Monday, December 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 617

பகவான் தொடர்ந்தான்.

கர்மாக்கள் துக்கத்தைத் தரும் என்று ஞானம் பெற்று அவற்றைக் கைவிடுபவன், புலன்களை வெல்லவேண்டும்‌. மனத்தை மற்ற விஷயங்களிலிருந்து திருப்பி ஆத்மாவில் நிலை நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தும்போது மனம் அங்குமிங்கும் செல்லத் துடிக்கும்‌. அப்போது விழிப்புடன் அதைத் தவிர்த்து, அறிவுரை கூறி, தன்வசப்படுத்தவேண்டும்

புலன்களையும் ப்ராணனையும் தன்வசப்படுத்த வேண்டுமாகில் மனத்தைச் சுதந்திரமாக விடக்கூடாது.
ஸத்வகுணத்தினால் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

முரட்டுக் குதிரையில் பயணம் செய்ய விரும்புபவன், ஒரேயடியாக அதை அடக்க‌முயன்றால்‌ நடவாது. முதலில் அதன் போக்கில் சற்று விட்டுப் பின்னர் தன் வழிக்குக் கொண்டுவருவது போல மனத்தின் போக்குப்படி சில‌சமயம்‌ அனுமதித்துப் பின்னர் அறிவுரை கூறி கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

ஸாங்க்ய சாஸ்திரத்தில் ப்ரபஞ்சத் தோற்றம் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் படியே சிந்தித்தல் நலம். அதே வரிசையில் உடல் முதல் அனைத்தும் ப்ரக்ருதியில் லயப்படுவதை சிந்திக்க வேண்டும். மனம் ஒரு நிலையில் வசப்படாத வரை இந்தச் சிந்தனை உதவி செய்யும்.

உலகப் பற்று நீங்கியவன் ஆசார்யனின் வாக்கை எண்ணிப் பார்த்து உணர்ந்து ஆத்மஸ்வரூபத்தில் நிலைக்கவேண்டும். இவ்விதமான பயிற்சி தேகப்பற்றை அறுக்கும்.

யம நியமங்கள் முதலான யோகவழியில் என்னை அடையலாம். அல்லது ஆத்ம அனாத்ம என்று வஸ்துவின் மூலத்தை ஆராய்ந்து என்னைப் பூஜை செய்யலாம். அல்லது என் உருவச்சிலையை வழிபடுவது, அதற்கு உபசாரங்கள் செய்வதன் மூலம் என்னை தியானிக்கலாம். அதாவது கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் இவையே ப்ரதானமான வழிகள்.

யோகி எப்போதாவது தவறி, ஒரு தீய செயலைச் செய்ய நேர்ந்தால் அந்தப் பாவத்தை யோகத்தீயிலேயே பொசுக்கிவிடலாம். தனியாக ப்ராயசித்தம் தேவையில்லை.

எவ்வெவர்க்கு எந்தெந்த மார்கம் விதிக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பின்பற்றுவதே சுலபம். குண தோஷம், விதி நிஷேதங்கள் ஆகியவை எவ்விதமாகவாவது உலகப்பற்று நீங்குவதற்காகவே ஆகும்.

பிறப்பிலிருந்தே கர்மாக்களால் வினைப்பயன் அதிகரிக்கும். அவை அசுத்தமானவை. அவற்றை ஒரு வரம்பில் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதே சாஸ்திரங்களின் அபிப்ராயம். உலகப் பற்றைக் குறைப்பதே உண்மை நோக்கம்.

என் லீலைகளினால் சிரத்தை ஏற்பட்டு எல்லா சுகங்களும் துக்கத்தின் வாசல் என்பதை அறிந்திருந்தாலும் அவற்றை முற்றிலும் விலக்க இயலவில்லை எனில் இந்த இன்ப நுகர்வு துக்கம் தரும் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த இரண்டும் கெட்டான் நிலை நீங்க என்னை வழிபடவேண்டும்.

இவ்விதமாக பக்தி நெறியைப் பின்பற்றுபவர்களின் இதயமே என் இருப்பிடம். நான் தோன்றியதும் அவனது மன மாசுக்கள் அனைத்தும் பொசுங்குகின்றன‌.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 616

உத்தவா! முன்பே ஞான, பக்தி, கர்ம யோகங்கள் பற்றி விளக்கினேன். கர்மாக்களிலும், அவற்றின் பலன்களிலும் விரக்தி அடைந்து‌ அவற்றை விட்டு விட்டவர்கள் ஞானயோகத்திற்கு அதிகாரிகள் ஆவர். கர்மபலனில் ஆசை உள்ளவர்க்கு கர்மயோகமே சரி. 

கர்மபலனை முற்றிலுமாகத் துறக்காமல் முன்வினைப் புண்ணிய பலனால் என் கதைகளில் ஈடுபாடு வந்துவிட்டால் அவனுக்கு பக்தியோகம் பொருந்தும். 

எதுவரையில் கர்மாவில் போதும் என்ற நிறைவு ஏற்படவில்லையோ அதுவரை கர்மயோகம் செய்யவேண்டும். அவரவர்க்கான தர்மத்தில் நிலை பெற்று என் மீது பக்தியுடன் கர்மாக்களைச் செய்து பலனை எனக்கு அர்ப்பணிப்பது மிகவும் சுலபமான வழி.

செய்யத்தகாதன என்று அறிவுறுத்தப்படும் கர்மாக்களை விலக்கி விதிக்கப்பட்டவற்றை பக்தியுடன் செய்தால் ஸ்வர்கமும் இல்லை, நரகமும் இல்லை. வினைப்பயன் ஒட்டாமல் போவதால் கர்மத்தளை அகன்றுவிடுகிறது.

சுவர்கத்தில் இருப்பவராயினும், நரகத்தில் இருப்பவராயினும் அவர்கள் ஆசைப்படுவது மனிதப் பிறவிக்குத்தான்.

ஏனெனில் மனித உடல்தான் யோக சாதனமாக இருக்கிறது. புண்ணிய பலனால் கிடைக்கும் தேவ உடல் பெற்று ஸ்வர்கம் செல்கிறான். பாவ பலனால் யாதனா (நிழல்) உடல் பெற்று நரகம்‌செல்கிறான். இவை இரண்டும் எந்த சாதனைக்கும் பயன்படாது. விவேகமுள்ளவன் இரண்டு உடலுக்கும் ஆசைப்படக்கூடாது. உடலில் பற்று வைத்தால் பரமாத்மாவை அடையும் முயற்சி வெற்றி பெறாது.

இம்மானுட உடல் அழியும் தன்மையுடையதுதான். ஆனால் இதை வைத்துக்கொண்டு தான் பரமாத்மாவை அடைய இயலும். எனவே புத்திசாலியானவன் மரணத்திற்கு முன்பாக ஆத்ம சாதனைகளைச் செய்து பிறவிச் சுழலினின்று விடுபடும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

உடல் என்ற மரத்தில் கூடு கட்டிக்கொண்டு ஜீவன் என்ற பறவை வசிக்கிறது‌. யமதூதர்கள் ஒவ்வொரு விநாடியும் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். வெட்டிய மரத்தை விட்டு பறவை கிளம்புவதுபோல உடலின் மீது அபிமானம் இல்லாதவன் உடலை விட்டபின் மோக்ஷத்தை அடைந்துவிடுகிறான். உடலின் மீது பற்றுள்ளவனுக்கு துக்கம் மிஞ்சுகிறது.

இரவும் பகலுமாக ஒவ்வொரு நாளும்‌ ஆயுள்‌ கழிகிறது. இதை உணர்ந்து பயத்தால் பீடிக்கப்படும் மனிதன் பரமாத்ம தத்வ ஞானத்தை அடைகிறான். 

எல்லா விதமான நற்பலன்களையும் அடைவதற்கு உடல் உதவுகிறது. அது எந்த முயற்சியும் இன்றி தானாகக் கிடைத்துள்ளது. ஸம்ஸாரக் கடலை பகவானுடைய எல்லையற்ற அருளால் கடக்க உதவுவது உடல். இந்தக் கடலில் படகைச் செலுத்துவதற்குச் சிறந்த மாலுமிகளாக இருப்பவர்கள் குருமார்கள். என்னை நினைத்தால் நான் அனுகூலமான காற்றாக வந்து என் அருளால் படகைச் செலுத்துகிறேன். இவ்வாறு அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஸம்ஸாரத்தை வெற்றி கொள்ளாதவன் தன் ஆன்மாவைத் தானே கொன்றவன் ஆவான்.

நரஜென்மம் அரிதானது - இதை
மறுக்காமல் மறக்காமல்
கருத்தினில் கொண்டு செயலாற்றுவாய் 
-மதுரகீதம்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, December 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 615

பகவான் தொடர்ந்தான்.

எந்த ஜீவனுக்கும் தீமை நினைக்காமல் இருப்பதும், தானம் மற்றும் கர்மங்களை விட்டு விடுவதே தவமாகும்.

ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் சமமாக நினைப்பது ஸத்யம், உண்மையாகவும் இனிமையாகவும் பேசுவது ரிதம் எனப்படும்‌‌. கர்மாவில் பற்றற்று இருப்பது சௌசம், கர்மங்களை விட்டுவிடுவது ஸந்நியாசம்.

தர்மம்தான் உயர்ந்த செல்வம். பரம்பொருளான நானே யக்ஞம். ஞானோபதேசம் செய்வதே தக்ஷிணை. ப்ராணாயாமம் சிறந்த பலமாகும்.

என்னுடைய ஐஸ்வர்யம் பகம். என்னிடம் பக்தி செலுத்துவதே லாபம். ஜீவன்களிடம் பேத புத்தியை நீக்குவதே வித்யை. விலக்கப்பட்ட காரியங்களைச் செய்ய அஞ்சுவது நாணம்.

 எதற்கும் ஆசைப்படாமல்‌ இருப்பது ஸ்ரீ. சுகதுக்கத்தைக் கடப்பது சுகம். இன்பங்களில் மனத்தைச் செலுத்துவது துக்கம். பந்தம் எது, முக்தி எது என்றறிபவன் பண்டிதன்.

சரீரத்தில் நான் என்ற பற்று‌கொள்பவன் முட்டாள். சம்சாரச் சுழலினின்று விலக்கி என்னை நோக்கிச் செலுத்தும் பாதை எதுவோ அதுவே நல்வழி.

ஸத்வகுணம் மிகுந்திருப்பது ஸ்வர்கம். தமோகுணத்தின் மிகுதியே நரகம். குருவே உண்மையான உறவினர். குருவும் நானும் வெவ்வேறல்ல. 

இம்மனித உடலே‌ இல்லம். நற்குணங்களே செல்வம். கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடையாதவன் தரித்திரன். புலன்களை வசப்படுத்தாததவன் க்ருபணன் (கஞ்சன்)

விஷயப் பற்றில்லாதவன் ஈஸ்வரன்‌. 
உத்தவா! நீ கேட்டவற்றிற்கு மிகத் தெளிவாக விடை கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும் குண தோஷங்கள் பற்றிப் பேசுவதால் ஒரு பயனுமில்லை.

தோஷங்களில் மனத்தைச் செலுத்துவதே குற்றம். குணம் தோஷம் ஆகியவற்றைக் கடந்து ஆத்ம ஸ்வரூபத்தில் பார்வையை நிறுத்துவதே குணமாகும். என்றான்.

உத்தவர் அடுத்த கேள்வி கேட்டார். கண்ணா! வேதங்கள் தங்கள் ஆணைகளாகும்‌. அவற்றில் செய்யத் தகுந்த, மற்றும் தகாத கர்மாக்கள் பற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளதே. எனில் கர்மாக்களின் குண தோஷம் பற்றிச் சிந்திக்காமல் அவற்றை எவ்வாறு செய்ய இயலும்? குண தோஷங்களைப் பார்க்காமல்  கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவது எவ்வாறு? இதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துவீர்களா? என்று கேட்டார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, December 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 614

உத்தவா! பக்தியோகம் பற்றி உனக்கு முன்பே கூறியிருப்பினும் நீ ஆர்வத்துடன் கேட்பதால் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறேன். 

என் கதைகளைக் கேட்கவேண்டும் என்ற பேராவல்,
எப்போதும் என் லீலைகளைச் சொல்வது,
என்னைப் பூஜை செய்வதில் உறியான நம்பிக்கை,
தோத்திரங்களை ஆசையுடன் சொல்வது,
பூஜை செய்வதில் ஈடுபாடு,
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது,
என்னை விடவும் என் அடியார் மீது அதிக அன்பு,
அவர்களைப் பூஜிப்பது,
எல்லா ஜீவன்களிடத்திலும் என்னையே காண்பது,
எல்லா நிகழ்வுகளையும் என் செயலாகவே காண்பது,
மனத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்வது,
மற்ற எல்லா விருப்பங்களையும் விட்டுவிடுவது,
என் பொருட்டு பொருள், சுகம், போகங்கள் அனைத்தையும் விடுவது,
தானம், வேள்வி, யாகம், ஜபம், விரதம் அனைத்தையும் என் த்ருப்திக்காகச் செய்வது,
இவற்றையெல்லாம் பின்பற்றி ஒருவன் மனத்தை என்னிடம் செலுத்துவானாகின் அவனுக்குத் தூய்மையான அன்புமயமான பக்தி ஏற்படும். என்னிடம் பக்தி ஏற்பட்டபின் அடையவேண்டிய வஸ்து ஒன்றுமில்லை.

இவ்வுலகம் வெறும் வெளித் தோற்றமாகும். உண்மையில் இல்லை. மனம் உலகப் பொருள்களில் ஈடுபட்டால் புலன்கள் அலையத் துவங்கும். மனத்தில் ரஜோ குணம் தலை தூக்கி அசுத்தமடையும். இந்நிலையில் பக்தி, தர்மம், வைராக்யம் ஆகியவை அழிந்துபோகும்.

எதனால் என்னிடம் பக்தி வருமோ அதுவே தர்மம். எல்லாவற்றிலும் என்னைக் காண்பது ஞானம். புலனுகர் பொருள்களில் மயங்காமல் இருப்பது வைராக்யம். சித்திகள் அனைத்தும் ஐஸ்வர்யம் ஆகும்.

என்று முடித்தான் பகவான்.

உத்தவன் அடுத்த கேள்வியைத் தயாராக வைத்திருந்தார். 

கமலக் கண்ணா! தானம், தவம், சாதுர்யம், ஸத்யம், ரிதம், தியாகம், நீங்காத செல்வம், யக்ஞம், தக்ஷிணை இவற்றின் பொருள் என்ன? எது பலம்? பலம் என்றால் என்ன? லாபம் என்பதென்ன? உயர்ந்த கல்வி, நாணம், வளமை, சுகம், துக்கம் இவற்றைப் பற்றிக் கூறுங்கள்.

எவன் பணக்காரன்? ஏழை என்பவன் யார்? ஈஸ்வரன் யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை பகருங்கள்.
என்றார்.

கண்ணன் உத்தவரை தீர்கமாகப் பார்த்தான். பின்னர் பேசத் துவங்கினான்.

உத்தவா! யமம் என்பது 12 வகைப்படும். அஹிம்சை (பிறரைத் துன்புறுத்தாமை), ஸத்யம், திருடாமை, எதிலும் ஒடாமல் தனித்து விளங்குவது, நாணம், பொருள்களைத் தேவைக்கு அதிகமாகச் சேர்க்காமை, சாஸ்திரங்களிடத்தும், என்னிடத்தும் நம்பிக்கை, ப்ரும்மச்சர்யம், மௌனம், நிலையான புத்தி, பொறுமை, அச்சமின்மை ஆகிய பன்னிரண்டும் யமம் ஆகும்.

சௌசம் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் சேர்ந்த தூய்மை), ஜபம், தவம், ஹோமம், சிரத்தை, விருந்தோம்பல், எனக்குப் பூஜை செய்வது, பிறர்க்குதவி, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்வது, கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது, குரு சேவை, ஆகியவை நியமம் ஆகும். 
மனத்தை என்னிடம் செலுத்துவது சமம். புலன்களை அடக்குவது தமம். துன்பங்களைச் சகித்துக் கொள்வது திதிக்ஷா, நாவையும், காமத்தையும் வெற்றிகொள்வது திருதி எனப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 613

ஞானிக்கு மிகவும் பிரியமானவன் நானே. எனக்கும் ஞானி மிகவும் இஷ்டமானவன். ஞானி என்னை எப்போதும் இதயத்தில் தாங்குகிறான். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் புனிதத்தை வேறெந்த சாதனையும் தர இயலாது. 

ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையால் இவ்வுடல் ஏற்படுகிறது. பூர்வ கர்மா இல்லையெனில் உடல் உருவாகாது. முதலில் உடல் இருப்பதில்லை. கடைசியிலும் இருக்கப்போவதில்லை. பிறப்பு, இருப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு, மறைவு எதுவுமே உங்களோடு சம்பந்தப்படவில்லை. 

உத்தவர் கேட்டார்.
கண்ணா! எல்லா உலகங்களுக்கும் அதிபதியே! தூய்மையான இந்த ஞானத்தை ப்ரும்மா உள்பட அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஏற்படும் விதமாக உங்களிடம் பக்தி செய்வது எப்படி?

பாமர மக்கள் இருண்ட பாழுங்கிணற்றில் விழுந்திருக்கிறீர்கள். காலம் என்ற பாம்பினால் தீண்டப் பட்டுள்ளார்கள். அப்படியும் புலன் இன்பங்களில் ஆழ்ந்திருக்கிறார்கள். இவற்றிலிருந்து விடுவிக்கக்கூடிய இன்சொற்களைக் கூறுங்கள். 

என்றார். 

கண்ணன் மீண்டும் பதிலுரைக்கத் துவங்கினான். இதே கேள்விகளை ஒரு சமயம் யுதிஷ்டிரர் பீஷ்மரைக் கேட்டார். 

பாரத யுத்தம் முடிந்து மனம் கலங்கியிருந்தார் தர்மபுத்திரர். உற்றார் உறவினர் அனைவரும் யுத்தத்தில் மாண்டுபட்டதால் அவர் மனம் மிகவும் வாட்டமுற்றது.

அவர் பீஷ்மரிடம் சென்று பல விதமான தர்மங்களைக் கேட்டு அறிந்தார். அதன் பின் பிதாமகர் அவருக்கு முக்தியின் வழியையும் விளக்கினார்‌.

பீஷ்மர் கூறியவற்றின் சாரத்தை உனக்குச் சொல்கிறேன் உத்தவா! கவனமாகக் கேள்! என்று துவங்கினான் கண்ணன்.

மீண்டும் ப்ரக்ருதி புருஷன், ஆத்மா, ச்ருஷ்டி, ஸ்திதி, பஞ்ச பூதங்கள், தன்மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் கூறினான் கண்ணன். 
அவை அனைத்திலும் பரமாத்மாவே இருக்கிறார் என்றறிவது ஞானம். 

இவ்வுலகம் பலவகையான பொருள்களால் ஆனது என்றெண்ணாமல் ஒரே பொருளால் வியாபிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்வது விஞ்ஞானம். 

நூல்களைப் படித்து அறிவது பரோக்ஷ ஞானம் (விஞ்ஞானம்) என்றும், அனுபவத்தால் அறிவது அபரோக்ஷ ஞானம் (மெய்ஞானம்) என்றறியப்படுகிறது.

உற்பத்தி, இருப்பு, ஆகியவற்றில் உள்ளோட்டமாக பின்னியிருப்பது, அனைத்தும் அழிந்தாலும் அழியாத சத்ய வஸ்து எதுவோ அதுவே ஸத் எனப்படும். 

ஒரு விஷயத்தை ஆராய வேதம், ப்ரத்யக்ஷம், மேலோர் வாக்கு, அனுமானம் ஆகிய நான்கு ப்ரமாணங்கள் உண்டு. அவற்றின்படி பார்த்தாலும், கண்களால் காணப்படும் பொருள் அனைத்துமே மாறுதலுக்குட்பட்டது என்பதால் சத்யம் இல்லை என்பது தெளிவாகும். விவேகியாக இருப்பவன் அவற்றைத்தள்ளி வைராக்யம் கொள்ள வேண்டும். 

சுவர்கம், யாக யக்ஞங்களால் அடையப்படும் உலகங்கள், ஸத்யலோகம் உள்பட அனைத்தும் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அழியக்கூடியவையே. அதனால் மெய்ப்பொருளை உணர்வது ஒன்றே எப்போதும் சாந்தி தரக்கூடியது. 

பக்தியோகத்தின் விளக்கத்தை உனக்கு முன்பே விரிவாகக் கூறினேன் உத்தவா! இருப்பினும் உன் ஆர்வத்தின் காரணமாக மீண்டும் விளக்குகிறேன்.

என்றான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, December 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 612

கண்ணன் அதன் பின் ஒவ்வொரு ஆசிரமத்திலிருப்பவரின் கடைமைகளையும் விளக்குகிறான். 

ப்ரும்மச்சாரி, இல்லறத்தான், வானப்ரஸ்தம் மற்றும் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாக விளக்குகிறான். நைஷ்டிக ப்ரும்மச்சர்யம், உஞ்ச வ்ருத்தி தர்மம், ஒவ்வொரு நிலையிலும் செய்யத் தக்கன எவை, தகாதன எவையெவை என்பதெல்லாம் கூறும் கண்ணன் அதே சமயம் பக்தியை விட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறான். 

பக்தனானவன் விதிக்கப்பட்ட குடும்பக் கடைமைகளைச் செய்துகொண்டு என்னை ஆராதிக்கலாம். அல்லது காட்டுக்குச் செல்லலாம். புதல்வன் இருப்பின் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஸந்நியாசியும் ஆகலாம். எந்த நிலையிலும் அவனது பக்தியை அவன் கைவிடாமல் இருப்பானானால் என்னால் காப்பாற்றப் படுகிறான். 

நான் ஈஸ்வரனாக இருந்தபோதிலும் கர்மாக்களை லீலையாகச் செய்கிறேன். அதே போல பக்தனும் விதிகளுக்கு அடிமையாகிச் செய்ய வேண்டியதில்லை. பலனளிப்பவன் நானே என்பதால் என் ப்ரீதிக்காக கர்மாக்களை ச்ரத்தையாகவும், சுமையாகக் கருதாமலும், அவற்றின் பிடிகளில் மாட்டிக்கொள்ளாமலும் செய்ய வேண்டும். 

ஞானிக்கு வேற்றுமை என்பதே இல்லை.

எப்போதாவது பேத புத்தி ஏற்பட்டாலும் அது மறைந்துவிடுகிறது. 

அனுபவிக்கும்போது மகிழ்ச்சி தரும் பொருள்கள் பின்னர் துன்பங்களை விளைவிக்கின்றன. 
என்னை அடையும் வழி அறியாவிடின் ப்ரும்மநிஷ்டரான ஒரு ஆசார்யரிடம் சரணாகதி செய்யவேண்டும். குருவிடம் திடமான பக்தியும் சிரத்தையும் வைக்கவேண்டும். அவரிடம் குற்றம் காணலாகாது. குருவும் நானும் ஒன்றே என்று எண்ணி பக்தி செய்யவேண்டும்.

காமத்தை அடக்காமல், புலன்களை வெல்லாமல், ஞான வைராக்யம் இல்லாமல் ஸந்நியாச ஆசிரமத்தில் இருப்பவன், மூங்கில் தண்டத்தைச் சுமந்து வயிற்றைப் போஷிப்பவன் ஆவான். அவன் ஸந்நியாச தர்மத்தை அழிப்பதோடு தனக்குள் ஆத்மாவாக விளங்கும் என்னை ஏமாற்றுகிறான். உடை மட்டும் காவியாக இருந்து உள்ளத் தூய்மை இல்லையெனில் இகத்திலும் பரத்திலும் சௌக்கியம் இல்லை.

துறவிகளின் முக்கியமான தர்மம் சாந்தியும், அஹிம்சையுமாகும்‌. வானப்ரஸ்தனின் முக்கிய தர்மம் தவமும் பக்தியும். இல்லறத்தானின் முக்கிய தர்மம் மற்ற ஜீவன்களைக் காப்பாற்றுவது, ப்ரும்மச்சர்யம், அனைவரிடத்தும் அன்பு, ஆகியவை. ப்ரும்மச்சாரியின் முக்கிய தர்மம் குரு சேவை செய்வதே‌.

இவ்விதமாக வேறு விஷயங்களில் மனத்தைச் செலுத்தாமல் எனக்குச் சேவை செய்து வருபவன், எல்லா ஜீவன்களிடமும் என்னையே காண்பவன் ஆகியோருக்கு என்னிடம் அசைக்க முடியாத பக்தி உண்டாகிறது.

அதன் காரணமாக உள்ளத் தூய்மையடைந்து தெள்ளறிவு பெற்று என்னையே அடைந்துவிடுவான்.
தன் இயல்பான கர்மாக்களுடன் பக்தியைச் சேர்த்து செய்வதே போதும். வேறு முயற்சிகள் இல்லாவிடினும் முக்திப் பாதை திறக்கும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, December 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 611

கண்ணன் தொடர்ந்தான். 
அந்தணர்களிடம் பக்தியுடன் இருப்பவர்களுள் நான் பலிச் சக்ரவர்த்தி. 

நடக்கும்‌ laசக்தி, ஜீரண சக்தி, பேசும் சக்தி, கைகளின் சக்தி, சுகங்கள் அனைத்தும் நானேயாவேன். தோலின் தொடு உணர்ச்சி, கண்களின் பார்வை, நாவின் ருசி, கேட்கும் திறன், வாசனையை உணர்தல் ஆகிய ஐந்து ஞானேந்திரியக் கர்மாக்களாகவும் நானே இருக்கிறேன். 

பூமி, வாயு, அக்னி, ஆகாயம், நீர் ஆகியவற்றின் தன்மாத்திரைகள், அஹங்காரம், மஹத் தத்துவம், ஜீவன், ப்ரக்ருதி, ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய விகாரங்களாக இருப்பவனும் நானே. 

தத்துவங்களின் எண்ணிக்கை, அவற்றின் லட்சணங்கள், உணரும் அறிவு, பயன் அனைத்தும் நானே. நானே ஈஸ்வரன், நானே ‌ஜீவன், நானே குணம், நானே எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறேன். என்னைத் தவிர வேறெந்தப் பொருளும் இங்கு இல்லை உத்தவா. 

பரமாணுக்களைக் கூட எண்ணிவிடலாம். என் விபூதிகளை எண்ண இயலாது. 
எங்கெல்லாம் தேஜஸ், செல்வம், புகழ், ஐஸ்வர்யம், தியாகம், அழகு, பொறுமை, பராக்ரமம், விஞ்ஞானம் ஆகியவை உள்ளனவோ அனைத்தும் என் அம்சங்களே. 

உத்தவா! நீ கேட்டபடி என் விபூதிகளை சுருக்கமாகச் சொன்னேன். ஆனால் இவையனைத்தும் மனோவிகாரங்கள். மனத்தால் சிந்திக்கத் தக்கதும், பேசத் தக்கதுமான எப்பொருளும் மெய்யாகாது. 

நீ ப்ராணனை வசப்படுத்தி ப்ரபஞ்சத்தை நோக்கிச் செல்லும் புத்தியை அடக்கவேண்டும். அப்போதுதான் பிறவிச் சுழலினின்று விடுபட இயலும். 

வாக்கையும் மனத்தையும் அடக்காமல் எவ்வளவு பூஜை, தியானம், விரதம் தானம் ஆகியவற்றைச் செய்தாலும் பயனில்லை. அவை பச்சை மண் குடத்தில் பிடித்த நீராக வீணாகும். 

என்னிடம் பக்தியுடன் மனம், வாக்கு, ப்ராணன் ஆகியவற்றை தன்வயப்படுத்தினால் வினைகள் முடிவடையும்.

அவரவர் எவ்வெந்த நியதியில் இருக்கிறார்களோ அதைப் பின்பற்றி என்னிடம் பக்தி செய்து பயனை எனக்கு அர்ப்பணிக்கவேண்டும்‌. அனைவரும் என் அம்சங்களே என்பதை மனத்தில் கொண்டால் துவேஷபுத்தி வராது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 610

உத்தவர் கேட்டார். கண்ணா! நீயே ப்ரும்மம் ஆவாய். எதனாலும் மறைக்க இயலாத மறை பொருள் நீயே. எல்லா பொருள்களிலும் வியாபித்திருக்கிறாய். நீ யார் யாருக்கு எவ்வெவ்வாறு காட்சி கொடுத்து முக்தி அளித்தாயோ அதையெல்லாம் நான் அறியலாமா? என்றார்.

கண்ணன் சின்னச் சிரிப்பை உதிர்த்துவிட்டுக் கூறலானான். உன் ஆர்வம் என்னை மகிழ்வூட்டுகிறது உத்தவா. இதே கேள்வியை முன்பொரு சமயம் அர்ஜுனன் போர்முனையில் நின்றுகொண்டு கேட்டான். 

அரசுரிமைக்காக உறவினரைக் கொல்வது பாவம். அதர்மம். என்று கூறி போரிலிருந்து விலக எண்ணினான். அப்போது நான் அவனுக்குப் பல விஷயங்களை எடுத்துக்கூறி ஞானத்தை போதித்தேன். 

நானே எல்லா உயிர்களின் ஆன்மா, நண்பன், தலைவன். அனைத்து பொருள்களின் தோற்றம், இருப்பு, அழிவு ஆகியவற்றின் காரணமும் நானே. நானே நற்கதி. காலமும் நானே. படைப்புக்கு முன்னும் பின்னும் இருப்பவன் நானே. ஜெயிக்க முடியாத பொருள்களில் என் ஸ்வரூபம் மனமாகும். வேதத்தை முழுமையாக அறிந்தவர்களுள் நான் ஹிரண்யகர்பன். மந்திரங்களுள் ப்ரணவம் நானே. அக்ஷரங்களில் நான் அ காரமாவேன். சந்தங்களில் காயத்ரியாவேன். தேவர்களுக்குள் இந்திரனும் அஷ்ட வசுக்களில் அக்னியும், பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஷ்ணுவும், பதினோரு ருத்ரர்களுள் நீலலோஹிதனும் நானே.

சித்தர்களில் கபிலர், பறவைகளில் கருடன், ப்ரஜாபதிகளில் தக்ஷன், பித்ருக்களில் அர்யமா, அசுரர்களில் ப்ரஹ்லாதனாக இருக்கிறேன். நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன் நானே. யக்ஷர்களில் குபேரன் நான். மனிதர்களில் அரசனாக இருக்கிறேன். குதிரைகளுள் உச்சைஸ்ரவஸ், உலோகங்களுள் தங்கம், தண்டிப்பவர்களுள் யமன், பாம்புகளில் வாசுகி. நாகராஜர்களுள் ஆதிசேஷன், கொம்பும், தெற்றுப்பல் உடைய விலங்குகளுள் சிங்கம் நான். நால்வகை ஆசிரமங்களில் சந்நியாசம் நான். வர்ணங்களுள் ப்ராமணன். புண்ணிய தீர்த்தங்களுள் கங்கை. நீர்நிலைகளுள் கடலாவேன்.

ஆயுதங்களுள் வில். வில்லேந்தியவர்களுள் பரமேஸ்வரன் நானே. உயர்ந்த ஸ்தானங்களுள் மேரு. பெரு முயற்சிக்குப் பின் அடையும் இடங்களுள் ஹிமாசலம், மரங்களில் அரசமரம், தானியங்களில் யவம் (நெல்).
புரோஹிதர்களில் வஸிஷ்டர். வேதம் அறிந்தவர்களுள் ப்ருஹஸ்பதி, படைத்தலைவர்களுள் ஸ்கந்தன், நன்னெறி பரவச் செய்பவர்களுள் ப்ரும்மா ஆவேன்.

ஐம்பெரும் வேள்விகளில் வேதம் ஓதுதல் என்னும் ப்ரும்ம யக்ஞம் நான்,‌ விரதங்களுள் அஹிம்சையாக இருக்கிறேன். தூய்மைப் படுத்துபவர்களுள் வாயு, அக்னி, சூரியன், நீர், வாய்ச்சொல் மற்றும் ஆன்மா அனைத்தும் நானே. அஷ்டாங்க யோகங்களுள் ஸமாதி, ஜெயிக்கும் ஆலோசனைகளுள் ரகசிய ஆலோசனை. அறிவு பூர்வமான வாதங்களுள் ப்ரும்ம வித்தை. தத்துவங்களில் எண்ணிக்கையில் அறிய இயலாத விகல்பமாக(infinity) இருக்கிறேன்.

பெண்களுள் சதரூபை, ஆண்களுள் ஸ்வாயம்புவ மனு, மாமுனிவர்களுள் நாராயண ரிஷி, ப்ரும்மச்சாரிகளுள் ‌‌ஸனத்குமாரர். ரகசியங்களுள் மௌனம், எப்போதும் விழிப்புடன் இருப்பவர்களுள் காலமாவேன். ருதுக்களில்‌ வசந்தம், மாதங்களில்‌ மார்கழி. நட்சத்திரங்களுள் அபிஜித்.

நான்கு யுகங்களில்‌ க்ருதயுகம் நான். அறிவாற்றல் மிக்கவர்களுள் தேவலர், அஸிதர். வியாஸர்களுள் க்ருஷ்ணத்வைபாயனர். பேரறிவாளர்களுள் சுக்ராச்சாரியார். 
என்னிடம் ப்ரேம பக்தி செலுத்துபவர்களுள் நீயாக இருக்கிறேன் உத்தவா. கிம்புருஷர்களுள் ஹனுமான். வித்யாதரர்களுள் சுதர்சனன். ரத்தினங்களுள் பத்மராகம். மலர்களுள் தாமரை. புல்வகைகளுள் குசம் எனப்படும் தர்ப்பை. வேள்விகளில் ஆஹுதிகளுள் பசு நெய் நான். நன்முயற்சி செய்பவர்களின் செல்வம், கபடர்களுள் சூதாடி. துன்பங்களைப் பொறுப்பவர்களின் பொறுமை. ஸாத்வீக குணமும் நானே. 

பலம் மிக்கவர்களின் பலம், பக்தர்களின் பயன் பாராக் கர்மம் நான். விஷ்ணு மூர்த்தங்களில் வாசுதேவன். கந்தர்வர்களில் விசுவாவஸு. அப்ஸரஸ்களில் பூர்வசித்தி. மலைகளின் அசையாத் தன்மையும், புவியின் மணமாகவும் இருக்கிறேன். நீரின் நீர்மை என்பது நானே. ஒளிபொருந்தியவைகளுள் அக்னி. சூரிய சந்திரர்களின் கிரணங்கள் நான். ஆகாயத்தில் அதன் குணமான சப்தம் நான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, December 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 609

கண்ணன் தொடர்ந்தான். மனம், உடல், வாயு ஆகியவற்றுடன் சேர்ந்து என்னை தியானிப்பவனுக்கு மனோஜவம் என்ற சித்தி கிடைக்கும். அதனால் அவனால் அவன் விரும்பும் இடத்திற்கு நினைத்த கணமே செல்லமுடியும். 

மனத்தைக் காரணமாக வைத்து வேறு வடிவத்தை அடைய விரும்பினால் அது கிடைக்கும். அதற்கு அவன் சித்தத்தை முழுவதுமாக என்னிடம் ஊன்றி மாற விரும்பும் வடிவைச் சிந்திக்கவேண்டும். 
ஒரு யோகி மற்றொரு உடலில் ப்ரவேசிக்க விரும்பினால் அவன் செய்யவேண்டியது யாதெனில், அடைய வேண்டிய உடலில் தான் இருப்பதாகச் சிந்திப்பது. அப்படிச் செய்தால் சூக்ஷ்ம ரூபமான ப்ராணன் வாயுவுடன் சேர்ந்து மலருக்கு மலர் தாவும் வண்டைப்போல் தாவிவிடும். 

தான் விரும்பும் நேரத்தில் மரணம் அடைய விரும்புபவன் குதிகாலினால் மலத்துளையை மூடிக்கொண்டு ப்ராணனை இதயம், மார்பு, கழுத்து, தலை என்ற வரிசையில் எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர் உச்சந்தலையில் உள்ள ப்ரும்மரந்திரத்தில் வெளியேற்றி ப்ரும்மத்தில் லயிக்கச் செய்து உயிரை விடவேண்டும்.

ஒருக்கால் மேலுலகங்கள் சென்று விளையாட ஆசை இருப்பின் என்னுடைய ஸகுண ரூபத்தை தியானிக்க வேண்டும். அப்போது ஸத்வகுணமுள்ள அப்ஸரஸ்கள் வந்து அவனை விமானத்தில் ஏற்றி மேலுலகங்களுக்கு அழைத்துச் செல்வர்.

சத்ய சங்கல்பனான என்னிடம் சித்தத்தை நிறுத்துபவனின் எண்ணங்கள் யாவும் சத்யமாகும்.   
ஈஷித்வமும், வசித்வமும் என் இயல்புகள். அதனால் என் ஆணையை எவராலும் மீற இயலாது. எல்லோரும் என் ஆதிக்கத்திற்குப் பணிவார்கள். என்னைத் தியானிப்பவனின் ஆணையையும் எவராலும் மீற இயலாது.

என்னிடம் காரணமற்ற பக்தி செலுத்தி மனத்தூய்மை பெற்று தாரணையைத் தெரிந்து கொண்டால் 
பிறப்பு, இறப்பு, முற்கால விஷயங்கள் அனைத்தும் புலப்படும். 

நீர்வாழ் பிராணிக்கு நீரால் அழிவு ஏற்படாது. அதுபோல் என்னிடம்‌ ஒன்றிய சித்தமுடையவன் யோகமயமாகிவிடுகிறான். நீரும் நெருப்பும் அவனை ஒன்றும் செய்யாது.

ஸ்ரீவத்ஸம், சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றுடன் என்னை தியானிப்பவரை எவராலும் வெல்ல இயலாது. 

எல்லா வகையான சித்திகளும் என்னை தியானிப்பது ஒன்றினாலேயே கிடைக்கும். ஆனால் உத்தவா! என்னிடமே ஒன்றுபவர்களுக்கு இவையெல்லாம் இடையூறுகள் என்று சொல்கிறார்கள். இவை என்னை அடையத் தாமதப்படுத்தும். 

பிறப்பு, தவம், மந்திரம் ஆகியவற்றால் என்னென்ன சித்திகள் கிடைக்கிறதோ அவையனைத்தும் யோகத்தினாலேயே கிடைப்பவை. ஆனால் அவற்றால் யோகத்தின் பயனான நான் கிடைக்கமாட்டேன். 

அத்தனை விதமான யோகங்கள், ஸாங்க்யம், தர்மம் அனைத்திற்கும் நானே தலைவன். 

எல்லா ப்ராணிகளுக்குள்ளேயும் வெளியேயுமாய் முழுவதுமாக வியாபித்திருப்பவன் நானே என்று சொல்லி கண்ணன் சிரித்தான்.
உத்தவர் திருதிருவென்று விழித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, December 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 608

யோகதாரணையால் அடையப்படும் சித்திகளைப் பற்றிக் கூறினேன். இவ்வகை சித்திகள் எவ்வாறு கிடைக்கின்றன என்பதைக் கூறுகிறேன் கேள் உத்தவா! என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களின் ஆதார வடிவம் தன்மாத்திரை எனப்படும். அதுவும் என் ஸ்வரூபமே. அவைகளின் சூட்சும ஸ்வரூபம் நான்தான். தன் மனத்தை தாரணை செய்து தியானிப்பவர்க்கு அணிமா ‌சித்தி கிடைக்கும்.

மஹத் என்னும் தத்துவமும் நானே. அந்த தத்துவத்தில் மனத்தை நிலைநிறுத்துபவனுக்கு மஹிமா சித்தி கிடைக்கிறது.

நான் அணுவுக்கும் அணுவாக அத்தனை இடத்திலும் நிறைந்திருக்கிறேன். அந்தப் பரமாணு ரூபத்தில் லயிப்பவன் லகிமா என்னும் சித்தியை அடைகிறான். 

மனம் எல்லாப் புலன்களையும் ஆட்டிப் படைக்கிறது. அஹம் என்னும் தத்துவத்தின் ஸத்வகுண மாறுபாட்டினால் தோன்றுகிறது. என் அஹங்கார தத்துவத்தில் மனத்தை நிறுத்தி புலன்களை அடக்கி ஆளும் யோகிக்கு ப்ராப்தி என்ற சித்தி கிடைக்கும்.

பிறப்பற்ற நானே மஹத் ஆவேன். நானே அனைத்திற்கும்‌ காரணமான சூத்ராத்மா அதாவது மூலாத்மா. என்னிடம் மனத்தை நிறுத்துபவர் ப்ரகாம்யம்‌ எனும் சித்தியை அடைவார். அவர் ப்ரும்மாண்டம் முழுவதையும் ஆளும் சக்தி பெறுவார்.

எங்கும் வியாபித்த பொருள் நான். முக்குணத்தைத் தூண்டும் மாயையை ஆள்பவனும் நானே. ப்ரம்மாண்டத்தை அழிக்கும் சக்தி படைத்த காலன் நான். க்ஷேத்ரமாகிய உடல், க்ஷேத்ரக்ஞனாகிய ஜீவாத்மா இரண்டையும் தூண்டுபவன் நான். இப்படியாக எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் என் விஷ்ணு வடிவத்தில் லயிப்பவன் ஈஷித்வம்‌ என்ற சித்தியைப் பெறுகிறான்.

பகவான் என்ற சொல்லுக்குப் பொருள் நாராயணன் எனப்படும் நானே. விராட், ஹிரண்யகர்பன், காரணம் என்ற நிலைகள் தாண்டி நான்காவதாக நிற்கும் என்னிடம் மனத்தைச் செலுத்தும் யோகிக்கு வசித்வம் கைவரப்பெறும்.

நிர்குணப்ரும்மமாக என்னை உபாசிக்கும் யோகிக்கு எல்லா விருப்பங்களும் அழிகின்றன. அவன் காலவசாயிதா என்ற சித்தியை அடைகிறான். 

ச்வேத த்வீபத்தின் தலைவனான என்னை தியானிப்பவன் பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம் ஆகிய ஆறு துன்பங்களையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறான்.

அனைத்துப் ப்ராணன்களின் ஸ்வரூபமான ஆகாசம் நானே. இவ்வடிவில் என்னை தியானம்‌செய்து அநாஹத ஒலியை தியானம் செய்பவன் ஆகாயத்திலுள்ள எல்லா உயிர்களின் ஒலிகளையும் கேட்கும் சக்தி பெறுகிறான்.

தன் கண்களில்‌ சூரியனையும் சூரியனை நானாகவும் தியானம் செய்பவன் மிக நுட்பமான பார்வையைப் பெறுவான். அவன் இருக்குமிடத்திலிருந்தே உலகம் முழுவதையும் காணும் சித்தியை அடைவான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, December 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 607

பகவான் தொடர்ந்தான். உடலுக்குள் இதயத்தாமரை தண்டு மேலாகவும் மொட்டு கீழாகவும் அதன் எட்டு தளங்களும் மேல் நோக்கி மலர்ந்திருப்பது போலவும் நடுவில் ஒரு காய் இருப்பது போலவும் பாவனை செய்யவேண்டும். அந்தக் காயில் சூரியன் சந்திரன் அக்னி ஆகியவை ஒன்றன்மேல் ஒன்றாக இருப்பதாகக் கொண்டு அதன் மேல் என்னுடைய இந்த உருவத்தைப் பார்க்கிறாயல்லவா? இதை தியானம் செய்யவேண்டும்.

அழகாக அளவாக அமைந்த உறுப்புகள், அமைதி கொண்ட அழகிய முகம்,‌ நீண்ட நான்கு கைகள், அழகிய கழுத்து, செவ்வரியோடும் கன்னங்கள், மனம் மயக்கும் புன்னகை, மின்னும் மகர குண்டலங்கள், பட்டாடை, கார்மேக வர்ண மேனி, மார்பில் ஸ்ரீ வத்ஸம், சங்கு, சக்ரம், கதை, வனமாலை பாதங்களில் நூபுரம், கழுத்தில் கௌஸ்துபம், கிரீடம், கங்கணம், அரைஞாண், தோள்வளை, அழகிய பார்வை, இத்தகைய மனம் மயக்கும் வடிவத்தின் ஒவ்வொரு அங்கமாக தியானம் செய்யவேண்டும். புலன் நுகர் பொருள்களிலிருந்து மனத்தைத் திருப்பி என்னிடம் செலுத்த வேண்டும். பூரண வடிவத்தியானம் கைகூடியபின், ஏதேனும் ஒரு அங்கத்தில் மனத்தை நிறுத்தவேண்டும்.

வேறு அங்கங்களை விட முகத்தில்‌ நிறுத்துவது சிறந்தது. முகத்தில் நிலைபெற்ற சித்தத்தை ஆகாயத்தில் செலுத்தி, பின்னர் எதைப் பற்றியும் நினைக்காமல் இருக்கப் பழகவேண்டும்.

என்னிடம் மனத்தைச் செலுத்தும் யோகிக்கு மற்ற எல்லாவற்றின் மேலுள்ள பற்று விட்டுவிடும்.

இவ்வாறு தியானம் கைகூடி சித்தத்தை என் மேல் நிறுத்தி அதை வெற்றி கொண்டவுடன் அவனுக்கு எல்லா சித்திகளும் கைவரப்‌பெறும்.

உத்தவர் இடைமறித்தார். கண்ணா! சித்தி என்றால் என்ன? எந்த விதமான தாரணையினால் (மனப்பயிற்சியால்) சித்தி வரும்? சித்திகள் எத்தனை? உன்னால்தான் தெளிவாகக் கூற இயலும். ஏனெனில் நீதான் யோகிகளுக்குப் பலனைக் கொடுப்பவன்.

பகவான் பொறுமையுடன் பதில் கூறத் துவங்கினான்.

உத்தவா! யோகத்தில் முழுமை பெற்ற யோகிகள் சித்திகள் பதினெட்டு வகைப்படும்‌ என்கிறார்கள். அவைகளுள் எட்டு சித்திகள் என்னை மையமாகக் கொண்டவை. மீதி பத்தும் ஸத்வகுணத்தினால் அடையத் தக்கவை. 

அணிமா, மஹிமா, லஹிமா ஆகிய மூன்றும் உடலைச் சார்ந்தவை. விரும்பியதை அடையும் சித்தி ப்ராப்தி ஆகும். அது பொறிகளைச் சார்ந்தது. நேரில் பார்த்ததும் கேட்டதுமான விஷயங்களை அனுபவிப்பது பிராகாம்யம் எனப்படும். மாயையும் அதன் காரியங்களையும் கையாளுவது ஈஷிதா எனப்படும். புலன் இன்பங்களில் பற்றற்று இருப்பது வஶிதா எனப்படும். தான் விரும்புவதின் எல்லை வரை சென்று அனுபவிப்பது எட்டாவது சித்தி. இவை எட்டும் என்னிடம் இயற்கையாகவே உள்ளவை. 
இவைகளைத் தவிரவும் பல சித்திகள் உண்டு.

பசி, தாகம், காமம், குரோதம் ஆகியவை இல்லாமல் இருப்பது, தூரத்திலுள்ள பொருளைப் பார்ப்பது, ஒலிகளைக் கேட்பது, மனம்போல் வேகமாகச் செல்வது, விரும்பிய வடிவம் எடுப்பது, பிற உடலில் நுழைவது, விரும்பிய நேரத்தில்‌ மரணம், தேவர்களைப் பார்ப்பது, மனத்தில் நினைத்ததை அடைவது, தன் எண்ணம் ஒருபோதும் தடைபடாமல் இருப்பது, ஆகியவை பத்து சித்திகள். 

இவை தவிர யோகதாரணையால் உண்டாகும் சித்திகள் ஐந்து. அவை, மூன்று காலங்களில் நடப்பவற்றையும்‌ அறிவது, விருப்பு, வெறுப்பு, தட்ப வெப்பம், சுக துக்கம், ஆகியவற்றை வெல்வது, மற்றவர் நினைப்பதைத் தெரிந்துகொள்வது, அக்னி, சூரியன், தண்ணீர், விஷம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, எவராலும் வெற்றிகொள்ள இயலாமல் இருப்பது ஆகியவையாகும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.. .

Saturday, December 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 606

பகவான் தொடர்ந்தான்.
உத்தவா! உத்தம பக்தனின் மனம் முழுவதும் தூய்மையானது. அவனுக்கு என்னை எண்ணுங்கால் உடலில் புல்லரிப்பு, மனம் உருகுதல், ஆனந்தக் கண்ணீர், ஆகியவை ஏற்படும்‌. சொல் தடுமாறும். சில சமயம் அழுவான், சில சமயங்களில் சிரிப்பான். வெட்கம் விட்டு உரத்த குரலெடுத்து என் பெயரைப் பாடுவான். அவனால் இவ்வுலகம் புனிதமடையும். 

என் பக்தனுக்கு என்னைப் பற்றிய சிந்தனை ஒன்றினாலேயே கர்ம வாசனைகள் அனைத்தும் நீங்கும். தன் இயல்பு வடிவான என்னை அப்பிறவியிலேயே அடைந்துவிடுவான்.

புலநுகர் பொருள்களை நினைக்கும்‌ மனம் அவற்றில் மாட்டிக்கொள்ளும். அதேபோலவே என்னை நினைக்கும்‌ மனம் என்னிடம் லயமாகிவிடும்.

கனவில் ஒருவனின் விருப்பம் நிறைவேறினால் அது மெய்யாகுமா? அதுபோலவே பொய்யான விஷயங்களை நினைப்பதால் என்ன பயன்?

ஆன்ம சாதனை செய்பவன் பெண்ணாசையை விடவேண்டும். அதனால் பெருந்துன்பம் விளையும். 

உத்தவன் கேட்டார். முக்தியை அடைய விரும்புபவன் உன்னை எப்படி தியானிக்கவேண்டும்‌ கண்ணா?

கண்ணன் உத்தவனைப் பார்த்து ஒரு மந்தஹாசம் செய்தான்.

பின்னர் கூறத் துவங்கினான். 

அதிக உயரமாகவும் இல்லாமல் மிகவும் தாழ்ந்தும் இல்லாமல் சமமாக உள்ள இருக்கையில் அமரவேண்டும். வளைவில்லாமல் நேராக உடலை வைத்துக்கொண்டு சௌகர்யமாக ஒரு ஆசனத்தில் அமரவேண்டும். இரண்டு கைகளையும் மடியில் வைத்துக்கொண்டு கண்பார்வையை மூக்கின் நுனியில் நிறுத்தவேண்டும். பின்னர் ப்ராணாயாமத்தினால் சுவாசப் பாதையை சுத்தம் செய்யவேண்டும். 

இதயத்தில் தாமரைத்தண்டு போல, தைல தாரை போல, தொடர்ந்து மெலிதாகக் கேட்கும் ஓங்காரத்தில் கவனம் செலுத்தவேண்டும். ப்ராணன் மூலமாக அதை மெல்ல மெல்ல மேலே கொண்டுவந்து மணி போன்ற நாதத்தில் நிறுத்தவேண்டும். 

இம்மாதிரியாக ஓங்காரத்துடன் ப்ராணாயமத்தைப் பயிற்சி செய்ய வெகு சீக்கிரம் சுவாசம் வசப்படும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே

Tuesday, December 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 605

பகவான் தொடர்ந்தான். 

சிலர் தினசரி கர்மாக்களை‌ மோக்ஷ சாதனம் என்றெண்ணுகின்றனர். சிலர் புகழை ஆன்ம வழியென நம்புகிறார்கள். இன்னும் சிலர் புலன்டக்கம், ஸத்யம் ஆகியவற்றை மோக்‌ஷத்திற்கான வழி என்கிறார்கள்.சிலர் தன்னலத்தையும், செல்வத்தையும் தியாக‌ம் செய்தால் முக்தி கிட்டும் என்று நம்புகிறார்கள்.

கர்ம யோகிகள், வேள்வி, தானம், விரதம், நியமம், யமம் ஆகியவற்றால் முக்தி கிட்டும் என்கிறார்கள். இவைகளால் அந்தந்த கார்மாக்களுடைய மேலுலகங்கள் கிட்டும். ஆனால் அவற்றின் பலனுக்கேற்பவே அவ்வுலக வாசம். அந்த ஆனந்தம் குறுகிய காலம்தான். அதன் பின் மீண்டும் அஞ்ஞான இருள்தான். 

என்னிடம் மனத்தை ஈடுபடுத்தி வேறெதிலும் நாட்டமின்றி என்னுள் ரமிப்பவர் அடையும் ஆனந்தமே எல்லையற்றது.

அதை போகங்களில் ஈடுபடுபவனால் அனுபவிக்க இயலாது. பொறிகளை அடக்கி, விருப்பமற்று, சாந்தமாக சமபுத்தியுடன் இருப்பவனுக்கு என்னிடம் சுலபமாக மனம் லயிக்கும். அவனுக்கு எந்த இடமானாலும் சுகமே. 

என்னிடம்‌ ஈடுபடுபவனுக்கு ஸ்வர்க‌ லோகமோ, அரச பதவியோ, யோக சித்திகளோ, முக்தியோ‌ கூட இரண்டாம் பட்சம் தான். அவன் அவற்றை விரும்புவதில்லை.

இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று என் பச்சை மாமலைத் திருமேனியில் ஈடுபடுவான். 

பக்தனிடம் நான் வைக்கும் அன்பு அளவு கடந்தது. அவ்வளவு அன்பை ப்ரும்மா, லக்ஷ்மி, சங்கர்ஷணன், ஏன் என்னிடம் கூட நான் வைக்கவில்லை.

எவன் எல்லாவற்றையும் வாசுதேவனின் வடிவம் என்று பார்க்கிறானோ அவனே மஹாத்மா. அவனுடைய பாத தூளியால் என்னுள் விளங்கும் அண்டமெல்லாம் புனிதமடையட்டும் என்று நான் அவன் பின்னாலேயே எப்போதும் செல்கிறேன்.

என்னிடம் புத்தியை செலுத்தி எந்த பொருளிலும் விருப்பமற்று, நிலையான மனம் கொண்டு மன அமைதியுடன் விளங்கும் சாதுக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை வேறெவரும் அறியக்கூட இயலாது. 

என் பக்தன் புலனுகர் பொருள்களில் ஈடுபட்டாலும் அவற்றில் மயங்குவதில்லை. என்னிடம் உள்ள நிலையான இச்சையால் அவனதில் மயங்காமல் தப்பித்துக் கொள்கிறான். மயங்கினாலும் விரைவில் விடுபடுவான்.

என்னிடம் கொண்ட பக்தி அக்னி போன்றது‌. அனைத்துப் பாவங்களையும் எரித்து சாம்பலாக்கிவிடும்.

பக்தி செலுத்துவதால்‌ ஏற்படும் சௌக்கியம் வேறெந்த மார்கங்களிலும் கிடைக்காது.

சான்றோர்களின் ஹ்ருதயம் நான். அவர்களது ஆன்மாவாவேன். எக்குலத்தில் பிறந்தாலும் என் பக்தியினால் தூய்மையடைந்துவிடுகிறான்.

நேர்த்தியான சீருடை அணிந்து, மிகுந்த ஒழுக்கம் கடைப்பிடித்து, ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்தாலும் படிக்கவில்லை என்றால் எப்படிப் பயனில்லையோ, அதுபோல மிகுந்த ஆசார அனுஷ்டாங்களுடனும் நியமங்களுடனும், தவம், நற்கல்வி, எல்லாம் இருந்தும் என்னிடம் பக்தி இல்லையென்றால் முக்தி கிடைக்காது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..