Friday, July 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 530

குசேலருடன் கண்ணன் பேசிக்கொண்டே இருந்தான்.

நம்மைப் பெற்ற தந்தைதான் முதல் குரு. உபநயனம் செய்வித்து நற்காரியங்களுக்குத் தகுதியாக்குபவர் இரண்டாவது குரு. ஞானத்தைத் தருபவர் மூன்றாவது குரு. இவரே ப்ரதானமானவர். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஞானத்தை அளிக்கும் குருவாக நானே விளங்குகிறேன். 
தர்மத்தை ஒட்டி வாழ்ந்து என் உபதேசங்களால் ஞானத்தைப் பெற்று பிறவிக் கடலை எளிதாகக் கடக்கத் தெரிந்தவர்களே உண்மையில் வாழத் தெரிந்தவர்கள்.

எல்லா உயிர்களிலும் ஆன்மாவாக நானே விளங்குகிறேன். எனினும் குரு சேவையால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதற்கொத்த ஆனந்தம் வேறெந்த காரியத்தினாலும் எனக்குக் கிடைப்பதில்லை.

ஸுதாமா! உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒருநாள் குருமாதா காட்டிற்குச் சென்று விறகு எடுத்துவரும்படி நம்மை ஏவினார். அதற்காக நாம் இருவரும் ஒரு அடர்ந்த காட்டிற்குள் சென்றோம். அப்போது திடீரென்று பெருங்காற்று வீசி மழை பிடித்துக்கொண்டது. சூரியன் மறைந்துவிட, எங்கும் இருள் கவ்விற்று. மேடு, பள்ளம், தரை எதுவும் தெரியவில்லை. வெள்ளம் பெருகத்துவங்க, இருளில் திசை தெரியாமல் மிகவும் துன்புற்றோம். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு சுற்றியலைந்தோம். 

நமது ஆசார்யரும், குருவுமான சாந்தீபனி அவர்கள், நம்மைத் தேடிக்கொண்டு வந்தார். திசையறியாமல் துன்புறும் நம்மைக் கண்டார்.

குழந்தைகளே! மிகவும் வருந்தினீர்களா? ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலே மிகவும் பிரியமானது. அதைப் பொருட்படுத்தாமல் எனக்காக நீங்கள் காட்டில் அலைந்தீர்களா. குருவிற்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவனே சிறந்த சீடன். உங்கள் விஷயத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் விரும்புவது அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும். நீங்கள் பெற்ற செல்வம் உங்களுக்கு இம்மை மறுமை அனைத்திலும் பயன்படட்டும். 

நீங்கள் மிகுந்த ஏழ்மையிலிருந்தாலும் மன நிம்மைதியோடு விளங்குவதாகத் தங்கள் திருமுகம் சொல்கிறது. நான் அளப்பரிய செல்வம் உடையவனாயினும் மிகவும் நிம்மதியாக மன அமைதியுடன் வாழ்கிறேன். நம் இருவரின் மன நிம்மதிக்கும் காரணம் என்ன தெரியுமா? அன்றைக்கு குரு நம்மை ஆசீர்வதித்தாரே. அதுதான் காரணம். குருவின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒருவன் வாழ்வில் அனைத்து வகையிலும் மன நிறைவும் அமைதியும் பெறுகிறான்.

என்றான்.

சுதாமா பேசத் துவங்கினார்.

ஹே! ஜகத்குரோ! தங்களோடு குருகுலவாசம் அமைந்ததே. அதுவே நான் வாழ்க்கையில் பெற்ற பெருஞ்செல்வம். நான்கு வகையான புருஷார்த்தங்களுக்கும் மூலமாக விளங்குவது வேதம். தாங்களோ வேதஸ்வரூபராக விளங்குகிறீர். இவ்வுலக வாழ்வை அனுசரித்து குருகுல வாசம் செய்தீர்கள். இல்லையெனில் தங்களுக்கு அதற்கான அவசியம்தான் என்ன?

என்றார். கண்ணன் அவருக்கு அருள் செய்யத் தீர்மானித்தான். குசேலரோ கந்தல் துணியில் முடித்துக்கொடுக்கப்பட்ட அவலை வெளியே எடுக்க வெட்கப்பட்டுக்கொண்டு ஒளித்து வைத்துக் கொண்டார்.

கண்ணனே திருவாய் மலர்ந்தான்.

உங்கள் வீட்டிலிருந்து எனக்குக் கொடுப்பதற்காக ஏதாவது எடுத்துவந்திருக்கிறீரா? அன்புடன் எதைக் கொடுத்தாலும் மனமுவந்து ஏற்பேன். அன்பில்லாமல் எவ்வளவு பெரிய செல்வம் கொண்டுவந்தாலும் அதை லட்சியம் செய்யமாட்டேன். இலையோ, பூவோ, பழமோ, நீரோ எதுவாயினும் உள்ளன்புடன் அளிக்கப்பட்டால் அதை உடனே உண்டுவிடுவேன். என்றான். கண்ணன் கேட்டபிறகும் குசேலர் தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்திருந்தாரே தவிர, அவல் ‌முடிப்பை எடுக்கவில்லை.

அவரது வருகைக்கான காரணத்தை உணர்ந்த கண்ணன், பதிவிரதையான இவரது மனைவியின் விருப்பத்திற்காக வந்திருக்கிறார். இவருக்கு குபேரனை ஒத்த செல்வத்தைத் தருவேன் என்றெண்ணினான்.

பின்னர் தானாகவே அவரது மேலாடையில் முடிந்திருந்த மூட்டையைப் பிடித்து இழுத்து, இது என்ன? என்று கேட்டான். அவர் நெளிந்தார். தானாகவே அந்த மூட்டையை எடுத்துப் பிரித்தான் கண்ணன்.

அதில் அவல் இருந்தது. ஆஹா! அவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அகில உலகத்தையும் மகிழ்விக்கும் பொருள் இது. என்று கூறிக்கொண்டு ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
அடுத்த பிடி அவலை எடுத்ததும், ருக்மிணி கண்ணன் கையைப் பிடித்து போதும் என்று கண்ணசைத்தாள்.

ஒரு பிடி அவலே இவருடைய இம்மை மறுமை அனைத்திற்கும் போதுமானது. என்றாள். சிரித்துக்கொண்டே கண்ணன் அவல் மூட்டையை அவளிடம் கொடுத்தான். 

பின்னர் கண்ணனும் அவருமாக இரவு உணவேற்றுப் பால் அருந்தினர். குசேலர் வைகுண்டத்தில் இருப்பதுபோல் உணர்ந்தார். அருகில் உறங்கும் அழகுப் பெட்டகமான கண்ணனை இமை கொட்டாமல் விடிய விடியப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 529

துவாரகையை அடைந்த குசேலருக்கு கண்ணன் ருக்மிணியுடன் வசிக்கும் திருமாளிகையைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருக்கவில்லை.

அந்தணர்கள் மீது பக்திகொண்ட கண்ணன், அவர்கள் வந்தால் எந்தத் தடையுமின்றி உள்ளே அனுப்பும்படி உத்தரவிட்டிருந்தான். கண்ணனின் மாளிகை வாசலில் நின்ற குசேலர் காவலர்களால் வணங்கப்பெற்று உள்ளே அனுப்பப்பட்டார். உள்ளே நுழைந்ததுமே ஆனந்தக் கடலில் தள்ளப்பட்டார். கண்ணனைக் காண இயலுமா என்று யோசித்துக்கொண்டு வந்தவருக்கு வணக்கத்துடன் வரவேற்பும் கிடைத்ததை எண்ணி அதிசயித்தார்.

அதற்குள் ஒரு அந்தணர் வருகிறார் என்ற செய்தி கண்ணனுக்குப் பறந்தது. ருக்மிணியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த கண்ணன் அதைக் கேட்டதும் குதித்து இறங்கி ஓடிவந்தான். மகிழ்ச்சியுடன் அவரைக் கட்டிக்கொண்டான். 
கண்ணனின் தாமரைக்கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொறிந்தன. அவரைத் தானே கையைப் பிடித்து அழைத்துச் சென்று தன் கட்டிலில் அமரவைத்தான். அவரை உபசரிக்கும் பொருள்களைத் தானே ஓடி ஓடிச் சென்று எடுத்துவந்தான்.

இத்தகைய உற்சாகத்துடன் கண்ணன் ஓடுவதை இதுவரை பார்த்தறியாத ருக்மிணியும் பணிப்பெண்களும் செயல் மறந்து நின்றனர். 

காடு மேடுகளில் நடந்து புண்ணாகிப்போயிருந்த அவரது சரணத்தைத் தூய நன்னீரால் நீராட்டி, அதைத் தலையில் தெளித்துக்கொண்டு ருக்மிணிக்கும் தெளித்தான்.

பின்னர் சந்தனம், அகில், குங்குமப்பூ ஆகியவைகளால் ஆன வாசனைத் திரவியங்களைப் பூசிவிட்டான்.

பின்னர் உணவருந்தச் செய்து தாம்பூலம் அளித்தான். 

நரம்புகள் அனைத்தும் வெளியே புடைத்துக்கொண்டு தெரியும் அளவிற்கு இளைத்துப்போயிருந்த குசேலரை ஒரு சுகமான ஆசனத்தில் அமர்த்தி ருக்மிணியை வெண்சாமரம் வீசச் செய்தான். 

யார் இவர்? ஜகன் மாதாவான ருக்மிணியே இவருக்கு சாமரம் வீசுகிறாளே. கண்ணன் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கும் அளவிற்கு இவர் என்ன புண்ணியம் செய்தாரோ என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.

கண்ணனும் குசேலரும் குருகுலத்தில் தாம் வசித்தபோது நடந்த இனிமையான நிகழ்வுகளை நினைவு கூரத் துவங்கினர். 

சுதாமா! குருகுலத்திலிருந்து கிளம்பிச் சென்றதும் உங்களுக்கேற்ற பெண்ணை மணம் முடித்தீரா?

தங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா? உமக்கு இல்லறத்திலும் செல்வத்திலும் நாட்டமில்லை என்றறிவேன். நீங்கள் ஆசைக்கு அடிமையானவர் இல்லை. என்னைப்போல் சிலர், மாயையினால் ஏற்படும் உலகியல் நாட்டங்களைக் களைந்தும் உலகோடு ஒட்டி வாழ்கிறார்கள்.

உத்தம குருவை அடைந்தவன் இருபிறப்பாளன் என்றறியப்படுகிறான். குருவிடமிருந்து ஞானத்தைப் பெற்று அறியாமை நீங்கிவிடுவதால் அதன் பிறகான உலக வாழ்க்கை அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டே போன கண்ணனை ஆனந்தக் கண்ணீருடன் விழிகள் விரிய அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தார் குசேலர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 528

ஐந்து நாள்கள் முன்பு, உய்யும் வழி தேடி மன சஞ்சலத்துடன் வந்த பரீக்ஷித்தையும், இப்போது இறைவனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு தெளிவுடன் பேசும் பரிக்ஷித்தையும் நினைத்துப் பெருமை கொண்டார் ஸ்ரீ சுகர்.

தொடர்ந்து கூறலானார்.

கண்ணனுக்கு குழந்தைப் பருவத்து நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சுதாமா என்பது. அவர் ப்ரும்மஞானியாவார். புலன் இன்பங்களில் நாட்டமற்றவர். காமம், கோபம், பிற பொருள்களில் மயக்கம் ஆகியவை அற்றவர். எப்போதும் கந்தலாடை அணிவதால் குசேலன் என்றழைக்கப் பட்டார். தற்செயலாகக்‌ கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்.

அவருடைய மனைவியும் அவரைப் போன்றே குணநலன்கள் கொண்டு விளங்கினாள். கணவர் தினமும் பிக்ஷை ஏற்றுக்கொண்டு வருவதை குழந்தைகளுக்கும் கணவருக்கும் கொடுத்துவிட்டுத் தான் பட்டினி கிடப்பாள். பசியால் மிகவும் இளைத்த உடலுடைய அவள் க்ஷுத்க்ஷாமா என்றழைக்கப்பட்டாள்.

வரிசையாகச் சில நாள்கள் ஒன்றுமே கிடைக்காததால் குழந்தைகள் பசியால் வாடின. அதைக் கண்டு மனம் பொறாத சுசீலை கணவரிடம் வேண்டினாள்.

அன்பரே! உங்கள் இளமைக்கால நண்பர் கண்ணன் என்று அடிக்கடி சொல்வீரே. அவர் திருமகளின் கணவர். அந்தணர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அண்டியவரைக் காப்பவர். ஸாக்ஷாத் இறைவனேயாவார். அவரை நண்பராகப் பெற்ற தாங்கள் மிகவும் பாக்யம் செய்தவர். அவரை ஒரு முறை கண்டு வாருங்களேன்‌. அவர் நிறையப் பொருள் தரக்கூடும். இப்போது துவாரகையில் இருக்கிறார் என்று கேள்வியுற்றேன். தன் திருவடியை நினைப்பவர்க்குத் தன்னையே தருபவர். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செல்வம் தந்து விருப்பங்களை நிறைவேறச் செய்பவர். நீங்கள் அவரைப் பார்த்துவிட்டு வரலாமே என்றாள்.

கண்ணனைப் பார்க்க சுதாமாவிற்கு மிகவும் விருப்பம்தான் என்றாலும், பொருளை வேண்டிச் செல்ல விருப்பமில்லை. எனவே சரி சரியென்று சொல்லிக்கொண்டு நாள்களைக் கடத்தி வந்தார். 

பிறகொருநாள் குழந்தைகள் மற்றும் மனைவியின் பசியால் வாடிய முகங்களைப் பார்த்துவிட்டு மனைவியிடம், 

கண்ணன் என் நண்பன் ஆனாலும் பகவான். அவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் எடுத்து வா என்றார்.

கண்ணனிடம் பொருளை வேண்டாவிட்டாலும் அவனது தரிசனமே நன்மை பயக்கும். போய்ப் பார்த்துவரலாம் என்றெண்ணினார்.

அவள் நல்ல காலம் வந்துவிட்டதென்று எண்ணி மிகவும் மகிழ்ந்து அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று நான்கு வீடுகளிலிருந்து நான்கு பிடி அவலை யாசித்துப் பெற்று வந்தாள். அவை அனைத்தையும் ஒரு துணிக் கிழிசலில் மூட்டையாகக் கட்டி கணவரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்ட குசேலர், நெஞ்சம்‌ முழுவதும் கண்ணனுடன் தான் பழகிய நாள்களை நினைத்துக்கொண்டும், இப்போது துவாரகாதீசனாக, திருமகள் கேள்வனாக விளங்கும் கண்ணனின் தரிசனம் கிட்டுமோ என்று பலவாறு யோசித்துக்கொண்டும் துவாரகையை நோக்கி நடக்கத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, July 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 527

பீமனுக்கும் துரியோதனனுக்கும் சண்டை மூள்வதில் பலராமனுக்கு விருப்பமில்லை. துஷ்டனாக இருந்தாலும் துரியோதனன் பலராமனின் சீடன். அவனை விட்டுக்கொடுக்க மனமில்லை பலராமனுக்கு. 

கண்ணன், மற்றும் தருமர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள் ஐவரும் பலராமனை வணங்கி நின்றனர். அவன் என்ன சொல்வானோ என்று ஐயமிருந்ததால் ஒன்றும் பேசவில்லை.

சற்று தூரத்தில் மிகவும் ஆக்ரோஷமாக பீமனும் துரியோதனனும் கதாயுத்தம் செய்து கொண்டிருந்தனர். இருவரையும் பார்த்து பலராமன் பேசத் துவங்கினான். 

ஹே துரியோதனா! ஹே பீமா! நீங்கள் இருவரும் சம வலிமையுள்ள வீரர்கள். ஒருவன் பலத்தாலும் மற்றவன் பயிற்சியாலும் வலிமை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்குள் வெற்றி தோல்விக்கான வாய்ப்பில்லை. எனவே பயனில்லாத இந்தப் போரை நிறுத்துங்கள் என்றான்.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் இதுகாறும் பேசிய ஏசிய மொழிகளையெல்லாம் நினைவில் கொண்டுவந்து, கோபத்தினாலும் தீராத பகையாலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். பலராமன் பேசியதைக் காதில் வாங்கவில்லை.

தன் பேச்சைப் பொருட்படுத்தாமல் அவர்கள் யுத்தம் செய்வதைக் கண்ட பலராமன், மேலும் பேசி அவமானப்பட விரும்பாமல், விதிப்படி நடக்கட்டும் என்று கூறிக்கொண்டு அமைதியாக துவாரகைக்குச் சென்றுவிட்டான்.

உக்ரசேனர் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தீர்த்த யாத்திரையின் போது பல வேள்விகளைக் கண்டு வந்த பலராமன் தானும் வேள்வி புரிய ஆசைப்பட்டான். வேள்வியே உருவான அவன் விருப்பத்தை ஏற்று ரிஷிகள் மகிழ்ச்சியுடன் எல்லா வேள்விகளையும் நடத்திக்கொடுத்தனர்.
பலராமன் அவர்கள் அனைவர்க்கும் பூரண ஞானத்தை வழங்கினான்.

அதன் பயனாக ப்ரபஞ்சம்‌ முழுதும் நிரம்பியுள்ள ஆன்மாவை அவர்கள் தங்களுக்குள் கண்டனர்.

யாகங்கள் முடிந்து மனைவியுடன் அவப்ருத ஸ்நானம் செய்த பலராமன் சூரியனைப் போல் தன்னொளி மிகுந்து விளங்கினான். பலராமனின் லீலைகளைக் காலை மாலை இருவேளைகளிலும் நினைப்பவர் பகவான் விஷ்ணுவின் பேரன்புக்குரியவராவர்.

என்று ஸ்ரீ சுகர் கூற, பரீக்ஷித் மேலும் கேட்கலானான்.

அனைத்தும் அறிந்தவரே! அன்பும் முக்தியும் தரும் கண்ணனின் லீலைகள் எண்ணற்றவை. இதுவரை தாங்கள் கூறாத மற்ற லீலைகளைக் கேட்க விரும்புகிறேன். இறைவனின் லீலைகளைக் கேட்கும் விஷயத்தில் போதுமென்ற த்ருப்தியே வருவதில்லை.

பகவானின் சிறப்புகளைப் பேசுகின்ற வாயே வாய். கேட்கும் காதுகளே காதுகள்.
பகவானை நினைக்கின்ற மனமே மனம். அவனது திருவடியை வணக்குகின்ற தலையே தலை. அவனது திருமேனியைக் காண்கின்ற கண்களே கண்கள். அவனது பக்தர்களின் சரண தீர்த்தத்தை ஏற்கும் உடலே உடல். அவனது உடைமையாவதே பேறு.

என்று பேசிக்கொண்டே போன பரீக்ஷித்தை பெருமையுடன் நோக்கினார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 526

ஸத்ர யாகம் என்பது ஆயிரம் வருடங்களுக்கு நடக்கும் யாகமாகும். அவ்வமயம் பருவ காலம் வந்தது. திடீரென ஒரு சுழற்காற்று ஒரு துர்நாற்றத்தைப் பரப்பிக்கொண்டு மண்ணை வாரியிறைத்தது.
பல்வலன் வேள்விக்கூடத்தில் மலத்தை மழை போல் பொழிந்து நடுவில் சூலமேந்திக் கொண்டு நின்றான்.

ஆங்காங்கே பிளவுபட்டு மலைபோல் பருத்த கறுத்த உடல், தாமிர நிறத்தில் செம்பட்டையான முடி, மீசையும், தெற்றிப்பற்களும் கொண்ட பயங்கரமான முகம்.

அவனைக் கண்டதும் பலராமன் உலக்கையையும், கலப்பையையும் நினைத்தான். நினைத்த மாத்திரத்தில் அவை பலராமனின் கண்முன்னால் தோன்றின. 

பலராமன் அந்த அரக்கனைக் கலப்பையால் அருகில் இழுத்தான். பின்னர் உலக்கையால் தலையில் ஓங்கி அடித்தான். நெற்றி பிளந்து குருதி கக்கிக்கொண்டு அக்கணமே வீழ்ந்தான் பல்வலன்.

நைமிஷாரண்யத்து முனிவர்கள் அனைவரும் பலராமனை வாழ்ந்த்தினர். வாடாத தாமரைமலர்களாலான வைஜயந்தி மாலைகளையும், இரண்டு பட்டாடைகளையும், ஆபரணங்களையும் அளித்தனர்.

பலராமன் அவர்களை வணங்கி விடைபெற்று, கௌசிகி நதியில் நீராடி, ஸரயு தோன்றும் ஸரோவரை அடைந்தான்.

அங்கே நீராடி, ஸரயுவை ஒட்டியே நடந்து சென்று ப்ரயாகையை அடைந்தான். ப்ரயாகையில் தர்ப்பணங்களை முடித்து புலஹாஸ்ரமம் சென்றான்.

பின்னர் கோமதி, கண்டகி, விபாசை, சோணை ஆகிய நதிகளிலும் நீராடி கயா சென்றான். அங்கே பித்ருக்களை வழிபாடு செய்தான். பின்னர் கங்கை கடலுடன் இணையும் முகத்துவாரத்தை அடைந்தான். அங்கே நீராடியபின் மகேந்திரமலை சென்று பரசுராமரை தரிசனம் செய்தான். கோதாவரியின் ஏழு கிளைநதிகள், வேணா, பம்பை, ஸரஸ், பீமரதி முதலிய அனைத்து நதிகளிலும் நீராடி அவற்றைப் புனிதமாக்கினான். அங்கு கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சுப்ரமண்யரை தரிசனம் செய்தான். பின்னர் சிவஸ்தலமான ஸ்ரீ சைலத்தை வந்தடைந்தான். அங்கே சிலகாலம் தங்கி வழிபட்டு, பின்னர் திராவிட தேசம் வந்து வேங்கடமலையைக் கண்டு வணங்கினான். பின்னர் காமகோட்டம் எனப்படும் காஞ்சிபுரம் வந்து சிலகாலம் தங்கியிருந்தான். அதன் பின்னர் காவிரியில் நீராடி ஸ்ரீ ரங்கம் சென்று தங்கினான். அதன் பின் வ்ருஷபாசலம்‌, தென்மதுரை ஆகியவற்றை தரிசனம் செய்துகொண்டு ராம ஸேதுவை அடைந்தான். அங்கு அந்தணர்களுக்கு பத்தாயிரம் பசுக்களை வழங்கினான். பின்னர் க்ருதமாலா எனப்படும் வைகை நதி, தாமிரபரணி, மலயமலை ஆகியவற்றைக் கடந்து அங்கே தவம் செய்துகொண்டிருந்த அகஸ்தியரை அபிவாதனம் கூறி வணங்கினான். அவரிடம் ஆசிபெற்ற பின், கன்யாகுமரியை அடைந்து அங்கே கோவில் கொண்டுள்ள பகவதியை தரிசனம் செய்தான். அங்கிருந்து பால்குனம் எனப்படும் அனந்தசயனம் (திருவனந்தபுரம்) சென்று பஞ்சாப்ஸரஸில் நீராடி பத்தாயிரம் பசுக்களை தானம் செய்தான்.

பின்னர் கேரளம் வழியாகச் சென்று திரிகர்த்த தேசத்தையும் கடந்து, கோகர்ணம் என்ற சிவக்ஷேத்ரத்தை அடைந்தான். தீவின் நடுவில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆர்யாம்பாளை தரிசனம் செய்தபின் சூர்பராக க்ஷேத்ரம் சென்றான். தாபி, பயோஷ்ணி, நிர்விந்த்யா ஆகிய நதிகளில் நீராடிய பின் தண்டகாரண்யத்தை அடைந்தான் பலராமன்.

பின்னர் ரேவா நதியில் நீராடி அதன் கரையிலுள்ள மாஹிஷ்மதி நகரம் சென்றான். அங்குள்ள மனு தீர்த்தத்தில் நீராடி மீண்டும் பிரபாஸ க்ஷேத்ரம் வந்தடைந்தான். 

அங்கிருந்த அந்தணர்களைக் கண்டு வணங்கி நாட்டு நிலவரம் பற்றிக் கேட்டான். 
அவர்கள் மஹாபாரத யுத்தம் நடந்துகொண்டிருப்பதாகவும், அதில் பாரிலுள்ள அத்தனை அரசர்களும் மடிந்தனர் எனவும் கூறினர். பூமியின் சுமையைக் கண்ணன் குறைத்துவிட்டான் என்று நிம்மதியடைந்த பலராமன், பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடக்கும் கதாயுத்தத்தைத் தடுக்க விரும்பி குருக்ஷேத்ரம் சென்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 525

ஸத்ரயாகம் நடக்கும் யாகசாலைக்குள் பலராமன் நுழைந்ததும், அங்கிருந்த ரிஷிகள், முனிவர்கள், ரித்விக்குகள் அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்தனர். பலராமனை வணங்கி வரவேற்றனர். 

அங்கே ரோமஹர்ஷணர் மட்டும் அனைவர்க்கும் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். எழவில்லை. ரோமஹர்ஷணர் வர்ண முறையற்ற திருமணத்தில் பிறந்த குழந்தை. இருப்பினும் புராண இதிஹாசங்கள் அனைத்தையும் வியாசரிடமிருந்து முறையாகக் கற்றவர். 

அளவுக்கதிகமான கல்வியறிவால் அகங்காரம் கொண்டு தன்னை மதிக்கவில்லை. அதனால்தான் எழுந்து மரியாதை செய்யவில்லை என்று எண்ணினான் பலராமன்‌. துஷ்டர்களைக் கொல்லவே நான் அவதாரம் செய்துள்ளேன். இவனைக் கொல்வது என் கடைமை என்றெண்ணினான்.

துஷ்டர்களைக் கொல்லும் வேலை தனக்கு வேண்டாம் என்று தான் யுத்தத்திலிருந்து விலகி தீர்த்த யாத்திரை வந்தான் பலராமன்‌. ஆனால், வந்த இடத்தில் இப்போது நடக்கவேண்டியது நடந்தே தீரும் என்றாகும்படி, ஒரு தர்பையை எடுத்து ரோமஹர்ஷணரை அடிக்க, அவர் இறந்துபோனார்.

உடனே முனிவர்கள் அனைவரும் பதைபதைத்து பலராமனிடம், 

இது தகாது. இந்த ஸத்ரயாகம் முடிவுறும் வரையில் ரித்விக்குகளின் தலைமைப் பொறுப்பான ப்ரும்ம பதவியை இவருக்கு அளித்தோம். அந்தணரைக் கொல்வதற்கு ஈடான ப்ரும்மஹத்தி பாவம் இது. அந்த தோஷம் பரமேஸ்வரனான உம்மைத் தொடாமல் இருக்கலாம். உமக்குப் ப்ராயசித்தங்களும் அவசியமில்லைதான். ஆனால், நீங்கள் இதற்குத் தகுந்த உபாயம் கண்டால் அறநெறியைப் பின்பற்றும் வழியை உலகோர்க்குக் காட்டியதாகும். என்றனர்.

சினம் தணிந்த பலராமன், உலகை ஒட்டியே வாழ விரும்புகிறேன். மற்றவர்க்கும் அதுவே பாடமாகட்டும். நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுங்கள். என் யோகபலத்தால் அனைத்தையும் செய்வேன் என்றான். 

பலராமா! பகவானான உமது சங்கல்பமும், அஸ்திரமும் வீணாகக்கூடாது. அதே சமயம் அறநெறிக்கேற்பவும், சத்தியம் காக்கவும் எது உகந்ததோ அதைச் செய்யுங்கள் என்றனர் அந்தணர்.

தானே புத்திரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதன்படி இந்த ரோமஹர்ஷணரின் புதல்வன் தந்தைக்குரிய அனைத்து ஞானத்தையும் பெற்று புலன்களை வென்று, மனவலிமை பெற்று, இனி புராணங்களை அனைவர்க்கும் எடுத்துரைக்கட்டும் என்று வரமளித்தான் பலராமன்.
ரோமஹர்ஷணரின் புதல்வர்தான் ரௌமஹர்ஷணர்
 என்றழைக்கப்படும் உக்ரஸ்ரவஸ். 
அவரே இப்புராணத்தை நைமிஷாரண்யத்தில் ஸத்ரயாகத்தில் விரித்துக்கூறும் ஸூதர் ஆவார்.

பலராமன் மேலும் கூறினான்.

ரிஷிகளே! எனக்கு இங்கு நடப்பவை பற்றி ஒன்றும் தெரியாது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறுங்கள். அதை நிறைவேற்றித் தருகிறேன். என்றான்.

உடனே ரிஷிகள், இல்வலன் என்ற அசுரனின் புதல்வன் பல்வலன்‌. அவன் ஒவ்வொரு பருவத்திலும் இங்கு வந்து ஸத்ரயாகத்தைக் கலைக்கிறான். யாக குண்டத்தின் மீது ரத்தம், மாமிசம், மலம், மூத்திரம் ஆகியவற்றைப் பொழியும் அப்பாவி கொல்லப்பட வேண்டும்.

அதன்பின், பாரதவர்ஷத்தை வலம் வந்து ஒரு வருடம் விரதம் இருந்து தூய்மை பெறுங்கள். என்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, July 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 524

சால்வனைக் கொன்றுவிட்டு கண்ணன் திரும்புவதற்குள் பூமி நடுங்கும் வண்ணம் ஒருவன் கதையுடன் ஓடிவந்தான். அவன் பெயர் தந்தவக்த்ரன் என்பது. 

தன் நண்பர்கள் கொல்லப்பட்டதற்குக் கோபம் கொண்டு பழி வாங்கும் எண்ணத்துடன் கண்ணனைத் தாக்க வந்தான். அவனைக் கண்டதும் கண்ணன் தன் கதையை எடுத்துக்கொண்டு ரதத்திலிருந்து குதித்தான்.

இன்று நீ என் கண்ணில் பட்டுவிட்டாய். இன்றோடு உன் கதை முடிந்தது. என் மாமன் மகன் ஆனாலும் நீ என் நண்பர்களுக்குத் துரோகம் இழைத்தாய். உறவினனான உன்னைக் கொன்று நண்பர்களுக்குப் பட்ட கடனை அடைப்பேன். என்று கத்திக்கொண்டு கண்ணனை ஓங்கி அடித்தான் தந்தவக்த்ரன்.

அடிக்கு அசையாமல் நின்ற கண்ணன், தன் கதையால் அவனை மார்பில் அடித்தான். அக்கணமே ரத்தம் கக்கிக்கொண்டு விழுந்தான் தந்தவக்த்ரன். அனைவரும் பார்க்கும்போதே அவனது உடலினின்று எழும்பிய ஒளி கண்ணனின் உடலில் ஐக்கியமாயிற்று. சிசுபாலன் போலவே இவனும் வைகுண்டத்தை அடைந்தான். ஜெயவிஜயர்களுள் ஒருவன் இந்த தந்தவக்த்ரன்.

அவன் இறந்ததும் அவனது சகோதரன், விதூரதன் என்பவன் கத்தியைத் தூக்கிக்கொண்டு கண்ணனைத் தாக்க வந்தான். 
அவன் கழுத்தை சக்ராயுதத்தால் அறுத்தான் கண்ணன். 

கண்ணனை தேவர்கள் பூமாரி பெய்து, துந்துபிகள் முழங்கிக் கொண்டாடினர்.

கண்ணனின் பார்வையால் மீண்டும் சீரமைக்கப்பட்டு துவாரகை புதுப்பொலிவுடன் முன்பை விடவும் அழகாக விளங்கியது.

சிலகாலம் சென்றதும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் மூளும் சூழ்நிலை உருவானது. கண்ணன் பாண்டவர்களுக்கு உதவி செய்யப்போவதை அறிந்த பலராமன், தான் நடுநிலை காக்க விரும்பி தீர்த்த யாத்திரை கிளம்பினான்.

ப்ரபாஸ க்ஷேத்ரத்தில் நீராடியபின், தேவ பித்ரு, மனுஷ்ய கடன்களைத் தீர்க்க தர்ப்பணம் செய்தான். அவனுடன் பல ஆன்றோர்கள் பயணித்தனர்.

அனைவரும் ஸரஸ்வதி நதியின் தோற்றுவாயை அடைந்தனர். மேலும்‌ பல க்ஷேத்ரங்களை தர்சனம் செய்து நைமிஷாரண்யத்தை அடைந்தான் பலராமன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 523

நான், அண்ணா இருவருமே ஊரில் இல்லை. துவாரகைக்கு ஏதோ ஆபத்து என்று ஒன்றுமறியாதவன்போல் வழியெங்கும் புலம்பிக்கொண்டே வந்தான் கண்ணன். அன்பு கண்ணை மறைத்தது போலும். அல்லது இயல்பான ஞானத்தை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டான் போலும். 

துவாரகையின் உள்ளே நுழையும்போதே அனைத்து சேதங்களையும் பார்த்துக்கொண்டே வந்த கண்ணன், மனம் வருந்தினான். பலராமனை துவாரகையைக் காப்பதற்காகக் காவல் நிறுத்திவிட்டு தான் ரதத்திலேறிப் போர்க்களம் புகுந்தான். 

சௌபம் என்ற விமானத்தையும் சால்வனையும் பார்த்து சாரதியான தாருகனிடம் அவனருகில் செல் என்றான்.

சால்வன் ஒரு பெரிய சக்திவேலை தாருகன் மீது எறிந்தான். கண்ணன் அதைப் பொடிப்பொடியாக்கினான். 
சால்வனைப் பதினாறு பாணங்களாலும், ஆகாயத்தில் சுற்றி வரும் சௌபத்தை மறைக்கும் படியும் பாணங்களால் அடித்தான் கண்ணன்.

சால்வன் கண்ணனின் இடதுகையை அடிக்க, சார்ங்கம் கீழே விழுந்தது. அதைக்கண்ட தேவர்கள் ஹாஹா என்று கூச்சலிட்டனர்.

சால்வன் கண்ணனைப் பார்த்துக் கூறினான். 

என் நண்பனான சிசுபாலனின் திருமணத்தைக் கெடுத்து பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனாய். அவன் சற்று அசந்த நேரமாகப் பார்த்து வஞ்சகமாகக் கொன்றாய். உன்னை ஒருவராலும் வெல்லமுடியாதென அஹங்காரம் கொண்டிருக்கிறாய். உன்னை இப்போதே என் பாணங்களால் வானுலகம் அனுப்புவேன்.

கண்ணனோ, 

உன்னருகில் நிற்கும் எமனைத் தெரியவில்லையா. பேச்சை விடுத்து உன் ஆண்மையைக் காட்டு என்று கூறி அவனை கதையால் அடித்தான். சால்வன் ரத்தம் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான். உடனே தான் மறைந்துகொண்டு தன் மாயச் சக்திகளை ப்ரயோகம் செய்யத் துவங்கினான்.

ஒரு தூதன் கண்ணனிடம் ஓடிவந்து சால்வன் தங்கள் தந்தையைக் கட்டி இழுத்துக்கொண்டு போய்விட்டான் என்று கூற, கண்ணன் பாசத்தால் தடுமாறினான். பலராமனை ஒருவனால் அடக்க முடியுமா. அப்படியும் தந்தையைக் கொண்டுபோனானா என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே சால்வன் வசுதேவர் போன்ற ஒரு மாயை மனிதனைக் கொண்டு வந்தான்.

இதோ இவருக்காகத்தானே வாழ்கிறாய். முடிந்தால் இவரைக் காப்பாற்று என்று கண்ணனை மிரட்டிவிட்டு அந்த மாயா வசுதேவரின் தலையை வெட்டிவிட்டு விமானத்தில் ஏறிக்கொண்டான்.

கண்ணன் சிறிது நேரம் துக்கத்தில் ஆழ்ந்தான். பின்னர் மனம் தெளிந்து அனைத்தும் அசுர மாயை என்றுணர்ந்தான். அப்போது அங்கு அந்த தூதனையோ, வசுதேவரின் உடலோ தலையோ ஒன்றும் காணப்படவில்லை.

இவ்விடத்தில் கண்ணன் பாமரனைப்போல் கலங்கினான் என்று சொல்கிறார்கள். ஆனால் பூர்ணானந்த ஸ்வரூபனான கண்ணனுக்கு அது பொருந்தாது. அவன் தூய்மையான அன்பிற்கு வசப்பட்டவன் ஆதலால், இந்நிலையைக் கடக்க சில நிமிடங்களாயிற்று.
வசுதேவரின் அன்பு அத்தகையது. கண்ணனை மாயை எதுவும் செய்ய இயலாது.

கண்ணன் கடுங்கோபமுற்று விளையாடியது போதும் என்று முடிவெடுத்தான். சால்வனின் கவசங்கள், வில், தலையிலிருந்த சூடாமணி அனைத்தையும் தெறிக்கச் செய்தான்.

தன் கதையை சௌப விமானத்தை நோக்கிச் சுழற்றியடிக்க அது ஆயிரம்‌துண்டுகளாக உடைந்து கடலில் விழுந்தது. தரையில் இறங்கி வேகமாகத் தன்னை நோக்கி ஓடிவந்த சால்வனின் கரங்களை வெட்டினான். தலையை சக்ராயுதம் அறுத்தது.

ஊழிக்காலத்தின் காலதேவனைப்போல் விளங்கிய கண்ணனை வானிலிருந்து எழுந்த மங்கள ஒலியும் பூமாரியும் அமைதிப்படுத்தின. 

கண்ணன் தன் அமுதப் பார்வையால் துவாரகையை முன்போல் செல்வச் செழிப்புள்ளதாக்கினான். 

சால்வன் அழிந்தபோதும் துவாரகைக்கான ஆபத்து நீங்கவில்லை.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 22, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 522

அரசயோகியே! கண்ணன் செய்த இன்னொரு திருவிளையாடலைக் கூறுகிறேன் கேள்! என்று ஆரம்பித்தார் ஸ்ரீ சுகர்.

மிகவும் மகிழ்ந்து இன்முகத்துடன் கேட்கத்துவங்கினான் பரிக்ஷித்.

சிசுபாலனின் நண்பன் சால்வன். ருக்மிணியின் கல்யாணத்திற்காக சிசுபாலனுக்குத் துணை மாப்பிள்ளையாக வந்திருந்தான். அப்போது யாதவ சேனையால் அடித்து விரட்டப்பட்டான். அப்போது இப்புவியில் யாதவர்களே இல்லாமல் செய்வேன் என்று சபதமிட்டிருந்தான்.

அதற்காக தினமும் ஒரு பிடி மண்ணை மட்டும் உண்டு பரமேஸ்வரனை நோக்கி ஓராண்டு காலம் தவம் செய்தான்.

அவனது தவத்தில் மகிழ்ந்து ஓராண்டு முடிவில் அவனெதிரில் தோன்றி யாது வரம் வேண்டும் என்று கேட்டார் பரமேஸ்வரன். 

யாதவர்களுக்கு பயத்தை உண்டாக்கும் வண்ணம் எனக்கொரு விமானம் வேண்டும். அதற்கு தேவர், ராக்ஷஸர், கந்தர்வர், யக்ஷர், நாகர் போன்ற எவராலும் அழிவு வரலாகாது. அவ்விமானம் என் விருப்பம்போல் செல்லவேண்டும். என்று அடுக்கிக்கொண்டே போனான்.

தேவசிற்பியான மயன் சிவனின் கட்டளைப்படி இரும்பாலானதும், பலவித மாயச் சக்திகள் கொண்டதுமான ஸௌபம் என்ற விமானத்தை நிர்மாணம் செய்து கொடுத்தான்.

சால்வனின் விருப்பப்படி செல்லும் அவ்விமானம் இருள் சூழ்ந்ததாக இருந்தது. அதிலேறிக்கொண்டு துவாரகை சென்றான் சால்வன்.

கண்ணனும், பலராமனும் ஊரில் இல்லாதது சால்வனுக்கு சாதகமாயிற்று. துவாரகையை முற்றுகையிட்டு, அஸ்திரங்கள், சஸ்திரங்கள், கற்கள், இடி, பாம்புகள், ஆலங்கட்டிகள் ஆகிவற்றை மழைபோல் பெய்வித்தான். துவாரகை நகரத்தின் மாளிகைகள், தோட்டங்கள், மதில்கள், மைதானங்கள், காடுகள், அனைத்தையும் அழித்தான்.

சால்வனின் தாக்குதலால் துவாரகை தத்தளித்தது. 

அதைக் கண்ட பெருவீரனான ப்ரத்யும்னன் தேரிலேறிக்கொண்டு போர்க்களம் சென்றான்.

ஸாத்யகி, சாருதேஷ்ணன், சாம்பன், அக்ரூரர்,ஹார்திக்யன், பானுவிந்தன், சுகன், கதன், சாரணன், இன்னும் பல வில்லாளிகள், பெரும் படையுடன் சமருக்குக் கிளம்பினர்.

மயிர்க்கூச்செறியும் வண்ணம் மாபெரும் போர் நிகழ்ந்தது. 

ப்ரத்யும்னன் சால்வனின் மாயைகளை அழித்தான். சால்வன், அவனது வாகனங்கள், தளபதிகள் படைவீரர்கள் அனைவரையும் நூறு நூறு பாணங்களால் தாக்கினான்.

அந்த ஸௌப விமானமோ திடீரென்று தோன்றுவதும், மறைவதும், பல வடிவங்களில் தெரிவதும், ஒன்றாக காட்சி கொடுப்பதுமாக ஏமாற்றியது. விமானம் தென்படும் சமயத்தில் எல்லாம் அதைத் தாக்கினார்கள் யாதவர்கள். அவர்களது தாக்குதலால் நிலைகுலைந்துபோன சால்வன், இரும்பாலான கதையால் ப்ரத்யும்னனைத் தாக்கினான். ப்ரத்யும்னன் மூர்ச்சையாகி விழுந்தான். உடனே சாத்யகி அவனைப் போர்க் களத்திலிருந்து விலகி தனியிடம் அழைத்து வந்து மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினான்.

ப்ரத்யும்னனோ, என்னை ஏன் போர்க்களத்திலிருந்து தூக்கி வந்தீர்? இது பெரும் அவமானம். எல்லோரும் எள்ளி நகையாடுவர் என்று அரற்றினான்.

சாத்யகி, போர்க்களத்தில் தலைவனின் உயிர் காத்து ஆசுவாசப்படுத்துவதும் தேரோட்டியின் கடைமை. இப்போது மீண்டும் போருக்குச் செல்லலாம் வா. என்று கூறி அழைத்துச் சென்றான்.

புது உத்வேகத்துடன் போர்க்களம் புகுந்த ப்ரத்யும்னன் சிங்கத்தைப்போல் சால்வனின் படையை துவம்சம் செய்தான். இவ்வாறு யாதவர்களுக்கும் சால்வனின் படைகளுக்குமிடையே இருபத்தேழு நாள்கள் போர் நடைபெற்றது.

இதற்குள் இந்திரப்ரஸ்தத்தில் நிறைய துர்நிமித்தங்கள் தென்பட்டன. துவாரகைக்குதான் ஏதோ ஆபத்து என்று புரிந்துகொண்ட கண்ணன் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, July 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 521

உலகின் பேரரசராக அறிவிக்கப்பட்டார் தர்மபுத்திரர். கண்ணன் அங்கு சிலகாலம் தங்கியிருந்தான். பின்னர் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று துவாரகை திரும்பினான். 

ஹே! பரீக்ஷித்! இந்த ராஜஸூய யாகத்தைப் புகழ்ந்தவண்ணம் அனைத்து அரசர்களும் ஊர் திரும்ப துரியோதனனின் மனம் மட்டும் பொறாமைத்தீயால் வெந்துகொண்டிருந்தது.

ஜராசந்தனிடமிருந்து அரசர்கள் விடுபட்ட கதை, சிசுபால வதம் மற்றும் ராஜசூயயாகம் பற்றிய விஷயங்களைக் கேட்பவர்கள் அனைத்துப் பாவங்களினின்றும் விடுபடுவர். என்றார் ஸ்ரீ சுகர்.

கவனமாகக் கதை கேட்ட பரீக்ஷித் கேள்வி கேட்டான். அனைவரும் புகழும் வண்ணம் எவ்வாறு யாகம் சிறப்புற்றிருந்தது? துரியோதனனுக்கு மட்டும் ஏன் தீய எண்ணம்? என்றான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.
நன்று கேட்டாய் அரசனே! ராஜ சூய வேள்வியில் தர்மபுத்திரரின் உறவினர் அனைவரும் ஆளுக்கொரு கைங்கர்யத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றினர். பீமன் சமையலறையின் பொறுப்பை ஏற்றான். துரியோதனன் பொக்கிஷ அதிகாரியாகப் பணியேற்றுக்கொண்டான். சகாதேவன் பெரியோர்களை உபசரிக்கும் சேவையை ஏற்றான். நகுலன் யாகத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் சேகரித்துத் தரும் பொறுப்பை ஏற்றான். அர்ஜுனன் வந்திருந்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பை ஏற்றான். கண்ணன் வந்த அனைத்துப் பெரியவர்களுக்கும் பாதபூஜை செய்யும் பொறுப்பை ஏற்றான். த்ரௌபதி அன்னமிடும் வேலையை ஏற்றாள். தானங்கள் செய்யும் பொறுப்பு கர்ணனிடம் கொடுக்கப்பட்டது. ஸத்யகி, விகர்ணன், ஹார்திக்யன், விதுரர், பூரிசிரவஸ், ஸந்தர்தனன் ஆகியோர் ஆளுக்கொரு பணியை ஏற்றுச் செய்தனர்.

அனைவரும் யாகம் முடியும் வரை இன்முகமும், இன்சொல்லும் கூடியவர்களாய் விளங்கினர்.

சிசுபாலன் பகவானை அடைந்த பின்பு அனைவரும் கங்கைக்குச் சென்று அவபிருத ஸ்நானம் செய்தனர்.

அந்த ஊர்வலத்தில் அனைத்து மங்கல வாத்யங்களும் முழங்கிக்கொண்டு முன் செல்ல, காயகர்கள் பாட, நர்த்தகிகள் ஆடிக்கொண்டு சென்றனர்.

வரவேற்பு தோரணங்கள், யானைகள், குதிரைகள், படைகள், நன்கு அலங்கரித்துக் கொண்ட மக்கள், அனைத்து தேசத்தரசர்கள் அனைவரும் தர்மபுத்திரரின் பின்னால் அணிவகுக்க தேவர்களும் கந்தர்வர்களும் பூமாரி பெய்ய, அவ்வூர்வலம் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. 

சந்தனம், மாலைகள், நீர், வெண்ணெய், பால் ஆகியவற்றை ஒருவர்மேல் ஒருவர் பூசிக்கொண்டும் தெளித்துக்கொண்டு விளையாடிக்கொண்டே சென்றனர். 

இந்திரப்ரஸ்தத்தின் அந்தப்புரத்து ராணிகள் அனைவரும் தனித்தனிப் பல்லக்கில் வர, அவர்கள் மாமன் மகனான கண்ணனின் மனைவிகளால் நீராட்டப்பட்டனர்.

அரச குலத்தோர் ஜலக்ரீடை செய்து விளையாடினர். 

தர்மபுத்திரர் திரௌபதியுடன் தங்க ரதத்தில் ஏறி யாகமே உருக்கொண்டு வருவதுபோல் வந்தார். 

ருத்விக்குகள் அவபிருத ஸ்நானத்திற்கான சடங்குகளை செய்தபின் இருவரையும் கங்கையில் நீராட்டினர்.

அவர்களைப் பின்பற்றி அனைவரும் நீராடினர். பின்னர் அவர்கள் இருவரும் புத்தாடைகளும் ஆபரணங்களும் அணிந்துகொண்டு ருத்விக்குகளுக்கும் அந்தணர்களுக்கும் பல தானங்களை வழங்கி கௌரவித்தனர். ‌பின்னர் அனைவரும் உபசரிக்கப்பட்டு தர்மபுத்திரரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர். யாகத்தின் சிறப்பை எவ்வளவு பேசினாலும் அவர்களுக்குத் த்ருப்தி ஏற்படவில்லை. 

மற்ற அரசர்களுக்கு விடை கொடுத்த தர்ம புத்திரர் உற்றார் உறவினரையும் கண்ணனையும் பிரிய மனமின்றி சிலகாலம் தங்குமாறு வேண்டினார்.

கண்ணன் அவரது அன்பு வேண்டுகோளைத் தட்ட இயலாமல் தன் மனைவி, மக்கள், படைகள் அனைவரையும் துவாரகைக்கு அனுப்பிவிட்டுத் தான் மட்டும் தங்கினான்.

துரியோதனனோ யாகத்தின் சிறப்பை எண்ணி எண்ணி பொறாமைப் பட்டான். 

திரௌபதியின் அழகு, பொறுமை, அவள் கணவர்களை உபசரிக்கும் விதம், மற்றவர்களிடம் அன்புடன் பழகும் பாங்கு ஆகியவற்றைக் கண்டு காமத்தால் கலங்கினான். 

ஒரு நாள் தன் அடிமைகளுக்குக் கட்டளையிட்டுக்கொண்டே சபையினுள் வந்தான். அந்தச் சபை காண்டவ வனத் தீயிலிருந்து தம் இனத்தைக் காத்ததற்காக அசுரச் சிற்பியான மயன் நிர்மாணித்துக் கொடுத்ததாகும். பலவிதமான மாயத் தோற்றங்கள் கொண்டது. நீருள்ள இடம் பளிங்குத் தரை போலவும், பளிங்குத்தரை நீர் தளும்புவது போலவும் தோற்றம் காட்டுவது. கவனிக்காமல் பேசிக்கொண்டே விடுவிடுவென்று நடந்த துரியோதனன் தரை எது என்றறியாமல் குழம்பி நீரில் காலை வைத்து தலைகுப்புற விழுந்தான்.

அதைக் கண்டு தர்மபுத்திரர் அனைவரையும் எவ்வளவோ தடுத்தும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

கண்ணனோ அனைத்தையும் புன்முறுவலுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். யுக‌முடிவிற்கான தன் வேலையைத் துவங்கிவிட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, July 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 520

சேதி நாட்டரசன் தமகோஷனின் மகன் சிசுபாலன். இவனது தாய் வசுதேவரின் சகோதரியாவாள். பிறந்தது முதலே கண்ணனின் மீது காரணமின்றி வெறுப்பு கொண்டிருந்தான் சிசுபாலன்.

காரணம் ஜெய விஜயர்கள் ஸனகாதியரிடம் அபசாரப்பட்டு அசுரப்பிறவிகளாக அவதரித்தனர். மூன்று முறை அசுர ஜென்மா எடுத்து ஒவ்வொரு முறையும் பகவான் கையாலேயே வதமாக வரம் வேண்டியிருந்தனர்.

 முதல் முறை ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபுவாகப் பிறந்து பகவான் அவர்களை வதம் செய்ய வராஹமாகவும், நரஸிம்மராகவும் இரண்டு அவதாரங்கள் செய்தான். அடுத்த முறை இராவண கும்பகர்ணனாக அவதரித்தவர்கள் ஸ்ரீ ராமனின் கரங்களால் மடிந்தனர். இப்போது சிசுபால, தந்தவக்த்ரனாக அவதாரம் செய்திருக்கிறார்கள்.

கண்ணனை ஒவ்வொருவரும் பாராட்டுவதும், அக்ரபூஜை செய்வதும், பாத தீர்த்தம் தெளிப்பதும் சிசுபாலனுக்கு எல்லையற்ற கோபத்தை உண்டாக்கியது. 

அவன் பிறந்தபோதே கண்ணனால் கொல்லப்படுவான் என்பதை அறிந்த கண்ணனின் அத்தை ச்ருதகீர்த்தி (ச்ருதச்ரவா என்றும் அறியப்படுகிறாள்) பிள்ளைப்பாசத்தால் கண்ணனிடம் தன் மகனைக் கொல்லக்கூடாதென்று வேண்டினாள். கண்ணனோ, விதியை மாற்ற இயலாது அத்தை. வேண்டுமானால், இவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுப்பேன். என்று வாக்களித்தான். 

சிசுபாலன் இயற்கையாகவே அசுர ஸ்வபாவம் கொண்டவனாகவே வளர்ந்தான். இப்போது சபை நடுவில் எழுந்து ஆத்திரத்தால் மதிகெட்டுப் போய் கத்தத் துவங்கினான்.

காலம் மிகவும் வலிமை பொருந்தியது என்று வேதம் கூறுவது உண்மையாயிற்று. இவ்வளவு அறிவார்ந்த பெரியவர்கள் இருந்தும் சிறுபிள்ளைத்தனமான பேச்சால் அனைவரும் தடுமாறுகின்றனரே. அனைவரும் அறிவிற்சிறந்தவர்தாமே. கண்ணன் முதல் மரியாதைக்குரியவன் என்று சிறுவனான ஸஹதேவன் கூறினால் அதைப் போய் ஏற்கிறீர்களே. 

தவம், உயர்ந்த சீலம், விரதங்கள் ஆகியவற்றால் ப்ரும்மஞானம் பெற்ற ஞானிகள் இருக்கும் சபையில், திக்பாலர்களும், இந்திரனும் அலங்கரிக்கும் இச்சபையில் இந்த இடையனுக்கென்ன முதல் மரியாதை வேண்டியிருக்கிறது? அதற்கேற்றவனா இவன்? உயர்ந்த வேள்வியின் அவிசை காக்கைக்குப் போடுவார்களா?

 வர்ணாசிரம தர்மத்தையோ, எந்த விதமான வாழ்வியல் தர்மங்களையோ பின்பற்றாமல் கடைமைகள் அனைத்தையும் விட்டு விருப்பம்போல் வாழும் தற்குறி இவன். 

இவனது குலத்தில் ஒருவரும் அரசனாக இயலாதவாறு யயாதியால் சபிக்கப்பட்டவர்கள். ஞானிகளும் ரிஷிகளும் வாழும் இந்நாட்டை விட்டு எதிரிக்கு பயந்து திருடனைப்போல் கடலின் நடுவில் வசிக்கப் புகுந்தவன். 

நரியின் ஊளையைச் சிங்கம் அலட்சியம் செய்வதுபோல் கண்ணன் எதையும் கவனிக்காமல் அமர்ந்திருந்தான். அதைக் கண்டு சிசுபாலனுக்கு இன்னும் கோபம் வந்தது.

இறை நிந்தனையைப் பொறுக்க இயலாத சாதுக்கள் காதுகளைப் பொத்திக்கொண்டு சபையினின்று வெளியேறினர்.

பகவானையும், அவனைச் சரணடைந்த பக்தர்களையும் நிந்திப்பதைக் கேட்டும் அவ்விடம் விட்டு அகலாதவனின் புண்ணியங்கள் அனைத்தும் அக்கணமே அழிகின்றன. 

அப்போது பாண்டவர்களும், மற்ற அரசர்களும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு சிசுபாலனைத் தாக்குவதற்காக எழுந்தனர். சிசுபாலன் தானும் போருக்குத் தயாராகி வாளையும் கேடயத்தையும் எடுத்தான். கண்ணன் அனைவரையும் கையமர்த்தி அடக்கினான். 

பின்னர், தன் சக்ராயுதத்தை ஏவ, அது சிசுபாலனின் சிரத்தை கண்ணிமைக்கும் கணத்தில் கரகரவென அறுத்துத் தள்ளியது. 

சபையில் பெருங்கூச்சலும், குழப்பமும் விளைந்தது. மக்கள் அஞ்சினர். சிசுபாலனுடன் நட்பு கொண்டு வந்த அரசர்கள் அனைவரும் சபையை விட்டுத் துள்ளி ஓடி மறைந்தனர்.

சிசுபாலனின் உடலினின்று ஒரு பேரொளி எழுந்தது. நேராக கண்ணனிடம் வந்து அனைவரும் பார்க்கும்போதே அவனது திருமேனியில் ஐக்கியமாயிற்று.

கண்ணன் கையால் வதம் செய்யப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் வைகுண்டம் செல்பவை. மேலும் சிசுபாலனாக வந்த ஜெயன் தன் மூன்று அசுரப் பிறவிகள் முடிந்து கைங்கர்யத்திற்காக மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டியவனே.

அப்படியிருக்க அவனது ஆத்மஜோதி கண்ணனின் திருமேனிக்குள் ஐக்கியமானது எனில் வைகுண்டம் உள்பட ஈரேழு பதினான்கு லோகங்களும், கண்ணனின் திருமேனிக்குள் அடக்கம் என்பது இந்நிகழ்வால் உறுதியாகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 519

ராஜசூய யாகத்திற்கு தேவேந்திரன், திக்பாலர்கள், யக்ஷர்கள், ஸித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், முனிவர்கள், ராக்ஷஸர்கள், கருடன், கின்னரர்கள், சாரணர்கள், அரசர்கள், அவர்களின் குடும்பங்கள் அனைவரும் வந்திருந்தனர். வேள்விக்கான பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

கண்ணனின் மேற்பார்வையில் யாகம் நன்கு நடந்ததில் வியப்பேதுமில்லை. அனைவரையும் தர்மபுத்ரர் மிகவும் சிறப்பாக உபசரித்தார்.

வேள்வியின் இறுதிநாள் ஸுத்யை என்றழைக்கப்படும். அன்று அக்ரபூஜைக்குத் தகுதியானவர் யாரென்ற கேள்வி எழுந்தது. எல்லோரும் விழிப்பதைக் கண்டு சஹாதேவன் கூறத்துவங்கினான்.

சாத்வீகரான பகவான் கண்ணனே முதல் பூஜைக்கு ஏற்றவர். எல்லா தேவர்களின் இருப்பிடமாவார். அனைத்து உயிர்களின் இருப்பிடமாவார். வேள்வி, மந்திரம், ரித்விக்குகள், செய்முறை, ப்ரசாதம் அனைத்தின் ஸ்வரூபமாகவும் கண்ணனே விளங்குகிறார்.

உலகமே இவரது வடிவம். பிறப்பற்றவர். ஆதாரமற்றவர். சிலந்தி தன்னிடமிருக்கும் பொருளைக் கொண்டே வலையைப் பின்னி அதில் நடமாடி பின் தனக்குள் இழுத்துக் கொள்வது போல் இவ்வுலகைப் படைத்து காத்து அழிப்பவர் கண்ணனே.

அனைவரையும் விடப் பெரியவர். கண்ணனுக்குச் செய்யும் மரியாதை உண்மையில் இங்குள்ளவர்கள் உள்பட உலகிலுள்ள அனைத்துயிர்க்கும் செய்யும்‌ மரியாதையாகும்.

நாம் செய்யும் தான தர்மங்கள் அளப்பரிய பலனைத் தரவேண்டுமாயின் எங்கும் நிறைந்த இறையான கண்ணனுக்கே தரப்படவேண்டும்.

என்று கூறிவிட்டு அமர்ந்தான் சஹதேவன். அதைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து ஆமோதித்தனர்.

அனைவரின் கருத்தையும் அறிந்த தர்மபுத்திரர் கண்ணனை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். கங்கை தோன்றும் திருவடியைத் தூய நன்னீரால் நீராட்டினார்.

 அந்நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டு தம் குடும்பத்தவர், மந்திரிகள் அனைவர் தலையிலும் தெளித்தார். மஞ்சள் பட்டாடையும், ஏராளமான ஆபரணங்களும் அணிவித்து அவ்வழகனைக் காண இயலாமல் கண்களில் நீர் திரையிடச் செயல் மறந்து நின்றார். அனைவரும் பாராட்டி ஜெய கோஷமிட்டனர்.

இவையனைத்தையும் கண்டு அனைவரும் ஆனந்தமுற்றிருந்த வேளையில் ஒரே ஒருவனுக்கு மட்டும் கோபம் தலைக்கேறிக்கொண்டே சென்றது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, July 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 518

அரசர்கள் கூறினர்.
இறைவா! தேவதேவா! அழிவற்றவரே! உமக்கு நமஸ்காரம். உலகியல் இன்பங்களில் மனம் வெறுத்துப் போன எங்களைக் காப்பாற்றுங்கள். இந்த ஜராசந்தனை நாங்கள் வெறுக்கவில்லை. அரசை இழப்பதும் தங்கள் அருளாலேயே. ராஜபோகம் நிலையான ஒன்றில்லை. நாங்கள் முன்பு பூமியை வெல்ல எண்ணி பல்வேறு போர்கள் புரிந்தோம். எங்களுக்குள் சண்டையிட்டு அப்பாவி மக்களைக் கொன்றோம். காலம் எங்களின் திமிரை அடக்கி செல்வச் செழிப்பையும் அழித்துவிட்டது. பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் எமக்கு தமது திருவடி நினைவு அகலாதிருக்கட்டும். உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

கருணைக்கடலான கண்ணன் அவர்களை தயையுடன் நோக்கினான்.

எல்லா உலகிற்கும் ஆத்மாவான என்னிடம் உங்கள் அனைவர்க்கும் நீங்காத பக்தி உண்டாகும்.
செல்வமும் ஆளுமையும் செருக்கைத் தருபவை. அழிவுப்பாதையில் அழைத்துச் செல்பவை. 

கார்த்தவீர்யார்ஜுனன், நகுஷன், ராவணன், நரகாசுரன் போன்றவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியிருந்தபோதிலும் செல்வச் செருக்கால் அழிக்கப்பட்டனர்.

நீங்கள் அனைவரும் என்னையே மனத்தில் நிறுத்தி வேள்விகளால் என்னை வழிபட்டு சமநோக்குடன் வாழ்வீராக. பின்னர் ஆத்மநிலையில் மனத்தைச் செலுத்தி என்னையே வந்தடைவீராக. என்றான்.

பின்னர் அவர்கள் அனைவரையும் நன்முறையில் நீராடச் செய்து, புத்தாடைகள் அணியச் செய்து, அவர்களுக்கு சேவகம் செய்ய பணியாள்களை அமர்த்தினான். பின்னர் சஹதேவன் அவர்கள் அனைவரையும் புகழ்ந்து பாராட்டி, வணங்கி தேர்களில் ஏற்றி அவரவர் நாடுகளுக்கு அனுப்பிவைத்தான்.

அவர்கள் கண்ணனையே நினைத்துக்கொண்டு தத்தம் நாட்டிற்குச் சென்றனர். கண்ணன் கூறியபடி சோம்பலின்றி நல்லாட்சி செய்தனர்.

கண்ணன் பீமன், அர்ஜுனன் மூவரும் சஹதேவனிடம் விடை பெற்றுக்கொண்டு இந்திரப்ரஸ்தம் திரும்பினர். அர்ஜுனனும், பீமனும் தர்ம புத்திரரிடம் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினர். கண்ணனின் கருணையால் ஜராசந்தன் மடிந்ததை அறிந்த தர்மபுத்திரர் செய்வதறியாமல் கண்களில் கண்ணீர் உகுத்து நின்றார்.

பின்னர் கண்ணனிடம், தாங்களே மூவுலகிற்கும் தலைவர். எனவே தங்கள் உத்தரவை ஏற்று அனைவரும் செயல்படுவதே சிறந்தது. அஹங்காரத்துடன் இருக்கும் நாங்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். எங்கள் ஆணையை நீங்கள் ஏற்பது தமக்குத் தகாது. தங்கள் பேராற்றல் உண்மையில் வளர்ச்சியோ தேய்மானமோ அற்றது. நிலையானது.
என்றார்.

பின்னர் கண்ணனின் அனுமதியுடன் ராஜசூய வேள்விக்கான ஒவ்வொரு ஏற்பாட்டையும் திறம்படச் செய்தார் தர்மபுத்திரர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 517

அந்தண வேடத்திலிருந்த கண்ணன், அர்ஜுனன், பீமன் மூவரையும் பார்த்து‌ ஜராசந்தன் அந்தணர்களே! நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள். நீங்கள் கேட்பது என் தலையே ஆனாலும் தட்டாமல் தருவேன் என்றான்.
உடனே கண்ணன் பேசத் துவங்கினான். 

அரசே! நாங்கள் உம்மிடம் போரை விரும்பி வந்தோம். நீங்கள் விரும்பினால் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மல்யுத்தம் செய்யம் செய்யலாம். இவன் குந்தியின் மகன் பீமன். இவன் அவனது இளவல் அர்ஜுனன். நான் உமது பகைவனான கண்ணன். என்றான்.

அதைக்கேட்டு உரக்கச் சிரித்த ஜராசந்தன், மூடர்களே! போர் வேண்டுமா போர்? இப்போதே நான் தயார். கண்ணா! நீ ஒரு கோழை. என்னைக் கண்டு பயந்து கடலுக்குள் நகரம் அமைத்து ஓடி ஒளிந்தவன்‌. உன்னுடன் போரிடமாட்டேன். 

அர்ஜுனன் மிகவும் சிறியவன். எனக்கொத்த உடல் பெற்றவன் அல்லன். அவனுடனும் போர் செய்ய மாட்டேன். எனக்கேற்ற வீரன் பீமனே. இவனுடன் போர் செய்வேன்‌. என்று கூறி கண்ணைக் காட்ட, பணியாள் இரண்டு கதைகளை எடுத்துவந்தான். 

ஒன்றை பீமனிடம் கொடுத்த ஜராசந்தன், நகருக்கு வெளியே சென்று போர் புரியலாம். இங்கே போர் செய்தால் தேவையில்லாமல் மக்கள் அஞ்சுவர். என்று கூறிக்கொண்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு கிரிவிரஜத்தின் கோட்டை வாசலுக்கு வெளியே வந்தான்.

மேடுபள்ளமற்ற சமதரையில் இருவரும் மலைகளைப் போல்‌ மோதிக்கொண்டனர். இருபுறமாகவும் சுழன்று சுழன்று பயமின்றி இருவரும் போர் செய்யும் காட்சி கண்களுக்கு விருந்தாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடியின் வேகம் தாங்காமல் கதைகள் சிதறின.

பின்னர் இருவரும் கை முஷ்டிகளால்‌ குத்திக்கொண்டனர். ஒவ்வொரு அடியும் இடிபோல் கேட்டது. இருவரும் சளைக்காமல் சரிசமமாகச் சண்டையிட்டனர். எவ்வளவு சண்டையிட்டபோதும் அவர்களால் ஒருவரை ஒருவர் வெற்றி காண இயலவில்லை. 

அவர்கள் பகல் நேரத்தில் போர் செய்வதும் இரவு நேரத்தில் ஜராசந்தனின் மாளிகையில் தங்கி நண்பர்களாக அன்புடன் பழகுவதுமாக இருந்தனர். இருபத்தேழு நாள்கள் இவ்வாறு ஓடிற்று.

ஒருநாள் பீமன் கண்ணனிடம், கண்ணா! என்னால் ஜராசந்தனைப் போரில் வெல்லமுடியாதன்று தோன்றுகிறது என்றான். கண்ணன் அவனைக் கொல்லும் வழியை யோசித்தான்.

ஜராசந்தனின் பிறவியின் ரகசியம்‌ அறிந்த கண்ணன் அன்றைய மல்யுத்தத்தில் பீமன் பார்க்கும்படியாக ஒரு குச்சியை இரண்டாகப் பிளந்து வெவ்வேறு திசைகளில் தூக்கியெறிந்தான்‌. அதைப் புரிந்துகொண்ட பீமன் ஜராசந்தனின் உடலைக் கிழித்து வெவ்வேறு திசைகளில் வீசியெறிந்தான். அதைக் கண்ட மக்கள் பயந்தனர். கண்ணனும் அர்ஜுனனும் பீமனைக் கட்டியணைத்துப் பாராட்டினர்.

ஜராசந்தனின் மகன் சஹதேவன் ஓடிவந்து கண்ணனைச் சரணடைந்தான். கண்ணன் அவனை மகதத்தின் அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். பின்னர் சிறையிலிருக்கும் அரசர்களை விடுவிக்கக் கோரினான்.

மலைப் பள்ளத்தாக்கில் சிறை வைக்கப்பட்டு அழுக்கடைந்த மேனியுடன் விளங்கிய இருபதாயிரத்து எண்ணூறு அரசர்களும் விடுவிக்கப்பட்டனர். 

கண்ணன் சங்கு, சக்கரம், கதை, தாமரைமலர் ஏந்திக்கொண்டு மார்பில் ஸ்ரீ வத்ஸம், காதுகளில் மகரகுண்டலம், கழுத்தில் கௌஸ்துபமணி, வனமாலை மற்றும் மஞ்சள் பட்டாடையுடன் அழகே உருவாக அவர்களுக்கு காட்சி கொடுத்தான். 

அப்படியே கண்ணனை உண்பவர் போலவும், ருசிப்பவர் போலவும், அணைத்துக் கொள்வது போலவும் அன்பு மிகுந்து அவனைக் கண்டனர் அவ்வரசர்கள்.

பின்னர் கண்னனை வாயாரத் துதித்தனர்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 516

ஒரு நாள் தர்மபுத்ரர், பெரியவர்கள் அனைவரும் கூடியிருந்த சபையில் கண்ணனிடம்‌ கூறினார்.

கோவிந்தா! வேள்விகளில் சிறந்தது ராஜசூயம். அவ்வேள்வியால் தம்மை ஆராதிக்க விரும்புகிறேன். அதைத் தாங்கள்தான் நடத்தித் தரவேண்டும். 

தங்கள் திருவடிகளை தியானிப்பவரும், புகழைக் கூறுபவரும் மனத்தூய்மை பெற்று, இவ்வுலக வாழ்வின் நலன்கள் அனைத்தையும் பெறுவதோடு முக்தியும் அடைவர். இங்குள்ள மக்கள் அனைவரும் தங்கள் திருவடி மஹிமையை உணர வேண்டும். தங்களை வழிபடுவதன் நன்மையை கௌரவர்கள் உள்பட அனைத்து தேசத்தவரும் அறியவேண்டும். 

நீங்கள் வேறுபாடுகள் அற்றவர். ஆனந்த ரூபம். தங்களைத் தொழுபவர்க்கும் மற்றவருக்கும் வித்தியாசம் பார்க்காதவர். ஆனால், உமது அருள் வேண்டுபவர்க்கு வேண்டியபடி கிட்டும்‌. அதை அறிந்தவர்கள் தம்மை விட்டு பிற விஷயங்களை நாடமாட்டார்கள்.

என்றார்.

பகவான் கண்ணன் தனக்கே உரிய மந்தஹாஸத்துடன் பதிலிறுத்தான்.

எப்போதும் வெற்றியடைபவரே! தங்கள் எண்ணம் மிகவும் நல்லது. இதனால் உங்கள் புகழ் உலகெங்கிலும் பரவும். ரிஷிகள், அந்தணர்கள், மூதாதையர், தேவர்கள், நல்லோர், மற்றும் அனைத்து உயிர்கட்கும் இவ்வேள்வியானது நன்மைதரும் விஷயமாகும்.

ஆனால், தாங்கள் அனைத்து அரசர்களையும் வெற்றி கொண்டு அல்லது நட்பாக்கிக்கொண்டு பின்னர் இவ்வேள்வியைச் செய்யலாம். உங்கள் சகோதரர்கள் தேவாம்சங்களாகத் தோன்றியவர்கள். நீங்கள் என்னைத் தங்கள் புலனடக்கத்தால் வசப்படுத்திவிட்டீர்.

என்றான்.

அதைக் கேட்ட யுதிஷ்டிரன், உடனே தனது தம்பியர்க்கு திக்விஜயம் செய்து வர ஆணையிட்டார்.

தென்திசையில் சகாதேவன் ஸ்ருஞ்ஜய வீரர்களுடனும், மேற்கு திசையில் நகுலன் மத்ஸ்ய தேசத்து வீரர்களுடனும், வடதிசையில் அர்ஜுனன் கேகய வீரர்களுடனும், கிழக்கில் பீமன் மத்ரதேச வீரர்களுடனும் சென்றனர்.

சில நாள்களில் நால்வரும் அனைத்து திக்குகளையும் வென்று பெரும்பொருளைத் திரட்டி வந்தனர். 

ஜராசந்தனை மட்டும் வெல்லாமல் திரும்பியதைக் கண்டு தர்மபுத்ரர் சிந்தையில் ஆழ்ந்தார். மனக்கிலேசம் போக்கும் மாதவன், அவரிடம் உத்தவன் கூறிய உபாயத்தைக் கூறினான்.

பின்னர் கண்ணன், பீமன், அர்ஜுனன் மூவர் மட்டும் அந்தணர் வேடம்‌பூண்டு கிளம்பினர்.

கிரிவிரஜ நகரம் சென்று தினமும் ஜராசந்தன் அதிதிகளை உபசரிக்கும் வேளையறிந்து அந்நேரத்தில் அவனது அரண்மனைக்குச் சென்றனர்.

அந்தணர்களை மதிக்கும் ஜராசந்தன், அவர்களைக் கண்டதும் வரவேற்று யாதுவேண்டும் என்று கேட்டான். 

அரசே! தங்களிடம் ஒன்றைப் பெறவேண்டி அதிதிகளாக வந்தோம். 
பொறுமையுள்ளவர்க்கு பொறுக்கத் தகாதது ஏதுமில்லை. தீயோர்க்கு செய்யத்தகாத செயல் ஏதுமில்லை. வள்ளல்களால் வழங்கமுடியாததொன்றில்லை. எல்லாரிடமும் சமநோக்கு உள்ளவர்க்கு இவன் வேற்றாள் என்ற எண்ணமில்லை.
நிலையற்ற இவ்வுடலைக் கொண்டு நிலையான புகழை அடையத் தவறுபவனின் பிறவி வீணாகும்.
அரிச்சந்திரன், ரந்திதேவன், சிபி ஆகியோர் நிலைத்த புகழைப் பெற்றவராவர்.

ஜராசந்தன் வந்தவர்களின் பேச்சுவழக்கு, நடை, உடற்கட்டு, வில்லின் நாண்கயிற்றால் காய்த்துப்போன மணிக்கட்டு ஆகியவற்றைக் கண்டு இவர்கள் யாராயிருக்கும் என்று யோசிக்கலானான். பின்னர், இவர்கள் யாராயினும் அந்தணர் வேடமிட்டு வந்திருப்பதால் என் உயிரைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று எண்ணிக்கொண்டான்.

மஹாவிஷ்ணு அந்தண வேடமிட்டு வந்து இந்திரன் விரும்பிய செல்வத்தை பலியிடமிருந்து பறித்தார். ஆனால், பலி அழியாப் புகழ் பெற்றார். மஹாவிஷ்ணு என்றறிந்தும், குரு சுக்ராசாரியார் உணர்த்தியும் தானம் அளித்தார். அவ்வாறே நானும் இவர்கள் கேட்பதைக் கொடுப்பேன் என்று எண்ணிக்கொண்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 515

கண்ணன் பெரியவர்களின் அனுமதி பெற்று பயணத்திற்குத் தயாரானான். மனைவிகள், மக்கள், தேவையான கருவிகள் எல்லாவற்றையும் முதலில் கிளப்பினான். பின்னர் தான் தனியாகத் தேரில் கிளம்பினான். அவனைத் தொடர்ந்து நால்வகைப் படையும் கிளம்பிற்று. 

செல்லும் வழியில் ஆங்காங்கே தங்குவதற்கு விளாமிச்சை வேரால் ஆன கூடாரத் திரைகள், படுகைகள், கம்பளிகள், ஆடைகள் ஆகியவற்றை ஒட்டகம், எருது, கழுதைகள், எருமைகள் பெண்யானை ஆகியவற்றின் மீது ஏற்றிச் சென்றனர்.

ஒரு மக்கள் கடலே நகர்ந்து செல்வதுபோல் இருந்தது. 

நாரதர் கண்ணனை வணங்கி வான்வழிச் சென்றார். கண்ணன் வந்திருந்த தூதுவனிடம், அரசர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல். விரைவில் வந்து ஜராஸந்தனைக் கொல்வேன். என்று கூறியனுப்பினான்.

ஆனர்த்தம், ஸௌவீரம், மருப்ரதேசம், குருக்ஷேத்ரம் ஆகியவற்றையும், நதிகள், மலைகள், பல நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றையும் தாண்டிச் சென்றது கண்ணனின் படை.

த்ருஷத்வதி, ஸரஸ்வதி ஆகிய ஆறுகளைக் கடந்து இந்திரப்ரஸ்தம் வந்தடைந்தனர்.

தர்மபுத்ரன் கண்ணனை உபாத்யாயர்களும் நண்பர்களும், புடைசூழ முறைப்படி வரவேற்றார்.
வேதகோஷங்கள், வாத்யங்கள் முழங்க பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்தார் யுதிஷ்டிரர்.

கண்ணனை ஆரத்தழுவி மகிழ்ச்சியுற்றார். கண்களில் நீர் பொங்க, உடல்‌பூரிக்க உலக மரியாதைகளை மறந்தார். பீமன், அர்ஜுனன் அனைவரும் கண்ணனைக் கட்டித் தழுவிக்கொண்டனர். நகுலனும் சகாதேவனும் வணங்கி நின்றனர்.

கண்ணனை வரவேற்க இந்திரப்ரஸ்த நகரம்‌ மிகச் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைவரும் நீராடி, புத்தாடை உடுத்தி, ஆபரணங்களும், மாலைகளும் அணிந்துகொண்டு உலா வந்தனர். கண்ணன் மீது பூமாரி பொழிந்தனர். அனைத்து இடங்களிலும் தீப வரிசை ஒளிர்ந்தது.

கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் கண்ணனைக் காணும் ஆர்வத்துடன் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். கண்ணன் அவர்கள் அனைவரையும் புன்னகையுடன் நோக்கினான்.

குந்தி திரௌபதியுடன் முன் சென்று வரவேற்றாள். கண்ணனைக் கட்டியணைத்துக்கொண்டாள். மாளிகைக்குள் நுழைந்ததும் ஆனந்தத்தால் தர்மபுத்ரர் முறைகளை மறந்தார்‌. பிரமித்துப் போய் செயலற்று நின்றுகொண்டிருந்தார்.

திரௌபதியும், சுபத்ரையும் கண்ணனின் மனைவிகள் அனைவரையும் உபசரித்தனர்.

யுதிஷ்டிரன் கண்ணனை மகிழ்விப்பதற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தார்.

தன் படையுடன் இந்திரப்ரஸ்தத்தில் சில மாதங்கள் தங்கிய கண்ணன் அர்ஜுனனுடன் ரதத்தில் ஏறி அடிக்கடி நகர் வலம் வந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, July 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 514

துவாரகையின் சுதர்மா என்ற சபைக்கு நாரதர் எழுந்தருளினார். அவரை வரவேற்று உபசரித்து ஆசனம் கொடுக்கப்பட்டது. 
அவரிடம், 
மூவுலகங்களிலும் நடந்து வரும் நிகழ்வுகள்‌ என்ன? அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் உள்ளனவா? உங்களுக்குத் தெரியாத விஷயம் எதுவுமில்லையே. பாண்டவர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதாவது செய்தி உண்டா? என்று கேட்டான் கண்ணன். 

நாரதர் கண்ணனைப் பார்த்துச் சிரித்தார்.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனே! அனைத்துலகையும் படைத்துக் காக்கிறீர்கள். ப்ரும்மா முதலானவர்களும் தங்களது மாயைக்கு ஆட்பட்டவர்களே. விறகினுள் ஒளிந்திருக்கும் நெருப்பைப்போல் நீங்கள் அனைத்துயிர்களுக்குள் மறைந்து நிற்கிறீர்கள். தங்கள் மாயையின் சக்தியைப் பலமுறை கண்டதால் ஒன்றுமறியாதவர் போல் நீங்கள் என்னைக் கேட்பது வியப்பளிக்கவில்லை.

பொய்யான ப்ரபஞ்சத்தை உண்மைபோல் விளங்கச் செய்யும் உம்மைப் பன்முறை வணங்குகிறேன். 

பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஜீவனுக்கு விளையாட்டாக மாயையை விலக்கி ஞான தீபமேற்ற வல்லவர் தாங்கள். 
எனினும் தாங்கள் கேட்டதால் கூறுகிறேன்.

 தங்களின் அத்தை மகனான யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தால் தங்களை ஆராதிக்க விரும்புகிறார். அதற்கு தங்களது அனுமதியை எதிர் பார்க்கிறார்.

தேவர்களும், புகழ் மிக்க அரசர்களும் அவ்வேள்வியில் பங்கேற்கவேண்டும். 

பரப்ரும்மமான தங்கள் குணங்களைக் கேட்பதாலும், நாமங்களைப் பாடுவதாலும், தங்களது திருவுருவைச் சிந்திப்பதாலும், எப்படிப்பட்ட கீழ்நிலையில் இருப்பவரும் கரையேறுகின்றனர். அப்படியிருக்க நேரில் கண்டு தொழுபவர் தூய்மைபெற்று நற்கதியடைவதில் வியப்பென்ன?

தங்களது புகழ் அனைத்து உலகங்களிலும் பரவியுள்ளது. தங்கள் திருவடி நீர் வானுலகில் மந்தாகினி என்ற பெயரிலும், புவியில் கங்கை என்றும் பாதாளத்தில் போகவதி என்ற பெயரிலும் பாய்ந்து அனைவரையும் பவித்ரமாக்குகிறது.

நாரதர் கூறியதைக் கேட்ட கண்ணன் சபையோரை ஆலோசனை வேண்டினான்.

ஜராசந்தனிடம் போர் புரிவதா? அல்லது ராஜசூயத்திற்குச் செல்வதா? எதைச் செய்யலாம் என்று கேட்டான்.

சபையோர் அனைவரும் ஜராசந்தனிடம் யுத்தம் செய்யலாம் என்று அபிப்ராயம் கூறவே, கண்ணன் உத்தவனைப் பார்த்தான். 
கண்ணனின் பஹிர்ப்ராணன் (உடலுக்கு வெளியில் உலாவும் உயிர்) போல் விளங்கும்‌ உத்தவன், கண்ணனின் எண்ணத்தை நன்கறிவான். எனவே அதற்கேற்ப பேசத் துவங்கினான்.

இறைவா! நாரதர் கூறியபடி தங்கள் அத்தை மகனுக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.‌ அதே சமயம் ஜராசந்தனால்‌ துன்புற்று தங்களைச் சரணடைந்த அரசர்களைக் காப்பதும் அவசியமாகிறது.

எல்லா திக்குகளையும் வென்று அனைத்துலகையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருபவர்தான் ராஜசூய வேள்வி செய்ய இயலும். எனவே ஜராசந்தனை வென்று ராஜசூயம் நடத்தலாம். அவனை வதம்‌ செய்தால் அரசர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும். 
ஜராசந்தனை படைகளைக் கொண்டு வெல்ல இயலாது. ஒருவருக்கொருவர் மல்யுத்தம் செய்தே அவனைக் கொல்ல இயலும். அவனது பிறவி ரகசியம் அறிந்தவர்களாலேயே அதைச் சாதிக்க இயலும்.

துஷ்டனானாலும் அவன் அந்தணர்களைப் பூஜிப்பவன். அந்தண உருவத்தில் சென்று மல்யுத்தத்தை யாசகமாக வேண்டினால் மறுக்காமல் வருவான். தங்கள் ஆசியுடன் பீமன் அவனுடன் போர் செய்தால் நிச்சயம் வெல்வான்.

ப்ரும்மா முதலிய தேவர்களை நிமித்தமாகக் கொண்டு உலகின் காரியங்களை நிகழ்த்துகிறீர்கள். அதேபோல் பீமனை நிமித்த காரணமாக வைத்து ஜராசந்தனைக் கிழித்துப் போடச் செய்யுங்கள்.

கஜேந்திரனை விடுவித்தீர்கள். ராவணனைக் கொன்று, அன்னை சீதையை விடுவித்தீர்கள். கம்சனைக் கொன்று தங்கள் பெற்றோரை விடுவித்தீர்கள். நரகாசுரனை வென்று இளவரசிகளைத் தங்கள் அரசிகளாக்கினீர்கள். ஜராசந்தனை அழிப்பது தங்களுக்கொரு விளையாட்டே ஆகும். இரண்டு காரியங்களைச் சேர்த்து செய்யுமாறு காலம் அனுகூலமாக இருக்கிறது என்றார் மதியூகியான உத்தவர்.

உத்தவரின் இந்த யோசனை அனைவர்க்கும் பிடித்துப்போக, நன்று நன்று அப்படியே செய்யலாம் என்று கொண்டாடினர்.

அனைத்தையும் நிகழ்த்தப்போகும் கண்ணனோ அமைதியாகச் சிரித்துக்கொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 513

கண்ணனின் அன்றாட வேலைகளை விவரித்துக் கூறுகிறார் ஸ்ரீ சுகர்.

கோழி கூவும் ப்ரும்ம முஹுர்த்த நேரத்தில் அன்றாடம்  எழுவான் கண்ணன். அவனைப் பிரிய இயலாமல் அவனது மனைவிகள் கோழிகளைச் சபிப்பர்.

கை கால் கழுவி, ஆசமனம் செய்து, ஆத்ம ஸ்வரூபத்தை த்யானம் செய்வான்.


ஆத்ம ஸ்வரூபம் என்பது தான், பிறர் என்ற வேற்றுமையற்றது. எங்கும்‌ பரவி நிற்பது. தனித்து விளங்குவது. அழிவற்றது. புலன்களுக்கு எட்டாதது. தானே ஒளிர்வது. தொட இயலாதது. ஆனந்தமே வடிவானது. இன்னதென்று வர்ணிக்க இயலாதது. அதை ப்ரும்மம் என்கின்றனர். அதைத்தான் கண்ணன் தியானம் செய்கிறான்.

பின்னர் நீராடித் தூய வெண்ணாடை அணிந்து  ஸந்தியாவந்தனம் போன்ற கடைமைகளைச் செய்கிறான். 

பின்னர் சூரியனை வணங்கி தேவ ரிஷி, பித்ரு தர்ப்பணங்களைச் செய்கிறான். பின்னர் வயது முதிர்ந்த அந்தணர்களை வணங்கி அவர்களுக்கு பட்டால் அலங்கரிக்கப்பட்டு கொம்புகளில் வெள்ளிக் குமிழ் பொருத்திய எண்ணற்ற பசுக்களை தானம் செய்கிறான்.

தன் அம்சங்களான அனைவரையும் வணங்குகிறான். 
பின்னர் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறான்.

பின்னர் கண்ணாடியில் தன்னையும், பசு, ரிஷபம், அந்தணர்கள், தெய்வங்களின் விக்ரஹங்கள் ஆகியவற்றை தரிசனம் செய்கிறான். பின்னர் நகர, மற்றும் கிராம மக்களைக் கண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கிறான்.

அதற்குள் தேர் தயாராகி வரும்.
சாரதியின் கையைப் பிடித்துக்கொண்டு சூரியனைப்போல் ரதத்தில் ஏறுகிறான். உத்தவரையும் அழைத்துக் கொண்டு  ஸுதர்மா என்றழைக்கப்படும் தேவசபைக்குச் செல்கிறான்.

ஒளி பொருந்திய அச்சபையில் தனக்கான ஒரு உயர்ந்த ஆசனத்தில் அமர்கிறான்.

சபையில் விதூஷகர்கள், நடிகர்கள், நர்த்தகிகள் ஆகியோர் பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சில சமயம் அந்தணர்கள் வேதம் ஓதி, பொருளையும் விளக்குவார்கள். சிலர் குலப்பெருமைகளைக் ‌கூறுவார்கள். 
இவ்வாறு நாளட்கள் ஓட, ஒருநாள் ஒரு மனிதன் வந்தான். அனைவரையும் வணங்கி 'ஜராசந்தன் பல்வேறு அரசர்களை கிரிவிரஜம் என்னும் கோட்டையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறான். அவர்களைக் காத்தருளுங்கள்' என்று வேண்டினான்.

அவன் மேலும் கூறலானான்.
'நற்செயல்களில் கவனம் குறைந்தவன் வெகுகாலம் சௌக்கியமாக வாழ விரும்புவதைக் கண்டு கால வடிவான தாங்கள் அவனுடைய பாசத்தை அறுக்கிறீர்கள்.

நல்லோர்களைக் காப்பதும், தீயோரை அழிப்பதும் தமது விரதமாகும். தாங்கள் பூரண கலைகளுடன் அவதாரம்‌செய்திருக்கும்போது ஜராசந்தன் எங்களை எப்படித் துன்புறுத்தலாம்? அவனைக் கருவியாகக் கொண்டு எங்கள் தீவினைகளே எம்மைத் துன்புறுத்துகிறதென்று சமாதானம் அடைய இயலவில்லை. ஏனெனில் உம்மையே தியானிக்கும்‌ எங்களுக்குத் தீவினை ஏது? இவ்விஷயம் எங்களுக்குப் புரியவில்லை.

அடிமைகளாக இருந்து அரச வாழ்வை அனுபவிப்பது கனவு போன்றது. ஒவ்வொரு நிமிடமும் பயத்தினால் நடுங்குகிறோம்‌. தங்கள்‌ மாயையில் சிக்கித் தவிக்கிறோம்.

ஜராசந்தன் என்ற வினைப் பாசத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும். போரில் பதினெட்டு முறை தங்களிடம்‌ தோற்ற அவன் எங்களை ஒரே‌ ஒரு முறை வென்றதற்கு இறுமாப்பு கொண்டு அலைகிறான். எம்மைத் துன்புறுத்துகிறான். எம்மைக் காத்தருளுங்கள்' என்ற தூதுச் செய்தியைக் கூறினான்.

அதே சமயம் ஒளி பொருந்திய நாரதர் வான் வழியே அங்கு வந்தார். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, July 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 512

நரகாசுரன் சிறைப்பிடித்த இளவரசிகள் பதினாறாயிரம் பேரையும் கண்ணன் மணந்துகொண்டதைப் பார்த்து நாரதருக்கு அவன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்று பார்க்க ஆர்வம் மேலிட்டது.
ஒரு மனைவியுடன் குடும்பம் நடத்தவே சாமான்ய மக்கள் திணறிக்கொண்டிருக்க, கண்ணன் எப்படி இவ்வளவு பேரை சமாளிக்கிறான் என்று எண்ணினார் போலும். 

திரிலோக சஞ்சாரியான நாரதரால் எவ்விடத்திலும் மூன்று நாழிகைகளுக்கு மேல் நிற்க இயலாது என்று தக்ஷன் சாபமளித்திருந்தான். ஆனால், பகவான் விளங்கும் துவாரகையில் சாபம் பலிக்காது என்பதால் நாரதர் அங்கு தங்கி கண்ணனின் இல்லற வாழ்க்கையை கவனிக்க விரும்பினார்.

மரங்களும் சோலைகளும் பூத்துக் குலுங்கும் துவாரகைக்கு வந்தார் நாரதர்.

எத்தனை மனைவியரோ அத்தனை வடிவம் கொண்டு மிக அழகாக கண்ணனின் இல்லற வாழ்வு நடந்து கொண்டிருந்தது.

அத்தனை மாளிகைகளும் ஸ்படிகத்தாலும், சந்திரகாந்தக் கற்களாலும் கட்டப்பட்டவை. அவற்றில் மரகதப் பச்சைக் கற்கள் பதிக்கப்பட்டு ஒளிவீசின. 
ராஜவீதிகள், நாற்சந்திகள், கடைவீதிகள், யானை,‌குதிரை லாயங்கள், சபைகள், கோவில்கள் ஆகியவை நிறைந்து காணப்பட்டது துவாரகை. வீடுகள் அனைத்தும் நன்கு வாசல்‌மெழுகப்பெற்று, கோலமிடப்பட்டு, தீபங்கள் அலங்கரித்தன.

ஆங்காங்கே கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன.
கண்ணனின் வீடுகள் அனைத்தும் கண்ணனின் அந்தப்புரப் பகுதியில்‌ இருந்தன.
அவற்றுள் ஒரு பெரிய மாளிகைக்குள்‌ நுழைந்தார் நாரதர்.

பணிப்பெண்களும், பணியாளர்களும் மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு தமது பணியைச் செய்துகொண்டிருந்தனர்.

ஆங்காங்கே தீபங்கள் பிரகாசிக்க அகிற்புகையின் நறுமணம் மாளிகை முழுவதும் சூழ்ந்திருந்தது.

அந்த மாளிகையில் ஆயிரம் பணிப்பெண்களுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த கண்ணனுக்கு ருக்மிணி விசிறிக்கொண்டிருந்தாள்.

நாரதர் வந்திருப்பதை அறிந்த கண்ணன் சட்டென்று எழுந்து வந்து அவரை வணங்கினான்.

யாருடைய பாதத்திலிருந்து கங்கை பெருகுகிறதோ அந்த பகவான் நாரதருக்குப் பாதபூஜை செய்து நீரைத் தலையில் தெளித்துக்கொண்டான்.

அவரை நாவினிக்கப் பேசி வரவேற்று 'தமக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்' என்று கேட்டான்.

பகவான் தாமே கேட்கும்போது விடலாமா..
குருமார்களில் தலைசிறந்தவரான நாரதர் உடனே,

மூன்று தாபங்களையும் போக்கவல்ல இறைவா! ப்ரும்மா முதலானவர்களும் தங்கள் திருவடிகளையே த்யானிக்கின்றனர். எனக்கும் எப்போதும் தங்களது திருவடியே நினைவில் நிற்கவேண்டும் என்று கேட்டார்.

பின்னர் சிறிதுநேரம் அளவளாவிவிட்டு அங்கிருந்து கிளம்பி அடுத்த மாளிகைக்குச் சென்றார்.

அங்கே தன் மனைவி மற்றும் உத்தவருடன் கண்ணன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும் விருட்டென்று எழுந்தோடி வந்தான். அவரை பக்தியுடன் வரவேற்று, ஆசனமளித்து பாதபூஜை செய்தான். அந்த நீரைத் தான் தலையில் தெளித்துக்கொண்டு மனைவிக்கும் உத்தவருக்கும் தெளித்தான்.

மஹரிஷியே! தாங்கள் எப்போது துவாரகை வந்தீர்? இங்கு வர இப்போதுதான் வழி தெரிந்ததா? நான் உங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? என்று கேட்டான்.

நாரதர் சந்தர்ப்பத்தை விடாமல், இப்பிறவி‌ உன் நினைவிலேயே பயனுள்ளதாகக் கழியவேண்டும் என்று கேட்டார். 

பின்னர் அங்கிருந்து கிளம்பி அடுத்த வீட்டிற்குள் சென்றார் நாரதர். அங்கே கண்ணன் தன் சின்னஞ்சிறு‌ குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொஞ்சிக் கொண்டிருந்தான். 

நாரதரைக் கண்டதும் ஓடோடி வந்து அவரது பாதத்தில் விழுந்தான். குழந்தைகள்‌ மனைவி அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னான். பின்னர் பாத பூஜை செய்தான். 

என்ன வேண்டும் என்று கேட்க, நாரதர் என்றும் உன் நினைவு வேண்டும் என்று வரம் கேட்டார்.


இப்படியாக நாரதர் ஒவ்வொரு வீடாகச் சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கண்ணன். அக்னியில் ஹோமம் செய்துகொண்டு, சமாராதனை செய்துகொண்டு, உறங்கிக்கொண்டு, மந்திரிகளுடன் ஆலோசனை செய்துகொண்டு, புராணங்களைக்‌ கேட்டுக்கொண்டு, மனைவியுடன் பேசிக்கொண்டு, பொருள் சேர்ப்பதைப்பற்றி யோசித்துக் கொண்டு, யானைப்படை குதிரைப்படை வீரர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டு, பலராமனிடம் சமாதானம் பேசிக்கொண்டு, பெண்ணுக்கு திருமண விஷயமான ஆலோசனை  செய்து கொண்டு, மருமகளை வரவேற்றுக்கொண்டு, குளம் வெட்ட மேற்பார்வை செய்துகொண்டு, வேட்டைக்குக் கிளம்பிக்கொண்டு, மாறுவேடம் பூண்டு நகரசோதனைக்குக் கிளம்பிக்கொண்டு, என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட நாரதருக்கு மயக்கமே வந்துவிட்டது. 
மிகவும் பிரமித்துப்போன அவர், 'இறைவா! தங்கள் யோகமாயையின் மகிமையை இன்று கண்டேன். தங்களது லீலைகளை ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சென்று பாடுவேன். அதற்கு அனுமதி தாருங்கள்.'
என்று கேட்டார்.

கண்ணன் அதற்கு மிக அழகாக பதிலுரைத்தான்.

தேவரிஷியே! தர்மத்தை உபதேசிப்பவன், செய்பவன், பலனைக் கொடுப்பவன் அனைத்தும் நானே. நான் புகட்டும் தர்மத்தை நடத்திக் காட்ட வேண்டாமா. அதற்காகவே அத்தனை விதமான தர்ம காரியங்களையும் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டு செய்துகாட்டுகிறேன். என் யோகமாயையைக் கண்டு அஞ்சாதீர்.

என்றான்.

இல்லறத்தார்க்குரிய அனைத்துக் கடைமைகளையும் கண்ணன் தனித்தனி உருவெடுத்து செய்து கொண்டிருந்ததைக் கண்டார் நாரதர். அத்தனை கண்ணனும் நாரதரைக் கண்டதும் வணங்கி வரவேற்று பாதபூஜை செய்ததைக் கண்டு அவனுக்கு அந்தணர்களிடத்திலும், பக்தர்களிடத்திலும் எவ்வளவு மரியாதையும் வாஞ்சையும் என்று புரிந்து கொண்டார்.

இதுவரை எந்த அவதாரத்திலும் தானே செய்திராத, வேறெவராலும் செய்ய இயலாத அற்புதமான பல லீலைகளைக் கண்ணன் செய்தான். அவையனைத்தையும் பாடுபவர், பாடிக் கேட்பவர், அவர்கள் இருவரையும் கண்டு மகிழ்பவர் ஆகிய அனைவரும் கண்ணன் மீது ஆழ்ந்த பக்தியைப் பெறுவர்.

என்று கூறினார் ஸ்ரீ சுகர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 511

கௌரவர்கள் இழிவாகப் பேசியதைக் கேட்ட பலராமன் கடுங்கோபமுற்றபோதும் சிரித்துக் கொண்டே உத்தவனிடம்  கூறினான்.

துஷ்டர்களுக்கு அமைதி பிடிக்காது. இவர்களுக்குத் தண்டனைதான் சிறந்தது.
கண்ணனும் மற்ற யாதவர்களும் யுத்தத்திற்குத்தான் கிளம்பினர். நான்தான் உறவுகளுக்குள் சண்டை வேண்டாம் என்று அமைதியை நாடி வந்தேன். 

இந்திரன் முதலான தேவர்களே உக்ரசேனரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர்.

பகவான் கண்ணனையும் ஏளனம் செய்கின்றனரே. தேவலோகம் சென்று பாரிஜாதத்தையே பெயர்த்துக் கொண்டு வந்தும் கண்ணனின் பராக்ரமம் இவர்களுக்குப் புரியவில்லை. கண்ணன் அரியணைக்குத் தகுதியற்றவனா என்ன? தேவர்களும் பணிந்தேத்தும் அவனுக்கு சிங்காசனம் ஒரு பொருட்டா? 
இவர்களது பேச்சை இனியும் பொறுக்கமாட்டேன்.

என்று கூறிக்கொண்டு கலப்பையை ஏந்திக்கொண்டு வேகமாகச் சென்றான்.

 கலப்பையின் நுனியால் ஹஸ்தினாபுர நகரக் கோட்டையைப் பற்றி இழுத்தான். அப்படியே நகரமே கலப்பையுடன் இழுபட்டது. 

நகரத்தை இழுத்துக்கொண்டு போய் கங்கையில் தள்ள முற்பட்டான் பலராமன்.


பெரிய நிலநடுக்கம் வந்ததுபோல் ஹஸ்தினாபுரம் ஆடிற்று. அனைவரும்‌ நிலைகொள்ளாமல்‌ விழுந்தனர். அரண்மனைகள் தூண்கள், வீடுகள் அனைத்தும் விரிசல் கண்டு ஆடின.

கௌரவர்கள் அனைவரும் பயத்தால் நடுங்கிக்கொண்டு ஓடிவந்து பலராமனின் திருவடிகளில் விழுந்தனர். 

மூலப்பொருளே! உலகனைத்தையும் தாங்குகின்ற ஆதிசேஷனே! இவ்வுலகமே தங்கள் விளையாட்டுப் பொருளாகும். எங்கள் தவற்றைப் பொறுத்தருளுங்கள். இவ்வுலகைத் தலையில் தாங்குகிறீர். வயிற்றில் அடக்கிக்கொண்டு மாயையால் வெளியில் இரண்டாகத் தோன்றுகிறீர்.

தங்களது கோபம் உலகை நல்வழிப்படுத்தி வழிகாட்டுவதற்கே பயன்படவேண்டும். எங்களை அழிக்கவேண்டாம். உம்மைச் சரணடைந்தோம். காப்பாற்றுங்கள்.  என்று கதறினார்கள்.

பலராமன் அமையுற்று, பயப்படாதீர்கள் என்று அபயம் அளித்தான். பின்னர் ஹஸ்தினாபுரத்தை விட்டான். 

இப்போதும் கங்கைக்குத் தெற்கே உள்ள ஹஸ்தினாபுரத்தின் பகுதி மேலெழும்பி உயரமாகவும், வடக்குப் புறம்‌ தாழ்ந்தும் காணப்படுகிறது.

துரியோதனன் தன் மகள் லக்ஷ்மணாவை சாம்பனுக்கு முறைப்படி திருமணம் செய்து கொடுத்தான். திருமணச்சீராக 60 வயதான 1200 யானைகள், பத்தாயிரம்‌ குதிரைகள், ஆறாயிரம் தங்க ரதங்கள், தங்க நகைகள் அணிந்த ஆயிரம்‌ பணிப்பெண்கள் ஆகியவற்றைக் கொடுத்தான்.

அனைத்தையும் பெற்றுக்கொண்டு மகன் சாம்பன், மற்றும் மருமகள்‌ லக்ஷ்மணாவை அழைத்துக்கொண்டு பலராமன் துவாரகை திரும்பினான். 

கண்ணனிடமும், மற்ற உறவினர்களிடமும் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, July 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 510

எப்போதும் வெற்றி ஒன்றையே பெறும் சாம்பன் ஒரு சமயம் துரியோதனன் பெண் லக்ஷ்மணாவை சுயம்வரத்தில் மற்ற அரசர்களை வென்று கொண்டுவந்தான்.

ஆனால், கௌரவர்களுக்கு லக்ஷ்மணாவை சாம்பனுக்குக் கொடுக்க விருப்பமில்லை. போயும் போயும் இடையர்களுக்குப் பெண்ணைக் கொடுப்பதா. அவனைக் கட்டிப் போட்டு விட்டு பெண்ணைத் தூக்கிவருவோம் என்றெண்ணினர். பெரியவர்களின் அனுமதியுடன் சாம்பனைத் துரத்திச் சென்றனர்.

கர்ணன் சலன், பூரிசிரவஸ், யக்ஞகேது, துரியோதனன் ஆகியோர் கிளம்பினார்கள்.

மஹாவீரனான சாம்பன், சிங்கம் போல் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான். 
அவனை எதிர்க்க முடியாமல் திணறினர் அனைவரும்.

பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரே சமயத்தில்‌சாம்பனின் குதிரைகள், தேர், சாரதி, வில், அனைத்தையும் முறித்தனர்.

தேரிழந்து நின்ற சாம்பனைக் கட்டி இழுத்துக்கொண்டு லக்ஷ்மணையுடன் ஹஸ்தினாபுரம் திரும்பினர். 

நாரதர் காற்றென வந்து துவாரகையில் செய்தி சொன்னார். கேட்டதும் வெகுண்டெழுந்தான் கண்ணன். மற்ற யாதவர்களும் போருக்குக் கிளம்பினர்.

பலராமனுக்கு அந்த யுத்தத்தில் விருப்பமில்லை. எனவே கண்ணனையும் மற்றவர்களையும் அடக்கிவிட்டு, நான் போய் சமாதானம் பேசி மகனையும் மருமகளையும் அழைத்து வருகிறேன் என்று கூறி உத்தவருடன் புறப்பட்டான். 


ஹஸ்தினாபுரம் சென்றதும் அவர்களது மனநிலையை அறிய உத்தவரை முதலில் அரசவைக்கு அனுப்பினான்.

திருதராஷ்ட்ரன், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோரிடம் பலராமன் வந்திருப்பதைத் தெரிவித்தார் உத்தவர்.

பலராமனின் வருகையைக் கேள்வியுற்றதும் அனைவரும் சட்டென்று எழுந்தனர். 
மங்கலப் பொருள்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு வந்து பலராமனை முறைப்படி வரவேற்று வணங்கினர்.

அனைவரின் நலனையும் விசாரித்த பலராமன், 
தெளிவான குரலில் உறுதியாகக் கூறினான்.

அரசருக்கரசரான உக்ரசேனரின் ஆணையை ஏற்று இவ்விடம் வந்துள்ளேன். அறவழியில் தனித்து யுத்தம் சென்ற சாம்பனை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்கிய கயமைத்தனத்தை உறவின் ஒற்றுமையை எண்ணிப் பொறுக்கிறேன்.

என்றான்.

அதைக் கேட்ட துரியோதனாதியருக்கு மிகுந்த கோபம் வந்தது.

தலைக்குத் தலை பேசத் துவங்கினர்.

காலில் இருக்கும் செருப்பு தலைக்கு ஏற ஆசைப்படுகிறதோ.

குந்திதேவியால் உறவு ஏற்பட்டுவிட்டது. அதற்காக இடையர்களுடன் சமமாக அரச குலத்தவர் உட்காரவோ, உணவருந்தவோ இயலுமா

நாம் கருணையோடு விட்டுவைத்திருப்பதால் ராஜபோகங்களுடன் வாழ்கிறீர்கள் என்பது மறந்துவிட்டதா.

சிங்கத்திற்கும் ஆட்டிற்கும் சம்பந்தம் பேச வந்தீரா
என்று ஏளனம் செய்து கர்ஜித்தனர்.

பலராமனுக்குக் கோபம் தலைக்கேறியது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


Tuesday, July 7, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 509

பலராமன் இன்னும் என்னென்ன லீலைகள் செய்தார்? அவரைப் பற்றிக் கூறுங்களேன் என்றான் பரிக்ஷித்.

ஸ்ரீ சுகர் துவங்கினார்.
ஆதிசேஷனின் அம்சமாக பகவானின் கலைகளுள் ஒன்றாக பலராமன் அவதாரம் செய்ததும் அவன் மீது காதல் கொண்ட  நாகலோக கன்னிகைகள் கோபியர்களாகவும், மற்ற தேசங்களிலும் அவதரித்தனர்.

ஒரு முறை பலராமன் ரைவத மலையின் அருகிலிருந்த காட்டில் தன்னை விரும்பும் பெண்களுடன் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்தான். அங்கிருந்த மடுவில் ஜலக்ரீடைக்காக அனைவரும் இறங்கினார்கள்.

அவ்வமயம், நரகாசுரனின் நண்பனான த்விவிதன் என்பவன் தன் நண்பனின் இறப்புக்காகப் பழி வாங்கும் எண்ணம் கொண்டு அக்கிரமங்கள் செய்தான். இடைச்சேரிகளைத் தீயிட்டுக் கொளுத்தினான். குலப்பெண்களைத் தூக்கிக்கொண்டுபோய் நாசம் செய்தான். மலைகளைப் பெயர்த்தெடுத்து துவாரகையின் அருகிலிருந்த ஆனர்த்த தேசத்தின் (கடியாவாட்) மேல் எறிந்தான்.

பத்தாயிரம் யானை பலமுள்ள அவன் கடலின் நடுவில் நின்றுகொண்டு நீரை வாரியடித்து கரையோரப் பகுதிகளை மூழ்கடித்தான்.

முனிவர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று வேள்விகளைக் குலைத்தான். அப்பாவி மக்களைத் தூக்கிக்கொண்டுபோய் குகைக்குள் அடைத்து வாயிலை மூடினான்.

இவ்வாறு அட்டூழியங்கள் செய்துகொண்டே ரைவத மலையின் அருகிலிருந்த காட்டிற்கு வந்தான். அங்கே பலராமன் ஜலக்ரீடை செய்வதைப் பார்த்து அவன் மீது கோபம் கொண்டான். 

மடுவின் கரையிலிருந்த மரத்தின் மீதேறிக்கொண்டு கிளைகளை உலுக்கினான். பலராமனுடன் இருந்ததால்  அப்பெண்கள் பயப்படவில்லை. மாறாக அவனைக் கேலி செய்து சிரித்தனர்.

அவன் அசிங்கமான சேஷ்டைகளைச் செய்து ஈ என்று இளித்துக்கொண்டு அவர்கள் எதிரில் வந்தான். பலராமன் அவனைக் கல்லால் அடித்தான். 
த்விவிதனோ பெண்களின் துணிகளைக் கிழிக்கத் துவங்கினான்.

கடுங்கோபம் கொண்ட பலராமன் கலப்பையையும் உலக்கையையும்  எடுத்தான்.

த்விவிதன் மரங்களைப் பெயர்த்து அடிக்கத் துவங்கினான். பலராமன் அவன் வீசிய அத்தனை மரங்களையும் தடுத்து முறிக்க அவ்விடமே மரங்களற்று பாழும் இடமாகிப்போனது.


த்விவிதன் மலைமீதேறிக்கொண்டு கல்மாரி பொழிந்தான். பலராமன் அனைத்தையும் தூள்தூளாக்கினான். பின்னர் அவ்வானரன் பலராமனின் நெஞ்சில் முஷ்டியால் குத்தினான். பலராமன்  விளையாடியது போதும் என்றெண்ணி உலக்கையையும் கலப்பையையும் கீழே வைத்துவிட்டு அவனை முகத்தில் ஓங்கிக் குத்த, ரத்தம்‌ கக்கிக்கொண்டு கீழே விழுந்தான் த்விவிதன். வானுலகிலிருந்து பூமாரி பெய்ய, சித்தர்களும் முனிவர்களும் பலராமனை வாழ்த்தினர். இந்த த்விவிதன் சுக்ரீவனின் அமைச்சனாவான். 

பலராமன் துவாரகைக்குத் திரும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, July 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் ‌- 508

காசி நகரத்தின் அரண்மனை வாசலில் குண்டலங்களுடன்  ஒரு தலை போய் விழுந்தது. வெட்டப்பட்ட அந்தத் தலையைப் பார்த்து அனைவரும் பயந்தனர்.

பின்னர் அது அரசனின் தலை என்பதை அறிந்து அனைவரும்‌ கதறினர். அவனது மனைவிகளும் உறவுகளும் கதறினர். காசி மன்னனின் மகன் ஸுதக்ஷிணன் என்பவன் தந்தையின் ஈமச் சடங்குகளை முடித்ததும், அவரைக் கொன்றவரைப் பழி தீர்ப்பேன் என்று சூளுரைத்தான். 

தந்தைக்கான காரியங்களை முடித்துவிட்டு, காசி விஸ்வநாதரை புரோஹிதரை வைத்துக்கொண்டு மிகவும் ச்ரத்தையாக வழிபட்டான். 

உள்ளன்புடன் வழிபட்டதும் மிகவும் மகிழ்ந்த பரமேஸ்வரன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

ஸுதக்ஷிணன் தந்தையைக் கொன்றவனைப் பழிதீர்க்க உபாயம் சொல்லுங்கள் என்றான். வதைக்கவேண்டும் என்று அவனுக்குக் கேட்கத் தோன்றாததன் காரணம் மாயை அவன் கண்களை மறைத்துவிட்டிருந்தது. இதுபோல் தவறாக வரம் கேட்டு வீழ்ந்தவர் பலர்.

சிவனார் சிரித்தார்.

அந்தணர்களின் மூன்று அக்னிகளில் தென்புறமுள்ள தக்ஷிணாக்னியில் ஆபிசார முறைப்படி ஹோமம் செய். அக்னிதேவன் தமது கணங்களுடன் தோன்றுவார். அந்தணர் மீது பக்தியில்லாதவர்கள் மீது அவரை ஏவினால் உன் எண்ணம் ஈடேறும் என்றார்.

அவரும் அங்கே சாமர்த்தியமாக ஒரு கொக்கி போடுகிறார்.

ஸுதக்ஷிணன் பரமேஸ்வரன் சொன்ன படி ஆபிசார ஹோமம் செய்ய ஹோம குண்டத்திலிருந்து செம்பட்டையான முடியும், மீசையும் கொண்டு தீப்பொறி பறக்கும்   கண்களுடன் கோரமான உருவில் அக்னி தோன்றினார்.

கையிலுள்ள சூலத்தைச் சுழற்றிக்கொண்டு கோரைப் பற்களுடன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தார்.

அவரைத் தன் அழிவை நோக்கி,  துவாரகையை நோக்கி ஏவினான் ஸுதக்ஷிணன். 

ப்ரும்மாண்டமான உருவத்துடன் அக்னி தேவன் துவாரகையை நோக்கி ஓடினார்.

அவர் செல்லுமிடமெல்லாம் தீப்பொறி பறந்தது. அதைக் கண்ட மக்கள் மிகவும் அஞ்சி நடுங்கிக்கொண்டு ஓடிச் சென்று கண்ணனைச் சரணடைந்தனர்.

சொக்கட்டான் ஆடி க் கொண்டிருந்த கண்ணன் சிரித்துக்கொண்டே  மக்களைப் பார்த்து அஞ்சாதீர்கள், அபயம் என்றான்.
அவனது மலர்ந்த முகம் கண்டாலே பயம் போய்விடும். அபயம் என்று வாக்கினாலும் சொன்னான்.

 பின்னர் தன் சுதர்சனத்திற்கு ஆபிசார அக்னியை அடக்க உத்தரவிட்டான்.

சுதர்சனம் அந்த ஆபிசார அக்னியை பயங்கரமாகத் தாக்க, அது மிகவும் கோபத்துடன் திரும்பிச் சென்றது.

தவறான ஏவல் செய்து 
தன்னை அனுப்பிய சுதக்ஷிணனை சாம்பலாக்கியது. பின்னர் அந்த யாக சாலை, ரித்விக்குகள் அனைவரையும் பொசுக்கிற்று. 

அந்த அக்னியைத் துரத்திக்கொண்டு வந்த சுதர்சனம் காசி நகரத்தின் மாளிகைகள், அரண்மனைகள், கடைகள், தோட்டங்கள், கொத்தளங்கள், படைகள் அனைத்தையும் சாம்பற்குவியலாக்கிற்று.

ஸ்ரீ ருத்ரன் வசிக்கும் சாம்பற்காடாகவே காசி நகரத்தை ஆக்கிவிட்டு சுதர்சனம் துவாரகை திரும்பியது.


இந்த லீலையைக் கேட்பவர் அனைவரும் தீவினைகள்‌ அனைத்திலிருந்தும்‌ விடுபடுவர்.

பூஜை செய்ததும் மகிழ்ந்து தோன்றிய பரமேஸ்வரனிடம், தனக்கும் தந்தைக்கும் நற்கதியை வேண்டாமல் துர்புத்தியால் அழிவை வேண்டினான் அந்த ஸுதக்ஷிணன். கேட்கத் தெரியாமல் வரம் கேட்பதன் விளைவு இது. இறைவனிடம் எப்போதும் எனக்கு எது நல்லதோ அதைக் கொடு என்று வேண்டுவதே சிறந்ததாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, July 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 507

பலராமன் கோகுலம் சென்றதும் கரூஷ  ராஜன் பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன் கண்ணனுக்கு ஒரு தூதுச் செய்தி அனுப்பினான்.

நான்தான் உண்மையான பகவான் வாசுதேவன். நீ உன் ஆயுதங்களான சங்கு, சக்கரம் ஆகியவற்றை என்னிடம் கொடுத்து விட்டுச் சரணைந்துவிடு என்பதுதான் செய்தி. 
உலகைக் காக்க அவதரித்தவர் தாங்கள் என்று அறிவிலிகள் தம் காரியம் நடப்பதற்காகக் கூறிய வஞ்சப் புகழ்ச்சியை நம்பி இப்படி ஒரு ஓலையனுப்பினான் அந்த முட்டாள்.

பரம ஏழையான ஒருவனுக்கு நாடகத்தில் அரசனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவன் தன்னை உண்மையான அரசன் என்றெண்ணினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அவன் செயல்.

அந்த தூதன் மேலும் கூறினான்.

அனைத்து உயிரினங்களிடத்தும் வசிப்பவன் நான் ஒருவனே. அனைத்தையும் பரிவு கொண்டு காப்பவனும் நானே. எனவே நீ இனி வாசுதேவன் என்ற பெயரைத் தியாகம் செய்யவேண்டும். உன் ஆயுதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சரணடையாவிட்டால் போர் நடக்கும் என்று தம் அரசன் கூறியதாகத் தெரிவித்தான்.

அதைக் கேட்டு சபையிலிருந்தவர் அனைவரும் இடி இடியென்று சிரித்தனர். 

பின்னர் கண்ணன் அந்த தூதனிடம்,
நீ உன் அரசனிடம் சென்று இவ்வாறு கூறு. முட்டாளே! நீ சொன்ன ஆயுதங்களை உன் மீதே ஏவுகிறேன். எந்த அறிவிலிகளின் பேச்சைக் கேட்டு உளறுகிறாயோ அவர்கள் மீதும் ஏவுகிறேன். அப்போது  அனைவரும் என்னவாகின்றீர்கள் என்று பார்க்கலாம். என்றான்.

தூதன் சென்று கண்ணன் சொன்னதை அப்படியே கரூஷராஜனிடம் கூறினான்.

சில தினங்கள்‌ கழித்து கண்ணன் தேரிலேறிக் கிளம்பினான். பௌண்ட்ரகன் கண்ணன் போருக்கு வருவதை ஒற்றர் மூலம் அறிந்து இரு அக்ஷௌஹிணிப் படைகளுடன் தன் நகரிலிருந்து புறப்பட்டான். அவனுக்கு உதவ காசியின் அரசனும் மூன்று அக்ஷௌஹிணிப் படையுடன் போருக்கு வந்தான். 

பௌண்ட்ரகன் சங்கு, சக்கரம், வாள், கதை, வில், ஸ்ரீ வத்ஸம் போல் செயற்கையாக ஒரு மச்சம் ஆகியவற்றுடன் தேரிலேறி வருவதைக் கண்ணன் கண்டான். நாடகத்தில் விஷ்ணு வேடம் தரித்தவன்போல் நின்றிருந்த அவனைப் பார்த்து கண்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

பௌண்ட்ரகனைச் சேர்ந்த படை, கண்ணனைப் பலவிதமான ஆயுதங்களால் தாக்கியது. அவையனைத்தையும் கண்ணன் உருத்தெரியாமல் அழித்தான். ஐந்து அக்ஷௌஹிணி சேனையும் கண்ணனின் ஆயுதங்களுக்கு முன் நிற்கமுடியாமல் சிதைந்துபோயின. 

தனித்து நின்ற பௌண்ட்ரகனிடம் கண்ணன், நீ அனுப்பிய தூதுச் செய்தியின்படி என் ஆயுதங்களை உன்மீது விடுகிறேன். முடிந்தால் தடுத்துக்கொள். இந்த வேஷத்தை விட்டுவிட்டு ஓடிப்போ. என்று சொன்னான்.

 பௌண்ட்ரகன் சரணடையாமல் ஆயுதத்தை ஏந்தவே, கண்ணன் அவன் தலையை சக்ராயுதத்தால் வெட்டினான்.

காசி‌மன்னனின் தலையை வெட்டி அதைக் காசியில் போய் விழும்படி செய்தான்.

பௌண்ட்ரகன் எப்போதும் பகவானையே எண்ணியிருந்ததால் கர்மவினைகள் அனைத்தும் நீங்கப்பெற்று கண்ணனுடன் இரண்டறக் கலந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, July 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 506

ஒரு சமயம் பலராமன் மட்டும்  ரதத்தில் ஏறி கோகுலம்‌ சென்றான்.

 வெகுநாள்களாக அவனைக் காணாததால் நந்தனும், மற்ற உறவினர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். யசோதையும் நந்தனும் அவனை மிகவும் கொண்டாடினர். நந்தர் அவனை மடியில் இருத்திக்கொண்டு கண்ணீர் உகுத்தார்.

கோபர்கள் அனைவரும் பலராமனைக் கட்டித் தழுவிக்கொண்டனர். அவன் கையைப் பிடித்துக்கொண்டு மனத்திற்கினிய கதைகளைப் பேசத் துவங்கினர்.

 முதியவர்கள் அனைவரையும் போய்ப் பார்த்து வணங்கினான் பலராமன்.

அனைவரும் அவனிடம் கண்ணனைப் பற்றி விசாரித்தனர்.

நம் உறவினர்கள் அனைவரும் நலமா? கண்ணன் எப்படி இருக்கிறான்? நீங்கள் எல்லாரும் எங்களை எப்போதாவது நினைப்பீர்களா?
நல்லவேளையாக கம்சன் ஒழிந்தான். தேவகியும் வசுதேவரும் துயரங்களிலிருந்து மீண்டனர்.
காலயவனன், ஜராசந்தன் போன்றவர்களின் தொல்லைகளையும் ஒழித்துவிட்டீர்கள்.
இப்போது துவாரகையில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். மதுராவில் இருந்தால் தயிர் பால்  விற்கும் சாக்கில்  அவ்வப்போது வந்து உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்வோம். துவாரகையிலிருப்பதால் எங்களுக்கு எந்தச் செய்தியும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. என்றனர்.

 பலராமனுக்கென்று ஒரு கோபியர் கூட்டம் இருந்தது. அவர்கள் அனைவரும் பலராமனைக் கண்டதும் பேரானந்தம் அடைந்தனர். 

பலராமன் வந்ததைக் கேள்வியுற்று எல்லா‌ கோபிகளும் அவனைக் காண வந்தனர்.

அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் சிரித்துக்கொண்டே கேட்டனர்.

நகரத்துப்‌ பெண்களின் பிரியனான கண்ணன் சௌக்கியமா? ஒரு முறையாவது இங்கு வருவானா? அவனுக்காக நாங்கள் எங்களது உறவுகள் அனைத்தையும் துறந்தோம். உங்கள் அன்பிற்கு ஈடு செய்யவே இயலாதென்று இனிக்க இனிக்கக் கூறினான். இப்படிப் பட்ட பேச்சை யார்தான் நம்பாமல் இருப்பார்கள்? அந்த நகரத்துப் பெண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? 

இன்னொருத்தி இடைமறித்தாள், அவன் என்ன ‌நம்மை நினைத்துக் கொண்டா இருக்கிறான்? நாமும் அவனைப் பற்றிப் பேசாமல் நம் பொழுதைப் போக்குவோம். என்றாள். 

அவ்வாறு நம்மால் இருக்க இயலாதடி என்று இன்னொருத்தி கூற அனைவரும் அழத் துவங்கினர்.

சமாதானப் படுத்தும் கலையில் வல்லவனான பலராமன் அவர்கள் அனைவரும் மகிழும் வண்ணம் பேசினான். பின்னர் அவர்களுக்கு கண்ணன் பற்றிய விஷயங்களைக் கூறினான். 

கோகுலத்திலேயே சித்திரை மற்றும் வைகாசி ஆகிய இருமாதங்கள் தங்கி அவர்கள் அனைவருக்கும் ஆனந்தத்தைக் கொடுத்தான். தன்னுடைய கோபியருடன் வனங்களில் சுற்றித் திரிந்தான். 

ஒரு முறை அவர்களுடன் யமுனைக்குச் சென்றான். தான் நிற்குமிடத்திற்கு யமுனையை அழைக்க அவள் வரவில்லை. அதைக்கண்டு கோபமுற்று உன்னைப் பிளக்கிறேன் பார். என்று சொல்லி கலப்பையால் யமுனையைப் பிடித்து இழுக்க, அவள் பயந்துபோய் சரணாகதி செய்தாள்.

பலராமா! உன் ஆற்றல் பற்றி நான் அறியவில்லை. ஆதிசேஷனான நீதான் இவ்வுலகத்தைத் தாங்குகிறாய். உன் பெருமையை அறியாமல் அலட்சியம் செய்துவிட்டேன். மன்னிப்பாயாக. என்று வேண்டினாள்.

இன்றும் பலராமன் கலப்பையால் இழுத்துத் திருப்பிய வழியிலேயே யமுனை ஓடிக்கொண்டிருக்கிறது.

பின்னர் பலராமன் அந்தப் பெண்களுடன் யமுனையில் இறங்கி ஜலக்ரீடை செய்தான். அவன் கரையேறும் சமயம், லக்ஷ்மிதேவி அங்கு வந்து கடலின் நீல‌நிறமுள்ள இரண்டு பட்டாடைகளையும், நிறைய ஆபரணங்களையும், வாடாத தாமரை மலர் மாலையையும் அவனுக்குக் கொடுத்தாள்.

அவையனைத்தையும் அணிந்த பலராமன் மிகவும் அழகாக விளங்கினான்‌.

அனைவர்க்கும் அவ்விரண்டு மாதங்களும் ஒரே இரவுபோலக் கழிந்தன.

பலராமன் கோகுலம் சென்றிருந்த வேளையில் கண்ணன் இன்னொரு லீலை செய்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, July 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 505

கண்ணனின் மகன்களான சாம்பன், ப்ரத்யும்னன், சாருபானு, கதன் ஆகியோர் அருகிலிருந்த காட்டிற்குச் சென்றனர்.

வெகுதூரம்‌ அலைந்ததும் களைப்பு மிகுந்து தாகம்‌ எடுத்தது. நீருக்காக அலையத் துவங்கினர். ஒரு பாழுங்கிணறு தென்பட்டது. அதில் நீருக்காகக் குனிந்து பார்த்தபோது ஒரு மிகப்பெரிய ஓணான் உள்ளே‌ இருந்தது. அதைப் பார்த்து வியந்தனர்.

அது தவறி விழுந்திருக்கலாம் என்று எண்ணி வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.

கயிறுகளால்‌ கட்டி அனைவரும் சேர்ந்து இழுத்தபோதும் அது அசையக்கூட‌ இல்லை. அதைக் கண்டு இன்னும் ஆச்சரியம் அதிகமாயிற்று. இதில் ஏதாவது விஷயமிருக்கலாம் என்று எண்ணி உடனே‌ கண்ணனிடம் சென்று கூறினார்கள்.

கண்ணன் அவர்களுடன் காட்டிலிருக்கும் அந்தப் பாழுங்கிணற்றுக்கு வந்தான். அந்த ஓணானை அலட்சியமாக இடது கரத்தால் தூக்கி மேலே விட்டான்.

கண்ணனது அமுதக் கரம் பட்டதும் அந்த ஓணான் மிக அழகிய உருவம் கொண்டது. தங்கமயமான உடலும், அற்புதமான ஆடை அணிகலன்களும் அணிந்த தேவனாகக் காட்சியளித்தது.

அனைத்தும் அறிந்த கண்ணன், அந்த தேவனிடம் எதற்காக ஓணான் உடல்‌ பெற்றீர்கள்? நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் தேவபுருஷர் போல் இருக்கிறதே என்றான்.

அந்த தேவன் தன் ஒளி பொருந்திய கிரீடம் மண்ணில் பட கண்ணனை வணங்கினான். 

தேவாதிதேவா! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். இருப்பினும் நீங்கள் கேட்பதால் கூறுகிறேன்.
என் பெயர் ந்ருகன். மாமன்னர் இக்ஷ்வாகுவின் புதல்வன். வள்ளல்களின் பெயர்களைச் சொல்லும்போது என் பெயரை அனைவரும் கேள்வியுறுவர்.

நான் பூமியில்‌ எவ்வளவு மணல்கள் உள்ளனவோ, வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு பசுக்களை தானம் செய்தேன். அத்தனை பசுக்களும் பால்‌ சுரப்பவை. இளம் வயதுடையவை. நல்ல‌சுழிகள் கொண்டவை. கொம்புகளில் தங்கப் பூண்களும், கால்களில் வெள்ளிச் சலங்கைகளும் பூண்டவை. பட்டாடைகளும், மாலைகளும் சாற்றி, பூஜை செய்து அவற்றை தானம் செய்தேன். 

என்னிடம் தானம் பெற்றவர் அனைவரும் நற்குணங்கள் நிரம்பிய அந்தணர்கள்.
ஸத்யசந்தர்கள். சிறந்த சீடர்களை உடையவர்கள். பசுக்களைத் தவிரவும் பூமி, வீடு, குதிரை, பணிப்பெண்கள், கன்னிகைகள், எள், வெள்ளி, ஆடைகள், ரத்தினங்கள், வீட்டுப்பொருள்கள், ரதங்கள், ஆகியவற்றையும் வழங்கினேன். நிறைய யாகங்கள் செய்தேன். குளம் வெட்டுதல், பள்ளிச் சாலைகள் அமைத்தல் ஆகியவற்றையும் புரிந்தேன்.

ஒரு சமயம் என்னால் தானம் கொடுக்கப்பட்ட ஒரு உயர்ந்த பசு, பழக்கத்தினால் தன் பழைய பசுக்கொட்டிலில் சென்று பசுக்கூடட்டங்களோடு  கலந்துவிட்டது.அதை அறியாமல் அந்தப் பசுக்கூட்டங்களை மற்றொரு அந்தணனுக்கு தானம் அளித்துவிட்டேன்.

அந்தப் பசுவை முதலில் தானமாகப் பெற்றவர் தன் பசுவை மற்றோருவர் கொண்டு செல்வதைப் பார்த்து தன்னுடையதென்று கேட்க, அவர் மன்னர் எனக்களித்தார் என்று கூற, வழக்கு என்னிடம் வந்தது.

ஏற்கனவே தானம் கொடுத்த பசுவை அறியாமல் மீண்டும் தானம் கொடுத்தவர் நீங்களே. எனவே நீங்களே பசுவைத் திருடியவர் என்றார் ஒரு அந்தணர். 
இடிந்துபோனேன். 

அந்தப் பசுவுக்கு ஈடாக வேறு உயர்ந்த பசுக்களை நிறையத் தருகிறேன் என்று மன்றாடினேன்.
இருவருமே ஏற்க மறுத்துவிட்டனர். அதே பசுதான் வேண்டும் என்று கேட்டனர். 

இதற்கிடையில் என் காலம் முடிந்து யமதூதர்களால் யமதர்மராஜனின் சபைக்கு அழைத்துவரப்பட்டேன்.

தர்மராஜனான அவர்,  நீங்கள்‌ முதலில் பாவத்தின் பலனை அனுபவிக்கிறீர்களா? அல்லது புண்ணியத்தின் பயனையா? என்று கேட்டார்.

நான் பாவத்தின் பயனை முதலில் அனுபவித்து விடுகிறேன் என்று சொன்னதும், கீழே விழு என்று ஆணையிட்டார். 

நான் தலை குப்புற கீழே விழுந்து ஓணானாக மாறினேன். அந்தணர்களிடம் மிகுந்த பக்தி கொண்டு தானங்கள் அளித்த காரணத்தால் எனக்கு முற்பிறவி நினைவுகள் எதுவும் மறக்கவில்லை.

யோகிகளால் தியானம் செய்யப்படும் பரம்பொருளான தாங்கள் இந்த அடிமைக்கும் காட்சி தந்தீர்களே. அதன் காரணத்தை அறியேன்.

தேவர்தலைவனே! அனைத்துப் ப்ராணிகளின் ஜீவனே! கோவிந்தா! பரம்பொருளே! புருஷோத்தமனே! அச்சுதா! அனைத்தையும் இயக்குபவரே! எல்லையற்றது தங்களது புகழ் எல்லாவற்றையும் புனிதப் படுத்துவது.

காரணபுருஷரான தாங்கள்‌ மாறுபாடுகளற்றவர். ஸச்சினாந்த ஸ்வரூபரே! தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

நான் தேவலோகம் செல்ல அனுமதி தாருங்கள். எப்போதும் தங்களது திருவடித் தாமரைகளின் நினைவு எனக்கு இருக்கட்டும்.

இவ்வாறு கூறிவிட்டு, ந்ருகன் கண்ணனைப் பலமுறை வலம் வந்தார். பின்னர் தாமரைத் திருவடிகளைத் தொட்டு நிலம் விழுந்து வணங்கினார்.


அப்போது ஒரு அழகிய தேவ விமானம் வந்து நின்றது. கண்ணன் தலையசைக்க அனைவரும் பார்க்கும்போதே அதிலேறிக் கிளம்பிச் சென்றார்.

ந்ருகன் சென்றபின் கண்ணன் தன்னைச் சேர்ந்தவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினான்.

வேதத்தின் நடமாடும் கோவிலாக விளங்கும் அந்தணர்களின் சொத்தை ஒருவன் சிறிதளவே பறித்தாலும் அது அவனுக்கு செரிக்காது. தலைவனாக விளங்கும் அரசன் அத்தவற்றைச் செய்தால் அதன் பலன் மிகவும் பெரியது.

அந்தணர்களின் சொத்து ஆலகால விஷத்தை விடக்‌கொடியது. விஷத்தை அருந்தியவன் மட்டுமே அழிவான். சீரிய அந்தணர்களின் பொருளை அனுபவிப்பவன் குலமே நாசமாகும். அறியாமல் அனுபவுத்தால் மூன்று தலைமுறைகளையும், அறிந்து பறிப்பவனின் முந்தைய பத்து தலைமுறைகள், மற்றும் பிந்தைய பத்து தலைமுறைகளையும் அழிக்கும். அவ்வாறு செய்யும் அரசர்கள் தம் மக்களையும் அவ்வழியில் அழைத்துச் சென்று நரகத்தை நிரப்புகிறார்கள்.

என் இனிய மக்களே! அந்தணர்கள் தவறு செய்திருந்தாலும் அவரிடம் பகைமை பாராட்டாதீர்கள். அவர்களது சொத்து துளியும் நமது பொக்கிஷத்தில் கலந்துவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான தானங்களை விரும்பிச்  செய்திருந்தபோதும்  அந்த அந்தணரின் பசு ந்ருக மஹாராஜனைக் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டது பார்த்தீர்களா? 

இவ்வாறு பல அறிவுரைகள் கூறி அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். 

அர்ஜுனனை முன் வைத்து உபதேசித்த பகவத்கீதைபோல் துவாரகாவாசிகளை முன்னிட்டு உலகோர்க்கு அறநெறிகளைக் கூறினான் கண்ணன். இவ்வளவு கூறியபோதும் பின்னால் சாம்பன் அந்தணர்களுடன் விளையாடி யதுகுலத்திற்கே சாபமாக அமையப்போகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..