Sunday, July 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 294

ஸ்ரீ சுகர் கூறலானார்.
பரீக்ஷித்!
கட்வாங்கனைப் பற்றி முன்னமே பார்த்தோம். அவர் தேவாசுர யுத்தத்தில் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பங்குபெற்றார். அசுரர்களைக் கொன்று குவித்து, தேவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். அவரிடம் வேண்டும் வரத்தைப் பெறுக என்று தேவேந்திரன் கூறியபோது, கட்வாங்கர் முக்தியின்பம் வேண்டும் என்றார். என்னால் அதைக் கொடுக்க இயலாது.

வேறு வரம் கேளுங்கள் என்று கூற, கட்வாங்கன் தனக்கு இன்னும் எவ்வளவு ஆயுள் உள்ளதென்று பார்த்துச் சொல்லுங்கள் என்றான். ஒரு முஹூர்த்த காலமே உள்ளதென்று இந்திரன் கூற, கட்வாங்கன், தன் மனத்தை முழுவதும் இறைவனிடம் செலுத்தி, உண்மையான ஆத்மானுபூதியை அடைந்தான். ஸ்ரீ மன் நாராயணன் மீது ஏற்கனவே அளவற்ற பக்தி கொண்டு அவரது கருணைக்கு ஆட்பட்டிருந்ததாலேயே கட்வாங்கனுக்கு தன் இறுதிக்காலத்தில் இத்தகைய விஷயம் சாத்தியமாயிற்று.

கட்வாங்கனின் மகன் தீர்கபாகு. அவனது மகன் மிகவும் புகழ் வாய்ந்த ரகு ஆவான். அவனது மகன் அஜன். அஜனின் மகன் தசரதன்.

தேவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க பகவான், ஸ்ரீ ராமன் என்ற பூர்ணாவதாரமாகவும், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அம்சாவதாரங்களாகவும் தோன்றினார்.

சீதை தன் மென்மையான கரங்களால் பிடித்துவிட்டால் கூடச் சிவந்து போகும் தாமரைப் பாதங்களை வைத்துக்கொண்டு, தந்தையின் சொல் காப்பதற்காக வனங்களில் அலைந்தார் ஸ்ரீ ராமன்.‌ சூர்ப்பனகையின் அடாத செயல் பொறாமல், அவளது காதுகளையும், மூக்கையும் லக்ஷ்மணன் அறுத்துவிட, அதன் பயனாக சீதையைப் பிரிந்து துயருற்றார். பின்னர் சமுத்திரத்தின் நடுவில் பாலம் கட்டி, அதன் மூலம்‌ இலங்கையை அடைந்து ராவணனையும், அவனைச் சார்ந்த அசுரர்களையும் கொன்றார்.

விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காத்த அழகுதான் என்ன? சீதைக்காக வில்லொடித்த அழகுதான் என்ன? குட்டியானை கரும்பை ஒடிப்பதுபோல் விளையாட்டாக வில்லை ஒடித்தாரே.

அகலகில்லேன் இமைப்பொழுதும் என்று பகவானை விட்டு கணப்பொழுதும் பிரியாத மஹாலக்ஷ்மியே சீதை என்னும் திருப்பெயருடன் ஜனகரின் மகளாகப் பிறந்தாள். ஸ்ரீ ராமனுக்கு சமமான மேனியழகும், இளமையும் கொண்டு பிறந்தாள் சீதை.

பின்னர் பரசுராமரின் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்து, அவரிடமிருந்த சிவதனுசை முறித்து, விஷ்ணு அம்சத்தைத் தனக்குள் வாங்கிக் கொண்டார்.

முதலில் நான்கே ஸ்லோகங்களில் மிகவும் சுருக்கமாக ராமனின் கதையைக் கூறிய ஸ்ரீ சுகர், பின்னர் பகவானின் கதையை விட்டு வெளியே வர மனமின்றி அதனுள்ளேயே மூழ்கிப்போனார்.

முக்கியமான நிகழ்வுகளை மட்டும் சற்று விளக்கமாக இரண்டு அத்யாயங்களில் கூறுகிறார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment