Thursday, April 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 445

மல்லர் அரங்கில் நுழைந்த கண்ணன் அங்கிருந்த ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்தான்.

மல்லர்களுக்கு அவனைப் பார்த்ததும் அடிவயிற்றில் பகீரென்று கிலி படர்ந்தது. 

குழுமியிருந்த பெண்களுக்கு மன்மதன் போல் இருந்தான்.

கோபர்களுக்கு அவர்களது அன்புக்குரிய கோவிந்தனாகக் காட்சியளித்தான்.

தீய சுபாவம் கொண்ட அரசர்க்கு ஆளுமை மிகுந்த அரசன் போல் தெரிந்தான்.

நந்தன், சுநந்தன் முதலியவர்கள் அவனை அன்புக் குழந்தையாகக் கண்டனர்.

கம்சனுக்கு கண்ணனைப் பார்த்ததும் யமனைப் பார்ப்பதுபோல் இருந்தது.

யோகிகளும் பக்தர்களும் பகவானாகக் கண்ணுற்றனர்.

வ்ருஷ்ணி குலத்தவர் கண்ணனைக் கண்டதும் இஷ்ட தெய்வத்தைக் கண்டதுபோல் பெருமகிழ்ச்சியுற்றனர்.

பெரும்பாலானோர் முதன் முதலாகக் கண்ணனைப் பார்ப்பவர்கள்.

மிகுந்த ஆச்சரியத்துடன் தாங்கள் கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டதையெல்லாம் பேசிக்கொண்டனர்.

இந்த ஒரு விஷயத்தில் நவ வித பக்தி ரஸங்களும் வெளிப்படுமாறு வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

குவலயாபீடத்தைக் கொன்ற சேதி கம்சனை எட்டியிருந்தது. பார்க்க திடமானவன் போல் இருந்தாலும் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.

அத்தனை பேரும் கண்ணனின் அழகைக் கண்களால் பருகினர்.

இவ்விருவரும் பகாவான் நாராயணனின் அம்சமாமே.

இவன் தேவகி மகனாம். யாருக்கும் தெரியாமல் நந்தன் வீட்டில் வளர்ந்திருக்கிறான். இவ்வளவு நாள்களாக கோகுலத்தின் வழியாகப் போய் வந்திருக்கிறோம். நமக்குத் தெரியவே இல்லை பார்.

கம்சராஜா இவனைக் கொல்ல நிறைய அசுரர்களை அனுப்பினாராம். இவன் அத்தனை பேரையும் கொன்னுட்டானாமே.

இவன் மலையைத் தூக்கினானாம் தெரியுமா?

ஒரு விஷ‌மடு இருந்ததே. அதிலிருந்து காளியப்பாம்பை விரட்டிவிட்டானாமே

நம்ம ராஜாவைக் கொல்லத்தான் வந்திருக்கான்னு பேசிக்கறாங்க.

அப்டி நடந்தா நமக்கெல்லாம் நல்ல காலம்தான். 

சரி சரி நமக்கேன் வம்பு.
என்ன நடக்கறதுன்னு பாக்கலாம்.

அப்போது பெரிதாக முரசொலி எழும்ப சாணூரன் கண்ணனையும் பலராமனையும் பெயர் சொல்லி சண்டைக்கு அழைத்தான்.

ஹே க்ருஷ்ணா! பலராமா! நீங்களிருவரும் சிறந்த வீரர்கள்தானே! மல்யுத்தம் செய்யவே அரசர் உங்களை அழைத்திருக்கிறார். நீங்கள் மாடு மேய்ப்பவர்கள் என்று உலகத்திற்கே தெரியும். இருப்பினும் அரசர் விரும்புவதால் நாம் மற்போர் செய்வோம். என்றான்.

அதைக் கேட்ட கண்ணன் சிரித்தான்.

நாங்களும் போஜராஜனின் குடிமக்களே. எமக்கும் அரசர் விருப்பத்தை நிறைவேற்ற ஆசைதான்.

ஆனால், மற்போர் சமமானவர்களுடன் நிகழவேண்டும். நாங்கள் சிறுவர்கள். நீங்கள் தேர்ந்த மல்யுத்த வீரர்கள். நாம் போர் செய்தால் மக்கள் போட்டியில் முறைகேடு என்று சந்தேகம் கொள்ளமாட்டார்களா? எங்களுக்கீடானவர்களை அழையுங்கள். யுத்தம்‌ செய்யத் தயார். என்றான்.

அதற்கு சாணூரன், 
மிகவும் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைக்கிறாயா? இப்போதுதான் வாசலில் குவலயாபீடத்தைக் கொன்றாய். அதிலிருந்தே தெரியவில்லையா நீ எத்தகைய பலவான் என்று. இந்த பலராமனும் மிகுந்த பலம் பொருந்தியவன் என்றறிவோம். முறைகேடு ஏதுமில்லை. நீ என்னுடன் யுத்தம் செய். பலராமன் முஷ்டிகனுடன் போர் செய்யட்டும்.
என்றான்.

விட்டில் பூச்சிகளைப் போல் வலிய வந்து விழுகிறார்களே‌ என்ற கண்ணனின் எண்ண ஓட்டத்தை பலராமனும் கண்ணால்  ஆமோதிக்க மல்யுத்தம் துவங்கிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Wednesday, April 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 444

மல்லர் அரங்கத்தின் பல்வேறு இருக்கைகளில் மக்கள் அமர்ந்தனர். கம்சன் மந்திரிகள் புடைசூழ உப்பரிகையில் தன் ஆசனத்தில் அமர்ந்தான்.

நிறைய மல்லர்கள் தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டு மார்களையும் தொடைகளையும் தட்டிக்கொண்டு தங்கள் குருக்களுடன் அரங்கினுள்‌ நுழைந்தனர்.

பேரிகையின் ஒலி விண்ணை ‌முட்டியது. 

சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசலன் ஆகிய ஐவரும் தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர். 

கம்சன் நந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு சிற்றரசரையும் அழைக்க அவர்கள் கம்சனுக்கான பரிசுப்பொருள்களைக் கொடுத்துவிட்டு தத்தம் இடங்களில் அமர்ந்தனர்.

காலைக் கதிரவன் கண்ணனையும் பலராமனையும் மெல்லத் தடவி எழுப்பினான்.

இருவரும் குளித்து தத்தம் கடன்களை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் நகர்வலம் கிளம்பினர்.

பேரிகையின் ஒலி வந்த திசையை நோக்கி கண்ணன் கைகாட்ட அனைவரும் அதை நோக்கிச் சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட பெரிய அரங்கத்தின் வாயிலில்‌ சிறு மலையைப் போல் நின்றிருந்த குவலயாபீடத்தைக் கண்டான் கண்ணன். யானைப்பாகனால் தூண்டப்பட்ட அந்தக் களிறு அரங்க வாயிலை அடைத்துக்கொண்டு நின்றது. தோழர்களைப் பின்னே‌ செல்லுமாறு சைகை காட்டினான்.

பின்னர் மாவுத்தனைப் பார்த்துக் கண்ணன் சொன்னான்.

ஓ! மாவுத்தனே! யானையை நகர்த்து! நாங்கள் அரங்கினுள் செல்லவேண்டும்.

மாவுத்தன் யானையைக் குத்த அது இடிபோல் பிளிறிக்கொண்டு அசையாமல் நின்றது.

வேண்டுமென்றே யானையைத் தூண்டி வழி மறிப்பதை உணர்ந்த கண்ணன்,
இப்போது வழிவிடாவிட்டால் நீயும் உன் யானையும் யமலோகம் செல்ல நேரிடும் என்றான்.

கடுங்கோபம்‌ கொண்ட மாவுத்தன் யானையை மேலும் தூண்ட, அது கண்ணனை நோக்கி  குன்று ஓடிவருவதைப்போல் பூமி அதிர ஓடிவந்தது.

குவலயாபீடம் கண்ணனைத் தும்பிக்கையால் பிடித்தது. அதிலிருந்து நழுவிய கண்ணன் அதன் கால்களுக்கிடையில் சென்றான்.

கண்ணனைக் காணாத யானை தன் மோப்ப சக்தியால் உணர்ந்து மீண்டும் பிடித்தது. 

மறுபடி நழுவிய கண்ணன் ஒரே‌ தாவலில் யானையின் பின்புறம் சென்று அதன் வாலைப் பிடித்தான்.

மலை தூக்கியவனுக்கு யானை ஒரு பாரமா? 

யானையின் வாலைப் பிடித்து இருபத்தைந்து வில் தூரம் கரகரவென்று பின்னால் இழுத்தான்.

செய்வதறியாது நிலைகுலைந்த யானையை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் கன்றைச் சுற்றுவதுபோல் விளையாட்டாகச் சுற்றினான்.

தலை சுற்றியது யானைக்கு.
பின்னர் யானையின் எதிரில் ஓடிவந்த கண்ணன் அதன் தும்பிக்கையைப் பிடித்து மேலேறி மஸ்தகத்தின்மீது ஓங்கி அடித்தான்.

கீழே குதித்து தன்னைத் துரத்தும் யானைக்கு முன்னே‌ ஓடுவதுபோல் ஓடி விலகிக்கொண்டான்.
வேகமாக ஓடிவந்த யானை அப்படியே நிலை தடுமாறி விழுந்தது.

கண்ணனும் கீழே விழுந்ததாக எண்ணி தந்தங்களால் கோபமாகத் தரையைக் குத்தியது.

மாவுத்தன் மறுபடி யானையை தூண்டினான்.
கண்ணனைத் தொடர்ந்து ஓடியது யானை. கண்ணன் திரும்பி யானையை நோக்கி ஓடிவந்து அதன் துதிக்கையைப் பிடித்துக் கீழே தள்ளினான்.

பின்னர் அதன் மேல் காலை வைத்து அழுத்தி மிதித்தான். அதன் தந்தங்களைப் பிடுங்கினான். அவற்றினாலேயே தன்னைத் தாக்க வந்த யானைப் பாகர்களையும் கொன்றான்‌.

குவலயாபீடத்தின் தந்தங்களின் அடியில் முகிழ்ந்திருந்த கஜமௌக்திகம் என்னும் முத்தை எடுத்து தன் நண்பனான ஸ்ரீ தாமாவிடம் கொடுத்தான். (ஸ்ரீதாமா ராதையின் சகோதரன்).

பின்னர் தன் தோள்களின் மீது யானைத் தந்தங்களை ஏந்தி, உடல் ‌முழுவதும்‌ யானையின் மதநீரும், குருதியும் தெறித்த கோலத்துடன் அரங்கினுள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து பலராமனும் கண்ணனின் தோழர்களும் அரங்கிற்குள் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Tuesday, April 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 443

விடிய விடிய கம்சன் உறங்கவே இல்லை. மதுரா வீதிகளில் நடந்த அத்தனை விஷயங்களும் அவனுக்கு ஒற்றர் மூலம் தெரியவந்தன. யாரைப் பார்த்தாலும்‌ சந்தேகம். திரைச்சீலை அசைந்தாலும் வாளை உருவிக்கொண்டு பாய்ந்தான். 

நீர் அருந்தக் குவளையை எடுத்தால் அதில் கண்ணன் முகம் தெரிந்தது. உணவுகள் அனைத்தும் கண்ணனே. தீபத்தைப் பார்த்தால் கண்ணன். நிலவைக் கண்டால் அதில் கண்ணன் முகம் தெரிந்தால் பக்தர்கள் மகிழ்வார்கள். கம்சனுக்கோ பயம் அதிகமாயிற்று. படுக்கையில் படுத்தால், கண்ணன் அவன் மீதேறி அமர்வது போலவும், நாற்காலியில் அமரப்போனால் அதில் ஏற்கனவே கண்ணன் சிரிப்பது போலவும் தெரிந்தான்.

ஒருக்கால் தன்னை மறந்து கண்ணயர்ந்தாலும் கனவிலும் கண்ணன் வந்தால்
என்னதான் செய்வான் பாவம்!  ஆனால், இது பாக்யமல்லவா! 

வான முகட்டைச் சற்று மனம் வந்து நோக்கினும் நின் மோன முகம் வந்து காணுதே என்கிறார் ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட சுப்பையர்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று பாடினார் முண்டாசுக் கவி.

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன், எம்பெருமான் என்ற ஆழ்வாரின் வாக்கின்படி அனைத்தும் கண்ணனாகத் தெரியவேண்டும் அவ்வளவுதான். அந்நிலை கண்ணன் மீது கொண்ட அளவற்ற வாத்ஸல்யத்தாலோ, பக்தியாலொ, காதலினாலோ, நட்பினாலோ, எஜமானன் என்பதாலோ, பகையாலோ, பயத்தாலோ, கோபத்தாலோ எவ்வுணர்வினால் வந்தாலும் சரி. அந்த ஜீவனை பகவான் முழுவதுமாக 
ஆட்கொண்டு விடுகிறான்.

உட்காரவும், படுக்கவும் கூட இயலாமல் நின்றுகொண்டே சற்று கண்ணயர்ந்தான் கம்சன். அப்போது ஏராளமான துர்சகுனங்களைக் கனவில் கண்டான்.

கண்ணாடியில் தன் பிம்பம் தலையின்றி இருப்பதுபோலவும், இரண்டிரண்டு சூரிய சந்திரர்களையும், தன் நிழலில் ஓட்டை இருப்பது போலவும், இதயத்துடிப்பு தனக்குக் கேட்காததுபோலவும் சேற்றில் நடந்தால் தன் காலடி பதியாததுபோலவும் தீய கனவுகளைக் கண்டான்.

கனவென்றறியாமல் பிதற்றிக்கொண்டிருந்த கம்சனை‌க் காலைச் சூரியனில் சிரிக்கும் கண்ணன் எழுப்பிவிட்டான்.

அலறிப் புடைத்துக்கொண்டு விழித்த கம்சன் ஸ்நானம் செய்துவிட்டு வந்து பார்த்தால் உடுத்தப் புது உடை இல்லை. கேட்டால் அரண்மனை உடைகள் அனைத்தையும் கண்ணன் எடுத்துக் கொண்டான் என்று பதில் வந்தது. ஏற்கனவே அணிந்த உடையை அணிந்துகொண்டு வந்தால், சந்தனம் மற்றும் வாசனைப் பூச்சுக்கள் வரவில்லை. கண்ணனுக்கு சந்தனம் பூசி சேவை செய்தபின் பாழும் இக்கம்சனுக்கு சேவை செய்வாளா குப்ஜை. அலங்காரத்திற்கான மாலைகளும் வரவில்லை. நேற்று தொடுத்த மாலைகள் அனைத்தையும் அப்போதே கண்ணன் சாற்றிக்கொண்டான்.

வெறுத்துப்போனான் கம்சன். கோபத்தில் என்னமோ தாறுமாறாக ஒரு அலங்காரம் செய்துகொண்டு அரசவைக்கு வந்தான்.

மல்யுத்தம் துவங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனே செய்யச் சொல்லி சாணூரன் முஷ்டிகன் ஆகியோர்க்கு உத்தரவிட்டான்.

சிறைச்சாலையில் வசுதேவரின் காவலை அதிகப்படுத்தச் சொன்னான்.

பட்டத்து யானையான குவலயாபீடத்தை மதம் ஏற்றிவிட்டு மல்லர் அரங்கின் வாயிலில் நிற்கப் பணித்தான்.

மல்லர் அரங்கில் தன் இருக்கையை இரண்டு மாடி உயரத்திலுள்ள‌ உப்பரிகையில் போடச்சொன்னான்.

கண்ணனைக் கண்காணிக்க எல்லா‌ இடத்திலும் வீரர்களைச் சித்தமாக நிறுத்தவும் அவனது ஒவ்வொரு அசைவையும் உடனுக்குடன் தனக்குத் தெரியப்படுத்தவும் கட்டளையிட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Monday, April 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 442

வேடிக்கை பார்த்துக் கொண்டும், மதுரா நகர மக்கள் சமர்ப்பித்த மரியாதைகளை ஏற்றுக்கொண்டும், அவர்களுக்கு அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டும், ஒய்யாரமாக நடந்த கண்ணன் ஒரு வழியாக தனுர் யாகம் நடக்கும் இடத்தை அடைந்தான். 

நன்றாக அலங்கரிக்கப்பட்ட பெரிய அரங்கம் அது. யாககுண்டங்களைத் தாண்டி பட்டு விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய மேடை இருந்தது. அதன் மேல் ஒரு பெரிய வில் வைக்கப்பட்டிருந்தது. கம்சன் பரம்பரையாக வழிபட்டுவரும் தனுசு அது. 

அவ்வில்லிற்கு மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்ற அடையாளம் இருந்தது. சந்தன குங்குமம் இடப்பட்டு, பூக்கள் சிதறியிருந்தன.

அவ்வரங்கைச் சுற்றிலும் நிறைய காவலாளிகள் இருந்தனர்.

அரங்கிற்குள் தன் பட்டாளத்துடன் பிரவேசித்தான் கண்ணன். வில்லைப் பார்வையிடவும்  வணங்கவும் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததால் இவர்களையும் ஏதோ பார்வையாளர்கள் என்றெண்ணி வாளாவிருந்தனர் வீரர்கள்.

ஆனால் அனைவரின் பார்வையும் சுந்தரக் கண்ணன் மீதே இருந்தது.

மற்றவர்கள் சற்று தயங்கி நிற்கும் சமயத்தில் கண்ணன் விடுவிடுவென்று வில்லின் அருகில் சென்றான்.

தள்ளி நின்று வழிபடு. வில்லைத் தொடக்கூடாது என்று காவலர்கள் தடுத்தனர்.

அவர்களை ஒரே தள்ளாகத் தள்ளினான் கண்ணன். மற்ற காவலர்கள் சுதாரித்துக்கொண்டு ஓடி வருவதற்குள் அநாயாசமாக அவ்வில்லை இடக்கையால் எடுத்தான்.

மாபெரும் வில் அது. கம்சனின் அரண்மனை யிலிருந்து அதை எடுத்துவரவே ஏராளமான பணியாளர்கள் தேவைப்பட்டனர். அப்படியிருக்க ஒரு சிறுவன் இடக்கையால் வில்லைத் தூக்குவது கண்டு பிரமித்துப்போய் சிலையாய் நின்றனர் அக்காவலர்கள்.

கண்ணன் வில்லை நாணேற்ற முயலும் சமயத்தில் டணார் என்று இடி போன்ற சத்தத்துடன் வில் முறிந்து விழுந்தது.
 வில்லின் ஒலி நாற்றிசைகளிலும் கேட்டது. கம்சனுக்கும் அச்சத்தம் எட்டியது.
குளிர்ஜுரம் வந்ததுபோல் பயத்தினால் நடுங்க ஆரம்பித்தான் கம்சன்.

அவ்வளவுதான் அத்தனை காவலர்களும் கண்ணனையும்‌ பலராமனையும் சூழந்துகொண்டனர்.

அவனைப் பிடியுங்கள்! கட்டுங்கள்! என்று கத்தினார்கள்.

கண்ணனும் பலராமனும் வில்லின் ஒடிந்த துண்டுகளைக் கையிலெடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான காவலர்களையும் அடித்து த்வம்சம் செய்ய அவர்கள் அனைவரும் அங்கேயே மாண்டனர்.

வேள்விச்சாலையிலிருந்து வெளிவந்த கண்ணன் தன் பரிவாரத்துடன் மீண்டும் நகருக்குள் சுற்ற ஆரம்பித்தான்.

அதற்குள் காட்டுத்தீயாய்ச் செய்தி பரவ, மக்கள் அனைவரும் கண்ணனையும் பலராமனையும் கொடூரமான கம்சனிடமிருந்து  தங்களைக் காக்க வந்த தேவகுமாரர்கள் இவர்களே என்று கூறினர். வணங்கிப் பூஜைகள் செய்தனர்.

ஆங்காங்கே இருந்த தோட்டங்களுக்குள் சென்று வயிறார பழங்களை உண்டனர். சூரியன் மேற்றிசையில்  ஓய்வெடுக்கச் சென்றதும், கண்ணனும் பலராமனும் தாங்கள் வண்டிகளைக் கட்டியிருந்த தோட்டத்திற்கே திரும்பினர்.

அங்கே தங்யிருந்த இடையர்கள் இரவுக்குப் பாலுணவு தயார் செய்திருந்தனர்.

அனைவரும் அதை உண்டனர். பின்னர் சிறுவர்கள், 
தாங்கள் நகரைச் சுற்றிய கதையையும், பார்த்த வியப்புக்குரிய விஷயங்களையும், கண்ணன் வில்லொடித்த அழகையும் பேசிக்கொண்டு புல்வெளியில் உறங்கத் துவங்கினர்.

கண்ணனும் பலராமனும் நந்தனைக் கட்டிக்கொண்டு உறங்கத் துவங்க, நந்தனுக்கு உறக்கம் வருமா? நாளை இந்தச் செல்வங்கள் நமதில்லையே என்ற எண்ணம் நந்தனின் நெஞ்சை அறுத்தது.

உறக்கத்திலும் கண்ணனின் திருக்கரம் நந்தனின் கண்ணீரைத் துடைத்தது.

அங்கே.. கம்சனோ பயத்தினால் எதையும் உண்ணவும் முடியாமல், உறங்கவும் முடியாமல் பிதற்றிக்கொண்டிருந்தான். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Sunday, April 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 441

கம்பீரமாக நடந்துகொண்டிருந்தனர்  கோபாலனும் குழுவினரும்.

கடைவீதியிலிருந்து  ராஜவீதிக்குத் திரும்பியதும் பிரமித்துப்போனார்கள். மேகத்தை உரசும் மிக அழகான மாளிகைகள் கண்ணைப் பறித்தன. ஒவ்வொரு மாளிகையும் தனிச் சிறப்பு கொண்டதாயிருந்தது.

அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து வலியே வந்துவிட்டது சிறுவர்களுக்கு. 

அப்போது எதிரில் ஒரு கூனி வந்துகொண்டிருந்தாள். இளமையும் அழகிய முகமும் கொண்ட அவளது உடல் மூன்று கோணல்களாக வளைந்திருந்தது.

அவள் நடக்கும்போது கோணி கோணி கால்கள் திசைக்கொரு புறம் செல்ல கழுத்து வேறு பக்கம் திரும்பியது. கைகளில் சந்தனக் கிண்ணங்கள் கொண்ட தட்டை ஏந்திக்கொண்டிருந்தாள். அவற்றின் நறுமணம் சுண்டி இழுத்தது. 

அவளது நடையைக் கண்டதும் சிறுவர்கள் சிரித்தனர். கண்ணன் கண்ணாலேயே அவர்களை அடக்கினான். பின்னர் எதிரே சென்று அவளை அடுத்த அடி வைக்கவிடாமல் நின்றான்.

வழி மறைக்கப்பட்டதும் நிமிர்ந்து பார்த்தாள் அப்பெண். அவ்வளவுதான். தேடி வந்த சுந்தரக் கண்ணனின் அழகில் மயங்கினாள். அவள்‌ முகத்தில் வெட்கம் படர்ந்தது. குனிந்து கண்ணனின் தாமரைப் பாதங்களை நோக்கினாள்.

கண்ணன் அவளைப் பார்த்து,

ஓ! அழகிய பெண்ணே! நீ யார்? 
என்றான்.

அழகிய பெண்ணா? தன்னைக்‌ கேலி செய்கிறானா என்று நிமிர்ந்து பார்த்தவள் கண்ணனின் கருணை சிந்தும் மலர்விழிகளைக் கண்டு பகடி இல்லை என்று புரிந்துகொண்டாள்.

என் பெயர் த்ரிவக்ரா என்பது. நான் நறுமணப் பூச்சும், சந்தனக் குழம்பும் தயாரித்து கம்சனுக்கு அளிக்கும் பணிப்பெண். என்றாள்.

சுகந்தம் நிறைந்த இந்த சந்தனத்தை எனக்குத் தருவாயா?

உங்களைத் தவிர இது வேறு யாருக்குப் பொருந்தும்? தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கிண்ணத்தை நீட்டினாள்.

அதை எடுத்துக்கொள்ளாமல் கண்ணன் அவளைக் குறும்புடன் பார்க்க, அவளே எடுத்து, கண்ணனின் மார்பிலும் கரங்களிலும் பூசிவிட்டாள். பலராமனுக்கும், மற்ற சிறுவர்களுக்கும் சந்தனம் கொடுத்தாள்.

அந்த சந்தனத்தில் பற்பல  வண்ணங்களைக் கலந்திருந்தாள். எனவே சந்தப்பூச்சு கண்ணன் மற்றும் பலராமனின் திருமேனிகளில் மிக அழகாக விளங்கியது.

தன்னைக் கண்டதற்கான பலனை அவளுக்கு உடனே அளிக்க விரும்பினான் கண்ணன்.

அவளெதிரே சென்று இன்னும்‌ நெருங்கினான்.

அவள் என்ன நிகழ்கிறதென்று யோசிக்கும் முன்பாக, தன் ஒரு திருக்கரத்தால் அவளது கையைப் பிடித்துத் தூக்கினான். கால் விரலால் அவளது கால்களை அழுத்திக் கொண்டான். மற்றொரு கரத்தின் இரு விரல்களால் அவளது முகவாய்க் கட்டையைப் பிடித்து உயர்த்த, அவளது உடலில் இருந்த கோணல்கள்‌ அனைத்தும் கணத்தில் நீங்கின.

கண்ணன் கரம் பட்டதும் தேவமங்கையைப் போல் பேரழகு படைத்த உடற்கட்டுடன் திகழ்ந்தாள் அவள்.

நற்குணங்களும், இரக்க சுபாவமும் கொண்ட த்ரிவக்ரா கண்ணன் மீது காதல் கொண்டாள்.

ஸ்வாமீ! ஒரு கணத்தில் என் உடலைக் குறையற்றதாக்கினீர்கள். மனக்குறை தீர வீட்டிற்கு வாருங்கள். என்றழைத்தாள்.

அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது‌ ஒரு பேரழகி தன்னை அழைப்பது கண்டு கண்ணனுக்கு வெட்கமாகிவிட்டது. திரும்பி நண்பர்களைப் பார்க்க அனைவர் முகத்திலும் தெரிந்த குறும்பைப் பார்த்து, அவளிடம் 

நான் கண்டிப்பாக வருகிறேன். ஆனால், இப்போது நிறைய வேலைகள் இருக்கின்றன. மற்றொரு சமயம் நிச்சயமாக இவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவேன். என்றான்

சூழ்நிலையை உணர்ந்த அவள், அவசியம் வரவேண்டும் என்று கண்ணனின் கையை அழுத்திச் சொல்லிவிட்டுப் பிரிய  மனமின்றி அவர்களை அனுப்பினாள்.

வழியெங்கும் வியாபாரிகள் பலர் கண்ணனுக்கு மரியாதைகள் செலுத்தினர்.

பிறகு தனுர்யாகம் எங்கே நடக்கிறது என்று விசாரித்துக்கொண்டு வேள்விச்சாலையை நோக்கி  கண்ணனும் பலராமனும் நண்பர்களுடன்  நடக்கத் துவங்கினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Saturday, April 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 440

பலராமனின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு  நாற்புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் நண்பர்களுடன் கேலி பேசிக்கொண்டும், அப்படியே தன்னை ஆர்வமுடன் தரிசிக்க வருபவர்களையும், வணங்குபவர்களையும் ஓரக்கண்ணால் கடாக்ஷித்துக் கொண்டே சற்று நிதானமாக நடந்தான் கண்ணன்.

அப்போது
சுதாமா என்ற பூக்காரன் வந்து கண்ணனை வணங்கினான்.

நறுமணம் மிக்க பூக்களைக் கண்ணனின் தாமரைப் பாதங்களில் போட்டுவிட்டு கீழே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் அவனைக் கருணை பொங்கப் பார்த்தான் கண்ணன். 

எழும்பியதும், கண்ணனைத் தன் கடைக்குள் அழைத்தான் சுதாமா.

மகிழ்ச்சியுடன் அவனது கடைக்குள் சென்றான் கண்ணன். கண்ணனுக்கும்  அவனது அண்ணனுக்கும் மற்ற தோழர்களுக்கும் ஆசனம் அளித்தான் சுதாமா. பின்னர் நீர், பூமாலைகள், தாம்பூலம், சந்தனம் ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தான்.

ப்ரபோ! 
தங்கள் வரவால் என் பிறப்பும், குலமும் புனிதமாயிற்று.  நான் மூவகைக் கடன்களிலிருந்தும் விடுபட்டேன். 

மூல காரணப்பொருளான நீங்கள் ஞானம், பலம், ஐச்வர்யம் ஆகியவற்றை ஏற்று அவதாரம் செய்திருக்கிறீர்கள். உயிரினங்களிடத்து சமநோக்குள்ளவர்கள். தங்களுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பேதமில்லை. உங்களிடம் எதை அர்ப்பணம் செய்கிறோமோ அது பன்மடங்கு வளரும். 

நான் தங்கள் சேவகன். உங்களுக்கு என்ன பணிவிடை செய்யட்டும்? என்றான்.

கண்ணனின் பார்வை வந்ததிலிருந்து அங்கு தொங்கிக்கொண்டிருந்த மாலைகளின் மீதே இருந்தது. அதை உணர்ந்த சுதாமா சுகந்தம் நிறைந்த புதிய பூக்களை எடுத்து அழகிய மாலை தொடுத்து கண்ணனையும் பலராமனையும் அலங்காரம்‌ செய்தான். 

கண்ணன் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, 
அவன் கண்ணனிடத்து அசையாத பக்தியும் அனைத்து உயிர்களிடத்தும் பரிவும் வேண்டுமெனக் கேட்டான். எத்தகைய உயர்ந்த வரம்? 

அதனால் கண்ணன் மிகவும் மகிழ்ந்து போனான். சுதாமாவிற்கு வாழையடி வாழையாக வம்சம் முழுவதும் தழைக்க செல்வம், வலிமை, ஆயுள், புகழ், மற்றும் தேஜஸ் அனைத்தையும் கொடுத்து இறுதியில் முக்தியும் கிட்டுமென வரமளித்தான்.

என்றோ ஒரு நாள் மாலை சாற்றியவனுக்கே இவ்வளவும் கொடுத்தான் என்றால், தினம் தினம் கண்ணனைப் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து ஆராதனை செய்யும் பக்தர்க்கு  என்னதான் தரமாட்டான்.

கஜேந்திரன் 'பூரி கருணாய' என்றழைக்கிறான். பகவானுக்குக் கொஞ்சமாகக் கொடுக்கவே தெரியாது. கேட்பவரின் தகுதி  பற்றிய கேள்வியே இல்லை. கண்ணன் தன் தகுதிக்கேற்ப வாரி வழங்கக்கூடியவன்.

அழகான மலர்க் கிரீடங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ராம க்ருஷ்ணர்கள் மீண்டும்‌ நகர்வலம்‌ கிளம்பினர். கண்ணனின் தோழர்களுக்கும் ஆளுக்கொரு மலர்மாலையைச் சூட்டி அனுப்பினான்‌‌ சுதாமா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Friday, April 24, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 439

இடைச் சிறுவர்கள் நாகரீகமான உடை வேண்டுமென்று கண்ணனிடம் கேட்டனர்.

அப்போது எதிரே ஒரு வண்ணான் வந்து கொண்டிருந்தான். பல்வேறு அரச உடைகளைத் துவைத்து சாயமேற்றி, அழகுறச் செய்து எடுத்து வந்து கொண்டிருந்தான். 

கண்ணன் அவனெதிரே போய் நின்றான். தன் தாமரைக் கண்களால் அவனை முழுவதுமாகக் கண்களால் அளந்தான். என்னே! அவனது பாக்யம்!

பின்னர், ஐயா! உமக்குப் பெரு நன்மை உண்டாகும். எங்கள் அனைவர்க்கும் நல்ல ஆடைகளைக் கொடுக்க இயலுமா? என்று கேட்டான்.

எங்கும் நிரம்பிய வஸ்துவான கண்ணன் வேண்டிக் கேட்க, அரசனின் பணியாளான அவ்வண்ணானுக்கோ அகங்காரம் தலைக்கு மேல் இருந்தது. 

கொடுத்திருக்கலாம் அல்லது இல்லையென்று தன்மையாகச்  சொல்லியிருக்கலாம்.

அவன் செய்த நற்செயல்களின் பயனால் மிகுந்த கோபத்துடன் கன்ணனை ஏசத் துவங்கினான். 

மலையிலும் காட்டிலும் சுற்றும் பரதேசிகளான உங்களுக்கு அரச உடைகள் கேட்குதோ. சிறுபிள்ளைகள் என்று விடுகிறேன். உயிர் மீது ஆசையிருந்தால் பேசாமல் தள்ளிப் போங்கள். அரசரைச் சார்ந்தவரிடம் முறை தவறி நடந்தால் சிறைவாசம்தான். உங்களின் சொத்துக்களும் பறிக்கப்படும்.
என்றான்.

அவனுடைய பிதற்றலைக் கேட்டு கண்ணன் விளையாட்டாக நகத்தினாலேயே அவன் தலையைக் கிள்ளிப் போட்டான். நட்டநடு கடைவீதியில் அனைவரும் பார்க்க தலைமை வண்ணான் தலையற்று வீழ்ந்தது கண்டு அவனுடைய உதவியாளர்களும் ‌மற்ற வண்ணான்களும் கைகளிலிருந்த துணி மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டுச் சிதறி ஓடினர்.

கண்ணன் தனக்குப் பிடித்த ஆடைகளான புதிய மஞ்சள் பட்டாடையையும், சிவப்பு உத்தரீயத்தையும், அழகிய வேலைப்பாடுள்ள முத்தங்கியையும்  எடுத்து அணிந்துகொண்டான். 

பலராமனும் தனக்குப் பிடித்த நீலப்பட்டாடை, மஞ்சள் உத்தரீயம் மற்றும் ஒரு முத்தங்கியை எடுத்து உடுத்தினான். மற்ற சிறுவர்களும் அவரவர்க்கு விருப்பமான உடைகளை நாம் துணிக்கடைகளில் தேர்வு செய்வதுபோல் தேர்ந்தெடுத்தனர்.

மீதியை அங்கேயே ஒரு ஓரமாகக் கீழே போட்டனர்.

ஆனால், பாவம் அவர்களுக்கு உடைகள் பொருத்தமான அளவில் இல்லை. உடலைப் பிடிக்குமாறோ அல்லது தளர்வாகவோ இருந்தன.  

அவற்றைப் போட்டுக்கொண்டு தசாபுசாவென்று குட்டியானைகளைப்போல் கைகளை வீசி வீசி நடந்தனர். பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

அங்கிருந்த ஒரு தையல்காரர் அவர்களைத் தாமாகவே அழைத்து அனைவரின் உடைகளையும் அவரவரின் அளவிற்கேற்ப சரி செய்து தைத்துக்கொடுத்தார். கச்சிதமான உடைகளில் அனைவரும் மிகவும் அழகாக விளங்கினர்.

தன் தோழர்களுக்கும் தையல்காரர்  உதவி செய்ததைக் கண்ட 
கண்ணன் கேட்காமலே பல நன்மைகளை அருள்புரிந்தான்.

பெருஞ்செல்வம், வலிமை, புலன்களின் கூர்மை, தன்மீது பக்தி, இறுதியில் சாரூப்ய முக்தி ஆகிய அரிய வரங்கள் அவருக்குக் கிடைத்தன.

ராஜ மிடுக்குடன் தோழர்கள் புடைசூழ மதுரா நகரின் வீதிகளில் கண்ணன் மீண்டும் உலாவத் துவங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Thursday, April 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 438

அன்றிரவு அருகிலிருந்த தோட்டத்தில் வண்டி மாடுகளை அவிழ்த்துவிட்டு, கோபர்களுடன் தங்கினான் கண்ணன்.

மறுநாள் காலை கண்ணன் நண்பர்களுடன் மதுரா நகரின் அழகைக் காணக் கிளம்பினான்.

ப்ரமிக்கவைக்கும் அழகுடன் திகழ்ந்தது மதுரா. ஸ்படிக கோபுரங்களும், தங்கத் தோரணங்களும், பித்தளையாலான தானியக் களஞ்சியங்களும், குதிரை லாயங்களும், பழத்தோட்டங்களும், பூந்தோட்டங்களும், வானளாவிய மாளிகைகளும், அழகிய உப்பரிகைகளும், நிரம்பிய அதிசய நகரம் மதுரா. தொழில் வாரியாக பணிமனைகள் இருந்தன. வீடுகளின் தூண்களும், மேடைகளும்  ரத்தினங்களாலும், வைர வைடூர்யங்களாலும் இழைக்கப்பட்டவை.

ஆங்காங்கே மாடங்களில் புறாக்களும், கிளிகளும் அமர்ந்து இனிமையாகக் கூவிக் கொண்டிருந்தன. தேர்வீதிகள், கடைவீதிகள், மாடவீதிகள்,  நாற்சந்திகள், ஆகியவை பூமாலைகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அழகிய கோலங்கள் போடப்பட்டு,  பூக்களும் அக்ஷதையும் வாரியிறைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் தயிரும் சந்தனக் குழம்பும் தெளிக்கப்பட்டு, மாவிலைக்கொத்துகளும், தீப வரிசைகளும், வாழைத்தார்களுடன் கூடிய வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

பட்டுத்துணி சுற்றிய பூரணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வைக்கப்பட்டிருந்தது.

கண்ணனும் பலராமனும் ராஜவீதியில் நுழைந்ததும் அவர்களைக் காண மக்கள்‌ பெரும் ஆர்வமுடன் கூடினர். பெண்கள் ஓடிவந்து வாயிலில் நின்றனர். சிலர் உப்பரிகைகளில் நின்றனர்.

கண்ணனைக் காணும் ஆர்வத்தில் தாறுமாறாக ஆடை அணிகலன்களை அணிந்துகொண்டு ஓடிவந்தனர்.

பலர் பாதி உணவில் எழுந்து வந்தனர். குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே குழந்தையைக் கீழே விட்டுவிட்டு ஓடிவந்தனர்.

குட்டியானை போல் அழகுற நடந்து வந்த கண்ணன் ஒருவர் விடாமல் அனைவரையும் பார்த்து புன்முறுவலால் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

மேல் மாடங்களில் இருந்த மாதர்கள் அங்கிருந்து கண்ணன் மேல்  பூக்களைத் தூவினர்.

ஆங்காங்கே அந்தணர்களும் மக்களும் பூர்ண கலசங்களையும்‌ காணிக்கைகளையும் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுத்தனர்.

இந்தக் கண்ணனைக் காண கோபியர்கள் என்ன தவம் செய்தனரோ என்று பேசிக்கொண்டனர்.

கண்ணனுடன் கோபச் சிறுவர்களும்  வந்தனர்.

கண்ணனின் கண்கவர் அழகினாலும், தேஜஸினாலும் அவனது ஆடை அணிகலன்கள் பற்றி ஒருவரும்‌ கவனிக்கவில்லை.

உடன் வந்த கோபச் சிறுவர்களோ, மூலக் கச்சம் கட்டிய வேட்டிகளும், அழுக்குத் துண்டுகளும், தலையில் ஒரு முண்டாசும் கையில் கோலுமாக வந்தனர். அவர்களுக்கு நகரத்து மக்களைப் பார்த்ததும்  தங்களைக் குறித்து வெட்கம் ஏற்பட்டது.

கண்ணா! இவ்வூர் மக்கள் அனைவரும் மிகவும் அழகான ஆடை அணிகலன்களை அணிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஊரில் நாம் மிகவும் சாதாரண உடைகளுடன் சுற்றிக்கொண்டிருக்க வெட்கமாக இருக்கிறது என்றனர்.

கண்ணன், ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று கூறி மேலே நடந்தான். எதிரே..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Tuesday, April 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 437

நீரிலிருந்து வெளிவந்த அக்ரூரர் விரைவாகத் தன் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ரதத்தின் அருகில் வந்தார். 

அவரை வேண்டுமென்றே வம்பிழுத்தான் கண்ணன்.

சித்தப்பா.. உங்கள் முகம் ஏன் இப்படி வெளிறிப்போயிருக்கிறது? தண்ணீரில் ஏதாவது அதிசயத்தைப் பார்த்தீ்ர்களா? உங்களைப் பார்த்தால் எதையோ பார்த்து பயந்த மாதிரி இருக்கிறதே.

அக்ரூரர் சற்று திகைத்தார். பின்னர் அவனுக்கீடாக பதில் சொன்னார்.

இதுவரை நான் கண்டிராத மாபெரும் அற்புதம் நீதான் கண்ணா.. உன்னை விடப் பெரிய அற்புதம் என்ன இருக்கிறது. வான், மண், நீர், நெருப்பு இவையனைத்திலும் என்னென்ன அற்புதங்கள் உண்டோ அவையனைத்தும் உனக்குள் அடக்கம். என்றார்.

அதற்கு மேல் பேசினால் அவதார வேஷம் வெளிப்படுமென்று போகலாம் சித்தப்பா. நேரமாயிற்று என்றான் கண்ணன்.

காந்தினியின் மகனான அக்ரூரர் ரதத்திலேறியதும் ரதம் விரைந்து சென்றது. அவர்கள் மதுராவை அடைய மாலையாகிவிட்டது.

வழியெங்கும் கிராமத்து மக்கள் கூடி நின்று மிக்க மகிழ்ச்சியுடன் கண்ணனை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

ஆங்காங்கே சில ‌மகளிர் ரதத்தை நிறுத்தி ஆரத்தி எடுத்தனர். மாலை, பூக்கள், அக்ஷதை ஆகியவற்றைத் தூவினர்.

கோகுல கண்ணன் இவன்தானா.. எவ்வளவு அழகு.. என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

மதுராவின் கோட்டை வாயிலை அடைந்ததும், அங்கே நந்தன் முதலான கோபர்கள் மாட்டு வண்டிகளுடன் காத்திருந்தனர்.

அவர்களைப்‌ பார்த்ததும் கண்ணன், சித்தப்பா, எங்களை இங்கேயே விட்டுவிடுங்கள். நாங்கள் வண்டிகளை அவிழ்த்து சற்று இளைப்பாறிவிட்டுப் பின்னர் வருகிறோம். என்றான்.

அக்ரூரர் கண்களில் நீர் கட்டியது.
நீ‌ர் என்னைக் கைவிடலாகாது. நான் தனியாக மதுராவிற்குள் செல்லமாட்டேன். நீங்கள் அனைவரும் என் வீட்டிற்கு வாருங்கள். தங்கள் திருவடி  பதிந்தால் என் வீடு புனிதமாகும். என் முன்னோர் அனைவரும் மகிழ்வர்.

தங்கள் திருவடி நீரான கங்கை அனைத்துப் பாவங்களும் தீர்க்கும் புண்யநதியாவாள். அதை பரமேஸ்வரன் தலையில் தாங்குகிறார். ஸகரரின் மக்கள் அனைவரும் கங்கையாலேயே நற்கதியடைந்தனர்.

பெரியோர்கள் அனைவரும் தங்கள் திருநாமங்களைக் கேட்பதும் பாடுவதுமாக உள்ளனர். நாராயணரே! உமக்கு நமஸ்காரம். 
என்றார்.

கண்ணன் சொன்னான்.

அதெல்லாம் சரிதான் சித்தப்பா. இப்போது நிலைமை சரியில்லை. கம்சன் அழிந்ததும்‌ நான் நம் வீட்டுக்கு வருகிறேன். அதுவரை இவர்களோடு இருப்பேன். நீங்கள் மாமாவிடம் எங்களை அழைத்துவந்துவிட்டதாகக் கூறுங்கள். நாளை தனுர்யாகத்தில் பார்க்கலாம். என்றான். வேறு வழியின்றி அக்ரூரர், மனத்தைக் கண்ணனின் திருவடியில் விட்டு உடலை மட்டும் நகர்த்திக்கொண்டு  வீட்டுக்குச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Monday, April 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 436

யமுனையில் நீராடச் சென்ற அக்ரூரர் நீருக்கடியிலும் தேரிலுமாக இரண்டு இடங்களிலும் கண்ணனைக் கண்டார். 

நீருக்கடியில் வைகுண்ட தரிசனம் கிடைக்கப்பெற்றுத் தன்னிலை மறந்தார்.

பின்னர் மெதுவாக உணர்வு பெற்று பகவானைத் துதிக்கலானார்.

மூலபுருஷரும், முடிவற்றவருமான தம்மை வணங்குகிறேன். ஸ்ரீமன் நாராயணனான உமது நாபியிலிருந்துதான் ப்ரும்மா தோன்றினார். அவரிடமிருந்து ப்ரபஞ்சம் தோன்றிற்று.

பூமி, நீர், ஆகாயம், காற்று, அக்னி, அவற்றின் காரணமான மஹத் தத்வம், மூலப்ரக்ருதி, அதன் புருஷன், மனம், பொறிகள், புலன்கள், அவற்றின் தேவதைகள், ஆகிய அனைத்துக் காரண வஸ்துக்களும் உம்மிடமிருந்து தோன்றின. இது என்று சுட்டிக்காட்ட முடிந்த அனைத்தும் தங்கள் படைப்பாகும். அவையனைத்தும் ஜடமே. அவற்றால் தம்மை அறிந்துகொள்ள இயலாது. தாங்கள் ஆத்ம ஸ்வரூபமாக அவற்றுள் உறைகிறீர்கள். அதனாலேயே அவற்றிற்கு உணர்வு வருகிறது.

ப்ரும்மதேவர் உமது அம்சமானாலும் ரஜோகுணத்தின் அடிப்படையில் தோன்றியவர். அவரும்கூட தமது உண்மை உருவை அறியமாட்டார்.

ஸாத்வீக குணமுள்ளவர்கள் தங்களை அந்தர்யாமியாகவும், எங்கும் பரவி நிற்பவராகவும், தங்களைப் பூஜை செய்கிறார்கள். 

வேதம் ஓதும் அந்தணர்கள் ரிக், யஜுர், சாம வேதங்களின் மூலமும், பல வித வேள்விகளாலும் பல்வேறு தேவர்களைப் பூஜை செய்தாலும் அவையனைத்தும் உம்மையே அடைகின்றன.

ஞானிகளோ தமது செயல்களின் பலன்கள் அனைத்தையும் உமக்கே அர்ப்பணம் செய்கிறார்கள். 
உலக இன்பங்களை முற்றிலும் துறந்து ஞானத்தால் தங்களை வழிபடுகின்றனர்.

சிலர் சைவ வைஷ்ணவ தீக்ஷை பெற்று பாஞ்சராத்ரம், ஆகமங்கள் ஆகியவற்றின் மூலம் வாசுதேவன்,  ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூர்த்திகளாக தங்களைப் பூஜிக்கிறார்கள்.

சிலர் சைவம், பாசுபதம் ஆகிய முறைகளில் பரமேஸ்வரனின் வடிவில் தங்களை வழிபடுகின்றனர்.

எந்தெந்த தேவதைகளிடம் ‌யார் பக்தி செய்தாலும், அவர்கள் அனைவரும் தங்களையே வழிபடுகிறார்கள்.

மலைகளில் தோன்றும் ஆறுகள்  ஆறு குளங்களை நிரப்பி, பல்வேறு வழிகளில் ஓடி‌ முடிவில் கடலை அடைவதுபோல் எல்லா விதமான வழிபாடுகளும் முடிவில் தங்களையே அடைகின்றன.

அனைத்து ஜீவன்களிம் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவற்றால் கோக்கப்பட்டவை.

நீங்கள் எதிலும்‌ ஒட்டாதவர். எப்போதும் தனித்து விளங்குபவர்.

மேலும் பகவானின் விஸ்வரூபத்தை வர்ணிக்கிறார் அக்ரூரர். அதன் பின் பகவன் எடுத்த ஒவ்வொரு அவதாரங்களையும் விரிவாக வர்ணித்துத் துதி செய்தார்.

பின்னர் உங்களைச் சரணடைந்தேன். ஜீவன்களுக்கு விடுதலைக்கான நேரம் வரும்போதுதான் மஹான்களுக்கு சேவை செய்யத் தோன்றும். சித்தத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்கும் வாசுதேவனான உமக்கு நமஸ்காரம்.

அஹங்காரத்தின் தேவதையான ஸங்கர்ஷணரூபனே உமக்கு நமஸ்காரம்.

அநிருத்தனாக இருந்து மனத்தைக் கட்டுப்படுத்துவரே. உமக்கு நமஸ்காரம்.

புத்தியின் தேவதையான ப்ரத்யும்னரே உமக்கு நமஸ்காரம். இந்திரியங்களின் தலைவரான ஸ்ர்வேஸ்வரா! உமக்கு நமஸ்காரம்

என்றார்.

பகவான் அவருக்கு ஆசி வழங்கிவிட்டுக் காட்சியை மறைத்துக்கொண்டான்.
நீரிலிருந்து வெளிவந்தார் அக்ரூரர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Sunday, April 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 435

கோபியரின் அழுகையைக் காணவொட்டாத கண்ணன், அக்ரூரரிடம் ரதத்தை வேகமாகச் செலுத்தும்படி கூறினான்.

காற்றாய்ச் செலுத்திய ரதத்தை காளிய மடுவின் அருகில் வந்ததும் நிறுத்தினார் அக்ரூரர். 

கண்ணா! மதிய வேளை வந்துவிட்டது. நான் யமுனையில் நீராடலாமா? நான் அப்படியே மாத்யாஹ்னிகம் முடித்து வரட்டுமா? என்றார்.

கண்ணனும் பலராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

சித்தப்பா நாங்கள் ரதத்திலேயே இருக்கிறோம். நீங்கள் போய் நீராடிவிட்டு அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வாருங்கள் என்றான் கண்ணன்.

சரி கண்ணா என்று சொல்லி நீரில் இறங்கினார் அக்ரூரர். நன்றாக நீரில் மூழ்கி, ஜபம் செய்தார். அப்போது நீருக்கடியில் பலராமனையும் கண்ணனையும் கண்டார்.

இருவரும் ரதத்தில் இருக்கிறேன் என்று சொன்னார்களே. எனக்கு முன்னால் இறங்கிவிட்டார்களா.. குழந்தைகள்தானே. தண்ணீரைப் பார்த்ததும் ஆசை வந்திருக்கும் என்று நினைத்தார். எதற்கும் மேலே ரதத்தில் பார்க்கலாம். என்று நீரை விட்டு தலையைத் தூக்கினார்.

ரதத்தில் கண்ணனும் பலராமனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

இவர் அவர்களைப் பார்ப்பது கண்டு,
என்ன சித்தப்பா, அனுஷ்டானமெல்லாம் முடிஞ்சதா? என்றான் பலராமன்.

நீரில் கிடைத்த காட்சி ப்ரமையா? என்று திகைத்துப்போய், மீண்டும் நீரில் மூழ்கினார்.

இப்போது நீருக்கடியில் சித்த சாரண கந்தர்வர்கள் தலைவணங்க, ஆயிரம் தலைகள் கொண்டு நீலப்பட்டாடை உடுத்தி, வெண்ணிற மேனியுடனும், ஆயிரம் படங்களுடனும் விளங்கும் ஆதிசேஷனைக் கண்டார்.

அவரது மடியில் நீலவண்ணனாக, மஞ்சள் பட்டாடையுடன், நான்கு திருக்கரங்களும், தாமரை போன்ற கண்களும் கொண்ட ஒரு சுந்தர புருஷனைக் கண்டார்.

கருணை பொங்கும் பார்வை அவரை என்னவோ‌ செய்தது.அழகிய திருமுகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்றெண்ணியவருக்குச் சட்டென்று நினைவு வந்தது. ஆஹா.. கண்ணனின் முகம்.

பருத்த நீண்ட கைகள்,‌ பரந்த தோள்கள், விரிந்த திருமார்பு, மூன்று மடிப்புகளுள்ள திருவயிறு, அழகிய திருவுரு.

ரத்தினங்கள் பதித்த கிரீடம், தோள்வளைகள், முத்துஹாரங்கள், பொற்சிலம்புகள், காதுகளில் குண்டலங்கள், நான்கு  திருக்கரங்களில் சங்கு, சக்ரம், கதை, பத்மம், மார்பில் ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துப மணி, கழுத்தில் வனமாலை.

ஸுநந்தன், நந்தன் முதலான சேவகர்கள், ஸனகாதி முனிவர்கள், ப்ரும்மா முதலிய தேவர்கள், பிரஜாபதிகள், பிரகலாதன், நாரதர், வசுக்கள், அனைவரும் சூழ்ந்து துதிக்கின்றனர்.

பன்னிரண்டு சக்திகளுக்குண்டான அதிதேவதைகள் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அனைத்தையும் கண்ட அக்ரூரர் தன்னிலை மறந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Saturday, April 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 434

மறுநாள் காலை கண்ணனும் பலராமனும் நந்தனிடம்‌ சென்றனர். தனுர்யாகத்தைக் காண மதுரா செல்வோம். என்று கூறினர். கண்ணனின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசியறியாத நந்தன் கம்சனின் கட்டளையைப் பற்றி ஒன்றும் பேசாமல் மதுரா கிளம்ப ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கினார்.

கோபர்களை அழைத்து, பால், தயிர், வெண்ணெய் மற்றும் பரிசுப் பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள். வண்டிகளைப் பூட்டுங்கள். நாளை காலை மதுராவிற்குச் செல்வோம். பரிசுகளை அரசனுக்கு அளிப்போம். தனுர்யாகம் நிகழப்போகிறது. அதைக் காணச் செல்வோம். என்று கூறினார். 

மேலும், தனுர்யாகம் காண்பதற்கு தன்னோடு மற்ற கோபர்களும் வரலாம் என்று அறிவிக்கச் சொல்லி காவல் அதிகாரி மூலம் ஊரில் தெரிவிக்கச் சொன்னார்.

இதற்கிடையில் யசோதைக்கு கண்ணனும் பலராமனும் போகப்போகிறார்கள் என்று தெரிந்துவிட்டது. வழக்கமாக நீங்கள் மட்டும்தானே அரசனைக் காணச் செல்வீர்கள்? இதென்ன புதுப் பழக்கம்? இப்போது ஏன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போகிறீர்கள்? அக்ரூரர் ஏதாவது ரகசியச் செய்தி கொண்டுவந்திருக்கிறாரா? ஆண்களை மட்டும் அழைத்துச் செல்வானேன்? 

துளைத்தெடுத்துவிட்டாள் நந்தனை.

குழந்தைகளை அழைத்துவரச் சொல்லி கம்சனின் ஆணை என்றதும் பயந்துபோனாள். 

எதற்காம்? ஏற்கனவே அவர்களுக்கு ஆபத்துக்கு மேல் ஆபத்தாக வந்துகொண்டிருக்கிறது. கம்சன் குழந்தைகளையெல்லாம் கொல்வான் என்று பேசிக்கொள்கிறார்கள். நம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதாமே. உங்களுக்கு மூளை பிசகிவிட்டதா? 
அவளது நிதானம் தவறியது. 

நந்தன் கண்ணனைப்‌ பார்க்க, கண்ணன் யசோதாவை சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

 அம்மா, தனுர்யாகம் ரொம்ப நல்லா இருக்கும்மா. சின்ன வயசிலேர்ந்து இந்தக் காட்டை விட்டு எங்கயும் போனதேல்ல மா. மதுரா நகரம் ரொம்ப அழகா இருக்குமாமே. ஒரே ஒருதரம் போய்ட்டு வரேம்மா. என்று கெஞ்சினான்.

அவனது முகத்தைப் பார்த்து விருப்பமே இல்லாமல் அரை மனதாக ஒப்புக்கொண்டாள் யசோதை.

இதற்குள் ஊர் முழுவதும் செய்தி பரவிவிட்டது. நிறைய கோபர்கள் மதுரா செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

அக்ரூரரின் ரதத்தைப் பார்த்து கண்ணன் அவருடன் போகப் போகிறான் என்ற  செய்தி தீயைப் போல் பரவியது. 

அத்தனை கோபிகளும் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதுநாள் வரை கண்ணன் ஒருநாள் கூட வெளியூர் சென்றதில்லை. இப்போது நகரத்திற்குப் போகப்போகிறானாமே. 

அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் நிரந்தரமாகப் போகப்போகிறான் என்று தெரியாது. சில நாள்களுக்குப் போகிறான் என்பதாகவே நினைத்தனர். இருப்பினும் அந்தப் பிரிவைத் தாள இயலாமல் துடித்தனர்.

உள்ளம் வாடியதால், உணர்வற்றுப் போனார்கள். புற உலகும் தெரியவில்லை. 

சிறிதும் இரக்கமில்லாமல் இந்த ப்ரும்மா இப்படிப் பண்ணுகிறாரே. குழந்தைகள் பொம்மைகளைச் சேர்த்தும் பிரித்தும் வைத்து விளையாடுவதுபோல் எங்களைக் கண்ணனுடன் சேர்த்தும் பிரித்தும் வைத்து விளையாடுகிறார்.

சுருண்ட கூந்தல், அழகிய கன்னங்கள், உயர்ந்த நாசி, மனத்தை ஊடுருவும் சிரிப்பு ஆகியவற்றைக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே அதை மறைக்கிறார். 
ப்ரும்மாவின் படைப்பின் திறமையை கண்ணனின் அவயவங்களில் கண்டோம். ஆனால் அக்ரூரன் என்று பெயர் வைத்துக்கொண்டு க்ரூரமாக எங்களிடமிருந்து கண்ணனைப்‌ பிரிக்க ஏற்பாடு‌செய்துவிட்டார். 

புதிதாக எதையாவது பார்த்தால் கண்ணன் பழையதை மறந்துவிடுவானே. நம் வீடு வாசல், உற்றார் உறவினர் அனைவரையும் விட்டு கண்ணனுக்கு சேவை செய்தாலும் புதிய ஆள்கள் வந்தால் அவர்கள் பின்னால் போவான். மதுரா நகரப் பெண்களுக்கு இனிமேல் இனிய பொழுதாக விடியும். கண்ணனின் தாமரை முகத்தை வண்டுகளைப்போல் பருகுவார்கள்.

கண்ணன் நல்லவன்தான். ஆனாலும் மதுராவின் அழகிய பெண்களைப் பார்த்த பின் நமது நினைவு அவனுக்கு வருமா?

இந்த அக்ரூரரைப் போல் கொடியவர் வேறெவருமில்லை.

அந்தோ! நந்த பவனத்தில் யசோதைகூடத் தடுக்கவில்லையே. நம்மிடம்  போய் வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல் கிளம்புகிறானே.
அவனை விட்டு எப்படி இருப்போம்? நமக்கே இப்படி இருக்கிறதே. வயதானவர்கள் கண்ணனின் பிரிவை எப்படித் தாங்குவார்கள்?

கண்ணனுடனான இவ்வளவு நாள்களும் நொடிபோல் கழிந்தது. அவனில்லாத நாள்கள் யுகங்களைப்போல் நகராமல்‌ நிற்குமே.

அழுதுகொண்டே கோபிகள் நந்தபவனத்தின் வாசலுக்கு வந்துவிட்டனர்.

வெட்கத்தை விட்டு கோவிந்தா! மாதவா! என்று கதறினார்கள்.

அதற்குள் அக்ரூரர் காலைக்கடன்களை முடித்து விட்டுக் கிளம்ப ஆயத்தமானார்.

குழந்தைகளை ரதத்திலேற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார்.
 
அழுதுபுரண்டுகொண்டிருக்கும் கோபியரைப் பார்த்துத் திகைத்தார். கண்ணன் அவர்களைப் பார்க்க, கோபிகள் அழுகையைச் சற்று நிறுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

வெகு சீக்கிரம் வந்துவிடுவேன் என்று அன்பொழுகக் கூறி, அனைவரின் கண்களையும் துடைத்துவிட்டான்.

அக்ரூரரிடம் கையைக் காட்ட, ரதம் கிளம்பிற்று.

வைத்த கண் வாங்காமல் தேரின் கொடி தெரியும் வரை, புழுதி மறையும் வரை சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் யசோதையும் மற்ற கோபிகளும். நந்தனும் மற்ற கோபர்களும் வண்டிகளில் ஏறிக்கொண்டு பின்தொடர்ந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Friday, April 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 433

ஒரு வழியாக சிறிது நேரம் கழித்து உணர்வு பெற்ற அக்ரூரர், மெதுவாக நந்தபவனத்தை அடைந்தார். செல்லும் வழியில் கண்ட மாடுகள் கன்றுக்குட்டிகள், வீடுகள், மரங்கள், கோபர்கள், கோபியர்கள் அனைத்தையும் மானசீகமாக வணங்கிக்கொண்டே சென்றார்.

நந்தபவனத்திற்கு முன்னால் இருந்த மாட்டுக்கொட்டிலில் நீலஜோதி நின்றுகொண்டிருந்தது. அருகில் தங்க ஜோதியாக பலராமன்.  பளபளவென்று தங்கவரிகளைப்‌போல் அசையும் மஞ்சள் பட்டாடையைக் கண்ணனும், நீலப் பட்டாடையை பலராமனும் அணிந்திருந்தனர். இருவருக்கும்  நீண்ட கைகள். குட்டி யானைகளைப்போல் நடப்பவர்கள்.

அன்றலர்ந்த நீலத் தாமரை போலவும் தங்கத் தாமரை போலவும் மலர்ந்த முகங்கள். ரத்தின மாலைகளை அணிந்திருந்தனர். நாற்றிசையிலும் ஒளிவீசும் திருமேனி கொண்டவர்கள்.

கண்டது கண்டபடி அசையாமல்‌ நின்றுகொண்டே இருந்தார் அக்ரூரர். 
பின்னர், உணர்வு பெற்று, அவர்களை நோக்கி தண்டம்போல் தரையில்  விழுந்தார். 

ஆனந்தக் கண்ணீர் பெருக, மயிர்க்கூச்செறிய, நா தழுதழுக்க, கண்ணா! நான் அக்ரூரன் வந்திருக்கிறேன் என்று சொல்லவும் சக்தியற்றுப் போய்க் குலுங்கினார்.

தன் திருவடியில் விழுந்த அக்ரூரரைத் தூக்கி, அவரது முகம் கண்டு எண்ணத்தை உணர்ந்த கண்ணன், சித்தப்பா என்று வாய் நிறைய அழைத்து, அவரது கரங்களைப் பிடித்து அருகில் இழுத்து அன்புடன் அணைத்துக்கொண்டான். 

பலராமனும் கண்ணனும் அவரது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு துள்ளலுடன் நடந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

பேச்சற்றவராய் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு தானும் குழந்தைகளுடன் ஓடினார் அக்ரூரர்.

அவரை அமரவைத்து, உபசரித்து, தேன் கலந்த பாலைப் பருகக் கொடுத்தார்கள்.

ஏதேதோ கதைகளைக் குழந்தைகள் பேச, விழிவிரியக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வெளியில் சென்றிருந்த நந்தன் வந்ததும் அவரும் அக்ரூரரை உபசரித்தார். பின்னர் அனைவரும் உணவருந்தினார்கள். நறுமணம் மிக்க சந்தனம் கொடுத்து, தாம்பூலம், மாலைகள் அளித்து அக்ரூரரை மகிழ்வித்தார் நந்தன். 

நந்தனும் அக்ரூரரும் பேசிக் கொண்டிருக்க, குழந்தைகள் 
விளையாடச் சென்றனர்.

கம்சனின் அரசாட்சியில் எப்படி வாழ்கிறீர்கள்? கசாப்பு கடை ஆடு போல் நிம்மதியற்ற வாழ்க்கையாயிற்றே அது? 
தன் சகோதரி என்றும் பாராமல் அவளது குழந்தைகளைக் கொன்ற கொடும்பாவி. மக்கள் நலனில் அவனுக்கு அக்கறையே கிடையாதே.

என்றார் நந்தன். 

அக்ரூரர் வழி நடந்த களைப்பு நீங்கி நந்தனுடன் பேசத் துவங்கினார்.

மிகவும் கவனமாகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது. என்று சொல்லி தனுர் யாகம் நடக்கப்போகும் விஷயத்தைச் சொன்னார். அதற்கு நந்தனும், மற்ற கோபர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்பதை தயங்கித் தயங்கித் தெரிவித்தார்.

அவரது முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்து நந்தனுக்கும்‌ கவலையாக இருந்தது. எனினும் அரசன் சொல்லைத் தட்டமுடியாதென்பதால் கண்ணனைக் கலந்து பேசுகிறேன் என்று பதில் சொல்லிவைத்தார்.

இரவு கண்ணனும் பலராமனும் சித்தப்பா எங்களுடன் உறங்கட்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.

தனியாகச் சென்றதும் கண்ணன் அவரைக் கேட்டான்.

சித்தப்பா! உங்கள் பயணம் எப்படி? நம் சொந்தக்காரர்கள் அனைவரும் நலமா?
கம்சன் எப்படி இருக்கிறார்? பொது மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்னால்தான் என் பெற்றோர்க்குச் சிறைவாசம்‌ நேர்ந்தது. அதை நினைத்து என் மனம் கலங்குகிறது. வெகு நாள்களாக உங்களை எதிர்பார்த்திருந்தேன். எனக்காக என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்?

என்றான்.

எப்படிச் சொல்வதென்று தவித்துக்கொண்டிருந்த அக்ரூரருக்கு கண்ணனே எடுத்துக் கொடுத்ததும் சுலபமாகப் போயிற்று. 

மதுராவில் நடந்த அனைத்தையும்‌ ஒன்று விடாமல் சொன்னார். கம்சனின் திட்டத்தையும், தன்னை தூதனாக அனுப்பியதையும் கூறினார்.

அனைத்தையும்‌ கேட்டுக்கொண்ட கண்ணன், நான் பார்த்துக்கொள்கிறேன்.நாளை நாம் கிளம்புவோம். நிம்மதியாக உறங்குங்கள் என்றான்.

பின்னர், அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு கண்ணனும் பலராமனும் உறங்கத் துவங்கினார்கள்.

ஆனந்தத்தில் எல்லையில் இருந்த அக்ரூரருக்கு உறக்கம் வருமா?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Thursday, April 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 432

சூரியன் உதித்ததும் தன் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு க்ருஷ்ண சந்திரனைக் காண தேரிலேறிக் கிளம்பினார் அக்ரூரர். 

இவரது மனோ வேகத்திற்கு தேர்க் குதிரைகளால் ஈடுகொடுக்கமுடியவில்லை. 
நான் என்ன புண்ணியம் செய்துவிட்டேன்? ஏதாவது தவம் செய்திருப்பேனா? யாக, யக்ஞங்களோ, தான தர்மங்களோ செய்திருப்பேனோ?

பக்தி என்பது என்னவென்றே நான் அறியேன்.
ஶக்தியும் இல்லை தவம் புரிவதற்கு.
பந்தங்களையும் நான் விட்டவனும் இல்லை.
மந்த மதியனும் நானே ஆவேன்

வேதமும் நான் அறிந்தோன் இல்லை. உன்
பாதமும் நான் பணிந்தோன் இல்லை. ஒரு
ஸாதனையும் நான் புரிந்தோன் இல்லை. 
ஸாது போதனையும் கேட்டோன் இல்லை

உன் தலங்களுக்கு வந்தோன் இல்லை.
உள்ள மலங்களும் போனவனில்லை.
உயர்ந்த ஶீலமும் கொண்டோன் இல்லை.
உத்தமனே மாலவனே முரளீதரனே.

இத்தனை க்ருபை என் மேல் தகுமோ
ஐயா
நப்பின்னை நாதனே யமுனைத் துறைவனே

ஆனால், இவையெல்லாம் நான் செய்யாவிட்டாலும் எனக்குக் கண்ணனின் தரிசனம் கிடைக்கப்போகிறதென்றால் அது அவனது காரணமற்ற கருணையல்லவா?

எப்படியோ என் பிறவிப் பயனுற்றேன்.

கம்சனைப் போல் எனக்கு நன்மை செய்பவர் யாருமில்லை. அவனல்லவோ அனுப்பினான். இல்லையெனில் நான் எப்படி கண்ணனைக் காண வரமுடியும்? இறைவனைக் காண வழிவகுப்பவர் குரு அல்லவா? கம்சன் எனக்கு குரு ஸ்தானத்தில் அமைகிறான்.

ப்ரும்மாவும், திருமகளும், தேவர்களும் காண ஏங்கும் திருவடி. முனிவர்களும், எண்ணற்ற  பக்தர்களும்  பூஜை செய்யும் திருவடி. 

கண்ணனின் திருவடி மஹிமையை யாரே அறிவார்.

பவித்ர பாகீரதி தோன்றிய திருவடி. வலிய வந்து பலியை ஆட்கொண்ட திருவடி. முனியின் மனைவியை முன்னவண்ணம் செய்த திருவடி. சடுதியில் ஸகடனை ஸாய்திட்ட திருவடி. நாகத்தின் மேலாடி அதன் கொட்டம் அடக்கிய திருவடி.

கற்பனைக்கெட்டாத அழகே உருவெடுத்த கண்ணனை இன்று காணப்போகிறேன். கண் படைத்ததன் பயனை அடையப்போகிறேன். 

உலகைச் சாட்சியாகக் கொண்டு பிறவி எடுத்திருந்தாலும் கண்ணன் அறியாமையற்றவர். யோகமாயையைக் கொண்டு ஐந்து பிராணன், பத்து புலன்கள், புத்தி (ஈரெட்டாவரணம்) ஆகியவற்றுடன் இந்தப் ப்ரபஞ்சத்தையும் ஜீவன்களையும்‌படைத்து அவற்றுள் தானே நிரம்பியிருப்பவர். தன்னோடு தானே விளையாடுவதுபோல் இடைச்சேரியில் விளையாடுகிறார். 

பாவங்களைப் போக்குவதும், மங்களைத் தருவதுமான பகவானின் குணங்கள், லீலைகள், அவதாரங்கள் ஆகியவற்றைப் பேசும் சொற்களே இவ்வுலகை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. தூய்மையாக்குகின்றன. மற்ற வாக்குகள் அனைத்தும் வீண்.

மகான்கள் விரும்பும் பெரும்பதம், உலகின் குரு, பேரழகன், லக்ஷ்மிதேவி விரும்பும் சுந்தரன், அவனை இன்றே காண்பேன். இன்றைய காலை நற்காலையாயிற்று.

கண்ணனையும் பலராமனையும் கண்டதும் வணங்குவேன். நந்தன், யசோதை, ரோஹிணி ஆகியவர்களையும் பணிவேன். கோபர்களை வலம் வந்து தொழுவேன்.

என்றெல்லாம் யோசித்துக்கொண்டே வந்து கொண்டிருந்த அக்ரூரர் ப்ருந்தாவனத்தின் எல்லையை அடைந்தார். சட்டென்று தேரை நிறுத்தச் செய்தார்.

எல்லா தேவர்களும் எந்தத் திருவடியின் தூசி தங்கள் தலையில் படுமா என்று ஏங்குகிறார்களோ அந்தத் திருவடியின் அச்சு ப்ருந்தாவனம் முழுதும் பதிந்திருப்பதைக் கண்டார். ஒவ்வொரு அச்சிலும், தாமரை, யவம், துரட்டி, கொடி ஆகிய முத்திரைகள் காணப்பட்டன.

ஆஹா! இவை பகவானின் திருவடி அச்சுக்கள்! என்று கூவினார். காலணியை ரதத்தில் விட்டு, தரையில் குதித்தார். கீழே விழுந்து அந்தப் புழுதியில் கடகடவென்று உருண்டார். ப்ருந்தாவனத்தின்  மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார். தலையில் வாரி வாரிப் போட்டுக் கொண்டார். வாயிலிட்டு விழுங்கி அம்ருதம் அம்ருதம் என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தற்பெருமை, பயம், சோகம் ஆகிய உணர்வுகளின்றி பகவானின் கதையைக் கேட்பதும், அதையே எப்போதும் சிந்திப்பதுமாக இருப்பவர்க்கு அக்ரூரரைப்போல்  பக்தி சித்திக்கிறது. 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Tuesday, April 14, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 431

கம்சனின் அரண்மனையிலிருந்து நேராக கோகுலம் வந்தார் நாரதர்.

கண்ணா! வசுதேவரின் புதல்வரே! எல்லோரிடத்தும்‌ உறைபவரே! அனைத்துக்கும் சாட்சியானவரே!

தன்னைத்தானே ஆதாரமாகக்‌கொண்டு யார் உதவியுமின்றி மாயை எனும் சக்தியால் முக்குணங்களைப் படைத்தீர்கள். முக்குணங்களைக் கொண்டே உலகைப்‌ படைத்துக் காத்து அழிக்கிறீர்.

அரசர்களாகப் பிறந்திருக்கும் அசுரர்களை அழித்து அறம் காக்க அவதரித்திருக்கிறீர்கள்.

குதிரை உருவில் வந்த அசுரனின் கனைப்பைக்‌ கேட்டு தேவர்களும் அஞ்சி ஓடினர். நல்லவேளையாக அவனை அழித்து விட்டீர்கள்.  

நாளை மறுநாள் சாணூரன், முஷ்டிகன், குவலயாபீடம் மற்ற மல்லர்களுடன் கம்சனையும் கொல்லப்போகிறீர்கள்.

அதைத் தொடர்ந்து காலயவனன் சங்காசுரன், முரன், நரகாசுரன் ஆகியோரும் தங்கள் கரங்களால் மடியப்போகிறார்கள். இந்திரனைத் தோற்கடித்து பாரிஜாதத்தைக் கொண்டுவருவீர்கள்.

தங்களின் திருமணங்களைக் காணப்போகிறேன். ஜாம்பவதியையும், ஸ்யமந்தக மணியையும் மீட்கப்போகிறீர்கள். பௌண்ட்ரக வதம், சிசுபால வதம், தந்தவக்த்ர வதம், ஆகியற்றை முடித்து த்வாரகாதீசனாக விளங்குவீர்கள். பின்னர் பூபாரத்தைக் குறைக்க, அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகி லட்சக்கணக்கான படைகளை அழிக்கப்போகிறீர். 

தூய்மையானவரும், ஞானமே வடிவானவரும், ஆனந்தத்தில் திளைப்பவருமான உம்மை சரணடைகிறேன். விளையாட்டாக மனித உருவெடுத்து வ்ருஷ்ணி குலத்தில் பிறந்துள்ள உமக்கு நமஸ்காரங்கள். என்றார்.

கண்ணன் கோகுலத்தில் அன்பால் கட்டுண்டதாக எண்ணிய நாரதர் ஒரு தனிச் செயலரைப்போல் அடுத்து பகவான் செய்யவேண்டிய காரியங்களை நினைவூட்டுகிறார்.

கண்ணனோ அனைத்தும் தெரியும் என்பதைப்போல் புன்னகைத்தான். நாரதர் கண்ணனை வலம் வந்து  வணங்கி விடை பெற்றார்.

வீட்டுக்குச் சென்ற அக்ரூரருக்கு உறக்கமே வரவில்லை. கோகுலத்தில் பகவான் கண்ணனாக வளர்ந்து வருவதை அறிவார் அவர். தினமும் இடைச் சேரியிலிருந்து பால், தயிர், வெண்ணெய் என்று விற்க வரும் பெண்களை அழைத்து முழுப் பானையையும் பேரம் பேசாமல் வாங்கிக் கொள்வார். அவர்களிடம்  பேச்சுக் கொடுப்பார்.

இடைப் பெண்கள் வாயைத் திறந்தால் கண்ணனைத் தவிர வேறென்ன பேசுவார்கள். அவர்களிடம் கண்ணன் செய்த லீலைகளை ஒன்று விடாமல் கேட்பார். 

இப்படியாக கண்ணனின் கதைகளைக் கேட்டு கேட்டு அவனை என்று காணப்போகிறோம் என்று தவித்துக்கொண்டிருந்தார். இதோ இருக்கிறது இடைச்சேரி. மதுராவிற்கும் கோகுலத்திற்கும் சுமார் பதினைந்து மைல் தொலைவு தான். போய்ப் பார்த்துவிட்டு வரலாமே என்றால் அது முடியவில்லை. கம்சனின் ஒற்றர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். ஏதேனும் செய்தி சிறியதாகக் கசிந்தாலும் கம்சன் அக்ரூரரை முதலில் கொல்வான் அல்லது சிறையிலடைப்பான். கண்ணனுக்கும் ஆபத்து. தன்னால் கண்ணனுக்குத் தொந்தரவு வரக்கூடாதென்று அமைதியாய் இருந்தார்.

இப்போது கம்சனே போகச் சொல்கிறான்.
க்ருஷ்ண தரிசனத்திற்காக எவ்வளவு நாள்களாக ஏங்கிக் கொண்டிருந்தோம். போயும் போயும் இப்படியா நேரவேணும்? 
போகாமல் இருக்கமுடியாது. போய் கம்சன் உன்னைக் கொல்வதற்காக அழைப்பு விடுத்திருக்கிறான் என்று சொல்லவும் முடியாது. சொல்லாவிட்டாலும் கண்ணன் அறிவான். அவன்தான் அந்தர்யாமியாயிற்றே. 

என்ன நினைப்பான் நம்மைப் பற்றி?
ஒரு வகையில் கண்ணனுக்கு சிற்றப்பா உறவு. 

கம்சனின் அமைச்சர் என்று பார்ப்பானா?
தன்னைக் கொல்ல அழைத்துப்போக வந்த எமதூதன் என்பானோ? சிற்றப்பா என்று அன்புடன்  அழைப்பானா? 
அவன் இறைவனல்லவா? அவனுக்கு நமது எண்ணம் தெரியுமா? தெரியாதா? 

அவன் முகத்தை எப்படிப் பார்ப்பது?

நம்மைத் தவறாக எண்ணினால் அதைவிட துர்பாக்யம் உண்டா?

எண்ணங்கள் முன்னும் பின்னுமாக அக்ருரரை அலைக்கழிக்க, இரவு கழிந்து விடிவெள்ளி முளைத்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.



Monday, April 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 430

இரவு துவங்கும் நேரத்தில்‌ அரசரிடமிருந்து அழைப்பு வந்ததைக் கண்டு நெஞ்சம் பதைபதைத்தார் அக்ரூரர். கம்சன் கொடூரனாயிற்றே. எதற்கு அழைத்தானோ என்று பயந்துகொண்டே சென்றார்.

வஞ்சகன் கம்சனோ வழக்கத்திற்கு மாறாக அவரை வரவேற்றான்.
அக்ரூரருக்கு பயம் இன்னும் அதிகமாயிற்று.

வாருங்கள் அக்ரூரரே என்றழைத்த கம்சன் அவரருகே வந்து அவரது கரங்களைப் பிடித்துக்கொண்டான்.

அக்ரூரரே! நீங்கள்தான் என் ஆத்மநண்பர். எனக்கு இப்போது உங்களை விட்டால் உதவ யாருமில்லை. எனக்கு ஆலோசனை சொல்லவும், நன்மை செய்யவும் என்னைவிடப் பெரியவர் இங்கு எவருமில்லை. நீர் ஒருவர்தான் எனக்கு உதவி செய்யமுடியும்.

அக்ரூரர் செய்வதறியாது திகைத்தார். துஷ்டனான கம்சனின் பேச்சை அவர் நம்பவில்லை. இருப்பினும் அவனை மறுத்துப்பேசவும் இயலாது. அவ்வாறு செய்தால்‌ கொன்றுவிடுவான் என்பது அவருக்குத் தெரியும்.

அமைதியாக அவனை உற்றுப் பார்த்தார்.
ஆஜானுபாகுவான தேகமும், முறுக்கேறிய நரம்புகளும், கரங்களின் உறுதியும் கம்சனின் பலத்தைப் பறைசாற்றின. ஆனால், அதற்குச் சற்றும் பொருத்தமில்லாமல், முகத்தில் மட்டும் பயத்தின் ரேகைகள். வீரத்தினால்  துடிக்கவேண்டிய மீசை பயத்தினால் துடித்தது. 

கம்சன் மேலும் தொடர்ந்தான்.

கோகுலத்தில் வசுதேவரின் இரு புதல்வர்கள் இருக்கிறார்களாமே. நீங்கள் உடனே சென்று அவர்கள் இருவரையும் அழைத்து வர வேண்டும்.

என்னுடைய எதிரிகள் அவர்கள்தான் என்று முன்னமொருமுறை அசரீரி சொல்லிற்று. நந்தன் உள்பட, கோபர்களையும் அவர்களின் உறவினர்களையும் அவர்களோடு சேர்த்து அழைத்து வாருங்கள்.

என்றான்.

அக்ரூரரின் உடல் நடுங்கியது. அடுத்து என்ன சொல்லப்போகிறான் என்பதை ஊகித்துவிட்டார். 
அவர்கள் இங்கு வந்ததும் கொன்றுவிடலாம். குவலயாபீடம் தயாராக இருக்கிறது. அதனிடம் தப்பினால் மல்லர்கள் கொல்வார்கள். அவர்களுடன் வரும் நந்தன் முதலானவர்களையும், வசுதேவர், தேவகி, அவர்கள் உறவினர்கள், என் தந்தை உக்ரசேனர் அனைவரையும் கொன்றுவிடப்போகிறேன். இல்லையெனில் கலகம் வரும்.

அதன் பின் இந்த பூமியில் எனக்குப் பகைவரே இருக்க மாட்டார்கள். என் மாமனார் ஜராசந்தன், என் தோழன் த்விவிதன், சம்பரன் பாணன் ஆகியோரின் துணையுடன் தேவர்களையும் வெல்வேன். பூமி முழுவதையும் என் குடையின் கீழ்க் கொண்டுவந்துவிடுவேன்.

உங்களை நன்கு கௌரவிப்பேன். எனக்கு தெய்வம் போன்றவர் நீங்கள். எப்படியாவது க்ருஷ்ணனையும் பலராமனையும் இங்கு அழைத்து வந்து விடுங்கள். இச்செயல் உங்களால் மட்டுமே முடியக்கூடியது.  உங்களைத்தான் நம்பியிருக்கிறேன். 
என்றான்.

அக்ரூரர் நீண்ட பெருமூச்சு விட்டார்.
அரசே! உங்கள் திட்டம் சரியாக அமைந்திருக்கிறது. என்னால் முடிந்த அளவு முழுமையாக முயல்கிறேன். பயன் எப்படி இருக்குமோ தெரியாது. எப்படி இருந்தாலும் தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன். என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

நாளையே செல்லுங்கள் அக்ரூரரே! என்றான். 
ஆகட்டும் என்று தலையாட்டிவிட்டு வீடு சென்றார் அக்ரூரர்.

இதற்கிடையில் கம்சனால் அனுப்பப்பட்ட கேசி கோகுலத்தை அடைந்திருந்தான். பெரிய ராட்சச குதிரை போல் வடிவம் கொண்டு குளம்புகளால் பூமியைப் பெயர்த்துக்கொண்டு அதிவேகமாக ஓடினான். தன் பிடறி மயிரால் மேகங்களைச் சிதறடித்தான். பொந்து மாதிரி வாய், பெரிய கண்கள், நீண்ட கழுத்து, இடியைப் போல் கனைத்துக்கொண்டு அவன் ஓடிவருவதைப் பார்த்து நிலநடுக்கம் வந்ததுபோல் கோகுலம்‌ அஞ்சிற்று.

கோகுலவாசிகளின் பயத்தைக் கண்டு கண்ணன் நேராக கேசியின் எதிரில் வந்து நின்றான். கேசி கடுங்கோபத்துடன் கண்ணனைப் பின்னங்கால்களால் எட்டி உதைத்தான். 

அந்த உதை தன் மீது விழாமல் நகர்ந்துகொண்டு ஏமாற்றினான் கண்ணன். பின்னர் கேசியின் பின்னங்கால்களைப் பிடித்து வேகமாகச் சுழற்றினான். தலைசுற்றி குடல் வாய்க்கு வந்துவிட்டது கேசிக்கு. பின்னர் தூக்கிவீசினான். 

கீழே விழுந்ததும் சுதாரித்துக்கொண்டு  இன்னும் வேகமாக கண்ணனை நோக்கி ஓடிவந்தான். கண்ணன் அவனது வாயினுள் தன் இடது கையை விட்டான். கையை வளர்த்திக்கொண்டே போக சுவாசம் தடைபட்டு முழி பிதுங்க, கால்களை உதறிக்கொண்டு உயிரற்றுத் தரையில் வீழ்ந்தான். 

பெரிய செயலைச் சாதித்துவிட்ட பெருமை ஏதுமின்றி யமுனையில் இறங்கி முகம் கைகால் கழுவிக்கொண்டு கண்ணன் கோகுலத்தை நோக்கி நடக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

கண்ணன் கேசியைக் கொன்ற இடம் கேசி காட் என்று வழங்கப்படுகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Sunday, April 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 429

பகவான் கண்ணன் மதுராவில் பிறந்து கோகுலம் வந்தபின்பு இங்கே ஆயர்களின் அன்பில் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்தார் நாரதர். பகவானுடைய  அவதார நோக்கம் காத்துக் கிடந்தது. அது நிறைவேற வேகப்படுத்தும் பொருட்டு கம்சனைப் பார்க்கச் சென்றார்.

இந்திரன், ப்ரும்மா, ராவணன், ஹிரண்யகசிபு, கம்சன் யாராயினும் அவர்தம் சபையில் தயங்காமல் நுழையும் தகுதி பெற்றவர் நாரதர் ஒருவரே. எல்லா சபைகளிலும் அவருக்கு வரவேற்புதான். தேவரோ, அசுரரோ எவராயினும் நாரதரைத் தமக்கு நன்மை செய்பவராகவே கருதுவர். ஆனால், அவரது குறிக்கோள் யாதெனின் உலக நன்மையும், இறைவனின் செயல்களுக்குத் துணையிருப்பதுமே ஆகும்.

கம்சனிடம்‌ சென்ற நாரதர் பின்வருமாறு கூறினார்.

கம்சா! தேவகிக்கு எட்டாவதாகப் பிறந்த பெண் குழந்தை யசோதையினுடையதுதான். ரோஹிணியின் மகன் ராமன் உண்மையில் தேவகியின் ஏழாவது மகன். எட்டாவது மகன் யசோதையின் மகனாக வளர்ந்து வரும் க்ருஷ்ணன். வசுதேவர் தன் நண்பரான நந்தரிடம் தன் மகன்களைக் கொடுத்து வளர்க்கச் சொல்லியிருக்கிறார். அந்தப் பையன்கள்தான் நீ‌ அனுப்பிய அத்தனை வீரர்களையும்‌ கொன்றிருக்கிறார்கள் என்று தேவலோகத்தில் பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்டதும் நேராக உன்னிடம் தெரிவிக்க வந்தேன் என்றார்.

அதைக் கேட்ட கம்சனின் உள்ளம் கோபத்தால் துடித்தது. பூமியை வேகமாக  உதைத்துக்கொண்டு எழுந்தான்.

உடனடியாக வசுதேவரைக் கொல்ல கத்தியை உருவிக்கொண்டு கிளம்பினான்.

நாரதர் தடுத்தார்.

சற்றுப் பொறு கம்சா! வசுதேவரும் தேவகியும்  இங்கேதானே இருக்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது நேரமல்ல. மேலும் உனக்கு யமன் இவர்களில்லை. நீ க்ருஷ்ணனையும் பலராமனையும் என்ன செய்யலாம் என்று யோசி. நேரத்தை வீணடிக்காமல் ஆகவேண்டியதைப் பார் என்றார்.

நாரதர் சொன்னது நியாயமாகப் பட்டது கம்சனுக்கு. கத்தியை உறையிலிட்டான். இருப்பினும் ஆத்திரம் அடங்கவில்லை. தேவகியையும் வசுதேவரையும் பாதாளச் சிறையில் அடைத்தான். 

நாரதர் கிளம்பியதும் கேசி என்ற அசுரனை அழைத்து கண்ணனைக் கொன்று வரும்படி அனுப்பினான்.

கேசியால் கண்ணனைக் கொல்லமுடியாது என்று அவனுக்குத் தெரியும் போலும். எனவே, அடுத்த ஏற்பாடுகளை யோசிக்கலானான்.

முஷ்டிகன், சாணூரன், சலன், தோசலன், முதலான அமைச்சர்களை அழைத்துப் பேசினான். 

வசுதேவரின் எட்டாவது மகனால் எனக்கு ஆபத்து என்று தெரியுமல்லவா? அவர்கள் நந்தகோகுலத்தில் வளர்கிறார்களாம்.

அவர்களைக் கொல்லும் உபாயங்களை யோசிக்கவேண்டும். ஒரு பெரிய மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். போர் முறைப்படி வரும் சதுர்தசியன்று  தனுர்யாகத்தைத் துவங்குவோம். அப்போது யாருக்கும்‌ சந்தேகம் வராத வண்ணம் ஊரே விழாக்கோலம் பூணட்டும். மல்யுத்ததிற்கான மேடையை அமையுங்கள். 

யானைப் பாகர்களை யானைகளைத்  தயாராக வைக்கச் சொல்லுங்கள்.
குவலயாபீடத்திற்கு நன்றாக மதம் ஏற்றி மல்யுத்த அரங்கின் வாசலில் நிறுத்துங்கள்.

எல்லாம்‌ சரி அரசே. கண்ணன் இங்கு வருவானா?

வருவான். அதற்கும் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போகலாம் என்றான். 

அன்றிரவு சூழ்ந்ததும், அக்ரூரரை அழைத்து வர ஆளனுப்பினான் கம்சன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Saturday, April 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 428

வைகுண்டத்திலும் கிட்டாத லீலைகளும்,  நாமஸ்மரணமும், ஸத்சங்கமும் கோகுலத்தில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவ்வேளையில் ஒரு நாள் அரிஷ்டன் என்ற அசுரன் கோகுலத்தில் புகுந்தான். பெரிய திமிலுடன் காளை உருவத்தில் பயங்கரமாக  உறுமினான். பூமியைக் குளம்புகளால் கீறிக்கொண்டும், கொம்பினால்‌ தரையைக்  குத்திக்கொண்டும் திமுதிமுவென்று ஓடிவந்தான். அவன் வந்த வேகத்திற்கு வானளாவ புழுதி கிளம்பியது.

ஆங்காங்கு சிறுநீரும் சாணமும் போட்டுக்கொண்டு வாலைத் தூக்கிக்கொண்டு இமை கொட்டாமல்‌ வெறித்துப் பார்த்தான். அவனது உறுமலைக் கேட்ட கோபியர்க்குக் குலை நடுங்கிற்று. 
அனைவரும் பயந்து நடுங்கினர்.

பசுக்கள் மிரண்டுபோய்க் கத்திக்கொண்டு கொட்டிலை விட்டு ஓடின.

அனைவரும் கண்ணா கண்ணா என்று குரலெழுப்பிக்கொண்டு கண்ணனை நோக்கி ஓடிவந்தனர்.

கண்ணன் அவர்களைப் பார்த்து பயப்படாதீர்கள் என்று அபயக்குரல் கொடுத்தான். பின்னர், முன்னால் வந்து அந்த அசுரனைத் தன்னை நோக்கி வாவென்றழைத்தான்.

இப்படி அவன் அழைக்க ஈரேழுலோகத்தாரும் ஏங்கிக்கொண்டிருக்க அசுரனுக்கடித்தது யோகம்.‌

ஹே! மூடனே! ஏன் அப்பாவிகளை பயமுறுத்துகிறாய்? அதனால் உனக்கு ஆவதென்ன? உன் கொழுப்பை அடக்கும் எதிரி இதோ நான் இருக்கிறேன். என்னை நோக்கி வா 

என்று கூறி, தன் தோள்களைத் தட்டினான். 

அந்த ஒலியால் அரிஷ்டனுக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. 

வேண்டுமென்றே ஒரு புன்சிரிப்புடன் ஒயிலாக நண்பனின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றான் கண்ணன். அதைக் கண்டு அரிஷ்டன் வாலைத்தூக்கி மேகங்களைச் சுழற்றி அடித்தான். காது ஜவ்வுகள் கிழிவது போல் நாராசமாக உருமிக்கொண்டு கொம்புகளை முன்னே நீட்டிக்கொண்டு கண்ணனை நோக்கி இந்திரனின் வஜ்ராயுதம் போல் வேகமாக ஓடிவந்தான்.

கண்ணன் அவனது கொம்புகளை லாவகமாகப் பிடித்து அவனை நிறுத்தினான். பின்னர் ஒரு யானை இன்னொரு யானையைத் தள்ளுவதுபோல் 18 அடிகள் தூரம் அவனைப் பின்னே தள்ளினான்.

பின்னால் சென்று நிலைகுலைந்து விழுந்த அரிஷ்டன், விழுந்த வேகத்தில் எழுந்து பெருமூச்சுடன் கண்ணனை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

அவனை மீண்டும் பிடித்து அவன் கொம்புகளை ஈரத்துணியைப்‌ பிழிவதுபோல் பிழிந்து பிடுங்கினான் கண்ணன். அந்தக் கொம்புகளாலேயே அரிஷ்டனைக் குத்திக் கொன்றான்.

குருதியைக் கக்கிக்கொண்டு, கால்களை உதறி, கண்கள் நிலைகுத்த பெரும் மரண ஓலத்துடன் கண்ணனைப் பார்த்துக்கொண்டே உயிரை விட்ட அரிஷ்டன் கண்ணனையே அடைந்தான். 

தேவர்கள் பூமாரி பெய்து துதித்தனர். கண்ணன் பிறந்ததிலிருந்து  தினந்தோறும் ஒரு அதிசய லீலையோ, அசுர வதமோ ‌நடப்பதால் தேவர்கள் அனைவரும் கோகுலத்தின் மேலேயே குழுமியிருந்தனர். எப்போதும் பூமாரி பொழியவும், வாத்யங்களை முழங்கிக்கொண்டு பாடவும் தயார் நிலையிலேயே இருக்கவேண்டியதாயிற்று.

மாபெரும் வீரனைப்போல் காளையைக் கொன்ற கண்ணனைக் கோகுலவாசிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். கண்ணனின் காட்சி அலுக்குமா என்ன?  கண்களுக்குப் பெருவிருந்தல்லவா நம் கண்ணன்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.



Friday, April 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 427

யுகள கீதம் (3)

கழுத்தில் நறுமணம் கமழும் துளசிமாலையும், மணிமாலைகளும், அந்த மணிகளால் பசுக்களை எண்ணிக் கணக்கு வைத்துக் கொண்டும், நடை பயில்கிறான் கண்ணன். தன் தோழனின் தோளின் மீது கையைப் போட்டுக்கொண்டு ஒயிலாக நின்று குயிலும் மயங்குமாறு குழலிசை படிக்கிறான். அந்த கானத்தினால் ஈர்க்கப்பட்ட பெண்மான்கள் தங்கள் இணையை மறந்து கோபிகளைப் போலவே வீட்டைப் பற்றிய எண்ணமின்றி கண்ணனைச் சுற்றி சுற்றி வந்தன.

அங்கு நின்றுகொண்டிருந்த யசோதையை அழைத்து ஒரு கோபி சொன்னாள். உன் குழந்தையான கண்ணன் தன்னைக் காட்டு மலர்களால் அலங்காரம் செய்துகொண்டு பசுக்களுடனும், கோபச் சிறுவர்களுடனும் சேர்ந்து யமுனையில் இறங்கி விளையாடுகிறான். அவன் மனம் விரும்பியபடி இதமாகத் தென்றல் வீசி அவனை மகிழ்விக்கிறது. கந்தர்வர்களும், துதி பாடகர்களும் வானில் நின்றுகொண்டு வாத்யங்களை முழங்கிக்கொண்டு பாடுகின்றனர். 

கோவர்தன மலையை ஏழுநாள்கள் தாங்கிய பின்பு அதை முன்போல் வைத்துவிட்டு வீடு திரும்பினான் கண்ணன். வரும் வழியில் நடைக் களைப்பு தெரியாமல் இருக்க குழலூதினான். அப்போது எல்லா தேவர்களும் கண்ணன் வரும் வழியில் விழுந்து வணங்கினர்.

ஏழுநாள்கள் அயராது நின்றதில் உடல் களைத்துப்போயிருந்தாலும், தன் அழகால் பார்ப்பவர்க்குப்  பெருவிருந்து படைக்கிறான் கண்ணன். மாடுகளின் குளம்படிகளால் கிளம்பிய புழுதி அவனது உடல்‌முழுதும் அப்பிக் கிடக்கிறது. அனைவரையும் காத்த பேருவகையில் துள்ளலுடன் நடந்து வருகிறான்.

பார்வையாலேயே ஒவ்வொரு நண்பனையும் உற்சாகப்படுத்துகிறான் கண்ணன். பழுத்த இலந்தைப் பழம்போல் கறுத்துச் சிவந்த முகம், தங்கக் குண்டலங்களின் ஒளி, கன்னங்களில் விளையாடுகிறது. கம்பீரமான நடை, மலர்ந்த புன்முறுவல் சிந்தும் திருமுகம் கொண்ட கண்ணன், மாலையில் உதிக்கும்‌ சந்திரனைப்போல் காட்டிலிருந்து திரும்பும் அழகைப் பாருங்கள்.

என்று கோபிகள் தினமும் பகற்பொழுது முழுவதும் கண்ணனின் புகழைப் பாடி பாடிக் கழித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Thursday, April 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம்- 426

யுகள கீதம் (2)

மலையடிவாரத்தில் மேய்கின்ற பசுக்களைக் கண்ணன் குழலூதி அழைத்தான். அப்போது அங்கிருந்த செடி கொடிகள், மரங்கள் ஆகியவை பூக்களாலும், பழங்களாலும் கண்ணனை வணங்கின. 

கண்ணனின் வனமாலையை வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றுகின்றன.  அழகிய கஸ்தூரி திலகம் விளங்கும் நெற்றியுடைய கண்ணன் தன் வேணுகானத்திற்கு, அவ்வண்டுகள் ஒத்திசைந்து ரீங்கரிப்பதைக் கண்டு மகிழ்ந்து பாராட்டி மேலும் கானம் செய்கிறான். அந்த கானத்தால் கவரப்பட்ட நீர்ப்பறவைகள் அனைத்தும் நீரை விட்டு வந்து கண்ணனின் திருவடியில் மனம் மயங்கி நின்று கேட்கின்றன.

உலகத்தார் அனைவர்க்கும் கேட்கும்படி மலை உச்சியிலிருந்து குழலிசைக்கிறான் கண்ணன். அப்போது மேகங்கள் தங்கள் இடியினால் குழலிசைக்கு அபஸ்வரம்‌ நேருமோ என்று பயந்து  மெதுவாக இரைகின்றன.  கண்ணன் மேல் சூரிய ஒளி படாதவாறு குடை பிடிக்கின்றன. மெல்லிய பூக்களைப்போன்று சாரல் தூவுகின்றன. 

எல்லாவிதமான கலைகளிலும் வல்லவனான கண்ணன் தன் குழலில் ஸ்வர வரிசைகளால்  விளையாடுகிறான். அப்போது இந்திரன் முதலான தேவர்களும் அதன் நுணுக்கங்கள் புரியாமல் மயங்கினர். மந்த்ரம், மத்யமம், தாரம் என்று ஸ்தாயி வேற்றுமைகளும் புரியவில்லை. ரிஷப, நிஷாத காந்தார வேற்றுமைகளும் பிடிபடவில்லை. பார்வதி இதென்ன ராகம் என்று வினவ, பரமேஸ்வரனோ ராகமா முக்கியம், அனுராகத்தைப் பார் என்கிறாராம். தேவர்களையும் மயக்குகிறது அவனது குழலிசை.

பசுக்கள் ப்ருந்தாவனத்தில் நடக்கும்போது அவற்றின் குளம்படிகளால் மண்ணைக் கீறிக்கொண்டே செல்கின்றனவாம். ஸ்ரீ வனத்தை மிகவும் நேசிக்கும் கண்ணன், குழலூதிக்கொண்டு செல்லும்போது, மாடுகளின் குளம்படிகளால் ஏற்பட்ட கீறல்களைத் தன்னுடைய சங்கு, சக்ர, பத்ம, வஜ்ர ரேகை உடைய தளிர்ப்பதங்களால் மூடிக்கொண்டே செல்கிறான். அதனால் கீறல் மறைந்து பூமிதேவி வேதனை தணிந்து  ஆனந்தம் கொள்கிறாள். அவனது ஒரே ஒரு பார்வையினாலேயே எங்கள் அன்பு அதிகமாகி, மெய்மறந்து செய்வதறியாமல் சிலைகளைப் போல் நிற்கிறோம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Wednesday, April 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 425

யுகள கீதம் - 1

இது பஞ்ச கீதங்களுள் ஒன்று. 
கோபியர்கள் கண்ணன் குழலூதும் அழகைப் பாடிக்கொண்டே தத்தம் அன்றாட வேலைகளைச் செய்வதைக் குறிப்பிடும் கீதம். 

யுகளம் என்றால் இரண்டு. இரண்டிரண்டு அடிகளாக வாக்கிய அமைப்பு அமைந்திருப்பதால் யுகள கீதம் என்றழைக்கப்படுகிறது.

இரண்டிரண்டு அடிகளில் முதல் ஸ்லோகம் கண்ணனின் அழகையும், இரண்டாவதில் அதனால் கோபியரின் மனங்களில் ஏற்படும் விளைவையும் சொல்கிறது.

இருபத்து நான்கு  ஸ்லோகங்கள் கொண்டது.

கண்ணன் மாடு மேய்க்கக் காலையில் கிளம்பிவிடுவான். அவன் சென்றபிறகு, பகற்பொழுது முழுவதும் கோபியர்க்குத் துன்ப காலமாகக் கழிந்தது. ப்ரணாமோ துக்க சமன: என்னும்படியாக எப்படிப்பட்ட துயரமாயினும் ஹரியின் நாமம் அதற்கு ஆறுதலாய் அமையுமல்லவா..

இனி யுகள கீதம்.

இடது தோளில் கன்னத்தைச் சாய்த்து புருவத்தை  வளைத்து, குழலில் விரல்களை அளையவிட்டு, கண்ணன் தேவகானமாய்  இசைக்கிறான். அதைக் கேட்டு வானத்தில் சென்றுகொண்டிருக்கும் அப்ஸரஸ்கள் மனத்தைப் பறிகொடுத்து ஆடைகள் நழுவும் உணர்வு கூட இல்லாமல் நிற்கின்றனர்.

கண்ணன் குழலூதும்போது, முத்துமாலை போல் கோர்வையாக உள்ள பல்வரிசை அவ்வப்போது பளீர் பளீரென்று இதழ்களுக்கிடையில் ஒளிர்கிறது. மார்பில் விளங்கும் ஸ்ரீவத்ஸமோ கருமேகத்தில் ஏற்படும் மின்னலைப்போல் ப்ரகாசிக்கிறது.  இவன் குழலூதுவதென்னவோ அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்ப்பை ஊட்டத்தான். ஆனால், காளைகள், பசுக்கள், உள்பட அனைத்து ஜீவன்களும் கண்ணனின் அருகே ஓடிவந்து மெய்மறந்து நிற்கின்றன. மேய்ந்த புல்லை அசைபோடவோ, விழுங்கவோ மறந்து கடைவாயில் வழியவிடுகின்றன. காதுமடல்களை சிறிது அசைத்தாலும் கானம் கேட்பது தடைப்படுமோ என்று செவிமடல்களை மேல்நோக்கி விரித்து நீட்டிக்கொண்டு அசையா நிற்கின்றன.
இவையனைத்தும் பார்க்க முப்பரிமாணச்  சித்திரங்கள் போல் உள்ளன. 

கண்ணன் சிலசமயம் பலராமனுடன் காட்டில் மாடு மேய்க்கும்போது, கோபர்கள் அவனுக்கு அலங்காரம் செய்து விடுகின்றனர். தலையில் மயில்பீலி, பூங்கொத்து ஆகியவற்றைச் செருகி, பாறைகளில் கிடைக்கும் வண்ணத் தாதுப்பொடிகளை அவனது கன்னங்களில் பூசி, இலை மற்றும் தளிர்களாலான மாலையைச் சூட்டி, மல்யுத்த வீரன்போல் கச்சை கட்டிவிடுகின்றனர். அவர்கள் கைப்பாவையாக மாறி கண்ணனும்  என்ன அலங்காரம் செய்து விட்டாலும் அதை அன்போடு ஏற்கிறான். பின்னர், தொலைவில் சென்ற மாடுகளை அவற்றின் பெயரைக் குழலில் இசைத்து அழைக்கிறான். அப்போது, தன் அலை ஓசையால் குழலிசையின் இனிமைக்கு ஊறு வருமோ என்று பயந்து யமுனை தன் அலைகளை அடக்கிக்கொண்டு சிலையாக ஓடாமல் நிற்கிறாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



Sunday, April 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 424

சண்டை எதுவும் போடாமல் கால் விரலால் தீண்டியதற்கே ஒரு பாம்பு சாபவிமோசனம் பெற்றதைக் கண்ட கோபர்களும் கோபியர்களும் கண்ணனின் ஆன்மபலத்தை எண்ணி வியந்தனர். 

கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டு வண்டிகளில் ஏறி கோகுலம் திரும்பினர்.

மற்றொரு நாள் கண்ணனும் பலராமனும் அழகாக அலங்காரம் செய்துகொண்டு ஆநிரை மேய்க்க வனம் சென்றனர். அப்போது மூலிகையும் பூக்களும் பறிக்க,  வனத்திற்கு வந்த பெண்கள் தங்கள் நிலை மறந்து கண்ணன் மற்றும் பலராமனை நோக்கி வந்தனர். இருவரும்  அவர்களுடன் விளையாடத் துவங்கினர். மாலையானது தெரியாமல் விளையாட்டு தொடர்ந்தது.

இருள் சூழத் துவங்கியது. நிலவொளியில் யமுனைக் கரை தனி அழகுடன் விளங்கியது. ஆம்பல் பூக்களின் நறுமணமும், மெல்லிய தென்றலும், வண்டுகளின் ரீங்காரமும் நிரம்பிய அம்மாலை வேளையைப் புகழ்ந்து அனைவரும் பாடினர். கண்ணன் குழலிசையை வழங்க அனைவரும் மயங்கிய நிலையில் சூழலை மறந்தனர்.

அப்போது சங்கசூடன் என்னும் அரக்கன் அங்கு வந்தான். 

அங்கு அமர்ந்திருந்த அழகிய பெண்களில் சிலரைத் தூக்கிக்கொண்டு ஓடத் துவங்கினான்.

எல்லா கோபியரும் பயந்துபோய் அழத் துவங்கினர். கண்ணனும் பலராமனும் பயப்படாதீர்கள் என்று கத்திக்கொண்டே சங்கசூடனைத் தொடர்ந்து ஓடினர்.

அசுரனைப் பிடிக்கத் தலைப்பட்டபோது, அவன் உயிருக்கு பயந்து பெண்களைக் கீழே விட்டுவிட்டு வேகமாக ஓடத் துவங்கினான்.

பலராமனை கோபியர்க்குக் காவலாய் வைத்து, மற்ற கோபிகளுடன் சேர்த்துவிடச் சொன்னான் கண்ணன். பின்னர் தான் மட்டும் அசுரனைப் பின் தொடர்ந்தான். 

ஒரே பாய்ச்சலில் அசுரனை ஓங்கி முஷ்டியால் அடித்தான். கண்ணனைக் கண்ணாரக் கண்டுகொண்டே சங்கசூடனின் உயிர் பிரிந்தது. அவன் தலையில் ஒரு ஒளி மிக்க ரத்தினம் இருந்தது. 
கண்ணன் அதைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்தான்.

கோபியரும் பலராமனும் கண்ணனுக்காக யமுனைக் கரையில் காத்திருந்தனர். அனைவர் முன்னிலையிலும் கண்ணன் அந்த ரத்தினத்தை பலராமனுக்குப் பரிசளித்தான். 

யமுனையில் களைப்புதீர நீராடி, ஜலக்ரீடைகள் செய்தபின் அனைவரும் வீடு திரும்பினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


Saturday, April 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 423

ஒரு சமயம் நந்தன் தன் உறவினர்களை அழைத்துக்கொண்டு அம்பிகாவனம் என்ற வனத்திற்குச் சென்றார். சிவராத்ரி அன்று அங்கு கோவில் கொண்டிருக்கும் பரமேஸ்வரனைப் பூஜை செய்ய எண்ணினார்.

ஸரஸ்வதி நதிக்கரையில் அமைந்த வனம் அது. நதியில் நீராடி, பரமேஸ்வரனையும், அம்பளையும் வழிபட்டார். 

நந்தன், சுநந்தன் முதலானோர் நீரை மட்டும் பருகி உபவாசம் இருந்தனர். அன்றிரவு நதிக்கரையிலேயே கூடாரம் அமைத்துத் தங்கினர்.

அப்போது ஒரு பெரிய ஆபத்து வந்தது. ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தனை விழுங்கத் துவங்கியது. 

உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். கோபர்கள் ஓடிச்சென்று தீப்பந்தங்களை எடுத்து வந்து பாம்பை அடித்தனர். ஆனால் அது எதற்கும் அசையாமல், தொடர்ந்து நந்தனை விழுங்கிக்கொண்டே இருந்தது. நத்தன் கொஞ்சம் கொஞ்சமாக பாம்பின் வாயினுள் போய்க்கொண்டிருந்தார்.

யசோதை அலறிக்கொண்டு மூர்ச்சையாகி விழுந்தாள். இன்னும் பல பெண்களும் துடித்துப்போய் கண்ணா காப்பாற்று என்று கதறினர். சத்தம் கேட்டு எழுந்து வந்தான் கண்ணன். 

கண்ணன் மெதுவாக அந்தப் பாம்பின் அருகில் சென்று அதைத் தன் திருவடியால் தீண்டினான். 

இறைவனின் திருவடி மகிமை சொல்லுக்கடங்குமா? தாமரைப் பாதம் பட்டதும், அந்தப் பாம்பு தன் உடலை விட்டு அழகிய வித்யாதரனின் உருவம் பெற்றது.

மிகுந்த ஒளியுடன் தங்க மாலைகளும், பட்டாடையும் அணிந்த அந்த வித்யாதரனைப் பார்த்து அனைவரும் ஹா என்று அதிசயித்தனர்.

கண்ணன் அவனைப் பார்த்துக் கேட்டான்.

யார் நீ? இவ்வளவு அழகாக இருக்கும் நீ எப்படி பாம்புருவைப் பெற்றாய்? 

அந்த வித்யாதரன் கண்ணனை வணங்கினான். பின்னர் கூறலானான்.

என் பெயர் சுதர்சனன்.

செல்வமும் செழிப்பும்‌ மிக்கவனாய் இருந்தேன். ஒரு சமயம் என் விமானத்திலேறி உலகைச் சுற்றி வந்தேன். 

அப்போது வனத்தில் தவத்தினால் ஒட்டி உலர்ந்த உடலுடன் விளங்கிய ஆங்கீரஸ கோத்ர மஹரிஷிகளைப் பார்த்தேன். என் அழகு தந்த இறுமாப்பால் அவர்களைப் பரிஹாசம் செய்தேன். எனது பிழையால் சினந்த அவர்கள் என்னை மலைப்பாம்பாகும்படி சபித்தனர்.

கருணையே வடிவான அவர்களது சாபத்தினால் எனக்கு இன்று பெரு நன்மை விளைந்தது. கிடைத்தற்கரிய உமது திருவடியும் தங்கள் தரிசனமும் கிட்டியது. பெரும்பேறு பெற்றவன் ஆனேன். சம்சாரத்தில் பயமுற்றவர்களின் பயமனைத்தையும் போக்குவது தங்கள் சரணமே. தங்களைச் சரணடைந்தேன்.

பக்தர்களை எப்போதும் கைவிடாதவர் நீங்கள். உமது திருநாமங்களைக் கூறுபவன், அதைக் கேட்பவனையும், தன்னையும் அக்கணமே தூய்மைப்படுத்துகிறான். எனக்கோ உமது திருவடியே கிடைத்துவிட்டது. என்னுடைய எல்லா பாவங்களும் நீங்கிவிட்டது பெருமானே! எனக்கு விடை கொடுங்கள். நான் இனி உமது புகழைப் பாடிக்கொண்டு இவ்வுலகை வலம் வருவேன்.

என்று கூறி கண்ணனை வலம் வந்து வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..