Friday, May 1, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 446

கண்ணனும் பலராமனும் முறையே சாணூரன் மற்றும் முஷ்டிகனுடன் மல்யுத்தம் செய்யத் துவங்கினர்.

ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ளும் வெறியுடன், கைகளைப் பிணைத்தும், கால்களால் தட்டியும் சண்டையிட்டனர்.

கண்ணனின் திருமார்பில் பலமாக மோதினான் சாணூரன். கண்ணனுக்கு தட்டிக்கொடுப்பது போல் இருந்தது. 
கண்ணனை இறுகக் கட்டிக்கொண்டு கீழே தள்ள முயற்சி செய்தான். கண்ணனைக் கட்டித் தழுவ  அனைவரும் தவமிருக்க சமர் என்ற பெயரால் யோகமடித்தது சாணூரனுக்கு.

கண்ணனும் பலராமனும் பெரியதாக ஒன்றும் திருப்பி அடிக்கவில்லை. 
மல்லர்கள் இழுத்த இழுப்பிற்குப் போய் சற்று நேரம் விளையாடினர்.

வேடிக்கை பார்க்கும் மக்கள் புலம்பத் துவங்கினர்.

சின்னஞ் சிறுவர்களை அழைத்துவந்து இப்படி பெரிய பெரிய மல்யுத்தவீரர்களுடன் மோதவிடுகிறார்களே. அரசர் பெரும் தவறிழைக்கிறார். 

சற்று அழுத்தித் தொட்டால் கன்றிப்போகுமளவிற்கு விளங்கும் ம்ருதுவான கண்ணனின் திருமேனி எங்கே. மாமிச மலைகளைப்போல் இருந்த மல்லர்கள் எங்கே.

கண்ணன் முகத்தைப் பார். தாமரை மலரில் நீர்த்துளிகளைப்போல் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.

கோபத்தில் கண்கள் சிவந்து பலராமனின் சிவந்த மேனிக்கு இன்னும் அழகூட்டுகிறது. 

சண்டையென்றாலும்கூட கணத்துக்குக் கணம் இந்தக் கண்ணனின் அழகு கூடுகிறதே. 

இவ்வளவு நாள்களாக இதை அனுபவித்த கோகுலவாசிகள் பாக்யசாலிகள்.

காலை எழுந்ததுமுதல் மாடு மேய்த்தல், வெண்ணெய் திருடுதல், மலயைத் தூக்குதல் முதலான இவனது ஒவ்வொரு லீலையையும் அருகிலிருந்து அனுபவித்திருப்பார்களே.

நமக்கோ‌ இந்த அழகுக் கண்ணன் அடி வாங்குவதைக் காண நேரிட்டதே. ஐயகோ!

இவன் எது செய்தாலும் அழகென்றாலும் நமக்கு இப்படி வாய்த்ததே.

பல்வேறு விதமாக பேசுவதையும், இப்போது தன் மீதுள்ள அன்பினால் கோஷமிடுவதையும் கண்ட கண்ணன், விளையாட்டுச் சண்டையை முடிக்க எண்ணினான்.

கண்ணனும் பலராமனும் தேர்ந்த மல்யுத்த வீரர்களைப்போல் சண்டையிட்டனர்.
அடிக்கடி இடிபோல் விழுந்த கண்ணனின் அடியால் சாணூரன் எலும்புகள் நொறுங்குவது போல் வலி ஏற்பட்டு, பின்னர் சுதாரித்துக்கொண்டு சண்டையிட்டான்.

அதற்குள் மக்கள் அனைவரும் 

ஸ்ரீ க்ருஷ்ண ஜெயம்‌

என்று கோஷமிட ஆரம்பித்தனர்.

சாணூரன் அடிக்கும்போதெல்லாம் பூமாலையால் அடிக்கப்பட்ட யானைபோல் அசையாமல் நிற்கத் துவங்கினான் கண்ணன். மாறாக அடித்தவனுக்கோ இரும்பை அடித்ததுபோல் கை வலிக்கத் துவங்கியது.

பின்னர் சாணுரனை இரு கைகளாலும் பிடித்து வேகமாகச் சுழற்றினான் கண்ணன்.
அவன் விழிபிதுங்கி, நாக்கு வெளியில் தள்ளி உயிரை விட்டான். பின்னர் உயிரிழந்த சாணூரனின் உடலை தரையில் ஓங்கி அடித்தான்.

அதைப்போலவே அவ்வளவு நேரம் விளையாட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருந்த பலராமனும் முஷ்டிகனை ஓங்கி அறைந்தான். பொறி கலங்கி ரத்தம் கக்கிக்கொண்டு அக்கணமே ‌உயிழந்தான் அம்மல்லன்.

அவர்களைத் தொடர்ந்து கூடன், சலன், தோசலன் ஆகிய மல்லர்கள் சண்டைக்கு வந்தனர். மூவரும் ஒருவர் பின் ஒருவராய் சுலபமாகக் கொல்லப்பட்டனர்.

ஐந்து தலையாய மல்லர்களும் கொல்லப்பட்டதும், மற்ற மல்லர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து சிதறி ஓடினர்.

வெற்றி முரசு ஒலிக்கத் துவங்கியது. 
கண்ணன் அரங்கில் அமர்ந்திருந்த தன் நண்பர்களை அழைத்தான். அனைவரும் ஓடி வந்தனர். அவர்கள் அனைவருடனும் இணைந்து முரசின் ஒலிக்கேற்ப காற்சலங்கை ஒலிக்கக் களி நடனம் ஆடத் துவங்கினான்.

இவ்வளவு நேரம் கண்ணன் சண்டையிட்டதைக் கண்டு மனம் பதைத்த மக்கள் மகிழ்ச்சியினால் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். தாங்களும் ‌எழுந்து ஆடத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment