Thursday, January 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 390

அகில கலாதி குரு: நநர்த்த |
என்கிறார் ஸ்ரீ சுகர்.

எல்லாக் கலைகளுக்கும் குருவான கண்ணன் நர்த்தனமாடினான் என்பதாக. 

ஏன் அப்படிச் சொன்னார்? ஆறே வயரதான கண்ணன் எங்கே சென்று நாட்டியம்‌ கற்றுக்கொண்டான்? யாரிடம் குழலிசைக்கக் கற்றுக்கொண்டான். கண்ணனுக்கு எதையும் யாரிடமும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவனே அனைத்துக் கலைகளுக்கும் குரு.

க்ருஷ்ணம் வந்தே 
ஜகத் குரும்

காளியன் ஆங்காரத்தோடு தன் நூறு தலைகளையும் ஒவ்வொன்றாய்த் தூக்கி தூக்கிக் கண்ணனைத் தீண்ட முற்பட்டான். கண்ணனுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. தூக்கிய தலைகளை எல்லாம் தன் தாமரைப்‌பாதத்தால் மிதித்துத் துவைத்தான். காளியனின் தலையில் இருந்த நாகரத்தினங்களின் ஒளியால் கண்ணனின் சிவந்த பாதங்கள் மேலும் செம்மையாகத் தனி விளக்கு பொருத்தியது போலவும், கிழக்கே எழும் அருணனைப் போலவும் ஒளிர்ந்தன.

தலையில் இருந்த படங்கள் கிழிந்து புண்ணாயின. மடு முழுவதும் காளியன் கக்கிய விஷத் துளிகளும், ரத்தத்துளிகளுமாகச் சிதறி, நீலமும் சிவப்புமாகப் புஷ்பங்களை வாரி இறைத்தாற்போல் காட்சியளித்தது. 

மேலிருந்து தேவர்கள் கண்ணனின் நடனத்திற்கேற்ப வாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் அதற்கு ஜதியும் கொன்னக்கோலும் சொல்லத் துவங்கினர். தேவமங்கையர் பூமாரி பொழிந்தனர்.

கண்ணனுக்கு ஆபத்தில்லை என்றுணர்ந்த கோப கோபியர்கள் ஆச்சரியத்துடன் இக்காட்சியைத் தொலைவிலிருந்து  கண்டு ஆனந்தம் கொண்டனர்.

ஒவ்வொரு தலையிலிருந்தும் குருதி வடிய காளியன் மூர்ச்சை அடைந்தான்.

சற்று மூர்ச்சை தெளிந்தால் கோபத்துடன் ஒரு படத்தைத் தூக்கினான். கண்ணன் அதை உடனே மிதித்துத் த்வம்சம் செய்தான்.

காளியனின் உயிர் ஆபத்திலிருப்பதைக் கண்ட அவனது மனைவிகள் ஓடிச்சென்று தங்களது குழந்தைகளைக் கொண்டுவந்து கண்ணனின் திருவடி முன்னால் போட்டு தாங்களும் விழுந்து சரணாகதி செய்தனர்.

இறைவா! தாங்கள் தீயோரை அடக்கவே பிறவி எடுத்திருக்கிறீர்கள். பிழை செய்த இவருக்கு இந்த தண்டனை ஏற்றதே. தாங்கள் தமது அனைத்துக் குழந்தைகளிடமும் சமநோக்குடையவர். புருஷார்த்தங்களை அடையத் தடையாக இருக்கும் பாவ வினைகளை ஒழிக்கவே தண்டனை தருகிறீர்கள். இந்த பாம்புப் பிறவி எங்கள் பாவத்தால் வந்தது. உங்களது கோபமும் தண்டனையும் எங்கள் பாவத்தை நீக்கி அருள் செய்யவே ஆகும்.

இவர் முற்பிறவுகளில் என்ன தவம் செய்தாரோ. என்ன தர்மங்கள்‌ செய்தாரோ. அன்னை மஹாலக்ஷ்மி விரும்பும் தங்கள் திருவடி இவருக்குக் கிடைத்துவிட்டதே. 

தங்கள் திருவடிக் கமலங்களை அடைந்தவர்கள் உலகனைத்திற்கும் ஒரே அரசனாகும் நிலை கிடைத்தாலும் விரும்புவதில்லையே. தமோ குணத்தால் ஆட்பட்ட பாம்பு அரசருக்குத் தங்கள் கருணையால் திருவடி கிடைத்துவிட்டது.

நமஸ்துப்யம் பகவதே புருஷாய மஹாத்மநே|
பூதாவாஸாய பூதாய பராய பரமாத்மநே||

எண்ண எண்ணக் குறையாத செல்வமே! எல்லோர் மனத்திலும் விளங்குபவரே! உங்களுக்கு நமஸ்காரம். எல்லா உயிர்களின் இருப்பிடமும், பரமாத்மாவுமான தங்களை வணங்குகிறோம்.

மேலும் பலவாறு மிக அழகான ஸ்லோகங்களால் துதித்தனர் காளியனின் மனைவிகள்.

பின்னர், தாங்கள் இரக்கத்திற்குரிய எங்களுக்கு எங்கள் கணவர்தான் உயிர். அவரை எங்களுக்குத் தந்தருளுங்கள். நாங்கள் தங்கள் ஏவலுக்கு அடிபணிகிறவர்கள். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள். தங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு முழுமனத்தோடு செய்பவனுக்கு எந்தத் துன்பமும் இல்லை.

இவ்வாறு அவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதும், காளியன் மீதிருந்த திருவடியைக் கண்ணன் எடுத்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Tuesday, January 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 389

கோகுலத்தில் சில துர்நிமித்தங்கள்  தோன்றின. வானில் கொள்ளிக்கட்டை விழுவது, பூமி நடுங்குவது, ஆண்களின்  உடலின் இடப்புறம் துடிப்பது போன்ற மிகப்பெரிய உத்பாதங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு ஏதோ ஆபத்து என்று நந்தன் அஞ்சினான். 

கண்ணன் பலராமன் இன்றி தனியாக மாடு மேய்க்கச் சென்றிருப்பது நினைவு வர, பதைபதைத்துப் போனான்.

அனைவரும் கண்ணனைக் காணக் கிளம்பினர்.

வழியெங்கிலும் தாமரை, சங்கு, சக்ர ரேகைகள் கொண்ட கண்ணனின் பாதச் சுவடுகளைப் பின்பற்றினர். அப்போது எதிரே  ஒருவன் வந்து காளியன் மடுவில் கண்ணன் குதித்ததைச் சொல்ல, அனைவரும் நேராக மடுக்கரைக்கு ஓடிவந்தனர். 

அங்கே கண்ணனை முழுதுமாக மறைத்துச் சுற்றிக்கொண்டிருந்தது காளியன்.

அதைக் கண்டதும் யசோதையும் பல பெண்களும் மூர்ச்சையாகி விழுந்தனர். 

கண்ணனின் பெருமையை மறந்து நந்தனும் மற்ற கோபர்களும் நீரில் இறங்கத் துணிந்தனர்.

அப்போது பலராமன் அவர்களைத் தடுத்தான்.

மூர்ச்சை தெளிந்து எழுந்த யசோதை மடுவில் இறங்க ஓடினாள். மற்ற கோபிகள் அவளைப் பிடித்து, கண்ணனின் பெருமைகளை நினைவு கூர்ந்தனர். கண்ணன் வந்துவிடுவான் என்று ஆறுதல் சொன்னாலும் அவர்களுக்கும் பயமாகத்தான் இருந்தது. 

பலராமன் கண்ணனின் பெருமைகளைப் பலவாறு எடுத்துச் சொல்லி, கண்ணன் வந்துவிடுவான், அவனைப் பார்த்துக்கொள்ள அவனுக்குத் தெரியும். நாம் சென்றால் அவனுக்குத் தொந்தரவாகக் கூடும். என்று விளக்கினான்.

அனைவரும் தவிப்பதைப் பார்த்த கண்ணன், விளையாடியது போதும் என்றெண்ணினான்.

தன் உடலைப் பருக்கச் செய்தான். இறுக்கிச் சுற்றிக்கொண்டிருந்த காளியனுக்கு வலிக்கத் துவங்கியது. வலியினால் அவன் கண்கள் சிவந்தன.

வலி பொறாமல், வேறு வழியின்றித் தன் பிடியைச் சற்று தளர்த்தினான் காளியன். கண்ணன் ஜல்லென்று வழுக்கிக்கொண்டு மேலே வந்தான். 

மீண்டும் கண்ணனைப் பிடிக்கச் சுற்றி சுற்றி வந்தான் காளியன். கண்ணனும் சுற்றி சுற்றி நன்றாக ஆட்டம் காட்டினான். 

சுற்றி சுற்றிக் களைப்படைந்த காளியன் மீது லாவகமாகத் தாவி ஏறினான் கண்ணன். காளியன் ஒவ்வொரு தலையாகத் தூக்க தூக்க அவற்றின் மீது காலை வைத்து மாற்றி மாற்றிக் குதித்தான் கண்ணன். இவ்வாறு குதித்ததைத் தாள லயத்துடன் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடித் தள்ளியிருக்கிறார்.

தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கோபியர்க்கு அது நாட்டியம் போல் தோன்ற அவர்கள் கரதாளம் போட்டனர். அதற்கேற்பக் கண்ணனும் குதித்தான்.

கண்ணனுக்கு ஆபத்தில்லை என்றுணர்ந்த கோபர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அவர்களை நம்ப வைக்க, கண்ணன் தன் இடுப்பிலிருந்த குழலை எடுத்து இசைக்கத் துவங்கினான்.

தையத் திகுதிகு 
தையத் திகுதிகு
தையத் திகுவென ஆடும்
கண்ணன் இவனிடம் மையல் கொண்டேன் தோழி நானே
-- மதுரகீதம்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




ஸ்ரீமத் பாகவத பழம் - 388

மாடுகளின் குரலைக் கேட்டுக் கண்ணன் ஓடிவருவதற்குள் வேறு சில கோபர்களும் சிறுவர்களும் தாகம் மிகுதியால் அறிவிழந்து மடுவின் நீரைக் குடித்துவிட்டனர்.

கண்ணன் வந்து பார்க்கும்போது உயிரற்ற சில‌ மாடுகள், சிறுவர்கள், மற்றும் கோபர்கள் மடுக்கரையில் இறந்து கிடக்க மற்றவர்கள் அரற்றிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே, அந்தப் பக்கம் செல்ல வேண்டாம் என்று நந்தன் காவலர்களை விட்டு எச்சரித்திருந்தபோதிலும் அறியாமல் வந்துவிட்டனர்.

அம்மடுவினுள் கொடிய விஷமுள்ள காளியன் என்ற கருநாகம் வசித்து வந்தது. அதன் விஷத்தால் யமுனையின் அந்த மடு நீர் முழுவதும் விஷமாகிவிட்டிருந்தது. அந்த நீரின் மேல் பட்ட  காற்று பட்டால் கூட அவ்வழிச் செல்லும் பறவைகளும் விலங்குகளும் மயங்கி உயிரிழந்து வந்தன. மடுக்கரையில்  மிக உயரமான மரங்கள்‌ தவிர சிறிய தாவரங்கள் எதுவும் உயிர்ப்புடன் இல்லை.

தீயோரை அடக்குவதற்காகவே அவதாரம் செய்திருந்த கண்ணன், தன் மாடுகள்,  சிறுவர்கள், மற்றும் கோபர்களைத் தன் அமுதப் பார்வையால் எழுப்பினான்.

எமலோகம் வரை சென்று மீண்டு வந்த அவர்களுக்கு மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அனைவரும் இது கண்ணன் செயல்தான் என்றுணர்ந்து அவனைக் கொண்டாடினர்.

கண்ணன் தன் பீதாம்பரத்தை மூலக் கச்சமாக ஏற்றிக் கட்டிக்கொண்டான். முண்டாசை அவிழ்த்து இடுப்பில் இறுக்கிக் கட்டினான். கீழே விழுதுவிடாதபடி புல்லாங்குழலை மட்டும் செருகிக் கொண்டான்.

அருகில் இருந்த ஒரு உயரமான கடம்ப மரத்தில் ஏறினான். தோள்களையும் தொடைகளையும் தட்டிக்கொண்டு வில்லிலிருந்து புறப்படும் அம்பைப்போல் விஷ நீரில் வேகமாகக் குதித்தான். 

பாம்பின் விஷத்தால் ஏற்கனவே கொதித்துக்கொண்டிருந்த மடுவின் நீர்,‌ கண்ணனின் வேகத்தால் இன்னும்‌ உயரமாக மேலெழும்பியது.

விஷ நீரினால் கண்ணனுக்கு ஒன்றும் ஆகாதது அதிசயம் அல்ல. ஏனெனில் அத்தனை விஷ ஜந்துக்களுக்கும் விஷத்தை அளித்ததும் அவனேயன்றோ.

மடுவினுள் பாய்ந்த கண்ணன், மதயானை போல் கைகளை வீசி வீசி நீரைக் கலக்கினான்‌. அதனால் பேரலைகள் எழும்பின. 

நதியின் அடிப்புறத்தில் உறங்கிக்கொண்டிருந்த காளியனுக்கு மிகுந்த கோபம் வந்தது. தன் இருப்பிடத்தில் வந்து தொந்தரவு செய்பவன் யாரென்று பார்க்க மேலெழும்பி வந்தான்.

அங்கே மேக வண்ணன், மார்பில் ஸ்ரீ வத்ஸம், சிறிய இடை, அரையில்‌ மஞ்சள்‌ பட்டாடை, சிவந்த சரணங்கள், அழகிய திருமுகம் இவ்வளவும் கொண்ட அழகிய சிறுவன் பயமின்றி நீரில் விளையாடுவதைக் கண்டான். தன் விஷக்காற்று பட்டாலே மனிதர்கள் மடிந்துவிடுவர். அப்படியிருக்க, விஷநீரில் ஆனந்தமாக விளையாடுகிறானே என்று ஆச்சரியம் வந்தாலும், அவனை அடக்க எண்ணி முழுவதுமாய்க் கண்ணனின் உடம்பைச் சுற்றிக் கொண்டான்.

கண்ணனைத் தீண்டும் இன்பத்திற்காக ஆயிரவர் ஏங்கித் தவமிருக்க, இங்கே காளியனுக்கு இந்தா எடுத்துக்கொள் என்பதுபோல் தன்னைக் கொடுத்தான் கண்ணன்.

கண்ணனுக்கு என்னவாயிற்றோ என்று பயந்த கோபர்களும், சிறுவர்களும் கரையிலேயே மூர்ச்சையடைந்து விழுந்தனர். மாடுகள் பயத்தினால் அரற்றின.

நந்தனுக்கு செய்தி பறந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Thursday, January 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 387

கண்ணன் மாடு மேய்த்துத் திரும்புவதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர் கோபியர்.

சற்று பெரிய கோபிகள் காலை அவன் கிளம்பும் அழகைக் கண் கொட்டாமல் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டு ரசிப்பார்கள். சின்ன கோபிகள் உப்பரிகையிலும், தூண்களுக்குப் பின்னாலும் நின்று கொண்டு கண்ணனுடன் கண்களால் பேசுவர்.

அவர்கள் மனத்தில் நினைப்பதைக் கண்ணன் மாலையில் கொண்டுவந்து கொடுப்பான். 

 காலை கண்ணன் சென்றது முதல், மாலை அவன் திரும்பும்வரை அங்கேயே நின்று கண்ணன் லீலைகளைப் பேசுவார்கள். ஒவ்வொரு வீட்டுக் குழந்தையும் அவரவர் தாயிடத்தில் ஒவ்வொரு விஷயம் சொல்லும். இவர்கள் தங்கள் பிள்ளைகள் சொன்னதையெல்லாம் கோர்த்து முதல் நாள் வனத்தில் நடந்த அனைத்தையும் அறிந்துகொள்வர்.

இப்படியாகவே அவர்களது காலம் ஓடிக் கொண்டிருந்தது.

ம்ம்ம்மா ம்ம்மா என்ற ஆயிரக் கணக்கான மாடுகளின் குரலொலியும், குளம்பொலியும் கேட்க, அதன் பின்னால் ஒரு புழுதிப்படலம் கிளம்பி வர, மாடுகளின் பின்னால் கண்ணனும் ஆயிரக்கணக்கான சிறுவர்களும் வருவார்கள். காலையில் எவ்வளவு உற்சாகத்துடன் சென்றார்களோ அதில்‌ சற்றும் குறையாமல் மாலையிலும் குதித்துக்கொண்டும் ஆடிப்பாடிக்கொண்டும் வருவார்கள். 

அவர்களுக்கு எப்படிச் சோர்வு வரும்? நாள் முழுதும் கண்ணனைக் காண்பதும், அவனோடு விளையாடுவதுமாக இருப்பவர்க்குச் சோர்வேது? மாறாகப் பல மடங்கு அதிகரித்த புத்துணர்வுடன் வருவார்கள்.

புழுதிப்‌படலத்தின் நடுவே கலைந்த தலையும், முண்டாசும், மயில் பீலியும், இடுப்பில் கொம்பு, குழல் ஆகியவையும், கையில் வேலும், அரையில் பட்டாடையும், உடல் முழுதும் புழுதி அப்பிக்கொண்டு, ஒயிலாகக் கண்ணன் நடந்துவரும் அழகைத் தங்கள் தெருவைக் கடக்கும் வரை கண் இமைக்காமல் ரசிப்பார்கள் கோபிகள்.

வீட்டை அடைந்ததும், அவனை எதிர்நோக்கியிருக்கும் யசோதையைக் கொஞ்சிவிட்டு, அவள் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே உணவு உண்டு உறங்கிவிடுவான் கண்ணன். காட்டில் அவன் செய்யும் லீலைகளை மற்ற கோபியர் மூலம்தான் அறிவாள் யசோதை. 

ஒருநாள் காலை முன்பு செய்ததுபோலவே பலராமனைக் கிளம்பு நேரத்தில் கையில் அழுத்த அவனுக்கு உடம்பு சுட்டது. அவனை அனுப்ப முடியாதென்று பிடித்துவைத்துக்கொண்டாள் ரோஹிணி.

கண்ணன் மட்டும் வழக்கம்போல் சிறுவர்களுடனும் மாடுகளுடனும் கிளம்புவதை ஏக்கத்தோடு பார்த்த பலராமன், இன்றைக்கு ஏதோ புதிய லீலை செய்யப்போகிறான் என்று உணர்ந்துகொண்டான்.

அனைவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்ற கண்ணன், வழக்கம்போல் நகைகளைக் கழற்றி மரப்பொந்தில் வைத்துவிட்டு குன்றிமணிமாலையும், காட்டுப்பூக்களுமாக  காட்டுமன்னார் கோலத்திற்கு மாறினான்.

மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டபின், நிறைய புதுப்புது விளையாட்டுக்களை ஆடினார்கள். அப்போது மாடுகள் தாகம் மிகுதியாக, அருகிலிருந்த யமுனையின் மடுவிற்குச் சென்று நீரைப் பருகின. 

இரண்டு உறிஞ்சலிலேயே மயங்கி மயங்கி விழுந்து இறக்கத் துவங்கின. சுற்றி இருந்த மாடுகள் மிரண்டுபோய் ம்ம்மா ம்மா என்று கூக்குரலிட்டுக் கண்ணனை அழைத்தன.

மாடுகளின் தீனமான குரல் கேட்டு, ஏதோ ஆபத்தென்று உணர்ந்து,  விளையாட்டைப் பாதியில் விட்டு ஓடொடி வந்தான் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, January 22, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 386

கண்ணன் ப்ருந்தாவனத்தில் பலவாறு விளையாடினான். சிலசமயம் பலராமனைப் படுக்கச் சொல்லி 

அண்ணா! உங்களுக்கு கால் வலிக்கிறதா? நான் பிடித்து விடுகிறேன் 

என்று ஆரம்பித்துவிடுவான். அவன் இஷ்டப்படி இருப்பதே அடியார்க்கழகு. எனவே பலராமன் அமைதியாய் இருப்பான்.

சில சமயம் மல்யுத்தம் செய்வார்கள். அதில் வெற்றி பெறுபவர்களைக் கைகுலுக்கிப் பாராட்டுவார்கள். 

சில சமயம் கண்ணன் ஒரு சிறுவன் மடியில் தலை வைத்து  ஓய்வெடுப்பான். அப்போது மற்ற  கோபர்கள் கால் பிடித்து விடுவார்கள், விசிறுவார்கள்.

சில‌ சிறுவர்கள் தாலாட்டுப் பாடுவார்கள்.

எவ்வளவு மறைத்துக்கொண்டாலும் கண்ணன் இறைவன் என்பதை கோபச் சிறுவர்கள் உணர்ந்திருந்தனர். 
ஸ்ரீதாமா என்பவனும், ஸ்தோஹ (குட்டி) க்ருஷ்ணன் போன்ற பல நண்பர்கள் கண்ணனுக்கு உண்டு. 

இவர்களுள் ஸ்ரீதாமா என்பவன் ராதாராணியின் அண்ணன்.
ஸ்தோஹ க்ருஷ்ணன் என்பவன் கண்ணனை விட மிகவும் சிறியவன். கோகுலத்தில் கண்ணனுக்குப் பிறகு பிறந்த ஆண் குழந்தைகள் அனைத்திற்கும் க்ருஷ்ணன் என்றே பெயரிடுவார்கள். அடையாளம் தெரிவதற்காக முன்னால்‌ ஏதாவது பெயர் வைத்துக்கொள்வார்கள். அதுபோல் இவனுக்கு குட்டி க்ருஷ்ணன் என்னும்படியாக ஸ்தோஹ க்ருஷ்ணன் என்று பெயர். கன்று மேய்க்கும் வயதுதான் என்றாலும் கண்ணனைப் பிரிய முடியாதென்று அழுது அடம் பிடித்து கண்ணன் கோஷ்டியோடு வந்துவிடுவான்.

ஸ்தோஹ க்ருஷ்ணனும் ஸ்ரீதாமாவும் ஒரு நாள் கண்ணன் ஓய்வெடுக்கும்போது கால் பிடித்துவிட்டுக்கொண்டே  மெதுவாகச் சொன்னார்கள்.

கண்ணா! இங்க பக்கத்தில் நிறைய பனைமரங்கள் இருக்கற பெரிய காடு இருக்கு. அதில் இருக்கற பனம்பழ வாசனை இங்க வரை வருது. 

அந்தக் காட்டை தேனுகன் னு ஒரு அசுரன் காவல் காக்கறான். கம்சனின் வேலையாள் அவன். எப்பவும் உறவினர் சூழ இருப்பான். பார்க்க  கழுதை மாதிரி இருப்பான். அந்தப் பக்கம் போற எல்லாரையும் கொன்னு சாப்பிடறான். நம்ம பசுக்கள், பறவைகள் கூட அவனுக்கு பயந்து அந்தப் பக்கம் போறதில்ல. 

எங்களுக்கு அந்தப் பனம்பழங்களை சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. ஏற்பாடு பண்ணேன். என்றனர்.

சரியென்று கண்ண‌ன் பலராமனுடனும் மற்ற சிறுவர்களுடனும் அந்தப் பனங்காட்டை அடைந்தான்.

பலராமன் அக்காட்டிலுள்ள பனை மரங்களை உலுக்கி பனம்பழங்களை விழச் செய்தான்.

பழங்கள் விழும் சத்தம் கேட்ட தேனுகாசுரன் ஓடிவந்தான். கர் கர் பயங்கரமாகக்  என்று கூச்சலிட்டான். 

பலராமனைச் சுற்றி சுற்றி வந்த அவன், சட்டென்று பின்னால் திரும்பி பின்னங்கால்களால் பலராமனை உதைக்கத் தலைப்பட்டான். 

தூக்கிய அவனது பின்னங்கால்களை லாவகமாகப் பிடித்த பலராமன் ஒரு கையால் அவனைத் தூக்கிச் சுழற்றினான். பெரும் வேகத்துடன் ஒரு மரத்தின் மீது தூக்கி அடித்தான். 

சுற்றும்போதே அசுரனின் உயிர் பிரிந்துவிட்டது. 

அசுரனின் உடல் விழுந்த வேகத்தில் அந்த மரம் முறிந்து விழ, ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகப் பல மரங்கள் முறிந்து விழுந்தன. மற்ற மரங்கள் குலுங்கின.

தேனுகனின் உறவினர்கள் அனைவரும் திரண்டு வந்து தாக்க முற்பட்டனர். அவர்கள் அனைவரையும் பலராமனும் கண்ணனுமாகச் சேர்ந்து பிடித்து சுழற்றி சுழற்றி வீசினர். அவர்கள் அனைவரும் மடிந்தனர்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அத்தனையும் பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணன் கண்ணன் என்று கத்திக்கொண்டு கைதட்டினர். பின்னர் பனம்பழங்களை ஆசையுடன் சுவைக்கத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Tuesday, January 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 385

பரீக்ஷித் வினவினான்.
மஹரிஷீ! கோகுலத்து இடையர்களுக்குத் தான் பெற்ற புதல்வர்களிடம் கூட இதுவரை பெருகாத அன்பு கண்ணன் மீது எப்படி ஏற்பட்டது? இது மிகவும் விந்தையாக இருக்கிறதே என்றான்.

ஸ்ரீ சுகர் கூறலானார்.

எல்லோருக்கும் தன் ஆத்மாதான் மிகவும் பிரியமானது. மனைவி, மக்கள், செல்வம் ஆகியவை ஆத்மாவின் இன்பத்திற்குக் காரணம் என்று நினைப்பதால் அவர்களிடம் அன்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு தன் ஆத்மாவிடம் உள்ள அன்பு தன்னைச் சார்ந்த மற்ற உறவு, செல்வங்களில் கிடையாது. உடலே ஆத்மா என்றெண்ணுபவர்க்கு உடல்தான் பிரியமானது. 

ஆனால், உடல் நான் அல்ல. அது என்னைச் சார்ந்தது என்றாலும் அதன் மீதான அன்பு ஆத்மாவின் மீது உள்ளதைக் காட்டிலும் பெரிதல்ல. ஏனெனில் வயதானபின், உடல் தேய்ந்துகொண்டே போனாலும் உயிர் மீது ஆசை இருப்பதைப் பார்க்கிறோம். நோயினால் உடலின் ஒரு பகுதி அழுகினால்,  அதை மட்டும் நீக்கிவிட்டாவது உயிர் வாழ ஆசைப்படுகிறோம்.

நன்றாகத் தெரிந்துகொள். கண்ணன்தான் ஆத்மா.‌ அவன்தான் அனைவர்க்குள்ளும் உறைபவன். ஆத்மாவே ஒரு உருவம் எடுத்து கண்ணனாகக் கண்முன் தோன்றும்போது, தன் மீது பிரியமுள்ள அதே பிரியம் கண்ணன் மீதும் வந்துவிடுகிறது.

இத்தகைய ஆத்ம இன்பத்தில் மூழ்குபவர்களுக்கு உலகியல் துன்பம் என்பதே இல்லை.

ப்ரும்மாவின் மயக்கம் தெளிந்த லீலை, பகவான் செய்த வனபோஜனம், லீலைகள், ப்ரும்மஸ்துதி இவையனைத்தையும் கேட்பவர்க்குப் பிறவிப்பிணி அகலும். நால்வகைப் புருஷார்த்தங்களையும் பெறுவர்
என்றார்.

ஆறு வயதானதும் கண்ணனுக்கும் பலராமனுக்கும் பசுக்களை‌ மேய்க்கும் தகுதி வந்துவிட்டது.

ப்ருந்தாவனம் 14 உபவனங்களைக் கொண்டது. ஒவ்வொரு வனமும் விதம் விதமான நிறைய மரங்களையும் செடி கொடிகளையும் கொண்டது. கோபச் சிறுவர்களுடனும் பசுக்களுடனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வனத்திற்குச் சென்று விளையாடுவான் கண்ணன். 

ஒருநாள் வனத்தினுள் சென்றுகொண்டிருந்தபோது மான்களும் பறவைகளும் நிறைந்து, மஹான்களின் மனம் போல்‌ தெளிந்த நீரும், அவற்றின் மேல் தாமரைகளும், ரீங்கரிக்கும்‌ வண்டுகளும் உடைய ஒரு வனத்தைக் கண்டான். அதில் நுழைந்து விளையாட விரும்பினான்.

பழங்களின் சுமையால் தரையைத் தொடுமாறு வளைந்திருக்கும் கிளைகளைக் கண்ட கண்ட கண்ணன் பலராமனிடம் கூறினான்.

அண்ணா! பூவும் பழமும் கொண்டு தேவர்கள் வணங்குவதுபோல் இந்த மரங்கள் உங்கள் திருவடித் தாமரைகளை வணங்குகின்றன. நீங்கள் உங்கள் இறைத் தன்மையை மறைத்துக்கொண்டுள்ளீர்கள். ஒருக்கால் இந்த மரங்கள் முனிவர்களாக இருக்கலாமோ. 

இந்த மயில்கள் தங்களைக் கண்டு மகிழ்ந்து ஆடுகின்றன.
இந்தப் பெண்மான்கள் கோபியர்களைப் போல் உம்மைக் கண்டதும் வெட்கமடைகின்றன. குயில்கள் இனிமையாகப் பாடுகின்றன.

தங்கள் திருவடி பட்டதால் இந்தப் புற்கள், புதர்கள் ஆகியவை பாக்யம் பெற்றன. உங்கள் தொடுகையால் மரங்களும் செடிகளும் புனிதமாயின. 
என்றான்.

அனைத்துப் புகழும் கண்ணனுக்கே என்றாலும், தன்னை விட‌ மூத்தவன் என்பதால் அனைத்துப் புகழையும் பலராமன் மீது ஏற்றிச் சொன்னான் கண்ணன். இது இன்றைய லீலை போலும் என்று எண்ணிய பலராமன் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, January 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 384

தன் நான்கு தலைகளும் மண்ணில் புரள விழுந்து விழுந்து பலமுறை கண்ணனை வணங்கினார் ப்ரும்மா.

இறைவா! நீருண்ட மேகம் போல் மேனியும் மின்னல் போல் ஆடையும், குந்துமணி குண்டலங்களும், மயில்பீலி தாங்கிய முகமும், காட்டுப்பூக்களால் ஆன மாலையும் அணிந்த நந்தகுமாரனான தங்களை வணங்குகிறேன்.

கையில் ஒரு பிடித் தயிற்சோறும், விரலிடுக்குகளில் ஊறுகாய்களும், கையிடுக்கில் பிரம்பு, கொம்பு ஆகியவையும், இடையில் புல்லாங்குழலுமாக விளங்கும் தங்கள் அழகுத் திருவுரு காணக் காண இன்பம் அளிப்பது.

எனக்கு பிரத்யேகமாக அருள் செய்வதற்காகவே தாங்கள்‌ இத்தகைய கோலத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். தங்கள் திருமேனி பஞ்ச பூதங்களாலானதல்ல. அது சுத்த ஸத்வமானது. என் அறிவால் இதை உணர இயலவில்லை. உமது பெருமையை அறிய ஒருவராலும் இயலாது. 

சான்றோர் உம்மை ஆராயும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே தங்களது லீலைகளைப் பற்றிய அமுதக் கதைகளைச் சொல்லியும் கேட்டும் தங்கள் வாழ்நாளைக் கழித்து விடுகின்றனர். உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எப்போதும் உம்மையே அடையும் அவர்களுக்கு தாங்கள் எளிதில் வசப்படுகின்றீர்கள். அன்பினால் கட்டுப்படுப்படுகிறீர்கள்.

சிலர் பக்தியை விட்டுவிட்டு ஞானமடைவதற்காகத் தம்மை வருத்திக்கொள்வர். அவர்கள் அரிசியை விட்டு உமியைக் குத்துபவர்கள்.

தங்கள் நிலை வடிவமற்றது. தன்னொளி கொண்டது. எவராலும் விளக்க இயலாதது. அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடியது. தூய உள்ளம் கொண்டவரால் மட்டுமே தம்மை அணுக இயலும். தாங்கள் எங்கும் நிறைந்தவர். 

பூமியின் ஒவ்வொரு அணுக்களையும் யார் எண்ண இயலுமோ, வானிலுள்ள நட்சத்திரங்களை எவரால் எண்ண இயலுமோ, அவரே தங்களது குணங்களையும் எண்ண இயலும்.

என் தீய எண்ணத்தைப் பாருங்கள்.
மாயாவிக்கு மாயாவியான தங்களிடமே என் மாயையைப் பயன்படுத்தி என் பெருமையைக் காட்டத் துணிந்த நான் எத்தகையவன்? சூரியன் முன்னால் சிறு விளக்கு எம்மாத்திரம்?

என் ரஜோ குணத்தினால் தங்கள் மஹிமையை அறியவில்லை. நான் என்ற இறுமாப்புக் கொண்டு பெருந்தவறு இழைத்த என்னை நீங்கள், 'இவன் எனது பணியாள், என்னைச் சேர்ந்தவன், என் இரக்கத்துக்குரியவன்' என்றெண்ணிப் பொறுத்தருளுங்கள்.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், பூமி ஆகிய மூலதத்துவங்களால்  செய்யப்பட்ட குடம் போன்ற ஏழடுக்குக் கொண்ட சரீரம் உடைய நான் எங்கே?

காலதரின் வழியே வரும் சூரிய கிரணத்தில் பரவித் தெரியும் பரமாணுக்களைப் போல் எங்கும் வியாபித்திருக்கும் தாங்கள் எங்கே?

புலன்களுக்கு எட்டாதவரே! கருவிலுள்ள சிசு காலைத் தூக்கி உதைப்பது தாய்க்கு குற்றம் செய்ததாகுமா? நான் உள்பட  எல்லா விதமான தத்துவங்களும் தங்கள் வயிற்றுக்குள் அடக்கம்.

நான் தங்களிடமிருந்து தோன்றியவன்தானே? நீங்களே என் தாய்.

நீங்கள் இந்த அவதாரத்தில் தங்களது தாய்க்கு தங்கள் வயிற்றினுள்ளேயே  ப்ரபஞ்சம் முழுவதையும் காட்டினீர்களே.

கோகுலத்திலுள்ள அனைத்துப் பெண்மணிகளும் பாக்யம் செய்தவர்கள். நீங்கள் அவர்கள் அனைவரிடமும் தாய்ப்பால் பருகியுள்ளீர்கள். கோகுலத்துப் பசுக்களும் தன்யமானவை. நீங்களே கன்றாகி அவைகளின் மடியில் பாலைக் குடித்துள்ளீர்கள்.

வேள்விகளால் கூட தங்களுக்கு இத்தகைய மனநிறைவு கிட்டாது. நந்தகோபரின் பாக்யம் சொல்லுக்கெட்டாதது. ஆயர்கள் எவ்வளவு மேன்மை பொருந்தியவர்கள்? ஏனெனில் அவர்களது  தோழன் பரம்பொருளான தாங்களே அல்லவா?

அவர்கள் தங்கள் இந்திரியங்கள் மூலம் தங்களை அனுபவிக்கும் ஆனந்தத்தை உண்மையில்‌ இந்திரியங்களின் தேவதைகளான நாங்களும் உணர்கிறோம்.

இந்த கோகுலத்தில் மரம் செடி கொடியாகப் பிறந்திருந்தாலும் கூட பாக்யமே. ஏனெனில் இந்த ஆயர்களின் பாததூளி அவைகள் மேல் படும். இவர்களது அன்பிற்கு தம்மாலும் கைம்மாறு செய்ய இயலாது. உங்கள் அடியார்களாக இல்லாதவர்கள் திருடர்களைப் போன்றவர்கள். தாங்கள் அளித்திருக்கும் பூமி, முதலிய  அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு தங்களைப் போற்றாதவர்கள் நன்றியுள்ளவர்கள் ஆகமாட்டார்கள்.

அரக்கர்களின் பகைவரே! எப்போதும் தங்கள் நினைவு எனக்கு இருக்கட்டும்.  தங்களுக்கு வணக்கம். 

மேலும் பலவாறு துதி செய்த ப்ரும்மா மீண்டும் கண்ணனை வலம் வந்து வணங்கினார். பின்னர் தன் இருப்பிடம் சென்றார்.

ப்ரும்மா அழைத்துச் சென்ற கன்றுகளும் சிறுவர்களும் மணல் திட்டில் உணவருந்திக் கொண்டிருக்க, கண்ணன் தன் மாயையை விலக்கிக் கொண்டான். பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.

இவ்விஷயம் நடந்து முடிய ஒரு வருடம் ஆனபோதும், அச்சிறுவர்களுக்கு சில நிமிடங்களே ஆனதுபோல் இருந்தது. எனவே ஒரு வருடத்திற்கு முன் நிகழ்ந்த அகாசுர வதத்தை அன்று நடந்ததுபோல் வீட்டில் அன்னையரிடம் சொன்னார்கள். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Wednesday, January 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 383

ஸத்யலோகத்திற்கும் பூமிக்குமாக அலைந்தலைந்து பார்த்துவிட்டு ப்ரும்மா மிகவும் குழம்பிப்போனார்.

 இரண்டு இடங்களிலுமே கன்றுகளும், சிறுவர்களும் இருந்தனர். ஸத்யலோகத்தில் அவர்களது அமர்க்களம் தாங்காமல் அனைவரையும் யோகநித்ரையில் ஆழ்த்திவிட்டிருந்தார்.

அவர்கள் எழுந்திருக்கவே இல்லை என்னும்போது, பூமியில் விளையாடுபவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தனர்? பூமியில் ஒரு வருடம் ஆகப்போகிறதே. இவ்வளவு நாள்களாக இயல்பாக இருக்கின்றார்களே. இவர்கள்தான் நிஜமான சிறுவர்களும், கன்றுகளுமா?

அப்படியெனில் நாம் தூக்கிக்கொண்டு போனவர்கள்?

தலைகள் வெடித்துவிடும் அளவிற்கு குழம்பினார்.

ஒரு வித்யாசம் கூட இல்லாமல் அப்படியே இருக்கின்றார்களே. ஒருமுறை எண்ணிப் பார்த்துவிட்டு வந்தார். எண்ணிக்கையும் சரியாக இருந்தது. 

கண்ணனைக் குழப்பிவிட வேண்டி தன் மாயையைப் பிரயோகம் செய்தவர், அதில் தானே மூழ்கிப்போனார்.

இதென்ன விபரீதம்? இடைச் சிறுவன் என்று எண்ணினோமே. இவனைச் சோதனை செய்ய வந்து இப்படி ஆகிவிட்டதே.
தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.  அப்போது அத்தனை சிறுவர்களும், கன்றுகளும் மஞ்சள் பட்டாடை உடுத்தி, நீல மேனியுடன், சங்கு சக்ரம், கதை பத்மத்துடன், வனமாலை அணிந்து காட்சி அளித்தனர்.
அவர்கள் அனைவரின் மார்பிலும் ஸ்ரீ வத்ஸம் இருந்தது. கங்கணங்கள், மகர குண்டலங்கள், கால்களில் நூபுரங்கள், தங்க அரைஞாண் என்று எல்லாவிதமான ஆபரணங்களுடன் ஒவ்வொருவரும் வைகுண்டபதியாகவே பகவானாகவே தெரிந்தனர்.

அதோடு மட்டுமன்றி, தன்னைப் போலவே பல ப்ரும்மாக்கள் வந்து அங்குள்ள ஒவ்வொரு ரூபத்தையும் வழிபடுவதையும் கண்டார்.

அணிமா, மஹிமா முதலிய ஸித்திகளின் தேவதைகளும், மாயை, வித்யை முதலிய சக்திகளும், மஹத்தத்வம் முதலிய இருபத்து நான்கு தத்துவங்களும் அவர்களைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர்.

எவரது ஒளியால் இவ்வுலகம் புலப்படுகிறதோ அப்பரம்பொருளாகவே அனைத்து உருவங்களையும் கண்ட ப்ரும்மா அதிலேயே ஒன்றிப்போய் உணர்விழந்துவிட்டார்.
சிலைபோல் மௌனமாக வெகுநேரம் நின்றார். (ப்ரும்மாவிற்கு ஏற்பட்ட இந்நிலைதான் ப்ரமை என்று வழங்கப்படுகிறதோ?)

வேதங்களுக்கெல்லாம் தலைவனானாலும் தன் நிலையை உணரமுடியாமல் மயங்கி நிற்கும் ப்ரும்மாவின் மீது கருணை கொண்ட கண்ணன் தன் மாயையை விலக்கினான்.

ப்ரும்மாவிற்குப் புற உலக நினைவு வந்தது. இப்போது சுற்றுமுற்றும்  ப்ருந்தாவனம் மட்டுமே தெரிந்தது. அனைவர்க்கும் விருப்பமான பழங்களையும் மரங்களையும் கொண்ட அழகிய வனம். இயல்பாகவே பகையான விலங்குகள் கூட கூடி வாழும் ப்ரேமை மிக்க வனமது. ஸ்ரீ வனத்தில் நுழைபவர் எவரானாலும் அவர்க்கு ப்ரேமையுடன் கூடிய ஞானம் சித்தித்துவிடும். இதற்கு விதியும் விலக்கல்ல. (விதி‌ என்பது ப்ரும்மாவின் பெயர்)

சற்று தொலைவில் ஒரு தமால மரத்தின் அடியில் தனியொருவனாக கையில் தயிர்சாதத்தையும், விரலிடுக்கில் ஊறுகாய்களையும் வைத்துக்கொண்டு, நண்பர்களைக் காணவில்லையென்று கண்ணீர் பெருக்கிக்கொண்டு  நின்றுகொண்டிருக்கும் கண்ணனைக் கண்டார்.

சொரேலென்று அடிவயிற்று பிரண்டு வர, ஸத்யப் பொருளை உணர்ந்து ஓடோடிச் சென்றார்.

கண்ணனின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து அவற்றைத் தன் கண்ணீரால் கழுவினார்.

சற்று முன் தான் கண்ட காட்சியை நினைந்து நினைந்து மீண்டும் மீண்டும் பன்முறைகள் வணங்கிக்கொண்டே இருந்தார்.

பின்னர் மெல்ல நடுங்கிக்கொண்டே  எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டார். நாத்தழுதழுக்கத் துதிக்கலானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Monday, January 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 382

ப்ரும்மா சிறுவர்களையும் கன்றுகளையும் தூக்கிக்கொண்டுபோய் மறைத்து வைத்திருப்பதைத் தன் ஞானத்தினால் உணர்ந்தான் கண்ணன். உடனே ச்ருஷ்டியின் தலைவனான கண்ணன் கன்றுகளின் தாயான பசுக்களுக்கும், சிறுவர்களின் பெற்றோருக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கத் திட்டமிட்டான்.

அக்கணமே எத்தனை சிறுவர்களோ அத்தனை பேராகவும், எத்தனை கன்றுகளோ அத்தனையாகவும் தானே ஆனான்.

அவர்களது நிறம், கை கால்கள், நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே இருக்கும்படி ஆனான். நெட்டைப் பையன் என்றால் நெட்டைப் பையன், குட்டையானவன் என்றால் அவனைப்போல.

கையில் ஆறு விரல் என்றால் ஆறு விரல், இழுத்து இழுத்துப் பேசுபவன் என்றால் அவனைப்போல, அவரவர்க்கு உடலில் எங்கே மச்சங்கள், தழும்புகள் எல்லாம் அப்படியே. இடதுகைப் பழக்கமுள்ளவன், பேசும்போது ர வராது என்றால் அதே போல, என்னென்ன உடைகள் அணிந்திருந்தார்களோ அத்தனையாகவும் கண்ணனே ஆனான். அவற்றில் எங்கெங்கு கிழிந்திருந்தாலும் அவ்வாறே. அவர்கள் காலையில் கொண்டுவந்த தூக்குச்சட்டி, அலுமினிய டப்பா, கூடை, கொம்பு, குச்சி, குழல், அழுக்குத்துண்டு எல்லாம் கண்ணனே.

கன்றுகளும் அப்படியே. அவைகளுக்கு காதுகள், வால், உடல்வாகு, அவற்றின் கழுத்திலிருந்த கயிறு, மணி, கிண்கிணிகள் அனைத்தும் கண்ணனே.

தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் ஆகி, தன்னுடன் தானே விளையாடிக்கொண்டு, தன்னைத் தானே மேய்த்துக்கொண்டு  குதித்துக்கொண்டு கோகுலம் திரும்பினான் கண்ணன்.

அங்கே வந்திருப்பது கண்ணன் என்றறியாமல், அன்னையர்க்கும் தாய்ப்பசுக்களுக்கும் என்றுமில்லாத திருநாளாக தத்தம் குழந்தைகள்‌ மீதும், கன்றுகள் மீதும் அளவற்ற பாசம் பொங்கியது.

வழக்கமாக கன்று மேய்த்து திரும்பும் சமயம், தங்கள் குழந்தைகளையும் விட்டு, கண்ணனைக் கொஞ்சுவார்கள். இன்றோ, கண்ணனே தங்கள் குழந்தை என்றறியாவிடினும் தங்கள் குழந்தையைக் கொஞ்சினார்கள்.

தங்களது சிறிய குழந்தையையும் விட்டு கன்று மேய்த்துத் திரும்பிய மூத்த குழந்தையைக் கொஞ்சினார்கள்.
அதை அவர்கள் வித்யாசமாக உணரவும் இல்லை.

பசுக்களும் புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கு ஊட்டுவதை விட்டு, காட்டுக்குச் சென்று மேய்ந்து திரும்பிய கன்றை நோக்கி ஓடிவந்தன.

இவ்வாறே  கண்ணன் சிறுவர்களாகவும், கன்றுகளாகவும் தானே ஒவ்வொரு வீட்டிலும்‌  வாழ்ந்துகொண்டிருந்தான். விளையாட்டுப் போல் ஒரு வருடம் ஓடிவிட்டது.

ப்ரும்மா தான் ஒளித்து வைத்த குழந்தைகளும் கன்றுகளும் சத்யலோகத்தில் இருக்கின்றனவா அல்லது பூமிக்கு வந்துவிட்டனவா என்று குழம்பிப்போய் இரண்டு மூன்று முறை போய்ப் போய் பார்த்துவிட்டு வந்ததில் பூலோகத்தில் ஒரு வருடம் ஓடிவிட்டது.

நான்கு தலைகளில் இருந்த முடிகளையும் பிய்த்துக்கொண்டார் ப்ரும்மா. நான்கு தலைகளும் நான்கு திசைகளில் சுழன்றன.

சிறுவர்கள் கன்று மேய்ப்பார்கள். பெரிய கோபர்கள் மாடுகளை மேய்ப்பார்கள். அவைகள் ஒன்றையொன்று பார்த்தால் மேய்ப்பது கடினம் என்பதால் வெவ்வேறு இடங்களில் மேய்ப்பார்கள். ஒருநாள் மலைமீது சற்று உயரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் கன்றுகளை மேய்த்துக் கொண்டு மலையடிவாரத்தில் இருந்தார்கள். மேலிருந்து கன்றுகளைப் பார்த்த மாடுகள் கீழே கன்றுகளைப் பார்த்ததும் நாலு கால் பாய்ச்சலில் அவற்றை நோக்கி ஓடின. அவற்றைப் பிடிக்கப்போன கோபர்களின் கட்டுப்பாட்டை மீறின. ஒரு இடையனுக்கு தன் மாடுகள் அவனுக்கு அடங்கவில்லை எனில் அது பெருத்த அவமானமாகும். எனவே மிகுந்த கோபத்துடன் கோபர்கள், ஓடும் மாடுகளைப் பிடிக்கத் தொடர்ந்தனர்.

மாடுகள் கன்றுகளிடம் ஓடிச்சென்று கொஞ்சிப் பாலூட்டத் துவங்கின. துரத்திக்கொண்டு வந்த கோபர்கள்  அவற்றை அடக்குவதற்கு பதிலாக தங்கள் குழந்தைகளைக் கொஞ்சத் துவங்கினர். அவர்களது கோபம் கணத்தில் பறந்தது.

இந்த விசித்ரமான காட்சியைக் கண்ட பலராமன் குழம்பிப் போனான். அவனுக்கு ஒன்றுமே‌ புரியவில்லை. கண்ணனைத் திரும்பிப்‌பார்த்தான். அவன் ஒரு விஷமப் புன்னகையை வீசினான். மீண்டும் பலராமன் கன்றுகளை உற்றுப் பார்க்க, அவனுக்கு அனைத்தும் கண்ணனாகக் காட்சி கிடைத்தது. இது எப்போது நிகழ்ந்தது? உண்மையான கன்றுகளும் சிறுவர்களும் எங்கே? தினமும் இவனோடுதானே இருக்கிறோம். கவனிக்காமல் விட்டோமே? 
கண்ணா! எப்போதிலிருந்து இவ்வாறாயிற்று கண்ணா? இது அற்புதக் காட்சி. கண்ணனைக் கேட்டான். கண்ணனோ இவையனைத்தும் விதி (ப்ரும்மா) யின் செயல் அண்ணா. தானே சரியாகும்.‌ வாருங்கள் போகலாம் என்று சொல்லி, அனைவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Thursday, January 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 381

தாமரை மலரின் நடுவிலிருக்கும் மணியைச் சுற்றி இதழ்கள் அமைந்திருப்பதுபோலிருந்தது, கண்ணனைச் சுற்றி இடைச் சிறுவர்கள் அமர்ந்திருந்த காட்சி.

விளையாட்டுப் பேச்சுகள் பேசியபடியே உணவு உள்ளே போய்க்கொண்டிருந்தது.

கையில் தயிர்சாத உருண்டையை வைத்துக்கொண்டு, விரல்களின் இடுக்குகளில் விதம் விதமான ஊறுகாய்களை வைத்துக்கொண்டு நக்கி நக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கண்ணன். 

சிறுவர்கள் கண்ணனுடன் சேர்ந்து உணவு ஏற்பதில் தங்களை மறந்த நிலையிலிருந்தனர். 

மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கன்றுகளை கவனிக்கவில்லை. திடீரென்று திரும்பிப்பார்த்த ஒரு சிறுவன், கன்றுகளைக் காணாமல் அலறினான்.

கண்ணா! கன்னுக்குட்டியெல்லாம் காணலியே. ரொம்ப தூரம் போயிடுச்சா.

எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். ஆயிரக் கணக்கான கன்றுகளில் ஒன்றைக்கூட காணவில்லை.

அனைவரும் பதறிப்போனார்கள்.

கண்ணன் உடனே அவர்களைப் பார்த்து, நீங்கல்லாம் நிம்மதியா சாப்பிடுங்க. நான் போய் கன்னுக்குட்டியெல்லாம் பாத்து ஓட்டிண்டு வரேன். என்று சொல்லிவிட்டு எழுந்தான். கையில் தயிர்சாதம், ஊறுகாய்கள், இடுப்பில் கொம்பு, குழல் முதலியவை, ஏற்றிக் கட்டிய கச்சம், தலையில் ஒரு முண்டாசு, கழுத்தில் வனமாலை ஆட, இன்னொரு கையில் கோலைப் பிடித்துக்கொண்டு கிளம்பினான் கண்ணன்.

மலைக் குகைகளிலும், புதர்களிலும், பள்ளத் தாக்குகளிலும் கன்றுகளைத் தேடினான்.

கன்றுகள் அனைத்தையும் யோகமாயையால் ஸத்யலோகத்திற்கு தூக்கிச்சென்று  ஒளித்துவைத்துவிட்டு, கண்ணன் என்ன செய்கிறான் என்று மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் ப்ரும்மா. 

கண்ணன் கன்றுகளைத் தேடி வெகுதூரம் சென்றதும், ஆற்றின் நடுவிலிருந்த மணல்திட்டிற்கு வந்து அங்கிருந்த சிறுவர்களையும் மாயையால் மயக்கித் தூக்கிக்கொண்டுபோய் ஸத்யலோகத்தில் வைத்தார்.

மீண்டும் கீழே இறங்கி வந்தார்.

அதற்குள்  கண்ணன் திரும்பி வந்து சிறுவர்களையும் காணாமல் சற்று யோசித்தான். அனைத்தும் ப்ரும்மாவின் வேலை என்று அறிந்தான்.

திரும்பி வந்த ப்ரும்மா திகைத்துப் போனார்.

அங்கே அவர் கண்ட காட்சி...

முன்போலவே அத்தனை சிறுவர்களும் கண்ணனுடன் இருந்தனர். கன்றுகளும் மேய்ந்துகொண்டிருந்தன.

நான்கு தலைகளும் கிறுகிறுவென்று சுற்ற, நாம் தூக்கிக்கொண்டுபோனோமே. அதற்குள் எப்படி இங்கே வந்தார்கள் என்று குழம்பினார். மறுபடி ஸத்யலோகம் சென்று சிறுவர்களும் கன்றுகளும் இருக்கின்றனரா என்று பார்த்தார்.

அங்கே ஸரஸ்வதி தேவியைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தனர் அச்சிறுவர்கள்.

ஒருவன் வீணைக் கம்பியை அறுத்துவிட்டான். தாமரைப் பூவில் ஏறி குட்டிக்கரணம் போட்டனர். தேவியின் ஓலைகளை எடுத்துக் கிழித்துப் போட்டனர்.

கன்றுகள் ஆங்காங்கே கோமியமும், சாணி போட்டுவைக்க, ஸத்யலோக வாசிகளுக்குப் போதும் போதுமென்றிருந்தது.

ஸத்யலோகம் அல்லோலகல்லோலப் பட்டது. ப்ரும்மாவின் மீது பயங்கர கோபத்துடன் அவர் வரவை எதிர்பார்த்திருந்தாள் தேவி.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




Wednesday, January 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 380

இறைவனின் அழகு மிக்க திருமேனியை ஒரு முறை மனத்தில் நினைப்பவர்க்கே ஸாலோக்ய முக்தி கிட்டும். என்றால் இறைவனே அசுரனின் உடலினுள் நுழைந்தார் என்றால் அவனுக்கு முக்தி கிட்டாமல் இருக்குமா?

பரீக்ஷித் கேட்டான். மஹரிஷீ, ஐந்து வயதில் நடந்த லீலையை சிறுவர்கள் ஒரு வருடம் கழித்து ஆறாம் வயதில் வீட்டில் சொல்வானேன்? இடைப்பட்ட  ஒரு வருடம் என்ன செய்தார்கள்? ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்த லீலையை எப்படி அன்று நடந்ததுபோல் கூறமுடியும்?
இது பெரும் விந்தையாக இருக்கிறதே. விளக்கிக் கூறுங்களேன் என்றான்.

இதைக் கேட்ட ஸ்ரீ சுகர் பரீக்ஷித் மிகவும் கவனமாகக் கதை கேட்பதை மிகவும் பாராட்டினார். பின்னர் அதை விளக்குவதற்காக கண்ணனின் லீலைகளை நினைத்தவர் அப்படியே தன்வயமாகிவிட்டார். வெகுநேரம் கழித்து சுதாரித்துக்கொண்டு தன்னிலை அடைந்து மீண்டும் கூறலானார்.

ஸாதுக்களின் வாய், காது, இதயம் மூன்றும் இறைவனின் புகழைப் பாடுவதிலும், கேட்பதிலும், நினைப்பதிலுமே ஈடுபடுகின்றன. அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாகத் தெரியும்.
இவ்விஷயம் தேவ ரகசியமாகும். இருப்பினும் நீ கேட்டதால் கூறுகிறேன். குருவானவர்  தன் பிரிய சிஷ்யனிடம் எதையும் மறைப்பதில்லை அல்லவா?

என்றார்.

அகாசுரன் வாயிலிருந்து வெளியில் வந்த குழந்தைகளைப் பார்த்து கண்ணன் கூறினான். 

தோழர்களே. அந்த மணல் திட்டைப்‌ பாருங்கள். தூய்மையான மணல், சுற்றி நிறைய பூக்களும், வண்டுகளும், பறவைகளுமாக மிகவும் அழகாக இருக்கிறது. நாம் அங்கு சென்று சற்று நேரம் விளையாடலாம். பின்னர் அங்கேயே உண்ணலாம். கன்றுகளும் ஆற்று நீரைப் பருகிவிட்டு அங்கேயே புல் மேயட்டும்.

கண்ணன் ஒரு விஷயம்  சொன்னால் மறுப்பேது?

அப்படியே செய்யலாம் என்று கூக்குரலிட்டுக்கொண்டு குதித்துக் கொண்டு கிளம்பினர் சிறுவர்கள்.

அங்கே சென்றதும், கன்றுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, நடுவில் வந்து வட்டமாக உட்கார்ந்துகொண்டார்கள்.

கண்ணன் எங்கே அமர்ந்தாலும், மற்ற சிறுவர்களின் முகம் வாடியது. எல்லாருமே கண்ணன் பக்கத்தில் அமர ஆசைப்பட்டனர்.

கண்ணன் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. எனவே, நடுவில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவரவர் உறியைத் திறந்தனர். கையில் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லை. எனவே அவரவர் ஓடிச்சென்று, இலை, மரப்பட்டை முதலியவற்றைக் கொண்டுவந்து பாத்திரமாக வைத்துக்கொண்டனர்.

தினமும் பழைய சோறு கொண்டுவருகிறார்கள் என்பதால் கண்ணனுக்கு அவர்கள் மீது அதீத பரிவு இருந்தது. ஒருநாளாவது விதம் விதமாக உணவு கொண்டுவரட்டும் என்று நினைத்து முதல்நாளே சொல்லிவிட்டான்.

நாளைக்கு யார் யாருக்கு என்னென்ன வகையான உணவு கொண்டுவரமுடியுமோ கொண்டுவரலாம்.

ஆளாளுக்கு புளியோதரை, சப்பாத்தி, கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்ச சாதம், அப்பம், வடை, சர்க்கரை பொங்கல், லட்டு, பால் பேடா, பாயசம், அப்பளம், ஊறுகாய் என்று விதம் விதமாக கொண்டு வந்திருந்தனர்.
கண்ணனும் அம்மாவிடம் சொல்லி நிறைய வகை உணவுகளைத் தயார் செய்து கொண்டுவந்திருந்தான். 

சோற்று மூட்டையைத் திறந்ததும் அத்தனை குழந்தைகளும் ஒரு சேரச் செய்த காரியம் என்ன தெரியுமா?

அதிலிருந்து ஒரு கவளம் எடுத்து, கண்ணா நீ சாப்பிடு என்று நீட்டியதுதான்.
பசி வேளையில் உணவைப் பார்த்ததும் அள்ளி வாயில் போட்டுக்கொள்ளாமல் எல்லாக் குழந்தைகளும் முதலில் கண்ணனுக்கு என்று கொடுத்ததும் நெகிழ்ந்துபோனான் கண்ணன். 
இவர்களுக்காக நான் என்னதான் செய்துவிட முடியும்? என்று எண்ணினான்.

தன்னைச் சுற்றி 
கண்ணா லட்டு சாப்பிடு, கண்ணா, சர்க்கரைப் பொங்கல், என்று நீட்டிய கரங்கள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு வாய் வாங்கிக் கொண்டான். அவனும் தான் கொண்டு வந்தது எல்லாவற்றையும் கொடுத்தான்.

உணவின் சுவை பற்றிப்‌ பேசிக்கொண்டே உண்டார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக அதிர்ந்தது. 

நண்பர்களுடன் சேர்ந்து உண்பது எத்தனை சுகமான தருணம்! அதிலும் இறைவனுடன் உண்பது? சொல்வதற்கு வார்த்தைகள் ஏது?

கடைசியாக இருந்த ஒரு லட்டை ஒரு சிறுவன் வாயில் போட்டுக் கொண்டு விட, ‌அதற்குள்‌ கண்ணன் எனக்கு? என்று கேட்டுவிட்டான்.

உனக்குதான் கண்ணா எடுத்துக்கோ என்று ஆவென்று காட்டினான் சிறுவன். அவன் வாயிலிருந்து எடுத்து உண்டான் கண்ணன். எனக்கு? என்று இன்னொருவன் கேட்க இந்தா எடுத்துக்கோ ‌என்று கண்ணன் ஆ காட்ட, கண்ணன் வாயிலிருந்து எடுத்து அவன் உண்ண, 

அக்காட்சியை வானிலிருந்து பார்த்த தேவர்கள் மலைத்துப் போயினர்.
இத்தனை சௌலப்யமா? தாங்களும் பூமியில் பிறக்காமல் போனோமே என்று வருந்தினர்.

அனைத்துலகையும் படைத்த இறைவன் சாதாரண ஜீவன்களுடன் இப்படிக் கலந்து பழகுவானா?

ப்ரும்மாவிற்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவனா யக்ஞ நாராயணன்? எச்சில் நாராயணாக அல்லவா இருக்கிறான்?

தலையை உதறிக்கொண்டார். பகவானை அப்படி நினைக்கக்கூடாது. எப்படி நினைத்தாலும் சமாதானம் ஆகவில்லை. புன்முறுவலுடன் கண்ணன் அவர் மீது மாயையை வீசினான். 

இவன் பகவானா இல்லையா என்று சோதித்துப் பார்த்துவிடுவோம்.
ஒரு‌ முடிவுக்கு வந்தார்  ப்ரும்மா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, January 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 379

கானகத்தில் கண்ணனுடன் இடைச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கே சற்று தொலைவில் அவர்களது வழியில்  கண்ணனைக் கொல்வதற்காக அகாசுரன் மலைப்பாம்பு வடிவம் எடுத்துப் படுத்துக் கிடந்தான்.

கீழுதடு பூமியைத் தொட, மேலுதடு மேகத்தைத் தொட, குகை போன்ற வாயுடன், மலைமுகடு போன்ற தெற்றிப் பற்களுடன், பெரிய பாதையைப் போன்ற நாக்குடன் வாயைப் பிளந்துகொண்டு படுத்திருந்தான்‌. விஷத்தினால் அவனது மூச்சுக் காற்று வறண்டுபோயிருந்தது.

 கண்ணன் ஒரு மரக்கிளையில் சென்று அமர்ந்தான். மற்ற சிறுவர்கள் அகாசுரன் இருக்குமிடம் வரை சென்றுவிட்டனர். கன்றுகள்‌ முன்னே ஓட, அவற்றைத் துரத்திக்கொண்டு ஓடியவர்கள் சற்றே நின்றனர்

டேய்.. இதப்பாருடா...

நாம இந்த வழியாதான வந்தோம்.
வரும்போது இப்படி இல்லையே..

இதென்னடா மலைப்பாம்பு மாதிரி இருக்கு. 

பாம்பு எங்கயாவது இவ்ளோ பெரிசு இருக்குமாடா

இது மலைடா..
வானம் வரைக்கும் இருக்கு பார். அப்பன்னா பாம்பு மலையா?

இருக்கும் இருக்கும்..

இதப்பாரேன். பாம்போட பல்லு மாதிரியே இருக்கு. 

இது ஏதோ குகைடா
உள்ள ஏதோ பளபளங்குது பார்.

மெத்து மெத்துன்னு இருக்குடா. தரை இப்படியா இருக்கும்?

சில பாறையெல்லாம் இப்படித்தாண்டா..

இந்த ப்ருந்தாவனத்தில் இன்னும் எத்தனை அதிசயம் இருக்கோ?

பயமா இருக்குடா. ஒருவேளை பாம்பா இருந்தா என்ன பண்றது? நம்மளை முழுங்கிடுச்சின்னா?

முழுங்கினா என்னடா.. நம்ம கூட கண்ணன் இருக்கானே. அவன் பாத்துப்பாண்டா..

எப்டியும் கன்னுக்குட்டியெல்லாம் உள்ள போயிடுச்சு. நாமளும் போவோம்.

கண்ணன் வரலியே.

வருவாண்டா. கொஞ்சம் ஓய்வெடுப்பான். நம்மை விட்டுட்டு எங்க போவான். நம்மை ரொம்ப பிடிக்கும் அவனுக்கு. நமக்கு ஏதாவது கஷ்டம்னா ஓடியே வந்துடுவான். பயப்படாம நட.

இருட்டா இருக்கு..
கையைத் தட்டிண்டே நடங்கடா..

குழந்தைகள் இருளில் கையைத் தட்டிக்கொண்டு ஹரி ஹரி என்று கூவிக்கொண்டே அகாசுரனின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் உள்ளே சென்று பாம்பின் வயிற்றினுள் வழுக்கி விழுந்து, விஷத்தின் வீரியத்தால் மாண்டனர். 

கண்ணன் இன்னும் வராததால் அகாசுரன் வாயை மூடாமல் திறந்தே வைத்திருந்தான்.

கண்ணன் இருக்காண்டா. நமக்கொரு கஷ்டம்னா ஓடியே வந்துடுவாண்டா என்று ஒரு இடைச் சிறுவன் சொன்னபோது கண்ணனின் கண்களில் நீர் துளிர்த்தது.

எத்தனை நம்பிக்கை இவர்களுக்கு என்மேல். இவர்கள் பின்னால் நானும் போனால்தான் இவர்களைக் காப்பாற்றமுடியும்.

என்றெண்ணிய கண்ணன், எழுந்து அகாசுரனை நோக்கி ஓடிவந்தான்.

கண்ணன் அவனது நாக்கில் காலை வைத்தானோ இல்லையோ வாயை உடனே மூடிக்கொண்டான் அகன். வானிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் பயந்து போய் ஹா ஹா என்று கத்தினர். கண்ணன் அசுரனின் தொண்டையில்‌ நின்று வளரத் துவங்கினான்.

அவனது மூச்சுப்பாதை தடைபட்டது. சுவாசிக்க இயலாமல் விழிகள் பிதுங்க, இங்குமங்கும் புரண்ட மூச்சு அவனது மண்டையைப் பிளந்துகொண்டு வெளியேறியது.

பாம்பின் பிராணன் வெளியேறியபின்,  தன் நண்பர்களையும் கன்றுகளையும் யோக சக்தியால் வெளிக் கொணர்ந்து தன் அமுதப் பார்வையால் உயிர்ப்பித்தான் கண்ணன். 

அப்போது பாம்பின் உடலிலி்ருந்து ஒரு பெரிய ஜோதி வெளியில் வந்து காத்திருந்தது. கண்ணன் அகாசுரனின் உடலிலிருந்து வெளியே குதித்ததும், எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஜோதி கண்ணனின் திருமேனிக்குள் சென்று மறைந்தது.

வானிலிருந்த தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் அனைவரும் ஆடிப் பாடி, வாத்யங்கள் இசைத்து மலர் தூவினர். இவ்விஷயத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ப்ரும்மா மிகவும் வியந்துபோனார்.

கண்ணனின் ஐந்தாம் வயதில் நடந்த இந்த லீலையை இடைச்சிறுவர்கள் ஒரு வருடம் கழித்து ஆறாம் வயதில் தத்தம் வீட்டில் சென்று விவரித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, January 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 378

அன்று காலை எழுந்து கன்று மேய்க்கக் கிளம்பும் சமயத்தில் கண்ணன் பலராமனை சற்றே தொட, அவனுக்கு ஜுரம் மாதிரி வந்துவிட்டது. உடனே ரோஹிணி பலராமனை இன்றொருநாள்  வனம் செல்லவேண்டாம் என்று தடுத்தாள். பலராமன் எவ்வளவு அழுது அடம் பிடித்தும் ரோஹிணி அனுப்ப மறுத்துவிட்டாள். அவன் ஏக்கத்துடன் கண்ணனைப் பார்த்தான். கண்ணன் ஏதாவது வக்காலத்து வாங்கி அழைத்துக்கொண்டு போவான் என்று நினைத்தான். ஆனால், அன்றைக்கு அவனை அழைத்துப்போக கண்ணனுக்குத் திருவுளம் இல்லை. எனவே விஷமமாகச் சிரித்துவிட்டு, இன்றைக்கு ஓய்வெடுங்கள் அண்ணா. அம்மா பேச்சை மீறலாமா என்று கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான்.

வேண்டுமென்றேதான் விட்டுச்  செல்கிறான் என்று புரிந்ததும் பலராமன் அமைதியானான்.

கண்ணன் வழக்கம்போல் கன்றுகளை முன்னே செல்ல விட்டு,  உற்சாகத்துடன்  சிறார்கள் தொடரக் கானகம் கிளம்பினான்.

பல்வேறு விளையாட்டுக்களை  விளையாடிக்கொண்டே சென்றனர். ஒருவனுக்குத் தெரியாமல் அவனது சோற்றுமூட்டையை எடுத்து அடுத்தவனிடம் கொடுப்பது, அவன் அதை அடுத்தவனிடம் கை மாற்றுவது, அவன் காணாமல் தேடி யாரிடம் இருக்கிறதெனக் கண்டுபிடிப்பது, கொம்பு, குழல் முதலியவற்றை ஊதுவது, தேன்வண்டுபோல் ரீங்காரம் செய்வது, ஆகியவற்றை விளையாடிக்கொண்டே சென்றனர். 

அங்கு யமுனைக் கரைக்குச் சென்றதும் அன்னத்துடன் இணைந்து அதைப்போலவே நடந்தனர். மயிலைப்போல் ஆடினர்.
தவளைபோல் கத்திக்கொண்டு தத்திக் குதித்தனர். தண்ணீருக்குள் குதித்து மீன்களைப் போல் நீந்தினர். மலையைப் பார்த்து ஒலி எழுப்பி, எழும் எதிரொலியை ரசித்தனர். குரங்குகளின் வாலைப் பிடித்துக்கொண்டு மரம் ஏறித் தாவினர்.

கண்ணனின் திருவடி தூளியின் ஒரு துகளுக்கு அனைவரும் ஏங்க, அவர்களோ கண்ணனுடன் இணைந்து தூசியில் புரண்டனர். அவர்களது பாக்யமே பாக்யம்.

அகன் என்ற அசுரன், பூதனை மற்றும் பகாசுரன் ஆகியோரின் சகோதரன்.  உடன் பிறந்தவர்களை அழித்த கண்ணனைக் கொல்வதற்காக வஞ்சம் கொண்டு தினமும் வனத்திற்கு வந்து சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். 

இன்று பலராமன் இல்லாமல் கண்ணன் தனியாக வந்திருப்பதைப் பார்த்து இன்று கண்ணனைக் கொன்றுவிடத் தீர்மானித்தான். இருவரையும் தனித்தனியாக இருக்கும்போது கொல்வது சுலபம் என்று எண்ணினான்.

ஒரு யோஜனை நீளமுள்ள மலையைப் போல் பெருத்த மலைப்பாம்பு வடிவமெடுத்து குகை போல் வாயைப் பிளந்துகொண்டு, அவர்களை விழுங்குவதற்காக வழியில் படுத்துக் கிடந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..