Wednesday, July 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 528

ஐந்து நாள்கள் முன்பு, உய்யும் வழி தேடி மன சஞ்சலத்துடன் வந்த பரீக்ஷித்தையும், இப்போது இறைவனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு தெளிவுடன் பேசும் பரிக்ஷித்தையும் நினைத்துப் பெருமை கொண்டார் ஸ்ரீ சுகர்.

தொடர்ந்து கூறலானார்.

கண்ணனுக்கு குழந்தைப் பருவத்து நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சுதாமா என்பது. அவர் ப்ரும்மஞானியாவார். புலன் இன்பங்களில் நாட்டமற்றவர். காமம், கோபம், பிற பொருள்களில் மயக்கம் ஆகியவை அற்றவர். எப்போதும் கந்தலாடை அணிவதால் குசேலன் என்றழைக்கப் பட்டார். தற்செயலாகக்‌ கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்.

அவருடைய மனைவியும் அவரைப் போன்றே குணநலன்கள் கொண்டு விளங்கினாள். கணவர் தினமும் பிக்ஷை ஏற்றுக்கொண்டு வருவதை குழந்தைகளுக்கும் கணவருக்கும் கொடுத்துவிட்டுத் தான் பட்டினி கிடப்பாள். பசியால் மிகவும் இளைத்த உடலுடைய அவள் க்ஷுத்க்ஷாமா என்றழைக்கப்பட்டாள்.

வரிசையாகச் சில நாள்கள் ஒன்றுமே கிடைக்காததால் குழந்தைகள் பசியால் வாடின. அதைக் கண்டு மனம் பொறாத சுசீலை கணவரிடம் வேண்டினாள்.

அன்பரே! உங்கள் இளமைக்கால நண்பர் கண்ணன் என்று அடிக்கடி சொல்வீரே. அவர் திருமகளின் கணவர். அந்தணர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். அண்டியவரைக் காப்பவர். ஸாக்ஷாத் இறைவனேயாவார். அவரை நண்பராகப் பெற்ற தாங்கள் மிகவும் பாக்யம் செய்தவர். அவரை ஒரு முறை கண்டு வாருங்களேன்‌. அவர் நிறையப் பொருள் தரக்கூடும். இப்போது துவாரகையில் இருக்கிறார் என்று கேள்வியுற்றேன். தன் திருவடியை நினைப்பவர்க்குத் தன்னையே தருபவர். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செல்வம் தந்து விருப்பங்களை நிறைவேறச் செய்பவர். நீங்கள் அவரைப் பார்த்துவிட்டு வரலாமே என்றாள்.

கண்ணனைப் பார்க்க சுதாமாவிற்கு மிகவும் விருப்பம்தான் என்றாலும், பொருளை வேண்டிச் செல்ல விருப்பமில்லை. எனவே சரி சரியென்று சொல்லிக்கொண்டு நாள்களைக் கடத்தி வந்தார். 

பிறகொருநாள் குழந்தைகள் மற்றும் மனைவியின் பசியால் வாடிய முகங்களைப் பார்த்துவிட்டு மனைவியிடம், 

கண்ணன் என் நண்பன் ஆனாலும் பகவான். அவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க ஏதேனும் இருக்கிறதா? இருந்தால் எடுத்து வா என்றார்.

கண்ணனிடம் பொருளை வேண்டாவிட்டாலும் அவனது தரிசனமே நன்மை பயக்கும். போய்ப் பார்த்துவரலாம் என்றெண்ணினார்.

அவள் நல்ல காலம் வந்துவிட்டதென்று எண்ணி மிகவும் மகிழ்ந்து அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று நான்கு வீடுகளிலிருந்து நான்கு பிடி அவலை யாசித்துப் பெற்று வந்தாள். அவை அனைத்தையும் ஒரு துணிக் கிழிசலில் மூட்டையாகக் கட்டி கணவரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்ட குசேலர், நெஞ்சம்‌ முழுவதும் கண்ணனுடன் தான் பழகிய நாள்களை நினைத்துக்கொண்டும், இப்போது துவாரகாதீசனாக, திருமகள் கேள்வனாக விளங்கும் கண்ணனின் தரிசனம் கிட்டுமோ என்று பலவாறு யோசித்துக்கொண்டும் துவாரகையை நோக்கி நடக்கத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment