Sunday, July 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 514

துவாரகையின் சுதர்மா என்ற சபைக்கு நாரதர் எழுந்தருளினார். அவரை வரவேற்று உபசரித்து ஆசனம் கொடுக்கப்பட்டது. 
அவரிடம், 
மூவுலகங்களிலும் நடந்து வரும் நிகழ்வுகள்‌ என்ன? அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் உள்ளனவா? உங்களுக்குத் தெரியாத விஷயம் எதுவுமில்லையே. பாண்டவர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதாவது செய்தி உண்டா? என்று கேட்டான் கண்ணன். 

நாரதர் கண்ணனைப் பார்த்துச் சிரித்தார்.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனே! அனைத்துலகையும் படைத்துக் காக்கிறீர்கள். ப்ரும்மா முதலானவர்களும் தங்களது மாயைக்கு ஆட்பட்டவர்களே. விறகினுள் ஒளிந்திருக்கும் நெருப்பைப்போல் நீங்கள் அனைத்துயிர்களுக்குள் மறைந்து நிற்கிறீர்கள். தங்கள் மாயையின் சக்தியைப் பலமுறை கண்டதால் ஒன்றுமறியாதவர் போல் நீங்கள் என்னைக் கேட்பது வியப்பளிக்கவில்லை.

பொய்யான ப்ரபஞ்சத்தை உண்மைபோல் விளங்கச் செய்யும் உம்மைப் பன்முறை வணங்குகிறேன். 

பிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கும் ஜீவனுக்கு விளையாட்டாக மாயையை விலக்கி ஞான தீபமேற்ற வல்லவர் தாங்கள். 
எனினும் தாங்கள் கேட்டதால் கூறுகிறேன்.

 தங்களின் அத்தை மகனான யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தால் தங்களை ஆராதிக்க விரும்புகிறார். அதற்கு தங்களது அனுமதியை எதிர் பார்க்கிறார்.

தேவர்களும், புகழ் மிக்க அரசர்களும் அவ்வேள்வியில் பங்கேற்கவேண்டும். 

பரப்ரும்மமான தங்கள் குணங்களைக் கேட்பதாலும், நாமங்களைப் பாடுவதாலும், தங்களது திருவுருவைச் சிந்திப்பதாலும், எப்படிப்பட்ட கீழ்நிலையில் இருப்பவரும் கரையேறுகின்றனர். அப்படியிருக்க நேரில் கண்டு தொழுபவர் தூய்மைபெற்று நற்கதியடைவதில் வியப்பென்ன?

தங்களது புகழ் அனைத்து உலகங்களிலும் பரவியுள்ளது. தங்கள் திருவடி நீர் வானுலகில் மந்தாகினி என்ற பெயரிலும், புவியில் கங்கை என்றும் பாதாளத்தில் போகவதி என்ற பெயரிலும் பாய்ந்து அனைவரையும் பவித்ரமாக்குகிறது.

நாரதர் கூறியதைக் கேட்ட கண்ணன் சபையோரை ஆலோசனை வேண்டினான்.

ஜராசந்தனிடம் போர் புரிவதா? அல்லது ராஜசூயத்திற்குச் செல்வதா? எதைச் செய்யலாம் என்று கேட்டான்.

சபையோர் அனைவரும் ஜராசந்தனிடம் யுத்தம் செய்யலாம் என்று அபிப்ராயம் கூறவே, கண்ணன் உத்தவனைப் பார்த்தான். 
கண்ணனின் பஹிர்ப்ராணன் (உடலுக்கு வெளியில் உலாவும் உயிர்) போல் விளங்கும்‌ உத்தவன், கண்ணனின் எண்ணத்தை நன்கறிவான். எனவே அதற்கேற்ப பேசத் துவங்கினான்.

இறைவா! நாரதர் கூறியபடி தங்கள் அத்தை மகனுக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.‌ அதே சமயம் ஜராசந்தனால்‌ துன்புற்று தங்களைச் சரணடைந்த அரசர்களைக் காப்பதும் அவசியமாகிறது.

எல்லா திக்குகளையும் வென்று அனைத்துலகையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருபவர்தான் ராஜசூய வேள்வி செய்ய இயலும். எனவே ஜராசந்தனை வென்று ராஜசூயம் நடத்தலாம். அவனை வதம்‌ செய்தால் அரசர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும். 
ஜராசந்தனை படைகளைக் கொண்டு வெல்ல இயலாது. ஒருவருக்கொருவர் மல்யுத்தம் செய்தே அவனைக் கொல்ல இயலும். அவனது பிறவி ரகசியம் அறிந்தவர்களாலேயே அதைச் சாதிக்க இயலும்.

துஷ்டனானாலும் அவன் அந்தணர்களைப் பூஜிப்பவன். அந்தண உருவத்தில் சென்று மல்யுத்தத்தை யாசகமாக வேண்டினால் மறுக்காமல் வருவான். தங்கள் ஆசியுடன் பீமன் அவனுடன் போர் செய்தால் நிச்சயம் வெல்வான்.

ப்ரும்மா முதலிய தேவர்களை நிமித்தமாகக் கொண்டு உலகின் காரியங்களை நிகழ்த்துகிறீர்கள். அதேபோல் பீமனை நிமித்த காரணமாக வைத்து ஜராசந்தனைக் கிழித்துப் போடச் செய்யுங்கள்.

கஜேந்திரனை விடுவித்தீர்கள். ராவணனைக் கொன்று, அன்னை சீதையை விடுவித்தீர்கள். கம்சனைக் கொன்று தங்கள் பெற்றோரை விடுவித்தீர்கள். நரகாசுரனை வென்று இளவரசிகளைத் தங்கள் அரசிகளாக்கினீர்கள். ஜராசந்தனை அழிப்பது தங்களுக்கொரு விளையாட்டே ஆகும். இரண்டு காரியங்களைச் சேர்த்து செய்யுமாறு காலம் அனுகூலமாக இருக்கிறது என்றார் மதியூகியான உத்தவர்.

உத்தவரின் இந்த யோசனை அனைவர்க்கும் பிடித்துப்போக, நன்று நன்று அப்படியே செய்யலாம் என்று கொண்டாடினர்.

அனைத்தையும் நிகழ்த்தப்போகும் கண்ணனோ அமைதியாகச் சிரித்துக்கொண்டிருந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment