Tuesday, June 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 480

கண்ணனின் புகழ் அகிலமெங்கும் பரவியிருந்தது. அவன் வந்திருப்பதைக் கேள்வியுற்ற விதர்ப்ப தேசத்து மக்கள் போய் போய் அவனது தரிசனத்தைப் பெற்று மகிழ்ந்தனர். 

ஆஹா! இவனல்லவோ நமது கண்மணி ருக்மிணிக்கேற்றவன். போயும் போயும் அசுரனைப்போல் இருக்கும் சிசுபாலனுக்கு ருக்மிணியைக் கொடுப்பார்களா? இந்தக் கண்ணனையே நமது இளவரசி ருக்மிணி திருமணம் செய்துகொள்ள இறைவன் அருள் புரியட்டும்‌. 

என்று பேசிக்கொண்டனர்.
மக்கள் அரசல் புரசலாகப் பேசுவதைக் கேட்ட ருக்மிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. தந்தையிடம் சென்று அந்த இடையனுக்கெதற்கு அழைப்பு விடுத்தீர்கள் என்று சண்டையிட்டான். கட்டுக்காவலை மேலும் பலப்படுத்தினான்.

விண்ணிலிருந்து இறங்கி வந்த தேவதை போல் அலங்கரிக்கப்பட்டிருந்த ருக்மிணி சுமங்கலிகள், தாய்மார்கள், தோழிகள் ஆகியோர் புடைசூழ அம்பிகையின் கோவிலுக்குக் கிளம்பினாள். நான்கு புறமும் காவலர் அணிவகுத்துச் சென்றனர்.

அரண்மனையிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்றனர்.

வழியெங்கும் ம்ருதங்கம், துந்துபி, பேரிகை முதலிய வாத்யங்கள் முழங்கின.

ஆயிரக்கணக்கான மகளிர் சீர்வரிசைகளை ஏந்தி முன்னால் சென்றனர்.

பாடகர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள் ஆகியோரும் முன்னால் நடந்தனர்.

ஆலயத்திற்குச் சென்றதும் ருக்மிணி கை கால்களை சுத்தம்‌ செய்துகொண்டு ஆசமனம் செய்து அம்பிகையை தியானம்‌ செய்தாள். அருகில் சென்று பூஜைகள் செய்தாள்.

அம்மா! கணேசன் மற்றும் குமரன் ஆகியோர் சூழ பரமேஸ்வரனுடன் மகிழ்ச்சியாக விளங்கும் மங்கள வடிவினளே! உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். நான் பகவான் கண்ணனை மணந்து உன்னைப்போலவே மகிழ்ச்சியாய் விளங்க அருள் செய்வாயம்மா. என்று வேண்டினாள்.

அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, சந்தனம், அக்ஷதை, மாலைகள், புஷ்பங்கள், பட்டாடைகள், தூப தீபங்கள் அனைத்தும் ஸமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர் சுமங்கலிகள் அனைவரையும் அம்பிகையாக பாவித்து அம்பிகைக்கு எவ்வாறு பூஜை செய்தாளோ அதேபோன்ற பூஜையை அவர்களுக்குத் தனித்தனியாகச் செய்தாள் ருக்மிணி. உப்பு, அப்பம், தாம்பூலம், திருமாங்கல்யச் சரடு, பழங்கள், கரும்பு ஆகியவற்றைக் கொடுத்தாள்.
அனைவரும் மனதார ருக்மிணியை ஆசீர்வாதம் செய்தனர்.

இவ்வளவு நேரமாக மௌனமாக இருந்த ருக்மிணி, பூஜைகள் முடிந்ததும் மௌனத்தைக் கலைத்து தோழிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே ஆலயத்தை விட்டு வெளியில் வந்தாள்.

அவளது அழகு பகவானின் மாயைபோல் அத்தனை பேரையும் மயங்கச் செய்தது. வீரர்கள் சிலைபோல் நின்றனர். கண்ணனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ருக்மிணி, அவன் வந்துவிட்டானா என்பதைப் பார்ப்பதற்காக ஜாடையாக நெற்றியில் விழுந்த கூந்தல் சுருளை விலக்கி நிமிர்ந்தாள். அவளது மான்விழிப் பார்வை எங்கு சென்றதோ அங்கே கண்ணன் நின்றிருந்தான். 
ருக்மிணி தன்னைப் பார்த்ததும், கண்ணன் வேகமாக அவளருகே வந்தான். மலர்க்கரம் பிடித்தான். மின்னலைப்போல் தேரிலேற்றிக் கொண்டான். காற்றாய்ப் பறந்துவிட்டான்.

கண்ணனின் அழகையும் ருக்மிணியின் அழகையும் பார்த்துக்கொண்டிருந்தனர் அத்தனை வீரர்களும். ஆஹா அருமையான ஜோடி என்று நினைத்தனரே தவிர, ஒருவராவது மணப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போகிறான் என்பதை உணரவே இல்லை.

சற்று நேரத்தில் அங்கே வந்து சேர்ந்த ருக்மி ருக்மிணியைக் காணாமல் ஒரு கர்ஜனை செய்தான். அதன் பின்னரே அத்தனை பேருக்கும் சுய நினைவு வந்தது. ருக்மிணி கண்ணனால் கடத்தப்பட்டாள் என்பதும் புரிந்தது.

மூடர்களே! வேடிக்கை பார்க்கவா காவல் வைத்தேன்? துரத்திப் பிடியுங்கள் அவர்களை என்று கத்திக்கொண்டு ருக்மி கண்ணன் சென்ற வழியில் தேரை வேகமாகச் செலுத்தினான். ஆயிரக்கணக்கான வீரர்கள் பின்தொடர்ந்து ஓடினர்.

ஜராசந்தன் முதலியவர்களின் தலையில் இடி விழுந்தாற்போலாயிற்று. கண்ணனை ஜெயித்துவிட்டதாகப் பறை சாற்றிக்கொண்டாலும், அவன் பதினேழு முறை தோற்று‌ நிராயுதபாணியாய் அவமானப்பட்டுத் திரும்பியவனாயிற்றே. படைகள் முழுவதையும் கண்ணனிடம் போரிட அனுப்பிவிட்டு தோழனான சிசுபாலனைத் தேற்றினான் ஜராசந்தன்.

பறக்கும் தேரின் வேகத்தைத் தாங்க இயலாமல் ருக்மிணி நடுங்க, விழாமலிருப்பதற்காக அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் கண்ணன். 

ஊரின் எல்லையைத் தாண்டிய சமவெளி வந்ததும் அங்கே தேரை நிறுத்தினான்.
பலராமனும் கண்ணனும் பெரும்படையுடன் தொடர்ந்து வரும் சேனைக்காகக் காத்திருந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment