Friday, July 31, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 530

குசேலருடன் கண்ணன் பேசிக்கொண்டே இருந்தான்.

நம்மைப் பெற்ற தந்தைதான் முதல் குரு. உபநயனம் செய்வித்து நற்காரியங்களுக்குத் தகுதியாக்குபவர் இரண்டாவது குரு. ஞானத்தைத் தருபவர் மூன்றாவது குரு. இவரே ப்ரதானமானவர். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஞானத்தை அளிக்கும் குருவாக நானே விளங்குகிறேன். 
தர்மத்தை ஒட்டி வாழ்ந்து என் உபதேசங்களால் ஞானத்தைப் பெற்று பிறவிக் கடலை எளிதாகக் கடக்கத் தெரிந்தவர்களே உண்மையில் வாழத் தெரிந்தவர்கள்.

எல்லா உயிர்களிலும் ஆன்மாவாக நானே விளங்குகிறேன். எனினும் குரு சேவையால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதற்கொத்த ஆனந்தம் வேறெந்த காரியத்தினாலும் எனக்குக் கிடைப்பதில்லை.

ஸுதாமா! உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒருநாள் குருமாதா காட்டிற்குச் சென்று விறகு எடுத்துவரும்படி நம்மை ஏவினார். அதற்காக நாம் இருவரும் ஒரு அடர்ந்த காட்டிற்குள் சென்றோம். அப்போது திடீரென்று பெருங்காற்று வீசி மழை பிடித்துக்கொண்டது. சூரியன் மறைந்துவிட, எங்கும் இருள் கவ்விற்று. மேடு, பள்ளம், தரை எதுவும் தெரியவில்லை. வெள்ளம் பெருகத்துவங்க, இருளில் திசை தெரியாமல் மிகவும் துன்புற்றோம். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு சுற்றியலைந்தோம். 

நமது ஆசார்யரும், குருவுமான சாந்தீபனி அவர்கள், நம்மைத் தேடிக்கொண்டு வந்தார். திசையறியாமல் துன்புறும் நம்மைக் கண்டார்.

குழந்தைகளே! மிகவும் வருந்தினீர்களா? ஒவ்வொருவருக்கும் அவரவர் உடலே மிகவும் பிரியமானது. அதைப் பொருட்படுத்தாமல் எனக்காக நீங்கள் காட்டில் அலைந்தீர்களா. குருவிற்காக உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவனே சிறந்த சீடன். உங்கள் விஷயத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் விரும்புவது அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும். நீங்கள் பெற்ற செல்வம் உங்களுக்கு இம்மை மறுமை அனைத்திலும் பயன்படட்டும். 

நீங்கள் மிகுந்த ஏழ்மையிலிருந்தாலும் மன நிம்மைதியோடு விளங்குவதாகத் தங்கள் திருமுகம் சொல்கிறது. நான் அளப்பரிய செல்வம் உடையவனாயினும் மிகவும் நிம்மதியாக மன அமைதியுடன் வாழ்கிறேன். நம் இருவரின் மன நிம்மதிக்கும் காரணம் என்ன தெரியுமா? அன்றைக்கு குரு நம்மை ஆசீர்வதித்தாரே. அதுதான் காரணம். குருவின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற்ற ஒருவன் வாழ்வில் அனைத்து வகையிலும் மன நிறைவும் அமைதியும் பெறுகிறான்.

என்றான்.

சுதாமா பேசத் துவங்கினார்.

ஹே! ஜகத்குரோ! தங்களோடு குருகுலவாசம் அமைந்ததே. அதுவே நான் வாழ்க்கையில் பெற்ற பெருஞ்செல்வம். நான்கு வகையான புருஷார்த்தங்களுக்கும் மூலமாக விளங்குவது வேதம். தாங்களோ வேதஸ்வரூபராக விளங்குகிறீர். இவ்வுலக வாழ்வை அனுசரித்து குருகுல வாசம் செய்தீர்கள். இல்லையெனில் தங்களுக்கு அதற்கான அவசியம்தான் என்ன?

என்றார். கண்ணன் அவருக்கு அருள் செய்யத் தீர்மானித்தான். குசேலரோ கந்தல் துணியில் முடித்துக்கொடுக்கப்பட்ட அவலை வெளியே எடுக்க வெட்கப்பட்டுக்கொண்டு ஒளித்து வைத்துக் கொண்டார்.

கண்ணனே திருவாய் மலர்ந்தான்.

உங்கள் வீட்டிலிருந்து எனக்குக் கொடுப்பதற்காக ஏதாவது எடுத்துவந்திருக்கிறீரா? அன்புடன் எதைக் கொடுத்தாலும் மனமுவந்து ஏற்பேன். அன்பில்லாமல் எவ்வளவு பெரிய செல்வம் கொண்டுவந்தாலும் அதை லட்சியம் செய்யமாட்டேன். இலையோ, பூவோ, பழமோ, நீரோ எதுவாயினும் உள்ளன்புடன் அளிக்கப்பட்டால் அதை உடனே உண்டுவிடுவேன். என்றான். கண்ணன் கேட்டபிறகும் குசேலர் தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்திருந்தாரே தவிர, அவல் ‌முடிப்பை எடுக்கவில்லை.

அவரது வருகைக்கான காரணத்தை உணர்ந்த கண்ணன், பதிவிரதையான இவரது மனைவியின் விருப்பத்திற்காக வந்திருக்கிறார். இவருக்கு குபேரனை ஒத்த செல்வத்தைத் தருவேன் என்றெண்ணினான்.

பின்னர் தானாகவே அவரது மேலாடையில் முடிந்திருந்த மூட்டையைப் பிடித்து இழுத்து, இது என்ன? என்று கேட்டான். அவர் நெளிந்தார். தானாகவே அந்த மூட்டையை எடுத்துப் பிரித்தான் கண்ணன்.

அதில் அவல் இருந்தது. ஆஹா! அவல் எனக்கு மிகவும் பிடிக்கும். அகில உலகத்தையும் மகிழ்விக்கும் பொருள் இது. என்று கூறிக்கொண்டு ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
அடுத்த பிடி அவலை எடுத்ததும், ருக்மிணி கண்ணன் கையைப் பிடித்து போதும் என்று கண்ணசைத்தாள்.

ஒரு பிடி அவலே இவருடைய இம்மை மறுமை அனைத்திற்கும் போதுமானது. என்றாள். சிரித்துக்கொண்டே கண்ணன் அவல் மூட்டையை அவளிடம் கொடுத்தான். 

பின்னர் கண்ணனும் அவருமாக இரவு உணவேற்றுப் பால் அருந்தினர். குசேலர் வைகுண்டத்தில் இருப்பதுபோல் உணர்ந்தார். அருகில் உறங்கும் அழகுப் பெட்டகமான கண்ணனை இமை கொட்டாமல் விடிய விடியப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment