Sunday, July 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 520

சேதி நாட்டரசன் தமகோஷனின் மகன் சிசுபாலன். இவனது தாய் வசுதேவரின் சகோதரியாவாள். பிறந்தது முதலே கண்ணனின் மீது காரணமின்றி வெறுப்பு கொண்டிருந்தான் சிசுபாலன்.

காரணம் ஜெய விஜயர்கள் ஸனகாதியரிடம் அபசாரப்பட்டு அசுரப்பிறவிகளாக அவதரித்தனர். மூன்று முறை அசுர ஜென்மா எடுத்து ஒவ்வொரு முறையும் பகவான் கையாலேயே வதமாக வரம் வேண்டியிருந்தனர்.

 முதல் முறை ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபுவாகப் பிறந்து பகவான் அவர்களை வதம் செய்ய வராஹமாகவும், நரஸிம்மராகவும் இரண்டு அவதாரங்கள் செய்தான். அடுத்த முறை இராவண கும்பகர்ணனாக அவதரித்தவர்கள் ஸ்ரீ ராமனின் கரங்களால் மடிந்தனர். இப்போது சிசுபால, தந்தவக்த்ரனாக அவதாரம் செய்திருக்கிறார்கள்.

கண்ணனை ஒவ்வொருவரும் பாராட்டுவதும், அக்ரபூஜை செய்வதும், பாத தீர்த்தம் தெளிப்பதும் சிசுபாலனுக்கு எல்லையற்ற கோபத்தை உண்டாக்கியது. 

அவன் பிறந்தபோதே கண்ணனால் கொல்லப்படுவான் என்பதை அறிந்த கண்ணனின் அத்தை ச்ருதகீர்த்தி (ச்ருதச்ரவா என்றும் அறியப்படுகிறாள்) பிள்ளைப்பாசத்தால் கண்ணனிடம் தன் மகனைக் கொல்லக்கூடாதென்று வேண்டினாள். கண்ணனோ, விதியை மாற்ற இயலாது அத்தை. வேண்டுமானால், இவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுப்பேன். என்று வாக்களித்தான். 

சிசுபாலன் இயற்கையாகவே அசுர ஸ்வபாவம் கொண்டவனாகவே வளர்ந்தான். இப்போது சபை நடுவில் எழுந்து ஆத்திரத்தால் மதிகெட்டுப் போய் கத்தத் துவங்கினான்.

காலம் மிகவும் வலிமை பொருந்தியது என்று வேதம் கூறுவது உண்மையாயிற்று. இவ்வளவு அறிவார்ந்த பெரியவர்கள் இருந்தும் சிறுபிள்ளைத்தனமான பேச்சால் அனைவரும் தடுமாறுகின்றனரே. அனைவரும் அறிவிற்சிறந்தவர்தாமே. கண்ணன் முதல் மரியாதைக்குரியவன் என்று சிறுவனான ஸஹதேவன் கூறினால் அதைப் போய் ஏற்கிறீர்களே. 

தவம், உயர்ந்த சீலம், விரதங்கள் ஆகியவற்றால் ப்ரும்மஞானம் பெற்ற ஞானிகள் இருக்கும் சபையில், திக்பாலர்களும், இந்திரனும் அலங்கரிக்கும் இச்சபையில் இந்த இடையனுக்கென்ன முதல் மரியாதை வேண்டியிருக்கிறது? அதற்கேற்றவனா இவன்? உயர்ந்த வேள்வியின் அவிசை காக்கைக்குப் போடுவார்களா?

 வர்ணாசிரம தர்மத்தையோ, எந்த விதமான வாழ்வியல் தர்மங்களையோ பின்பற்றாமல் கடைமைகள் அனைத்தையும் விட்டு விருப்பம்போல் வாழும் தற்குறி இவன். 

இவனது குலத்தில் ஒருவரும் அரசனாக இயலாதவாறு யயாதியால் சபிக்கப்பட்டவர்கள். ஞானிகளும் ரிஷிகளும் வாழும் இந்நாட்டை விட்டு எதிரிக்கு பயந்து திருடனைப்போல் கடலின் நடுவில் வசிக்கப் புகுந்தவன். 

நரியின் ஊளையைச் சிங்கம் அலட்சியம் செய்வதுபோல் கண்ணன் எதையும் கவனிக்காமல் அமர்ந்திருந்தான். அதைக் கண்டு சிசுபாலனுக்கு இன்னும் கோபம் வந்தது.

இறை நிந்தனையைப் பொறுக்க இயலாத சாதுக்கள் காதுகளைப் பொத்திக்கொண்டு சபையினின்று வெளியேறினர்.

பகவானையும், அவனைச் சரணடைந்த பக்தர்களையும் நிந்திப்பதைக் கேட்டும் அவ்விடம் விட்டு அகலாதவனின் புண்ணியங்கள் அனைத்தும் அக்கணமே அழிகின்றன. 

அப்போது பாண்டவர்களும், மற்ற அரசர்களும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு சிசுபாலனைத் தாக்குவதற்காக எழுந்தனர். சிசுபாலன் தானும் போருக்குத் தயாராகி வாளையும் கேடயத்தையும் எடுத்தான். கண்ணன் அனைவரையும் கையமர்த்தி அடக்கினான். 

பின்னர், தன் சக்ராயுதத்தை ஏவ, அது சிசுபாலனின் சிரத்தை கண்ணிமைக்கும் கணத்தில் கரகரவென அறுத்துத் தள்ளியது. 

சபையில் பெருங்கூச்சலும், குழப்பமும் விளைந்தது. மக்கள் அஞ்சினர். சிசுபாலனுடன் நட்பு கொண்டு வந்த அரசர்கள் அனைவரும் சபையை விட்டுத் துள்ளி ஓடி மறைந்தனர்.

சிசுபாலனின் உடலினின்று ஒரு பேரொளி எழுந்தது. நேராக கண்ணனிடம் வந்து அனைவரும் பார்க்கும்போதே அவனது திருமேனியில் ஐக்கியமாயிற்று.

கண்ணன் கையால் வதம் செய்யப்பட்ட ஜீவன்கள் அனைத்தும் வைகுண்டம் செல்பவை. மேலும் சிசுபாலனாக வந்த ஜெயன் தன் மூன்று அசுரப் பிறவிகள் முடிந்து கைங்கர்யத்திற்காக மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டியவனே.

அப்படியிருக்க அவனது ஆத்மஜோதி கண்ணனின் திருமேனிக்குள் ஐக்கியமானது எனில் வைகுண்டம் உள்பட ஈரேழு பதினான்கு லோகங்களும், கண்ணனின் திருமேனிக்குள் அடக்கம் என்பது இந்நிகழ்வால் உறுதியாகிறது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment