Monday, June 15, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 491

அவந்தி நாட்டு இளவரசி மித்ரவிந்தையின் சுயம்வரத்தில் பங்கேற்க கண்ணனுக்கு அழைப்பு வந்தது. சுயம்வரத்தில் மித்ரவிந்தா கண்ணனுக்கு மாலையிடச் சென்றாள்.

அப்போது அவளது சகோதரர்கள் விந்தனும் அனுவிந்தனும் அவளைத் தடுத்தனர். அவர்கள் இருவரும் துரியோதனனின் நண்பர்கள். தன் நண்பனுக்கு மாலையிடச் சொல்லி அவளை வற்புறுத்தினர். அதைக் கண்ட கண்ணன் அவர்கள் அனைவரையும் அடக்கிவிட்டு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மித்ரவிந்தாவை அழைத்துக்கொண்டு துவாரகை வந்தான். 

கோசல நாட்டின் அரசன் நக்னஜித் என்பவன். அவன் மகள் ஸத்யா. கோசலத்தின் தலைநகரம் அயோத்தி. முந்தைய அவதாரத்தில்‌ அங்கு பிறந்த இறைவனுக்கு இந்த அவதாரத்தில் அயோத்தி மாமனார் வீடாயிற்று. 

அயோத்தி நகரின் மற்றொரு பெயர் ஸத்யா என்பதாகும். பழனி போன்ற ஊர்களின் பெயர்களை அவ்வூரில்‌ பிறக்கும் குழந்தைகளுக்கு வைப்பதுபோல் ஸத்ய‌நகரத்தின் இளவரசியின் பெயரும் ஸத்யா என்பதாயிற்று. அவ்வூரில் தந்தையின்  ஸத்யத்தைக் காப்பாற்றிய ராமன் அவதரித்ததால் இன்னும் பெருமை சேர்ந்தது.

இந்த ஸத்யா என்பவள்  நீளாதேவியின் அம்சமாவாள். ராதையாகப் பிறந்து ப்ருந்தாவனத்தில் கண்ணனுடன் விளையாடினாள். அங்கு கண்ணனை காந்தர்வ விவாஹம்‌செய்துகொண்டாள். அவ்விவரம் ப்ரும்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. இருப்பினும் அவளால் தொடர்ந்து மதுரா வந்து கண்ணனுடன் வாழ இயலவில்லை. கண்ணனைப் பிரிய மனமில்லாததால் மீண்டும் ஸத்யாவாக அவதாரம் செய்து கண்ணனை மணந்தாள்.

நக்னஜித் கூரான கொம்புகளை உடைய குட்டி யானைகளைப் போல் விளங்கும் ஏழு காளைகளை வளர்த்துவந்தான். அக்காளைகளை அடக்குபவர்க்கு ஸத்யாவை மணம் முடித்துக்கொடுப்பதாய் அறிவித்திருந்தான். காளைகளைப் பார்த்ததுமே மயங்கி விழுந்தவர் பலர். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட கண்ணன் பெரிய சேனையுடன் அயோத்தி சென்றான்.

அவனை அன்புடன் எதிர்கொண்டழைத்தான் நக்னஜித். கண்ணனைக் கண்டதுமே காதல் கொண்டாள் ஸத்யா. ஸர்வேஸ்வரனான பகவான் திருவுருவெடுத்து புவியில் ‌கால் பதித்து நடக்கும்போது அவரை விட்டு வேறொருவரை மணக்க நினைப்பார்களா?

கண்ணன் ஸத்யாவை மணம் முடிக்க விரும்புவதாகக் கூற, நக்னஜித் காளைகளைப் பற்றிக் கூறினான். 

என் மகளுக்கு பலம் பொருந்திய வீரன் வரனை விரும்பிய நான் ஒரு பந்தயம் வைத்துள்ளேன். இந்த ஏழு காளைகளும் மிகவும் பலம் பொருந்தியவை.

இவைகளை இதுவரை எவராலும் பிடிக்க முடியவில்லை. அப்படி முயல்பவர்கள் குடல் கிழிபட்டு மரணமெய்தினர்.
இவைகளை அடக்குபவர்க்கே என் மகளை மணம் முடிப்பதாய் சங்கல்பம் செய்திருக்கிறேன் என்றான்.

அதைக் கேட்ட கண்ணன் தன்னை ஏழு உருவங்களாக்கிக் கொண்டான். ஒரே சமயத்தில் ஏழு காளைகளையும் எதிர்கொண்டான். மிக எளிதில் அவற்றை அடக்கி கயிற்றால் கட்டி மரபொம்மையை இழுத்து வருவதுபோல் வந்தான்.

மிகுந்த மகிழ்ச்சியுற்ற நக்னஜித் அனைத்து விதமான சீர் வரிசைகளுடனும் தன் மகளைக் கண்ணனுக்குக் கன்னிகாதானம்‌ செய்து கொடுத்தான். தனக்கு எல்லா வகையிலும் ஈடான ஸத்யாவை அழைத்துக்கொண்டு நகரம்‌ திரும்புகையில் ஏற்கனவே எருதுப் பந்தயத்தில் தோற்ற மற்ற அரசர்கள் கண்ணனை வழி மறித்தனர்.

கண்ணன் சார்பாக அர்ஜுனன் தன் காண்டீபத்தால் அவர்கள் அனைவரையும் முறியடித்தான்.

ஸத்யாவை அழைத்துக்கொண்டு துவாரகை வந்த கண்ணன் ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ்ந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment