Wednesday, May 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 474

ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திடம் பத்தாவது ஸ்கந்தம் துவங்கும்போது ஒரு தேர்வு வைத்தார். மிகச் சுருக்கமாகக் கண்ணன் கதையைக் கூறிவிட்டு அவன் என்ன சொல்கிறான் என்று பார்த்தார்.

பரீக்ஷித்தோ, கண்ணன் கதையைக் கேட்கவே தான் பொறுமையாக அமர்ந்திருப்பதாகவும், பசி தாகம் முதலியவை தனக்கு இல்லை என்றும், மேலும் தான் அன்னை வயிற்றிலிருக்கும்போது  கண்ணனால் காப்பாற்றப்பட்டவன் என்பதால் கண்ணனின் கதையை விரிவாகக் கேட்பது தன் பிறப்புரிமை என்றும் கூறி விரிவாகச் சொல்லும்படி கேட்டான். அவனது ஆர்வத்தைச் சோதிக்கவே ஸ்ரீ சுகர் அவ்வாறு‌ செய்தார். 

இப்போதும், 

குருவம்சக் கொழுந்தே! விதர்ப்ப தேசத்து ராஜகுமாரி ருக்மிணியைக் கண்ணன் தன்னை ‌எதிர்த்த அத்தனை அரசர்களையும் வென்று மணந்துகொண்டான்

என்று ஒரே வரியில் முடித்து விட்டார். பின்னர் பரீக்ஷித் என்ன சொல்கிறான் என்று அவன் முகத்தைப் பார்த்தார்.

பரீக்ஷித் மிகவும் கவனமாகக் கதை கேட்பவன். ஆதலால், சட்டென்று கேட்டான்.

மஹரிஷீ! பீஷ்மகரின் மகள் ருக்மிணி தேவி அழகே‌ உருவானவர் என்றும் அவரை கண்ணன் ராக்ஷஸமுறைப்படி கவர்ந்து வந்து திருமணம் செய்துகொண்டார் எனவும் முன்பே கேள்வியுற்றிருக்கிறேன். ஜராசந்தன், சால்வன் போன்ற பல்வேறு துஷ்ட அரசர்கள் சூழ்ந்திருக்கும்போது எவ்வாறு ருக்மிணியை அபகரித்து வந்தார்? 

கண்ணனின் கதை இனிமையானது. கேட்க கேட்க தெவிட்டாதது. ஒவ்வொரு கணமும்  புதிதாகத் தோன்றுவது. அதைக் கேட்டு போதும் என்ற எண்ணம் வருமா?

என்றான்.

மிகவும் மகிழ்ச்சியடைந்தார் ஸ்ரீ சுகர். மேலே சொல்லத் துவங்கினார்.

விதர்ப்ப நாட்டு அரசர் பீஷ்மகர். அவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ருக்மி, ருக்மரதன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி என்பவர் மகன்கள். ருக்மிணி என்பவள் இவர்கள் ஐவரின் தங்கை. ருக்ம என்றால் தங்கம் என்று பொருள்.

உண்மையில் பெயருக்கேற்றபடி தங்கத்தாரகையாக விளங்கியவள் ருக்மிணி ஒருத்திதான். மீதி ஐவரும் தகரம் போன்றவர்கள். கண் தெரியாமல் தடுமாறுபவர்க்கு கண்ணாயிரம் என்றும், பரம ஏழையாக இருப்பவர்க்கு கோடீஸ்வரன் என்றும் பெயரிடுவது போல மகா மோசமான குணங்களுடைய ஐந்து மகன்களுக்கும் தங்கத்தின் பெயர் அமைந்துவிட்டது.

பீஷ்மகர் பரம சாது. அடிக்கடி அரண்மனையில் சத்சங்கங்களும், சாதுக்களுக்கு ஆராதனைகளும் ஏற்பாடு செய்வார். ருக்மிணி சிறு வயது முதலே மிகவும் ஆர்வமுடன் சாது சேவை செய்வதில்‌ ஈடுபட்டாள். 

கண்ணனின் லீலைகள், பெருமைகள் ஆகியவையும் அவர்களால் விவரிக்கப்படும். பீஷ்மகரின் அரண்மனைக்கு நாரதரும் அடிக்கடி விஜயம்‌ செய்வார். அவரும் கண்ணனைப் பற்றிய கதைகளை அவ்வப்போது வந்து சுடச்சுட சொல்லிவிட்டுப் போவார்.

கண்ணனின் ரூப லாவண்யம், லீலைகள், கருணை, பெருமைகள், ஆகியவற்றைக் கேட்டு கேட்டு ருக்மிணி கண்ணனையே மணக்கத் தீர்மானம் கொண்டாள்.

நாரதர் கண்ணனிடமும் அடிக்கடி ருக்மிணியைப் பற்றிக் கூறிய வண்ணம் இருந்தார். அதனால் கண்ணனுக்கும் ருக்மிணி தனக்கேற்றவள் என்ற எண்ணம் வளர்ந்தது.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment