Monday, May 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 470

கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பரீக்ஷித் திருதிருவென்று விழித்தான்.

மஹரிஷீ! ஒன்றும் புரியவில்லை. குகைக்குள் இருந்தது யார்? காலயவனனைச் சாம்பலாக்கும் சக்தி பெற்றவரா? தபஸ்வியா? அவரது பெயரென்ன? பெருமைகள் என்ன? அவர் ஏன் குகைக்குள் இருந்தார்? எதற்காக உறங்கினார்? எழுப்பியவரை ஏன் சாம்பலாக்கினார்?

ஸ்ரீ சுகப்ரும்மம் சிரித்தது. 

அவர் இக்ஷ்வாகு வம்சத்து மன்னர். அவர் பெயர் முசுகுந்தர். சத்யப்ரதிக்ஞர். தேவாசுர யுத்தம் நடந்தபோது,  அவரிடம் இந்திரன் முதலான தேவர்கள் வந்து தங்களைக் காப்பாற்றும்படி உதவி கேட்டனர். அதனால் அவர் வெகுகாலம் தேவர்களுக்காக படையைத் தலைமை தாங்கி வெற்றி பெற்றுத்தந்தார்.

அதன் பின்னர் முருகப்பெருமான் தேவசேனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அப்போது இந்திரன் முசுகுந்தரை வணங்கி,

 இவ்வளவு காலமாய் எங்களைக் காத்தீர்கள். இனி நீங்கள் ஓய்வு கொள்ளலாம். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்றான். 

முசுகுந்தர் பூலோகம் திரும்ப எண்ணியபோது, அங்கே தன் மக்கள் எவரையும் காணாமல் திகைத்தார்.

தேவேந்திரன் அவரிடம், மஹானுபாவரே! பூலோகத்திற்கும் தேவலோகத்திற்கும் காலக்  கணக்கு மாறுபடும். நீங்கள் இங்கு வந்து வெகுகாலமாகிவிட்டது.
பூலோகத்தில் யுகமே ‌மாறிவிட்டது. இப்போது தங்கள் உற்றார், உறவினர், மக்கள் ஒருவரும் பூமியில் இல்லை. 

பகவானே காலதேவன் ஆவார். உமக்கு‌ அனைத்து நலனும் விளையட்டும். நீங்கள் மனத்தைத் தேற்றிக்கொண்டு முக்தியைத் தவிர எதை வேண்டுமானாலும் வேண்டுங்கள் என்றான்.

உற்றார் உறவினர் மக்கள், நாடு எதுவுமின்றி எப்படி வாழமுடியும்? முக்தியும் இல்லையென்றால் என்ன செய்வதென்று கேட்டார்.

முக்தியை அளிக்க வல்லவர் பகவான் ஒருவரே. எனக்கு அந்த அதிகாரம் இல்லை. என்ன செய்வேன்? நீங்கள் தயவு செய்து என்னால் கொடுக்க இயன்றதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான் இந்திரன்.

முசுகுந்தர் மிகவும் யோசித்தார். பின்னர்,

நான் மனிதனானதால் இங்கு வாழமுடியாது. பூவுலகிலும் எனக்கு யாரும் இல்லை. வெகு காலமாக போர் செய்து மிகவும்‌ களைப்பாயிருக்கிறது. நான் நன்றாக உறங்க விரும்புகிறேன் என்றார்.

தேவேந்திரன், 

நீங்கள் சென்று விருப்பமான இடத்தில் படுத்து உறங்குங்கள். உங்களை எழுப்புபவர் எரிந்து சாம்பலாவார் என்று வரம் கொடுத்தான்.

முசுகுந்தர் பூலோகம் திரும்பினார். மக்கள் அனைவரும் மிகவும் குள்ளமாக இருந்தனர். மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியிருந்தது. யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க ஒரு மலைக் குகைக்குள் சென்று உறங்கத் துவங்கினார். எவ்வளவு காலமாக உறங்கினார் என்று அவருக்கும் தெரியாது.

தன்னலம் கருதாது தேவர்க்கு உதவியதால் பகவான் தானே அவருக்கு தரிசனம் கொடுக்க விரும்பினான். அவரை எழுப்புபவர் சாம்பலாவர் என்பதால் காலயவனனைத் தந்திரமாக அழைத்துக்கொண்டு வந்து அவரை எழுப்பும்படிச் செய்தான். பகவான் அனைத்தும் அறிந்தவன். அவனது கணக்கு ஒருவர்க்கும் புரியாது. என்றார் சுகர்.

காலயவனன் சாம்பலானதும், ஒளிந்துகொண்டிருந்த கண்ணன் முசுகுந்தரின் முன்னால் வெளிப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment