Sunday, May 17, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 461

வ்ருந்தாவனத்தை விட்டுக் கிளம்பும்  சமயம் உத்தவர் கோபிகளைப் போலவே முழுமையான ப்ரேம பக்தராக மாறிவிட்டிருந்தார். அவர்கள் அனைவரையும் வணங்கினார். 

முமுக்ஷுக்கள், பக்தர்கள், முனிவர்கள் அனைவரும் உலக வாழ்வின் கொடுமைகளுக்கு பயந்து கோவிந்தனிடம் பக்தி நிலைக்கவேண்டுமென்று வேண்டுகிறோம். ஆனால், இந்த கோபிகளுக்கோ கண்ணனிடம்  அசைவற்ற ப்ரேமபக்தி ஸித்தித்திருக்கிறது. உலக வாழ்வைப் பற்றிய சிந்தனையே இல்லை.

நல்லகுலத்தில் பிறந்தவர் என்றோ, எல்லா அனுஷ்டானங்களையும் தவறாமல் பின்பற்றுபவர் என்றோ, பெரிய பதவியில் இருப்பவர் என்றோ, தனவந்தர் என்றோ பெருமைப்பட ப்ரேமபக்தர்களுக்கு எதுவுமில்லை. அவர்கள் கண்ணனின் லீலாம்ருதத்தில் மூழ்கியிருப்பதால் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.

அத்தனை பெருமைகளும் இருந்து கண்ணனின் லீலைகளில் மனம் ஈடுபடவில்லையெனில் அப்பிறவி வீணே.

ஆசாரம், அனுஷ்டானங்களற்ற இந்த இடைக்குலப் பெண்களின் அன்புக்கு ஈடு இணையே இல்லை. இறைவனின் கதையமுதத்தை உண்பவர்க்கு அது நன்மையே செய்கிறது. அவர்கள் அதை உணராவிடினும் அமுதத்தின் பலன் கிட்டுமல்லவா?

இவர்களைப் போல பக்தி கொண்டவர்கள் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் இல்லை. 

இல்லறம், உறவு, தர்மங்கள், அனைத்தையும் துறந்து கண்ணன்பால் ஈடுபடுகின்ற இவர்களை தரிசனம்‌ செய்ததே பாக்யம். இந்த விருந்தாவனத்திலேயே நான் புல், புதர், கல், செடிகொடி இவற்றுள் ஏதேனும் ஒன்றாக நான் ஆகலாகாதா?

வந்தே நந்தவ்ரஜஸ்த்ரீணாம் பாத3ரேணும் அபீ4க்ஷ்ணஶ: |
யாஸாம் ஹரிகதோ2த்3கீ3தம் புனாதி பு4வனத்ரயம்||

இந்த கோகுலப் பெண்கள் பாடும் கண்ணனைப் பற்றிய கீதங்களல்லவா மூவுலகங்களையும் புனிதமாக்குகிறது. அத்தகையோரின் பாததூளியை நான் வணங்குகிறேன்.

என்று கூறிய உத்தவன் அங்கு தனக்கு விடைகொடுப்பதற்காகக் குழுமியிருந்த கோபியர்களின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அவர்களின் திருவடி மண்ணை எடுத்து தன் சிரத்தில் போட்டுக்கொண்டார்.

பின்னர் மெதுவாக அங்கிருந்து மதுராவை நோக்கிக் கிளம்பினார்.

உத்தவர் ப்ருஹஸ்பதியின் பாடசாலையில் படித்தவராம். மஹா புத்திமானாக விளங்குபவர். அடிக்கடி நண்பர்களிடத்தில் நான் ப்ருஹஸ்பதி சிஷ்யன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வாராம். கண்ணனைக் கண்ட நாள்முதலாய் அந்தப் பெருமை அவருக்கு மறந்தே போய்விட்டது. அனைவரிடமும் நான் கண்ணனின் பணியாளன், கண்ணனின் சீடன் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளலானார். 

கோபிகளைப் பார்த்ததும் அதுவும் போய்விட்டது. இன்று முதல் நான் கோபியரின் சீடன் என்று பறைசாற்றத் துவங்கினார் என்றால் கோபியரின் பெருமை சொல்லவும் எளிதோ?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment