Monday, July 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 286

ஐம்பது மனைவிகளுடன் ஒரே சமயத்தில் நல்லறம்‌ நடத்தி ஒவ்வொரு மனைவியிடமும் நூறு குழந்தைகள்‌ பெற்றார் சௌபரி.

ஒரு நாள் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தபோது மீன்களின் கணநேர சேர்க்கையால் தான் பெருங்குழியில் வீழ்ந்ததை நினைத்துப் பார்த்தார்.

அவருக்கு பகீரென்றது.
பெரும் தவம் செய்தேன். விரத அனுஷ்டாங்களைத் தவறாமல் செய்து வந்தேன். என் ப்ரும்மதேஜஸ் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. மீன்களின் ஒரு கண உறவால், இப்படி ப்ரும்மதேஜஸ் முற்றிலும் அழிந்துவிட்டதே.

முக்தி இன்பம் வேண்டுமெனில் போகங்களை அறவே அறுக்கவேண்டும். உறவுகளைத் துறக்கவேண்டும். ஐம்புலன்களையும் உள்முகமாகத் திருப்பி இறைவனிடம் செலுத்தவேண்டும். இறையடியார்களின் இணக்கம் வேண்டும். அவ்வாறன்றி தனியொருவனாகத் தவமியற்றியதால் இப்படி விழுந்துவிட்டேனே. முதலில் ஐம்பதானேன். பிறகு ஐயாயிரமாகிவிட்டேன். இப்போது இம்மை மறுமைகளாலாகிய கடலின் கரையை எப்படிக் கடப்பது?
மிகவும் வருந்தினார் சௌபரி.

மேலும் சில காலம் இல்லறத்தில் இருந்தார். குழந்தைகளுக்கான கடைமைகளை முடித்தார்.
பின்னர், வைராக்யம்‌ அடைந்து வானப்பிரஸ்தம் சென்றார். அவர் மீது மிகவும் அன்பு வைத்திருந்த அவரது மனைவிகளும் அவரைத் தொடர்ந்து கானகம் ஏகினர்.

சௌபரி, மனத்தைத் தன்வயத்திலிருத்தி, உடலை வாட்டி வருத்திக் கடுந்தவம் செய்தார்.
தக்ஷிணாக்னி, கார்ஹபத்யம், ஆஹவனீயம் ஆகிய இல்லறத்தானின் (நித்ய அக்னி ஹோத்ரம் செய்யும்போது வளர்க்கப்படுபவை) மூன்று அக்னிகளுடன் தன் யோகாக்னியைச் சேர்த்து பரமாத்மாவுடன் ஐக்கியமானார்.

அமைதியாகக் கொழுந்துவிட்டெரிந்த தீயின் சுடர்கள் எவ்வாறு அதனுடனேயே ஒன்றுகின்றனவோ, அதுபோல் சௌபரியின் மனைவர் அனைவரும் கணவரின் பிரிவைத் தாங்காமல்‌ உடன் கட்டை ஏறினர். அவரோடு இணைந்து அவர் பெற்ற நற்கதியை அவர்களும் அடைந்தனர்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
பரீக்ஷித்! மன்னனான மாந்தாதாவின் புதல்வர்களுள் அம்பரீஷன் மிகவும் உயர்ந்தவன். அவனை மாந்தாதாவின் தந்தை யுவனாச்வன் ஸ்வீகாரமாக எடுத்துக் கொண்டான். அம்பரீஷனின் மகன் யௌவனாச்வன். அவனது மகன் ஹாரீதன்.

யௌவனாச்வ, அம்பரீஷ, ஹாரீதர்கள் மாந்தாதாவின் வம்சத்தின் இடைப்பட்ட கோத்திரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள்.
ஹரித கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கீரஸ, அம்பரீஷ, யௌவனாச்வ என்றும்,
மாந்தாத்ரு, அம்பரீஷ, யௌவனாச்வ என்றும் இரு விதமாக கோத்திர பிரவரங்களைக் கூறுவதுண்டு.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment