Saturday, May 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 453

உத்தவன் என்பவர் கண்ணன் மதுரா வந்ததிலிருந்து அவனுடைய அந்தரங்க செயலாளர் போலவும், மந்திரியாகவும் செயலாற்றி வந்தார். கண்ணன் மீது அளவிலா பக்தி பூண்டவர். ஞானி. ப்ருஹஸ்பதியின் பாடசாலை சென்று படித்துத் திரும்பியவர். 

ஒருநாள் கண்ணன் அவரைத் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போனான்.

கண்ணனின் முகம் வாடியிருந்தது. அவ்வாறு அவர் கண்ணனைக் கண்டதே இல்லை.

பதைபதைத்துப் போனார். எல்லாம் வல்ல இறையான கண்ணனுக்கு என்ன துன்பம் இருக்கமுடியும்? என்று ஒரே குழப்பம்.

கண்ணன் அவரது கரங்களைப் பிடித்துக்கொண்டான்.

உத்தவா!

உத்தரவு இறைவா! சொல்லுங்கள்!

நீ எனக்காக ஒரு உதவி செய்வாயா?

உதவியா? நானா? ஆணையிடுங்கள்! சிரமேற்கொண்டு இக்கணமே செய்து முடிப்பேன்.

நீ கோகுலம் செல்லவேண்டும்.

இப்போதே செல்கிறேன்.

அங்கே என் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், என் மீது அன்பு கொண்ட கோபியர்கள் அனைவரும் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பிரிந்ததால் மிகவும் வாடுகிறார்கள்.

அவர்கள் என்னிடமே மனத்தைச் செலுத்தியவர்கள். எனக்காக தங்கள் உறவுகள் அனைத்தையும் விட்டவர்கள். என் பொருட்டு தங்களது அறநெறிகள், கடைமைகள், அனைத்தையும் துறந்தவர்கள். என் பொருட்டே நான் அவர்களைக் காத்துவந்தேன்.

அவர்களது உயிரான நான் அவர்களை விட்டு விலகியிருப்பதால், என்னையே நினைத்து நினைத்து மறுகித் தளர்ந்து மயங்கியிருக்கின்றனர்.

நான் விரைவில் திரும்பி வருவேன் என்று சொன்னதை நம்பி உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லி அவர்களை ஆற்றுப்படுத்துவாயாக.

நீ சென்று அவர்களது துயரத்தைத் துடைக்கவேண்டும்.

கண்ணன் சொல்வதைக் கேட்டு நிச்சயம் செய்கிறேன் தேவதேவனே! என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார் உத்தவன்.

இறைவனான கண்ணன் இவ்விஷயத்தில் சற்று மயங்குகிறானோ என்று தோன்றியது உத்தவர்க்கு. எங்கும் நிறைந்திருப்பவனுக்கு ஏது பிரிவுத் துயர்? விளங்கவில்லை. 

எப்படியானாலும் கண்ணன் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவேன்.

கண்ணனைப் பிரிந்து வாடும் இடைக்குலத்தோர் அனைவர்க்கும் ஒரு உண்மையை உணர்த்தவேண்டும்.

கண்ணன் பரம்பொருள். எங்கும் நிறைபவன். அவன் ஒரு உருவத்துள் அடங்குபவனில்லை. காலதேசங்களுக்கு அப்பாற்பட்டவன். இதை எடுத்துரைத்தால் அவர்களது துன்பம் விலகும். 

இந்த ஞானத்தைக் கண்ணனே நேரடியாகக் கூறமுடியாதல்லவா? அதனால்தான் என்னை அனுப்புகிறான்.

எப்படியாகிலும் கண்ணன் வளர்ந்த புண்யத் தலம் ப்ருந்தாவனம். அதைக் காண்பதே பெரும் பாக்யம். பற்பல லீலைகள் புரிந்த இடங்களைக் காண அற்புதமான வாய்ப்பு.

என்றெல்லாம் எண்ணிய உத்தவன் மறுநாள் காலை ப்ருந்தாவனம் புறப்பட்டார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment