Thursday, July 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 529

துவாரகையை அடைந்த குசேலருக்கு கண்ணன் ருக்மிணியுடன் வசிக்கும் திருமாளிகையைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருக்கவில்லை.

அந்தணர்கள் மீது பக்திகொண்ட கண்ணன், அவர்கள் வந்தால் எந்தத் தடையுமின்றி உள்ளே அனுப்பும்படி உத்தரவிட்டிருந்தான். கண்ணனின் மாளிகை வாசலில் நின்ற குசேலர் காவலர்களால் வணங்கப்பெற்று உள்ளே அனுப்பப்பட்டார். உள்ளே நுழைந்ததுமே ஆனந்தக் கடலில் தள்ளப்பட்டார். கண்ணனைக் காண இயலுமா என்று யோசித்துக்கொண்டு வந்தவருக்கு வணக்கத்துடன் வரவேற்பும் கிடைத்ததை எண்ணி அதிசயித்தார்.

அதற்குள் ஒரு அந்தணர் வருகிறார் என்ற செய்தி கண்ணனுக்குப் பறந்தது. ருக்மிணியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த கண்ணன் அதைக் கேட்டதும் குதித்து இறங்கி ஓடிவந்தான். மகிழ்ச்சியுடன் அவரைக் கட்டிக்கொண்டான். 
கண்ணனின் தாமரைக்கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொறிந்தன. அவரைத் தானே கையைப் பிடித்து அழைத்துச் சென்று தன் கட்டிலில் அமரவைத்தான். அவரை உபசரிக்கும் பொருள்களைத் தானே ஓடி ஓடிச் சென்று எடுத்துவந்தான்.

இத்தகைய உற்சாகத்துடன் கண்ணன் ஓடுவதை இதுவரை பார்த்தறியாத ருக்மிணியும் பணிப்பெண்களும் செயல் மறந்து நின்றனர். 

காடு மேடுகளில் நடந்து புண்ணாகிப்போயிருந்த அவரது சரணத்தைத் தூய நன்னீரால் நீராட்டி, அதைத் தலையில் தெளித்துக்கொண்டு ருக்மிணிக்கும் தெளித்தான்.

பின்னர் சந்தனம், அகில், குங்குமப்பூ ஆகியவைகளால் ஆன வாசனைத் திரவியங்களைப் பூசிவிட்டான்.

பின்னர் உணவருந்தச் செய்து தாம்பூலம் அளித்தான். 

நரம்புகள் அனைத்தும் வெளியே புடைத்துக்கொண்டு தெரியும் அளவிற்கு இளைத்துப்போயிருந்த குசேலரை ஒரு சுகமான ஆசனத்தில் அமர்த்தி ருக்மிணியை வெண்சாமரம் வீசச் செய்தான். 

யார் இவர்? ஜகன் மாதாவான ருக்மிணியே இவருக்கு சாமரம் வீசுகிறாளே. கண்ணன் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கும் அளவிற்கு இவர் என்ன புண்ணியம் செய்தாரோ என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.

கண்ணனும் குசேலரும் குருகுலத்தில் தாம் வசித்தபோது நடந்த இனிமையான நிகழ்வுகளை நினைவு கூரத் துவங்கினர். 

சுதாமா! குருகுலத்திலிருந்து கிளம்பிச் சென்றதும் உங்களுக்கேற்ற பெண்ணை மணம் முடித்தீரா?

தங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா? உமக்கு இல்லறத்திலும் செல்வத்திலும் நாட்டமில்லை என்றறிவேன். நீங்கள் ஆசைக்கு அடிமையானவர் இல்லை. என்னைப்போல் சிலர், மாயையினால் ஏற்படும் உலகியல் நாட்டங்களைக் களைந்தும் உலகோடு ஒட்டி வாழ்கிறார்கள்.

உத்தம குருவை அடைந்தவன் இருபிறப்பாளன் என்றறியப்படுகிறான். குருவிடமிருந்து ஞானத்தைப் பெற்று அறியாமை நீங்கிவிடுவதால் அதன் பிறகான உலக வாழ்க்கை அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டே போன கண்ணனை ஆனந்தக் கண்ணீருடன் விழிகள் விரிய அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தார் குசேலர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment