Wednesday, July 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 504

வாழ்வில் ஒரு முறையேனும் உளமுருகி இறைவனைப் பூஜை செய்தால் அந்த ஜீவன் மீது இறை எல்லையற்ற கருணையைக் கொட்டுகிறது. பாணாசுரன் பரமேஸ்வரனைத் தன் பக்தியாலும்,  சேவையாலும் உள்ளம் குளிரச் செய்துவிட்டான்.

அளவற்ற பலத்தினால் அஹங்காரம் அவனது கண்களை மறைத்தாலும் பரமேஸ்வரன் அவன் மீது கொண்ட கருணையால் இப்போது வந்தார்.

கண்ணன் ஏவிய சக்ராயுதம் பாணனின் கரங்களை வெட்டிக்கொண்டிருந்தது.

பரமேஸ்வரன் கண்ணனிடம் வேண்டினார்.

வேதத்தின் பொருளே! பரம்பொருளே! தூய உள்ளம் படைத்த சான்றோர் கூட தம்மை உள்ளது உள்ளபடி உணர இயலாது. இந்த பாணன் எப்படி உணர்வான் என்பது குறிப்பு.

தங்களது விராட் ஸ்வரூபத்தில் ஒன்றியுள்ள ‌பொருள்தான் என்றாலும் ஜீவனால் தங்களது ஸ்வரூபத்தை அறிய இயலாது. பழத்திற்குள் இருக்கும் புழு பழத்தின் ஸ்வரூபத்தை அறிய இயலாதல்லவா?

ஆகாயம் தங்கள் தொப்புள். அக்னி முகம், ஜலம் வீரியம், ஸ்வர்கம் தலை, திக்குகள் காதுகள், பூமியே திருவடிகள், சூரியனே ‌கண்கள், நான் அஹங்காரம், கடல் வயிறு, இந்திரன் தமது கைகள், செடிகொடிகள் ரோமங்கள், மேகங்களே கூந்தல், ப்ரும்மதேவர் புத்தி, தர்மமே ஹ்ருதயம், இவ்வாறு தோன்றும் விராட்புருஷரே!

தங்களால் படைக்கப்பட்ட அனைத்து தேவர்களும் தங்களின் நியமனத்தால் உலகைக் காப்பாற்றி வருகின்றனர். 

மாயையைக் கொண்டு தாங்களே ‌பலவிதமாகக் காட்சியளிக்கிறீர். தாங்கள் சுத்த ஸத்வவடிவமாவீர். 

சூரியனாலேயே மேகங்கள் உண்டாகின்றன. அவை சூரியனை மறைக்கவும் செய்கின்றன. அதேபோல் தாங்கள் முக்குணங்களால் மறைக்கப்படுகிறீர்கள். 

மாயைக்காட்பட்ட மனிதர்கள் மனைவி மக்கள், வீடு என்று பற்றுக்கொண்டு உழல்கின்றனர்.

தங்களால் அளிக்கப்பட்ட உடலைப் பெற்றும், புலன்களை அடக்காமல், தங்கள் திருவடி தொழாமல் இருப்பவன் வருந்துவான். அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்பவன் ஆவான்.

ப்ரும்மாவும், நானும், மற்ற தேவர்களும், முனிவர்களும் பூரணரான தம்மையே வணங்குகிறோம்.

இந்தப் பாணன். என் பக்தன். தமது தயைக்குரியவன். இவனுக்கு நான் அபயம்‌ அளித்துள்ளேன். ப்ரஹலாதனுக்கு அருள் செய்ததுபோல் இவனுக்கும் அருள வேண்டும். என்றார்.

தன்னை வணங்குபனுக்காக தெய்வம் என்ன வேண்டுமானாலும் செய்கிறது.

கண்ணன் பரமேஸ்வரனிடம், உங்கள் விருப்பமே என் விருப்பமும். ப்ரஹலாதனின் மகனான விரோசனனின் புதல்வன் பலியின் மகன் இந்த பாணன். இவனை நானும் கொல்ல இயலாது. ஏனேனில் ப்ரஹலாதனிடம் அவனது வம்சத்தைக் காப்பதாக வாக்களித்துள்ளேன்.

இவனது அஹங்காரத்தை அடக்கவே கரங்களை வெட்டினேன். பூமிக்கு பாரமாக இருந்த இவனது படைகளையும் அழித்தேன். இவனை நான்கு கரங்களுடன் விடுகிறேன். இவன் இனி எதிலும் பயமின்றி, தங்கள் பரிவாரங்களின் தலைவனாக இருப்பான். என்றான்.

அதன் பின் பாணாசுரன் கண்ணனை வணங்கினான். தன் மகள் ஊஷையை, அநிருத்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். பின்னர் மணமக்களைக் கண்ணனுடன் அனுப்பி வைத்தான்.

# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

குறிப்பு: 

அநிருத்தனுக்கும் ஊஷைக்கும் திருமணம் நடந்த இடம் உஷா மடம், அல்லது உக்கி மடம், குப்தகாசியின் அருகில் உள்ளது. அத்தலத்தைப்  பற்றிய மேலதிக விவரங்களுக்கு 
Guruji Gopalavallidasar அவர்களின் காணொலி உதவும். 

All Pictures courtesy : Guruji Gopalavallidasar

No comments:

Post a Comment