Tuesday, May 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 450

உலகனைத்திற்கும் தோற்றுவாயானபோதும் உலக நியதியை அனுசரித்து பிரும்மச்சர்ய விரதத்தை முறைப்படி மேற்கொண்டனர் தெய்வக் குழந்தைகள்.

குலகுரு கர்காச்சார்யார் அனைத்து சடங்குகளையும் நன்றாக நடத்திவைத்தார்.
பின்னர் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது பற்றி ஆலோசித்தார் வசுதேவர்.
அவந்தி நகரில் இருக்கும் ஸ்ரீசாந்தீபனி என்ற ஞானாசார்யனிடம் குழந்தைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

பிறந்ததுமுதல் பார்க்காமல் இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதற்குள் மீண்டும் பெற்றோரையும் மற்ற அனைவரையும் பிரிந்து குருகுலம் செல்லவேண்டும் என்றதும் தேவகிக்கும் வசுதேவர்க்கும்  வருத்தமாக இருந்தது. இருப்பினும் குழந்தைகளின் நலன் கருதி மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ சாந்தீபனியின் குருகுலத்தை அடைந்த ராம க்ருஷ்ணர்கள் அங்கிருந்த மற்ற குழந்தைகளுடன் மிகவும் அன்பாகப் பழகினர். குரு, மற்றும் குருமாதாவை தெய்வங்களைப்போல் மதித்துப் பணிவிடைகளைச் செய்தனர்.

சாந்தீபனி அவர்களுக்கு வேதத்தின் ஆறு அங்கங்களான சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், சோதிடம், கல்பம் ஆகியவை,  உபநிடதங்கள், கூடிய வேதம் முழுவதையும் கற்பித்தார்.

மந்திரங்கள், தேவதா ரகசியங்கள், தர்ம சாஸ்திரம், மீமாம்ஸை, தர்க்க சாஸ்திரம், ஆறு வகை ராஜநீதிகள், ஆகிய அனைத்தும் போதிக்கப்பட்டன.

குழந்தைகள் ஏகசந்த க்ராஹி என்னும்படியாக ஒரு முறை சொல்லும்போதே கேட்டுக் கற்றுக்கொண்டனர்.

இரவு பகல் பாராமல் பாடங்கள் நடந்தன. 64 நாள்களில் 64 கலைகளையும் கற்றுப் பூரணமாக தேர்ச்சி அடைந்தனர் இருவரும்.

இந்த குருகுல வாசத்தில் நண்பனாய் அமைந்தவர்தான் சுதாமா. அவரே குசேலர் என்றழைக்கப்ப்டுகிறார். அவரது சரித்ரத்தைப் பின்னால் வரும் அத்யாயங்களில்  விரித்துரைக்கிறார் ஸ்ரீ சுகர்.

64 நாள்கள் 64 நொடிகளைப் போல் பறந்தன.

கல்வி முடியும் நாளும் வந்தது.
கல்வி முடியும் அன்று குருவிற்கு தக்ஷிணை கொடுக்கவேண்டும்.

அரச வீட்டுக் குழந்தைகள் ஏராளமான பொன்னும் பொருளும் கொடுப்பார்கள். சாதாரணக் குழந்தைகளும் அவரிடம் படிப்பார்கள். அவர்கள் தங்களால் இயன்றதைக் கொடுப்பார்கள். எதுவாயினும் குருவின் விருப்பமாகும். குருமார்கள் யாருமே சீடர்களால் இயலாததையோ , அல்லது வற்புறுத்திப் பெருஞ்செல்வத்தையோ கேட்டதாக ஒரு கதைகூட இல்லை. 

ஜகத்குருவான கண்ணனுக்கு குருவாகும் பாக்யம் பெற்ற சாந்தீபனி முனிவர், கண்ணனிடம் என்ன குருதக்ஷிணை கேட்டார்?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment