Saturday, June 13, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 489

குதிரையில் ஏறித் தப்பிச்சென்ற சததன்வாவைக் கண்ணன் கருடக்கொடி பூட்டிய தேரில் துரத்திச் சென்று பிடித்து சக்ராயுதத்தால் கொன்றான். பின்னர் அவனிடம் தேடியதில் மணி கிடைக்கவில்லை. 

மணி‌ இல்லாமல் வெறும் கையுடன் திரும்பிய கண்ணனை பலராமன் நம்பவில்லை. 

நீ‌ இந்த விஷயத்தை விசாரித்து வை. நான் மிதிலைக்குச் சென்று என் நண்பர் ஜனகரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிக் கிளம்பிச் சென்று விட்டான். (சீதையின் தந்தையா, அல்லது அதே வம்சாவளியில் வந்த மன்னரா என்பது தெளிவில்லை)

மிதிலை மன்னர் பலராமனைக் கண்டதும் உடனே எழுந்து ஓடோடிச் சென்று வரவேற்றார். அவரது அன்பான உபசரிப்பினால் அங்கேயே சிலகாலம் தங்கினான் பலராமன். துரியோதனன் அவ்வமயம் மிதிலைக்கு வந்து கண்ணனுக்குத் தெரியாமல் பலராமனிடம் கதாயுத்தம் பயின்று சென்றான். 

துவாரகைக்குத் திரும்பிய கண்ணன், சததன்வாவிடம் ஸ்யமந்தகமணி இல்லை. அவன் யாரிடமோ ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறான்‌.
என்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் ருக்மிணியிடமும் சத்யபாமாவிடமும் கூறினான்.

பின்னர் இவ்வளவு நாள்களாக எண்ணெய்க் கொப்பறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சத்ராஜித்தின் உடலை எடுத்து உறவினர்களைக் கொண்டு ஈமக்கிரியைகளைச் செய்துமுடித்தான் கண்ணன்.

சததன்வா கண்ணனால் கொல்லப்பட்டதைக் கேள்வியுற்ற க்ருதவர்மாவும் அக்ரூரரும் பயந்துபோய்த் தலைமறைவாகிவிட்டனர்.

துவாரகையில் சில துர்நிமித்தங்கள் ஏற்படலாயின. அவற்றை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, கண்ணன் இருக்கும் இடமான துவாரகைக்கு துன்பங்கள் நேர வாய்ப்பில்லை.

நிகழ்வுகளை உற்றுக் கவனித்த கண்ணன் காசியில் பஞ்சம் நீங்கி மழை நன்றாகப் பொழிவதையும் நகரம் சுபிக்ஷமாக மாறிவருவதையும் கண்டான்.

ஒரு சமயம் காசியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அக்ரூரரின் தந்தையான ச்வபல்கர் காசிக்கு வந்தார். அவர் ஊரில் எல்லையில் கால் வைத்ததும் மழை பொழியலாயிற்று. அவரைத் தன் நாட்டிலேயே இருத்திக்கொள்வதற்காகவும் நாட்டு மக்கள் நலமுடன் வாழவும் தன் மகள் காந்தினியை ச்வபல்கருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் காசியின் அரசன். காந்தினியின் மகனான அக்ரூரருக்கும் தந்தையின் பெருமை இருந்தது. அக்ரூரர் வசிக்கும் நகரம் எப்போதும் மாதம்‌ மும்மாரி பொழிந்து பஞ்சமின்றி சுபிக்ஷமாக இருக்கும். 

காசியின் திடீர் செழிப்பைக் கண்ட கண்ணன் ஒற்றர்களை அனுப்பி அக்ரூரர் அங்கிருக்கிறாரா என்று பார்த்துவரச் செய்தான்.

அக்ரூரர் இயல்பாகவே கண்ணனிடம்‌ மாறாத பக்தி கொண்டவர்தான். ஏதோ அசூயையினால் நண்பனான சததன்வாவைத் தூண்டிவிட்டாரே தவிர, கண்ணன் இறைவன் அவனை ஏமாற்ற‌முடியாதென்பதை உணர்ந்து விட்டார். இப்போது கண்ணன் முன்னால் போய் நிற்பதற்கு அவருக்கு அவமானமாகவும் பயமாகவும் இருந்தது. 

காசியில் நியமங்களுடன் கூடிய தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். நாள்தோறும் ஸ்யமந்தகமணியை முறைப்படி பூஜை செய்தார். தூய்மையான உள்ளத்தோடு பூஜிப்பவர்க்கு ஸ்யமந்தகமணி அனைத்து செல்வங்களையும் நலன்களையும் வாரி வழங்கக்கூடியது. தினந்தோறும் ஸ்யமந்தகமணி தரும் எட்டு பாரம் தங்கத்தையும் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் தானம் செய்தார் அக்ரூரர்.

ஒற்றர் மூலமாக அத்தனை விவரங்களையும் அறிந்த கண்ணன் அக்ரூரரை துவாரகைக்கு வருமாறு தூதுச் செய்தி அனுப்பினான்.

கண்ணனின் ஆணையைத் தட்டமுடியாமல் துவாரகைக்கு வந்தார் அக்ரூரர். அவரை நன்முறையில் வரவேற்று உபசரித்தான் கண்ணன்.

பின்னர் அவரிடம்‌ கூறினான். 

சிற்றப்பா! தினமும் எட்டு பாரம் தங்கமளிக்கும் ஸ்யமந்தகத்தை சததன்வா உங்களிடம் கொடுத்தான் என்பதையும், அதை நீங்கள்‌ பூஜித்து வருவதும் எனக்குத் தெரியும் என்றான்.

அக்ரூரருக்கு வியர்த்துக் கொட்டியது. கண்களில் நீர் பெருகின.

கண்ணன் மேலும் பேசலானான். 

அந்த ஸ்யமந்தகமணி என் மாமனாரான சத்ராஜித்துக்கு சூரியதேவனால் கொடுக்கப்பட்டது. அது அவருக்கே உரியது. ஒருவர் இறந்தபின் அவரது சொத்துகள் அனைத்தும் வாரிசுகளைச் சாரும். அவருக்கு மகன் இல்லாததால் மகன் ஸ்தானத்திலிருந்து அவரது இறுதிக் கடைமைகளை நான் ஆற்றியிருக்கிறேன். அவர் மூலமாக எனக்கு வந்த அத்தனை சொத்துக்களையும் உறவினர்கட்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். அவரது உரிமைப்பொருளான ஸ்யமந்தகமணி எனக்கு வேண்டாம். மற்றவர்களால் அதன் சக்தியைத் தாங்கவும் இயலாது. பல்வேறு விரதங்களையும் அனுஷ்டானங்களையும் பின்பற்றிவரும் தாங்களே ஸ்யமந்தகத்தைப் பூஜிக்கத் தகுதியானவர். எனவே அது தங்களிடமே இருக்கட்டும். ஆனால், இவ்விஷயத்தில் என் அண்ணன் பலராமனே என்னை நம்ப மறுக்கிறார்.

எனவே நீங்கள் என் பொருட்டு ஸ்யமந்தகத்தை ஒரு முறை சபையோர்‌ முன்னால் கொண்டுவந்து காட்டவேண்டும். மணி தங்களிடம் வந்த கதையை அனைவரிடமும் கூறி என்மீதுள்ள கறையைப் போக்கவேண்டும். 

சத்யசந்தரான தாங்கள் நடத்தும் வேள்விகள் அனைத்தும் தடையின்றி நடக்கின்றன அல்லவா? தாங்கள் உண்மையை அனைவரிடமும் கூறவேண்டும். என்றான்.

அக்ரூரர் மிகவும் வெட்கினார். கண்ணனைப் பலவாறு வணங்கி இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒளிவீசும் ஸ்யமந்தகமணியை எடுத்து கண்ணனிடம் கொடுத்தார். கண்ணன் அதை சபையோர் அனைவரிடமும் காட்டினான். பின்னர் அதை அக்ரூரரிடமே திருப்பிக் கொடுத்தான்.

இந்த ஸ்யமந்தகமணியின் கதை மிகவும் பெருமை நிறைந்தது. அனைத்து பாவங்களையும் போக்கவல்லது. இதைப் படிப்பவர் அவப்பெயர்கள் நீங்கி ஆனந்தமான வாழ்வு பெறுவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment