Friday, May 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 452

கண்ணனும் பலராமனும் பிரபாஸ க்ஷேத்ரத்திற்குச் சென்றனர்.

கடற்கரையில் நின்றுகொண்டு, ஸமுத்ர ராஜனை அழைத்தான் கண்ணன்.

முந்தைய அவதாரத்தில் தன் சொந்த வேலை என்பதால் விபீஷணனின் ஆலோசனைப்படி மூன்று நாள் ப்ரார்த்தனை செய்து உண்ணா நோன்பிருந்தான்.

இப்போது குருவிற்கான காணிக்கை என்பதால் காத்திருக்காமல் நேராகக் கடலரசனை அழைத்தான். 

வந்திருப்பது பரம்பொருள் என்றறிந்ததால் ஸமுத்ரராஜன் ஓடோடி வந்து மரியாதைகள் செய்தார்.

எங்களது குருவான சாந்தீபனி முனிவரின் புதல்வனைத் தேடி வந்திருக்கிறோம்.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் உங்கள் அலைகளால் விழுங்கப்பட்ட  அவனை உடனே திருப்பிக்கொடுங்கள். என்றான் கண்ணன்.

சமுத்ரராஜன் பயத்தினால் கலவரமுற்றான்.

தேவர்களின் தலைவரே! நான் அவனை ஒன்றும் செய்யவில்லை. இங்கே என் வயிற்றுக்குள் அடியில் பஞ்சஜனன் என்ற அசுரன் சுற்றிக்கொண்டிருக்கிறான். சங்கு வடிவில் இருப்பான். அவன் கடற்கரையில் திரியும் உயிர்களை இழுத்துச் சென்று விழுங்கிவிடுவான். அவன் வேலையாகத்தான் இருக்கும்‌. நீங்கள் அவனிடம் ‌கேளுங்கள் என்றார். 

உடனே கடலுக்குள் பாய்ந்தான் கண்ணன்.

பஞ்சஜனனைத் தேடிப் பிடித்தான்.

அவனைக் கொன்று வயிற்றைக் கிழித்தான். அவன் வயிற்றில் குருபுத்ரன் இல்லை.

பாஞ்சஜன்யம் என்ற அசுரனின் சங்கு உடலைத்  தன் கைகளில் ஏந்திக்கொண்டு விளங்குகிறான் கண்ணன். 

இறக்கும் உயிர்கள் அனைத்தும் யமராஜனின் பொறுப்பில் இருக்கும் என்பதால் குருபுத்ரனைத் தேடி யமலோகம் சென்றான் கண்ணன்.

தான் படைத்த எல்லா உலகங்களுக்கும் ஒரு உலாப்போக இறைவனுக்கு க்ருஷ்ணாவதாரத்தில்தான் நேரம்‌ அமைந்தது போலும்.

ஸம்யமனி என்ற அழகான பட்டணம் அது. அதன் வாயிலில் பலராமனுடன் சென்று நின்றுகொண்டு பாஞ்சஜன்யத்தை ஊதினான்.

சங்கொலியால் யமராஜன் உள்பட  அங்கிருந்த அனைவரின் உள்ளமும் கலங்கிற்று. 

இறைவன் வந்து தன் வாயிலில் நிற்பதை அறிந்த யமராஜன் உடனே தேடி வந்தார். கண்ணனுக்கும் பலராமனுக்கும் அனைத்து மரியாதைகளையும் செய்தார்.

லீலைக்காக அவதாரம் செய்திருக்கும் இறைவா! உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும்? என்று கேட்டார்.

முன் வினையால் என் குருபுத்ரனின் உயிரைக் கவர்ந்துவிட்டீர்கள். அவனை அழைத்து வாருங்கள் என்றான்.

இறப்பது அவனது விதியென்றாலும் கண்ணன் நினைத்தால் அனைத்தும் மாறும். 

யமதர்மராஜன் குருபுத்ரனின் ஆன்மாவைக் கொண்டு வந்து கொடுக்க, அவனுக்கு அழகிய சரீரத்தைக் கண்ணனே அருளினான்.

அங்கிருந்து கிளம்பி பூவுலகம் அடையும் காலத்திற்குள் அவன் இப்போது இருந்திருந்தால் எப்படி வளர்ந்திருப்பானோ அத்தகைய உடலையும், குரு தனக்கு வழங்கிய ஞானம் அனைத்தையும் சேர்த்து அவனுக்கு வழங்கினான் கண்ணன்.
இதைவிட குருவிற்கு என்ன கைங்கர்யம் செய்ய இயலும்? 

கண்ணனே சிறந்த குருபக்தன்.

அவனை அழைத்துக்கொண்டு வந்து குருவிடம் சமர்ப்பித்தனர் கண்ணனும் பலராமனும்.
இறந்த மகனைக் கண்முன் கண்ட பெற்றோர்க்கு எப்படி இருக்கும்?

ஆனந்தப் பெருக்கினால் இரு குழந்தைகளுக்கும் ஆசீர்வாதங்களை அள்ளி வழங்கினர்.

வானளாவிய புகழ் பெருகட்டும். கற்ற கல்வி எப்பிறவியிலும் மறவாதிருந்து காலத்தில் கைகொடுக்கட்டும்.
நிம்மதியான வாழ்வு நிலைக்கட்டும் என்று குளிரக் குளிர வாழ்த்துமொழிகளை குருவிடம் பெற்றுக்கொண்டு ரதத்திலேறி மதுரா திரும்பினர் தெய்வக் குழந்தைகள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment