Saturday, August 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 531

இரண்டு நாள்கள் கண்ணனின் அன்பில் திளைத்த குசேலர் மூன்றாம் நாள் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினார். கண்ணனைப் பிரிய மனம் வரவில்லைதான். ஆனாலும் குடும்பம் இருக்கிறதே. மேலும் விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான். என்ற சொல்வழக்கிற்கேற்ப அங்கிருந்து புறப்பட்டார்.

கண்ணனிடம் ஏதேனும் செல்வத்தைக் கேட்டுப் பெறும் நினைவு கூட இல்லை. கண்ணனும் தானாக அவரிடம் எதையும்‌ கொடுக்கவில்லை. 

கண்ணீர் மல்கி அவரைக் கட்டியணைத்து இவ்வளவு நாள்கள் கழித்து என்னை நினைவு வைத்துக்கொண்டு வந்தீரே என்பதாக நெகிழ்ந்து வாசல் வரை வந்து வழியனுப்பினான் கண்ணன்.

வழியெல்லாம் கண்ணனின் தெய்வீகத் திருமுகம், தாமரைக் கண்கள், முகத்தில் தொங்கும் குழற்கற்றை, அதை அவன் சரி செய்துகொள்ளும் அழகு, அவனது பேச்சிற்கேற்ப காதிலாடும் குழைகள், மின்னலைப் போல் கன்னத்தில் ப்ரதிபலித்து ஆடும் அவற்றின் ஒளி, அவன் பேசிய சொற்கள், பேசும்போது கண்ணனின் இதழ்கள் குவிந்து விரிந்த அழகு, நடுநடுவே வீசும் முத்துப்பல் வரிசையின் ஒளி, தன் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அவன் நடந்த அழகு, உண்ணும்போது தனக்கு பார்த்து பார்த்துப் பரிமாற ருக்மிணிக்குச் செய்த கண்ஜாடைகள், தாமரைக் கரம் கொண்டு தன் காலைப் பிடித்துவிட்ட அழகு,
திருமகளின் பதியான கண்ணன் எங்கே. வறிய அந்தணனான நான் எங்கே. என்னைப்போய் தன் திருக்கரங்களால் அணைத்துக்கொண்டானே. தன்னோடு ஒன்றாக உறங்கச் செய்தானே. மஹாலக்ஷ்மியான ருக்மிணி எனக்கு சாமரம் வீசினாளே. 
எல்லா விதமான செல்வங்களையும், சித்திகளையும் பெற ஒருவன் கண்ணனின் திருவடிகளை ஆராதனம் செய்யவேண்டியிருக்க அவன் என் பாதத்தைப் பிடித்துவிட்டானே. செல்வச் செருக்கு வந்தால் இறைவனான அவனை நான் நினைக்கமாட்டேன் என்று மிகுந்த கருணையால் தான் அவன் எனக்கு செல்வம் எதுவும் கொடுக்க வில்லை போலும். நமக்கு இனி எதுவும் வேண்டாம். இந்த ஒரு சந்திப்பை எண்ணிக்கொண்டே வாழ்நாளைக் கடத்தி அவன் திருவடிகளை அடைந்துவிடுவேன்.

மாற்றி மாற்றி இதையே எண்ணிக்கொண்டு நடந்தார். வழியில் கண்ட ஒன்றும் அவர் மனத்தில் பதியவில்லை. வண்டி மாடு வீட்டை அடைவதுபோல் எப்படியோ மெல்ல மெல்ல தான் வசிக்கும் பகுதிக்கு வந்துவிட்டார்.

தான் வசிக்கும் தெருவிற்கு வந்தவர் தன் வீட்டைக் காணாமல் திகைத்தார்.
அங்கே வரிசையாக பெரிய பெரிய மாளிகைகளுக்கு நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ஒரு பெரிய மாளிகையைக் கண்டார். 

 பெரிய பழத் தோட்டத்தின் நடுவே பறவைகள் சூழ்ந்த நீர் நிலை, நன்றாக அலங்கரித்துக் கொண்டு உலாவும் ஆண்களும்‌ பெண்களும், இப்படியாக இருந்த அந்த மாளிகை குசேலரின் வீடு இருந்த இடத்தில் இருந்தது. 

இது யாருடைய வீடு? மாறி வந்துவிட்டேனா? நான் வசித்த தெருதானே. இந்தக் குழந்தைகளைப் பார்த்தால் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் போல இருக்கின்றன. ஆனால் இவர்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்களே.

அதோ அவள் சூசீலாவைப் போல் இருக்கிறாளே. இவள் எப்படி இவ்வளவு நகைகள், பட்டுப்புடைவையுடன்? ஆம். இவர்கள் என் குழந்தைகள். காதுகளில் குண்டலங்களும், முத்து மாலைகளும் பட்டாடையும். எங்கிருந்து இந்த செல்வம் வந்தது? எப்படி என் வீடு இப்படி மாறிற்று? 

அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சில ஆண்கள் வந்து வாத்யங்களை முழங்க, பெண்கள் வந்து மங்கல ஹாரத்தி செய்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அவர் வந்ததை அறிந்து வேக வேகமாக வந்த சுசீலை குசேலரை நமஸ்கரித்தாள்.

அவரை மனத்தால் அணைத்துக்கொண்டாள். தேவமாதைப் போல் ஒளி பொருந்திய அழகுடன் விளங்கிய தன் மனைவியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் குசேலர். ஒரே கணத்தில் அவருக்கு இவையனைத்தும் கண்ணனின் லீலை என்பது விளங்கிற்று. நண்பன் என்றால் கண்ணனல்லவோ நண்பன். என் துயரத்தை நான் சொல்லாமலே போக்கியவன். என் கையில் கொடுத்தனுப்பாமல் யோக சக்தியால் ஒரே பார்வையில் அருளிவிட்டான் போலும். இல்லையில்லை இது ருக்மிணியின் கடாக்ஷமாக இருக்கவேண்டும். என்னைக் கண்டதும் நீங்கள் எந்த திசையிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள். கை காட்டிய திசை முழுவதையும் கடாக்ஷித்துவிட்டாள் போலும். என் வீட்டை மட்டுமல்லாமல், நாங்கள் வறுமையில் இருந்தபோது எங்களுக்கு உதவிய நல்லிதயங்கள் வாழும் அக்கம் பக்கத்து வீடுகளையும் சேர்த்து கடாக்ஷம் செய்திருக்கிறார்களே.

எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார் குசேலர். தன் மனைவியுடன் மாளிகையினுள் சென்றார். தங்க ஆசனங்கள், திண்டுகள், ஆங்காங்கே தொங்கும் முத்துச் சரங்கள், தந்தத்தாலான கட்டில்கள், மென்மையான படுக்கைகள், மரகதங்கள் பதிக்கப்பெற்ற ஸ்படிகங்களால் ஆன சுவர்கள், ரத்தின விளக்குகள் அத்தனை செல்வத்தையும் பார்த்த குசேலர் மிகவும் அமைதியாக சிந்திக்கலானார்.

இதன் காரணம் க்ருஷ்ண தரிசனம் மட்டுமே. வேண்டுவதை விட அதிகம் தரும் இயல்புடையவன் கண்ணன். எவ்வளவு அதிகமாகக் கொடுத்தாலும், கொடுப்பதில் அவனுக்கு திருப்தி ஏற்படுவதில்லை.

அவனுடன் பெற்ற நட்பு பெரும் பேறு. இனி எப்போதும் அவன் திருவடிகளையே தியானித்து உய்யும் வழி தேடுவேன். எப்போதும் அவனது நினைவே எனக்கு இருக்கட்டும். அவன் அடியார்களின் சங்கம் எனக்கு அமையட்டும். வருங்காலம் பற்றி சிந்திக்கத் தெரியாத பக்தனுக்கு இறைவன் செல்வத்தைக் கொடுப்பதில்லை. 

அவனை வெற்றி கொள்ள அவன் மீது அன்பு செலுத்துவதே ஒரே வழி. அவன் மீதுள்ள அன்பினால் மற்ற பற்றுக்களை அறுப்பேன். என்று எண்ணி, மிகவும் விரக்தராக செல்வத்தை அனுபவித்து வந்தார்‌. இறுதியில் நற்கதி பெற்று வைகுண்டத்தை அடைந்தார்.

அந்தணர்களை தெய்வமாகக் கொண்ட பகவான் குசேலருக்குச் செய்த அருளை நினைப்பவர்க்கு அவனிடமே உள்ளம் ஈடுபட்டு கர்மவினைகள் அழிந்துபோகும். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment