Saturday, May 2, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 447

நாட்டு மக்கள் அனைவரும் கண்ணன் மல்யுத்தத்தில்  வென்றதை ஆடிப் பாடிக் கொண்டாடுவதைப் பார்த்தான் கம்சன். பயம் தலைக்கேறி தாறுமாறாக உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

முதலில் பறையை நிறுத்தச்சொன்னான். தீய எண்ணம் கொண்ட பலராமனையும் க்ருஷ்ணனையும் நகரத்தை விட்டு வெளியேற்றுங்கள்.

மதிகெட்ட வசுதேவனையும், அவன் மனைவி தேவகியையும், இருவருக்கும் ஆதரவாக இருக்கும் உக்ரசேனரையும் இப்போதே கொல்லுங்கள்.

நந்தனையும் அவனது வீரர்களையும் சிறைப் பிடியுங்கள். 
என்று கத்தினான்.

இதையெல்லாம் கேட்டு கண்ணன் கோபத்தால் முகம் சிவந்தான்.
ஒரே தாவலாகத் தாவி கம்சன் இருந்த உப்பரிகையில் குதித்தான்.

அத்தனை அருகில் கண்ணனைப் பார்த்ததும் கம்சனுக்கு பயத்தால் முகம் வெளிறியது. சடாரென்று எழுந்தான். தடுக்கி தலைகுப்புற கண்ணன் பாதங்களிலேயே விழுந்தான். கண்ணன் சட்டென்று நகர்ந்து கொண்டான். பாதத்தில் விழுந்துவிட்டால் வதம் செய்யமுடியாதென்று எண்ணினான் போலும்.

சுதாரித்துக்கொண்டு  எழுந்த கம்சன் வாளை உருவிக்கொண்டு கேடயத்தையும்‌ எடுத்துக்கொண்டான். அங்குமிங்கும் சுற்றி சுற்றி கண்ணனை வேகமாகத் தாக்க முற்பட்டான்.

கண்ணனோ அவனை கருடன் பாம்பைப் பிடிப்பதுபோல் லபக்கென்று பிடித்தான்.

கம்சனின் கிரீடம் நழுவிக் கீழே விழுந்தது. அவனது முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து கீழே  அரங்கத்தில் தள்ளினான்.

பின்னர் அவ்வளவு உயரத்திலிருந்து கம்சனின் மார்பின் மேல் குதித்தான்.
தூமகேதுவைப் போல் தன் மேல் இறங்கிய கண்ணனை விழி விரியப் பார்த்துக்கொண்டே  பிராணனை விட்டான் கம்சன்.

அவனது உடலைத் தரதரவென்று அங்குமிங்கும் இழுத்தான் கண்ணன். அதைக் கண்டு மக்கள் ஹோவென்று ஆரவாரம்‌ செய்தனர்.

கம்சனின் சகோதரர்களான கங்கன் முதலானோர் சண்டைக்கு வந்தனர். அவர்களை பலராமன் ஒரு இரும்புத்தடியால் அடித்தே கொன்றான்.

வானிலிருந்து துந்துபி முழங்க தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment