Monday, June 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 479

பீஷ்மகரின் அரண்மனையில் விவாகச் சடங்குகள் துவங்கின.

நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. நால்வகை வீதிகளிலும் நீர் தெளிக்கப்பட்டு கோலங்கள் அலங்கரித்தன. தோரணங்களும் மாலைகளுமாக எங்கும் விழாக்கோலம்.

நகரத்தின் அனைத்து மக்களும் தங்கள் வீட்டுத் திருமணம் போல் எண்ணி தங்களையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு தங்கள் வீடுகளையும் அழகு படுத்தினர்.

பீஷ்மகர் பித்ரு கடன்களை முறைப்படி செய்தபின் தேவபூஜையும் செய்தார். அந்தணர்களுக்கு உணவிட்டு மணப்பெண்ணை வாழ்த்த வேண்டினார். விவாஹத்தை ஒட்டி பொன், வெள்ளி, ஆடைகள், அணிகலன்கள், வெல்லம் கலந்த எள், பசுக்கள் ஆகியவற்றை  அந்தணர்க்கும் நாட்டு மக்களுக்கும் தானங்களாக  அளித்தார்.

திருமகளான ருக்மிணிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்து திருமகளே போல் அலங்கரித்தனர். 

நான்கு வேதங்களாலும் ரக்ஷை செய்யப்பட்டது. நவக்ரஹ ப்ரீதிக்கான ஹோமங்கள் முதலியவையும் செய்யப்பட்டன. 

சேதி நாட்டரசன் தமகோஷன், தன் மகன் ‌சிசுபாலனுடனும்,  நால்வகைப் படைகளுடனும் விதர்ப்ப தேசம் வந்திருந்தான்.

அவர்கள் அனைவரையும் வரவேற்றுத் தனி மாளிகையில் தங்கச் செய்தார் பீஷ்மகர்.
பின்னர் தமகோஷனுக்கும், சிசுபாலனுக்கும் திருமணத்திற்கான சடங்குகள் அந்தணர்களைக் கொண்டு செய்விக்கப்பட்டன.

சால்வன், ஜராசந்தன், தந்தவக்த்ரன், விதூரதன் இன்னும் மற்ற அரசர்களும் அவர்கள் குல மகளிருடனும் படைகளுடனும் வந்து குழுமிவிட்டனர்.
அனைவர்க்குமான ஏற்பாடுகளைக் குறையின்றிச் செய்தார் பீஷ்மகர்.

இவற்றின் நடுவில் தான் அனுப்பிய சாது இன்னும் திரும்பி வராததைக் கண்ட ருக்மிணி மிகுந்த கவலை கொண்டாள்.

குறைகளற்ற கோவிந்தன் என்னிடம் ஏதேனும் குறை கண்டிருப்பாரா? ப்ரும்மாவோ, பரமேஸ்வரனோ என் குறையகல அனுக்ரஹம் செய்வார்களா? மலைமகளான பார்வதிக்குமா என் நிலை புரியவில்லை? அவளது கருணையும் எனக்கில்லையா?

என்றெல்லாம் எண்ணி கண்ணீர் பெருகும் கண்களை மூடிக்கொண்டாள். அப்போது அவளது இடபாகத்திலிருக்கும் கையும், தொடையும்  கண்ணும் துடித்தன. பெண்களுக்கு இடதுபுறம் துடிப்பது சகுன சாஸ்திரத்தின் படி நன்மையின் அடையாளமாகும்.‌

சற்று நம்பிக்கை துளிர்விட்டதும் கண்களைத் திறந்த ருக்மிணியின் முன்னால் நின்றார் தூது சென்ற ஸாது.

அவரது மலர்ந்த முகத்தைக் கண்டதுமே, அது கண்ணனைக் கண்டு வந்த முகம் என்பது விளங்கிற்று.

அவர் ருக்மிணியின் நிலையறிந்து சுருக்கமாக அனைத்து விவரங்களையும் கூறினார் அவர். கண்ணன் வந்துவிட்டான் என்ற செய்தி போதாதா ருக்மிணிக்கு? அக்கணமே மலர்ந்தாள். 

ஒப்பற்ற இந்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? எதைக் கொடுத்தால் ஈடாகும்?

அவரது சரணங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். திருமகளே ‌ஒருவரைத் தொழுவாளானால் அவரது சௌபாக்யத்திற்குப் பஞ்சமேது?

கண்ணனும் பலராமனும் வந்திருப்பதை அறிந்த பீஷ்மகர், அவர்கள் இருவரும் தன் மகளின் திருமணத்தைக் காண வந்தவர்கள் என்றெண்ணி பூரிப்படைந்தார். வாத்யங்களுடன் சென்று எதிர்கொண்டழைத்துக் கொண்டாடினார். தனி மாளிகையில் சகல வசதிகளுடனும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

அவர் செய்யும் உபசாரத்தைப் பார்த்து சிசுபாலன் முதலியவர்களுக்கு கண்ணனுக்குப் பெண்ணைக் கொடுத்துவிடுவாரோ என்ற ஐயம் ஏற்பட்டது. தங்களது படைகள் அனைத்தையும் உஷார் படுத்தி எப்போதும் தயார் நிலையில் இருக்க ஆணை பிறப்பித்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment