Tuesday, June 16, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 492

கண்ணனின் அத்தை ச்ருதகீர்த்தி என்பவள் கேகய தேசத்து அரசனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அவளது மகள் பத்ராவை அவர்களே விரும்பி கண்ணனுக்குத் திருமணம் செய்துகொடுத்தனர்.

மத்ர தேசத்து இளவரசி லக்ஷ்மணாவை ஸ்வயம்வரத்தில் மணந்து பகையரசர்கள் அனைவரையும் வென்று அழைத்து வந்தான் கண்ணன்.

நரகாசுரனைக் கொன்று அவனது சிறையிலிருந்த ஆயிரக் கணக்கான இளவரசிகளை மணந்தான்.
 
பரீக்ஷித் இடைமறித்தான்.

நரகாசுரன் யார்? அவன் ஏன் இளவரசிகளைச் சிறைப் பிடித்தான்? கண்ணன் எவ்வாறு நரகாசுரனைக் கொன்றான்?

ஸ்ரீ சுகர் பரீக்‌ஷித்தின் ஆர்வத்தைப் பாராட்டினார். பின்னர் தொடர்ந்து கூறலானார்.

நரகாசுரன் பூமாதேவியின் புதல்வனாவான்.
ஹிரண்யாக்ஷன் பூமியைத் தூக்கிச் சென்று ஆவரண ஜலத்தில் ஒளித்துவைத்தான். அப்போது தான் படைக்கும் உயிர்கள் வாழ இடமில்லாமல் தவிப்பதைக் கண்டு ப்ரும்மா பகவானிடம்‌ முறையிட்டார். ப்ரும்மாவின் மூக்கிலிருந்து இரண்டங்குல அளவில் வெளிப்பட்ட வராஹ  பகவான் விஸ்வரூபம் எடுத்தார். பின்னர் பூமியைத் தேடிச் சென்று மீட்டார். அவ்வயம் தன்னுடன் சண்டைக்கு வந்த ஹிரண்யாக்ஷனை ஒரே அறையில் கொன்றார் வராஹ பகவான். தன்னை மீட்ட பகவானையே பூமிதேவி மணந்தாள். பகவான் அசுரனைக் கொன்ற உக்ரத்தில் இருந்த சமயம் பிறந்த குழந்தையானதால் நரகன் அசுரனாகிப்போனான். அவன் அசுரனானதால் சுபாவத்திலேயே பிறருக்குத் துன்பம் தருபவனாக இருந்தான். அவனுக்குத் தன்னைத்தவிர வேறெவராலும் மரணம் நிகழக்கூடாதென்று  பூமாதேவி பகவானிடம் வேண்டினாள். 

இப்போது பூமாதேவியின் அம்சமாக  ஸத்யபாமா அவதாரம் செய்திருக்கிறாள். ஆனால் தன்னிலை உணராமல் இருந்தாள். 

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தவம் செய்து பெரும் வலிமை பெற்றான். 
தவம்‌ முடித்து வந்த நரகாசுரன் பெருவலிமை பெற்று தேவர்களைத் தொந்தரவு செய்தான். வருணனின் குடை, தேவேந்திரனின் தாயான அதிதி தேவியின் குண்டலங்கள், தேவர்களுடைய மணிபர்வதம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டுவந்தான். மேலும், அப்போது பூமியில் இருந்த அத்தனை இளவரசிகளையும் சிறையெடுத்து வந்து அடைத்துவைத்தான்.

இதன் நடுவில் நாரதர் ஒரு பாரிஜாத புஷ்பத்தைக் கொண்டு வந்து கண்ணனிடம் கொடுத்தார். பகவான் அப்போது ருக்மிணியின் பவனத்தில் இருந்ததால் அவளிடம் கொடுத்தார். அதைக் கேள்விப்பட்ட பாமா, தனக்கும் மலர் வேண்டுமென்று கேட்க, உனக்கு பாரிஜாத மரத்தையே தருகிறேன் என்று வாக்களித்தான் கண்ணன்.

தாயின் குண்டலங்களை அசுரன் பறித்துச் சென்றது தேவேந்திரனுக்கு இழுக்கானதால், அவன் நரகாசுரனை எதிர்க்க பயந்தான். பகவான் இப்போது அவதாரம் செய்திருப்பதால் நேராகவே முறையிடலாம் என்று கண்ணனிடம்‌  வந்தான் இந்திரன். இந்திரன் வந்த சமயம் கண்ணன் பாமாவின் பவனத்தில் இருந்தான்.

கண்ணன் ஒரே சமயத்தில்‌ எல்லா வேலைகளையும் முடிக்க எண்ணி, ஸத்யபாமாவை அழைத்துக்கொண்டு கருடன் மீதேறி பாரிஜாத மரத்திற்காக இந்திரலோகம் கிளம்பினான். அப்படியே வழியில்  நரகாசுரனின் கோட்டையான ப்ராக்ஜோதிஷபுரத்திற்குள் நுழைந்துவிட்டான்.

அந்த நகரம் மலை, ஆயுதம், நீர், வாயு, நெருப்பு, முரன் என்ற அசுரனின் வலை ஆகிய ஆறு அரண்களைக் கொண்டது.

கண்ணன் மலையரணை கதையால் தகர்த்தான். ஆயுத அரணைத் தன் பாணங்களால் தவிடு பொடியாக்கினான்.
நெருப்பு, நீர், வாயு ஆகிய அரண்களை சுதர்சன சக்கரத்தால் சிதறடித்தான். முரனின் வலையை வாள் கொண்டு அறுத்தான்.

பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தால் அங்கிருந்த காவல் இயந்திரங்கள் செயலற்றுப்போயின. காவலர்களின் இதயங்கள் சங்கொலியாலேயே பிளந்துபோயின.

பாஞ்சஜன்யத்தின் ஒலி கேட்டு ஐந்துதலைகள் கொண்ட முரன் வந்தான். பார்க்கவே பயங்கரமாக இருந்த அவன் சூலத்தை எடுத்துக்கொண்டு கருடனைத் தாக்கவந்தான்.

கருடனை நோக்கி வந்த சூலத்தை பகவான் மூன்று துண்டுகளாக உடைத்துப் போட்டான். முரன் மறுபடி கதையை வீச, அதையும் பகவான் தன் பாணத்தால் உடைத்தான். நிராயுதபாணியான முரன் தானே கண்ணனை நோக்கி தாக்குவதற்காக ஓடிவந்தான். அவனது ஐந்து தலைகளையும் சக்ராயுதத்தால் வெட்டினான் கண்ணன். வானோர் பூமாரி பெய்து  வாழ்த்தினர். முரஹரி என்ற திருநாமம் பெற்றான் நம் இறைவன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment