

கண்ணன் அவனுடன் போர் செய்ய விரும்பாமல் தொடர்ந்து ரதத்தைச் செலுத்தப் பணித்தான்.

ருக்மி அவன் பின்னாலேயே நில் நில் என்று கத்திக்கொண்டே துரத்திச் சென்று அம்புகளை எய்தான். அம்புகள் ருக்மிணியின் மேல் பட்டுவிடப்போகிறதே என்று அவற்றைப் பிடித்து ஒடித்துப் போட்டான் கண்ணன். பின்னர் தன் வில்லை எடுத்து ருக்மியை‌ நோக்கி ஒரே சமயத்தில் ஆறு‌ அம்புகளை எய்தான். அவனது வில் முறிந்து போயிற்று. மேலும் எட்டு அம்புகளால் குதிரைகளையும், இரண்டு அம்புகளால் தேரோட்டியையும், மூன்று அம்புகளால் தேரின் கொடியையும் அறுத்தான்.

ருக்மி மறுபடி வில்லை எடுக்க அதுவும் முறிக்கப்பட்டது. மேலும் ருக்மி எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அடு எடுக்கும் தறுவாயிலேயே உடைக்கப்பட்டது.

ருக்மியின் தேரையும் முறித்தான் கண்ணன். அவன் வாளை உருவிக்கொண்டு கண்ணனைத் தாக்க வந்தான். அவனைக் கொல்ல தானும் வாளை எடுத்தான் கண்ணன்.

கண்ணனின் பராக்ரமம் அனைத்தையும் நேரில்‌ கண்ட‌ ருக்மிணி தன் அண்ணனைக் கொன்றுவிடுவான் என்று பயந்தாள். உடனே கண்ணனின் திருவடிகளில் விழுந்தாள்.

ஹே! நாதா! நீங்கள் அளவிலாப் பெருமைகள் கொண்டவர். இன்று நமக்கு மிகவும் நன்னாளாகும். இச்சமயத்தில் என் தமையனைக் கொல்லலாகாது. என்று வேண்டினாள்.

கண்ணன் ருக்மியின் வாளைத் தட்டிவிட்டு அவனை கருடன் பாம்பைப்‌ பிடிப்பது போல் பிடித்தான்.

ருக்மிணி பயப்படுவதைப் பார்த்து, கண்ணனின் மனம் இளகியது. ருக்மியைக் கொல்லாமல் விட்டான். ஆனாலும் அவனுடைய கேசத்தையும் மீசையையும் மழித்து ஐந்து குடுமிகள் வைத்து அலங்கோலமாக்கினான்.

கேசத்தை மழிப்பது உயிரை விடுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இன்றும் இறைவனிடம் ஏதாவது வேண்டிக்கொள்ளும் சமயத்தில் ஆத்மாவை சமர்ப்பணம் செய்வதற்கு அடையாளமாக மொட்டையடித்துக்கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

அப்போது அருகே வந்த பலராமன் கண்ணனைக் கண்டித்தான். 

கண்ணா! இது நல்லதற்கல்ல. உன்னை நம்பி வந்தவளின் உறவினன் இவன். அலங்கோலப்படுத்துவதும் கொலைக்குச் சமம். இவனை விட்டுவிடு என்றான். பின்னர் ருக்மிணியைப் பார்த்து,

மங்களமானவளே! எங்களைத் தவறாக எண்ணாதே. இவன் க்ஷத்ரிய குலப் பெண்ணான உன் விருப்பத்தை மதிக்காமல் விவாஹத்தை எதிர்த்து கொல்ல வந்து விட்டான். இவனைச் சும்மா விட இயலாது. அவன் தன் வினைப்பயனையே அனுபவிக்கிறான். 
என்றான்.

மீண்டும் கண்ணனிடம் 
கொலை செய்யத் தக்க தவறிழைத்தாலும் உறவினனைக் கொல்வது சரியல்ல. உறவைத் துண்டித்துவிடலாம். அதுவே கொலைக்குச் சமமாகும். செருக்கினால் அவ்வாறு வீணாக ஒதுக்கிவைப்பவர்கள் பலனை அனுபவிப்பார்கள்.

மாயைக்கு வசப்படுபவர்களுக்கே நண்பன், எதிரி என்ற வேற்றுமைகள் தெரியும். 

என்று சொல்லி மேலும் படைப்பின் தத்துவங்களை ருக்மிணிக்கு விளக்கினான். 

பின்னர், இத்துயரத்தை எண்ணி மனம் கலங்காதே. என்று கூறினான்.

புதிதாக இன்று வந்த பெண் தங்களைத் தவறாக எண்ணக்கூடாது. அதே சமயம்‌ கண்ணனை விட்டுக்கொடுக்கவும் இயலாது. இவ்விரண்டையும் மிக அழகாக சமன் செய்து பேசினான்‌ பலராமன்.

மஹாலக்ஷ்மியே ஆனாலும் பெண்களுக்கு பிறந்தவீட்டுப் பாசம் அறுக்க இயலாத ஒன்று. தன் தமையனை எண்ணிக் கலங்கியிருந்த ருக்மிணிக்கு பலராமனின் உபதேசம் ஆறுதல்‌ அளித்தது.

அவர்கள் ருக்மியை அப்படியே விட்டுவிட்டு படையுடன் துவாரகைக்குக் கிளம்பினார்கள்.

ருக்மிணி இல்லாமல் ஊருக்கு வரமாட்டேன் என்று சூளுரைத்துவிட்டபடியால் ருக்மியால் மீண்டும் விதர்ப்ப தேசத்திற்குள் போக இயலவில்லை. துஷ்டர்களே ஆனாலும் வாக்கைக் காப்பாற்றுபவர்களாக இருந்தார்கள் என்பதை ப் கவனிக்க வேண்டும். ருக்மி தான் இருந்த இடத்திலேயே போஜகடம் என்ற ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக்கொண்டு அங்கேயே வசிக்கத் துவங்கினான். போஜகடம் என்றால் போஜனான ருக்மி சபதம் செய்த இடம்‌ என்று பொருள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..