Sunday, July 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 289

ஸகரனுடைய இளைய மனைவி கேசினி. அவளது மகன் அஸமஞ்சன். அஸமஞ்சனின் மகன் அம்சுமான்.

முற்பிறவியில் யோகியாக இருந்த அஸமஞ்சன், ஏதோ ஒரு தகாத செய்கையால், யோகநிலை தவறி யோகபிரஷ்டனாகப் பிறந்தான். அவனுக்குத் தன் முற்பிறவியின் நினைவுகள் இருந்தன. அவன் இவ்வுலக விஷயங்களில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனவே, தன்னை ஒரு பைத்தியக்காரன் போல் காட்டிக்கொண்டு ஏறுமாறான செயல்களைச் செய்து வந்தான்.

ஒருமுறை விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஸரயு நதியில் தூக்கிப்போட்டான். அவனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

அவன் தீயவன் என்றெண்ணி ஸகரன், அவன்பால் இருந்த பாசத்தைத் துறந்து, அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட்டான்.

அஸமஞ்சன் நாட்டைவிட்டுப் போகும் முன் தான் நதிக்குள் போட்ட குழந்தைகளைத் தன் யோக மகிமையால் உயிருடன் மீட்டுக் கொடுத்துவிட்டு பற்றற்றவனாக நாட்டை விட்டு கம்பீரமாகப் புறப்பட்டான்.

தங்கள் குழந்தைகள் மீண்டு வந்ததைக் கண்டு மக்கள் அஸமஞ்சனைப் போற்றினர். அவனது பெருமை அறியாமல் நாட்டை விட்டுத் துரத்தியதற்காக ஸகரன் மிகவும் வருந்தினான். எவ்வளவு முயற்சி செய்தபோதும், அஸமஞ்சனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அம்சுமான் தாத்தாவான ஸகரனின் கட்டளையை சிரமேற்கொண்டு ஒழுகினான்.
வேள்விக் குதிரையையும், அதைத் தேடிச் சென்ற தன் மகன்களையும் கண்டுபிடிக்கும்படி ஸகரன் அம்சுமானுக்குக் கட்டளையிட்டான்.

அம்சுமான் தன் சிற்றப்பாக்களையும் குதிரையையும் தேடும்போது அவர்கள் சென்ற வழியைக் கண்டுபிடித்தான். அவ்வழியே சென்று ஸமுத்திரக்கரையைத் தாண்டி, மலைபோன்ற சாம்பற்குவியலையும், அதன் அருகில் வேள்விக் குதிரையையும் கண்டான்.

அக்குவியல் தன் சிற்றப்பாக்களின் சாம்பற்குவியலே என்றுணர்ந்து வருந்தினான். பின்னர் சற்றுத் தொலைவில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

தன் புண்ணிய பலத்தால், அவர்தான் கபில பகவான் என்பதை உணர்ந்தான்.
மனத்தை ஒருமுகப்படுத்தி, இருகைகளையும் கூப்பி, அவரை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

பகவானே! தாங்கள் ப்ரும்மாவினும் பெரியவர். தங்களை தியானத்தினால்கூட காணமுடியாமல், அஞ்ஞானியான ஜீவன்கள் தவிக்கின்றனர். அப்படியிருக்க, கீழோனான எனக்கு நேரில் காட்சியளிக்கிறீர்.

இப்பிரபஞ்சத்தில் உள்ளவர் அனைவரும் முக்குணக் கலவையால் பாதிக்கப்பட்டவர்கள். குணங்களின் அடிமைகள். மாயையில் மயங்குபவர்கள்.

ஹ்ருதயத்தில் அந்தர்யாமியாக விளங்கும் தங்களை சாமான்ய ஜீவனால்‌ காண இயலாது. மாயையினால் அறிவிழந்து நிற்கும் எனக்கு அருளுங்கள்.

தங்களுக்குப் பெயரோ, மேனியோ கிடையாது. ஆனால், லீலையாக ப்ரும்மா, விஷ்ணு, சிவன் என்ற ரூபங்களையும், பெயர்களையும் தாங்குகிறீர்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை இறையே! இப்பிரபஞ்சம் தங்கள் மாயையின் கலைக்கூடம்.

மாயையினால் உறுதியாகக் கட்டப்பட்டிருந்த என் வினைகள் அனைத்தும் தங்கள் தரிசனத்தால் இன்று அறுபட்டன.
என்று பலவாறு துதித்தான் அம்சுமான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment