Thursday, July 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 517

அந்தண வேடத்திலிருந்த கண்ணன், அர்ஜுனன், பீமன் மூவரையும் பார்த்து‌ ஜராசந்தன் அந்தணர்களே! நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள். நீங்கள் கேட்பது என் தலையே ஆனாலும் தட்டாமல் தருவேன் என்றான்.
உடனே கண்ணன் பேசத் துவங்கினான். 

அரசே! நாங்கள் உம்மிடம் போரை விரும்பி வந்தோம். நீங்கள் விரும்பினால் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மல்யுத்தம் செய்யம் செய்யலாம். இவன் குந்தியின் மகன் பீமன். இவன் அவனது இளவல் அர்ஜுனன். நான் உமது பகைவனான கண்ணன். என்றான்.

அதைக்கேட்டு உரக்கச் சிரித்த ஜராசந்தன், மூடர்களே! போர் வேண்டுமா போர்? இப்போதே நான் தயார். கண்ணா! நீ ஒரு கோழை. என்னைக் கண்டு பயந்து கடலுக்குள் நகரம் அமைத்து ஓடி ஒளிந்தவன்‌. உன்னுடன் போரிடமாட்டேன். 

அர்ஜுனன் மிகவும் சிறியவன். எனக்கொத்த உடல் பெற்றவன் அல்லன். அவனுடனும் போர் செய்ய மாட்டேன். எனக்கேற்ற வீரன் பீமனே. இவனுடன் போர் செய்வேன்‌. என்று கூறி கண்ணைக் காட்ட, பணியாள் இரண்டு கதைகளை எடுத்துவந்தான். 

ஒன்றை பீமனிடம் கொடுத்த ஜராசந்தன், நகருக்கு வெளியே சென்று போர் புரியலாம். இங்கே போர் செய்தால் தேவையில்லாமல் மக்கள் அஞ்சுவர். என்று கூறிக்கொண்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு கிரிவிரஜத்தின் கோட்டை வாசலுக்கு வெளியே வந்தான்.

மேடுபள்ளமற்ற சமதரையில் இருவரும் மலைகளைப் போல்‌ மோதிக்கொண்டனர். இருபுறமாகவும் சுழன்று சுழன்று பயமின்றி இருவரும் போர் செய்யும் காட்சி கண்களுக்கு விருந்தாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடியின் வேகம் தாங்காமல் கதைகள் சிதறின.

பின்னர் இருவரும் கை முஷ்டிகளால்‌ குத்திக்கொண்டனர். ஒவ்வொரு அடியும் இடிபோல் கேட்டது. இருவரும் சளைக்காமல் சரிசமமாகச் சண்டையிட்டனர். எவ்வளவு சண்டையிட்டபோதும் அவர்களால் ஒருவரை ஒருவர் வெற்றி காண இயலவில்லை. 

அவர்கள் பகல் நேரத்தில் போர் செய்வதும் இரவு நேரத்தில் ஜராசந்தனின் மாளிகையில் தங்கி நண்பர்களாக அன்புடன் பழகுவதுமாக இருந்தனர். இருபத்தேழு நாள்கள் இவ்வாறு ஓடிற்று.

ஒருநாள் பீமன் கண்ணனிடம், கண்ணா! என்னால் ஜராசந்தனைப் போரில் வெல்லமுடியாதன்று தோன்றுகிறது என்றான். கண்ணன் அவனைக் கொல்லும் வழியை யோசித்தான்.

ஜராசந்தனின் பிறவியின் ரகசியம்‌ அறிந்த கண்ணன் அன்றைய மல்யுத்தத்தில் பீமன் பார்க்கும்படியாக ஒரு குச்சியை இரண்டாகப் பிளந்து வெவ்வேறு திசைகளில் தூக்கியெறிந்தான்‌. அதைப் புரிந்துகொண்ட பீமன் ஜராசந்தனின் உடலைக் கிழித்து வெவ்வேறு திசைகளில் வீசியெறிந்தான். அதைக் கண்ட மக்கள் பயந்தனர். கண்ணனும் அர்ஜுனனும் பீமனைக் கட்டியணைத்துப் பாராட்டினர்.

ஜராசந்தனின் மகன் சஹதேவன் ஓடிவந்து கண்ணனைச் சரணடைந்தான். கண்ணன் அவனை மகதத்தின் அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். பின்னர் சிறையிலிருக்கும் அரசர்களை விடுவிக்கக் கோரினான்.

மலைப் பள்ளத்தாக்கில் சிறை வைக்கப்பட்டு அழுக்கடைந்த மேனியுடன் விளங்கிய இருபதாயிரத்து எண்ணூறு அரசர்களும் விடுவிக்கப்பட்டனர். 

கண்ணன் சங்கு, சக்கரம், கதை, தாமரைமலர் ஏந்திக்கொண்டு மார்பில் ஸ்ரீ வத்ஸம், காதுகளில் மகரகுண்டலம், கழுத்தில் கௌஸ்துபமணி, வனமாலை மற்றும் மஞ்சள் பட்டாடையுடன் அழகே உருவாக அவர்களுக்கு காட்சி கொடுத்தான். 

அப்படியே கண்ணனை உண்பவர் போலவும், ருசிப்பவர் போலவும், அணைத்துக் கொள்வது போலவும் அன்பு மிகுந்து அவனைக் கண்டனர் அவ்வரசர்கள்.

பின்னர் கண்னனை வாயாரத் துதித்தனர்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment