Sunday, July 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 507

பலராமன் கோகுலம் சென்றதும் கரூஷ  ராஜன் பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன் கண்ணனுக்கு ஒரு தூதுச் செய்தி அனுப்பினான்.

நான்தான் உண்மையான பகவான் வாசுதேவன். நீ உன் ஆயுதங்களான சங்கு, சக்கரம் ஆகியவற்றை என்னிடம் கொடுத்து விட்டுச் சரணைந்துவிடு என்பதுதான் செய்தி. 
உலகைக் காக்க அவதரித்தவர் தாங்கள் என்று அறிவிலிகள் தம் காரியம் நடப்பதற்காகக் கூறிய வஞ்சப் புகழ்ச்சியை நம்பி இப்படி ஒரு ஓலையனுப்பினான் அந்த முட்டாள்.

பரம ஏழையான ஒருவனுக்கு நாடகத்தில் அரசனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவன் தன்னை உண்மையான அரசன் என்றெண்ணினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அவன் செயல்.

அந்த தூதன் மேலும் கூறினான்.

அனைத்து உயிரினங்களிடத்தும் வசிப்பவன் நான் ஒருவனே. அனைத்தையும் பரிவு கொண்டு காப்பவனும் நானே. எனவே நீ இனி வாசுதேவன் என்ற பெயரைத் தியாகம் செய்யவேண்டும். உன் ஆயுதங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சரணடையாவிட்டால் போர் நடக்கும் என்று தம் அரசன் கூறியதாகத் தெரிவித்தான்.

அதைக் கேட்டு சபையிலிருந்தவர் அனைவரும் இடி இடியென்று சிரித்தனர். 

பின்னர் கண்ணன் அந்த தூதனிடம்,
நீ உன் அரசனிடம் சென்று இவ்வாறு கூறு. முட்டாளே! நீ சொன்ன ஆயுதங்களை உன் மீதே ஏவுகிறேன். எந்த அறிவிலிகளின் பேச்சைக் கேட்டு உளறுகிறாயோ அவர்கள் மீதும் ஏவுகிறேன். அப்போது  அனைவரும் என்னவாகின்றீர்கள் என்று பார்க்கலாம். என்றான்.

தூதன் சென்று கண்ணன் சொன்னதை அப்படியே கரூஷராஜனிடம் கூறினான்.

சில தினங்கள்‌ கழித்து கண்ணன் தேரிலேறிக் கிளம்பினான். பௌண்ட்ரகன் கண்ணன் போருக்கு வருவதை ஒற்றர் மூலம் அறிந்து இரு அக்ஷௌஹிணிப் படைகளுடன் தன் நகரிலிருந்து புறப்பட்டான். அவனுக்கு உதவ காசியின் அரசனும் மூன்று அக்ஷௌஹிணிப் படையுடன் போருக்கு வந்தான். 

பௌண்ட்ரகன் சங்கு, சக்கரம், வாள், கதை, வில், ஸ்ரீ வத்ஸம் போல் செயற்கையாக ஒரு மச்சம் ஆகியவற்றுடன் தேரிலேறி வருவதைக் கண்ணன் கண்டான். நாடகத்தில் விஷ்ணு வேடம் தரித்தவன்போல் நின்றிருந்த அவனைப் பார்த்து கண்ணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

பௌண்ட்ரகனைச் சேர்ந்த படை, கண்ணனைப் பலவிதமான ஆயுதங்களால் தாக்கியது. அவையனைத்தையும் கண்ணன் உருத்தெரியாமல் அழித்தான். ஐந்து அக்ஷௌஹிணி சேனையும் கண்ணனின் ஆயுதங்களுக்கு முன் நிற்கமுடியாமல் சிதைந்துபோயின. 

தனித்து நின்ற பௌண்ட்ரகனிடம் கண்ணன், நீ அனுப்பிய தூதுச் செய்தியின்படி என் ஆயுதங்களை உன்மீது விடுகிறேன். முடிந்தால் தடுத்துக்கொள். இந்த வேஷத்தை விட்டுவிட்டு ஓடிப்போ. என்று சொன்னான்.

 பௌண்ட்ரகன் சரணடையாமல் ஆயுதத்தை ஏந்தவே, கண்ணன் அவன் தலையை சக்ராயுதத்தால் வெட்டினான்.

காசி‌மன்னனின் தலையை வெட்டி அதைக் காசியில் போய் விழும்படி செய்தான்.

பௌண்ட்ரகன் எப்போதும் பகவானையே எண்ணியிருந்ததால் கர்மவினைகள் அனைத்தும் நீங்கப்பெற்று கண்ணனுடன் இரண்டறக் கலந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment