Friday, July 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 287

ஸ்ரீ சுகர் தொடர்ந்து ரகு வம்ச வர்ணனையைக் கூறினார்.
நாகதேவர்கள் தங்கள் தங்கையான நர்மதையை புருகுத்ஸனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.
வாசுகியின் கட்டளைப்படி, நர்மதை புருகுத்ஸனை பாதாளலோகம் அழைத்துச் சென்றாள். அங்கே நாகர்களுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த கந்தர்வர்களை புருகுத்ஸன் கொன்றான். இதனால் மனம் மகிழ்ந்த வாஸுகி, இக்கதையைக் கேட்பவர்க்கு பாம்புகளால் பயமில்லை என்று வரமளித்தான்.

புருகுத்ஸனின் மகன் த்ரஸத்தஸ்யு. அவனது‌மகன் அனரண்யன். அனரண்யனின் மகன் ஹர்யச்வன். இவனது மகன் அருணன். அருணனின் மகன் த்ரிபந்தனன்.

த்ரிபந்தனின் மகன் ஸத்யவிரதன். இவனே திரிசங்கு என்று புகழ்பெற்றவன்.
இவன் தன் உடல் மீது மிகுந்த பற்றுகொண்டு, உடலோடு ஸ்வர்கம் செல்ல விரும்பினான். குலகுருவான வஸிஷ்டரிடம் தன் ஆசையைத் தெரிவித்தபோது
அவர் அவ்வாறு செய்ய இயலாது என்று எடுத்துச் சொன்னார்.

ஸத்யவிரதன் அவரை அலட்சியம் செய்ய, வஸிஷ்டர், ஞானத்தை அடையத் தடையாக இருக்கும் புலன்களால் ஆளப்படும் இவ்வுடலின் மீது இவ்வளவு பற்றா என்று கூறி அழகான உடல் இருப்பதால்தானே இப்படிக் கேட்கிறாய். எனவே சண்டாளனாகு என்று சபித்தார்.

அவன் விஸ்வாமித்திரரை சரணடைய, அவர் தன் தவ வலிமையால் ஸத்யவிரதனை உடலுடன் ஸ்வர்கம் அனுப்பினார்.

ஆனால், தேவர்கள் அதை ஏற்காமல், அவனைப் பிடித்துத் தள்ளினர். அவன் தலைகீழாக விழத் துவங்கினான். விஸ்வாமித்திரர் தவ வலிமையால் அவனை ஆகாயத்திலேயே நிறுத்தி விட்டார். பின்னர் அவனுக்காக அவன் நின்ற இடத்திலேயே தலைகீழாக ஒரு ஸ்வர்கத்தைப் படைத்தார். இதுவே திரிசங்கு ஸ்வர்கம் எனப்படுகிறது.

திரிசங்குவின் புதல்வன் அரிச்சந்திரன்.
அவனுக்காக வஸிஷ்டரும் விஸ்வாமித்திரரும் சண்டை போட்டுக்கொண்டு பறவைகளாக மாறிப் பலகாலம் போர் செய்தனர்.

அரிச்சந்திரனுக்கு மக்கட்செல்வமில்லை. எனவே மிகவும் வருந்தி, நாரதரின் அறிவுரையின் பேரில் வருணனைத் துதித்தான்.

எனக்குப் புதல்வன் பிறக்கட்டும். அவனையே வேள்விப்பசுவாகக் கொண்டு உம்மை ஆராதிப்பேன். என்று வேண்டினான்.

வருணதேவன் அவ்வாறே வரமளிக்க, அரிச்சந்திரனுக்கு ரோஹிதன் என்ற மகன் பிறந்தான்.

குழந்தை பிறந்ததுமே வருணன் அரசன் முன் தோன்றினான். வாக்களித்தபடி யாகத்தைத் துவங்கும்படி கட்டளையிட்டான்.

அரசனோ, பத்து நாள்கள் வரை வேள்விப்பசுவிற்குத் தீட்டு உண்டே. சுத்தமானபின் யாகம் செய்கிறேன் என்றான்.

பத்து தினங்கள் கழித்து மறுபடி வருணன் வந்தபோது பல் முளைத்தால்தானே வேள்விப்பசு சுத்தமாகும் என்றான்.

பல்முளைத்ததும் வருணன் வந்து கேட்டான். நல்ல பற்கள் முளைத்தால்தானே வேள்விக்குத் தகுதி வரும் என்று சொல்ல, வருணன் திரும்பிச் சென்றான்.

நல்ல பற்கள் முளைத்ததும் வந்த வருணனிடம், கவசங்கள் அணிந்து போர்வீரனானால்தானே சுத்தமான வேள்வி ப் பசு வா வான் என்று கேட்டு வருணனைத் திருப்பி அனுப்பிவிட்டான்.

மேலும் பல முறைகள் வருணன் வந்து வந்து கேட்டபோதெல்லாம் புத்திரபாசத்தால் அரிச்சந்திரன் ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக் கழித்தான்.

தன்னை வேள்விப்பசுவாக வைத்ட்கு தந்தை யாகம் செய்யப்போகிறார் என்றறிந்த ரோஹிதன், வில்லேந்திக் கானகம் சென்றுவிட்டான். அதை அறிந்த வருணன் அரிச்சந்திரனுக்கு வாக்குத் தவறியமைக்காக மஹோதரம் என்ற நோயைக் கொடுத்தான்.

தந்தை நோய் வாய்ப்பட்டதை அறிந்த ரோஹிதன், நாடு திரும்ப முயற்சித்தபோதெல்லாம் தேவேந்திரன் மாறுவேடத்தில் சென்று அவனைத் தடுத்துவிட்டான். ஆறு வருடங்கள்‌ காட்டில் வசித்தபின் ஏழாவது வருடம் நாடு திரும்பினான் ரோஹிதன்.

வரும் வழியில் அஹீகர்த்தர் என்ற முனிவரின் மகனான சுனச்சேபனை விலைக்கு வாங்கிவந்தான். தந்தையிடம் சென்று அவனை வேள்விப்பசுவாகக் கொண்டு யாகம் செய்யும்படி வேண்ட, அரிச்சந்திரனும் அவ்வாறே செய்தான்.

இவ்வேள்வியில் ஹோதாவாக விஸ்வாமித்ரரும், ப்ரும்மாவாக வஸிஷ்டரும், அத்வர்யுவாக ஜமதக்னியும், ஸாமகானம் செய்யும் உத்காதாவாக அயாஸ்ய முனிவரும் இருந்து மிகச் சிறப்பாக நடத்தினர்.

அரிச்சந்திரன் அவியுணவால் அனைத்து வருணன் உள்பட தேவர்களையும் மகிழ்வித்தான். மன்னனின் நோய் நீங்கிற்று. தேவேந்திரன் மனம் மகிழ்ந்து அரிச்சந்திரனுக்கு ஒரு பொற்றேரைக் கொடுத்தார்.

அரிச்சந்திரனின் மன உறுதியைப் பலவாறு சோதித்த விஸ்வாமித்திரர் அவனுக்கு ஆத்ம ஞானத்தை வழங்கினார். சுனச்சேபனின் பெருமைகளைப் பின்னர் பார்க்கலாம்.

அரிச்சந்திரன் பெறற்கரிய சிறந்த ஞானத்தைப் பெற்றான். பின்னர் உலகியல் தளைகள் அனைத்தினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தனானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment