Thursday, July 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 505

கண்ணனின் மகன்களான சாம்பன், ப்ரத்யும்னன், சாருபானு, கதன் ஆகியோர் அருகிலிருந்த காட்டிற்குச் சென்றனர்.

வெகுதூரம்‌ அலைந்ததும் களைப்பு மிகுந்து தாகம்‌ எடுத்தது. நீருக்காக அலையத் துவங்கினர். ஒரு பாழுங்கிணறு தென்பட்டது. அதில் நீருக்காகக் குனிந்து பார்த்தபோது ஒரு மிகப்பெரிய ஓணான் உள்ளே‌ இருந்தது. அதைப் பார்த்து வியந்தனர்.

அது தவறி விழுந்திருக்கலாம் என்று எண்ணி வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.

கயிறுகளால்‌ கட்டி அனைவரும் சேர்ந்து இழுத்தபோதும் அது அசையக்கூட‌ இல்லை. அதைக் கண்டு இன்னும் ஆச்சரியம் அதிகமாயிற்று. இதில் ஏதாவது விஷயமிருக்கலாம் என்று எண்ணி உடனே‌ கண்ணனிடம் சென்று கூறினார்கள்.

கண்ணன் அவர்களுடன் காட்டிலிருக்கும் அந்தப் பாழுங்கிணற்றுக்கு வந்தான். அந்த ஓணானை அலட்சியமாக இடது கரத்தால் தூக்கி மேலே விட்டான்.

கண்ணனது அமுதக் கரம் பட்டதும் அந்த ஓணான் மிக அழகிய உருவம் கொண்டது. தங்கமயமான உடலும், அற்புதமான ஆடை அணிகலன்களும் அணிந்த தேவனாகக் காட்சியளித்தது.

அனைத்தும் அறிந்த கண்ணன், அந்த தேவனிடம் எதற்காக ஓணான் உடல்‌ பெற்றீர்கள்? நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் தேவபுருஷர் போல் இருக்கிறதே என்றான்.

அந்த தேவன் தன் ஒளி பொருந்திய கிரீடம் மண்ணில் பட கண்ணனை வணங்கினான். 

தேவாதிதேவா! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். இருப்பினும் நீங்கள் கேட்பதால் கூறுகிறேன்.
என் பெயர் ந்ருகன். மாமன்னர் இக்ஷ்வாகுவின் புதல்வன். வள்ளல்களின் பெயர்களைச் சொல்லும்போது என் பெயரை அனைவரும் கேள்வியுறுவர்.

நான் பூமியில்‌ எவ்வளவு மணல்கள் உள்ளனவோ, வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு பசுக்களை தானம் செய்தேன். அத்தனை பசுக்களும் பால்‌ சுரப்பவை. இளம் வயதுடையவை. நல்ல‌சுழிகள் கொண்டவை. கொம்புகளில் தங்கப் பூண்களும், கால்களில் வெள்ளிச் சலங்கைகளும் பூண்டவை. பட்டாடைகளும், மாலைகளும் சாற்றி, பூஜை செய்து அவற்றை தானம் செய்தேன். 

என்னிடம் தானம் பெற்றவர் அனைவரும் நற்குணங்கள் நிரம்பிய அந்தணர்கள்.
ஸத்யசந்தர்கள். சிறந்த சீடர்களை உடையவர்கள். பசுக்களைத் தவிரவும் பூமி, வீடு, குதிரை, பணிப்பெண்கள், கன்னிகைகள், எள், வெள்ளி, ஆடைகள், ரத்தினங்கள், வீட்டுப்பொருள்கள், ரதங்கள், ஆகியவற்றையும் வழங்கினேன். நிறைய யாகங்கள் செய்தேன். குளம் வெட்டுதல், பள்ளிச் சாலைகள் அமைத்தல் ஆகியவற்றையும் புரிந்தேன்.

ஒரு சமயம் என்னால் தானம் கொடுக்கப்பட்ட ஒரு உயர்ந்த பசு, பழக்கத்தினால் தன் பழைய பசுக்கொட்டிலில் சென்று பசுக்கூடட்டங்களோடு  கலந்துவிட்டது.அதை அறியாமல் அந்தப் பசுக்கூட்டங்களை மற்றொரு அந்தணனுக்கு தானம் அளித்துவிட்டேன்.

அந்தப் பசுவை முதலில் தானமாகப் பெற்றவர் தன் பசுவை மற்றோருவர் கொண்டு செல்வதைப் பார்த்து தன்னுடையதென்று கேட்க, அவர் மன்னர் எனக்களித்தார் என்று கூற, வழக்கு என்னிடம் வந்தது.

ஏற்கனவே தானம் கொடுத்த பசுவை அறியாமல் மீண்டும் தானம் கொடுத்தவர் நீங்களே. எனவே நீங்களே பசுவைத் திருடியவர் என்றார் ஒரு அந்தணர். 
இடிந்துபோனேன். 

அந்தப் பசுவுக்கு ஈடாக வேறு உயர்ந்த பசுக்களை நிறையத் தருகிறேன் என்று மன்றாடினேன்.
இருவருமே ஏற்க மறுத்துவிட்டனர். அதே பசுதான் வேண்டும் என்று கேட்டனர். 

இதற்கிடையில் என் காலம் முடிந்து யமதூதர்களால் யமதர்மராஜனின் சபைக்கு அழைத்துவரப்பட்டேன்.

தர்மராஜனான அவர்,  நீங்கள்‌ முதலில் பாவத்தின் பலனை அனுபவிக்கிறீர்களா? அல்லது புண்ணியத்தின் பயனையா? என்று கேட்டார்.

நான் பாவத்தின் பயனை முதலில் அனுபவித்து விடுகிறேன் என்று சொன்னதும், கீழே விழு என்று ஆணையிட்டார். 

நான் தலை குப்புற கீழே விழுந்து ஓணானாக மாறினேன். அந்தணர்களிடம் மிகுந்த பக்தி கொண்டு தானங்கள் அளித்த காரணத்தால் எனக்கு முற்பிறவி நினைவுகள் எதுவும் மறக்கவில்லை.

யோகிகளால் தியானம் செய்யப்படும் பரம்பொருளான தாங்கள் இந்த அடிமைக்கும் காட்சி தந்தீர்களே. அதன் காரணத்தை அறியேன்.

தேவர்தலைவனே! அனைத்துப் ப்ராணிகளின் ஜீவனே! கோவிந்தா! பரம்பொருளே! புருஷோத்தமனே! அச்சுதா! அனைத்தையும் இயக்குபவரே! எல்லையற்றது தங்களது புகழ் எல்லாவற்றையும் புனிதப் படுத்துவது.

காரணபுருஷரான தாங்கள்‌ மாறுபாடுகளற்றவர். ஸச்சினாந்த ஸ்வரூபரே! தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

நான் தேவலோகம் செல்ல அனுமதி தாருங்கள். எப்போதும் தங்களது திருவடித் தாமரைகளின் நினைவு எனக்கு இருக்கட்டும்.

இவ்வாறு கூறிவிட்டு, ந்ருகன் கண்ணனைப் பலமுறை வலம் வந்தார். பின்னர் தாமரைத் திருவடிகளைத் தொட்டு நிலம் விழுந்து வணங்கினார்.


அப்போது ஒரு அழகிய தேவ விமானம் வந்து நின்றது. கண்ணன் தலையசைக்க அனைவரும் பார்க்கும்போதே அதிலேறிக் கிளம்பிச் சென்றார்.

ந்ருகன் சென்றபின் கண்ணன் தன்னைச் சேர்ந்தவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினான்.

வேதத்தின் நடமாடும் கோவிலாக விளங்கும் அந்தணர்களின் சொத்தை ஒருவன் சிறிதளவே பறித்தாலும் அது அவனுக்கு செரிக்காது. தலைவனாக விளங்கும் அரசன் அத்தவற்றைச் செய்தால் அதன் பலன் மிகவும் பெரியது.

அந்தணர்களின் சொத்து ஆலகால விஷத்தை விடக்‌கொடியது. விஷத்தை அருந்தியவன் மட்டுமே அழிவான். சீரிய அந்தணர்களின் பொருளை அனுபவிப்பவன் குலமே நாசமாகும். அறியாமல் அனுபவுத்தால் மூன்று தலைமுறைகளையும், அறிந்து பறிப்பவனின் முந்தைய பத்து தலைமுறைகள், மற்றும் பிந்தைய பத்து தலைமுறைகளையும் அழிக்கும். அவ்வாறு செய்யும் அரசர்கள் தம் மக்களையும் அவ்வழியில் அழைத்துச் சென்று நரகத்தை நிரப்புகிறார்கள்.

என் இனிய மக்களே! அந்தணர்கள் தவறு செய்திருந்தாலும் அவரிடம் பகைமை பாராட்டாதீர்கள். அவர்களது சொத்து துளியும் நமது பொக்கிஷத்தில் கலந்துவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான தானங்களை விரும்பிச்  செய்திருந்தபோதும்  அந்த அந்தணரின் பசு ந்ருக மஹாராஜனைக் கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டது பார்த்தீர்களா? 

இவ்வாறு பல அறிவுரைகள் கூறி அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். 

அர்ஜுனனை முன் வைத்து உபதேசித்த பகவத்கீதைபோல் துவாரகாவாசிகளை முன்னிட்டு உலகோர்க்கு அறநெறிகளைக் கூறினான் கண்ணன். இவ்வளவு கூறியபோதும் பின்னால் சாம்பன் அந்தணர்களுடன் விளையாடி யதுகுலத்திற்கே சாபமாக அமையப்போகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment