Thursday, May 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 475

பீஷ்மகன் ருக்மிணியின் மனத்தை அறிந்தார். கண்ணனுக்கே ருக்மிணியைத் திருமணம் செய்துகொடுக்கத் தீர்மானித்தார்.

அக்காலத்து அரசர்கள் தன்னுடைய குடும்ப விஷயம் என்றாலும், அது நாட்டின் வெளியுறவுகளைப் பாதிக்கும் என்பதால் சபையில் அனுமதி பெற்ற பின்பே செய்வது வழக்கம்.

தசரதர் தன் மூத்த மகனான ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார். அரசரின் மூத்த மகன் அடுத்த அரசன் என்பது நியதி. மேலும், ராமன் நாட்டு மக்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவன். இருப்பினும் தசரதர் தானே முடிவெடுக்காமல், சபையோரை‌ அழைத்து ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வது பற்றி கருத்து கேட்கிறார்.

அதுபோலவே பீஷ்மகனும் ருக்மிணிக்கு க்ருஷ்ணனை விவாஹம்‌ செய்து கொடுப்பது பற்றி சபையோரிடம் கருத்து கேட்டார் பீஷ்மகன்.

அவையோர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆமோதித்தனர். ஆனால், பீஷ்மகரின் மகன்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

மூத்தவனான் ருக்மி 

ஒரு மாடு மேய்க்கும் இடையனுக்குப் போய் விதர்ப்ப இளவரசியைக் கொடுப்பார்களா? உங்கள் புத்தி பேதலித்துவிட்டதா? பாடசாலைக்கே செல்லாதவன். படிப்பறிவற்றவன். நானும் படிக்கிறேன் என்று சில நாள்கள் பாடசாலையில் பொழுதைப் போக்கிவிட்டு வந்தவன். நாங்கள் பல வருடங்கள்‌ முனைந்து படித்த பாடங்களில் சில நாள்களிலேயே ஒருவன் படிப்பான் என்றான் அவன் எந்த அழகில் படித்திருப்பான். என் நண்பன் ஜராசந்தனிடம் தோற்று ஓடியவன். திருடன். மாயாவி. என்றெல்லாம் ஏசினான். பின்னர்,  என் நண்பன் சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கு ருக்மிணியைக் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறேன்‌.

விதர்ப்ப தேசத்து இளவரசி என் தங்கை ருக்மிணிக்கும் சேதி நாட்டரசன் சிசுபாலனுக்கும் இன்றிலிருந்து நான்காம் நாளில் திருமணம் என்று நான் முடிவு செய்துவிட்டேன். மக்களுக்கு அறிவியுங்கள். எல்லா ‌நாட்டு அரசர்களுக்கும் திருமணத்திற்கான அழைப்போலையை இன்றே அனுப்புவேன். என்று கத்தினான்.

பரம சாதுவான பீஷ்மகர் துஷ்டனான ருக்மியை எதிர்த்துப் பேச இயலாமல் சுருங்கிப்போனார். மறுத்தால் தந்தையென்றும் பாராமல் சிறையில் தள்ளுவான் என்று அறிந்திருந்தார்.

அதற்குள் அந்தப்புரத்திற்குச் செய்தி பறந்தது.

துளசி பூஜை செய்துகொண்டிருந்த ருக்மிணி செய்தியைக் கேட்டதும் அப்படியே மயங்கி விழுந்தாள்.

சற்று நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்து எழுந்த ருக்மிணி, அழுதாள், துடித்தாள். கண்ணனை மனத்தில் வரித்த பின்பு வேறொருவனை எப்படி மணப்பேன்? சிங்கத்தின் இரையை சிறுநரி முகரலாகுமா? குணக்கடலான கண்ணன் எங்கே? துஷ்டனான சிசுபாலன் எங்கே? சிசுபாலனுக்கும் தனக்கும் திருமணம் என்று பேசுவதைக் கேட்டாலே அவள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதுபோலிருந்தது.

தந்தையான பீஷ்மகர் செய்வதறியாது தவித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment