Thursday, July 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 300

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறலானார்.
பரீக்ஷித்! இக்ஷ்வாகுவின் மகனான நிமி என்பவன் ஸத்ரம் என்ற வேள்வியைத் துவங்கினான். பின்னர் வஸிஷ்டரிடம் சென்று தனக்கு ரித்விக்காக இருக்கும்படி வேண்டினான்.

வஸிஷ்டரோ இந்திரன் செய்கிற வேள்விக்கு ரித்விக்காக இருக்க ஒப்புக்கொண்டே‌ன். அதை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை பொறுத்திரு என்று கூறினார்.

ஆத்மஞானியான நிமிச் சக்ரவர்த்தி, வாழ்வு நிலையற்றது. ஆகவே காலம் தாழ்த்துவது சரியில்லை என்று நினைத்தான். வஸிஷ்டர் இந்திரனின் யாகத்திற்குச் சென்றதும் நிமி மற்ற ரிஷிகளை வைத்துக்கொண்டு யாகத்தைத் துவங்கினான்.

உண்மையில் குரு பொறுத்திருக்கச் சொன்னால், பொறுத்திருப்பதே நலம். வஸிஷ்டர் போன்ற ஆன்மஞானி பொறு என்று சொன்னபின், வாழ்வின் நிலையாமை பற்றிக் கவலைப்படுவது அரைவேக்காட்டுத்தனம் போன்றது. ஏனெனில், குருவின் வாக்கை மீறிக் காலன் ஒருவனை நெருங்க இயலாது. குரு தன் கருணையாலேயே ஜீவனைக் கரையேற்ற சங்கல்பம் செய்துவிட்டால், காலனின் கணக்கு அங்கேயே முடிந்து விடுகிறது. அதன்பின் குருவின் விருப்பத்தின்படியே சீடனின் வாழ்வு அமைகிறது.

ஆனால், குருவின் அதிருப்தி மீளாத் துயரில் தள்ளிவிடும். அது நிமியின் ஞானத்தையும் அழித்துவிட்டது.

தனக்காகக் காத்திருக்காமல், தன் சொல்லை மீறி யாகம் துவங்கினான் என்று கேள்வியுற்றதும்,
வாழ்வு நிலையற்றது என்ற ஞானம் வந்துவிட்டதோ! எனில், இப்போதே நிமியின் உடல் வீழட்டும் என்று சபித்தார்.

நம்மைப்போலவே இரண்டு கண்கள், இரண்டு கைகள், கால்கள், நம்மைப்போலவே நடக்கிறார், உண்கிறார், மற்ற காரியங்களையும் செய்கிறார். இவரும் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதர் என்று ப்ரும்மஞானியான ஒரு குருவைப் பற்றி எண்ணம் எழுமானால், அதை விடப் பெரிய அஞ்ஞானம் வேறு இல்லை.

ஒரே கிளையில் காகமும், கருடனும் அமரலாம். இரண்டும் பறவைதானே என்றும் நினைக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றாகிவிடுமா? பறக்கத் துவங்கினால் மேகங்களை விடவும் உயரமாகப் பறக்கும் கருடன், அங்கிருந்தே தன் இரையை பூமியில் பார்க்கும். காகமோ ஒரு அளவுக்கு மேல் பறக்க இயலாது.

அதுபோலவே மனித உடல் எடுத்திருந்த போதிலும் ஞானிகளின் அறிவு கால தேசங்கள் என்ற எல்லைகள் அற்றது.

சாதாரண மனிதர்க்கு அடுத்த அறையில் என்ன நிகழ்கிறது என்று கூட அறியமுடியாது. அவனது அறிவை புலன்களின் திறனே வரையறுக்கிறது.

அஞ்ஞானத்தினால் மற்ற மனிதர்கள் போல் பேராசை கொண்டு வஸிஷ்டர் பேசுகிறார் என்று நினைத்த நிமி, வஸிஷ்டருக்கு, தங்களது உடலும் வீழட்டும் என்று பிரதி சாபம் கொடுத்தான்.

இந்த சாபத்தை செயலிழக்கச் செய்யும் தவ வலிமை வஸிஷ்டருக்கில்லையா என்ன? ஆனால், தொண்டு கிழமாகிவிட்ட அவ்வுடலை விட்டு மீண்டும் பலம் கொண்ட புதிய உடல் வேண்டும்.அதற்கு நிமியின் சாபத்தைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று நினைத்த வஸிஷ்டர், அக்கணமே கிழட்டு உடலை விட்டார். பின்னர் மித்ரன், வருணன் ஆகிய தேவர்களின் மூலமாக ஊர்வசியின் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தார்.

நிமியும் தன்னுடலை விட்டான். வேள்விக்கு வந்திருந்த ரித்விக்குகள் நிமியின் உடலைத் தைலத்திலிட்டு வாசனைப் பொருள்களின் உதவியுடன் கெடாமல் பாதுகாத்து வைத்திருந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment