Sunday, May 10, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 454

உத்தவன் தன் அனுஷ்டாங்களையெல்லாம் முடித்துக் கொண்டு, கோகுலம் கிளம்பினார். பலவிதமான எண்ண ஓட்டங்களுக்கிடையே தேரைச் செலுத்திக்கொண்டு ஒரு வழியாக கோகுலத்தை அவர் அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது.

மனமயக்கும் ப்ருந்தாவனத்தின் அழகில் மோஹித்துப் போனார் உத்தவர்.

கோதூளி வேளை என்று சொல்லப்படும் அந்தி சாயும் மாலை. லட்சக்கணக்கான பசுக்களும் கன்றுகளும் மேய்ந்துவிட்டு கோகுலம் திரும்பிக்கொண்டிருந்தன‌. அவற்றின் புழுதி ரதத்தையே மறைத்தது.

பால் நிறைந்த மடி கொழுத்த பசுக்கள், கன்றுகளை நினைத்துக் கனைத்துக்கொண்டே ஓடின.

கன்றுக்குட்டிகள் பாய்ந்து ஓடும் அழகே அழகு.

மாடு கறக்கும் ஒலியும், புல்லாங்குழலின் ஒலியும் இணைந்து இனிமையாக சங்கீதம் கேட்டது.

கோபரும் கோபியரும் கண்ணனின் லீலைகளைப் பாடிக்கொண்டே தத்தம் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.
ஆங்காங்கே வீடுகளில் வழிபாடுகள் நடந்துகொண்டிருந்தன. பூஜை மணி, தூப தீபங்கள், மலர்கள் ஆகியவற்றின் மணமும் காற்றில் நிறைந்திருந்தது.

ஒரு பக்கம் பால், தயிர், வெண்ணெய், பசுஞ்சாணம் ஆகியவற்றின் வாசனை.

சொக்கிப்போனார் உத்தவர். இப்படி ஒரு ஊரா? இவ்வூரை விட்டு வரக் கண்ணனுக்கு எப்படி மனம் வந்தது? என்று தோன்றிற்று. கண்ணனின் வருத்தத்தில் நியாயம் இருப்பதாக உணரத் துவங்கினார்.

எல்லா வீடுகளிலும் சாணமிட்டுக் கோலமிடப்பட்டு பூக்கள் இறைக்கப்பட்டு,  வாசலில் தீபங்கள் ஒளிர்ந்தன. 

தோட்டங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கின. குயிலிசையும், வண்டுகளின் ரீங்காரமும் செவிக்கு இனிமையூட்டின.

குளக்கோழிகள், தாமரைகள் நிரம்பிய நீர்நிலைகளும், யமுனை ஆறும் மனம் நிறைத்தன. 

உத்தவர் சூழலில் மனத்தைப் பறிகொடுத்து பேச்சற்ற நிலையில் நந்தபவனம் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததும் கண்ணனையே கண்டாற்போல் உளம் குளிர்ந்து மகிழ்ச்சியுற்று கட்டியணைத்துக்கொண்டார் நந்தன். 
பின்னர்  வரவேற்று உபசாரம் செய்தார்.

சிறந்த உணவுகளை ஏற்பாடு செய்தார். உண்ட பின்பு சுகமான கட்டிலில் அமரவைத்து கால்களை வருடிக் கொடுத்து, நலம் விசாரித்தார்.

மாபெரும் பேறு பெற்றவரே! எங்கள் நண்பர் வசுதேவர் எப்படி இருக்கிறார்? கம்சனின் தொல்லைகள் நீங்கி மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாய் வாழ்கிறாரா?

சான்றோர்களைத் துன்புறுத்திய மஹாபாவியான கம்சன், தன் வினைப்பயனாலேயே மாண்டான்.
என்று சொன்னார்.

கண்ணனை விசாரிக்க நினைத்ததும் அவரது நா தழுதழுத்தது. கண்ணீர் உருண்டோடியது.

தன்னைத் தேற்றிக்கொண்டு சன்னமான குரலில் கேட்டார்.

கண்ணன் நலமா? அவன் எங்களை நினைவு வைத்திருக்கிறானா? யசோதா, தன் நண்பர்கள், இந்த கோகுலம், பசுக்கள், கோவர்தன மலை இவை பற்றி அவன் எப்போதாவது பேசியதுண்டா?

இங்கு ஒரு‌முறையாவது வருவானா? நாங்கள் அவனது பூமுகத்தையும் புன்சிரிப்பையும் மீண்டும் காண்போமா?

அவனது கடைக்கண் பார்வை பேச்சு சிரிப்பு ஆகியவை அடிக்கடி எங்கள்‌ நினைவில் வந்து நாங்கள் செயல்கள் எதுவும் செய்யமுடியாமல் தடுமாறுகிறோம்.

இந்த மலை, காடு, புல்வெளி, பசுக்கள், மரங்கள் எதைக் கண்டாலும் கண்ணன் முகமே தெரிகிறது.

கர்காச்சாரியார் முன்பு சொன்னதுபோல் தேவகாரியத்தை முடிக்க இறைவனே கண்ணனாக வந்திருக்கிறார் என்றறிகிறேன்.

பத்தாயிரம் யானை பலமுள்ள கம்சன், மல்லர்கள், குவலயாபீடம் ஆகியவற்றை சிங்கம் போல் கிழித்துப்போட்டதைக் கண்ணாரக் கண்டேன்.

மூன்று பனை உயரமுள்ள வில்லை தென்னை ஈர்க்கைக் ஒடிப்பதுபோல் ஒடித்தான்.

அரிஷ்டன், தேனுகன், பிரலம்பன், திருணாவர்த்தன் பகன் முதலிய அசுரர்களை அநாயாசமாகக் கொன்றான்.

கோவர்தன மலை அவனது சுண்டு விரலின் மேல் ஏழுநாள்கள் நின்றது.

பேசிக்கொண்டே போன நந்தன் குலுங்கி குலுங்கி அழுதார். பின்னர் தேற்றிக்கொண்டு கண்ணனை நினைத்து  அன்பின் மிகுதியால் பேசாமல் இருந்தார்.

உத்தவர் அவரைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment